Thursday, August 27, 2020

மேய்ப்பர்கள்விமர்சனம்


                                 
மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என வாழ்ந்த வாழ்வியல் சூழல் அல்லது சுழல் துண்டிக்கப்பட்டு ஆனது ஐந்து மாதம். சகமனிதனின் கரம்பிடித்து, அவன் சூட்டை உணர மனம் துடிக்கிறது. எத்தனை எத்தனையோ இலக்கியக் கூட்டங்கள். அதில் மனம் கவரும் தோழர்களின் வியர்வை வாசம். அவர்களின் முகங்களில் பளிச்சிடும் புன்னகை அத்தனையும் நினைவு அடுக்குகளாய்த் தங்கி விட்ட பொழுதுகளில் வாசிப்பதற்குக்கூட மனம் ஒப்பாதுநிழலாடிக்கொண்டிருந்த தருணம் ஒன்றில், பவா செல்லத்துரையின் மேய்ப்பர்கள் புத்தகம் வந்து சேர்ந்தது.அடுக்கியிருந்த புத்தகங்களைத் தடவித்தடவிப் பார்த்துக் கொண்டிருந்ததருணத்தில் மேய்ப்பர்களுக்கான வம்சியின் அட்டைப்படம் வியந்து பார்க்க வைத்தது. அக்கணத்தில் புத்தகத்தின்தாளும் பசையும் புதுமையின் வாசனையும்,காதலியின் தாவணி வீசியடிக்கும்வாசத்தை உணர்த்தியது. வாசனையின் கிளர்ச்சி உள்ளுக்குள் வேதிவினை மாற்றத்தை ஏற்படுத்தியது. மூளையின் சுரப்பி, இதழை சுவைக்கத்தூண்டியது.வாசிப்பு வசப்படும் தருணங்கள் அவை. அந்தரங்கமாய் சிலாகித்துக் கொள்ளும் பொழுதுகளும் கூட அவை தான்.

தன் வாழ்வில் சந்தித்த, மனிதர்களாய்மதிக்கத்தக்கவர்களைப் பற்றி தோழர் பவா செல்லத்துரைதொகுத்த நூல் மேய்ப்பர்கள். மகத்தான சல்லிப்பயல்கள் மத்தியில் மகத்தானவர்களை மட்டும் பேசியுள்ளார் பவா.மன்னிக்கவும் எழுதியுள்ளார். பேசும் பவா வேறாகவும் எழுதும்பவா வேறாகவும் பளிச்சிடுகிறார். கதை சொல்லல் மூலம் அசோகமித்திரனையும் ஜெயகாந்தனையும் பிரபஞ்சனையும் இன்னும் இன்னும் ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் வாசகர்களின் மன அடுக்குகளுக்குக்கொண்டு சேர்த்த பவா, தன் மன அடுக்குகளில் சேகரித்து வைத்து சிலாகித்த மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார்மேய்ப்பர்கள்’ நூலில்.


ஆற்றுமணலில் வெற்றுக்காலில் ஓடியாடி ஆயிரம் கற்களுக்கு நடுவே தனக்குப் பிடித்த கூழாங்கற்களை கையளவு அள்ளி வரும் சிறுவனின் மகிழ்ச்சி வாவின் எழுத்தில் தெரிகிறது. சிறுவனுக்குப் பிடிக்கும் கூழாங்கற்கள் நிரம்ப ஆற்றில் கிடக்கிறது. ஆறு நிரந்தரமானது. துலாவி துலாவி சேகரிக்கும் கரங்கள் பவாவுடையது. தமுஎகச -வின் அறிமுகத்தால் அவருக்குள் சங்கமித்த கூழாங்கற்கள் அதிகம்.அவர்களில் கையடக்க மேய்ப்பர்கள்இந்த நூலின் அடக்கம்.நூலை வாசிக்க வாசிக்க மேய்ப்பர்கள் நமக்குள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். சிரிக்க வைக்கிறார்கள். அவர்களின் பாடுகளைப் படிக்கும் போது உங்களால் கண்ணீர் சிந்தாமல் கடக்கவே முடியாது.

