Tuesday, July 28, 2020

வி.பி.குணசேகரன்இந்த லாக்டவுன்  காலம்  எனக்கு வாழ்வை அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்க்க கற்றுக்கொடுத்தது எனலாம். இந்த இருண்ட காலத்திலும் தன் லாபத்தைப் பெருக்கிக் கொள்ள என்னென்ன வழி இருக்கிறது என கம்ப்யூட்டரில் தேடிக்கொண்டிருக்கிற நிறுவனங்களையும்,  மனிதர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆக எல்லாக் காலத்திலேயும் சக மனித அக்கறை கூடுவதும், குறைவதுமாய்தான் எவராலும் புரிந்து கொள்ள முடியாத இந்த வாழ்க்கை மெல்லநகர்கிறது. இக்காலத்திலாவது மனிதர்கள் நிதானப்பட்டு, தன் கடந்த காலத்தையும், சக மனித அக்கறையற்ற தங்கள் விலகளையும் ஒரு புள்ளியில் குவிக்க வேண்டியிருக்கிறது.
இரு மாதங்களுக்கு முன், குக்கூ நடத்திய ஒரு இணைய வழிக் கூட்டத்தில் தோழர். குணசேகரனை என் நண்பர் தான்சானியாவில்  தற்போது வசிக்கும் கவின்கேர் பாலா  தன் உரையாடலை வி.பி.ஜியை நோக்கி இப்படி ஆரம்பிக்கிறார்.


“உங்களைப் பற்றி சொல்லுங்க தோழர்?
இந்த கணினியின் முன்னமர்ந்து பேசினால், அதை உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தங்கள் வீட்டு கணினியிலோ மொபைல் போனிலோ பார்த்தும் கேட்டும் விடமுடியும் என்பதையே நம்ப முடியாத, மலங்க, மலங்க முழித்துக் கொண்டு ஒரு பழங்குடி மனிதனாய் போலவே அவர் தன் சொற்களை இப்படிக் கூட்டுகிறார்.
தெரியாமல் ஒரு ஆதிக்க சாதியில் பிறந்து விட்ட நான், இத்தனை வருட மனித அனுபவத்திற்குப்பிறகும் கூட என் உடம்பில் இருபத்தைந்து சதவீதம் சாதிய ஆதிக்கம் ஒட்டிக்கொண்டிருப்பதாக  உணர்கிறேன். நான் சாவதற்குள் அதை என்  உடம்பிலிருந்து உதிரித்துவிட்டால் போதும், நிம்மதியாக செத்துப்போவேன்.
நான் 19.டி.எம். சாரோனின்  மேலறையிலிருந்து இந்த உரையாடலைத் மேலும் தொடரமுடியாமல் கம்ப்யூட்டரை அணைக்கிறேன். அதன்பின் ஏன் தொடர வேண்டும்?  ஒரு வார்த்தையோ, வரியோ போதாதா ஒரு மனிதனை முழுவதும் புரிந்து கொள்ள!
காலம் ஒரு ரயில்வண்டியின்  பெரும் சப்தத்தோடு பின்னோக்கி ஓடுவதை என்னால் உடலால் உணர முடிந்தது.
செங்கத்திற்குப் பக்கத்தில் வளையாம்பட்டு என்ற ஒரு காட்டோர கிராமம்.  அது நிலம் மெல்லத் தேய்ந்து வனத்திற்கு வழிவிடும் நிலப்பரப்பு அது.  அல்லது வனத்தின் பெரும் திமிரை  மனிதன் அது வரைதான் அடக்க முடிந்தது  எனவும் கொள்ளலாம்.
