Tuesday, January 27, 2015

ஊழித் தீயின் பெரும் தாண்டவம்

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் சம்மந்தமாக தமிழ்நாட்டில் என்ன மாதிரியான எதிர்வினைகள் நடக்கின்றன என்பது குறித்து ஒரு கட்டுரையை கேரளாவிலிருந்து வரும் தேசாபிமானியில் கேட்டிருந்தார்கள். அவசரத்திலும், எழுத்து மனநிலை வாய்க்காத போதும் பிரச்சனையின் அவசரம் கருதி ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தேன். அதோடு  அது மறந்துவிட்டது. இன்று காலை கேரளாவிலிருந்து  வந்த தொலைபேசி அழைப்புகள் அதை நியாபகப்படுத்தின. உங்களிடமும் அதை பகிர்ந்து கொள்கிறேன்.அதன் தமிழ் மூலம்

ஊழித் தீயின் பெரும் தாண்டவம்

ஜனவரி பதினைந்தாம் தேதி சென்னை புத்தக கண்காட்சியில் ‘வம்சி’ அரங்கில் உட்கார்ந்திருந்த போதுதான் ஒரு அப்பாவும் மகளும் எங்களைக் கடந்து போனார்கள். எங்கள் எல்லோர் பார்வையும் அவர்கள் மேல் பதிய ஒரே காரணம். அவர்களிருவரும் தங்கள் உடலின் முன் பக்கமும், பின்பக்கமும் அணிந்திருந்த ‘நாங்களும் பெருமாள் முருகன்தான்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகள்.

ஒரு நிமிடம் நான் அதைப் பார்த்து சிலிர்த்துப் போனேன். கருத்து சுதந்திரம் வேண்டி ஒரு எழுத்தாளனின் அபயக் குரல் பள்ளத்திலிருந்து ஒலிக்கும்போது, கை கொடுத்து தூக்க தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற சக எழுத்தாளனான எனக்கேற்பட்ட பாதுகாப்பு உணர்வு அது.

நானறிந்து நீலபத்மனாபன், தனுஷ்கோடி ராமசாமி, ஜெயமோகன் என்று பல படைப்பாளிகள் தங்கள் எழுத்துக்காக வெவ்வேறு வகைகளில் மிரட்டவும், தாக்கவும் பட்டார்கள். அப்போதெல்லாம் இப்படி ஒரு எதிர்ப்புணர்வு எழவில்லை. பெருமாள் முருகன் விஷயத்தில் அது உக்ரமடைந்திருப்பதற்கு அதை எதிர்த்தவர்கள் இந்துத்துவாவாதிகளாகவும், சாதியத்தைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம்.

தமிழகம் முழுவதும் உடனடி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இடதுசாரி படைப்பாளிகளும், கலைஞர்களும் படைப்பாளி இதை முன் கை எடுத்தார்கள் எனினும் சுதந்திரமான பல படைப்பாளிகளும் இதில் கை கோர்த்துக் கொண்டது ஒரு வரவேற்கத் தக்க விஷயம். அப்போது அநேகமாக ஒரிருவரைத் தவிர அந்நாவலை யாரும் முழுமையான வாசித்திருக்கவில்லை. பிரச்சனை எழுந்தவுடன் அதை ஒரே இரவில் வாசித்து முடிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமற்றது. எல்லோர் முகங்களிலும் கோபமிருந்து. நாளை யாரும் எதையும் சுதந்திரமாக எழுதிவிடமுடியாது என்ற எதிர்கால அச்சுறுத்தல்கள் அவர்கள் முன்னிருந்ததைக் காணமுடிந்தது. இப்படி தமிழ்நாடு முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில் ‘‘பெருமாள் முருகன் செத்துவிட்டான்’’ என அவர் தன் முகநூலில் எழுதியிருந்த ஒரு பதிவு எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது.

‘பெருமாள் முருகனாகிய நான்’ என நீதிமன்ற குரலில் ஆரம்பிக்கப்பட்ட அப்பதிவில், ‘‘இனி என் வாழ் நாளில் ஒரு எழுத்தையும் எழுத மாட்டேன் என்றும், நான் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலை மட்டுமின்றி இதுவரை நான் எழுதிய அனைத்து படைப்புகளையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். பதிப்பகத்தார் எவரும் என் நூல்களை விற்பனை செய்யவேண்டாம். அதற்கான நஷ்ட ஈட்டை நான் தந்துவிடுகிறேன்’’ எனவும் அந்த அறிக்கை சொன்னது.

