Friday, January 27, 2012

ஒளியின் குழந்தை மிஷ்கின்


ஈரோடுக்கு ஒரு இலக்கிய நிகழ்வுக்கு சென்றிருந்தோம். வழக்கத்திற்கு விரோதமாக நானும் நண்பர் சங்கரும் அன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போனோம். அறிந்திராத ஒரு ஊரில் என்ன படம், என்ன தியேட்டர் என்ற விசாரிப்புகளுக்கெல்லாம் இடம் தராமல், இரண்டு மணி நேரத்தைக் கடத்தவேண்டும். அவ்வளவுதான். எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதுதானே! அதேதான் அன்று எங்கள் இருவருக்குமே நேர்ந்தது.

படம் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நானும் சங்கரும் வேறொரு அனுபவ பயணத்தில் தனித்தனியே பிரிந்தோம். அருகருகே அமர்ந்திருந்த போதிலும்கூட, மனதளவில் எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய் அலைக்கழித்தது மிஷ்கினின்அஞ்சாதே’. என்னைவிடவும் சங்கர் அப்படத்தில் கரைந்திருந்தான். ஒவ்வொரு விநாடியும் அவன் முகம் பரவசத்தால் மிளிர்வதை என்னால் அத்தியேட்டரின் செயற்கை இருட்டிலும் கவனிக்க முடிந்தது.

படம் முடிந்து, பேச்சற்று, எங்கள் அறைக்குத் திரும்பினோம். இருவரிடமும் இருந்த சொற்களை அப்படம் உறிஞ்சியிருந்தது. மௌனமும், இயலாமையும், நிதர்சனமும், இன்னும் பெயர் தெரியாத ஏதேதோ எங்களை அமைதியாக்கி இருந்தது. அது மரண அமைதி என்பதை மட்டும் உடல்வழியே உணரமுடிந்தது.
எங்கிருந்து இவர்கள் இத்தனை அடர்த்தியோடு தமிழ் சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு அகல் மாதிரி என்னுள் எரிய ஆரம்பித்தது. நான், அந்த இயக்குநரின் முந்தைய படைப்பை தேட ஆரம்பித்தேன். புத்தகங்கள் கிடைப்பதுதான் தமிழ் சூழலில் கடினம். டி.வி.டி. கிடைப்பது சுலபம்தானே?

அடுத்த நாள் இரவு ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன். இவன் ரூம் போட்டு, கைத்தட்டி, தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லும் இயக்குநர் இல்லையென்றும், தகிக்கும் நெஞ்சோடு தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்திருக்கும் இவன் நெருப்பு, அணைக்கப்படுவதற்கு முன் ஒருமுறை சந்திக்க வேண்டுமென முடிவெடுத்தேன்.

எங்கள் முதல் சந்திப்பு மிஷ்கின் அலுவலகத்தில் ட்ராஸ்கி மருது சாரோடு நடந்தது. மருது சார் என்னை அலுவலகத்திற்கு வெளியே அழைத்து,

‘‘பவா, ஃபயர் இவன். ஒரு படம் பண்றோம். தமிழ் சினிமாவையே மெரட்ட போவுது பாருங்க’’ என்றார்.

எப்போதும் பெர்முடாஸ் போட்டு, டீ ஷர்ட்டோடு ரொம்ப மாடர்னான ஆள் மிஷ்கின். பேச்சு... பேச்சு... எப்போதும் பேச்சு. எனக்கு என்றுமே அலுப்புத்தட்டாத பேச்சு. லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’, என் நண்பர் ச.தேவதாஸால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னையில் வெளியீட்டு விழா நடத்தினோம். பிரபஞ்சன், மருது, மிஷ்கின் மூவரும் புனுவலின் வாழ்வு குறித்தும், சினிமா குறித்தும் மிக அந்தரங்கமாக பேசின ஒரு சிறு சந்திப்பு அது. அக்கூட்டத்தில் மிஷ்கின் மிக அற்புதமாக புனுவலின் தோளின் மீது ஏறி நின்று பேசினான். உண்மைக்கு வெகு அருகில் நின்றிருந்தான். அந்த பேச்சில் நான் கரைந்திருந்தேன்.

அந்த அரங்கிலிருந்து எல்லோரும் வெளியேறியபின், நானும் மிஷ்கினும் மட்டுமே மீந்திருந்தோம். அவ்வறையை வியாபித்திருந்த அப்பேச்சின் மணம், என்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தது. ‘போய்விடு, போய்விடு’ என்று ஏதோ ஒன்று என்னை நெட்டித் தள்ளியது. ஆனால், உள்மனம் அங்கேயே இருக்கவே விரும்பியது. எப்போதாவது நேர்கின்ற அபூர்வ மனநிலை இது. மிஷ்கினே அதைக் கரைத்து, என் கைப்பிடித்து தன் அலுவலகத்திற்கு அழைத்தார். ஒரு பெரிய அனுபவ அடைதலுக்கான அழைப்பு அது என்று எங்கள் யாருக்குமே தெரியாது.

பிரபஞ்சன், ஜி.குப்புசாமி, கடற்கரய், வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ச.தேவதாஸ் என்று நீண்ட அந்தக் குழுவில், மொத்தம் பதினாறு பேர் இருந்தோம். மதிய உணவுக்குப்பின் நாங்கள் எதிர்பாராத ஒரு கணத்தில் மிஷ்கின் தன் தனியறைக்கு அழைத்து, ‘நந்தலாலா’வை எங்களுக்குத் திரையிட்டார். படம் திரையிட்டவுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார். நான் அவர் படுக்கையில் படுத்திருந்தேன். என்னருகே பத்திரிகையாளரும் கவிஞருமான கடற்கரய். அந்த இருட்டில், நண்பர்களின் இருப்பிடங்களைத் துழாவினேன். எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ஆர்வமும், பரவசமும் இருந்தது. நாங்கள் அல்லது நான், அன்று அடைந்த ஒரு மனநிலையை இதற்குமுன் எப்போதும் ஒட்டுமொத்த என் ஜீவிதத்தால் நான் தொடாதது.


