Monday, December 28, 2009

வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்
சில ஆண்டுகளுக்கு முன் என் முதல் கடிதத்திற்கு பதில் எழுதிய
சுந்தர ராமசாமி இந்த வருடம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய
புத்தகம் என்று குறிப்பிட்டது மசானபு ஃபுபேகாவின் ”ஒற்றை
வைக்கோல் புரட்சியை”.

காலத்தின் சுழற்சியில் பூவுலகின் நண்பர்களோட சேர்ந்து வம்சி
புக்ஸ் சுற்றுசூழல் வரிசையில் 16மிக முக்கிய புத்தகங்களை
கொண்டு வருவது என்றும் அதில் முதல் 8புத்தகங்களையாவது
இப்புத்தக கண்காட்சியின் நிறைவுக்குள் கொண்டு வரும் முயற்சியில்
இரவு 10மணிக்கு அதன் 8அட்டைபடங்களை நிறைவு செய்தோம்.
மதிக்கத்தக்கவனும், நேசிக்கததக்கவனுமான புகைப்பட கலைஞனும்
சூழலியல் வாதியுமான ஆர்.ஆர். சீனிவாசனும் அவர் நண்பர்
ஆர். கனேசனும் இவ்வளவு அழகான அட்டை படங்களை
வடிவமைத்து தந்தார்கள்.

நண்பர் ஆதி. வள்ளியப்பனும், நானும் கடந்த 48 மணிநேரத்தில் 48 தடவைகளாவது தொலைப்பேசியில் உரையாடி இதன் வடிவத்தையும் வார்த்தைகளையும் செழுமைப்படுத்தினோம். என் மருத்துவ விடுப்பு
முடிந்து மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி அலுவலகத்திற்கு
ஒரு பொய் மருத்துவ சான்று கொடுத்து சேரவேண்டும். சேருவதா
அல்லது என் நிலத்திற்கே போய் தீவிர விவசாயியாக மாறி
மண்ணோடும், நீரோடும்,சேரோடும் மிதி படும் மகத்தான இயற்கை
வாழ்வைத் தேடி இப்புத்தகங்கள் என்னை நகர்த்துகின்றன.

Wednesday, December 23, 2009

புதுப்படைப்புகளுக்கிடையே...

புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்


இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.

மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.

கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.


-நாளை பேசுகிறேன்.

Wednesday, December 16, 2009

வம்சி வெளியீடுகள் - 2010

வம்சி வெளியீடுகள் - 2010

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - வலைப் பக்கங்களில் தன் தர்க்கக்குரல் மூலம் வியாபித்திருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
3. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
4. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

Wednesday, October 28, 2009

சூர்ப்பனகை : தமிழில் கே.வி. ஷைலஜா

நவீன மலையாள படைப்பிலக்கியத்தில், புதிய முயற்சிகளையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி வரும் கே.ஆர். மீரா எனக்கு அறிமுகமானதே, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பி.பி. அனகா என்ற பெண்ணியவாதியின் பிரவேசத்தால்தான். மீராவின் மன உலகை மிக சுலபமாக நெருங்க முடிந்தது. அனல் வீசும் விவாதங்களும், அடங்கி போகும் தர்க்கங்களுமாக இருவேறு திசைகளிலும் பதட்டமின்றி பயணம் செய்யும் மீரா இன்றைய சூழலின் மீது எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவைகள்.

இக்கதையை ஷைலஜா மொழிபெயர்த்த போது ஆர்வமுடன் உடனிருந்து உள்வாங்கினேன். இப்படைப்பின் தாக்கத்திலிருந்து அவள் விடுபட பல நாட்கள் ஆனது. பல்வேறு வகையான வாசிப்பின் அனுபவ பகிர்தலை இக்கதை அவளுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும். உயிர்மையில் இக்கதை பிரசுரமாகி தொலைபேசியின் வழியே நிறைய உணர்வுகரமான உரையாடல்களை கேட்டு உணர்ந்த போதிலும் அனகாவும் அவள் மகளும், எல்லாவற்றிருக்கும் மேலாக அனகாவின் கணவரும் எனக்குள் ஏற்றியிருக்கும் பெரும் பாரம் அத்தனை சுலபத்தில் இறக்க முடியாதது. Italic


சூர்ப்பனகை

மலையாளம் மூலம் கே.ஆர். மீரா
தமிழில் கே.வி. ஷைலஜா

கோழிக்கோட்டில் ஐஸ்க்ரீம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது தான் பி.பி.அனகாவிற்கு கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைத்தது.
முதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடனேயே கரும் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தாள்.

“சூர்ப்பனகையை வரவேற்கிறோம் “

பி.பி அனகா திரும்பி நின்று கரும்பலகையை துடைக்கத்துவங்கினவுடன் காகித அம்புகள் மேலே வந்து விழுந்தன. தன் முதல் வகுப்பினை ஆரம்பிக்க நினைத்ததருணத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவன் மெதுவாக எழுந்தான்.

“மிஸ் ஒரு சந்தேகம் “
“கேளுங்க....”
“மிஸ் நீங்க பெண்ணியவாதி தானே?”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?”

கோபத்தோடு அனகா அவனை வகுப்பிலிருந்து வெளியேறச் சொன்னாள்.
சற்று நிதானித்து அவனை வகுப்பிற்குள் அனுமதிக்க நினைத்த நேரத்தில் அந்த நிகழ்வு போராட்டமாக உருமாறியிருந்தது. அவள் சமாதானமாய் போக மறுத்த போது போராட்டம் மேலும் வலுத்தது.

பெண்ணியவாதிகளின் தலைவியானதால் இயக்கத்தின் துணையும் கட்சியின் பின்புலமும் அனகாவிற்கு இருந்தது. கயிறு திருகுதல் போல போராட்டம் இறுகியது. கல்லூரி கால வரையற்று மூடப்பட்டது. பெரிய பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துகளுக்குமிடையில் பதறாமல் நடந்த நாட்களில் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் அனகாவை üசூர்ப்பனகைý என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தார்கள். இதனாலெல்லாம் அனகா மனம் தளர்ந்து போகவில்லை. மூக்கும், முலைகளும் அறுக்கப்பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதுமே மரியாதையிருந்தது. சரித்திரத்தில் ஆரம்ப குறியீடாக சூர்பனகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண் விடுதலை?

அகலம் குறைந்த சிறிய கட்டிலில் பச்சைநிற இரவு உடையணிந்து படுத்திருந்த அனகா பக்கத்திலிருந்த பத்து வயது மகள் சீதாவிடம் கேட்டாள்.

“சூர்ப்பனகையின் கதை தெரியுமா உனக்கு? “
“தெரியாது”
சீதாவின் முகம் கனத்திருந்தது.
சீதா அறைக்குள் வரும் பொழுது, அம்மு ஜோஸப் தரியனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனகா. எப்போதும் போலான உரையாடல்தான் அது. தாராளமயமாக்கலின் பலனான உலகமயமாக்கலின் விளைவில் நிகழ்ந்த வியாபாரமயமாக்கல், பாலியல் சுதந்திரமின்மை, பெண் விடுதலை, பெண் தன்விருப்பதை அடையும் சுதந்திரம் என்று போய்க் கொண்டே இருந்த பேச்சு சீதா வந்த போது அறுபட்டது.

அம்முவின் பாப் செய்யப்பட்ட முடியும், நிறம் மங்கிய தொள தொளப்பான சுடிதாரும் சீதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அவளுடைய வெறுப்பினை பல விதங்களில் வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் கவனித்து சகிக்க முடியாமல் போனபோது அம்மு எழுந்து வெளியே போனாள். அதைப்பார்த்த அனகாவிற்கு கோபம் வந்தாலும் வெளிக் காண்பிக்கவில்லை. அம்மாவின் நடவடிக்கைகளை எப்போதும் விமர்சிக்கும் பெண் அம்மு என்ற பிம்பத்தை வைத்திருக்கும் சீதாவின் மனதில் இன்னும் ஏன் கோபத்தை ஏற்ற வேண்டும்? அதனால் தான் ஒரு கதை சொல்லலாமே என்று நினைத்தாள். உடனே ராமாயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக குறைபடுத்தப் பட்ட பெண்ணாய் சூர்ப்பனகை அவள் மனவெளிகளில் அலையத் தொடங்கினாள். கல்லூரியின் முதல்நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.

“சூர்ப்பனகை யாரு? “
சீதா அவளுடைய கான்வெண்ட் மலையாளத்தில் கேட்டாள். மிகவும் சுருக்கமாக அந்தக் கதையை சொல்லலாமா என்று அனகா யோசித்தாள். ஆனால் சூர்ப்பனகை யார்? பதிவிரதை சீதாவோடான காதலின் காரணமாக ராமனால் நிராகரிக்கப்பட்ட ராட்சஸி. அனகாவுக்கு கதை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தன்னை சுருக்கிக் கொண்டன.

உயரமான கட்டிலுக்குப் பக்கத்தில் நீலநிற ஃபிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக் கொண்டு எந்தவித உற்சாகமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சீதாவைப் பார்த்தபோது கதை சொல்லும் சுவாரசியம் முற்றிலும் வற்றிப்போய் மகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சீதா உயரமாக வளர்ந்திருந்தாள். சிவப்பு நிற டாப்ஸின் திறந்திருந்த வட்டமான கழுத்தினூடாக அவள் மகளின் மார்பினை பார்க்க நேரிட்டது. அவை சராசரியைவிட அதிகமாக வளர்ந்திருப்பதாய் அனகாவிற்குத் தோன்றியது. இருபத்தியெட்டா? முப்பதா? பத்து வயது பெண்ணுக்கு சாதாரணமாக மார்பளவு எதுவரை இருக்கலாம்?

எதுவரை இருக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லையானாலும் சீதாவுக்கான வளர்ச்சி சற்று அதிகம்தான். கடைசியாக பார்த்தபோது அவள் இவ்வளவு புஷ்டியாக இல்லை. உயரமாகவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு பாலியல் தொழிலாளிகள் சம்மேளனத்திற்கு போய்விட்டு வரும்பொழுது தான் அனகா சீதாவின் ஹாஸ்டலில் இறங்கினாள்.

அனகாவை பார்த்தவுடன் ஹாஸ்டல் வார்டன் வழக்கம் போல சீதாவைக் குறை சொல்ல ஆரம்பித்தாள். சீதா பைக்குள் எப்போதும் லேக்டோஜன் பால்பவுடர்டின்னை மறைத்து வைத்திருக்கிறாளென்றும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரித் தின்கிறாளென்றும், அதனால் நடைபாதை முழுக்க எறும்புகள் வந்து பிரச்சனையாகிறதென்றும் மற்ற பிள்ளைகள் குறை சொல்கிறார்கள் என்றும் கூறினாள்.

சொந்த மகளை மற்றவர்கள் விமர்சித்தால் பெண்ணியவாதியானாலும் கோபம் வரும் தானே! அந்த கோபத்துடனே அனகா ஹாஸ்டலின் கருங்கல் தூண்களுள்ள நடைபாதையை கடந்து மகளைப் பார்க்கப் போன போது “களிக்குடுக்கையில்”கன்றுக்கு பசுவிடம் செல்லும் வழியை தேடிக் கொண்டிருந்தாள் சீதா

“வெக்கமாயில்ல உனக்கு? “
மற்ற பிள்ளைகளுக்கு கேட்கமால் குரலடக்கியபடி கேட்டாள் அனகா.
“நான் அனுப்பின புத்தங்கள் எல்லாம் எங்கே? தொலச்சிட்டியா? “
ரியோ டி ஜனிரோ கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது பதினைந்து புத்தகங்களை அவளுக்கு வாங்கி அனுப்பினாள் அனகா. எல்லாமே கிளாஸிக்ஸ். ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் கோபர் ஃபீல்டு, ஹகில்பரிஃபின், டாம் சாயர் - கலர் படங்களோடிருக்கும் குழந்தைகளுக்கான பதிப்பு. அந்த பார்சலை சீதா பிரிக்கவேயில்லை என்பதை பார்த்ததும் கோபமாக வந்தது.