இப்பதிவு எழுதப்படுவதற்கு முந்தின நாள் அரசு தரப்பிலிருந்து பெருமாள் முருகனையும், அவரின் எதிர்ப்பாளர்களையும் அழைத்து, ஒரு தாழிடப்பட்ட அறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்து வெளிவந்துதான், இத்தனை அதிர்ச்சிகரமானதொரு பதிவை பெருமாள் முருகன் எழுதியுள்ளார். அமைப்புரீதியாக இல்லாமல், தனித்தியங்கும் எந்தவொரு எழுத்தாளனாலும் சமூக எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாதுதான். அதுவும் மதமும், சாதியும் கைகோர்த்துக் கொண்டு வார்த்தைகளின் பலத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் ஒரு எழுத்தாளனின் முன் ஆயிரமாயிரம் கோர பற்களோடு நிற்கையில் அவன் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவது இயல்புதான்.

ஆனால் பெருமாள் முருகனின் இந்த நிலைபாடு இருவேறு விதமாக புரிந்து கொள்ளபட்டது. ஒரு எழுத்தாளனின் மன உறுதி குலைந்து அவன் சரணடைந்ததை சிலரால் அதன் வலியோடு உள்வாங்கிக் கொள்ளமுடியவில்லை. இன்னும் சிலபேருக்கு பெருமாள் முருகனின் இந்த அறிக்கையே, அவருக்கு தரப்பட்ட கடுமையான மன உலைச்சலின் வீர்யத்தையும், பயமுறுத்தல்களையும், தங்களால் அவருக்கு பாதுகாப்பு தரமுடியாது என போலீஸ் கை விரித்ததையும், தன்னந்தனியாக தன் குடும்பத்தோடு அவர் நள்ளிரவில் ஊரைவிட்டே வெளியேற நேர்ந்ததையும் அதன் பொருட்டு காற்றடிக்கும் திசையிலெல்லாம் அலைவுற்ற ஒரு பலவீனமான மனதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

இருபதாம் தேதி சென்னையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சமூகவியலாளர்களும் படைப்பாளிகளும் கைகோர்த்து பெருமாள் முருகனுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் போது இன்னும் விவாதம் ‘மாதொரு பாகன்’ என்ற சர்ச்சைக்குள்ளான இந்த நாவலின் தரம் குறித்து முன்னிறுத்தப்படுகிறது.

நேற்றிரவு முழுக்க இந்நாவலை சிறு சிறு இடைவெளிவிட்டு நான் வாசித்து முடித்தேன். இது மிக சுமாரான படைப்புதான். மொழியின் பலவீனம், நம் வாசிப்பை மந்தப்படுத்துகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதியை, கோவிலை, நிலப்பரப்பை, ஊரை இது அப்பட்டமாக சொல்கிறது என்பதே இதன் மீதான குற்றச்சாட்டு எனில் தமிழிலும் பிறமொழிகளிலும் ஆயிரக்கணக்கான படைப்புகளும் இதைத்தானே சொல்கின்றன.

இது ஒரு மூன்றாந்தர தமிழ்ப்படத்தின் கதை என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா நிதானித்து வாய்த் திறந்திருக்கிறார். பிரச்சனை அதுவல்ல. ஒரு எழுத்தாளன் ஒரு புனைவை, அது நடந்ததாக சொல்லப்படும் காலத்தை அளவிட்டு, கள ஆய்வை தனக்குள் தக்க வைத்துக்கொண்டு, தான் சார்ந்த சாதியின் ஒரு வரலாற்று நிகழ்வை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வழியே கூட சொல்ல முடியாதென்றால், இனி சாரு போன்றவர்கள் இவர்களின் பஞ்சாயத்துக்களுக்கு பிறகே ஒரு வரியையும் எழுத முடியும்.

இதுவரை வெளியாகி வாசிப்பிலிருக்கும் அனைத்துப் பிரதிகளும், அதன் உண்மைக்காக, அதன் சாதி எதிர்நிலை குறித்து, மத பயங்கரவாதம் குறித்து, பாலுறவுகள் குறித்தெல்லாம் கூட ஆர்.டி.ஓ. பஞ்சாயத்துக்கு உட்படுத்தப்படும்.
பொதுவெளியில் இயங்குபவன் என்ற போதிலும் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னளவில் தனிமையானவன்தான். அவன் எழுத்து இரகசியமானதும் மர்மம் நிறைந்ததும்தான். ஆனால் அது நாவலாவதற்கு முன். அது நாவலாக வெளிவந்த பின் ஒரு பொதுவான படைப்பாக சமூகத்தின் முன் வைக்கப்படுகிறது. அது ஒவ்வொரு வாசிப்பிலும், வேறு வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரே வாசிப்பாளனின் பல்வேறு மனநிலைகளில் அதே நாவல் முற்றிலும் வேறொன்றாக புரிந்து கொள்ளப்படும். அதற்கு எப்படி எதிர்வினைகளை ஆற்றுவது என்பது மட்டுமே இப்போது தமிழ் சமூகத்திற்கு முன் எழுப்பப்படும் மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது.