கொடைக்கானலிலிருந்து ஒரு நீண்ட கார் பயணத்தின் முடிவில் மதுரை வந்து,தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களைதூரத்திலிருந்து பார்த்துவிட்டு சரி வா போகலாம்’ எனத்தன் கார் டிரைவரிடம் பவா சொல்லும் வரிகள் தோழர்எஸ்.ஏ.பி.யின் உயரத்தைமேலும் உயர்த்திக் காட்டுகிறது.
காதலியின் பர்ஃபியூம்வாசனைக்கு நிகராக ஓவியர் பல்லவன் கூடத்திருந்துவீசும் எனாமல் பெயிண்டின் வாசனை என்னைக் கிறங்கடித்ததுஎன்று பவா சொல்லும் போது, நாமும் கூட கொஞ்சம்நாசியை விரித்து விரித்து நுகர முடிந்ததுஅந்த வாசனையை (பெயிண்ட் வாசனையை மட்டும்).

கரன்சி நோட்டுகள் அசல் கலைஞனைசலனப்படுத்தாது.அந்த ஆன்ம பலம் கொண்டவன் கலைஞன்’என்று பவா எழுதிய வரிகள், ‘மாயக் கோமாளியின்ஜாலக்கண்ணாடிநாடகம் முடிந்த கடைசியில் கூடை சுமந்துவந்த கலைஞனிடம் நாடகத்தின் பிரமிப்பில்ஆழ்ந்துவிட்டநண்பன் ஒருவன் அவன் சட்டைப்பையிலிருந்து பணத்தாளை எண்ணிப்பார்காமல் மொத்தமாய்போட்டபோதுஎந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்து சென்றநாடகக் கலைஞன் முருகபூபதியை நினைவுபடுத்தியது.

சமூகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும்உள்வாங்கிக் கொண்டுநடிகனாக மட்டுமேதன்னை வெளிப்படுத்தியதருணத்தை தோழர் பிரளயன் மூலமாகவும்,

பால் பிடித்து முற்றி பொன் நிறத்தில் நெல் மணியாய் வெளிவரும்படைப்பாளியின்முளை தருணத்தை வையம்பட்டி முத்துசாமி மூலமாகவும்வெளிப்படுத்தும் பவாவின் எழுத்துகள்உணர்வுப்பூர்வமானவை.
ஒரு எம்.எல்.வின் பேருந்து பயணம் சுற்றி இருப்பவர்களிடம்எப்படிப்பட்டதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் தொடங்கி,அவருக்கும் முன்னாள் முதலமைச்சர்களுக்குமான நட்பினையும் நன்றிக்கடனையும் பற்றி தோழர்நன்மாறன் நினைவுகளாக கூறும்போதுஇடதுசாரிகளின் உன்னதமானவாழ்க்கையினை நாம் உணர முடிகிறது.இன்னும் இன்னும் தோழர் உதயசங்கர்,தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி,தோழர் சு.வெங்கடேசன் என்று நீண்டு கொண்டே செல்லும் இந்த மேய்ப்பர்களில் எனக்கும் பவாவுக்கும்பரஸ்பரம் அறிமுகமான தோழர்களும் அடக்கம்.அவர்களைப் பற்றி வாசிக்கும் போதுஏற்பட்ட உணர்வுஅலாதியானது.

காட்டுக்குள் வீரப்பனுடன் வாழ்ந்து விட்டு நாட்டுக்குள் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கும்தோழர் அன்புராஜ்.வாழ்க்கையின் பிடிமானங்கள் ற்று போய் சிறைக்கொட்டியில்தன் மூச்சு முடியும் என்ற நிலையிலும் கூடகடைசித் துரும்பாக நாடகத்தைக்கையிலெடுத்துதப்பிப்பிழைத்தவன் அன்புராஜ்.

பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் எளிமையில்விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும்தோழர் வி.பி.ஜி.

பஜ்ஜி எடுத்துக்கோங்கஇந்த வயசுல அது உங்கள என்ன செய்யப்போகுதுஎன்று எனக்கொன்றும்அவருக்கொன்றுமாக கூட்ட அரங்கில் எடுத்துக்கொடுக்கும்இளைஞன் டாக்டர் ஜீவா.

பயந்து பயந்து நான் பக்கத்தில் சென்ற போதுகுழந்தையாகக் காட்சி தந்த BK.