நாங்கள் நாற்பது, ஐம்பது பேர் அந்த வனத்திற்குள் ஒரு சிறு பயணம் மேற்கொண்டோம். என் தம்பி நா.முத்துக்குமாரில் ஆரம்பித்து, வைட் ஆங்கிள்ரவிசங்கரன், இங்கிலாந்திலிருந்து  வந்து இங்கு தன் வாழ்வை நிலைநிறுத்திக்கொண்ட கோவிந்தா, என்  சிறுகதை ஒன்றின் கதாநாயகன்  டொமினிக் என அந்த சிறு மனிதக்கூடல் பெரும் அர்த்தம் பொருந்திய ஒன்று.
அதிகாலை ஆறுமணிக்கு நாங்கள் அந்த வனத்தின் விளிம்பில் பேச்சற்று நின்றிருந்தோம். எப்போதுமே இயற்கையின் பேராற்றல் மனிதர்களை முதலில் மொளனமாக்குகிறது.  எனக்குமுன் நீ ஒன்றுமே இல்லடா, வாயை மூடு என அது தன் பெரும் மௌனத்தால்  மனிதர்களை எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது. பொருட்படுத்தாமை மனித இயல்புதானே!


நாங்கள் மெல்ல மெல்ல அக்காட்டுக்குள் நடக்க ஆரம்பிக்கிறோம். வரும் மனிதர்களை என் கண்களால் அவதானிக்கிறேன்.
எனக்கு முன்னால் ஒரு நாலுமுழ கதர்வேட்டியோடும்,  சற்றே கசங்கிப்போன கதர் சட்டையோடும் சராசரிக்கும் கொஞ்சம் உயரம் குறைவான ஒரு மனிதன் காடுகளுக்கு பழக்கப்பட்ட தன் கால்களோடு வேகமாக நடக்கிறார். அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாத என் மிடில் கிளாஸ் கால்கள் பின் தங்குகின்றன.
காட்டில் எங்களை வழிமறித்த ஒரு பெரும் ஆலமர பிரமாண்டத்திற்கு  கீழே எல்லோரும் தானாகவே உட்காருகிறோம்.  அப்போதும் மொளனம்தான்  எங்களுக்குள் வியாபித்திருந்தது. வனம் என்னை வேடிக்கைப் பார்க்காதே  உள்வாங்கு, திரவமாக்கி  என்னை மெல்லக்குடி,  மனித அகங்காரத்தை நீர்மூலமாக்கு  என தன் பெரும் அமைதியால்  எங்களை எச்சரித்துக் கொண்டேயிருந்தது. 
வனத்திற்கு வந்திருந்த ஒவ்வொரு ஆளுமையாக பேச ஆரம்பித்தார்கள். எல்லோருமே அனுபவங்களால் ததும்பியிருந்தார்கள். அனுபவத்திற்கு  எப்போதுமே வயதில்லை. அறுபது வயதிலும் தெருவைத்தாண்டாதவனும், முப்பது வயதிற்குள்  இந்தியாவை அதன் நீள அகலங்களில் கடந்தவர்களும் உண்டு. அன்று இருட்டும் வரை அம்மரத்தடியிலும், ஒரு நீர்வீழ்ச்சிக்கருகிலும்  உட்கார்ந்து மனித சாரம் குறித்தும், சமூக மேடுபள்ளங்கள் குறித்தும் உரையாடினோம்.
ஒரு பாறைமீது சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்து, என் பெயர் குணசேகரன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த அரைக்கை  கதர்சட்டைக்காரர் சன்னமானக்குரலில்  தன் பேச்சை ஆரம்பித்தார்.
அவர் சொற்களை ஒரு பித்துபிடித்தவன் போல நான் பின்தொடர்ந்தேன்  சத்தியமும்,  சுதந்திர வேட்கையும் நிரம்பிய சொற்கள் அவை. இந்தியாவில் இன்னும் மீந்திருக்கிற கம்யூனிஸ்ட்களில் இவர் ஒருவர் என நினைக்கத் தோன்றியது.