‘மாதொரு பாகன்’ நாவலில் வரலாற்றைத் திரித்து கள ஆய்வை மாற்றி, எழுத்தாளனால் எழுதப்பட்டிருந்தால் அதை எழுத்தால் மட்டுமே எதிர் கொள்ள வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்கள் தரப்பை நிரூபிக்கலாம். ஆனால் மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் உணர்வு கொந்தளிப்புகளில் தங்கள் சொந்த மதத்தையும் சாதியையும் வைத்திருப்பவர்கள் கையாளும் மொழி அது இல்லையென்பது நாம் அறியாததல்ல.

இப்புனைவின் ஒரு வரியைக் கூட வாசிக்காதவர்களே இந்த எதிர்ப்பு வரிசையில் முன்னணியில் நிற்கிறார்கள். மதமும், சாதியும் தரும் திமிர் இவர்களை தாங்கிப் பிடிக்கிறது. எழுத்தை மட்டுமே தன் ஆன்ம பலமாக நினைக்கும் ஓர் எழுத்தாளன் இக்கோரப் பிடியிலிருந்து தப்புவதென்பது எளிதல்ல. வரலாறு முழுக்க இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சொற்களின் பலத்தால் மட்டுமே நின்ற படைப்பாளிகளே இன்றுவரை வரலாறுகளில் நிலைத்து நிற்கிறார்கள்.

ஜெயமோகனின் ‘வெண்கடல்’ தொகுப்பில் ‘அம்மையப்பம்’ என்றொரு கதை உண்டு. அது ஒரு கலைஞனான ஆச்சாரியைப் பற்றிய கதை. கலைஞனுக்கும், பைத்தியத்திற்குமான இடைவெளியே ஒரு சிறு கோடுதானே! அப்படி ஒரு ஆள் அந்த ஆச்சாரி. அக்கதையை எழுதியத்திற்காக ஜெயமோகன் மிகக் தீவிரமாகத் தேடப்பட்டார். அவர் சொந்த ஊரில் காளி அவரை வதம் செய்வதுபோல பேனர்கள் வைக்கப்பட்டது. சுமார் மூன்று மாதம் அவர் பக்கத்து மாநிலத்திற்கு வசிப்பிடத்தை மாற்ற வேண்டியிருந்தது.

அப்படியென்றால் மானுட வாழ்வின் தனித்தனி இனக்குழுக்களாக, சாதி என்ற பெயரில், பிரிந்திருக்கும் எந்த மனிதனையும் இனி A, B என்ற குறியீட்டில்தான் ஒரு எழுத்தாளன் குறிப்பிட முடியும்.

பெருமாள் முருகனின் இந்த நாவலில் காலம் நேரடியாக சுட்டப்படவில்லை. ஆயினும் காளியும், அவனோடு சேர்ந்த மற்ற கதாபாத்திரங்களின் உடை, அவர்களின் தலைமுடி இவைகளை வைத்து கதை நூறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை ஒரு ஆரம்பகால வாசகனால் கூட உணர்ந்து கொள்ளமுடியும். தங்கள் சொந்த சாதியில் ஒரு நூறாண்டுகளுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பீறிடுவதுதான் இன்றைய சாதியத்தின் உப்பிப் பெருகிய கோர முகம்.

நான்காண்டுகளுக்கு முன் எழுதி வெளியான இந்த நாவல் இதுவரை எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான பின் இது வாசிக்கப்பட்டு, மத அடிப்படைவாதிகளால் முன் மொழியப்பட்டு, சாதியத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நெறிபடும் ஒரு படைப்பாளியின் குரல்வளையை காப்பாற்ற வேண்டி தன்னியல்பாக தமிழமெங்கும் நானெப்போதும் கேட்டிராத எதிர்ப்புக் குரல் கேட்கத் துவங்கியுள்ளது. படைப்பின் மீதான நம்பிக்கையைத் தரும் கவிஞர் கலாப்பிரியாவின் புகழ்பெற்ற கவிதை ஒன்றுண்டு,

சித்தப்பாவின் சாவு வீட்டில்
குடித்து, கும்மாளமிட்டு
கொண்டாடி தீர்க்கும் அவர் சாவிலும்
இதெல்லாம் நிகழ்ந்தது

என்பது போல முடியும் அக்கவிதை.

இதை உணராதவர்கள்தான் இதன் தீவிரத்தைக் குறைக்க என்னன்னவோ வழிகளில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் படைப்பு சுதந்திரத்திற்கு எதுராக இப்போது துவங்கியிருப்பது ஊழித் தீயின் பெரும் தாண்டவம் என்றுதான் தோன்றுகிறது.