இப்படி நான் அருகிலிருந்து நேசித்த மனிதர்களை பவா எழுதி, அதை வாசிக்க வாசிக்க அவர்களின்அருகமையை மனம் தேடியது.இது பவாவின்எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.மேய்ப்பர்களை 'முழுவதும் வாசித்து முடித்தபோது,பெருந்தொற்று காலத்தில் விலகி இருந்த தோழர் அன்புராஜின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்.வி.பி.ஜியின்சுவாசச் சூட்டை உணரத் தொடங்கினேன்.டாக்டர் ஜீவாவின் மென்மையை என்னால்ரசிக்க முடிந்தது.BK யின் மந்திரக்குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பவா குரலால் மட்டுமல்ல எழுத்தாலும் இவர்களை எல்லாம் அருகே கொண்டு வந்து சேர்த்து விட்டார்.துண்டிக்கப்பட்டிருந்த மனிதச் சுழல்என்னைச் சூழ்ந்து கொண்டது.மேய்ப்பர்கள்நூல் அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. மகத்தான சல்லிப்பயல்களைச் சலித்துவிட்டு மீண்டுமொருமுறை வம்சி, மேய்ப்பர்களால்கட்டி எழுப்பப்பட்டுள்ளது.


-      இ.கலைகோவன்

Wednesday, August 26, 2020

அன்புள்ள பவா அவர்களுக்கு...

நேற்று முன்தினம் நீங்கள் அளித்தமேய்ப்பர்கள்கட்டுரைத் தொகுப்பை (வம்சி பதிப்பக வெளியீடுஆகஸ்ட் 2020 பதிப்பு) வாசித்து முடித்தேன்.

உங்களது எழுத்து நடை குறித்து நன்றாக இருந்தது என்று கூறுவதே தேய்வழக்காகி விட்டது. உங்களால் சூழலையும், அந்த நேரத்தின் மன உணர்வுகளையும் எவ்வித பிரயாசையுமின்றி எளிதாக வாசகனுக்குக் கடத்திவிட முடிகிறது. மிகக் கச்சிதமான , குறைவான வார்த்தைகளுடன் வரையறுக்கப்பட்ட வரிகளைக் கொண்டு ஆளுமையின் கூறுகளை வாசகனுக்குப் புரிய வைத்து விடுகிறீர்கள்.

இது வழக்கமான ஆளுமைகள் குறித்த கட்டுரை எனும் இடத்திலிருந்து எப்படி மாறுபடுகிறது? இக்கட்டுரைத் தொகுப்பில் வரும் உங்களது தோழர்கள் குறைந்தபட்சமாக உங்களுடன் முப்பது ஆண்டுகால நட்பில், தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் அவரவர் துறைகளில் நுழைந்த, அறிமுகம் ஆன காலம்தொட்டு தற்போது தத்தம் துறைகளில் அறியப்பட்டவர்களாக ஆகும் காலம் வரை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. கால ஓட்டங்களை அதன் வழியே அவர்கள் அடைந்த, அடைய முற்பட்ட இடங்களை எளிதாகச் சொல்லிச் செல்ல முடிகிறது உங்களால்.

இயக்கத்திலிருந்து அரசியல் பதவிக்கு செல்லும் ஆளுமையைக் குறிப்பிடுகையில் இயக்க ஒழுங்குக்கு தன்னை ஒப்புவித்துக்கொண்டு அதன் வழியே இலக்கை அடைந்த என்று சொல்வது வெறும் கட்டுரை மட்டுமா? பேசப்பட்டவர்களின் விசித்திரமான நடவடிக்கைகள், சமரசங்களுக்கு ஆட்பட்ட, சமரசத்திற்கும் கொள்கைப் பிடிப்புக்கும் நடுவே மூச்சுத் திணறி தப்பிக்கும் விதமாக போதைக்குள் வீழ்ந்த நண்பர்களும் இதில் வருகிறார்கள். இது வெறும் பாராட்டுக் கட்டுரைகளாக ஆகிவிடாமல் இருப்பது இது போன்ற மின்னல் வெட்டுக்களால்தான்.