அவளுடைய அழகு சாதனப் பெட்டியைப் பார்த்தபோது கோபம் மேலும் அதிகரித்தது. மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகள், கண்ணாடி வளையல்கள், பல நிறங்களில் கல்லும், முத்தும் ஒட்டப்பட்ட இமிடேசன் நகைகள். அன்று இரவே அனகா, ராம் மோகனை தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு ஆரம்பத்திலேயே உஷ்ணமானது.

“அவள் பெண்ணியவாதியான பி.பி. அனகாவின் மகள் மட்டுமல்ல. என்னுடைய மகளும் தான்”
“ஆனால் எல்லோரும் அவளை அனகாவின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கான சமூக மரியாதையைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும்”
“அனகா, அவளுக்கு பத்து வயசுதானே ஆகுது? அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே? “
“எனக்குத் தெரியும். என் மேல உள்ள கோபத்தைத் தீர்க்க நீங்க அவளை ஸ்டீரியோ டைப் பெண்ணாய் வளர்க்கப்பாக்கிறீங்க “
“தயவு செய்து அவளையும் ஒரு மனநோயாளியாக்காதே அனகா”
உஷ்ண உரையாடல் அதோடு தற்காலிகமாக அணைந்தது.
திருமணம்... அது தவறான முடிவாக இருந்தது.
அம்மு அன்றே சொன்னாள்.

“அனு ரொம்ப யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. கேரள பெண்களின் வாழ்வோடு உனக்கொரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருக்கு “
எதைப் பற்றியும் அறிவு பூர்வமாய் யோசிக்கமுடியாத அன்றைய மன நிலையில் அனகா அதையும் ராம்மோகனோடு பகிர்ந்து கொண்டாள். அம்மு உன்னை சந்தோசப்படுத்த புகழ்ந்து பேசியிருக்கிறாள் என்று ராம்மோகன் சொன்னான். பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்ணியம் பேசும் பெண்களுக்கு தன்னை புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்குமென்றும், இந்த அம்முவே தினமும் அவளோட புருசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்குகிறாள் அவளுக்கு அதன் தேவையிருக்கிறது தானே என்ற ராம்மோகனின் கிண்டல் தொனியில் அனகா விழுந்திருந்தாள்.

இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பெட்டியான பெண்களுக்கே பொருந்தும். சில நேரங்களில் வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே செய்யும் சாகசம்தான் பெண்ணியம்.
“ராம், நாம் ஏன் ஒன்றாய் சேர்ந்து வாழக்கூடாது”
“அப்ப கல்யாணம்? “
“அது வேணுமா? ஜஸ்ட் லிவிங் டு கெதர் “
“ரேட் என்னன்னும் சொல்லிடேன் “
“புரியல ராம் “
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியான பெண்களுக்கு விடியும் போது அவங்க கேக்கற பணம் கொடுக்க வேண்டியதிருக்கும் “
“அது அவர்கள் வாழ்வதற்கான வழி “
“ஆமாம். அதனால் அதற்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்கு “

இரண்டு வெவ்வேறு துருவங்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள். இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகள். தமக்குள் ஒத்து வராது என்று அனகா மிகச் சீக்கிரமே புரிந்து கொண்டாள்.
ஒரு ஆண் எப்படி இப்படி கட்டுப்பெட்டியாக வாழ முடிகிறது? குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது? அடிப்படைவாதியாகவே தன் வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது?
ஆனால் தன்னையே புகழ்ந்துபேசும் பேச்சு, எதிரில் இருப்பவர்களை ஆசைப்பட வைக்கும் என்பது போல அனகா, ராமிடம் அடங்கிப் போனாள்.

இருந்தபோதிலும் வேட்டைக்காரனும், பறவையும் ஒரே வலையில் மாட்டிக் கொள்வதுதான் திருமணம் என்பதை சீக்கிரமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ராம் நீங்க என்னோட ப்ரஸ்ட்டைத் தொடக்கூடாது, அது எனக்குப் பிடிக்கல”
“அனு, நான் வெளிப்படையா உங்கிட்ட கேக்கட்டா, உன்னை யாராவது குழந்தையாயிருக்கும் போது துன்புறுத்தியிருக்காங்களா? “
“ராம் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே வம்ச விருத்திக்காகத்தான். செக்ஸ் ஒரு சந்தோசம் என்று மட்டும் வைத்துக் கொண்டால், பெண்ணின் உடலை ஒரு உபயோகப் பொருளாக மட்டுமே உங்களால் பார்க்க முடியும் “
“சுருக்கமாக சொல்லப் போனா நீயொரு மனநோயாளிதான் “

இப்படியான அறிவு தளத்திலான வாக்குவாதங்கள் அடிக்கடி இருவருக்கும் பிடிக்காமலேயே நடந்தேறியது. அப்படியும் சீதா பிறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் சீதா பிறந்த பதினோராம் நாளன்று அனகா தொடுபுழாவில் ஒரு வழக்கு காரணமாக போலீஸ் ஸ்டேசன் தர்ணாவுக்கு போக வேண்டியிருந்தது. ரத்தத் தளிராயிருக்கும் தன் மகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு தர்ணாவுக்கு போனபோது தான் ராம் மோகன் மிகவும் மூர்க்கனாகி போனான்.

தனக்கான சமூக பொறுப்பினை அனகா நியாயப்படுத்தினாள். தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை விட பெரிய சமூக பொறுப்பு பெண்களுக்கு இல்லையென்று ராம்மோகன் வாதாடினான்.

ராம்மோகனுக்கு முலைகளில்லை. அதனால் பால் கொடுக்கும் முலைகளின் வேதனையை அவன் அறிந்தவனில்லை. நரம்புகளை உள்ளடக்கிய சிறிய சதைகளின் சக்தி, தோலினால் மூடப்பட்ட மாமிசம், கேவல், மூச்சு வாங்குதல், வலி, ரணம்... அதனிடையில் தர்ணாக்கள், செமினார்கள், கண்டன ஆர்பாட்டங்கள்...

நெருக்கம் கிடைக்கும்போது ஒரு ஆணின் ஆவேசத்தோடு அம்மாவின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாலும் கூட, குழந்தை சீதா சீக்கிரமாக லேக்டோஜனுக்குப் பழகியிருந்தாள். அதுவே அவளுக்கொரு பலவீனமான பழக்கமாகவும் மாறியிருந்தது. லேக்டோஜனை வாரித் தின்று வளர்ந்ததாலோ என்னவோ சீதா இப்படி வளர்ந்திருக்கிறாள் என அனகா சந்தேகித்தாள். உடல் நுகர் பொருளாகக் கூடாது என்பது சரிதான், ஆனாலும் உயரமான மெலிந்த உடல்களுக்குத்தான் இப்போது பெண்ணியவாதிகளுக்குள்ளும் மதிப்பும் மரியாதையும்.

நர்ஸ் பக்கத்தில் வந்தபோது சீதாவின் கையை எடுத்து விட்டுவிட்டு அனகா நர்ஸிடம் சென்றாள்.
“வீட்டுக்காரர் வந்திருக்காரா?”பல்ஸ் பார்க்கும் போது நர்ஸ் கேட்டாள்.
“இல்ல.”
“பின்ன யார் உங்க உதவிக்கு இருக்காங்க?”
“என்னோட நண்பர்கள்”
“ ஓ......”

நர்ஸ் பரிதாபத்துடன் அனகாவைப்பார்த்தாள். அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. அனகா பெருமையுடன் சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கடந்துடன் தலையை குனிந்து கொண்டாள்
அனகாவுக்கு சர்ஜரி முடிவானபோது சீதா ராம்மோகனின் வீட்டிலிருந்தாள். அவள் “ராம்மோகனை தொலைபேசியில் கூப்பிட்டாள்.

சீதாவைக் கொஞ்சம் அனுப்புங்க. எனக்கு திங்கட்கிழமை காலைல ஆப்பரேசன்.”
“உனக்கென்ன ப்ரச்சனை?”
“ப்ரஸ்ட் கேன்சர்... டாக்டர்கள் என்னோட மார்புகளை அறுத்தெறியப்போகிறார்கள்”
“கடவுளே”
ராம்மோகன் அதிர்ந்தது போல தோன்றியது.

அனகாவிற்கு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. இந்த அறுவைச்சிகிச்சை மூலம் நான் சரியான பொருள்படவும் சூர்பனகையாகிறேன். சுதந்திரமானவளாகிறேன் - உன்னுடைய வெறிக்கும் பார்வையிலிருந்து, கொஞ்சலிலிருந்து, வலிகளிலிருந்து நான் விமோசனமடைகிறேன்.
“நான் வரணுமா?”
ராம் மோகன், குரலில் இடரலுடன் கேட்டான்.
“வேண்டாம்”
டாக்டரும் இதையேத்தான் கேட்டார். “கணவர் வரவில்லையா?”
“இல்லை”.
“சம்மத பத்திரத்தில் யார் கையெழுத்திடுவார்கள்?”
“நான்”
அனகா தீர்மானமாய் சொன்னாள்.

என் உடல். நெஞ்சில் பால் சுரக்கும் நரம்புகளும் அடிவயிற்றில் கர்ப்பப்பையும் உள்ள என் உடல். இவைகளை அறுத்தெறிய வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க இது இரண்டுமில்லாத, இதன் வலி அறியாத ஒருத்தனின் சம்மதம் எனக்கெதற்கு டாக்டர்?
ரத்தக்கொதிப்பும், நாடியும் பரிசோதிக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பதை உணர்ந்த நர்ஸ் வெளியே போவதற்கு முன் சொன்னாள்.

“பன்னிரண்டுமணிக்கு உள்ளே அனுப்பிடுவாங்க. மகளிடம் ஏதாவது பேசணும்னா பேசிடுங்க.”
அனகா சீதாவைப் பார்த்தாள். என்ன பேச...?
“சீதா”
அனகா ஒரு பெண்ணியவாதியின் திடமான குரலில் மகளை அழைத்தாள்.
“எனக்கு ஆப்பரேசன் நடக்கப் போகிறது. உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டியிருந்தால் சொல்”
சீதா முதலில் பதறிப்போனாள். அனகா தொடர்ந்தாள்.

“என்ன வேணுன்னாலும் கேள். என்னால எதையும் செய்து தர முடியும். சர்ஜரி முடிந்து திரும்பி வராமல் போனால் உனக்கு வேண்டியதை செய்து தரவில்லையே என்ற வேதனை என் ஆத்மாவை சங்கடப்படுத்தாமலிருக்கட்டும்... ஏதாவது கேள் மகளே. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்”

சீதா உடனே பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் குழப்பத்தில் இறுகியது.
டாக்டர்கள் எப்படி இதை அறுத்தெடுப்பாங்க?
சர்ஜரி முடிந்தபின் மார்பு பார்க்க எப்படியிருக்கும்?
இனியொரு பாப்பா பிறந்தால் அம்மா எப்படி பால் கொடுக்க முடியும்?

இப்படியான கேள்விகள் சீதாவை துன்புறுத்தின. அனகாவிற்கு தன் பொறுமையை தானே இழந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
“உனக்கு வேண்டியதை மட்டும் கேட்டுத் தொல” என்று கத்திவிட்டாள்.
சூழல் இறுகியபோது சீதாவின் முகம் சிவந்தது. தன் டீ சர்ட்டின் முன் பக்கத்தை சங்கடத்துடன் திருகிக் கொண்டே அனகா தன் மகள் எதை கேட்கக் கூடாதென்று பயந்தாளோ அதையே சீதா கேட்டாள்.

“அம்மாவின் முலைப்பால்”

பி.பி. அனகா அதிர்ந்தாள். லிங்காதிபத்யம், விமோசனம், விரும்பியதை அடைதல்- ஒரு மனோ பலத்திற்காக அனகா இதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள். பிறகு அவள் ஒரு போராளியின் பிடிவாதத்தோடு தன்மீது போர்த்தப்பட்டிருக்கும் பச்சைநிற உடையின் கழுத்தில் இருக்கும் கயிறுகளை இழுத்து அவிழ்த்தாள்.
“வா..... குடி.”

“நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்பொழுது பி.பி. அனகா என்ற உன் அம்மா சக்திமிக்க ஒரு பெண்ணாக இருந்தாள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டி, என் மகளுமான உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக... வா...”
புற்று நோயால் சிவந்து, கறுத்த, சின்ன சின்ன கட்டிகள் முளைத்திருந்த அம்மாவின் முலைகளை சீதா ஒரு முறைதான் நேரெடுத்தாள்.

ஏற்க மறுத்த சூர்ப்பனகையின் மகள் எந்த உணர்வுமற்ற தொனியில் சொன்னாள்.
“எனக்கு லேக்டோஜனே போதும்...”

Tuesday, October 20, 2009

ஏழுமலை ஜமாசில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.

ஏழுமலை ஜமா குறுபடத்தை காண

Sunday, October 18, 2009

எ. அய்யப்பன் என்ற கலகக்காரனின் தமிழ் வருகை


சுட்டெரிக்கும் அனுபவங்களின் தீச்சூளையில் உருவம் கொண்டெழும் எ. அய்யப்பன் ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் நினைவு படுத்த முடியாத ஒரு பக்கத்தின் மூலையில்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார். சில உக்ரமான படைப்புகளால் நான் காய்ச்சலால் படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னை நெட்டி தள்ளிய படைப்பாளிகளில் அய்யப்பனும் ஒருவன்.
தமிழில் விக்ரமாதித்தன், கைலாஷ்சிவன், லஷ்மிமணிவண்ணன் என்ற கவிஞர்களின் வாழ்வு முறையின் முற்றிய வடிவம்தான் அய்யப்பனின் வாழ்வு. அவரை ஒரு முறை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென விரும்பி என் கேரளா நண்பர்களோடு தொடர்பு கொண்ட போது, நிகழ்ச்சி முடிந்து அவர் கேரளா திரும்ப குறைந்தது ஒரு வருடம் ஆகும். பரவாயில்லையா? என்று சிரித்த போது இந்த உற்சாக சவாலை ஏற்கவே மனம் விரும்பியது. ஆனாலும் உப்புச்சப்பற்ற என் மிடில்கிளாஸ் வாழ்வு அதற்கு இன்னும் அனுமதிக்கவில்லை.
என் சிநேகிதி கே.வி.ஜெயஸ்ரீ, அய்யப்பனின் அதே உக்ரத்தை தமிழில்தந்த கையெழுத்துபிரதியுடன் 'வம்சி' யில் உட்கார்ந்திருந்த இரவு என்னை ஒரு பிசாசின் கருணையற்ற துரத்தலோடு அலைகழித்த இரவு பதினோருமணிக்கு ச. தமிழ்செல்வனை தொலைபேசியில் அழைத்து இரண்டு, மூன்று கவிதைகளை வாசித்துக்காட்டி அவரின் நிம்மதியான பஸ் பயணத்தை குலைத்தது நினைவுக்கு வருகிறது. அல்லது அந்த பிசாசை தமிழ்ச்செல்வன் பயணம் செய்த பஸ்சில் டிக்கட் வாங்கி ஏற்றி விட்டு விட்டு நான் மௌனமானேன். சுகுமாரன் சொல்லும் தற்கொலையில் தோற்றவனின் மௌனமது. வார்த்தைகள் எத்தனை அபயாகரமானவைகள் என்பதை என் தொடர் வாசிப்பில் அய்யப்பனிடம்தான் பயந்து நடுங்கினேன். இரண்டாண்டிற்கு பிறகும் அடங்காத என் மனக் கொந்தலிப்பின் ஒரு துளி இது. இதை உங்களுக்கு மாற்றிவிட நினைக்கும் என் சுயநலமே இப்பகிர்தல்.

முதுகில் உண்டான காயம்

இதோ கிரீடம்,
நாம் கீழடங்கியிருக்கிறோம்.
எவ்விதக் கீர்த்தியுமற்ற ஒருவனால்
இதன்றி வேறொன்றும் இயலாது.
ஒரு திரி ஏற்றி வைத்துப் போகிறேன்.
வெடிமருந்து கிடங்கின் சாவியை
நான் பாதுகாக்கிறேன்.

ஒரு குதிரைகூட இல்லாத
பயணம்.

உன் சூர்யரதம்
நான் வரும்வரை
சிதையாமல் இருக்கட்டும்.

உன் ராணி
கணிகையாவாள்;
கிரீடம் பிச்சைப் பாத்திரமாகும்
என்கிறான் தீர்க்கதரிசி,
விஷம் தடவிய வாளினால்
நீ நடத்திய போராட்டத்தை நானறிவேன்.

நான்
நெருப்பிலிருந்து ஒரு பொறியை
வெடிமருந்து கிடங்கிற்குள் எறிவேன்

நீ
யுத்தபூமியில்
போராளிகளின் சாம்பலில்
செவ்விளநீர் மரங்கள் நடு.

நான் கேடயம் தவறவிட்டு
முதுகில் காயத்தோடு தோல்வியைத் தழுவியவன். - ஆனால்
எனக்கும் உண்டொரு வரலாறு.

ஊமை வம்சம்

அவள் ஊமை.
ஊமைகள்தான் தோழிகள்.

சைகை மொழியில்
ஊமையின் பேச்சுத் திறன் அதிகரிக்கிறது.

ஒரு நிசப்த முகூர்த்தத்தில்
திருமணம் நடந்தது
ஓர் ஊமை இளைஞனுடன்.

மிருகத்திற்கு
மிருக மொழி

மனிதனுக்கு
உடைந்து சிதறிய பின்னங்களின் மொழி.

இவர்களின் ஊமைக்காதலிற்கு
திருவிழா உற்சாகத்தின் மொழி

அரவணைப்புகளினூடே
வேர்வைத் துளிகள்
ஆரவாரித்துச் சிரிப்பதை
அவர்கள் கேட்டனர்.

இவர்களின் காதலின் தமனிகளில்
கலகத்தின் முழக்கம்.

விசாரணையில்
வழக்காடு மன்றம்
என்ன செய்யும்?

திருமணம் முடிந்து
மாதங்கள் ஒன்பதானது

இருவரின் வேண்டுதலும்

எங்களுக்குகொரு
ஊமைக் குழந்தை
வேண்டுமென்பதே.


பிரணய ஸ்பரிசம்

ஒரு தழுவலினூடே
தீயாகுபவள் நீ

இன்னும் கொஞ்சம்
நெருங்கி வா
உன் ஸ்பரிச மாபினியை நான்
உணர்ந்து கொள்ளும் வரை.

உள்ளங்கையைக் காட்டு
பிளவுபட்டும்
தெளிவாகவும் காணப்படும்
ரேகைகளில்
எதிர்காலத்தில்
உன்னோடு இணைந்து
நானிருப்பேனா என்று
அறிந்து கொள்ளும் வரை.

இன்று கண்ணாடி பார்க்கவில்லை
மடியில் தலைசாய்த்துக் கொள்.
உன் கண்களில் நான்
நிறையும் வரை.

இது மானின் கால்கள்
ருசித்து அறிந்து கொள்
காதலின் வேகம்
என்னவென்று அறியும் வரை.

இந்த வேர்வை முழுவதையும்
குடித்துத் தீர்
வறண்ட நாக்கு
தாகத்திற்கான ஏக்கம்
என்னவென்று அறியும்வரை

பார்
காட்டின் பசுந்தலங்களில்
முயல்கள்
மயூர நாட்டியம் காண்கிறது
கண்கள் குளிரும்வரை.
நகம் வெட்டி

அவள் கூர்நகங்கள் வளர்த்து
என்னைத் தழுவும்போது
நகங்கள் என்னைக்
காயப்படுத்தியதில்லை.

பூனைக் குட்டிக்கும்
அந்த நகங்களைப் பிடித்திருந்தது.
நகங்கள் மனதிலும் வளருமோ
என்று மட்டும் சிலசமயம் பயந்தேன்.

ஒரு பிரிவினைக் குறித்து நான் கனவு கண்டேன்
அவள் என்னைக் கைவிடுவாள் என.

சிவந்த தலைமுடி பறந்தபடி
குரோதம் அவளுடைய பார்வையின் கூடுடைத்தபோது
நகக்கூர்மை
என் கழுத்தில் அழுத்தியது.

தொண்டையில் இடறிய ஓர் அலறலுடன்
திடுக்கிட்டெழுந்தேன்

கறுத்த பயம் புலர்தலின் நீளம் கூட்டியது

விடியலில் அவள் வந்தாள்.

நான் பார்த்தது
நகங்களைத் தான்
இல்லை
நகங்களில் இரத்தமில்லை.

கைகள் என் கழுத்தில் அழுத்திய
துர்க் கனவை நினைத்து
அவள் மடியில் வீழ்ந்தேன்

இப்போது விரல்களை
என் கைகளில்
உணரும்போது
நகங்கள் இல்லாமல் போகட்டும்.

ஒரு முத்தத்திற்கு இரையாய்ப் போனது
எல்லா நகங்களும்.

வார்த்தைகள் கிடைக்காத தீவில்
மலையாளம் மூலம்

எ. அய்யப்பன்
தமிழில்
கே.வி. ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ் வெளியீடு
தொடர்புக்கு : 9444867023

Thursday, July 23, 2009

யோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2முதல் சந்திப்பு

யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2

அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த மாமிகளுக்கு சொல்ல அவரிடம் நிறைய அகங்காரமான சொற்களிருந்தன. நானும் என் நண்பர்கள் சிலரும் வாசிப்பின் போதையில் திரிந்த காலமது. புதிய விஷயங்களை படிக்க, படிக்க பழமையான விஷயங்களில் ஒன்றுமில்லையென ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தோம். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் இல்லையெனவும், சுந்தரராமசாமி, அம்பை, நா. முத்துசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜி. நாகராஜன் என எங்கள் வாசிப்பறைகள் இவர்களின் வாழ்வுலகங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரு சின்னத்திமிர் எங்கள் மீது எங்களையறியாமல் ஏறியிருந்தது. எந்தக் கூட்டத்தில் பேசும் பேச்சாளரை விடவும் எங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தோம்.

வம்பிழுப்பதற்காகவே பாலகுமாரன் பேசவிருந்த கூட்டத்தில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். உடனிருந்த பார்வையாளர்கள் ஒன்றுமில்லாத ஆட்டுமந்தைகள். வெறும் பத்திரிகை கவர்ச்சிக்காக வந்திருப்பவர்கள். அவர்கள் எங்களை கொஞ்சம் உற்று கவனித்தால் எங்கள் தலையிலிருந்து மேதமை பொங்குவதை கவனிக்கமுடியும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு பிறகு பாலகுமாரன் ஒரு உபதேச உரையாற்றினார். வெற்றி பெற்றவர்கள் எதிரிலிருக்கும் மந்தைகளுக்கு போதிக்கும் உரை அது. பேசி முடித்து முகமெங்கும் பெருமிதம் பொங்க பார்வையாளர்களிடம் இருந்து விலகினார். விவாதத்தில் பங்கேற்பாளர்கள் யாரும், இருக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் பத்து நிமிடம் கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மௌனம் உடன் உடைபட என் ஸ்நேகிதி கோமதி எழுந்து, பாலகுமாரனின் எழுத்து எத்தனை போலியானது என்றும், அது காலத்தின் முன் நசுங்கி மிதிபட்டு மறையும் காலம் வெகு அருகில் உள்ளதென்றும் கோபம் கொப்பளிக்க பேசினார்.

இக்குரல் அவ்வரங்கம் எதிர்பாராதது. அதிர்ச்சியில் உறைந்த பலகண்கள் கோமதியின் பக்கம் திரும்பின. பாலகுமாரனின் இரு மனைவிகளும் அவ்வரங்கில் பார்வையாளர்களாயிருந்தார்கள். எதிர்பாராத இத்தாக்குதலில் கொஞ்சமும் நிலைகுலையாமல் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒலிபெருக்கியை தன்பக்கமிழுத்து,

உன் பேரென்னம்மா?

