Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, April 8, 2013

பிடி


என்னுடைய ‘பிடி’ என தலைப்பிட்ட கதை விகடன் ஆசிரியக் குழுவால் வஞ்சம் என்று மாற்றப்பட்டிருந்தது. மேலும் முதல் 3 பாராக்கள் இடப் பற்றாக்குறை காரணமாக பிரசுரமாகவில்லை. அதை முழுமையாக இங்கே தருகிறேன். 



அந்த பஜாஜ் ஸ்கூட்டர் ஒரு நாளும்  அந்த பிரமாண்ட ஸ்கூல் கேட் முன்னால் நின்றதில்லை. மாணவர்களின் குதூகலம், ஆசிரியப் பணிவு, பெற்றோர்களின் அலைச்சல், விசாரிப்புகள் என எல்லாவற்றையும் மீறி அதன் புறப்பாடும், வருகையும், சமீபித்தலும் கனகராஜின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும். அவன் காதுகள் புற உலகச் சத்தத்தைத் தவிர்த்து பஜாஜ் ஸ்கூட்டரின் சத்தத்திற்கு மட்டுமே காத்திருக்கும். அவர் கையிலிருந்து அணைக்காத எஞ்ஜின் சத்தத்துடன் ஒரு குழந்தையைக் கைமாற்றுவது மாதிரி ஸ்கூட்டரைக் கனகராஜின் கைகளுக்கு மாற்றி விடுவார்.
ஸ்கூட்டரின் வருகையும், ‘கிறீச்’சத்தத்தோடு கேட் திறத்தலும் ஒருசேர நிகழும்.  அது ஒரு போதும் தவறினதில்லை. பாரபட்சமான கேட் அது. ஒரு நாளும் தாமதிக்காத கிளமண்ட் சாரைக் கூட மூடிய அதன் எதிர்ப்பக்கத்தில் நிற்க வைத்து இறுமாந்திருக்கிறது.
மெர்சி டீச்சரின் சில குதூகலமான நாட்களில், சற்று மிகையாகி புடவைக்கான மேட்சிங் வளையல்களில் ஆரம்பித்து எப்போதும் விரிக்கப்படாத வண்ண குடை தேர்வு விரை நீண்ட நாட்களில், அது அநியாயத்திற்கு அவர்களை வெளியில் நிறுத்தி உச்சந்தலையிலிருந்து, கால்களின் நகங்கள்வரை ஒருமுறை நிதானமாய் மேய்ந்தபிறகும் திறக்காமல், ஒரு ஆள் மட்டுமே நுழையும் அதன் சின்ன கேட்டைத் திறந்து மெர்சி டீச்சரை அனுமதிக்கும். சரியான உயரமும், அதற்கான தாட்டிகமும், மிகையில்லாத நிறமும், சுருள் சுருளாய் தன் முன் நெற்றியில் விழும் முடிக்கற்றையைச் சற்றே அலட்சியமாய் தள்ளிக்கொண்டே அந்தச் சின்ன கேட்டின் இரும்பு தன்னைத் தொட்டுவிடாமல் மிக ஜாக்கிரதையாய் தன் உடம்பை சுருக்கிக் கொண்டு உள்நுழைகையில் பார்வை மட்டும் அப்பள்ளி மைதானத்தை எட்டும். தன் அழகு எப்போதும் அந்த ஸ்கூல் கேட்டினால் அவமதிக்கப்படுவதை அவள் உள்ளூர வெறுத்தாள். அந்நிமிடங்களில் ஸ்கூல் வழியே கடக்கும் சைக்கிள் ஓட்டிகள், டூ வீலர் பயணிகளின் வேகம் குறைவதும், எப்போதாவது கடக்கும் சில நான்கு சக்கர வாகனங்கள் நிற்பதும், மட்டுமல்ல அந்த கேட்டிற்கு அப்புறமிருந்து தவமிருந்து முளைக்கும் கண்களின் கவனிப்புகளில் அவள் நடந்துவரும் நீண்ட நடை, ஒரு அகங்காரக் கவிதை.
அளவெடுத்துச் செதுக்கப்பட்டு, கருங்கற்கலால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப்படிகளால் இணைக்கப்பட்டு, மரச்சட்டங்களாலான இரண்டாம் மாடியின் மேற்கூரை கறுப்பேறிய சீமை ஓடுகளாலானவை. கருந்தரை வழுக்கும். கீழே தலைமையாசிரியர் அறை, கூப்பிடு தூரத்தில் அதன் எதிரே அலுவலக அறை, தலைமையின் பார்வை எப்போதும் விழுந்து கிடக்கும் எதிருக்கு பக்கத்து அறை ஸ்டாஃப் ரூம். மரப் படிக்கட்டுகளில் ஏறும் மாணவ பாரங்களின் சப்தத்தை அதிகரித்து காட்டவும், பிரேயருக்குப் பின் எனில் கால்களின் சத்தத்தை உறிஞ்சியெடுக்கவும் காத்திருந்த அந்த மரப் படிக்கட்டுகள் ஆசிரியர்களின் ஷீ போட்ட தாமத நடைகளை எப்போதும் ஹெட்மாஸ்டரின்  காதுகளுக்கு ரகசியமாய் கடத்தவும் கற்றிருந்தது. ஜன்னல் கம்பிகளில் புதைந்திருந்து பார்க்கும் மாணவர்களின் முன் எத்தனை சத்தங்கள், அவமானங்கள், அவமதிப்புகள், மீறிய கண்ணீர் துளிகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் படியேறும்போது ஆசிரியர்களின் ஷீ சத்தத்தையும் உறிஞ்சிக் கொள்ளும் மாயப் படிக்கட்டுகள் அவை.
அது ஒரு அரசு மான்யம் பெற்ற கிருஸ்துவ மேல்நிலைப்பள்ளி. ஐந்தாயிரம் மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுமாய் நிறைந்து நின்ற அவர்களுக்கு, சகல அதிகாரங்களும் வாய்க்கப்பெற்ற ஒரு மேய்ப்பனிருந்தான். சற்றே உயரத்தைத் தூக்கிக் காட்டிய ப்ரவுன் கலர் ஷீவையும், நல்ல அடர்த்தியான வண்ணங்களில் வேண்டுமென்றே கழட்டிவிடப்பட்ட சட்டையின் மேல்பட்டனும், அதனுள் ஒளிரும் ஐந்தாறு பவுன் எடையுள்ள கோதுமை செயினும், எப்போதும் எதற்காகவும் கசிந்து விடாத புன்னகையின் ஊடே இயேசுவோ அல்லது அவரின் பெயரினால் திருச்சபையோ கொடுத்த ஒரு முழு நீளப் பிரம்புமாய் அவர் அப்பள்ளியின் மைதானத்தைச் சுற்றிவருகையில் மொத்தப் பள்ளியும் அதன் ஜீவராசிகளும் மூச்சடக்கிக் கொள்ளும். மெளனத்தின் வெற்றுத் தடத்தில் அவரின் நடையின் அதிர்வு மட்டும் அதிகாரத்தை உமிழும். இடையிடையே பிடிபடும் மாணவர்கள்மீது பிரம்பு சரமாரியாகப் பிரயோகிக்கப்படும். ஜன்னல்வழியே படியும் மாணவப் பார்வைகளுக்கும், குனிந்து கவனிக்கும் ஆசிரியர்களின் பார்வைகளுக்கும், மைதானத்தின் வெற்று மண்ணில் முட்டிபோட்டு நிற்கும் மாணவர்களின் பின்பாதி மட்டுமே தெரியும். அதிலெல்லாம் எப்போதும் ஆண் பெண் பேதமில்லை. முக்கோணவடிவில் மடித்து விடப்பட்டிருக்கும் பச்சை தாவணி, தன் முகங்களுக்கு ஈடாய் மண்ணில் படிய முழங்காலிட்டு நிற்கும் மாணவிகளின் முகங்கள் அன்று மாலைவரை மீளாது.