ஆனால் மின்னலின் வெளிச்சத்தில் ஓவியம் வரைந்து விட முடியுமா ஒரு ஓவியனால்? தேர்ந்த கதை சொல்லி நீங்கள். இங்கு கதைசொல்லி என்பது உங்கள் எழுத்து வழியே பேசும் பவா வைச் சொல்வது. ஒளிப்படங்களில் கதைகளைப் பற்றிப் பேசும் பவாவை அல்ல. இன்னொரு பவாவை இங்கு சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆர்வமும், அதை விஞ்சும் துடிப்பும், இவ்விரண்டையும் விஞ்சும் வாசிப்பும் கொண்ட இளைஞர் குழு ஒன்று தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய பாதையை முன்னெடுத்துக் கிளம்பியது. தமிழகமெங்குமிருந்து திரண்டிருந்த அக்குழுவின் இளைஞர்கள் அன்றைய தமிழிலக்கியத்தின் பாதையை மாற்றி அமைக்கும் விதமாக இரவு பகல் பாராமல் பேசி, பக்கம் பக்கமாய் கடிதங்கள் எழுதிக்கொண்டு அவர்களே சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருகிறார்கள். திருவண்ணாமலையிலிருந்து அன்று வெளிவந்தஸ்பானிய சிறகும், வீர வாளும்எனும் சிறுகதைத் தொகுப்பு இனி தமிழில் வரவிருக்கும் எழுத்தாளுமைகளுக்கு முன்னறிவிப்பாக அமைந்தது. இன்று தமிழ் இலக்கியத்தின் முகங்களாக அமைந்திருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்ற ஆளுமைகள் தம் இருப்பையும், வரவையும் பிரகடனமாக அறிவித்துக்கொண்ட தொகுப்பு அது. அதில் இருந்த முக்கியமான படைப்பாளியும், தொகுப்பைக் கொணர்வதில் ஈடுபாடும் காட்டிய ஒரு ஆளுமையின் பெயர்பவா செல்லதுரை.

மேலே உள்ள பத்தி உங்களுக்கே உங்களை அறிமுகப்படுத்துவதற்கு அல்ல. உங்களது கட்டுரைத் தொகுப்புகளையும், காணொளிக் கதைகூறல்களையும் மட்டுமே பார்த்து விட்டு பவா ஒரு கட்டுரையாளர் மற்றும் காணொளிக் கதைசொல்லி என்று மட்டுமேமில்லனியம் கிட்ஸ்நினைத்து விடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்குச் சொல்கிறேன்.

தமிழின் சிறந்த பத்து சிறுகதைகளை தேர்ந்தெடுக்கச் சொன்னால் அதில் இடம்பெறும் தகுதியுள்ள சிறுகதைகளை எழுதிய பவா செல்லதுரையையும் இன்றைய தமிழ் கூறு இலக்கிய நல்லுலகம் அறிய வேண்டுமல்லவா என்பதற்காக அவர்களுக்குச் சொல்கிறேன்.

சொந்த உடலின் எல்லா பாகங்களையும் வருடிச் செல்லும் நம் கைவிரல்கள் யதேச்சையாய் கூட தொட்டுவிடாத உள்ளங்கால்களைப் போல நவீன தமிழ் இலக்கியத்தின் எத்தொடுகையுமின்றி இருந்த திருவண்ணாமலை, வட ஆற்காட்டு பகுதிகளின் தொன்மங்களையும், வாழ்வையும் எழுத்தில் தர முடிந்த சிறுகதைக் கலைஞன் பவா செல்லதுரை என்பதையும்கேட்போர்அறியவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் ஆழமும் உயரமும் தொட முடிந்த, தொட்டுக் காட்டிய ஒரு ஓவியன் தூரிகையை தண்ணீரில் தொட்டு வரைவதை ஏனென்றும் கேட்கலாம் தானே. எதற்கு இவ்வளவு பீடிகை? நேரே கேட்கிறேன்.