கோமதி.

என்ன படிக்கிற?

எம்.எஸ்.சி. பாட்டனி.

என் கதைகள் நீ நினைக்கிறமாதிரி வாசிப்பின் ருசிக்கானது அல்ல. அது வாழ்வின் அவலத்தை அள்ளிக் கொண்டுவருவது. அதை படிப்பதற்கு நீ இன்னும் உன்னை கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு எழுத்தை சரியாக படிப்பதற்கே பயிற்சி வேண்டும்.

நீ சரியாக எழுது

என் குரல் கோபத்தில் உயர்ந்தடங்கியது.

உங்க பெயர்.

பவா செல்லதுரை.

நான் என்ன சரியா எழுதலன்னு சொல்லு?

நான் இப்போது ஜி. நாகராஜனை, அசோகமித்திரனை, அம்பையை, சுந்தரராமசாமியை தொடந்து வாசிக்கிறேன். இப்படைப்புகள் எனக்குத்தரும் வாசிப்பனுபவத்தை உன்னுடைய ஒரு கதை கூட தரவில்லை. எப்படி வாசிப்பதென நீ எங்களுக்கு சொல்லித்தராதே, எப்படி எழுவதென இவர்களிடமிருந்து நீ கற்றுக்கொள்.

ரத்தம் கண்களுக்கேற,

செல்லதுரை நீ இனிமேல் பாலகுமாரனை படிக்காதே

”இது எஸ்க்கேப்பிசம். ” இது கோமதி

இவ்வுரையாடல் அந்த அரங்கிலிருந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியையும், கூட்டத்தில் கலகம் செய்யவந்திருக்கும் கலகக்காரர்கள் நாங்களென்றும், எங்கள் ஜோல்னா பைகளில் வெடிகுண்டுகள் கூட இருக்கலாமெனவும் முணுமுணுத்தார்கள்.ஒரு வழியாக உலை கொதிப்பதற்கு முன் தீ அடங்கியது.
இரு பக்கமும் இன்னும் பேசி தீர்க்க வேண்டிய மூர்க்கமான வார்த்தைகளின் மிச்சத்தோடேயே கூட்டம் முடிந்தது.

கூட்டம் முடிந்து பாலகுமாரன் என் அருகில் வந்து,

”உன்னோடு தனியே பேசணும்”

என கிட்டதட்ட என் கையைப் பிடித்திழுத்தார். விக்டோரியா பள்ளியின் பின்பக்க மேல்மாடியில் கோபத்தில் புகையும் சிகரெட்டுடன் என்னை மிக அருகில் சமீபத்து,

”சொல் செல்லதுரை, நான் ஒண்ணுமேயில்லையா?”

”நான் அப்படி சொல்லலையே சார்,”

இல்லை அதைத்தான் நீயும் அந்த பொண்ணும் வேற மாதிரி சொன்னீங்க? சொல்லுங்க உங்களுக்கு யார் மேல கோபம்? என்ன வேணும் உங்களுக்கு? ஏன் நிசப்தமான உலகத்தைப் பார்த்து கூச்சலிடுகிறீர்கள்? என உக்ரமான குரலில் பேசிக்கொண்டே போனார்.

பாலகுமாரன் அப்போது புகழின் உச்சத்திலிருந்தார். தமிழ்வணிகப் பத்திரிகைகள் அவரை போட்டிப்போட்டு சுவீகரித்து கொண்டிருந்தன. நான் ரொம்ப சின்ன பையனாக கலக்கத்தோடு அவர்முன் நின்று கொண்டிருந்தேன்.
பேசிக் கொண்டே தன் முகவாயில் கைவைத்து அழுத்தி, தன் பல் செட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு

”எனக்கு இன்னும் நாப்பது வயசு கூட முடியல. டபே டிராக்டர் கம்பெனி போராட்டத்துல, ”பாப்பார நாயே ன்னு போலீஸ்காரன் அடிச்சதுல ஒடைஞ்ச பல்லு.”

எந்த அனுபவமே இல்லாம ஒருத்தன் ஒரு நாவல் எழுதிறமுடியுமா?
இவ்வுரையாடல் நான்கு முழு சிகெரெட்டுகளை முடித்திருந்தது.
இருவருமே தணிந்திருந்தோம். துவங்குதலுக்கான முதல் சொல் இருவரிடமுமே தயக்கத்திலிருந்தது. சிகரெட்டின் நுனிநெருப்பு ஒரு கேரக்டர் மாதிரி எங்களுடனே அணையாமல் பயணித்தது.

என் கையிலிருந்த புத்தகமே எங்கள் மௌனம் உடைபட காரணமாயிருந்தது. பேச்சு சுழன்று, சுழன்று பிரமிளிடம் வந்து நின்றது.

”பிரமிளின் தியானதாரா படிச்சிருக்கீயா?”
இல்லை. பார்த்தது கூட இல்லை. இது நான்.

அது ஒரு அற்புதமான சிறு புத்தகம் செல்லதுரை, சாது அப்பாதுரை என்கிற ஒரு துறவியைப்பற்றி பிரமிள் எழுதியிருப்பார். அதில் தங்கள் ஊரைச்சேர்ந்த விசிறி சாமியார் ஒருவரைப்பற்றியும் கூட சில பகுதிகள் வரும்.
ஐந்நூறு பிரதிகள் வாங்கி வைத்து நான் போகிற திருமணத்திற்கெல்லாம் கொடுத்திருக்கிறேன்.
என் கண்கள் விரிய
”விசிறி சாமியார்னா யோகிராம் சூரத்குமாரா?”என்றேன்.

தெரியுமா உனக்கு? அவரை தெரியுமா? என ஆர்வத்தின் நுனி நோக்கி பாலகுமாரன் வந்துகொண்டிருந்தார்.

சூரத்குமார் எனக்கு நல்ல நண்பர். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூல் மாடியிருந்து பத்திருபது கட்டிடங்கள் தள்ளிதான் அவர் இருக்கிறார்.

நீ உடனே என்னை அவரிடம் அழைத்துப் போகமுடியுமா?

நிச்சயமாக.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் பெரியத் தேருக்கருகில் நாட்டுஓடுகள் வேயப்பட்ட, ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட அந்த வீட்டின் முன் வாசலில் நாங்கள் நான்குபேரும் நின்றிருந்தோம்.

அவர்கள் மூன்று பேரின் முகங்களிலும் பக்தியும், பரவசமும் படிந்திருந்தது. ஒரு தெய்வ தரிசனத்திற்கான மனநிலை அவர்களிடம் இருந்தது. நான் இரும்பு கம்பிகளிட்ட கேட்டில் கை வைத்து லேசாக தட்டினேன். அதற்காகவே காத்திருந்தவர் போல முதல் தட்டலுக்கே கதவைத் திறந்து வெளியே வந்தார். இருட்டிலும் கூட அவர் முகப் பொலிவின் ஒளி அவ்விடத்தில் ஒளிர்ந்தது. கையில் புகையும் சிகெரெட்டுடன் உற்சாக மனநிலையில் கதவைத்திறந்து,
என் கைகளைப் பற்றி

”வா பவா” வென அழைத்தார். என் தோள் மீது வாஞ்சையாக தட்டிக் கொடுத்து.
”எப்படி இருக்கிற?” என ஆங்கிலத்தில் விசாரித்தார்.

வாசலில் நிற்கும் பாலகுமாரனையும், அவருடைய இரு மனவிகளையும் அருகில் அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

“இவர் பாலகுமாரன் தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர், எல்லா பாப்புலர் பத்திரிகைகளிலும் இவர் கதைகள் தொடர்கதைகளாக வருகின்றன, உங்களை சந்திக்க வேண்டுமென பெரும் ஆவலில் இருக்கிறார்’’ என தொடர்ந்த என் பேச்சை இடைமறித்து.

இந்த பிச்சைக்காரனை ஏன் பார்க்க வேண்டும்? என கேட்டார்.

பாலகுமாரனை முழுவதுமாக தன் பார்வையால் குடித்திருந்தார் யோகி. அந்த பார்வையின் ஊடுறுவலின் அதிர்வில் பாலகுமாரன் நிலைகுலைந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் நான் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப்பார்த்து தான் யோகி பேசினார்.

“பவா, இவ்விடத்தைவிட்டு இவரை உடனே போகச்சொல், இவரை சந்திக்க நான் விரும்பவில்லை. இப்பிச்சைக்காரனை தேடி இனிமேல் இவர் வரவேண்டாம்.’’
சொல்லிவிட்டு அடுத்த சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டு கைகளைக் குவித்து கஞ்சாபுகையை இழுப்பதுமாதிரி இழுக்க ஆரம்பித்துவிட்டார்.

தெருவில் போவோர்களும் வருபவர்களும் அங்கிருந்தே அவரை வணங்கியதும், கண்ணத்தில் போட்டுக் கொண்டதும், சிலர் தரையில் விழுந்து வணங்கியதும் விநோத காட்சிகளாய் இருந்தது. ஏதோ ஒரு புராதனமான நகரத்தின் அகண்ட தெருவில் இக்காட்சிகள் திரையில் நடப்பது மாதிரியிருந்தது.

பாலகுமாரன் அவ்விடத்தை விட்டகன்றிருந்தார். யோகி அமர்ந்திருந்தற்கு வெகு அருகிலிருந்த ஒரு திட்டில் நான் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அவசரமாக வீட்டிற்குள்ளே போய் இரு ஆப்பிள் பழங்களோடு வந்தார். நான் எழுந்து நின்றிருந்தேன். விடை பெறுதலுக்கான நேரத்தின் உந்துதலை என் சரீரம் உணர்ந்தது.

இரு ஆப்பிள்களையும் என் கைகளில் புதைத்து,
”மை பாதர் ப்ளஸ் யு பவா” என என்னை ஆசீர்வதித்தார். சற்று முன் நடந்த நிகழ்வுகளின் சிறு சலனம் கூட இன்றி, ஒரு குழந்தைமாதிரி சிரித்துக்கொண்டிருந்தார்.

Sunday, June 14, 2009

கமலாதாஸ் கலக எழுத்தின் ஊற்றுக்கண்ஒரு எழுத்து ஆளுமையின் உடல் அடக்கமாவதற்குள்ளாகவே அந்த ஆளுமையைப் பற்றி வாசகனை அதிர்வுக்குள்ளாக்குகிற அதிர்ச்சி மதிப்பீடுகளை என்னென்னவோ நியாயங்களின் பெயரில் சில எழுத்தாளர்கள் உருவாக்கி விடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக கமலாதாஸின் உடலமைப்பு, வசீகரம் அல்லது அவலட்சணம், காமம் உறவுகளற்ற நாட்கள் என விரியும் அஞ்சலியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எழுத ஆரம்பித்த ஒரு இளம் கவிஞனின் மீதான கமலாதாஸின் அக்கறையும் தாய்மையும் மிளிரும் இச்சம்பவமே நான் அந்த கலக எழுத்துக்காரிக்குச் செலுத்தும் அஞ்சலி.
ராஜகுமாரியும் யாசகபாலனும்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு-தமிழில்: கே.வி. ஷைலஜா.

