Thursday, November 29, 2012

ட்ரம்ஸ் சிவமணி
ட்ரம்ஸ் சிவமணி.

தீபத்தன்று வழக்கம் போல் காலையிலிருந்தே வீட்டிற்கு நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. ஆறு மணிக்கு தீபம் ஏற்றி முடிந்தப்பிறகு எட்டு மணிக்கு வீட்டு மொட்டை மாடியில் தரையிலமர்ந்து இலை போட்டு பரிமாற ஆரம்பித்தார்கள் ஷைலஜாவும் குழந்தைகளும்.

எனக்கும் ஒரு இலை போடுங்க என்று பெரும் குரலெடுத்து உள்ளே 
நுழைந்தவர்

ட்ரம்ஸ் சிவமணி.

எல்லோரும் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தால் உறைந்தோம்.

சாப்பிட்டு முடிந்து, இத்தனை நல்ல சாப்பாடு கொடுத்த உங்களுக்கு ஒரு கலைஞனா என்னால முடிஞ்சது இவ்வளவுதான் என சொல்ற தான் மூன்று நாட்களுக்கு முன் டென்மார்க்கில் வாங்கின ஒரு புது கருவியால் (முழுக்க மரத்தாலானது) வாசிக்க ஆரம்பித்தார்.

கண்களை மூடி ஒரு தவம் மாதிரி அதை நிகழ்த்தினார்.

என்னை என்னாலயே நம்ப முடியாத அந்நிமிட பகிர்வு உங்களுக்கு...


Wednesday, November 28, 2012

கோழிக்கோட்டிற்கு...என் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைசிறுகதை தொகுப்பை ஸ்டேன்லி அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்து இன்னொரு நண்பர் மொகபூப் அதை சரிபார்த்து மலையாள நவீன இலக்கியத்தில் புதிய பதிப்புகளை கொண்டுவரும் ராஸ்பெரி பப்ளிஷர்ஸ் (கோழிக்கோடு) இத்தொகுப்பை மிக அழகாக பதிப்பித்திருக்கிறார்கள்.

வரும் சனிக்கிழமை (01.12.2012) மாலை கோழிக்கோட்டில் அழகாபுரி  ஹோட்டல் அரங்கில் வெளியீட்டு விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். என் கதைகளின் மலையாளத் தொகுப்பை பிரபல எழுத்தாளர் இந்துமேனன் (லெஸ்பியன் பசு நாவலாசிரியர்)  வெளியிட, டாக்டர். வேணுகோபாலபணிக்கர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நவீன மொழிபெயர்ப்புகளை பற்றிய கருத்தரங்கையும் துவக்கி வைக்கிறார்.

டாக்டர். டி.எம். ரகுராம் (என் எல்லா நாளும் கார்த்திகைமலையாள மொழிபெயர்ப்பாளர்) இத்தொகுப்பின் மொழி பெயர்ப்பாளர் ஸ்டேன்லி இருவரும் புத்தகம் குறித்து பேசுகிறார்கள்.

நான் ஏற்புரை வழங்குகிறேன்.

ஷைலஜா மலையாள - தமிழ் மொழிபெயர்ப்புகள் குறித்து ஒரு பேப்பர் படிக்கிறார்.

கோழிக்கோட்டிற்கு பத்து பதினைந்து டிக்கெட் பதிவு செய்துள்ளோம் குளிர்கால ரயில் பயணமும், போகப் போகும் காரணமும் இப்போதே பரவசபடுத்துகிறது. 
அதற்கான அழைப்பிதழ்
  

எல்லா நாளும் கார்த்திகைஎன் 'எல்லா நாளும் கார்த்திகை' குறித்து கீழ்க்கண்ட வலைதளத்தில் ஒரு பதிவு வந்துள்ளதாக நண்பர் அய்யனார் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

நன்றி கோபி 

Wednesday, November 21, 2012

கதை சொன்னேன்

சென்ற மாதத்தின் இறுதியில் நான் படித்த டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், ALC-யின் கல்வி வாரியத்தின் சார்பாக நடந்த பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பை வெளியீட்டு விழாவிற்கு நான் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். பெருமழை கொட்டிக் கொண்டிருந்த அன்றைய பகலில் ஒரு உற்சாக மனநிலை வாய்த்திருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினேன். உரையின் இறுதியில் ஜெயமோகனின் யானை டாக்டர் கதை சொன்னேன். கூட்டம் மௌனத்தில் உறைந்திருந்தது. விடைபெற்று வீடு திரும்பிய அந்நிமிடத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசியிலும், நேரிலுமாக நண்பர்கள் என் உரையை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். பலர் பரவசப்பட்டார்கள். இது போல் ஒரு உரையை இதுவரை கேட்டதில்லை என்றெல்லாம் அவ்வுரையாடல்கள் சுவாரஸ்யப்பட்டது. நான் முற்றிலும் ஒரு  பெருமிதமான மனநிலைக்குப் போயிருந்தேன்.

