Thursday, September 20, 2018

பவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம் by அழகுநிலா.

பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி.

உதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையில் ‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க’ என்று காதர் சொல்வதை இயல்பாகக் கடந்த “நான் காசெல்லாம் வேணாம் சார். சம்சாரம் போன்னு சொல்லிடுச்சு சார். சம்பாதிக்காதவன் எதுக்குடா என்கிட்ட குடும்பம் நடத்துறேன்னு சொல்லிடுச்சு சார்.எப்படியாவது எனக்கு ஒரு வேசம் கொடு சார்”என்று பவாசொல்லும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போனேன்.

பவா 2008 ஆம் ஆண்டில் ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் 2016 ஆம் ஆண்டில் ‘டொமினிக்’ என்ற இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மொத்தமாகப் பார்த்தால் இருபதே சிறுகதைகள்தான். “பல ஆண்டுகளாக என்னுள் ஊறிக் கிடக்கும் கதைகளோடு வாழ்வது சுகானுபவமான ஒன்று. அவற்றை வெளியே எடுக்க மனம் வரவில்லை” என்று தான் குறைவாக எழுதுவதற்கான காரணத்தைப் பவா முன்வைக்கிறார். ஆனால் இருபது கதைகளையும் படித்து முடித்த பிறகு பவாவிற்குள் வெளிவராமல் புதைந்து கிடக்கும் கதாமாந்தர்களையும் சந்திக்க வேண்டும் என்ற வேட்கை எழுகிறது.அவர் சிறந்த கதை சொல்லி என்பதை அவரது சிறுகதைகளும் நிரூபணம் செய்கின்றன.

பவா தனது புனைவில் காட்டும் நிலப்பரப்பு எனக்கு முற்றிலும் புதிதானது.மலைகளும் காடுகளும் காட்டில் வாழும் உயிரினங்களும் மரங்களும் கதாப்பாத்திரங்களுக்கு இணையாக உலாவும் இக்கதைகள் மருத நிலத்தில் பிறந்த எனக்குவித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தன. கடந்த மாதம் வாசித்த அய்யனார் விஸ்வநாத் எழுதிய ‘ஓரிதழ்ப்பூ’நாவல் வழியாகத்தான் திருவண்ணாமலை என்ற நிலமே எனக்கு அறிமுகமானது.பெயரளவில் மட்டுமே கேட்டுள்ள இதுவரைப் பார்த்திராத இந்த நிலத்தின் ஆன்மாவையும் ஆழத்தையும் பவாவின் கதைகள் வழியாக ஊடுருவி அறிய முடிகிறது.

இந்த ஊடுருவலுக்கு முக்கிய காரணமாய் பவாவின் கதைமாந்தர்களைச் சொல்லலாம். கலைஞன், கள்வன், வேட்டைக்காரன்,கிணறு வெட்டும் ஒட்டன், இருளர், பறையர்என எளிய, விளிம்பு நிலை மனிதர்களை வாசகனுக்கு நெருக்கமாக்குவதில் பவாதனித்தன்மையோடு மிளிர்கிறார். இக்கதைமாந்தர்கள் பவாவின் கற்பனையில் உதித்தவர்கள் அல்லர்.  அவரைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்கள் என்பதை அவரது மொழியின் வழியாக உணர முடிகிறது.

கூட்டம் கூட்டமாய் குகைகளில் வாழ்ந்த காலம் தொடங்கி நாகரீகமடைந்து குடும்பமென்ற அமைப்பிற்குள் வாழும் இக்கணம் வரை மனிதர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்களை இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறது. மனித மனது எந்த தருணத்தில் அன்பெனும் ஊற்றால் பொங்கி வழியும் என்பதையும் எந்த நொடியில் வன்மமெனும் தீயை உமிழும் என்பதையும் கடவுளால் கூட கணித்துவிட முடியாது.வாழ்வின் அற்புத கணங்களை அற்ப காரணங்களுக்காக அமிலம் ஊற்றி பொசுக்கும் வல்லமை கொண்ட வெறுப்பையும் தொலைவிலிருக்கும் காதலை விட அருகிலிருக்கும் காதல் சில சமயங்களில் முள்ளாய் மாறும் வேடிக்கையையும் பவாவின் சிறுகதைகளான ‘முகம்’,‘பிரிவு’ இரண்டும் பேசுகின்றன.