மாதவிக்குட்டி அகங்காரியான ஒரு ராஜகுமாரி என்று நான் என்னுடைய குழந்தைப் பருவத்தில் நினைத்தேன். வசீகர அழகுடையவனான ஏதோ ஒரு ராஜகுமாரனால் வஞ்சிக்கப்பட்டவளாய்த்தான் அவளின் தோற்றம் எனக்குள் இருந்தது.
அவளுடைய கதைகள் எனக்குத் துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும் வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின விசிறியில் அடிபட்டுத் துடிக்கும், அந்தச் சிட்டு குருவியின் ரத்தம் தெறித்த கறை, இப்போதும் என் இதயத்துக்குள் ஒட்டிக் கிடக்கிறது.
நக்ஸலைட்டான நண்பன் ஒருமுறை ரகசியமாக “üயெனான்ý” என்ற பத்திரிகையை எனக்குத் தந்தான். அதில் கமலாதாஸின் üதேசிய கொடிý என்ற கவிதை பிரசுரமாயிருந்தது. அன்று இரவு நான் என் அம்மாவிடம் சொன்னேன்.
üüஅம்மா கமலாதாஸøம் நக்ஸலைட்டாயிட்டாங்க போலருக்கு.ýý”
üüஅந்த அம்மாவும் புத்தி சுவாதீனமில்லாத ஆயிட்டாங்களா! போ. என்னென்னவோ நடக்குது.ýý”
அன்று அம்மா கோபத்தோடு எழுந்துபோய்விட்டாள்.
நாட்கள் கடந்தபோது, நானும் என் எண்ணங்களும் கொள்கைகளும் வளர்ந்தன. எனக்குள் பொத்தி வைத்திருந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது வீட்டையும் நாட்டையும் புறக்கணித்து வரவேண்டிவந்தது. திருவனந்தபுரத்தின் தெருக்களில், எந்த ஒரு தொழிலும் வருமானமும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தபோது, என் நண்பனும் சக கவிஞனுமான ஜெயசந்திரன் என்னிடம், மாதவிக்குட்டி திருவனந்தபுரத்தில் செட்டிலாகிவிட்டதாகச் சொல்லி வீட்டிற்கான முகவரியும் வழியும் சொன்னான்.
ஒரு நாள் உச்சி வெயிலடிக்கும் மதியானத்தில் நடந்து நடந்து அலுத்துப்போய், வியர்வையில் குளித்துப் பிசபிசுத்த உடைகளுடன் üசமுத்திர தாராý என்ற வீட்டிற்குச் சென்றேன்.
வீட்டின் உள்ளே கறுப்பாய் நிறம் மாறியிருந்த கட்டிலின் மேல் கமலாதாஸ் உட்கார்ந்திருந்தார். பார்ப்பதற்கு ராஜகுமாரியின் கம்பீரம். நெருப்பின் உட்கரு நிறமுள்ள புடவை உடுத்தியிருந்தார். அவிழ்த்து தொங்கவிடப்பட்டிருந்த கார்மேகக் கூந்தல்.
நெற்றியில் பெரியதாய்ச் சிகப்புப் செந்தூரம். கழுத்திலும் காதிலும் கையிலும் காலிலும் வெள்ளி ஆபரணங்கள். ரத்னாபரணங்கள். இடுப்பை அலங்கரிக்கும் பெரிய வெள்ளிச் சாவிக்கொத்து. ஆஜானுபாகுவான ஒரு பெண். முகத்தில் ராஜகுடும்பத்தின் தேஜஸ். சித்தோர் அரண்மனையில் அக்னிப்ரவேசம் செய்யக் காத்திருந்த ராணி பத்மினியின் தோற்றம் என் முன்னே நிழலாடியது போன்ற பிரமை. அவருடைய கண்களில் ஒரு அகங்காரம் குடிகொண்டிருந்தது. ஏதோ பகவதி அருள் வந்தவனின் கண்களைப்போல ஒரு பளிங்கு மின்னல் அதில் நிரந்தரமாய் இருந்தது.
நான் பயத்தோடும் பவ்யத்தோடும் வணங்கினேன். பிச்சைக்காரன் என்று என்னை நினைத்திருக்கலாம். என் கால்கள் செருப்பில்லாமல் இருந்தன. உடுத்தின துணிகள் மிகவும் அழுக்கடைந்து போயிருந்தன. வாரப்படாத தலையில் சிக்கேறி இருந்தது. பல நாட்கள் குளிக்காத அலுப்பு உடம்பில் தெரிந்தது.
üüயாரு?ýý”
கம்பீரமான முழங்கும் குரலில் கமலாதாஸ் தான் கேட்டார். என் பெயரைச் சொன்னதும் என்னைத் தெரிந்திருந்தது.
üüவா. தம்பி வா, வாýý”
உற்சாகத்தோடு என்னை வரவேற்றார் கமலாதாஸ்.
உன்னோட கவிதைகளைப் பத்திரிகையில் படித்திருக்கிறேன். மீசைகூட மொளைக்காத சின்னப் பையன்னு நான் நெனக்கல.”
நான் வெட்கிப்போனேன். எனக்கு இன்னும் மீசை முழுமையாக வளரவில்லை. ஒன்றிரண்டு முடிகள் மட்டும் முளைத்திருந்தன.
üüதம்பி பசியோட இருக்கே போலருக்கு. முகத்தைப் பார்த்தால் ரொம்ப வாடியிருக்கே. வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிடுýý”
நான் அந்த ப்ரியத்தில் அதிர்ந்தேன். அழுகையும் வந்தது. நிஜமாகவே எனக்கு அதீத பசி இருந்தது. அன்றைக்கான சாப்பாடு என்பது எனக்கொரு இனிய கனவாக மட்டுமே இருந்தது.
அப்போது கமலாதாஸ் ஒரு நகவெட்டியை எடுத்து என்னிடம் தந்தார்.
üüநகம் வெட்டிக்கோ. அங்க சோப்பு இருக்கு. நல்லா கை, கால்களை சுத்தமாய்க் கழுவு. உன் கை முழுசும் அழுக்கா இருக்கு பாரு.ýý”
வள்ளுவநாட்டில் ஏதோ சொந்தக்காரரின் வீட்டிற்குப் போனதுபோல இருந்தது. இல்லை இல்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் யாரும் என்னிடம் இவ்வளவு அன்புடனும் வாத்சல்யத்துடனும் நடந்து கொள்ளமாட்டார்கள்.
எனக்குச் சோறும், குழம்பு வகைகளும் மீண்டும் மீண்டும் பரிமாறப்பட்டன. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் வயிறு நிறையச் சாப்பிட்டேன். அன்னதானம் மாறா தானம். இந்த அம்மாவுக்கு நூறு புண்ணியம் கிடைக்கட்டும். இளம் பருவத்திலான என் ஆத்மா ஆசீர்வதித்தது.
üüஅய்யோ கண்ணு கலங்கிடிச்சே.ýý”
அந்த அம்மா அதைக் கண்டுபிடித்து விட்டார்.
üüநல்ல காரம்ýý”
நான் இடக்கையால் கண்களைத் துடைத்தேன். மனசை என்ன செய்ய?
பிறகு அதிக நேரம் கமலாதாஸ் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பம்பாயில் தன் வாழ்க்கை பற்றி, திருவனந்தபுரத்தில் இலக்கிய உலகின் போக்கைப் பற்றி, இறந்து போன ஓமனா என்ற தன் செல்ல நாயைப் பற்றி... எல்லாம்... எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.
கமலாதாஸின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
மாலையில் ஒன்றாய் டீ குடித்தோம். புறப்படும்போது என் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தபோது எனக்கு சங்கோஜம் ஏற்பட்டது. அது அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
üüவச்சுக்கோ தம்பி. இவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பாக்க வந்தியே. அக்காவோட சந்தோஷத்துக்காகன்னு நெனச்சுக்கோ.ýý”- மென்மையாய்ச் சிரித்தார் கமலாதாஸ்.
திரும்பி நடந்து வரும்போது நான் நினைத்தேன். கடவுளே, இவ்வளவு சாந்தமும், தயாள குணமும், ப்ரியமுமான, இந்த பாவபட்டப் பெண்தானா நெருப்பு வார்த்தைகளைக் கொண்டு, உலகை உலுக்கும் கலகக்காரியாக எழுதுகிறாள்
ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்த கலவையாய் மாறிப்போன மனத்துடன், பெருமூச்சுவிட்டபடி அந்தி வெயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

Wednesday, June 3, 2009

impossible friend


Impossible friend- யோகிராம் சூரத்குமார்
சந்திப்பு 1
தொண்ணூறுகளின் பிற்பகுதி. üதமிழில் நவீனத்துவம்ý என்கிற பிரமிளின் புத்தகத்தின் முதல்பக்க புரட்டலிலேயே நின்று விடுகிறது மனது.
Dedicated to my impossible friend Yogiram surathkumar at Tiruvannamalai
என்ற சமர்ப்பணப் பக்கத்தைக் கடக்க முடியாமல் போய் நின்ற இடம் சன்னதி தெருவில் இருந்த யோகிராம் சூரத்குமாரின் நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் வாசல்.
பாதசாரியின் ‘காசி’ படித்து மனம் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த தருணமது. இரும்பு கேட்டை தட்டுவதற்குத் தயங்கி (காசி கதையில், காசி அதே கேட்டை வேகமாகத் தட்டியதைச் சகிக்க முடியாமல், அவனை சந்திக்க விரும்பாமல் துரத்திவிடுவார் யோகிராம் சூரத்குமார்) தயங்கி நின்றேன். உள்ளே üü0ýý வாட்ஸ் பல்ப்பின் மிகமங்கலான வெளிச்சத்தில் அடங்கும் உயிர்மாதிரி கிடந்தது தாழ்வாரம். தாறுமாறாக வீசப்பட்ட உலர்ந்த மாலைகள் பத்திருபது கண்ணில்பட்டது. அவ்வீட்டிற்குக் பத்தடிதூரக் கோயில்வளாகமும், தேரடி வீதிநெரிசலும் என்னைவிட்டு பெருந்தொலைவிற்கு அப்பால் போய் ஒரு பெரிய வனாந்தரம், அதன்நடுவில் சூரத்குமாரின் வீடு, அந்த இரும்பு கேட், நான், பிரமிளின்புத்தகம் இவை மட்டுமே நிறைந்த அமானுஷ்ய கணமது.
சப்தம் கலைந்து கதவுதிறந்து கையில் ஒரு விசிறியோடு, ஆஜானுபாகுவான உருவத்தில் முகமெங்கும் பொங்கும் புன்னகையோடு என்னைச் சமீபித்தார். அவர் மீதிருந்து எழுந்த சுகந்த மணமும் அவர் உடல் நிறமும் அத்தனை நெருக்கத்திலான அவர் இருப்பும் என்னைத் தடுமாற்றி நிலைப்படுத்தியது.
இந்தப் பிச்சைகாரனிடமிருந்து என்ன வேணும் உனக்கு?

எளிமையான, ஆனால் தெளிவான ஆங்கிலத்தில் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அவரை ஏறிட்டுப்பார்த்தேன்.
அந்த கண்கள்.
நான் கண்டறியாத, வசீகரமான நீலநிறத்தில், பார்க்கும் யாரையும் நிலைத்து நிறுத்திவிடக் கூடிய கண்கள் அவை.
உங்களுக்குக் கவிஞர் பிரமிளைத் தெரியுமா?
உனக்கு?
ஆம், நான் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தற்போது இந்தப் புத்தகத்தை வாசிக்கிறேன். இதை உங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். அவர் ஏன் இதை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
இது நீ பிரமிளைக் கேட்கவேண்டிய கேள்வி?
நீங்களும் கவிஞரா?
இல்லை நான் பிச்சைக்காரன்.
உரையாடல் அறுந்துவிட, நான் அமைதியாய் நின்றேன். அவர் என் கைகளைப் பற்றி
உன் பெயரென்ன?
பவா. செல்லதுரை
நான் உன்னை பவா என்றழைக்கலாம் இல்லையா?
தலையசைத்தேன்.
நீ திருவண்ணாமலையா?
ஆம்
எந்த ஏரியா?
சாரோன்.
ஓ…… என் நண்பன் ஜோன்ஸ் அங்கிருந்தான் அவனைத் தெரியுமா?
என் ஞாபகத்தோடு துழாவினேன்.
அவன் ஒரு பெயிண்டர். சுவர்களில் கடவுள் மறுப்பு வாசகங்களாக எழுதித் தள்ளுவான். உன்னால் நினைவுபடுத்த முடிகிறதா?
நான் ஜோன்சை கண்டடைவதை என் முகத்திலிருந்து வாசித்தறிந்து,
சொல் பவா, ஜோன்ஸ்சை தெரியுமா?
தெரியும். அவர் இப்போது இல்லை. அவர் மறைந்து சில வருடங்களாகிறது. அவர் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராகிவிட்டது. அவர் பிள்ளைகள் இங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டார்கள்.
ஜோன்ஸ் …. இப்போதில்லையா?
இல்லை.
இருக்கிறான் பவா….. இருக்கிறான்.
நான் இயல்பற்றிருந்தேன். மீண்டும் வீட்டுக்குள் போய் 0 வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரு Charminar பாக்கெட்டைத் தேடியெடுத்துப் பற்றவைத்துக் கைகளைக் குவித்து (கஞ்சா பிடிப்பவர்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்) சிகரெட்டின் நுனிகங்கைப் பரவலாக்கி
நீயும் எழுதுவியா என்றார்.
எப்போதாவது
நீ பிரமிளைப் பார்த்திருக்கிறாயா?
இல்லை, அவர் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். கடிதங்கள் மூலமாக நாங்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு எழுதமாட்டார். ஒரு பிச்சைக்காரனுக்கு எழுத என்ன இருக்கு பவா…
ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை அள்ளித் தந்ததோடு எங்கள் முதல் சந்திப்பு அடுத்த சந்திப்பிற்கான இடைவெளியைவிட்டது .