மிஷ்கினின் உதவியாளர்களும், அவர்களின் அலுவலகமும், அதன் அன்றாட உலகமும் விசித்திரங்களால் ஆனது. கிட்டத்தட்ட அதில் ஒவ்வொருவரும் எம்.இ., எம்.டெக் படித்தவர்கள். வெறும் தகவல்கள் நிரம்பிய மூளைகளை வைத்துக்கொண்டு, ஒரு வட்டம்கூட போட முடியாது என்பதை வெகுகாலத்திற்கு பின்னரே நாம் அறிகிறோம். அவர்கள் கொஞ்சம் முன்னமே அறிந்தவர்கள். அந்த அலுவலகத்திற்கு தடுப்பணையில்லை. அடுக்குகள் இல்லை. மனிதர்கள் எதன் அளவுகளிலும் பிரிக்கப்படவில்லை. அந்த வளாகத்தின் காற்றைப்போல அவர்கள் எல்லோருமே சமமானவர்கள். விவரிப்பது, விளையாடுவது, சமைப்பது, குடிப்பது, உண்பது என்று அதே மாதிரியான வாழ்வுதானெனினும், இது வேறு. சீட்டுக்கட்டுகள் அங்கு தாறுமாறாய் கலைந்து கிடக்கின்றன. அளவில்லாத கொண்டாட்டங்களினூடே தங்கள் கடந்த கால கசப்பை கரைக்கிறார்கள். அதிலும் இசைக் கருவிகளின் சத்தத்தில் தங்கள் உடலிலிருந்து பல அவமான செதில்கள் உதிர்வதை அந்த அவசரத்திலும் அவர்கள் கவனிக்கிறார்கள்.

ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கை எத்தனை துயரங்களால் மூடப்பட்டிருக்கிறது என்பதை மற்ற எவரையும் விட மிஷ்கினே நன்கறிந்தவர். அந்த உரிமையிலேயே, ஒரு உதவி இயக்குநருக்கு என்ன பெரிய வாழ்வு அனுபவம் கிடைத்துவிடப் போகிறது? அவன் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய கேன்வாஸ், அவனுக்கு முன்னால் வெறும் வெள்ளையாய் வானம் அளவிற்கு விரிந்திருக்கிறது. தொடர்ந்த வாசிப்பில் மட்டுமே ஒருவன் இதை நிரப்ப முடியும். அதன் ஒவ்வொரு அங்குல வெளியையும் அவன் தன் அனுபவ ரத்தத்தால் ஒத்தியெடுக்க வேண்டியுள்ளது என்பதை சற்றே உரிமையான வார்த்தைகளில் சொன்னபோது, நம் சகோதரர்கள் துடித்தெழுந்தார்கள்.

‘‘இதயத்திலிருந்தல்ல வெறும் உதட்டிலிருந்து எழும் முத்தங்களினால், நான் நாற்பது வருட தாம்பத்யத்தை நிறைவு செய்துவிட முடியும்’’ என்று ஜி.நாகராஜன் சொல்வது மாதிரி, ஒரு அசல் கலைஞனுக்கு வார்த்தைகளின் விபரீதங்கள் நிச்சயமாய் தெரியாது. அவன் எப்போதும் இயல்பு நிலையற்றவன். பின்விளைவுகளின் கோரப்பற்களை அறியாதவன். ஆனால், தன் சக மனிதனை அள்ளி அணைத்து, தன் மடியில் கிடத்தி, தலைகோதி ஆறுதல்படுத்தும் தாயின் பரிவானவன் அவன்.

இதை அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிடாதபடி நம் வழக்கங்கள் மறிக்கின்றன. ஒரு தீபாவளி நாள் அது. தன் உதவியாளரும், முன்னாள் பத்திரிகையாளருமான வடிவேல், life is beautiful படம் பார்த்த கதை சொல்கிறார். அந்த அறை, அவர்கள் இருவரின் ஆத்மார்த்த உரையாடலால் நிறைகிறது.

‘‘இந்தப் படம் எங்க பாத்த?’’

‘‘திருவண்ணாமலையில சார்’’

‘‘எப்போ’’

‘‘பத்து வருசம் இருக்கும் சார்.’’

‘‘அப்போ எப்படி இந்த படம் பாத்த’’

‘‘சார், அங்க தமுஎசன்னு ஒரு இலக்கிய அமைப்புல பவா, கருணான்னு ரெண்டு பேர், எப்பவும் இந்த மாதிரி படங்களா தெருவுல வச்சி போடு
வாங்க.’’

‘‘தெருவுலயா?’’

‘‘ஆமாம் சார்’’

‘‘யாரு நம்ம பவாவா?’’

‘‘ஆமாம் சார்.’’

கொஞ்சநேர மௌனத்திற்குப் பின்,

‘‘வடிவேலு, என்கூட வாடா’’

‘‘எங்க?’’

‘‘வா சொல்றேன்’’

அன்றிரவு வடிவேல் ஒரு காரில் வந்து எங்கள் வீட்டில் இறங்கினார். கையில் தூக்க முடியாமல் ஒரு
பெட்டி.

‘‘என்ன வடிவேல் இது?’’

‘‘சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னார்.’’

நான் ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அப்பெட்டியைப் பிரிக்கிறேன். பூக்களும், சாக்லேட்டுகளும் இறைந்து கிடந்த அப்பெட்டியில், ஒரு சீல் பிரிக்காத எல்.சி.டி. பிளேயர். விலை பார்த்தேன். அறுபதாயிரத்திற்கும் சற்று அதிகம். கூடவே நூறு உலகத் திரைப்படங்களின் ஒரிஜினல் டி.வி.டி.க்கள்.

‘‘என்ன வடிவேல் இது?’’


‘‘நான் சொல்றேன் பவா’’ மிஷ்கின் தொலைபேசியில் வந்தார்.

‘‘ஒவ்வொரு முறையும் ஒரு எல்.சி.டி. வேண்டி நீங்க படற கஷ்டத்தை, அவமானத்தை எனக்குத் தெரியும். நான் உலகப்படம் பாக்க அலைஞ்சப்ப, எனக்கு எவனும் இதையெல்லாம் தெருவுல போட்டுக் காண்பிக்கல. பிலிம் கிளப்ல, பணம் கட்டி பாக்க காசில்லாம தவிச்சிருக்கேன். என்னை மாதிரி உங்க ஊர்ல ஒருத்தன் ஒரு நல்ல படம் பாக்க அலையக் கூடாது பவா’’

நாங்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் காண்பிக்கும் உலகத் திரைப்படக் காட்சியின் உபயம், மிஷ்கின் என்ற அந்த எளிய மனிதனின் பரிசுதான்.