அதிகாரத்தின் தவற்றாலும் திமிராலும் எந்தக் குற்றமும் செய்யாத எளிய மக்கள் பாதிக்கப்படுவதைப் போலக் கொடுமை வேறோன்றும் இருக்க முடியாது. சமூகத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கசிலர் இருந்தாலும் பெரும்பான்மையோர் இக்கொடுமைகளுக்கு இலக்காகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘பிடி’ சிறுகதையில் பள்ளியில் தனது மகனைப் பழி வாங்கும் நோக்கில் செயல்படும் தலைமை ஆசிரியரைத் தட்டிக் கேட்கும் அப்பாவும் ‘வேறுவேறு மனிதர்கள்’ சிறுகதையில் மன நிலை பாதிக்கப்படும் ஜேக்கப் வாத்தியாரும் இரு துருவங்களாய் நம் மனதில் தங்கிவிடுகின்றனர். குறிப்பாக அக்குளில் குடையோடும் விரைவாதத்தோடும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்தும் மனிதரான ஜேக்கப் வாத்தியார் இறுதியில் பைத்தியமாவது மனதைக் கனக்கச் செய்கிறது.

கலைஞர்களின் வாழ்க்கை பரிதாபகரமான ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் கலையை சராசரி மனிதர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. லௌகீக விஷயங்கள் தரும் அழுத்தங்களைச் சமாளிக்கவும் தனது கலையைத் தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்கள் வாழ்க்கையோடு ஒரு தொடர் போராட்டத்தை நடத்துகிறார்கள். ‘ஏழுமலை ஜமா’,‘கரடி’ என்ற இரண்டு சிறுகதைகளும் ஒரு கலைஞனின் அகப்போராட்டத்தையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனதையும், அவமானத்தையும் பதிவு செய்கின்றன.‘கரடி’ கதையில் தீ சாகசம் செய்யும் தல்லாக்குளம் ரமேஷ் தனது கலைக்கு வெகுமதியாக கிடைத்த ஐம்பது ரூபாய் பணத்தை கிருஷ்ணன் வேஷமிட்டு வரும் சக கலைஞன் மார்பில் குத்துமிடத்திலும் ‘ஏழுமலை ஜமா’ கதையில் ஏழுமலையின் கால்களை வாத்தியார் தொட்டு வணங்குமிடத்திலும் கலைஞனின் மனது எத்தனை உன்னதமானது என்பதை பவா மிக அழகாக காட்டுகிறார்.

தனது களவுத் தொழில் காரணமாய்ப் பிடிபட்டுஜமீனால் தண்டிக்கப்பட்டு கூண்டிலிருந்து தப்பியோடிஇறுதியில் ஜமீன்தாரின் தங்கையால் களவாடப்படும் பச்சை இருளனும்,தனது அத்தனை உடைமைகளையும் மூன்றாம் மனிதனுக்காக விட்டுக்கொடுத்து மனிதர்களிடம் கருணையை மட்டுமே காட்டத் தெரிந்த வெள்ளைக்கார கலைஞனான டொமினிக்கும் வாசகமனதில் நிரந்தஇடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர். குறிப்பாக டொமினிக் ஜெயகாந்தினின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றியை எனக்கு ஞாபகப்படுத்திய ஒரு பாத்திரப் படைப்பு.

‘வேட்டை’ சிறுகதையில் வரும்ஜப்பான் கிழவன் ஹெமிங்வேயின் சாண்டியாகு கிழவனை நினைவூட்டினாலும் கதை வேறு ஒரு கோணத்தில் நகர்கிறது.மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெல்வார்? யார் தோற்பார்? என்பது பெரிய புதிர். ஹெமிங்வே சாண்டியாகுவின் வழியாக மனித ஆற்றல் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி லட்சியவாதத்தை முன்வைக்கையில் பவா யதார்த்தத்தைமுன்னிறுத்திகிறார். வேட்டைக்குச் செல்லும்ஜப்பான் கிழவன் வெறுங்கையோடு திரும்புகையில் காட்டால் வேட்டையாடப்பட்ட அவனது மனதின் காயங்களை உணரும் வாசகன் கலங்கிப் போவான்.