Monday, June 1, 2009

ரிட்ரீட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த தேர்தல் வேலைகளில் கடும் அதிருப்தியுற்றிருந்தேன். பணம் இத்தேர்தலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றிருந்தது. இருநூறுரூபாய் கவர்கள் ஒவ்வொரு வாக்களாருக்கும் சகல ஒழுங்கோடும் விநியோக்கப்பட்டன. பணமன்றி வேறெதுவும் தேர்தல் வெற்றிக்கு தேவையில்லை என்ற விஸ்வரூபமான உண்மையின் முன் சுருண்டுகிடந்தேன். நல்ல வேளையாக அன்றுதான் நான் விபத்துக்குள்ளாகி அதை சாக்குவைத்து ஓட்டுபோட போகாமலிருந்தேன். ஏனோ சமீபத்தில் நான் சந்தித்த எல்லா நிகழ்வுகளுமே என்னை ஒரு தோல்வியுற்றவனாக்கி அறையில் அடைந்து கிடக்கும் முடமான மனநிலைக்கு தள்ளி யிருந்தன.

தேர்தல் முடிவுகள் வந்த மூன்றாம் நாள் காலை ஈரோட்டிலிருந்து டாக்டர் ஜீவா தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரம் பேசினார். ஒரு கண்ணாடியின் முன் நின்று எனக்கு நானே தனிமையில் பேசிக்கொள்வது மாதிரியான பேச்சு அது. சமீப நாட்களில், எந்த நண்பர்களிடமும் இத்தனை ஆத்மார்த்தரீதியான உரையாடல் வாய்க்கவில்லை.

திமுகவின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி மக்களுக்கு உண்டெனினும், அதற்கு மாற்றாக ஜெயலலிதாவையும், ராமதாசையும், வைகோவையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இத்தேர்தலில் பேசிய ஜெயலலிதாவின் உரையை பெரிதும் நாடகத்தன்மையானது என்றே பெரும்பாலான மக்கள் உள்வாங்கினார்கள். மதுவிற்பனை, மணல் கொள்ளை போன்ற சமூகக்கேடுகளுக்கு எதிராக ராமதாஸ் பேசினபோதும், பெரும்பாலான ஊர்களில் இதை அவர் கட்சிக்காரர்களே செய்வதை மக்கள் கண்னெதிரே பார்க்கிறார்கள். உண்மைக்கு வெகுதொலைவில் நின்று இவர்கள் உரக்க சத்தமிட்டது சாதராண மக்களுக்கு கேட்கவேயில்லை. இத்தருணத்தை திமுக மிகச்சரியாக அறுவடை இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தது. இடதுசாரிகளின் அணிமாறும் காரணிகளாக கொள்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் நடுத்தரவர்க்க படித்தவர்களாலேயே அது நிராகரிக்கபட்டது.

டாக்டர் ஜீவா,

"ஆனாலும் இடது சாரிகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இன்னமும் முற்றாக இழந்துவிடவில்லை. தேர்தலன்றி பிறநாட்களில் சமூக அநீதிகளுக்கு எதிரான தொடர்குரல் அவர்களுடையதுதான் என்ற நிஜத்தை இந்த தேர்தல் ஆரவாரத்தால் மறைக்க முடியாதது. ஆனால் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்து வருகிறோமோ? இச்சமூகத்தின் மீதான அக்கறை குறைந்து வாழ்தலுக்கான அன்றாடங்களின் அவசியம் கூடிவிட்டதோ?" என அங்கலாயித்தார்.

முற்றின உரையாடலுக்குப் பின் மௌனமாய்க்கிடந்தேன். கடைசியாய் ஜீவா சொன்ன ஒரு வார்த்தையின் அழுத்தலிலிருந்து எழமுடியாத கிடத்தலது. "கிருஸ்துவர்களுக்குள் அடிக்கடி ரிட்ரீட் நடக்கும் பவா, அந்தமாதிரி ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர்களையும் கூட்டி ரிட்ரீட் நடத்தி, செதுக்கி, கழிக்க வேண்டியவைகளைக் கழித்து, எண்ணிக்கைகளை உதிர்த்து உயிர்ப்புகளை அதிகப்படுத்தும் வேலையை உடனே மேற்கொள்ளுமா கட்சி?."

தொலைபேசிகளிள் இருபக்கமும் நீடித்த மௌனம் பெருமூச்சாய் மாறி அடங்கியது.

Wednesday, May 27, 2009

வாழ்வை கொண்டாடிய கலைஞன் : சந்தானராஜ்


பாராளுமன்ற தேர்தலன்று காலை என் பைக் விபத்துள்ளாகி கையையும், காலையும் உடைத்துக் கொண்டு பத்து பதினைந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுகிடக்கிறேன். நண்பர்களின் வருகைகக்காக மனம் ஏங்கி தவிக்காமல் அறை முழுவதும் கொத்து கொத்தாய் நண்பர்கள் பூத்த வண்ணம் காயத்திலிருந்து வெறுமையை துடைத்து ஆறுதலை பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று மதியம் என் ஆத்மார்த்த சகா ஆனந்த் ஸ்கரியா தொலைபேசியில் அழைத்து, "பவா, நம் சந்தானராஜ் மறிச்சு போயி" என தழுதழுத்தார்.
எந்த பதட்டமுமின்றி நான் மௌனமானேன். அசைவற்று கிடந்த என்னிலிருந்து சந்தானராஜ் என்ற அந்த மகாகலைஞனை நான் அறிந்த அந்த முதல் நிமிஷத்திற்கு சில விநாடிகளில் பயணிக்க முடிந்தது. முதன் முதலில் சா. கந்தசாமி தான் எனக்கு சந்தானராஜைப் பற்றி சொன்னார்.

சந்தானராஜ் வீட்டிற்கு ஒரு நாள் காலை டிபன் சாப்பிட போயிருந்தோம். ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளை என் தட்டில் வைத்துவிட்டு ஓடிப்போய் பேன் ஸ்விச்சை அணைத்து விட்டு "இட்லி பறந்திடும்" என எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார்.

கொஞ்சம் கொஞ்சமாய் அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் ஓவியங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்து சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் அவருடைய உடல் அடக்கத்திற்கு முன் அவருடனான எனது அனுபவங்களை தனிப்புத்தகமாக எழுதலாம். பொங்கி பொங்கி வரும் உணர்வுகளை வார்த்தைப் படுத்தும் முன் மீன்குஞ்சுகள் மாதிரி துள்ளி விடுகின்றன.

ஒரு நாள் காலை டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேன் மிஷன் செகரட்ரியோடும் அவருடைய மகளோடும் சந்தானராஜை அவருடைய சென்னை வீட்டின் மூன்றாவது மாடியில் சந்தித்தோம். ஒரு காவி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டை அணியாத உடலோடு ஒரு கேன்வாசில் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஒரு திரும்பலுக்கான காத்திருப்புதான் அது எனினும் அது நிகழாமலிருக்க மனதளவில் பிராத்தித்தோம். ஒரு சிறு அசைவின் அறுதலில் அவர் எங்களோடு இருந்தார்.

நான் அவரை அறிமுகப்படுத்தினேன். கண்கள் விரிய தன் நெஞ்சோடு அவரை அணைத்துக்கொண்டு, "உன் பள்ளிக்கூடத்துலதான்யா நான் படிச்சேன்". டென்மார்க்கிலிருந்து வந்து என் கல்வி கண்ணை திறந்தேயே அதுக்கு என அவர் கையை பரிசித்து முத்தமிட்டார்.
உடனே தன் முன் தயாராக வைக்கப்பட்டிருந்த பாட்டிலை திறந்து விஸ்க்கியை ஊற்றி "எடுத்துக்கோ, இது என் நன்றி காணிக்கை" என்றார். தன் மீதேறியிருந்த கௌரவம் உதிர அந்த வெள்ளைக்காரன் ஒரு குழந்தை பால் குடிப்பது மாதிரி அந்த அதிகாலையில் விஸ்க்கியை அருந்திக் கொண்டிருந்தான்.

ஒரு அமானுஷ்ய கணத்தில் ஒரு அமானுஷ்ய மனுஷனோடு இருப்பதாக நான் உணர்ந்தேன். பேச்சு ஓவியம் பற்றி, கலையின் உன்னதம் பற்றி, கோடுகள் பற்றி, அதன் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிப்பற்றி சுழன்று சுழன்று விஸ்க்கி டம்ளருக்குள் மையமிட்டது.
அவரிடமிருந்து விடைபெறும் போது அந்த வெள்ளைக்காரனின் கண்கள் அவருடைய ஒரு ஓவியத்தின் மேல் நிலைபெற்றிருந்தது. எத்தனை பணமும் தரக்கூடிய மனநிலை அவனுக்கு இருந்தது. சந்தானாராஜ், "இது இந்திய ராணுவ தலைமையகத்திற்கு நான் தர ஒப்புக்கொண்டு செய்து கொண்டிருக்கும் ஒர்க். நீ எனக்கு கல்வியே தந்தவனாயினும் உனக்கு இதை தரமுடியாது".

அவன் என் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து போவான் என பாவனையால் நடித்துக் காட்டினார்.
எனக்கு சா. கந்தசாமி சொன்ன பறக்கும் இட்லிகள் நினைவுக்கு வந்தன.
அச்சந்திப்பிற்கு பிறகு அவருடனான நெருக்கம் இடைவெளியற்றது.

திருவண்ணாமலையிலேயே வீடு வாங்கி தன் கேன்வாஸ்களோடு வாழ நேர்ந்த பல நாட்கள் நான் அவரோடு இருந்திருக்கிறேன் அவருடைய முதுமையின் நாட்கள் வலி நிறைந்தது. "நான் ஒரு பணப்பிசாசு" என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டார் அதிகாரங்களின் மீதான மனச் சாய்வுக்கு இடம் தந்தார். ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவருடனான மூன்று மணி நேரத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து முடித்தார். தன் உடல் உபாதைகளை தீயாய் எரிந்துக் கொண்டிருந்த தன் ஓவியத் தகிப்பில் பொசுக்கிவிட முயன்றார்.

சமீப நாட்களில் என்னை தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஒதுக்கி அவரை சந்தித்த போதெல்லாம் மிகுந்த மன வெறுமையில்தான் திரும்பியிருக்கிறேன். தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை வசனம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்.

நான் ஒரு வார பத்திரிக்கைக்கு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பிரதியோடு அவரைச் சந்தித்து அதை படித்துக் காட்டினேன். என்னை கட்டி தழுவி, "என்னை நானே கண்ணாடி முன் நின்று பார்த்து பேசிக்கொள்வது மாதிரி உள்ளது" என திரும்பத் திரும்ப சொன்னார்.