நல்லப் படிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் கடுமையான அடக்கு முறையிலிருந்து கிடைக்கும் அறுவடை. ‘பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க’ என்று கசாப்பு கடைகளின் முன் ஆட்டுக்குட்டிகளின் எஜமானர்கள் இறைந்து நின்றதற்குச் சற்று பிந்தின நாட்கள் அவை. திருச்சபை அவருக்கான எல்லா அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அதன் எல்லைகளை மட்டும் அவரே வரையறுத்துக் கொண்டார். அதைக் குறைக்கவோ, குறைந்தபட்சம் பேசவோ கூட முடியாத உயரத்திற்கு அவர் போய்க் கொண்டேயிருந்த நாட்கள் அவை. நல்லொழுக்கத்திற்கும், நல்படிப்புக்குமென ஒரு மனிதன் எத்தனை தூரம் தன்னை அர்ப்பணிக்கிறாரென ஊர் பெருமிதப்பட்டது. அந்த பெருமிதத்தின் முன் மற்றவர்களின் அபிப்ராயங்கள், புலம்பல்கள், அவஸ்தைகள் எல்லாமும் தூசியிலும் அற்பமானவை.
அவர் பங்களாவை ஒட்டியே அவர் ஆளுமைக்குட்பட்ட இருநூறு மாணவர்களை உள்ளடக்கி ஒரு ஹாஸ்டல் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தும், பிரம்பு தன் கைகளிலேயே இருக்க, அவரே ஏற்படுத்திக்கொண்ட நீட்டல் அது. ஸ்கூல் முடிந்து அப்பிரம்புடனேயே மெளனப்படுத்தப்பட்ட மைதானத்தை அவர் நடந்து கடக்கையில் கரையின் இப்பக்கம் உற்சாகப்பீறிடலும், கரையின் அப்பக்கம் மயான அமைதியும் ஒரு சேர நிகழும்.
சகவகுப்பு மாணவர்களிடம் நோட்புக் வாங்க எப்போதாவது பாலு அண்ணாவோடு அந்த ஹாஸ்டலுக்குப் போவதுண்டு. அப்போதெல்லாம் சைக்கிளை கேட்டிலேயே நிறுத்தி வைத்துவிட்டு, மடித்து கட்டிய வேட்டியைக் கீழே தளர்த்தி விட்டுவிட்டு அண்ணன் பயபக்தியாய் மைதானத்தை என் துணையோடு கடக்கும்.
யாருமற்ற அந்த மைதானத்தில் ஒரு பெரிய ஈசிச்சேரில் வெற்றுடம்பில் லுங்கி மட்டும் கட்டி, எதிரில் போடப்பட்டிருக்கும் மரஸ்டூலில் கால்களைத் தூக்கிப் போட்டு லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கும் ஹெட்மாஸ்டரை என்னைப்போல ஏழு மணிக்குமேல் போனால் பார்த்திருக்கமுடியும். தூங்கின பின்பும் கால் அழுத்திவிடும் ஸ்கூல் ப்யூன்களின் பவ்யம் என்னை எப்போதும் சந்தோஷப்படுத்தும். எங்களிடம் ஸ்கூலில் எரிந்து விழும் அவர்கள், அக்கால்களின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பது ஏதோ மனதுக்கு இதமாயிருந்தது.
காலை வருகை ஸ்கூட்டரில்தான். தன் பிரம்பும், பெரியடீச்சர் தரும் காபிப்ளாஸ்க்கும், அவர் புறப்படுதலுக்கு முன்பே கனகராஜால் கொண்டு வரப்படும். அப்பிரம்பு அவர் கையில்  சேர்பித்தலுக்குப் பின்பே அறைக்குள் நுழைவார்.
பிரேயருக்கு முன் எதற்காகவோ, யாரிடமாவது எழும் அவரின் முதல் கர்ஜனை அம்முழுநாளுக்கும் போதுமானது. அதை அவர் அறியாதது மாதிரி தனக்குள் அலட்சியமாய் வைத்திருந்தார். பலநேரம் கனகராஜிடம், சிலநேரம் ஆண் ஆசிரியர்களிடம் எப்போதாவது பெண் ஆசிரியைகள் என்ற பட்டியலில் எப்போதும் மெர்சிடீச்சருக்கு மட்டும் இடமிருந்ததில்லை. அவள் அழகும், கம்பீரமும், அவர் அதிகாரத்தை எப்போதும் அசைத்துக்கொண்டேயிருந்தது. அதற்காகவே அவர் அடிக்கடி தன் சிம்மசனத்தை விட்டு எழவேண்டியிருந்தது.
ஏழாம் வகுப்பு ‘ஏ’ நிறுத்திக் கொண்ட அழகிகள் போக, மிச்சமிருந்த மாணவிகளுடன், ‘பி’ பிரிவில் வகுப்பை நிறைத்துக்கொண்ட ஆண் மாணவர்களுக்கு மத்தியில் நாலாவது பெஞ்சில் இடது ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.
அமைதி... அமைதி... அப்பள்ளி எப்போதும் மெளனத்தில் உறைந்திருந்தது. ஆசிரியர்களின் பேச்சே பழகிப்பழகி ரகசியம்போல மாறிவிட்டிருக்கும். எப்போதும் ஹெட்மாஸ்டரின் வருகைக்காக வாசல்படியிலேயே ஒரு கண்ணை நிரந்தரமாய் வைத்துவிட்டு ஒரு கண்ணால் எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள்.
எந்நேரமும் தான் அவமானப் படுத்தப்படலாம் எனும் ஜாக்கிரதை, நீர் சொட்டச் சொட்ட நாக்கை துருத்திக்கொண்டு படுத்திருக்கும் ஒரு நாயின் மூச்சிரைப்பைப்போல அவர்களுக்குள் எப்போதும் படுத்திருந்தது.
பள்ளிக்கு வெளியிலேயும் நாங்கள் பெரும்பாலும் மெளனமாகவே பேசப் பழகியிருந்தோம். விடுமுறை தினங்களின் குதூகலங்கள்கூட யாருடைய கவனிப்போ எப்போதும் எங்கள்மேல் குவிக்கப்பட்டதுபோல் குறைந்திருந்தது.
ஏழாம் வகுப்பில் எப்போதும் போல ஜெயந்தி முதல் ரேங்கும், நான் இரண்டு, மூன்று எப்போதாவது தவறினால் நான்கு என்ற தகுதியையும் தக்க வைத்துக்கொண்டோம். கணக்கு நான் எட்டிப்பிடிக்க முடியாத தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்த நாட்கள்அவை. ஜெயந்தி அதன் மீதே அமர்ந்திருந்தாள்.  
ரத்னம் சார்தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். நீண்ட கிருதா வளர்த்து, முடியை சுருள்சுருளாய் வாரி, தன் வயதை மறைக்கும் பிரயத்தனத்தில் சதா வெற்றியடைந்து கொண்டிருந்த முதல் இளைஞர் அவர்.  அவ்வருடத்தின் ஜீலை மாதக் கடைசியில் ஒரு ஓய்வான மாலை நேர வகுப்பில் எங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி பெயர், அப்பா பெயர், அவர் தொழில், தெரு, எதில் பயணிக்கிறோம்? சைக்கிளா?, நடையா?, கார்க்கானா தெருவில் அவர் வசிக்கும் தெருவிலிருந்து அம்மாணவன் அல்லது மாணவியின் வசிப்பிடம் எத்தனை தூரம், அழைத்துப் போக யார் வருவார்கள் என்ற விசாரிப்புகளுக்கு நல்ல விளைச்சலிருந்தது.