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று ‘சத்ரு’. திருடனான பொட்டு இருளன் பிடிபடுகிறான். கிராமத்தார் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தவுடன் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன. கடும் பஞ்சத்தோடும் காய்ந்து வெடித்த பூமியோடும் பல நாட்களாய் மல்லுக்கட்டிய அக்கிராமத்திற்கு அன்றிரவு வான்தாய் தனது மேகமுலைகளிலிருந்து மழையைச் சுரக்கிறாள்.துன்பத்தை, கோபத்தை, வன்மத்தை, வெறுப்பை இப்படி எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு பேரன்பையும் பெருங்கருணையையும் மட்டும் விதைத்து மனிதர்களை மழைநீர் நனைக்கிறது. “இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா.போ போய் பொழைச்சிக்க” என்று இறுதியில் பொட்டுஇருளனை அவர்கள் விடுவிக்கும் இடத்தில் மழையால் அவர்கள் மனது கொள்ளும் விரிவும் பெருந்தன்மையும் நமது கண்களையும் ஈரமாக்குகிறது.

‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ சிறுகதையில் இரண்டு குழந்தைகளையும் கருவிலேயே பறிகொடுத்த மேரி மூன்றாவதாக வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் கருவும் தங்காது என்று நிமித்தம் கூறப்பட்டவுடன் கலங்கித் தவித்து,நெருங்கி வரும் கிருஸ்மஸில் ஆர்வமற்று நடைபிணமாய் இருக்கிறாள். தன் குழந்தையைக் காப்பாற்ற ஒரு ரட்சகர் வேண்டுமென்று முட்டியிட்டு இறைந்து மன்றாடுகிறாள்.  கிறிஸ்மஸிற்கு முந்தைய இரவில் கன்னிமரியாளுக்கு எந்தச் சேதாரமுமின்றி குழந்தை பிறந்துவிட்டது என்று கிருஸ்மஸ் தாத்தா சொல்லும் அச்செய்தி நம்பிக்கையின்மையில் உழன்று கொண்டிருந்த அவளுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது.குழந்தை யேசுவின் பிறப்பில் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கும் மேரியின் வழியாக பவா புனைவில் தனது வெற்றியை நிலைநாட்டிக்கொள்கிறார்.

மானுடர்கள் தங்கள் கீழ்மைகளைத் துறந்து ஒரு சொல் அல்லது செயலின் வழியாகதெய்வ நிலைக்கு உயரும் உன்னத தருணங்களைக் காட்சிப்படுத்துவதுதான் பவா கதைகளின் சிறப்பம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில் ‘வலி’சிறுகதையில் வரும் ரகோத்தமனும் ‘நீர்’ சிறுகதையில் வரும் அஞ்சலையும் அறத்தின் பக்கம் நின்று மானுட மேன்மையை வாசகனுக்குக் கடத்துகிறார்கள்.

பவா கதைகளின் மற்றொரு சிறப்பு,இவர் மையக் கதாபாத்திரத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மற்றகதைமாந்தர்களுக்கும் தருகிறார் என்பதுதான். இவரது புனைவில் தோன்றும் அனைவருமே தங்களது தனித்துவத்தையும் சிறப்பியல்பையும் கண் இமைக்கும் நொடியில் வெளிப்படுத்தி கதையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறார்கள்.‘முகம்’ கதையில் அம்முக்குட்டி, ‘சிங்காரக்குளம்’ கதையில் பிணமாய் மிதக்கும் மல்லிகா, ‘சத்ரு’ கதையில் மருத்துவச்சியாய் வரும் ரங்கநாயகி கிழவி, ‘சிதைவு’ கதையில் விலைமாதாக வரும் விஜயா, ‘கரடி’ கதையில் “வேணாண்ணா” என்று கத்தும் கிராமத்துச் சிறுமி, ‘கால்’ கதையில் சூம்பிய கால்களைக் கொண்டவன் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பவாவின் கதைகள் குறிஞ்சி மயங்கி வந்த முல்லை நிலம் சார்ந்தவை என முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. தாலியறுத்தான் பாறை, கோட்டாங்கல் குன்று, பொறையாத்தம்மன் குன்று ஆகியவற்றாலான குறிஞ்சியையும் மகுட,நாக,வேப்ப, புளிய, பனை, பீவேலி, எட்டி,புங்க,பூர்ச, வெப்பால மரங்களோடு மொசக்குட்டி, காட்டுப்பன்னி, புனுகுப்பூனை,குள்ள நரி, மைனா, காடை, கௌதாரிபோன்ற உயிர்களாலான முல்லையையும் களமாகக் கொண்டு ஜிலேபி, வெரால், உளுவை, கொறவை, வெளிச்சிக் கெண்டை, ஆறா, அசரை, தேளி போன்ற மீன்களின் கவிச்சோடும் சோளம், கம்பந்தட்டை, மல்லாட்டை,கேவுறு,வெள்ளாட்டுக்கறி, கோழிக்குழம்பு இவற்றின் ருசியோடும்தண்ணிமுட்லான் கிழங்குகளின் ஈரத்தோடும் இன்னும் பல படைப்புகள் பவாவிடமிருந்து வெளிவரவேண்டுமென்ற எதிர்பார்ப்போடு ஒரு வாசகியாய் காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.