நான், ஷைலஜா, மிஷ்கின், கூட அவரின் உதவி இயக்குநர்கள் நாலைந்துபேர் என மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோது அவர் அலுவலக அறை தட்டப்பட்டது.

‘‘டேய் புவனேஷ், கதவைத்திற. யாரோ அசிஸ்டெண்ட் டைரக்டர்’’ இது மிஷ்கின்.
நான் பாதி சிரிப்பினூடே, ‘‘எத வச்
சி மிஷ்கின் அசிஸ்டெண்ட் டைரக்டர்ன்னு சொல்றீங்க?’’

கதவைத் திறந்து கசங்கிய இரு இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள்.

‘‘சார், நாங்க ரெண்டு பேருமே அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்’’

மிஷ்கின் என்னைப் பார்க்கிறார்.

‘‘ஒண்ணுமில்லை பவா. இருபது வருட அனுபவம். கதவை எப்படி தட்டணும், ஷூ சத்தத்தை எப்படி குறைக்கணும்னுகூட நம்மை கான்சியஸ் ஆக்கிடும். அதுதான் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் லைஃப். நான் அனுபவிச்சிருக்கேன். தோ, என்கூடவே இருக்கானே ஜோயல். அவன்தான் என் தாய், என் தகப்பன், என் நண்பன் எல்லாமும். மத்தியானத்துல, தான் பட்டினி கிடந்து எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்டிருக்கான். இன்னும் இவன் கணக்கையே அடைக்க முடியல’’

‘‘போதும் மிஷ்கின்’’

‘‘இல்ல பவா. இந்த ஜென்மத்துக்கும் போதுமான துயரத்தை நான் வாசிப்பின் வழியா மட்டும்தான் கடந்திருக்கேன். அன்னாகரீனாவும் குற்றமும் தண்டனையும் படிக்க மட்டுமே லேண்ட் மார்க்ல சேல்ஸ்மேன் வேலைக்கு சேர்ந்தேன். சினிமாவோட மொழி எனக்குத் தெரியும் பவா. அதை வச்சிக்கிட்டு எத்தனை அடைப்பு, எத்தனை தடங்கல், எத்தனை தடுப்பு. எல்லாத்தையும் தாண்டறதுக்குள்ள சேமிச்சு வச்ச எல்லாம் கரைஞ்சிடுச்சி பவா. இப்போ புதுசா...’’ வார்த்தைகளைத் தாண்டி சில சமயம் அழுகை முந்திக்கொள்ளும்.

கடற்கரையை ஒட்டிய ஒரு அழகான புல்வெளியில் இந்த வருடம் மிஷ்கினின் பிறந்த நாள் கொண்டாட்டம். தன் சக ஹிருதயர்களை மட்டும் அவ்விருந்துக்கு அழைத்திருந்தார். நானும், பிரபஞ்சனும், மருது சாரும் கொஞ்சம் முன்னாடியே போயிருந்தோம். நேரம் செல்ல செல்ல அந்த இருட்டை ஊடுருவி நட்சத்திரங்கள் வந்தன. இரவு 12 மணிக்கு விளக்குகள் அணைத்து, பூக்கள் கொட்ட ஒரு ராட்சஸ அளவிற்கான கேக் முன்னால் அப்போதுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட நிற்கும் ஒரு குழந்தையின் குதூகலம் முகத்தில் ததும்ப மிஷ்கின் நின்றிருந்தார். நடிகர் ஜீவாவில் ஆரம்பித்து, நரேன்வரை அங்கு குழுமியிருந்தோம்.


கேக் வெட்டப்பட்டது. அதன் முதல் துண்டு நான் எதிர்பார்த்தது போலவே தன் ஆத்மார்த்த நண்பன் ஜோயலுக்கு ஊட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஸ்பரிசித்து நெற்றியில் முத்தமிட்டு, கேக் ஊட்டி... நான் வெளிச்சமற்ற ஒரு மரத்தடியில் நின்றிருந்தேன். இன்றைய திரையில் மின்னும் ஒரு உச்ச நட்சத்திரத்தில் ஆரம்பித்து, அவன் அலுவலகத்தைப் பெருக்கி சுத்தபடுத்தும் அந்த கடைகோடி பையன்வரை அந்த ஸ்பரிசத்தையும், முத்தத்தையும் பெற்றார்கள். எந்தவித ஜாதி, மத அடையாளமுமற்ற என் நண்பன் மிஷ்கினிடம் நானும் ஒரு முத்தம் பெற்றேன். பதிலுக்கு பரவசமாகி அவன் நெற்றியில் ஆறேழு முத்தமிட்டேன்.

என் காலத்திய ஒரு அசல் கலைஞனுக்கு என்னாலான எளிய பரிசு அது மட்டுமே.


Friday, January 13, 2012

ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்


‘‘இன்றுவரை என் மனதில் எனக்கு இரண்டு வீடுகள் உண்டென்றே நம்புகிறேன். எந்த அகாலத்திலும் நான் இறங்கி உரிமையுடன் போகக்கூடிய இடங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று என் வீடு. இன்னொன்று பவாவின் 19, டி.எம். சாரோன்.’’ சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் மதுரையில் நடந்த அவர் புத்தக விழாவில் இதைச் சொன்னபோது, நான் ரொம்பவும் கூச்சப்பட்டு மகிழ்ந்தேன்.

எனக்கும் ராமகிருஷ்ணனுக்குமான உறவு, ஏறக்குறைய கால் நூற்றாண்டையும் கடந்துவிட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில ஒப்பீட்டு இலக்கியத்தில் எம்.பில். பண்ணுகிறான். ‘‘ரொம்ப புத்திசாலிடா’’ என்று வழக்கம்போல் கோணங்கிதான் ஒரு பின்னிரவில் எனக்கு ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினான். உள்ளடங்கிய ஒரு சிரிப்போடு கைநீட்டிய ராமகிருஷ்ணனை இப்போதும் ஞாபகமிருக்கிறது.