பொலிட்பீரோ, மத்தியக்குழு, மாநிலக்குழு என இயங்கி, அதிகாரவர்க்கத்திற்கு  எதிராக இயங்கும் கம்யூனிஸ்ட்கள் ஒருபுறம், அதே அதிகாரத்திற்குள் கரைந்து போனவர்களும் உண்டு.
தோழர். குணசேகரன் மாதிரி, எல்லாவற்றிலிருந்தும்  ஒதுங்கி தன் சொந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் எளிய வாழ்வாதாராத்திற்காக தங்களை முழுக்க ஒப்புக்கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள் அபூர்வத்திலும் அபூர்வம்.
அந்த அபூர்வத்தில் ஒருவராகத்தான் நான் தோழர். வி.பி.ஜி.யைப் பார்க்கிறேன்.
ஒரு மனிதனை மதிப்பிட அவன் பூர்வீகம், ஜாதி, குடும்பப்பிண்ணணி இவையெல்லாம் அளவுகோல்கள் அல்ல. குணசேகரனையும் அப்படி அளவிட அளவீடுகளைத் தேடும் நவீனவாதிகளுக்குத் தெரிய வேண்டியது, அவர் ஈரோடு மாவட்டம் பாவானி தாலுக்காவில், இருமுறை பேரூராட்சித் தலைவராகவும், ஒருமுறை ஒன்றியத் தலைவரையும் இருந்த  ஒரு அப்பாவின் மகன், செல்வ செழிப்பு மிகுந்த நிலபுலன்கள் அவருக்கு சொந்தமானதாய் இருந்தது.
அது குணசேகரனை அநத் காலத்தில் பி.இ.படிக்க அனுப்பியது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த குணசேகரன், சக்தி சுகர்ஸ்சில் ஒரு பெரும் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்.
கரும்பை பிழிந்து சாறுபிழியும்  இயந்திரங்களை பார்க்கும் போதெல்லாம், இதைவிட அதிகமாக இப்பகுதியில்  பழங்குடி மக்களின் உழைப்பு பிழியப்படுவதையும், அவர்களின் ரத்தம் உறிஞ்சப்படுவதையும் அவர் நிதர்சனமாக கண்ணுருகிறார்.
அந்த வேலையை உதறித்தள்ளி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக  தன்னை இணைத்துக்கொள்கிறார். சொந்த பூமியின் மூன்றுபக்கமும்  வியாபித்திருக்கும்  மலைத் தொடர்களும், அடர்வனங்களும், அதனுள் சுதந்திரமாக அலைத்துத் திரியும் விலங்குகளும், பறவைகளும் அவரை ஆகர்ஷ்க்கின்றன.
மலைவாழ் மக்களே  ஒவ்வொரு வனத்தின் ஆதாரஸ்ருதி. அவர்களற்ற வனம் வெறும் பாலைவனம்.
அவர்களின் வாழ்வை அவர்களுடனிருந்து வாழ்ந்துப்பார்க்கிறார். அவர்களின் பாரம்பரிய உணவை ருசித்துப் பருகுகிறார். சாணம் மெழுகிய அந்த மலைக்கிராம வாசல்களில் படுத்துறங்குகிறார். பழங்குடி  இனக்குழுக்களின் பூர்வீக வரலாறு அவரை ஆச்சர்யப்படுத்துகிறது. அவர்கள் ஜாதியற்றவர்களாக இருக்கிறார்கள். Community  என்பது அவர்களைப் பொறுத்தவரை ஜாதியில்லை, இனக்குழுக்களின் அடையாளம். இந்துக்கள் என இந்திய ஆவணங்களில் அவர்கள் பதியப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள்.
எந்தப்  பழங்குடி வீட்டிலும், தேவைக்கும் அதிகமாக ஒரு மூட்டைத் தானியத்தை கூட தான் பாத்தித்ததில்லையென தோழர். வி.பி.ஜி. ஒரு நேர்கர்ணலில் சொல்கிறார்.