அவர் பை தூண்டில் மீன்களால் நிறைந்துகொண்டேயிருந்தது. பிடிபட்டும், பையில் போட்டும் மீண்டும் மீண்டும் நான் மட்டும் நழுவி நழுவி தண்ணீருக்குள் விழுந்துகொண்டேயிருந்தேன். அவ்வித்தையை அப்பா எனக்குக்  கற்பித்திருந்தார். என் தப்பித்தல் மற்றவர்களை உஷார்படுத்துமென சார் உள்ளூர பயந்தார். என் மீதான வன்மம்   ஒரு சிறு உருண்டை மாதிரி உருண்டு அவர் மனதின் ஓரத்தில் போய் பதுங்கிக்கொண்ட முதல் நாள் அதுதான்.
அதன் பிறகு வகுப்பறை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தது. தொடர் அவமானங்களால் நான் காயப்பட்டேன். என் சதையைக் காக்கைகள் கொத்தித் தின்று கொண்டேயிருந்தன. சகல மேன்மையும், கம்பீரமும், கெளரவமும் வாய்க்கப் பெற்ற என் அப்பாவின் பொருட்டு வலி பொறுக்க கற்றுக் கொண்டேன். சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து இரவு நேரங்களில் சொல்லிக் கொடுக்கும் அப்பாவின் வாஞ்சைமிகு தோழமையின் முன் என் அற்ப வலியை எடுத்து வைக்க விரும்பினதில்லை எப்போதும். அப்பாவின் நேர்மையும், வாழ்வை அவர் எதிர்கொண்ட திறனும் என்னுள் ஒட்டியிருந்தது. குதூகலமற்ற, புன்னகை தீய்க்கப்பட்ட என் முகத்தை எனக்கு மட்டுமே தெரிகிற மாதிரி நான் மறைத்துக் கொண்டேன். சர்வ வல்லமை பொருந்திய அப்பாவாலேயே அதைக் கண்டடைய முடியவில்லை.
அது ஒரு மே மாதம் என்பதும்  சுட்டெரிக்கும் வெயிலினூடே திடீரெனத் திரண்ட கருமேகங்களும், அடித்த பேய்க்காற்றும், ஊற்றிய மழையும், முறிந்த பெருவேப்பமரமும், நசுங்கிய சேகர் அண்ணனின் சைக்கிளும் எல்லாமும் ஞாபகமிருக்கிறது. களேபரங்கள் முடிந்த அந்த மாலை நாங்கள் ஆறேழு பேர் சாரோனிலிருந்து சைக்கிளுக்கு இருவராகப் பிரிந்து ஸ்கூலுக்கு ரிசல்ட் பார்க்கப் போனோம். நெற்றியிலும் மார்பிலும் சிலுவைக்குறிகளைக் காற்றிலிருந்து எடுத்தெடுத்து அணிந்துகொண்டோம். நான் அன்று ராஜாவின் சைக்கிளுக்குப் பின் அமர்ந்திருந்தேன். என் கண்கள் மூடியிருந்தன. என்னுள் மட்டும் கவிந்த இருட்டு பயமுறுத்தியது.
நான் ஜெபித்துக் கொண்டேபோனேன். உள்ளிருந்து சில வார்த்தைகள் என் அஜாக்ரதையால் கசிந்து ராஜாவை திரும்ப வைத்தது. ஸ்கூலில் நிறைய கும்பலிருந்தது. அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு குவிந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பறையும் ரிசல்ட் கூடங்களாக தற்காலிகமாக மாறியிருந்தன. ஒவ்வொருவரும் நீண்டு நின்ற ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பார்வையை மட்டும் உள்ளனுப்ப வேண்டும்.
சாய்த்து வைக்கப் பட்டிருந்த நோட்டீஸ் போர்டில்,VII ‘ஏ’ ,  VII— ‘பி’ என்று ஆரம்பித்து VII ‘எச்’ வரை தேர்வான பெயர்கள் டைப்செய்யப்பட்டிருந்தன. சிவப்பு மையினால் பிரிவுகள் அடிக்கோடிடப்பட்டிருந்தன.
நான் ஆர்வத்தின் நுனியிலிருந்தேன். மற்ற முகங்களில் தீர்க்கமிருந்தது. மற்றவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு நான் VII ‘பி’ யின் தேர்வுப் பட்டியலைப் பார்த்தேன். ‘பி’ யில் ஆரம்பிக்கும் என் பெயர் முதல் ஆறேழு பெயர்களில் இல்லை. நான் திடுக்கிட்டேன். கை நடுங்க ஆரம்பித்ததையும், நெற்றி வியர்வையில் துளிர்ப்பதையும் உணர முடிந்தது. தேர்வான கடைசி பெயர்வரை நான்காவது முறையாகப் படித்தேன். இல்லை. என் பெயரில்லை.எப்போதும் மூன்று அல்லது நான்கு ரேங்குக்குள் வரும் நானில்லை அதில்.
ரேங்க் பட்டியலில் இடமுடியாத பல பெயர்களும் அதிலிருந்தன. எனக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அருகிலேயே தவறினவர்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. நிராசையோடு அதைப் பார்தேன். அதில் என் பெயர் இருந்துவிடக் கூடாதென உள்ளூரப் பிரார்த்தித்தேன். சப்பராங்கால் போட்டு கிராமர் சொல்லிக் கொடுத்த அப்பாவின் குரல் கேட்டது. அவர் முன் எப்படிப் போய் நிற்பது? அவரின் ஒரு பார்வையின் ஊடுருவலில் நான் துளைக்கப்படுவதை உணர்ந்தேன். நம்பிக்கையுடனும், நம்பிக்கையற்றும் பட்டியலைப் பார்த்தேன். தவறினவர்கள் பட்டியலில் முதலில் என் பெயரிருந்தது. என் பெயர் மட்டும் அழுத்தி டைப் செய்யப்பட்டது போலிருந்தது. வன்மத்தின் விஷத்துளி என் பெயர்மீது படிந்திருந்தது.
துளிக்கும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். ஸ்கூல் கேட்டில் நின்று திரும்பினேன். ராஜா சைக்கிளில் உட்கார்ந்து தரையில் காலூன்றி என் வருகைக்காகக் காத்திருந்தான். நான் அவமானமுற்றிருந்தேன். ராஜாவின் முகத்தில் வெற்றியின் தீட்டல் இருந்தது. என் முகம் கருவடைந்து போயிருந்தது. ஒரு நீண்ட நடையின் முடிவு என் வீட்டில் ஈசிசேரில் வெற்றுடம்போடு படுத்து எதையோ படித்துக் கொண்டிருந்த அப்பா முன் நின்றது.