அதன்பின் நாங்கள் பேசித்தீர்த்த இரவுகள், நடந்த பாதைகள், விவாதித்த இலக்கியங்கள், முரண்பட்ட தர்க்கங்கள் என்று இந்த இருபத்தைந்து வருடங்களும் அர்த்தபூர்வமாகவே உள்ளன. யதார்த்தமான கதைகளில் தமிழ் வாசக மனது தோய்ந்து கிடக்கிடையில், அதை சீண்டிவிட முடிவெடுத்த இரவுகூட, இப்போது நம்மைக் கடந்து விட்டிருக்கும் இதேபோன்றதொரு டிசம்பர்
மாதம்தான்.

நான், கோணங்கி, ராமகிருஷ்ணன் மூவரும் விடிய விடியப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். ‘தமிழில் யதார்த்தவாத கதைகளை நிராகரிப்பது. பேன்டசியான, மேஜிக்கல் ரியலிச கதைகளை முன்வைப்பது. இதை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் படைப்பால் முன்வைப்பது’ என்ற முடிவின் உருவம்தான் ‘ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்’ என்ற தமிழ் & இலத்தீன் அமெரிக்க கதைகளின் தொகுப்பு.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, கே.ஷாஜகான், போப்பு ஆகியோரின் தமிழ்க் கதைகளும், போர்ஹே ஆரம்பித்து, தங்கள் நவீன படைப்புகள் மூலம் உலக வாசகர்களையே பிரமிக்க வைத்துக் கொண்டிருந்த பல லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் கதைகள்வரை அத்தொகுப்பில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டன.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அசோகமித்திரனில் ஆரம்பித்து, ஒரு இளம் வாசகன்வரை அத்தொகுப்பை முன்வைத்தே தமிழ் நவீன இலக்கியத்தை மதிப்பிட்டனர். அப்பொன்னான காலங்களின் சேமிப்பு என்று இருப்பதெல்லாம் எங்கள் எல்லோருக்குள்ளும் ததும்பி நிற்கும் நினைவுகள் மட்டுமே.

ராமகிருஷ்ணனுக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ராமகிருஷ்ணனை அடையாளம் கண்டு, ரஷ்ய இலக்கியங்களை படிக்கத் தந்து, ரஷ்ய குதிரைகளின் குளம்படி சத்தங்களில் அவர் மனதை பறிகொடுக்கச் செய்தவர். அவர் ஒரு இலக்கியவாதியல்ல, அரசியல்வாதி. ஆனால், பல படைப்பாளிகளின் ஆதர்சம் அவர்தான். அப்போது ஒன்றிணைந்த ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட சி.பி.ஐ(எம்) மாவட்ட செயலாளராயிருந்த எஸ்.ஏ.பெருமாள்தான் இன்றளவும்
ராமகிருஷ்ணனின் ஆதர்சம்.

எஸ்.ஏ.பி. என்று எங்களால் பிரியத்தோடும், மரியாதையோடும் அழைக்கப்படும் அவர், ராமகிருஷ்ணனுக்கு மட்டுமின்றி, பாரதி.கிருஷ்ணகுமார், வெகுதூரத்திலிருப்பினும் எனக்கு என்று பலருக்கும் ஏதோ ஒரு வகையில் முன்னத்தி ஏர். ‘வெளியில் ஒருவன்’ என்ற ராமகிருஷ்ணனின் முதல் தொகுப்பில் ஆரம்பித்து, இன்று வெளிவந்திருக்கும் சமீபத்திய தொகுப்புகள்வரை எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஏ.பி.யை நினைவு கூறத் தவறுவதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ஏதாவதொரு கல்லூரியில் ராமகிருஷ்ணன் ஆங்கிலப் பேராசிரியராக போயிருக்கக்கூடும். அதை, நிர்தாட்சண்யமாக மறுத்தார். ‘படைப்பின் துளிர்ப்பை கருக்கும் இக்கல்விக்கூடங்களுக்கு, வெளியிலிருந்து செயலாற்றுவது’ என்ற அவரின் உறுதிதான், இன்று இக்கல்லூரிகளில் பல அவரிடம் ஒரு தேதி கேட்டு காத்துக்கிடக்கச் செய்திருக்கிறது.

தன் கவித்துவம்மிக்க மொழியில், தன் சிறுகதைகளை செதுக்கும் ராமகிருஷ்ணனுக்கு, அவர் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்த நாட்களின் அனுபவமும் கூடி வருகிறது. அதனாலேயே அவரால் தன் ஜீவனுள்ள படைப்புகளை இன்றளவும் நீர்த்துப் போகாமல் தர முடிகிறது.

எப்போதோ படித்த ராமகிருஷ்ணனின் ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. அவள் அலுவலகம் முடிந்து அவனோடு ஒரு பஸ்ஸில் ஏறி போய்க்கொண்டிருப்பாள். எங்கே போவதென்று இருவருமே திட்டமிட்டிருக்கவில்லை. இப்படி இலக்கில்லாத திட்டமிடாத பயணங்கள் மட்டுமே நம் உயிர்ப்பை நினைவுபடுத்தும்.

ஏதோ ஒரு மலையடிவார நிறுத்தத்தில் அவர்கள் இறங்கி, அம்மலையடிவாரத்தை நோக்கி நடப்பார்கள். லேசாக கறுக்கும் அவ்விருட்டில் அவளுக்கு இன்று புதிதாய் பிறந்தது போலவும், புதிதாய் நடப்பது போலவும் தோன்றும். அவளையறியாமல் அவள் விரல்கள் அவன் விரல்களோடு பிணைந்திருக்கும். இந்த பிணைப்பு வேண்டியே இத்தனை வருடமாய் மனதலைந்தது.