நன்றி - வல்லினம்
கலை இலக்கிய இதழ்

Friday, September 14, 2018

பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்


உமா கதிர்

சாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின் மூக்கு வழியாக கோர்த்து தோளில் போட்டவண்ணம் வந்துகொண்டிருந்தனர்.
நான் என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். உடனே குறவனைக் கூப்பிட்டு பேரம் பேசி ஐந்து எண்ணம் கொக்கும் இனாமாக ஒரு நாரையும் வாங்கினாள். அருவாமனையை எடுத்து வரச்சொல்லி வீட்டின் வாசலிலேயே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். நான் குத்துக்காலிதட்டு உரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தலையணை உறையை கழத்துவது போல கழுத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கீறு கீறி உரிக்கத்தொடங்கினர். பால் நிறத்தில் இருந்தன இறகுகள். உரத்தபின்பு கொக்கு குருவி அளைவிற்குதான் இருந்தது.


அதன் கழுத்தில் கடலை உருண்டை அளவில்புடைத்திருந்தது. அதில் கத்தி முனையால் லேசாக கீறியதும் தட்டில் மல்லாட்டைகள் கொட்டியது. பச்சை மல்லாட்டை. எங்கோ தொலைதூர கடலைக்கொல்லையில் அவை தின்றிருக்கலாம். அவ்விதமே அவை கொக்கின் வயிற்றுக்குள் செரிமானமாகாமல் குறவனின் வயிற்றுக்குள் செரிமானமாக எழுதியிருக்கிறது. அந்த பச்சை மல்லாட்டையை அப்படியே எடுத்து நீரில் கழுவி வாயிலிட்டு மென்றபடி அடுத்தடுத்த கொக்குகளை உரிக்கத்தொடங்கினார்கள். நான் ஆச்சரியம் விலகாமல் அவர் தின்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பழுக்கற்ற அந்தக் காட்சி எளிதில் மறக்கக் கூடியதல்ல. குழந்தை தன் வாயிலிதட்டுத் தருவதை எவ்வித சுழிப்புமின்றி தாய் உண்பதைப் போன்ற காட்சி. அவைகளை விற்றுத் தொழில் நடத்தினாலும் அவற்றின் மேல் குறவர்கள் வைத்திருக்கும் அன்பைப் போல வெறொருவர் வைத்திருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக அன்றைய கொக்குக்கறி மிகுந்த சுவையுடன் இருந்தது. குறவர்கள் பணம் பெற்றுச்செல்லும்போது அவரின் துப்பாக்கியின் மேலே கண்ணை வைத்துக்கொண்டே கேட்டேன். என்னையும் அடுத்த வேட்டைக்கு அழைத்துச் செல்வீர்களா என்று. சிரித்தபடி சென்றுவிட்டனர். பிறகு அரசு அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டது. வேலைக்குச் சென்று பொருளீட்டும் குடியான வாழ்வை வாழச்சொன்னது. கொக்கும், வெள்ளை எலியும், முயலும் விற்றபடி தெருவில் செல்லும் மனிதர்கள் இல்லாமல் போனார்கள். நிரந்தரமாக அவர்களை ஓரிடத்தில் தங்கச்சொல்லி ஒதுக்குப்புறமாக வாழச்சொன்னது. பிறகெப்போதும் நான் கொக்குக்கறி சாப்பிடவில்லை. பவா செல்லத்துரை அவர்களை சந்திக்கும் வரை.