அப்பா என்னை ஏறெடுத்தார். அந்தப் பார்வையை தாங்கமுடியாமல் அவர் மேல் சரிந்தேன். அவர் தன் தடித்த விரல்களால் என் முதுகில் ஸ்பரிசித்து என்னைத்  தேற்றினார். யாரும் ஒரு வார்த்தை பேசாமல் என் தோல்வியை, அல்லது பழிவாங்கலை அவருக்கு சரீரம் வழி கடத்தியும், பெற்றும் உணர்ந்த கணமது. வஞ்சிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கான கண்ணீர் அவன்               இடக்கண்ணிலிருந்து ஒரு சொட்டு சொட்டியது. என் அழுகை கேவலாய் மாறியபோது அவர் மிகுந்த வாஞ்சையோடு,
“பவாய்யா, அழாத, அப்பா இருக்கேன்டா” என்ற ஒற்றை வரியில் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியிட்டார்.
அதன்பிறகும் நான்தான் அழுதுகொண்டிருந்தேன். அன்றிரவையும், அடுத்த நாள் காலையையும் சகஜமாக்க நானும் அப்பாவும் மாறி மாறி முயற்சித்தோம். தோல்வி சுற்றிச் சுற்றி வந்து ஒரு பாம்பு மாதிரி எங்கள் கால்களைச் சுற்றியது.
வழக்கம்போல ஷேவ் செய்து, கை வைத்த வெள்ளை பனியன் போட்டு, யாருக்கும் வாய்க்காத அழகோடு வேட்டிகட்டி, ஒரு முழுக்கை வெள்ளைச்சட்டையைக் கஞ்சி மொடமொடப்போடு போட்டுக்கொண்டு எடுத்துவைக்கப்பட்டிருந்த காலை டிபனைப் பார்வையால் நிராகரித்து, என்னை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து அந்த ஸ்கூல் மைதானத்தை அடையும்போது மணி பத்தாகியிருந்தது. நேராக ஹெட்மாஸ்டர் வீட்டு முன் நின்று கால் ஊன்றி, அங்கிருந்த வாட்ச்மேனிடம் ஹெட்மாஸ்டர் இருக்காரா? என உரத்த குரலில் விசாரித்தார்.
“ஸ்கூலுக்கு போயிட்டாரு. அங்க போயி பாருங்க” அவன் தலை கவிழ்ந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சினான்.
அப்பாவும் நானும் ஹெட்மாஸ்டர் அறை முன் நின்றிருந்தோம்.ஆறேழு பேர் எங்களுக்கு முன்பே அங்கிருந்தார்கள். புதிய சேர்க்கை, டி.சி. வாங்குதல் போன்றவை அவர்களிடமிருந்ததை உணரமுடிந்தது.
‘தனக்கோட்டி வாத்தியார்’ என கனகராஜ் வழக்கமான தன் பெருங்குரலில் கூப்பிட்டான்.
ஒரு சுழல் நாற்காலியில் அவரிருந்தார். ஒரு குள்ளமான,தடித்த,சகல அதிகாரங்களும் வாய்த்த  அவர் தலைக்கு மேல் அவர் பெயருக்குப் பக்கத்தில், ஹெட்மாஸ்டர் & கரஸ்பாண்டென்ட் என்று எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்தது. அதிகார நெடி அந்த கருங்கல் சுவர்களிலிருந்து  கசிந்து கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் தன் கைகளால் எதிரிலிப்பட்டிருந்த ஒரு மர நாற்காலியை அப்பாவுக்குக் காட்டினார்.
நீடித்த அமைதியைத் தொடரவிடாமல் அப்பா தன் உரத்த குரலில் ஒரு சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்தார். எதையும் கேட்டு பழகியிராத அவர் இடைமறித்து,
“அவன் பெயிலாயிட்டான் அதானே” என்ற அலட்சியத்தை மறித்து, “பெயிலாக்கப்பட்டான்” என அப்பா திருத்தினார்.
“அதை எப்படி உறுதியாச் சொல்றீங்க?”
“நானும் வாத்தியார்தான் சார்.”
”எலிமெண்டரி ஸ்கூல் வேற, ஹயர் செகண்டரி ஸ்கூல்  வேற” அலட்சியத்தில் வார்த்தைகள் வெளிவந்தன.
“தெரியும். என்பையனப்பத்தி என்னைவிட வேறுயாருக்குத் தெரிஞ்சிடப்போவுது”
“அப்ப வீட்லேயே வச்சி நீங்களே சொல்லி கொடுக்க வேண்டியதுதானே”
“காலாண்டுலேயும், அரையாண்டுலேயும் மூணாவது ரேங்க் வாங்கற பையன் முழு ஆண்டில எப்படி சார் பெயிலாக முடியும்? அவன் ஆன்சர் ஷீட்டைப் பாக்கலாமா?”
“அதை உங்ககிட்ட காட்டணும்னு ரூல் இல்லை.” எள்ளலும், அலட்சியமும், உதாசீனமுமாய் அவரிடமிருந்து வார்த்தைகள் வந்தன.
”கேவலம், மாசம் அம்பது ரூபா பிச்சை காசுக்காக ஒரு படிக்கிற  பையன இப்படிப் பண்ணிட்டீங்களேடா” என்று அப்பா முடிக்கும் முன், தான் ஒருமையில் அழைக்கப்படுவதைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தில்
‘கெட் அவுட் ஃப்ரம் திஸ் கேம்பஸ்’ என அந்த அறையே அதிர்வது மாதிரி கத்தினார். வெளியிலிருந்தவர்கள் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார்கள். கனகராஜ் உள்நுழைந்து எங்களை சமீபித்து அவருக்கு அரண் மாதிரி நின்று கொண்டான்.
எதற்கோ ஆவேசம் வந்தவர்போல் அப்பா தன் இரு கைகளாலும் தன் சட்டையைப் பிய்த்தார். இரண்டு பட்டன்கள் தெறித்து ஹெட்மாஸ்டரின் மேசை மீது விழுந்தது.
“பாருய்யா,பாரு” என்று தன் தோள்பட்டையைக் காண்பித்தார்.குண்டு பாய்ந்து தைக்கப்பட்ட பெரும் தழும்பு தெரிந்தது.
“வெள்ளைக்காரனை அனுப்ப வாங்குன குண்டடி.
எல்லாம் மாறிடுச்சின்னு நெனச்சோமே, உன்னை மாதிரி ஆளுங்க இப்படி சின்னஞ்சிறு பசங்களை பழி வாங்கவா இத்தனை ரணப்பட்டோம்... ”
அப்பாவின் வார்த்தைகளின் கணம் தாங்காமலோ, அது தேவையற்றது என்றோ, அவர் தன் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியேறத் தயாரானார்.
அதிலும் அப்பாவே முந்திக்கொண்டார். என் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு, பட்டன்கள் அறுந்து கிழிந்த சட்டையோடு சைக்கிளை எடுத்தார்.
நான் முன் ஹேண்ட்பாரில் ஏறப்போனேன்.
“பின்னால கேரியர்ல உட்கார்ந்துக்கோய்யா”
நான் அமைதியாய் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.
“அப்பாவை கெட்டிமாப் புடிச்சுக்கோ”
கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.
இன்னும் பிடி தளரவேயில்லை.