தன் பால்யத்தை அவ்விருட்டில் அவள் மீட்டுவாள். அப்பா செத்தப்புறம், ஒவ்வொரு இரவும் பயத்தில், ஆதரவு வேண்டி அம்மாவின் விரல்கள் பற்றி தூங்கின முன் இரவுகளும், அவள் விரல்களை பிரித்துப்போட்டு பாயில் கிடக்க, அண்ணனின் கைவிரல்கள் பற்றித் தூங்கின அம்மாவின் பின்னிரவுகள் மனதில் முட்டின. பற்றிக்கொள்ள ஒரு கை வேண்டி அவள் பால்யத்தில் ஆரம்பித்த பயணம், இதோ இவனின் தடிதடியான கைப்பிணைப்பிலேயே நிறைவடைகிறது.

அம்மா மீதும், தன் அண்ணன் மீதும் எழுந்த சொல்ல முடியாத ஒரு வெறுப்பு இதோ இவன் அருகாமையில் கருகுகிறது. இத்தனை வருட வாசிப்பின் அடைக்காத்தலிலும் அப்படியே மனதின் கதகதப்பில் இக்கதை படிந்திருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் ராமகிருஷ்ணனின் பாய்ச்சல் நாம் அளவிட முடியாதது. கலை இலக்கியத்தின் அத்தனை துறைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு இயங்குவதற்கான ஒரே காரணம், அவரின் இடைவிடாத வாசிப்பு மட்டுமே.
பைபிளை, இயேசுவின் வாழ்வை மறுவாசிப்புக்குட்படுத்தி ஏராளமான புனைகதைகளை அதிலிருந்து எடுத்தவர்களாக மலையாளத்தில் பால் சக்காரியாவையும், ஆனந்தையும் சொல்லலாம். இப்படி ஒரு படிப்பாளி தமிழில் இல்லையேயென அக்கதைகளை வாசிக்கும்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு. ஆனால், தன்னுடைய ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்’ என்ற ஒரு சிறுகதையின் மூலம் ராமகிருஷ்ணன் சக்காரியாவையும், ஆனந்தையும் தாண்டி போயிருப்பார்.


மாட்டுத் தொழுவத்தில் துவங்கிய இயேசுவின் பால்யமும், கல்வாரி மலையில் அனுபவித்த துயரத்தின் முடிவுமே சிலுவையறைதல் என்பது நமக்கெல்லாம் தெரிந்த இயேசுவின் வரலாறு. அதற்கிடையே ஒரு மனிதனின் அதி உன்னத பருவமான இயேசுவின் பருவ வயது நம் நினைவில் இல்லை. அதையே நட்சத்திரங்களோடு சூதாடுதல் பேசுகிறது. நாம் தவறவிடக்கூடாத படைப்பு இது.

‘யாமம்’ நாவலின் வாசிப்பின்போது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அவரை அழைத்துப் போயிருக்கிறேன். அந்நாவல் எனக்கு இன்னும் ஒரு அமைதியைத் தந்தது. அனைத்தையும் துறத்தல் என்ற தர்க்கம், என் சக மனிதன் மீது இன்னும் நேசத்தைக் கொடுத்தது.

இந்த நவம்பரில் சென்னையில் தொடர்ந்து ஏழு நாட்கள் உலக இலக்கியங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை ராமகிருஷ்ணன் ரஷ்யன் கலாச்சார மையத்தில் நிகழ்த்தியது ஒரு பெரும் சாதனை. இதுவரை நிகழாதது. அவ்வுரையைக் கேட்க இலக்கிய வாசகர்கள் இடம் கிடைக்காமல் அலைந்தது, தரையில் உட்கார்ந்து கேட்டது எல்லாமும் ஜீவன் மிக்க அப்படைப்பிற்கும், ராமகிருஷ்ணனின் அலங்காரமற்ற கவித்துவ உரைக்கும் கிடைத்த அங்கீகாரம்.

சமீபத்தில் ஒரு மழை மாலையில் நான், கோணங்கி, ராமகிருஷ்ணன் மூன்று பேரும் தொடர்ந்து வெவ்வேறு திசைகளிலிருந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். நிறைவடையாத அப்பேச்சை,

‘‘டேய் ராமகிருஷ்ணா. ஒரு ஜோல்னாப் பையை மாட்டி, பஸ் ஏறி திருவண்ணாமலை வா. நீ புறப்படும்போது சொல்லு, நானும் கோவில்பட்டியிலிருந்து புறப்படுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டோ புடிச்சி பவா வீட்டுக்கு போவோம். அப்போ பேச ஆரம்பிச்சா நீ எப்ப திரும்புவேனு தெரியாது...’’

கோணங்கி முடிக்கும்முன்பே, ராமகிருஷ்ணன்,

‘‘ஒரு வாரம் ஆனாலும், ஒரு மாசம் ஆனாலும் அங்கேயே கிடக்கலாம்ணே.’’

ராமகிருஷ்ணன், வெயிலின் குழந்தை. அவரின் எல்லாப் படைப்புகளிலும் வெயில், ஒரு நிழல்போல அவரைப் பின்தொடர்வதை அவரை வாசிக்கிற எவராலும் உணர முடியும். அவர் காட்டும் வெயில் பிரதேசத்து மனிதர்கள், மனம் நிறைய அன்பை சுமந்தலைபவர்களாகவே இருக்கிறார்கள். ‘யாமம்’ நாவலில் மலையில் ஒரு திருடன் பிடிபடுவான். ரத்தமிளாறுகளாய் உருமாறியிருந்த அவன், முதுகோடு சேர்த்து ஒரு மரத்தில் கட்டப்பட்டிருப்பான். அம்மலையின் சொந்தக்காரர் கிருஷ்ணப்ப கரையாளர், அவனை மெல்ல நிமிர்ந்து பார்ப்பார். திருடனின் தீட்சண்யமான பார்வையை அவரால் எதிர்கொள்ள முடியாது.

‘‘இவனை அவுத்து விடுங்க...’’ என்ற சொல்லின் தொடர்ச்சியாய்,

‘‘போய் என்ன பண்ணுவே?’’

‘‘மறுபடியும் இதே மலையிலதான் திருடுவன்.’’

அப்பதிலில் அதிர்வுற்று

‘‘ஏன்?’’

‘‘இம்மலையைத் தவிர வேற எதுவுமே எனக்குத் தெரியாது.’’