சில நட்புகள் எப்படி உருவாகும் என்பதை அறிய முடியாது. தானாக நிகழ்ந்துவிடும். நம் வாழும் காலம் வரை தொடர்ந்து அந்த நட்பும் நம்முடனே வந்துவிடும். முன்பின் அறிமுகமில்லாதவர் பவா, அவர் எழுத்துக்களை வாசித்ததுமில்லை, அவரை அறிந்ததுமில்லை. எனக்கும் பவாவுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அந்த நட்பு ஏற்பட்டது. அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அமீரகத்தில் வலைப்பூவில் எழுதும் காலத்தில் நண்பர்களானோம். அமீரகத்திலிருந்து திரும்பி ஊரில் வெட்டியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது அய்யனாரிடமிருந்து போன். “எங்கூர்ல ஒரு கிரகப்பிரவேசம் நாளைக்கு வந்துடு” என்றார். கிரகப்பிரவேசத்தில் நமக்கென்ன வேலை? மூதலில் கோமாதாவை அல்லவா உள்ளே அழைத்துச் செல்வார்கள். நம்மை மாடு என விடைக்கிறாரோ என்றொரு சம்சயம் வந்தது. வரமுடியாது என்றேன். நீ கண்டிப்பா வரணும். உனக்கு இந்த வீடு பிடிக்கும். சும்மாதான இருக்க வந்துட்டு போ என்று உரிமையோடு சொன்னார். வருவதாக வாக்களித்தேன. மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதில் உள்ளூர ஒரு தயக்கம் என்னிடமிருந்தது. வருவதாக சொன்னேனே ஒழிய போகும் எண்ணமெல்லாம் இல்லை. யாரோ குடிபோகிறார்கள் அங்கே நாம் போய் என்ன செய்வது என்ற தயக்கம் தடுத்தது. இருந்தாலும் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன்.

திருவண்ணாமலையை எல்லோரும் அக்கோயிலுக்காகவும், ஆசிரமங்களுக்காகவும், கிரிவலத்துக்காகவும் மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிவார்கள். நானும் அவ்வண்ணமே அறிந்திருக்கிறேன். அக்கா திருமணத்திற்குப் பிறகு புதுமணத்தம்பதிகளுடன் மாப்பிள்ளைத் தோழனாக கிரிவலம் சுற்ற நானும் போக நிர்பந்திக்கப்பட்டேன். வெறும் கால்களுடன் தார் ரோட்டில் பல மைல்கள் நடந்து மலை சுற்றியதால் மறுநாள் கால்களில் கொப்புளம் வெடித்து நடக்க முடியாத நாட்கள் நினைவுக்கு வந்தது. அந்த ஒரு காரணத்திற்காகவே மனதில் ஓரத்தில் திருவண்ணாமலையை வெறுத்தேன்.

சும்மாதானே இருக்கிறோம் எனக் கிளம்பி பேருந்தில் அமர்ந்துவிட்டேன். அங்கே இறங்கியதும் அய்யனாருடன் சேர்ந்து பவாவின் இல்லம் சென்றோம். கிரகப்பிரவேசத்திற்கான எவ்வித அறிகுறியும் அவ்வீட்டில் இல்லை. தோரணம், பந்தல், வாழைக்குலை, நாயனம், மேளம் எதுவுமே இல்லை. நிறைய ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவ்வீட்டைக் கட்டிய கொத்தனார்களும், சித்தாள்களும் வீட்டைத் திறக்க பக்கபலமாக இருந்தார்கள். கருப்புக் கண்ணாடி அணிந்த தொப்பி போட்ட வயதான ஒருவர் ரிப்பன் கத்தரித்தார். எல்லோரும் உள்ளே சென்றோம். அவ்வீட்டில் நிறைய ஆச்சரியங்கள் இருந்தது. மற்ற வீடுகளைப்பொல அல்ல அந்த வீடு. மொத்த வீடும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. கதவுகள் கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தது. உபயோகமில்லாத ஆட்டுக்கல்லை வாஷ்பேசினாக வைத்திருந்தார்கள்.