Wednesday, March 20, 2013

வலி

ஓவியங்கள் : என். சீனிவாசன் 






அப்போதுதான்  நடக்கத் துவங்கியது போல் முடியும் போதும் உற்சாகத்திலிருந்தார்கள். ஒரு வெப்பால மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த போதும் நீண்ட நடையின் களைப்பேதும் இல்லை. இருவருமே நெடுநெடுவென வளர்ந்து, ஒல்லியாக இருந்தார்கள். தொழில் அவர்களை அப்படி இருக்கச் சொல்லி எச்சரித்திருந்தது.
ராமன் எதிர் புதரின் அசைவையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே அசைவது எதுவென தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வமுற்றிருந்தான். இரண்டாமவன் கையிலிருந்த கருங்கல்லை உருட்டிக்கொண்டு அதையேப்பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் இடைவெளியிலும் கூட இருள் அப்பி ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாதபடி பரவியிருந்தது. நடக்கும்போது உணராத குளிரை உட்கார்ந்தவுடன்தான் உணர்ந்தார்கள்.
பேசுவதற்கான சொற்களை எப்போதும் ஊரிலேயே வைத்துவிட்டுத்தான்ப் புறப்படுவார்கள். சொற்களற்ற உடல் மொழி களவின் போதான இரவுகளுக்கு அவர்களுக்கு அவசியப்பட்டது.
இப்போது இருவரின் கைகளிலேயும் கற்கள் உருண்டன. புதரின் அசைவு அதிகரித்து அடங்கியது. ராமனின் கண்களில் ஒரு சிறு மின்னல் மின்னி அணைந்தது. காட்டுப் பன்றிகள். இருட்டில் இன்னும் பார்வையால் ஊடுருவினான். ஏழெட்டுக்குட்டிகள் இருக்கும். தாய்பன்றியைத் துழாவினான், இல்லை. வெளியே மேய்ச்சலுக்கு போயிருக்கலாம். அதுவும் தன்னைப்போலத் தான் என ஒரு கனம் நினைத்தான். மின் கம்பிகளில் மாட்டாமல், நாட்டு வெடிகுண்டுகளின் மேல் சோறு பிசைந்து போடப்பட்ட உருண்டைகளைக் கடிக்காமல், நாட்டு துப்பாக்கிகளின் குறிகளுக்குத் தப்பி தினம் தினம் தன் இருப்பிடம் சேரவேண்டியுள்ளது. எதுவும் நிச்சயமில்லை. ஏனோ அக்குட்டிகளின் மீது மிகுந்த பரிவு  வந்தது. அதை நீடிக்கவிடாமல் முகத்தை இரண்டாமவன் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் வெப்பால மர உச்சியின் அசைவை கவனித்துக் கொண்டிருந்தான். கைகள் அக்கருங்கல்லை உருட்டிக்கொண்டேயிருந்தன.
காடு சப்தமடங்கி படுத்துக்கிடந்தது.
காத்திருந்தார்கள்.
ராமனின் கையிலிருந்த கல் நழுவி இடது காலில் விழுந்தது. திடுக்கென முழித்துக்கொண்டு முனுசாமியைப் பார்த்தான். அவன் பார்வை வெப்பால மரத்திலிருந்து இறங்காமலிருந்தது. கையிலிருந்த கல் அசைந்துக் கொண்டேயிருந்தது.