இந்த உரையாடல் கரையாளரை தலைகீழாய் புரட்டிப் போடும். எதன் அதிகாரத்தாலோ இம்மலை எப்போதோ தனக்கு உடமையானது. இதன் நீளம், அகலம், இதில் உள்ள மரங்கள், கொடிகள், நீர்நிலைகள், சிறு அருவிகள், புதரின் மறைவில் உறங்கும் விலங்குகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதன் உடமையாளன். அப்படியிருக்க, இம்மலை மட்டுமே தன் சுவாசமாய், இதன் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் வாழும் இவன் எப்படி திருடனாவான்?

இக்கேள்வி கரையாளருக்கு மட்டுமல்ல, நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு நாளில் நம்மை நோக்கியும் எழுகிறது. ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு எழுத்துக்குள்ளேயும் புதைந்திருக்கும் வாழ்வின் பெரும் இரகசியங்களும், சிக்கல்களும் ஒரு வாசகனை அந்த எழுத்துக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய நிகழ்வின் ஒருங்கிணைப்பில் தீவிரமாக இருந்த பொழுதில்தான் என் மகன் சிபி, ஒரு பஸ் விபத்தில் பலியானான்.

அதைக்கேட்டு நானும் ராமகிருஷ்ணனும், ட்ராட்ஸ்கி மருதுவும் ஓடினோம். ‘‘அய்யோ, எங்கள் நட்சத்திரம் ஒன்று இப்பூமியில் புதையுண்டு போனதே’’ என்று ராமகிருஷ்ணன் கதறியது எங்கள் எல்லோருக்குள்ளும் அப்படியே கிடக்கிறது. பல ஆண்டுகள் கழித்து எங்கள் மகனுக்கு ஒரு கல்லறை கட்டி அதில், ‘இயில் ஒரு நட்சத்திரம் மாதிரி மின்னி இங்கு ஒளிந்திருக்கிறான் எங்கள் சிபி’ என எழுதி வைத்துவிட்டு இன்னமும் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.



-நன்றி மீடியா வாய்ஸ்

Monday, January 9, 2012

அள்ளிக் குடிக்க ஒரு கை தாமிர பரணி நீர்

‘‘சொல்லுங்க வண்ணநிலவன். இலக்கியம், அது தந்த புகழ், ஒரு திரைப்படத்திற்கு வசனம் என்று வாழ்வு சந்தோஷமாக இருக்கிறதா?’’

‘‘இல்லை. இதைவிட தமிழ்நாடு அரசில், ஒரு கடைநிலை ஊழியனாக பணி கிடைத்து உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இதைவிட சந்தோஷமாக இருந்திருப்பேன்.’’

இருபதாண்டுகளுக்கு முன் படித்த இந்நேர்காணலை, அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அழுதது ஞாபகம் வருகிறது. ஒரு உண்மையான எழுத்தாளனின் ஆத்மார்த்த பதிவு இவ்வரிகள். சொந்த ஊரில் நீர் குடித்து, மக்க மனுஷங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு எளிய ஆசையைக்கூட நிர்தாட்சண்யமாய் மறுதலித்தது காலம். அந்த நீண்ட நேர்காணலின் அற்புதமான பல பத்திகள் எனக்குள் புக மறுத்து, மீண்டும் மீண்டும் இவ்வரிகளே முன்னுக்கு வந்தன.

நோபல் பரிசு பெற்றபேர் லாகர்குவிஸ்டுவின்அன்புவழிக்கு கொஞ்சமும் குறைவில்லாத படைப்பு, ‘கடற்புறத்திலும்’, கம்பாநதியும்என்பது எப்போதுமே என் கருத்து. பிரபஞ்சன் ஒரு கூட்டத்தில் எப்போதோ சொன்னது அசரீரி மாதிரி எதிரொலிக்கிறது.

‘‘வண்ணநிலவன்இயேசு கிருஸ்து மாதிரி. மன்னிக்கும் மனம் டைத்தவன்.’’

நான் என் வாசிப்பில் வண்ணநிலவனின் படைப்புகளில் ஒரு குரூர மனிதனை, வன்மமானவனைத் தேடுகிறேன். இல்லை. மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான். சில சமயங்களில், அவனை ஏதோ ஒன்று நிலை தடுமாற வைக்கிறது. அவ்வளவுதான். இதுதான் அவரின் எழுத்து நதியின் அடியாழத்தில் பெருகும் ஜீவ ஊற்றின் இரகசியம்.

கம்பாநதியில் கோமதியும், பாப்பையாவும் டீச்சர் ட்ரெய்னிங் இண்டர்வியூக்கு போவார்கள். தங்கள் இருவரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட இன்னும் நீண்ட நேரம் ஆகும் என்ற நம்பிக்கையில், இருவரும் அங்கிருந்து வெளியேறி ஒரு மரச் செறிவினூடே பேசிக் கொண்டிருப்பார்கள். எதிர்பாராமல் ஒரு மதிய நேர மழைப் பொழிவு. மழை முடிந்து, இலை நீரின் சேமிப்பிலிருந்து நீர் சொட்டும் அக்கணமே அவர்கள் இருவரையும் சமநிலைக்குக் கொண்டு வரும்.

இருவருமே வேலை தேடி வந்தவர்கள். இதில் கிடைக்கும் ஊதியத்தில்தான் சிதைந்த குடும்பம் எழ முடியும். இப்படி ஏதேதோ எண்ணங்கள் ஓரிரு விநாடிகளில் மின்னல் மாதிரி மனதில் மோத, இருவருமே ஒருவரை ஒருவர் இதுவரை அறிந்திராதவர்கள் மாதிரி இண்டர்வியூ நடக்கும் கலெக்டர் ஆபீஸ் ராண்டாவை நோக்கி ஓடுவார்கள். அந்த கணம் இருவரும் வெவ்வேறானவர்கள். ஒருவர் மீது இன்னொருவர் அன்பற்றவராக, எதுவுமற்றவர்களாக இருப்பார்கள்.