அதிகாரத்திற்கு ஆதரவாக நாளுக்கு நாள் மாற்றப்படும் வனச்சட்டங்கள் அவர்களின் வாழ்வையும், வாழவாதாரத்தையும் சேர்த்து சிதைக்கிறது.
சுள்ளிப்பொறுக்க, தேனெடுக்க, நெல்லிக்காய் பறிக்கவென அவர்களின் சொந்த வனத்தில் அவர்கள் சுற்றித்திரியவும், பல கட்டுப்பாடுகளை அரசு தொடர்ந்து அவர்கள் மீது திணிக்கிறது.  புலிகளின் காப்பகத்திற்கு  அரசு செலவிடும் பணத்தில் நூறில் ஒரு பங்குகூட மனிதர்களுக்கு இல்லை.  வன காப்பாளர்களின்  கடைநிலை ஊழியனிலிருந்து  IFS  படித்த வன அதிகாரிகள் வரை அம்மலை மக்களை எப்போதும் வேட்டைக்கான விலங்குகளைப் போலத்தான் நடத்துகிறார்கள்.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அழைத்துக் செல்லப்பட்ட பல பழங்குடி மக்களின்  பிணங்கள் கூட அவர்களுக்கு இன்னும் காண்பிக்கப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை யாரிடமும் சொல்லமுடியாத ஊமச்சிகளாகி விட்டார்கள்.
தோழர். குணசேரகன் மெல்ல அவர்களின் வனவாழ்விற்குள் ஊடுருவுகிறார். காற்றைப் போலவும், ஒலியைப்போலவும்.  அவர் கைகளில் அவர்களுக்கு தரவென்று எதுவுமில்லை. ஆனால் கற்ற மார்க்சியம், பெற்ற அனுபவம் இரண்டும் போதும், மக்கள் ஊழியர்களுக்கு.
எங்கள் முதல் சந்திப்பு முடிந்து பத்தாண்டுகளுக்கு பின் மருத்துவர் ஜீவாவோடு ஒரு முறை பத்தாயத்திற்கு வந்தார். அன்று பழங்குடி மாணவர்களின்  கல்லிக் குறித்தும், நாமே நடந்த வேண்டிய அவர்களுக்கான பள்ளிக் கூடங்கள் குறித்தும் ஒரு முழுநாள் விவாதித்தோம்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன், தன் விதை சந்திப்பிற்கு ஓருமுறை தன் மாணவர்களை பத்தாயத்திற்கு  அழைத்தது. அன்று அவர் இரண்டு மணி நேரம் அவர்களுக்கு மார்க்சிய வகுப்பெடுத்தார்  முழுமையாக  நான் உள்வாங்கின பேச்சு அது.
உலகின்  எல்லா தத்துவங்களும், மதங்களும் மனித துயரத்தை சொல்கிறது. இறுதியில் அது தன்னை பின்பற்றினால் எல்லை துயரங்களும் தீர்த்துவிடும் என தீர்வு சொல்கிறது.
தேவாட்டுக்குட்டிகளை சுமதிக்கும் ஒரு மேய்ப்பனிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு,  சும்மா இரு என்று மனித கூடுகையை போராட்டத்தை அது இறைக்கிறது.    
மார்க்சியம் மட்டும்தான் கடைநிலை மனிதனைப்பற்றியும், உழைத்து உற்பத்தியில் ஈடுபடும்  மனிதனைப்பற்றியும்  பேசுகிறது. அதனாலேயே அத்தத்துவதற்கு நான் என்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்தேன்  என அவர் சொல்லும் போது அவர் கண்களை கவனித்தேன்.
அது போராளி  மின்னும் கண்கள். எதிர்க்காலத்தின் மீது பெரும் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் கண்கள்.
அப்பழுக்கற்ற சிந்தனைகொண்ட ஒரு மனதுக்கு  சொந்தக்காரனிடமிருந்து  தான் அப்படியொரு கண்கள் மிளிரும்.