சுவர்களில் சதுர சதுரமாக தெரியும் கற்கள் எதோ கிணற்றுக்குள் இருப்பதைப்போன்ற உணர்வைத் தந்தது. நீரில்லாத கிணற்றின் உள்ளே இருப்பதைப்போன்ற நிழல் குளுமை. திடிரென ஒருவர் குரலெடுத்து நாட்டுப்புற பாடல் ஒன்றைப் பாடினார். சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் மிக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். கண்கள் மூடியதும் நான் எதோ வயல்வெளி ஒன்றில் அமர்ந்திருப்பதைபோல நினைத்துக்கொண்டேன். சுவர்ப்புறம் சாய்ந்து ஒருக்காலை மடக்கி மற்றொரு காலை சப்பணமிட்டு கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தவரை தூரத்திலிருந்து அடையாளம் காட்டினார் அய்யனார். உன் பக்கத்துல யார்னு தெரிதாடா என்றார். அப்போதுதான் கவனித்தேன். என்னருகில் அமர்ந்திருந்தது இயக்குனர் பாலுமகேந்திரா.

அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம் போன்ற காலத்தால் அழியாத படங்களைத் தந்த ஒரு மாபெரும் படைப்பாளியின் அருகில் அமர்ந்திருக்கிறேன் என நம்பமுடியவில்லை. சட்டனெ ஒரு பயம் கவ்விக்கொண்டது. பொருத்தமற்ற இடத்தில் அமர்ந்து விட்டதைப்போன்ற பதட்டம். சாப்பிட அமர்ந்தபோது அருகில் இருந்தவரைக்கூர்ந்து கவனித்ததில் அவர்தான் கா.சீ. சிவக்குமார் என்று அறிந்துகொண்டேன். சிரிப்புக்கு பஞ்சமில்லாத பேச்சு. கன்னிவாடி அப்போதுதான் படித்திருந்தேன். சீனமுகம் போல சிரிக்கும்போது அவரின் கண்கள் மறைந்துவிட்டிருந்தது. அன்றைய விருந்தில் ஒரு ஆட்டின் அத்தனை பாகங்களையும் விதம் விதமாக சமைத்திருந்தார்கள். ஷைலஜா அக்கா அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருந்தார்.

ஒரு வழிப்போக்கன் திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்து அக்குடும்பத்தில் ஒருவனாகிவிட்ட ஆச்சரியம் போல அவ்வீட்டில் இருந்தவர்கள் என்னை ஏந்திக்கொண்டனர். கடைசிப் பந்திவரை என் வீட்டு விசேஷம் போல நான் ஓடியாடி பரிமாறிக்கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்து ஆசுவாசமாக பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வழக்கம்போல க.சீ. சிவாதான் அங்கே நடுநாயகமாக பேசிக்கொண்டிருந்தார்.

புதிதாக நுழையும் எவரும் ஒரு நொடி குழம்பி அதிசயித்துப்போகவே சாத்தியம் உள்ள வீடு அது. தன்னம்பிக்கையின் உச்சம் பவா. கலைஞர்களின் மனதே அப்படி உருவானதுதான். இயக்குனர் மிஷ்கின் பரிசளித்த புரொஜெக்டரில் வம்சி (அப்போது சிறுவன்) வீட்டின் மொட்டைமாடியில் சினிமா கிளப் ஒன்று தொடங்கினான். அத்தெரு சிறுவர்களை அழைத்து இரானிய இயக்குனரின் படம் ஒன்றை திரையிட்டான். அப்படத்தைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த இயக்குனரை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அழைத்து வந்து திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும் என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். எப்படி அவரை தொடர்புகொள்வது எனபதுதான் சிக்கல்.

வீடு திரும்பும்போது அவரின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” என்ற சிறுகதைத் தொகுப்பை எடுத்து வந்திருந்தேன். தமிழ் இலக்கியத்தில் பிராந்திய மண் சார்ந்த கதைகள் எப்போதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எல்லா பக்கங்களிலும் மண்சார்ந்த கதைகள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நடுநாட்டுக்கு என்று வரும்போது மிகச்சிலரே அதில் முகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். கண்மணி குணசேகரன், இமயம், அஷ்வகோஷ் என்றழைக்கப்படும் ராசேந்திரசோழன். எனஇவர்களுக்கு சற்றும் குறையாத தரத்துடன் எழுதப்பட்ட கதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைத் தொகுப்பில் உள்ளது. மிக மிக அற்புதமான கதைகள் அவை. சில கதைகள் அதன் தலைப்புகளுக்காகவே மிக அதிக வாசகர்களால் நினைவுகூரப்படுவதுண்டு.