ராமன் உள்ளுக்குள் புறப்பாட்டுக்குத் தயரானான். ஆனாலும் முனுசாமியின் கை அசைவு நிற்காமலிருந்தது. அக்கல்லும் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தபோது  ராமன் எழுந்து நின்றான்.
எல்லாமே கச்சிதமாய் இருந்தது.
திரும்பி நடக்கும் போது ராமன் மட்டும் எதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.  தாய்ப்பன்றி புதருக்குள் நுழைவது தெரிந்தது. இருட்டு பழகிவிட்ட படியால் அதன் பின் பக்க பருமை அவனை பயமுறுத்தியது.
முனுசாமியைத் தொட்டு நிறுத்திக் காண்பிக்க நினைத்ததை செயல்படுத்தவில்லை. மனம் கலைவது தொழிலுக்கு ஆபத்து. அவர்கள் போட்ட சொந்த பாதையில் நடப்பது மாதிரி கொடி வழியே நடந்தார்கள். மல்லாட்டைச் செடிகள் இருபக்கமும் இருட்டோடு  கலந்து கருங்கடல் மாதிரி பரவியிருந்தது.
அவ்வீட்டின் முன்னிருந்த கம்பத்தில் மூடியிட்ட ட்யூப் லைட் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வீட்டின் முகப்பில் அடங்கிய வெளிச்சத்தில் ஒரு டூம் லைட் மஞ்சள் நிறத்தில் எரிந்துக்கொண்டிருந்தது. முனுசாமி வீட்டின் பின்பக்கமிருந்து முன் வாசலை எட்டிப்பார்த்தபோது மஞ்சள் வெளிச்சம் மறைந்து இருட்டு நிறைந்திருந்தது.
அவர்களுக்கான தொடர்பை உடலால் வகுத்துக்கொண்டார்கள்.
ஏதோ அசைவுகேட்டு ரகோத்மன் படுத்துக்கொண்டே சுவிட்சைப் போட்டார். பரவிய  ட்யூப் லைட் வெளிச்சத்தில் அவரெதிரே மிக அருகில் அவன் நெடுநெடுவென நின்றிருந்தான்.
கத்த நினைத்தும் குரலெழவில்லை. அருகில் மனைவியும், மகளும் படுத்துக் கிடந்ததைப் பதைபதைப்போடு பார்த்தார். தன் போர்வையை மனைவி மீது தூக்கிப்போட்டார். அது மகள் மீது விழுந்தது.
அவன் அப்பக்கம் திரும்பவேயில்லை. பார்வை அவர் மீது மட்டும் நிலைக்குத்தி நின்றிருந்தது. அவர் கட்டிலிலிருந்து எழுந்த போது அவன் இன்னும் கூர்மையானான். அவர் தப்பிப்பதற்கோ  கத்துவதற்கோ எழவில்லையென அவன் நம்பினான். மனைவியையும், மகளையும் இழப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லையென அவன் மனம் உணர்த்தியது. ஆனாலும் அவன் உடல் எச்சரிக்கையாயிருந்தது.
அவர் படுக்கையறை கதவின் தாழ்ப்பாளை விலக்கி மெதுவாய் ஹாலுக்கு வந்தார். அவனும் அவரையே பின் தொடர்ந்தான். கவனமாக ஹாலில் எரிந்த ட்யூப் லைட் சுவிட்சை அவரே அணைத்தார். இப்போது ஹால் முற்றிலும் இருண்டிருந்தது. நிறைய சாமிப் படங்கள் சுவற்றில் தொங்கின. அவர் எதற்காக தன்னை ஹாலுக்கு அழைத்து வந்தார் என்பதை ராமன் நிதானித்தான். உள்ளே மனைவியின் இருமல் சத்தம்  எழுந்தடங்கியது. வீட்டின் பக்கவாட்டிலிருந்து வெளிச்சம் ஹாலுக்கு நுழைவதை இப்போதுதான் கவனித்தான். ஆனால் அதனால் என்ன?
ரகோத்மன் தலை உயர்த்தி அவனை முழுசாய் பார்த்தார். அவன் உயரமாயிருந்தான். பார்வை ‘தாமதிக்காதே’ என அவரை எச்சரித்தது.
‘எதுவும் செஞ்சிடாத, என்ன இருக்கோ கொடுத்திர்றேன்’ என மௌனத்தால் அவனுக்கு சொற்களைக் கடத்தினார்.
‘அது தெரியும் நீ வேறென்ன செஞ்சிடுவே, சீக்கிரம்’  என அவன் பார்வையால் அவரை நெருக்கினான்.
குரவலையைத் தொட்டுப்பார்த்துக் கொண்டார். மீண்டும் படுக்கை அறைக் கதவைத் திறந்தபோது, அது சடாரென சாத்தப்படலாம்  என எதிர்பார்த்து  காத்திருந்தான். அப்படி எதுவும் நடக்காமல் அவர் பீரோவை திறக்கும் சப்தம் கேட்டது. ராமன் மெல்ல நகர்ந்து அறை வாசலில்  ஒரு காலும், உள்ளே ஒரு காலும் வைத்து நின்றுகொண்டான்.
இருட்டில் அவர் துழாவும் சத்தத்தில் எத்தனை பவுன் தேறும் என கணக்கு போட ஆரம்பித்தான். கவனம் சிதறுவதை ஒரு நொடியில் உணர்ந்து திரும்பி   பீரோவுக்குள் பார்வையை செலுத்த முயன்ற போது ரகோத்மன் கையில் நகைகளோடும், ரூபாய் நோட்டுக் கட்டோடும் இவனை சமீபித்தார்.
இருவருமே மீண்டும் ஹாலுக்கு வந்தபோது ரகோத்மன் படுக்கை அறைக்கதவை வெளித்தாழ்ப்பாளிட்டார்.  
அவனை மிக அருகில் சமீபித்தார். அவனிடமிருந்தொரு வித்தியாசமான வாசம் வந்தது. தன் இரு கைகளிலிருப்பதை அவன் நீட்டிய கைகளுக்குள் போட்டார். அதில் இழப்பின் வலியிருந்தது. சுமூகமான பறிமாறல் அது. அடுத்த நொடி அவன் புறப்பட யத்தனித்தான். இடையிடையே பின்பக்க வாசல் பக்கமும், வீட்டின் கிழக்கு மேற்காகவும் பார்வையை சுழட்டினான். ஏதோ ஒரு சமிக்ஞை இருந்தது. அவரால் அதற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் நான்கைந்து பேர் வெளியில் நிற்கிறார்கள் என யூகிக்க முடிந்தது.
அவரைத் தாண்டி மெயின் வாசலுக்கு போகும்போது அவர் தோள்பட்டையில் லேசாக இடித்தான். இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று அவனுக்கு வழிவிட்டார். திரும்பிப் பார்த்த போது அவரும் அவன் பக்கமே திரும்பி நின்றார். அவர் கண்கள் அலைவுறுவதைக் கவனித்து இன்னும் உஷாரானான். அவர்மீது பதிர்ந்த பார்வையை அகற்றாமல் உள் தாழ்ப்பாளைத் திறந்தான். அவன் உயரத்திற்கு வாசக்கால் இருந்தது. அவன் வாசற்படியேறும்போது பெரும் ஆவேசத்துடன் அவன் லுங்கியைப் பிடித்திழுத்து “அய்யோ  திருடன், திருடன்”  என பெருங்குரலெடுத்து கத்தினார், ரகோத்மன். எதிர்பார்த்திருந்தது போல் அவன் இரட்டைக்கதவில் ஒன்றை மேலும் விலக்கி சடாரென சாத்தினான். அவர் கட்டைவிரல் கதவிடுக்கில் மாட்டி நசுங்கி வலி தாளாமல் அவர் கீழே விழுவதை அருகிலிருந்து பார்த்து விலகினான்.
காலால் எத்தி அவரை உள்ளே தள்ளி வெளிப்புறம் பூட்டிவிட்டு இருட்டில் நடந்தான். பக்கவாட்டிலிருந்து வந்திணைந்த முனுசாமி அவனுக்கிணையாய் சேர்ந்து கொண்டான். விளக்குகள் அவ்வீட்டிற்குள் அங்கங்கே எரிவதை, உள்ளேயிருந்து பெரும் குரலெழும்புவதை, அவர்கள் இருவரும் இருட்டினூடே பார்த்தும் கேட்டும் எட்டி நடைப் போட்டார்கள். அருகிலிருந்த கருப்பந்தோட்டம் காத்திருந்து அவர்களை உள்ளிழுத்துக் கொண்டது. கதவுக்கருகில் திட்டுதிட்டாய் உறைந்திருந்த கரும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் இன்ஸ்பெக்டர் பலுல்லா நேராய் சமையலறைக்குப் போனார். சாப்பிட்டும் சாப்பிடாமலும், தட்டிலேயே கை கழுவியதுமாய் நான்குத் தட்டுகள் அவர் கண்களில் பட்டன. திரும்பிய போது அவர் மனைவி ‘சி.எம்.சி.க்கு கூட்டிட்டு போயிருங்க’ என யாரிடமோ கதறுவது கேட்டது.
கையில் நீண்ட ஒரு டார்ச்லைட்டுடன் இன்ஸ்பெக்டர் பலுல்லா வீட்டின் மேற்கே தனியாய் நடந்தார். வெளிச்சம் பரவிய இடத்தை வைத்து அவர் நடக்கும் தூரத்தை கூட வந்த போலீஸ்கார்கள் கணித்தார்கள்.