நான் வி.பி.ஜி.யின்  எண்ணற்ற தோழர்களில் ஒருவரும், தன்னையும் அவரைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் முழு நேர ஊழியனாக  ஆக்கிக்கொண்ட தோழர் பரமேஸ்வரன் கண்களின் வழியே அவரைப் பார்க்கிறேன்.
தோழர் பரமேஸ்வரன் என் வாசகர், தோழன். தோழர். வி.பி.ஜி.யோடு வாழ்நாளெல்லாம் பயணிக்கவே இந்திய கம்யூனிட் கட்சியின் முழுநேர  ஊழியரானவர்.  அவர் சமூக  ரீதியாக அருந்தியர் இனம் என சுட்டிக் காட்டப்பட்டவர்.  அந்த ஆற்றாமை அகல மார்க்சியமே ஒரே தத்துவம், வழியென உணர்ந்து, அதற்காக தன்னை அதன் கள செயல்பாடுகளில்  வழி முழுக்க அர்பணித்துக்கொண்டவர்.
ஈரோடுமாவட்டம் பவானி  தாலுக்காவிலுள்ள பரமேஸ்வரனின்  சொந்த ஊரில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு  தோழர் வி.பி.ஜி. உட்பட பல மாவட்டத் தலைவர்களை அவர் அழைக்கிறார். உள்ளூர அவர்களை  சோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வண்டல் மண்போல பரமேஸ்வரனின் மனதின்  ஆழத்திலிருந்தது.
கூட்டம் முடிந்து இரவு பத்து மணிக்கு உணவு எங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
எங்க வீட்டில் தான் தோழர்.இது தோழர் பரமேஸ்வன்
தோழர் வி.பி.ஜி. வேகமாக முன் நடக்கிறார். மற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவர்களும்  அவரின் அடியொற்றி நடக்கிறார்கள்.  அருந்தியர் காலனி ஊருக்கு மேற்கால் ஒரு அருந்ததிய வெகு தூரத்திலிருக்கிறது அப்படித்தானே வகுக்கப்படுகிறது?!
தோழர் வீட்டில் சாப்பிட பலரின் மார்க்சிய  மனங்களுக்கு கூட ஒப்பவில்லை.  மௌனம் காக்கிறார்கள்.  இப்போது உச்சரிக்கப்படும் ஒரு சொல் அவர்களின் உள் மனிதனைசுலபமாகக்  காட்டிக்கொடுத்துவிடும்.
வாசலில் விதிக்கப்பட்டுள்ள பாயில் சப்பனாங்கோல் போட்டு முதல் ஆளாக வி.பி.ஜி உட்காருகிறார்.
சைவ சாப்பாடு பரிமாறப்படுகிறது. மேலும் கீழும் மனிதப்பார்வைகள் உருளுகிறது.
தோழர். வி.பி.ஜி பரமேஸ்வரனைப் பார்த்து கேட்கிறார். என்னாத் தோழர் சைவம் சமைச்சிருக்கீங்க? மாட்டுக்கறி இல்லையா?
இதைத்தான் ஒரு அசல் மாக்சிய மனம் என்று தோழர்  பரமேஸ்வரன் மட்டுமல்ல நாமும் அங்கீகரிக்கிறோம்.
பரமேஸ்வரினின்  திருமணத்தை வி.பி.ஜியே தலமையேற்று  நடத்தி வைக்கிறார். களப் பணிகளில்  அவர்களுக்குள்  பலமுறை கருத்து மோதல்கள் முற்றி,  நாற்காலியை எடுத்து வி.பி.ஜி.யை அடிக்கத் துனிந்திருக்கிறார் .  பரமேஸ்வரன்.
அப்போதெல்லாம் வி.பி.ஜி. புன்னகைத்துக் கொண்டே சொல்வார்.