இக்கட்டுரைகளை எழுதவா பவா நீங்கள் வேண்டும்? நீங்கள் சந்தித்த மனிதர்களில் உருவான அசாதாரண மானுட தருணங்களைத் தானே கதைகளாக்கி அளித்தீர்கள் இதுவரை. வலி, கோழி, பிடி, டொமினிக் என தனிமனித வாழ்க்கைத் தருணங்களில் வெளிப்பட்டு உயர்ந்து நிற்கும் மானுட உணர்வுகள், ஏழுமலை ஜமா , கரடி என சூழல்களுடன் போராடி கலைமனம் வெளிப்பட்டு உயர்ந்து நிற்கும் கலையின் உன்னதத் தருணங்கள், மானுடத்தின் கீழ்மைகளை தன் முன் எப்போதும் மண்டியிடச் செய்யும் இயற்கையின் பெருங்கருணையைச் சுட்டும் சத்ரு, வேட்டை - இவை அனைத்தும் உங்கள் அனுபவத்தில் நீங்கள் சந்தித்த, கேட்ட ஆட்களிலிருந்து கிளம்பிய பொறிகள்தானே. தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களிலிருந்து மகத்தான மானுட தரிசனத்தை அடைந்து அதை எழுத்தில் கொண்டு வரும் நுட்பம் வாய்க்கப்பெற்றவர்களாக இன்று நீங்கள், சு. வேணுகோபால் போல சிலரே இருக்கிறீர்கள். கத்தி முனை நடை போல் முற்போக்குப் பார்வை இருந்தாலும் இலக்கிய நுட்பம் குறையாமல் படைக்கப்பட்ட கந்தர்வனின் படைப்புலகப் பின்னணியில் இருந்து இன்னும் மேலெழுந்து வரும் படைப்புலகு உங்களுடையது.
இன்று எழுதும் அனைத்தையும் ஏன் ஆட்களைக் குறித்த, நிகழ்வுகளைக் குறித்த கட்டுரையாக மட்டும் குறுக்கிக் கொண்டு விட்டீர்கள்?உங்களது முப்பதாண்டு கால அவதானிப்பு எத்தனை படைப்புகளைத் தாங்கி வந்திருக்கும்? மகத்தான, கீழ்மையான, கொந்தளிப்பான, அசாதாரண தருணங்களை இந்த நண்பர்கள் சந்தித்து மீண்ட, போராடிய தருணங்களை உங்கள் புனைவுப் படைப்புகள் என்றென்றைக்குமாக இலக்கியத்தில் நிறுத்தியிருக்குமே.


உங்களுக்கு நினைவிருக்கும் என்றே நம்புகிறேன். தம் பழங்குடி வாழ்க்கைக்கும், நவீன வாழ்வின் வாசலுக்கும் நடுவே நின்ற ஒரு இனக்குழுவின் தலைமுறையோடு சேர்ந்து வளர்ந்தவர் நீங்கள். அந்த வாழ்க்கை இன்னும் இலக்கியத்தில் பதியப்படவே இல்லை. ஒரு பெரு நாவலாக விரித்து எழுதும் அளவுக்கு அதில் இருக்கிறது என்று பேசினோம். அதை எழுதுவதாக வாக்களித்தீர்கள். அவ்வாழ்வை அருகிலிருந்து பார்த்த உங்களுக்கு அதில் சொல்ல எத்தனையோ உண்டு.

மகத்தான மனிதர்களை, சாதாரண வாழ்வில் அசாதாரணமான சூழல்களைக் கண்டவர்களை, சூழலின் அறைகூவலுக்கு தன்னை முன்வைத்து போராடி மேலெழுந்தவர்கள் என நீங்கள் தினமும் சந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள் மானிடர்களை. அதிலிருந்து எத்தனையோ பேரை உங்கள் புனைவுப் படைப்புகள் மூலம் இறவாவரம் பெற்றவர்களாக மாற்றி விட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுத வேண்டிய அனைத்தையும் தற்போது வெறும் கட்டுரைகளாகவே எழுதிக் கொண்டிருக்கிறீர்களோ என படுகிறது. என் பெரு மதிப்பிற்குரிய ஜெயமோகன் இக்கடிதத்தைக் காண நேர்ந்தால் என்னைக் கடிந்து கொள்ளபோவது நிச்சயம். ஒரு எழுத்தாளனை நோக்கி இதை ஏன் எழுதினாய், இதை ஏன் எழுதுவதில்லை என்று கேட்பது சரியல்ல என்பார் அவர். ஆனால் பெரும் திரையில் நுட்பங்கள் செறிய வரைய முடிந்த ஓவியன் தன்முன்னால் வந்தமர்வோரின் முகங்களை மட்டும் கோட்டோவியமாய் வரைந்து கொண்டே இருப்பதை எவ்வளவு நாள்தான் பொறுப்பது? ஜெயமோகனிடம் நான் திட்டு வாங்குவதிலிருந்து என்னைக் காப்பாற்றவாவது ஒரு நாவலை, புனைவுப் படைப்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் பவா சார்......

என்றும் அன்புடன்,
ராஜகோபாலன் ஜா