மகள் பிரமைப்பிடித்து கட்டிலில் சாய்ந்திருந்தது திறந்துகிடந்த  கதவின்வழியேத் தெரிந்தது. நிறையப்பேர் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தனர்.
‘மனுஷன் கரெக்டா கண்டுபிடிச்சுடுவான்’ என ஒரு போலீஸ்காரன் அவனுக்கே கேட்காதவாறு முணுமுணுத்ததை சக போலீஸ்காரர்கள் ஆமோதித்தார்கள். இரண்டுபேர் ஒவ்வொரு அறையாய் போய்வந்தார்கள். யாராவது எங்காவது பதுங்கியிருக்கக்கூடும் என்ற ஜாக்கிரதை உணர்வு அவர்களுக்குள் இருந்ததை அவர்களின் மெதுவான நடை உணர்த்தியது.
மனைவி, வீட்டிற்கு வெளிக்கும், உள்ளுக்கும் நடந்து யார்யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். நாற்பது அம்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோருமே இன்ஸ்பெக்டரின் திரும்புதலுக்காக காத்துநின்றார்கள். அவர் கருப்பந்தோட்ட வரப்பில் பாதை வரை போய், டார்ச் லைட் ஒளியை சுழலவிட்டு கவனித்துத் திரும்பி தன்னை பின் தொடர்ந்த நம்பிக்கைக்குரிய ஏட்டு தாண்டவராயனிடம்
 “கொறவாஸ் தான்” என்றார்
“எத்தனை பேர் சார்?”
“நாலு”
அந்த வார்த்தைக்குள் பெருமிதமும், பல வருட அனுபவமும் அடங்கியிருந்தது. தாண்டவராயனை மட்டும் அருகிலழைத்து, தன் கையிலிருந்த டார்ச் ஒலியை அருகருகே நகர்த்தி காண்பித்தார். கும்பல் கும்பலாய் நாலிடத்தில் ஈரமலம் தெரிந்தது. தாண்டவராயனுக்கு அவர் கணக்கின் துல்லியம் மீண்டும் ஒருமுறை புரிந்தது. அவர்களை நோக்கி முன்னேற முயன்ற நாலைந்து தெரு ஆட்களை ஒரு போலீஸ்காரன் கெட்டவார்த்தைச் சொல்லித் திட்டினான். தொடர்ந்த அவன் எச்சரிக்கையில் கருப்பந்தோட்டத்திற்குள் அவர்கள் ஒளிந்திருந்து  தாக்கக்கூடும் என்ற தொனியிருந்தது.  
முற்றிலும் நிலைகுலைந்திருந்த அவ்வீட்டு பெண்ணிடம் எங்கிருந்து ஆரம்பிப்பதெனத் தெரியாமல் “சாருக்கு இப்ப எப்படிம்மா இருக்கு” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“வண்டி கண்ணமங்கலத்தை தாண்டியிருக்கும் சார்” என பதட்டத்தோடு சொல்லி அடுத்த கேள்வியை எதிர்கொள்ள தயாரானாள் அவள்.
“நீங்க அவன்ல யாரையாவது பாத்தீங்களாம்மா?”
இப்போது அவள் தன் வளர்ந்த மகளை தன்னோடு சேர்த்தணைத்திருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே,
“இல்ல”
“உங்களுக்கெப்பத் தெரியும்?”
“சார் கை நசுங்கி கத்தினப்போதான் அலறியடிச்சி நானும் எம்பொண்ணும் எழுந்தோம் சார். பீரோ திறந்திருந்தது. பெட்ரூம் கதவு வெளித்தாப்பா போட்டிருந்தது.”
“சாருக்கு கையில மட்டுந்தான் அடியா?”
“ஆமா சார், ஆனா மயங்கி விழுந்துட்டாரு.  ஓவரா ப்ளீட்  ஆயிடிச்சு.”
தாண்டவராயன் அவருக்கு மட்டுமே புரியும் எழுத்தில் இவை எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர்  பலுல்லா பதற்றமற்றிருந்தார்.  நிதானத்தோடு எல்லாவற்றையும் அணுகினார்.
“சரிம்மா தைர்யமா இருங்க, ரெண்டு, மூணு போலீஸ்காரங்கள விட்டுட்டு போறன்.” என்று தாண்டவராயனுடன் சற்றுத் தள்ளிநின்று பேச ஆரம்பித்தார்.
‘கொறராமன்’ என்ற பெயர் அடிக்கடி அவ்வுரையாடலின் வழியே கசிந்தது.
தாண்டவராயனின் தொடர் தலையாட்டல், அவனை எளிதில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை தூரத்திலிருந்து கவனித்த போலீஸ்காரர்களுக்குத் தந்தது.
கட்டு அவிழ்க்கப்பட்டும் ரணம் இன்னும் ஆறாமல் இருந்தது. வலி விரலுக்குள் உறைந்திருந்தது. ரகோத்மனின் பார்வை எப்போதும் இழுத்துத் தைக்கப்பட்ட அக்கட்டைவிரலிலேயே நிலைத்திருந்தது.
அப் பத்து நிமிட சுமூகத்தை குலைத்தது எது? இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ? பிடித்திழுத்து அவனை உள்ளேத் தள்ளிவிடலாமென மனம் யோசிக்கும் முன் உடல் முந்திக் கொண்டது.
அவன் தான் எத்தனை மேன்மையாய் நடந்து கொண்டான்!  பத்து பவுனும் கொஞ்ச பணமும் தன்னால் மீண்டும் சம்பாதிக்க முடியாததா? அவன் உருவமின்றி தன் மீதி வாழ்க்கை எவ்விதம் கழியும்? அவர்கள் நாலு பேர் என்பது நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்கமுடியவில்லை, வெளியே அத்தனை பேர் நின்றிருக்கும்போது எப்படி தனக்கு அத்துணிவு வந்தது.? அவர்கள் நாலு பேரும் திபு திபுவென உள்ளே ஓடிவந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அவன் ஒருவன்தான் என அவர் இப்போது நினைத்தார். அவனைப் போலவே எதற்காகவோ கூட மூன்று பேரை இவர்களும் கூட்டுசேர்க்கிறார்கள். நெருங்கி நின்று பார்க்கும் போது தெறித்த அவன் பார்வையில் எத்தனை எச்சரிக்கையிருந்தது. எப்படி அதை மீற நினைத்தேன்?