வம்சி புத்தக நிலையத்தில் சந்தானராஜ், பி. கிருஷ்ணமூர்த்தி, காயத்ரி கேம்யூஸ், ஆகியோரின் ஓவியங்களை "மூன்று ஓவியர்களும் 16 படங்களும்" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினோம். ஒரு மணி நேர மேக்கப்பிற்கு பிறகு ஒரு இளைஞனான உணர்வில் எங்கள் கடைக்கு வந்தார். ரொம்ப நேரம் எங்களோடு இருந்த நாள் அது. எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை தேக்கி வைத்திருந்தார். லௌகீகமான அவரின் சில அதீத அக்கறைகளை நான் புறந்தள்ளினேன். எங்கள் இருவருக்குமான நட்பு இனைக்கப்படாமலேயே விலகிக் கிடந்ததாகவே உணர்கிறேன்.

நான் அழைத்து போன சில நாண்பர்களுடனான போதையூட்டின கொண்டாட்டங்கள் அபூர்வமானவை. காயத்ரி கேம்யூஸ்ஸின் படங்களை ரொம்ப பிடித்திருப்பதாக திரும்ப திரும்ப சொன்னார். ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி சுழன்று சுழன்று பயணித்து நிலை பெறாமல் காற்றில் அலையும் உரையாடல்கள் அவருடையது. மரணத்திற்கு மிக அருகில் அவருடைய படுக்கை இருந்தது. தன் மனைவி மகாலஷ்மிதான் அதை இன்னும் நெருக்கமக்குகிறாள் என சொல்லிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்த தன் மனைவி மகாலட்சுமியின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். மிதமிஞ்சிய அக்காதலே ஒரு ஓவியரான மகாலஷ்மியால் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் வரைய முடியாமல் போனதிற்கு காரணம்.

"குக்கூ" நடத்தின குழந்தைகள் திருவிழாவிற்கு அவரை அழைத்து டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் பேசசொன்னோம். மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்தார்.
இதோ இதுதான் என் வகுப்பறை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மீதிருந்து பீடி நாற்றம் வருவதாக (பீடி பிடித்தால் பீடி நாற்றம் வரும்தானே) என் வாத்தியர் அடித்து துரத்தினார். அதன் பிறகு எழுவது வருஷத்திற்கு அப்புறம் இப்போதுதான் இந்த ஸ்கூலுக்கு வருகிறேன். என குழந்தைகளின் குதுகலத்திற்கிடையே நீண்ட நேரம் பேசினார். அண்ணாமலையார் கோவிலுக்கு போனால் "சித்த நேரம் இருந்து விட்டு போகத் தோனுதே, ஏன் சர்ச்சுக்கு போனா உடனே வீட்டுக்கு போகலாம்ணு தோணுது? கடைசி ஜெபத்திற்கு முன்னாலேயே அங்கிருந்து வந்துடறோம்" என துவங்கிய அவரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல், "அது அந்த கட்டிட கலை சம்மந்தப்பட்டது. கிருஸ்துவ சர்ச்சுகள் வெளிநாட்டு கட்டிட கலைகளால் ஆனாது. லௌகீக வாழ்விற்கு அது உந்தும். இந்து கோவில்கள் தமிழ் மரபு சம்மந்தப்பட்டது. அது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லும். அதனால் இனி சர்ச்சு கட்டுகிற போது அதை மரபுப் படுத்தனும். நவீனத்திலிருந்து அதை மீட்டெடுக்கலாம் என்பது மாதிரியான தர்க்க ரீதியான உரையாடல்கள் என் வாழ்வில் மிக முக்கியமானது. நான் சந்தித்த பல ஓவியர்கள், குறிப்பாக மருது, ஆதிமூலம், வல்சன் என்று எல்லோருக்குமே சந்தானராஜ் ஆதர்சமாக இருந்தார். அவரை நீண்ட பேட்டி எடுக்க வேண்டுமென்று நானும் சிநேகிதி திலகவதியும் எடுத்த முயற்சி, அவருடனான ஒரு நாளை படமாக்க வேண்டும் என நானும் காஞ்சனை சீனுவாசனும் எடுத்த முயற்சி, அவரை எனக்காக மட்டும் ஒரு படம் வரையச்சொல்லி வாங்கி விட வேண்டும் என நான் ரகசியமாய் நான் எடுத்த முயற்சி எல்லாமும் நொடிகளின் இடைவெளிகளில் தோற்றுவிட்டது.

Wednesday, May 13, 2009

மதிப்புரை : த. எ. மாலதி.

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை.- த. எ. மாலதி.

கலைமனம் என்பது மனித மரபுகளை, கட்டுப்பாடுகளைத் தாண்டி தனக்கான உள்ளுணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்திக் கொள்வது கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல்வேறுவித போராட்டங்கள் நடைபெற்றாலும் தனக்கான வாழ்வியில் பாதையில், இழந்த உணர்வுகளின் ஆழத்தில் மீண்டும் மனம் சென்று இழப்புகளை மீட்டெடுக்க முயல்கிறது. ஏனோ காலச் சக்கரத்தின் இறுகிய பற்களில் ஒவ்வொரு தனிமனிதனின் விருப்புகள் துண்டிக்கப்பட்டு அந்தர வெளிகளில் தொங்க வைத்துவிடுகிறது. மரபுகளற்ற வெளிகளில் திரைகளின்றி பரிபூரணத்துவத்தோடு இயங்கும் முகங்கள் சிலவே. கலைஞன் பவாசெல்லதுரையும் ஆழ்மனப் பதிவுகளை மீட்டுக் கொணர்ந்து, மனிதத்தை மறந்த அரைமனிதர்களையும், தன் இயற்கை வாழ்வைத் துய்த்த அலாதியான தருணங்களையும், தன் உணர்வுகளோடும், ஆளுமையோடும் வாழும் பெண்களையும் இவர் கதை பரப்புகளில் நிரம்ப வைத்துள்ளார்.

பவாவின் கதைகளில் தனிச்சிறப்பாக வெளிப்படுவது, ஒவ்வொரு கதையின் உள்ளூட்டத்திலும் வீழ்படிவாக விளங்குவது மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சியும், மனித குலம் இயங்குவதற்கு ஆதார அச்சாணியாய் இருக்கும் தூய அன்பும், தனிமனிதனின் அடிப்படைத் தேவை நிறைவேறாதபொழுது, வன்முறை உயிர்த்தெழும் தீவிரமும், நேசமற்ற மனிதர்களின் உயர்சாதி இறுக்கத்தின் வெறித்தனமும், ஒவ்வொரு இழைகளாக மனிதர்களை இணைத்து இறுக்கிப் பிடித்து வாழ்வைக் கொண்டாட வைக்கும் காதலும், தம் வாழ்வோடு ஒருங்கிணைந்த பண்பாட்டுக் கலைகளும், அவைகள் தனிமனித உணர்வுகளில் உயிரோடு கலந்திருக்கும் பாங்கும், இயற்கையோடு கரைந்து வாழ்ந்த வாழ்வனுபவங்களின் நம்பகத் தன்மையும், நேசமும் உயிர்ப்பும் என்று விரவிக் கொண்டிருக்கும் பல உணர்வுகள் எச்சத்தில்...

தன் மண்ணின் விழுமியத்தோடும், இயற்கையோடும் கலந்த தன்மையால் பவாவின் கதைகளில் மாறாத உயிர்ப்புத் தன்மை மிளிறிக் கொண்டேயிருக்கிறது.
என் மனவெளிகளில் ஓயாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளில் சில "முகம்"கதை சராசரியான மனித இயல்பை, குடும்ப நிறுவனத்தில் மனித உணர்வுகள் சிதைக்கப்பட்டு தன் மனம் சார்ந்த வாழ்வை வாழ முடியாத மனிதனின் இயல்பும் முகமுடி அணிந்து அருவமாய் இயங்கும் உறவுகளின் போலித் தனமும் வெளிச்சமிட்டுக் காட்டி தன் சுய முகத்தை தொலைக்கும் மனிதர்களை குழந்தை மனத்தின் புனிதத்தை வெளிப்படுத்தி நம் முகத்திரையை கிழிக்கிறார்.

கபடமற்ற மனிதனின் உணர்வுகள் உறிஞ்சப்பட்டு ஆதிக்க வெறியர்களால் சுரண்டப்படும் அவலமும், அதனால் அவரைச் சார்ந்துள்ள குடும்பம் சிதைவுறும் அவலத்தையும், உள்ளத்தை மறைத்து உதட்டளவில் உரையாடும் நவீன நாகரிகத்தின் இழிதன்மையும் கலைத் தன்மையோடு வெளிப்படும் "வேறுவேறு மனிதர்கள்" ஒரு முக்கிய பதிவு.

அன்பைப் பருக முடியாத குழந்தைகளின் ஏக்கத்தையும், மன உலகத்தையும் பதிவு செய்து, தடம் மாறும் வாழ்வின் வலிகளை வெளிப்படையாய் காற்றின் அதிர்வுகளில் செவிப்பறைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்து, விளிம்புநிலை மக்களின் வலிகளை இனங்காட்டுகறது "மண்டித்தெரு பரோட்டா சால்னா"

கலைஞனின் உயிரோடும், உணர்வோடும் கலந்திருப்பவை கிராமியக் கலைகள். தலைமுறை, தலைமுறையாய் இதிகாசங்களையும் புராணங்களையும் நடித்துக் காட்டி, மனிதர்களின் ஆன்மாவோடு கலநது புத்துயிர்ப்பூட்டி, உழைப்பின் கடுமையை மறக்கச் செய்து ஆடலில் மகிழ்ச்சிப் பிரவாகத்தை கண்டடைவது கலைமனம்.
கலைகளின் இழப்பு, பண்பாட்டைச் சிதைத்து நாகரிகப் போர்வையின் விளிம்பில் சிக்கி, தத்தளிக்கும் மனங்களை வெளிக் கொணர்கிறது "ஏழுமலை ஜமா" எழுத்தோவியம்.

மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் வர்க்கத்தின் உச்சக்கட்ட கோரப் பற்களை உடைத்தெறிகிறது "சிங்காரக் குள மல்லிகாவின் ஆண்மைத் திறம்". ஆம், பலவேளைகளில் ஆண்கள் ஆமையாய் உள்ளொடுங்கும் நிமிடங்களில் பெண்களின் புலித்திறம் வெளிப்பட்டு வரலாற்றின் கண்களை விழிக்கச் செய்கிறது. இதோ ஒரு தலைமுறையின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது சிங்காரக்குளம். இரட்டைக் குவளை முறையும், தீட்டும், ஏளனப் போக்கும், போராட்டமும் என பல வலிகளின் உட்பிரிவுகளை ஒரு முகமாய் தாங்கித் துயருரும் அடித்தள மக்களின் உணர்வுகளை அப்பட்டமாய் விளக்கிக் காட்டுகிறது சிங்காரக் குளம். பெண்மையின் ஆற்றலை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளும் பவாவின் நேர்மை பாராட்டிற்குரியது.

காட்டு வாழ்க்கையை அங்குலம், அங்குலமாய் துய்த்துப் படர்ந்திருக்கும் கலைமனம் அவற்றின் ஏறற, இறக்கங்களையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தி, மனித உணர்வுகள் நாகரிக முதிர்ச்சியில் செயல்படுவதாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் இயற்கை மடியில் தவழ என்றுமே மறுப்பதில்லை. தாய்மண்ணின் மடியோடு தவழ்ந்து, தவழ்ந்து உறைவதையே பெரிதும் பேறாகக் கருதுகிறது.

"ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்" வாசித்து முடித்தவுடன் என் மனத தோணிகளில், ஆயிரமாயிரம் தேவதைகள் வெண்சிறகோடு சிறகடித்துப் பறந்து பயணிப்பது போன்ற லயிப்பு.நிறைந்த ஆசைகளின் வெளிப்பாடுகள் கற்பனை வெளிகளில் சரம்பாடி இதம் சேர்க்கிறது கவிமனத்தில் இழந்த அன்பினை அழகினை மீட்டுக் கொணர்ந்து சுகம் சேர்க்கிறது நினைவின் அதிர்வுகளில் ராஜாம்பாள் என் நினைவுக் கிளைகளிலும் தொற்றி, உணர்வுக் காம்பினைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாள். என் இரவின் மணித் துளிகளை இனிமையாக்கி மகிழச் செய்தது இக்கதை. இதுதானே படைப்பின் உச்சம்.
தன் படைப்பின் மூலம் வாசிப்பை ருசிபடுத்தலே கலைஞனுக்குக் கிடைக்கும் வெற்றி. இதனுள்ஒரு சாதி பேதத்தை தாண்டும் உயிர்மீட்டும் மனிதம் வெளிப்பட்டு வாழ்வியல் குறிக்கோளை எடுத்துக் காட்டும் திறம், பவாவிடம் வாய்த்துள்ளமையால், ஒரு படைப்பாளனாக வெற்றி பெற்றிருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம், தனியுடைமை ஆக்கப்பட்டு சூரர்களின் சொர்க்கமாக சமூகம் மாறும்போது, உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகளில் குருதிகளைத் தேக்கும் மனிதர்கள் தடம் மாறுவது இயற்கையே. அப்படித்தான் "சத்ரு" கதையிலும் இருளன் சித்தரிக்கப்பட்டுள்ளான். இப்பதிவு சமூகத்தில் வாழும் எத்தனையோ அப்பிராணிகளை வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கை பொய்க்கும் நிலையில் மனித சமூகம் வன்முறைச் செயல்பாடுகளில் இறங்கி மனித நேயத்தைத் தொலைக்கும் அவலத்தை சித்தரிக்கிறது. அதனால்தான் இயற்கையின் மீது மனம் கவிந்த நம் முன்னோர்கள்.
"நீரின்றி அமையாது உலகு" - என்றனர். எவ்வளவு நுட்பமாக இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அறியச் செய்திருக்கிறார் பவா. வன்முறையின் ஆணிவேரை, ஆழப்பிடுங்கி வெளிக்காட்டி விநோதப்படுத்துகிறார்.

மனிதர்கள், அவரவர்களின் உணர்வுகளைப் பிறருக்காக தியாகம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் சிதைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக தன் மனச் சிந்தனைகளின் விடுதலை உணர்வோடு செயல்பட்டு வாழ்வதே வாழ்தலின் இயல்பு. முகமூடி வாழக்கை அருவருக்கத்தக்கது. சிதைவுகள் மீண்டும் சேர்வதுமில்லை வாழ்வதுமில்லை.
குழந்தையை விரும்பும் பெண்ணின் உளவியலுணர்வை மையமிட்டுள்ளது "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை". ஆம். கருவறைகள், இருளறைகள் அல்ல.

நட்சத்திரங்களையும், முத்துக்களையும் உருவாக்கும் ஒளியறைகள். மானுடத்தை ஜனிக்க வைக்கும் ஆதார உறுப்பறைகள். தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் மனவுணர்வு, புற வெளிகளில் காணும் காட்சிகளிலும் படிந்திருப்பதை அழகுபட வருணித்திருக்கிறார்.
தன் உளவலிகளை, மனச்சிதைவுகளை, புறக்காட்சிகளில் காணும் இயேசு பிறப்பு நிகழ்ச்சியின் வழி ஆற்றிக் கொள்ளும் பெண்ணின் இருப்பை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது இக்கதை. குழந்தைப் பெறுதலை முக்கியப்படுத்தும் சமூகத்தின் மனோநிலையும் அதன்வழி பெண்ணின் உணர்வு சார்ந்த வலிகளையும் வெளிப்படுத்துகிறது இக்கதை.
மொத்தத்தில் மனிதனின் கூருணர்ச்சிகளை மையமிட்டு, புடம்போட்டு, சமூகத்தின் தனிமனித உணர்வுகளின் சிதைவு நிலைகளையும், மனிதத்தின் இழப்பையும், சாதிவேரை, ஆழத்தோடு பிய்த்தெறிய முனையும் போராட்டமும், சராசரி மனிதன் சமூக மரபுக் கட்டுக்களுக்கு அஞ்சி, தன் அகத்திற்குள் வாழும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் அவை வெளிப்படுத்த இயலா நிலையில் கற்பனைகளோடு இயங்கும் யதார்த்த வாழ்வின் இயல்பையும் தன் படைப்பின் மூலம் வெளிப்படையாகவே பேசுகிறார் பவா.

இச்சிறுகதைத் தொகுப்பு காட்டும் நில வருணனைகளின் தனிச் சிறப்பும், மனித இயல்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் தன்மையையும் இழைத்துக் கொடுத்திருக்கும் பவாவின் உயிர்போடு கூடிய இக்கதைகள் மனிதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உச்சத்தை எட்டியுள்ளது.

Friday, May 8, 2009

மெளனம் கலைந்து மன்னிப்பு


"ஆசிரியைக்கு அன்புடன்" - ஆவணப்படம்

நெய்வேலி செல்வன், நவீன கலை இலக்கியச் சூழலிலில் தொடர்ந்து புழங்கும் பெயர். அவர் ஒர் புகைப்பட கலைஞர். தேடித் தேடி வாழ்வின் அவலத்தையும், அழகையும் தன் புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் நாங்கள் நடத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டிற்கு அவர் புகைப்படங்களை காட்சிப்படுத்த நினைத்து பெரும் ஆர்வத்துடன் அவரிடமிருந்து அவர் படைப்புகளை பெற்றோம். சிலர் மீது மட்டுமே குவியும் வேலைப் சுமையில் மூச்சுதிணறி, அவர் புகைப்படங்களை கௌவரமாக காட்சிக் படுத்தாதது மட்டுமல்ல, மதிப்புமிக்க அப்புகைப்படங்களை அவரிடம் திரும்பவும் ஒப்படைக்க முடியவில்லை. அவர் என் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். உணர்ச்சி குவியாலாகி எல்லாவற்றையும் உடனே நிறைவேற்றிவிடவேண்டும் என்ற மனநிலையிலிருந்து சற்றேனும் விலக வேண்டும் என்றுணர்ந்தேன்.

ஓராண்டுக்கு பிறகு அவர் புகைப்படங்களின் அத்தனை பிரதிகளையும் சேலம் மணியண்ணனிடம் சொல்லிலி அவர் விரும்பியபடியே திருப்பி கொடுத்த பின்புதான் என் குற்றவுணர்வு குறைந்தது.மௌனம் எங்கள் இருவருக்குமான இடைவெளியை மூன்று வருடங்களாக அடைகாத்தது. கடந்தமாதம் செல்வனிடமிருந்து ஒரு கூரியர் வந்திருந்தது. இன்னும் மிச்சமிருந்த சிறு நடுக்கத்துடன் பிரித்தேன். இரண்டு ஈயஈ – கள். அன்றிரவே அவருடைய "ஆசிரியைக்கு அன்புடன்" படத்தை ஷைலஜா மற்றும் என் குழந்தைகளோடு பார்த்தேன். எல்லோருக்குமே அப்படம் பிடித்திருந்தது.

நெய்வேலிலி குளோனிலி பள்ளியில் பாட்டாசிரியையாக பணிபுரிந்த ஸ்டெல்லா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியைப் பற்றியது அப்படம்.குளோலினி பள்ளியின் ஒரு வெள்ளிவிழா கூடுகையில் பழைய மாணவர்கள் சங்கமித்திருக்கிறார்கள். பேச்சு தங்கள் பிரியத்திற்குரிய ஸ்டெல்லா டீச்சரை மையம் கொண்டிருக்கிறது.அவர்களின் தற்போதைய வசிப்பிடம், வாழ்நிலை எல்லாவற்றையும் தேடி கண்டைந்து சக நண்பர்களிடம் பகிரவேண்டிய பொறுப்பு பொறியாளராகி பெங்களூரில் வசிக்கும் ஆனந் (பழைய மாணவர்) என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஆனந் தன் பழைய இரட்டை ஜடை போட்ட அழகிய ஸ்டெல்லா டீச்சரை முதுமையேறி, வறுமைதின்று கொண்டுயிருக்கும் ஒரு கிழிந்த பழத்துணி மாதிரி தனிமையுற்று, தான் வளர்க்கும் இரண்டு கிளிகளிடம் தன் தனிமையின் கதையை ஒப்புவித்திருக்கும் எவ்வித ஆதரவற்றவளாக ஸ்டெல்லா டீச்சரை கண்டைகிறான்.

தன் பழைய டீச்சரின் நிகழ்காலம் ஆனந்தை பல கேள்விகளுக்கிடையே சிக்கவைக்கிறது. முதலிலில் ஒரு ஸ்ரீங்ப்ப்ல்ட்ர்ய்ங் – வாங்கி தன் நண்பர்களின் (ஸ்டெல்லா டீச்சரிடம் படித்தவர்கள்) எண்களை பதிந்து அவர்களுக்கு பரிசளிக்கிறார்.

தனிமையின் சகிக்க முடியாத மௌனத்தை சத்தம் கலைத்து கொண்டேயிருக்கிறது. தன் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரிடம் நீளும் உரையாடல்கள், ஸ்டெல்லா டீச்சரின் பகல்களை ஈரப்படுத்துகிறது. தன் முகத்தில் தோன்றும் புதிய பொலிவையும், உதட்டோரம் துளிர்க்கும் ஒரு புன்னகையையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. அந்த மாணவர்களின் எதிர்பார்ப்பும் அது தான். வெறும் 1250 - ரூபாய் ஓய்வூதியத்தில், பெங்களுரில் வாழநேரும் அவலத்திலிருந்து ஸ்டெல்லா டீச்சரை அந்த பழைய மாணவர்கள் மீட்டெடுத்து நெய்வேலிலியிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன் தாயைப்போல அவளை பராமரிக்கிறார்கள்.

ஒரு நாள் தான் பணிபுரிந்த குளோனிலி பள்ளிக்கு கைத்தாங்கலாக அழைத்துபோய் பழைய ஞாபங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். தான் பாடலெடுத்து பாடிய அறை, தான் தங்கியிருந்த – தனக்கு பிரிவுஉபச்சார விழா நடந்த மேடை, தான் பிரியத்தோடு வாசித்த பியானோ- கவிதையான காலங்கள் அது.

நாற்பதாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தன் மாணவர்களின் குரூப் போட்டோ அவர் முன் காட்சிப்படுத்தப்படுகிறது. இரட்டை ஜடைபின்னலோடு ஸ்டெல்லா டீச்சர் ஒரு மர நாற்காலிலியில் உட்கார்ந்திருக்க, உட்கார்ந்தும், நின்றுமாய் அம்மாணவர்கள்.
இப்போது அதே நெய்வேலியில் பிரபல மருத்துவராயிருக்கும் டாக்டர் செந்தில் அப்புகைப்படத்தை ஸ்டெல்லா டீச்சரிடம் காண்பித்து.

"இவர்களை தெரிகிறதா டீச்சர்?"

இது பி. சாந்தி. இவன் கே. செந்தில் இவன் ஆனந் ….. இவ ஹேமலதா…
அற்புதம்… ரத்தத்தோடும் ஜீவனோடும் தன் மாணவர்களை ஸ்நேகித்த ஒரு ஆசிரிய மனசுக்கே இது சாத்தியம்.

நிற்கிறவர்களின் வரிசையில் மூன்றாவதாக காக்கி கால் சட்டையும், வெள்ளைசட்டையும் போட்டு, மிலிலிட்ரி விறைப்போடு நிற்கும் அச்சிறுவன்தான். இன்று இப்படத்தை தன் ஆசிரியைக்காக எடுத்து நமக்கு தந்து, நம் சக மனிதர்கள் மீதான பொறுப்பின்மையை குற்றவுணர்வுக்குள்ளாக்கி நிற்கும் ந. செல்வன்.

இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியைகள் ஞாபங்களில் ஒளிருவார்கள். அதுதான் செல்வன் என்கிற புகைப்பட கலைஞன் கரடுதட்டி போயிருக்கிற நம் வறண்ட வாழ்வில் மழைமாதிரி நீரைப்பொழிகிறான்.

அக்கலைஞனிடம் எனக்கிருந்த நீண்ட மௌனத்திற்காக ஸ்டெல்லா டீச்சரின் வழியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, May 6, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே - நீ
பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ...
நித்யபிதா ஒருவருக்கே
நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் - இங்கே
பங்கமுற்ற பசுந்தொட்டியில்
படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.