“அடிங்க தோழர், உங்களை கோபப்படுத்துணும்னுதான் அப்படிப் பேசினேன்.  கோபப்படாத,  ரௌத்தரம்  பழகாத மனிதன் எதற்கு தோழர். வாழனும்
சொல்லிவிட்டு பரமேஸ்வரன் தன் ஆசானின் மன இயல்பை சொல்லி சொல்லி அழுகிறார்.
ஜெயமோகனின் ‘அறம்தொகுப்பை ‘வம்சிதான் வெளியிட்டது.  அதன் வெளியீட்டுவிழா ஈரோட்டில் ஜெயமோகனின் நண்பர்களால்  ஒருங்கிணைக்கப்பட்டது.

அத்தொகுப்பை தோழர். வி.பி.ஜி. வெளியிட மருத்துவர் ஜீவானந்தம் பெற்றுக்கொண்டார். இருவருமே ‘அறம்வரிசை கதைமாந்தர்கள்  என ஜெயமோகன் தன் உரையைத் துவக்கினார். நேரெதிர்  கொள்கைகளில் பயணித்த போதும். கோவை நானியும் வி.பி.ஜி.யும் ஜெயமோகனின் ஆசிரியர்களில் ஒருவர்.  
நம்மாழ்வாரின் “தாய்மண்ணே வணக்கம் என்ற காத்திரமானத் தொகுப்பை அவர் தோழர் வி.பி.ஜி.குணசேகரனுக்குத்தான் சமர்பித்திருந்தார்.
இவைகள் அவருக்கான தூரத்து சமூக அங்கீகாரங்கள். இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?  என்பது கூட யாருக்குத் தெரியாது.
பேராசான் ஜீவா இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டபோது, அப்போது அவர் ஒருமேடையில்  பேசிகொண்டிருந்திருக்க வேண்டுமென சுந்தரராமசாமி  தன் காற்றில் கலந்த பேரோசைத் தொகுப்பில் எழுதியிருப்பது போல, தோழர் வி.பி.ஜியும் கூட ஏதோ ஒரு மலைகிராமத்து நடையில் ஒரு பழங்குடி மனிதனுடனான உரையாடலில், மலையுச்சி பழங்குடி வீட்டு சாணம் மெழுகிய வாசலில்தான்  அவரும் தன்னை இறுதியில் கரைத்துவிடக்கூடும்.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற மனித துயரம் மிக்க தழும்புகள் நிரம்பிய  நாட்கள் அடுத்த தலைமுறைவரை  அந்த வன மக்களின்  மனதை விட்டு ஆறாத ரணம்.
போலீசின் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் , இப்போது இருபது வயதுக் குழந்தைகள் அந்த மனநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அந்த தாய்க்கும், தான் விரும்பாமல் தன் மீது திணிக்கப்பட்ட இந்தக் குழந்தையின்  வளர்ச்சியும், அதன் இருப்பும் எத்தனை துயரம்மிக்கது?  வெளியில் சொல்லிவிட முடியாத ரணம். எப்போதும் ரத்தமும, சீழும் கசிவது.
வி.பி.ஜி அவர்களை தன் செயல்களால், சொற்களால் ஆற்றுப்படுத்துகிறார். அக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறார். தாமரைத்கரையில்  தோழர்களோடு சேர்ந்து தான் உருவாக்கியிருக்கும் சமூக, அறிவியல் பள்ளியில் அவர்களுக்கு கற்பிக்கிறார். மலை வாழ்வை அவர்களிடமிருந்து அவர் ஒரு பள்ளி மாணவனைப் போல தான் கற்றுக் கொள்கிறார்.
ஒரே ஒரு முறை அவரை வீரப்பன் சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தால்  சந்திக்கிறார். வி.பி.ஜி.யுடன் நீண்ட அவ்வுரையாடல் பெரும் அர்த்தம் வாய்ந்தது.  என இப்போது நினைவு கூறுகிறார். வீரப்பனிடம்  குற்றமற்ற வன வாழ்வை தேர்ந்தெடுக்கும்படி அவர் கோரிக்கை வைக்கிறார்.