விசாரணை என்னென்னவோ தகவல்களை கொண்டுவந்து குவிக்கிறது. விசாரிப்புகள் காயப்பட்ட கைவிரலை மீண்டும் துளைக்கிறது. அவர் அவ்வப்போது கண்களைமூடி எதற்கோ  யாரிடமோ முறையிட்டார். அப்போதெல்லாம் வலதுகை இடது கை நசுங்கிய கட்டைவிரலின் மீது மிருதுவாய் தடவிக் கொண்டிருந்தது. கைகளுக்கிடையேயான பரிவு கவனித்தவர்களுக்குப் புரிந்தது.
முற்றிலும் ரணம் ஆறிவிட்டதாய் சொல்ல முடியாத ஒரு மாலையில் ரகோத்மன் கிழக்குக் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். தனியேப் போகுமளவிற்கு மன தைரியம் கூடிவரவில்லை துணைக்கு இன்னொரு நண்பனையும் சேர்ந்துக் கொண்டார்.
இன்ஸ்பெக்டர் அறை பளிச்சென்றிருந்தது. ஆனாலும் நாக்கை தொங்கப் போட்டு எச்சில் ஒழுகும் ஒரு நாயைப் போல அச்சம் அவ்வறை முழுக்க அங்கங்கே படுத்திருந்தது. ஆறினக் காயம் மீண்டும்  வலிப்பதுமாதிரியிருந்தது. எல்லாவற்றையும் மறைக்க முயன்றார். இன்ஸ்பெக்டரின் முகத்தில் பெருமிதமிருந்தது.  
“ஆளை  பிடிச்சிட்டோம் சார், ரெண்டு பேர்தான் நீங்க கொஞ்சம் நிதானப்பட்டிருந்தா இத தவிர்த்திருக்கலாம்” என அவர் கைவிரலை காட்டினார். “அவனுங்க ரொம்ப டேஞ்சரஸ் ஆட்கள். அசால்ட் ரொம்ப சாதரணம். சும்மாவே கட்டையால மனுஷங்க தலையில அடிச்சிட்டு போவாங்க.”
அவர் பேச்சை தொடரவிடாமல் அவர் ‘இப்ப நான் என்ன பண்ணனும் சார்’ என்றார். எதையும் தவிர்த்து தப்பிக்கும் எரிச்சலும், எச்சரிக்கையுமாக.
“ஒண்ணுமில்ல. பயப்படாதீங்க. எல்லாந்தான் முடிஞ்சிருச்சே. அப்புறம் ஏன் ஆத்ரப்படறீங்க பாக்கறீங்களா?”
“வேணாம் சார், அவனைப்பாத்து இனிமே என்னாகப் போவுது?”
“ச்சே, ச்சே அப்படி சொல்லாதீங்க, அவனுங்கதானான்னு நீங்கதான் கன்பார்ம் பண்ணனும். அவனுங்ககிட்ட எதுவும் பேச்சு கொடுக்க வேணாம்.”
தாண்டவராயன்தான் அவர்களிருவரையும் லாக்கப் ரூமூக்கு  கூட்டிப் போனார். அவ்வரையின் வெளியில் நின்றிருந்த ஒரு பெண் சட்டென இவர்களைக் கடந்து போனாள். அவர் எதிர்பார்த்தது மாதிரியே அவள் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.
இவரை எதிர் கொள்வது மாதிரி முனுசாமி நின்றிருந்தான். அவன் கையில் கேரிபேக் இருந்தது. இவர்களைப் பார்த்ததும் ஒரு மூலையில் அதை விட்டெறிந்தான். இன்னொருவன் சுவர் பக்கம் திரும்பிப் படுத்திருந்தான்.
தாண்டவராயன், “டே எந்திருச்சி வாடா நாயே, பெரிய மயிறுமாதிரி படுத்திருக்க” என்று கத்தினார். அவன் இதற்கெல்லாம் அஞ்சாதவன்மாதிரி மெல்ல எழுந்து லுங்கியை இறக்கிவிட்டு விட்டு கம்பிக் கதவருகே வந்து நின்றான். இவர் மட்டும் ஒரு அடி தள்ளிநின்றார். அவன் பார்க்கவேண்டும்  என்பதுபோல இழுத்து வைத்துத் தைக்கப்பட்ட இடது கை விரலை மேல் நோக்கித் தெரிய வைத்திருந்தார்.
அவன் அதைப் பார்த்து உடன் பார்வையை விலக்கிக் கொண்டான். அன்றிரவு காட்டில் அப்பன்றிக் குட்டிகளைப் பார்த்தபோதும் அதே போல்தான் அவன்  பார்வை விலகியது.
அவனை நேரடியாய் பார்ப்பதை அவர் தவித்தார். இருவருக்குமிடையே ஒரு கருந்திரையை அவர் மனம் வேண்டியது. அந்த ஹாலில் நின்று மிக அருகில் அவன் கண்களை ஏறெடுத்தவர்தான் அவர். ஆனால் இப்போது அவனைப் பார்ப்பதற்கு எதுவோ தடுத்தது. அவன் சஞ்சலமற்றிருந்தான். அவரை முழுவதுமாய் பார்த்தான். அவன் பார்வையில் எந்த பொய்யுமில்லை. எல்லாந்தான் முடிந்துவிட்டதே என்கிற பார்வை அது. அவர்தான் அவனை நேரடியாய் பார்க்கமுடியாமல் தத்தளித்தார். எதுவும் பேசாமல் ரகோத்மன் இன்ஸ்பெக்டர் ரூமூக்குள் நுழைந்தார். கூட வந்த நண்பனும் தாண்டவராயனும் வெளியிலேயே நின்று கொண்டார்கள்.
இன்ஸ்பெக்டர் உட்கார சொல்லி கைகாட்டினதை கவனிக்காதது மாதிரி “அன்னிக்கு நைட் வந்தது இவனுங்க ரெண்டு பேருமே இல்ல சார்”  என்றார். எதிலிருந்தோ விடுபட்ட வார்த்தை உடைந்திருந்தது.  



நன்றி 
உயிர் எழுத்து 
மார்ச் 2013

Tuesday, October 20, 2009

ஏழுமலை ஜமா



சில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.

ஏழுமலை ஜமா குறுபடத்தை காண

Wednesday, May 6, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே - நீ
பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ...
நித்யபிதா ஒருவருக்கே
நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் - இங்கே
பங்கமுற்ற பசுந்தொட்டியில்
படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.