இதுவரை தங்கள் பெயர் அழைக்கப்படவில்லை ன்பதை அறிந்ததும், அவ்விநாடியே மீண்டும் நேசம் துளிர்க்கும். அவர்களிருவரும் பழைய அன்பில் கரைய முயல்வார்கள். ஆனால் அது அறுந்து போயிருக்கும். நான், அப்பகுதியை அதற்குமேல் தொடர முடியாமல், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அப்படியே கிடந்த அந்த இருபது வருடத்திற்கு முந்தைய இரவு நினைவில் வருகிறது.

என் வேலை கிடைக்காத நாட்களின் ரணம், இன்னமும் ஆறாதது. அது ஒரு நிழலைப்போல என்னைத் தொடர்கிறது. அக்காலங்களிலெல்லாம் நான் மாறி மாறி வண்ணதாசனையும், வண்ணநிலவனையும் படித்தேன். ‘‘என் வேட்டி நுனிகூட இப்பற்சக்கரத்தில் மாட்டி நசிந்துவிடவில்லைஎன்ற வண்ணதாசனின் பிரகடனம், அவர் படைப்பின் வழியே வேறொரு அன்பு நிறைந்த மனிதர்கள் மத்திக்கு என்னை அழைத்துப் போயினும்கூட, அம்மனிதர்கள் என்னிலிருந்து கொஞ்சம் மேட்டிலிருந்தார்கள். அவர்களை அடைய நான் கொஞ்சம் மெனக்கிட, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், வண்ண நிலவனின் உலகம் என்னிலேயே விரிந்திருந்தது. பாப்பையாவின் ஸ்நேகிதி, என் காதலியைப் போலவேயிருந்தாள். தெப்பக்குள மத்திய வெயிலில் பிரகாசித்த அவள் கொலுசு, நான் வாங்கித் தந்ததுதான்.

அந்த இண்டர்வியூ முடிந்து, அவர்களிருவரும் தெப்பக்குளத்து கருங்கல் படிக்கட்டில் உட்கார்ந்து, கால்களை நீரில் நனைத்து, குளிர்ச்சி உடலெங்கும் பரவ பேசிக்கொள்வதாக விரியும் அந்த ஒண்ணரைப் பக்கமும், தமிழ் படைப்பிலக்கியத்தில் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும், இத்தனை வருட வாசிப்பில் நான் அடைய முடியாத உச்சம்.

சின்ன வயதில் கிருஸ்துவ குடும்பங்களில் பைபிள் அதிகாரங்களை ஒப்பித்தால்தான் பல வீடுகளில் ஒரு டம்ளர் காபி கிடைக்கும். அப்படி மனப்பாடம் பண்ணி வாசிக்க ஆரம்பித்து, சங்கீதத்தின் வசங்களில் மனம் தோய்ந்து கவிஞனாகிப்போன இளைஞனின் அனுபவம்போல, எனக்கு வண்ணநிலவனின் உரைநடையில் துவங்கி, கவிதையில் போய் நின்றது.

எனக்கு ஒரு எழுத்தாளன் என்பவன் எப்படி ருக்க வேண்டுமென ஒரு பிம்பம் உண்டு. ஒன்று, பழைய ஜெயகாந்தனைப்போல சமூகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் ரௌத்ரத்தோடு திர்வினையாற்றி, தனக்கு சரியெனப் படாததை மூர்க்கத்தோடு எதிர்ப்பது அல்லது வண்ணநிலவனைப்போல மௌனமாய் தன் எழுத்தின் வழியே சமூகத்தை பிரதிபலிப்பது. இதுவன்றி ஒரு படைப்பாளி வேறு மாதிரியான வழிகளுக்கு போகக்கூடாது. தனக்கு கிடைக்கவிருந்த, கிடைத்த பல பரிசுகளை அது எத்தனைப் பெரியத் தொகையாயிருப்பினும், அதை அவருக்கேத் தெரியாமல் அவர் நிராகரித்துள்ளார்.

மேடைகளில் ஏறி நின்று தன் எழுத்து ‘‘......’’ என ஆரம்பித்து, தன் எழுத்தை தானே சிலாகிக்கும் துர்பாக்கியத்தை அவர் என்றும் பெற்றதில்லை. முடிந்தவரை தான் எழுதியதற்கும் மேலாய், அதற்கு உண்மையாய் இருந்தது ஒன்றே அக்கலைஞனை காலம் என்னுள் அப்படியே வைத்திருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களின் மேன்மையான வரிசைப்படுத்தலில், எல்லோர் பட்டியலிலும் ஒரு பெயர் நிச்சயமிருக்கும். அது, ‘அவள் அப்படித்தான்.’

அப்படத்திற்கு வண்ணநிலவன்தான் வசனமெழுதினார். எப்படியாவது அப்பட பூஜைக்கு அவரை வரவழைக்க வேண்டி, இயக்குநர் ருத்ரைய்யா செய்த முயற்சி வென்றது. வண்ணநிலவன் வந்திருந்தார். பூஜை முடிந்து அப்படத்தில் பணியாற்றப்போகும் கலைஞர்களுக்கென வாங்கிக் குவித்திருந்த வண்ணப் பூமாலைகள் அவரை பயமுறுத்தியதோ என்னவோ? அதற்குள் மௌண்ட் ரோடில் வெகுதூரம் நடந்து போய்க் கொண்டிருந்தார். இச்சுருக்கம்தான் வண்ணநிலவன் என்ற காட்டாறு.

எப்படியாவது ஒருமுறை வண்ணநிலவனை என் வாழ்நாளில் சந்தித்துவிட வேண்டும் என தொண்ணூறுகளில் மனம் ஏங்கித் தவித்தது. அவரைப் பார்ப்பதற்கென மட்டும் என் நண்பர் ஓவியர் பல்லவனோடு பஸ் ஏறி, மேற்கு மாம்பலம் போய், அவர் வீட்டின் முன் நின்றபோது மத்தியானம் மூன்று மணியிருக்கும். மெல்லக் கதவைத் தட்டினேன். ஓசைப்படாமல் திறந்த கதவின் மறுபக்கத்தில், ஒரு நாலு முழ வேட்டி, முண்டா பனியனோடு வண்ணநிலவன். ஒரு கீத்து மாதிரி இருவரும் ஒருசேர புன்னகைத்துக் கொண்டோம்.