உதாரணமாக ராசேந்திர சோழனின் “தனபாக்கியத்தோட ரவ நேரம்” அதே போல இத்தொகுப்பில் ஒரு கதை உள்ளது. என்றென்றும் நினைவில் நிற்கும்படியாத தலைப்பு. “ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள்” எத்தனை அற்புதமாக தலைப்பு. ஒரு சிறுவன் தன் பாட்டியோடு கடலைக்கொல்லைக்கு கடலை புடுங்கச்சென்று திரும்பி வருவதுதான் கதை. பால் தேர்ந்த மல்லாட்டை உரித்தபின் உள்தோன்றும் ரோஸ்நிற பச்சை மல்லாட்டைகள்தான் ராஜாம்பாளின் நினைவுகள். “இருளப்புள்ளயோட என்னடா வெளயாட்டு” என அவனின் ப்ரிய தோழியை விட்டு பிரித்துவிடுகிறார்கள். பின் அவன் பார்க்கும் எல்லா சிறுமிகளும் ராஜாம்பாளாக தெரிகிறார்கள். மல்லாட்டையின் ரோஸ்நிறம் கூட ராஜாம்பாளின் நினைவுதான்.

வேட்டை என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே கதை எழுதியிருக்கிறார்கள். இத்தொகுப்பிலும் வேட்டை என்றொரு சிறுகதை உண்டு. இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. மிக எளிமையான நேர்க்கோட்டுக் கதை. கதையின் நாயகன் ஜப்பான் கிழவன். அந்தக்காட்டை அவன் நேசித்தான். “வேட்டைன்றது எனக்கும் காட்டுக்குமான சண்டை” என்று தொடங்கும் கதை. பிறந்ததிலிருந்து காட்டோடு வாழும் ஒருவனை மெல்ல மெல்ல நகர வாழ்க்கைக்குள் இழுத்து வந்துவிடுகிறது. ஆனால் அவன் காட்டுக்குச் செல்வதை நிறுத்துவதில்லை. ஒரு முயல்குட்டியாவது கிடைத்துவிடும். அவன் எப்போதும் வெறும் கையோடு திரும்பியதே இல்லை. குறைந்தபட்சம் ஒரு அணிலாவாது கிடைத்துவிடும். இப்படிதான் அவன் எப்போதும் காட்டை வென்று வருகிறான்.

எல்லாவற்றுக்கும் முடிவு உண்டென்பதைப்போல ஒருநாள் காட்டிடம் தோற்றுப்போவதுதான் கதை. எப்போதும் எடுத்து வாசித்துப்பார்க்கதோன்றும் வகையான கதை.

பொதுவாக எப்பேர்ப்பட்ட எழுத்தாளராக இருந்தாலும் ஒரு தொகுப்பில் பத்து கதைகள் இருந்தாலும் காலத்திற்கும் நினைவுகொள்ளக்கூடியாத ஒரே ஒரு கதைதான் அமையும். மிகப்பெரும்பாலான வாசகர்களின் ரசனை அடிப்படையில் அக்கதையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

மிக நுட்பமாக அதை நினைவிலும் வைத்திருப்பார்கள். எல்லா தொகுப்புக்கும் இப்படிப்பட்ட ஒரு கதை உண்டு. “சத்ரு” என்ற கதையை அப்படி ஒரு கதையாக எனக்குள் உருவகப்படுத்தி இருக்கிறேன். மழை பொய்த்த பஞ்சமாபஞ்சம் நிகழும் ஊரில் விதைநெல்லைத் திருடி ஒருவன் பிடிபடுகிறான். அவனை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுத்து மரணதண்டனை விதிக்கிறார்கள். அவன் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்டு பாறையில் கிடத்தபடுகிறான். அவனைக்கொல்வதற்காக விஷ இலைகளைப்பறிக்க ஒரு குழு மலைக்குச் செல்கிறது. ஒட்ட ஒட்ட அரைத்து வாயில் ஊற்றினால் ஒரு மணி நேரத்தில் உடல் விரைத்துச் செத்துவிடப்போகிறவனை ஊர்மக்களே ஒன்று சேர்ந்து விடுவிப்பதுபோல மழையொன்று அடித்து ஊற்றுகிறது.