பர்கூர், அந்தியூர், மலைக் கிராமங்கள் அவர் கால்களுக்கு அத்துபடி, பழங்குடி  ஒவ்வொரு  குழந்தைகளின் பெயர்கள் அவருக்குத் தெரியும். அவர்களை பெயர் சொல்லியே அழைக்கிறார். அவரின் வருகையை அறியும் கிராமங்கள் தன் மேய்ப்பானை கண்டுவிட்ட திருப்தியோடு தங்கள் பாதுகாப்பற்ற வாழ்வை அவர் கைகளில்  ஒப்படைக்கிறார்கள்.
ஒவ்வொரு மலை கிராமத்தையும் அவர் சக தோழர்களின் டூ.வீலரிலோ, அல்லது நடந்தோ அடைகிறார். ஒரு பழங்குடி மனிதனின் அத்தனை அனுபவ அறிவும் அவருக்கும் வாய்த்திருக்கிறது. இது ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. நம் வாழ்வின் நெடுந்தூரம்  அதற்காக பயணப்பட வேண்டியுள்ளது.
இன்னும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அவர் மலைகிராம மக்களோடு நடத்தும் உரையாடல்கள், மகத்தானவை ஒரு மலை மனிதனுக்கும், ஒரு நாட்டுப்புறத்தானுக்கும் இடையே வெகுதூர இடைவெளியிருக்கிறது.  அது இருக்கட்டும் என்றே தோழர்.  வி.பி.ஜி. நினைக்கிறார். இந்த அழுக்குமண்டிய வாழ்வையும், காற்றையும் அவர்கள் சுவாசிக்காமல் இருக்கட்டுமே!
அரசாங்கத்தைப் பொறுத்தவ்ரை அவர்கள் வேட்டைநாய்கள் அவர்கள் எப்போது நினைத்தாலும் அவர்களை இடம்பெயர துரத்துவார்கள். அவர்கள் பெண்களை பாலியல் வன்புணர  போலீசை அனுப்புவார்கள்.  அவர்களின் எளிமையினும் எளிய வாழ்வை சூறையாடுவார்கள்.
அவர்களின் தானிய மூட்டைகளுக்கு  தீ வைப்பார்கள்.
ஆனாலும் அவர்கள் இந்த துயரம் மிக்க வாழ்வேவே பழக்கியிருக்கிறார்கள். அதிலேயே இருந்துவிடவே விரும்புகிறார்கள்.
 ‘போதாதுஎன்கிறது தோழர். வி.பி.ஜி.யின்  மார்க்சியக்குரல். அதற்கான நடைதான் இது. அதற்கான முன்னெடுப்புதான் இந்த அர்பனிப்பு. இந்த அர்பணிப்பு அந்த மனிதனோடு ஒருநாள் மலைகளில் நடக்க பழகிக்கொண்டால் கூட நம் வாழ்வு ஒரு வேளை அர்த்தப்படலாம்.
வீரப்பனோடு இரண்டறை வருடம் இருந்ததற்காக, இருபதாண்டுகள் சிறை தண்டனைஅனுபவித்துவிட்டு இருந்துவிட்டு இப்போது விடுதலையாகி, பழங்குடி மக்களின் வாழ்வாதரத்திற்காக முன்னிலும் உக்கிரமாக செயல்படும் தோழன் அன்புராஜ்தான்  எப்போதும் ஒரு அறிக்கேன் விளக்கை கையிலெடுத்துக் கொண்டு வி.பி.ஜி.க்கு முன் அம்லைகிராமங்களுக்கு  இப்போது வழிகாட்டுகிறான்.
அன்புராஜின் இரண்டாம் வாழ்வின் ஓரார ஸ்ருதியே அவர்தான். 
 இவர்கள் என் வாழவின் மேய்ப்பர்களாக கிடைத்தது என் வாழ்வின்பொக்கிஷங்களில் ஒன்று.