என்னை அவருக்குத் தெரிந்தது. ‘‘உம்மை தெரியும்மய்யா’’ என ஆரம்பித்த எங்கள் உரையாடல், எதன்பொருட்டோ அறுந்தது. அசதியில் தூங்கி வழிந்த என் கண்களைக் கவனித்தவர், ‘‘மொதல்ல அப்படியே அந்த சோபாவில தூங்குங்க. அப்புறமா பேசலாம்’’

நான் என் உள்ளுணர்வுகள் முதற்கொண்டு புத்துணர்வு பெற முயன்றேன். அமரத்துவமான பல சிறுகதைகளை நான் வண்ணநிலவன் வழியேதான் அடைந்திருக்கிறேன். இன்னமும் அதை கதகதப்போடு அடைகாக்கிறேன். ‘ரெய்னீஸ் அய்யர் தெருவில்மழை எல்லோரையும் புரட்டிப்போடும் அற்புத காட்சியாகட்டும், அதைவிடவும் டெய்சி டீச்சரை சொஸ்தப்படுத்தி கூட்டிவரும் அழகாகட்டும். வண்ணநிலவனே என் மனதிலிருந்த வன்மத்தை, குரூரத்தை, என் எழுத்தின் வழியே ஒத்தியெடுத்து, எளிய மனிதர்கள் வழியே அன்பை அறியத் தந்தார்.

உலகப் புகழ்பெற்ற அவரின்எஸ்தர்’, எப்போது மனம் புண்படினும் சஞ்சலத்தில் உழலும்போதும், அதுவே என் காயத்தை ஆற்றும்மாமருந்து. இத்தனை ஆண்டுகளின் மாறுதல்கள், ஒரு கதையின் தலைப்பை மறக்கடித்து விட்டிருக்கலாம். ஆனாலும் அக்கதை, பிறந்த குழந்தையின் கழுவப்படாத இரத்தக் கறையோடும் ரத்தக் கவிச்சியோடும் அப்படியேக் கிடக்கிறது.

வண்ணநிலவனின் வழக்கமான கதை மாந்தர்கள் போலவே அவனும் ஒரு ஜவுளிக் கடையின் குமாஸ்தா. மூன்றுவேளை உணவும், பண்டிகைக்கான சீட்டித் துணியும் மட்டுமே வாழ்வின் உத்தரவாதம். வறுமைப் பிடுங்கித் தின்னும் அவன் வாழ்வின் துணையாக, ஒரு பேரழகி. அவனுக்கு மனைவியாய் வாய்த்திருப்பாள். அவ்வப்போது அவனோடு, ‘அவன் ஸ்நேகிதன்என்று சொல்லிக்கொண்டு ஒருத்தன் வருவான். அவன் முகம் பார்த்தாலே அவளுக்குக் குமட்டும். இப்படி பெருகும் குமட்டல்களை உள்ளடக்கி, உள்ளடக்கியேக் கழிந்துவிடுகிறது பெண் மனது.

எல்லா ஆண்களைப்போலவே அவனுக்கும் அவள் உள்மனசை வாசிக்கத் தெரியாது. வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவனும் உடன் வருவான். அவளையே உரித்து வைத்ததுபோல அவள் குழந்தை. அவள் தோளிலிருந்து அவன் கை ஸ்பரிசம் பட்டு அவன் கைகளுக்குக் குழந்தை மாறியிருக்கும்போது, ஐந்து விரல்களின் விஷத் தீண்டல்களில் அவள் மார்பு நீலம் பாரிக்கும். ஒவ்வொரு முறையும் இந்த இரகசியக் கழுவேற்றம் அவனாலேயே அவளுக்கு நிகழும். அவள் குமட்டலை வழக்கம்போலவே அடக்கிக் கொள்வாள்.

‘‘பாப்பா எவ்ளோ அழகு, அவ அம்மாவப்போலவே’’ என்று குழந்தையின் கன்னம் தட்டும் பொழுதெல்லாம், அவளுக்குத் தெரியும். அது அவளுக்கான கொஞ்சல், அவளுக்கான அழைப்பு. வாழ்வெல்லாம் தொடரும் இந்த அருவருப்பை எப்படித் துடைப்பது? அவள் மௌனமாய் அன்று இருவருக்கும் இலை போட்டு பரிமாறினாள். அவள் எதிர்பார்த்ததுபோலவே அவன் இரகசியமாய் பரிமாறும் கைத் தொட்டான். இதுநாள்வரை உள்ளுக்குள்ளேயேப் பெருகிய கண்ணீரில் ஓரிரு சொட்டுகள் அவள் கணவனின் இலையிலும் தெறித்தது. அப்போதும் அவன் ஏதும் அறியாதவனாய், மௌனமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘என் மன பாஷை உனக்கு புரியலையா?’ என அவனை ஏறெடுத்தாள்.

எப்படியாகினும் இதை அவனிடம் சொல்லிவிட வேண்டும். இன்று காலை குழந்தைக்கான லேக்டோஜன் தீர்ந்துபோனதைச் சொல்ல, எப்படி இன்னமும் தைரியம் வரவில்லையோ, அதுபோலவேதான் இதையும் சொல்ல முடியவில்லை. இரண்டிற்கும் கால நீட்டிப்பே வித்தியாசம். அவர்கள் வெளியேறியக் கணப்பொழுதில், கதவை அறைந்து சாத்துகிறாள். சத்தம் அவனுக்குக் கேட்கவில்லை. ஜன்னலோரம் அவனை நிறுத்தி, தன் கணவன் அவனோடு பேசிக்கொண்டிருந்தது தெளிவாய்க் கேட்டது அவளுக்கு.

‘‘அண்ணாச்சி, ஒரு ரெண்டு ரூவா கடனாத் தாறீங்களா? கொழந்தைக்கு பால்பவுடர் வாங்கணும்.’’

அவளுக்கு பொங்கிக் கொண்டு வந்தது வாந்தியல்ல. கண்ணீர்.

வண்ணநிலவன் சார் நீங்க சொன்னது மாதிரி எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க? என் ஞாபகப்படுத்தல்களின் மிச்சங்களை உங்கள் முன் கொட்ட வேண்டும் எனக்கு.

-நன்றி மீடியா வாய்ஸ்