வெடித்த பூமியெங்கும் பரவும் ஈரம் மனித மனங்களுக்கும் பரவ விடுதலை செய்கின்றனர். ஒரு பேண்டசி கதைக்குண்டான சுவாரசியம் இதில் உண்டு. இக்கதையை வாசிக்கும்போது மெல்கிப்சனின் அபொகலிப்டோ படம் நினைவுக்கு வந்துபோனது. மீடியா வாய்ஸ் இதழில் ஒரு தொடர் ஒன்றை எழுதினார். ஆளுமைகளுடனான நட்பைப் பற்றி அதில் ஒவ்வொரு வாரமும் பகிர்ந்துகொண்டார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத்தொடர் புத்தகமாக “எல்லா நாளும் கார்த்திகை” என்ற பெயரில் வம்சி வெளியீடாகவே வந்தது. பாலுமகேந்திரா, இயக்குனர் பாலா, மிஷ்கின், மம்முட்டி, பிரபஞ்சன், பாரதிராஜா, கந்தர்வன், எழுத்துலக, திரையுலக நண்பர்களைப் பற்றி எழுதப்பட்ட தொடர். எல்லோருக்கும் பிடித்த ஒரு புத்தகமாக இன்றுவரை அது உள்ளது. பவாவிற்குள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி பரபரப்பாக இருக்கும் ஒரு சிறுவனை எப்போதும் பார்க்க முடியும். அது எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி உடனடித்தீர்வு அவரிடம் இருந்து வந்துவிடும். விமர்சனப்பார்வையில் சொல்லவேண்டும் என்றால் எல்லா வடிவங்களிலும் அவரின் ஆளுமை வெளிப்பட்டே இருக்கிறது. சிறுகதையாகட்டும், பத்தி எழுத்தின் பாணியில் அமைந்த கட்டுரைகளாகட்டும், கதைசொல்லியாகட்டும். எல்லா தளத்திலும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால் ஒரு எளிய வாசக மனம் இன்னும் அவரிடமிருந்து கதைகளைத்தான் எதிர்பார்த்துக்கிடக்கிறது.

எழுத்தாளன் என்பவன் எப்போதும் மக்கள் முன்பாக நின்று மைக் பிடித்து பேசக்கூடாது என்பார் சுந்தரராமசாமி. எழுத்தாளன் வெறும் எழுதுகிறவன் மட்டுமே. எழுத்தின் வழியாக மட்டுமே உச்சமடைய வேண்டியவன் அவன். உடனடி எதிர்வினைகளை, பாராட்டுதல்களை எழுத்தாளன் ருசிகண்டுவிட்டால் எழுத்தின் தீவிரம் குறைந்துவிடக்கூடும். பின்பு அவன் மனம் உடனடி உற்சாகமூட்டுதல்களை எதிர்ப்பார்க்கப்பழகிவிடும். பின்பு ஒருநாளும் என்றாவது ஒருநாள் வாசித்துப் பரவசமடைந்து பேசக்கூடிய வாசகனை அவன் இழந்து விடுவான். இக்கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே உணரத்தோன்றுகிறது.

மிகச்சிறந்த எழுத்தாளனை ஒரு சமூகம் பேச்சாளனாகவும் கதை சொல்பவனாகவும் மாற்றிவிடுகிறது. அப்படித்தான் பவாவும் ஒரு மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறி அவருக்குள் இருந் கதாசிரியனை இழந்து நிற்கிறதாக ஒரு வாசகனாக உணர்கிறேன். இதில் சுவாரசியம் என்னவென்றால் கதைசொல்வதிலும் கூட நிகரற்ற கதைசொல்லியாக அவர் இருக்கிறார் என்பதுதான். எழுத்தாளன் என்ற இடத்திலிருந்து கட்டுரையாளர் என்ற இடத்துக்கு நகர்ந்து மெல்ல மெல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட பவா செல்லதுரை அவர்களை மறுபடி எழுத்தாளராகவே காண ஆசைகொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவேண்டிய நேரம் இது என்றே கருதுகிறேன். வாசகர்கள் இதை ஒரு கோரிக்கையாக வைக்க முடியாது. எழுத்து எழுதுபவனை எழுதிச்செல்லும். அந்த கணத்துக்காக காத்திருக்கவேண்டும். வாசகனின் கோரிக்கையால் பெறப்படல் ஆகாது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பு உலவுவதை உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதை அறியத்தரலாம்.