குறைந்தது முப்பது பேராவது என்னிடம் இது குறித்துப் பேசி என் உற்சாகத்தை நீட்டித்தார்கள். அது எங்காவது முற்று பெற  வேண்டுமென நினைத்தேன். அதன் பொருட்டு நானும் என் நண்பன் ஜே.பி.யும் பேசினோம். அதன் நிறைவேறிய வடிவம்தான் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கதை சொல்வது எனும் நிகழ்வை நாங்கள் ஒருங்கிணைத்தது. முதல் நிகழ்வாக ரமணாஸ்ரமத்திற்கு எதிரேயுள்ள குவா-வாடீஸ் பல்சமய உரையாடல் மையத்தில், லேசாக கருக்க ஆரம்பித்த அந்த பின் அந்தியில் அவ்விடம்  குறைவான ஒளியில் வருபவர்களை உள்ளிழுந்து தன்னுள் புதைத்து கொண்டது. கொடிகளும், மரங்களும் அப்புறப்படுத்தப்படாமல் வீழ்ந்திருந்த ஒரு பெருமர திண்மையும் சுட்ட செங்கற்களால் ஒரு குடிலும் ஏதோ வேறொரு உலகத்தை எல்லோர் முன்பும் கொண்டு வந்தன.

வழக்கத்திற்கு மாறாக என் கைகள் நடுங்குவதை சாமர்த்தியமாக மறைத்தேன். சு.ரா. சொல்வது மாதிரி போதுமான அளவிற்கு வாசகர்கள் இருந்தார்கள். அதற்கு மேலும் பெருகினால் அது கூட்டம். என் ஆசிரியர் ஆல்பர்ட் என்னைப் பற்றியொரு அறிமுகவுரையாற்றினார். நான் கூச்சத்தால் நெளிந்தேன். அன்பினால் பெருகும் மிகை இது. ஒரு சின்ன அறிமுகவுரையுடன் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
வண்ணநிலவனின், ‘மனைவிஅக்கதையின் பின்ணனி, அதன் ஆசிரியர், என்றொரு அறிமுகத்துடன் என்.எஸ் மாதவனின் இரைமுடிந்து எதிரில் இருந்த பார்வையாளர்களை கவனித்தேன். உறைநிலையிருந்தார்கள். மௌனம் அங்கிருந்த இண்டு இடுக்கெங்கும் பரவியிருந்தது. தி. ஜானகிராமனின் பாயசத்தைதொடந்து ஜெயமோகனின் ஊமைச் செந்நாய்நெடுநாளாய் ஊமைச்செந்நாய் என்னுள் புகுந்து பிராண்டிக் கொண்டிருந்தது. அதை அன்று உரத்து சொல்லி ரத்தவிளாறுகளோடு வெளியேற்றினேன். மனமடங்க மறுத்தது. இன்னும் இன்னும் என நானுமே என்னிடம் யாசித்தேன்.
தொடர்ந்து என் சத்ருகதையின் இறுதியில் பொட்டு இருளனின் கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்டு மழைச்சொட்ட மலைவெளியில் ஊரைவிட்டு வெளியேறுவான். திடீரெனத் திரும்பிப்பார்ப்பான். ஊர் ஈரத்தில் நனைந்திருந்ததுமுடித்தபோது நான் முற்றிலும் நனைந்திருந்தேன். வெகு நேரமானது என் சகமனிதர்களின் மூச்சுக்காற்று என் மேல் பட. முன் இருக்கையில் அமரந்து என் மகள் மானசி என் கதைகளை அருந்திக் கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தேன். இன்னும் கொஞ்சம்ப்பா...  என்ற அவள் பார்வையின் கொஞ்சலை நானும் கண்களாலேயே தவிர்த்தேன்.
கைக்குலுக்கல்களின் இளஞ்சூட்டோடு விடைபெற்றேன். அன்றிரவு வெகுநேரம் வரை தூங்காமல் கிடந்தேன். நான் வெளியேற்றிய செந்நாயும், கத்தியும், மனைவியும், பொட்டு இருளனும் மீண்டும் என்னை நோக்கியே திரும்பி வருகிறார்கள். அவர்களின் மீள் குடியேற்றம் என்னை அலைக்கழித்தது. எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பித்தாக வேண்டும் இன்று தூங்கி முடித்தும். நாளை அடுத்த கதை சொல்ல ஆயத்தமாகியும்.       

Tuesday, November 20, 2012

சூர்ப்பனகை ஒரு விமர்சனம்


மலையாளத்தில் கெ.ஆர். மீரா எழுதி தமிழில். கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பு சூர்ப்பனகை. தமிழில் வெளிவந்த போதே மிகுந்த வரவேற்பையும் எழுத்தாளர்களின் பாராட்டையும் பெற்ற அப்புத்தகத்தைப்பற்றி சமீபத்தில் U.S.A. வில் பணிபுரியும் நண்பர் அப்பாதுரை மூன்றாம் சுழி என்ற தன்னுடைய வலைத்தளத்தில் எழுதிய பதிவினை வாசிக்க

http://moonramsuzhi.blogspot.in/

Friday, November 16, 2012

ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு


ஜெயஸ்ரீயின் வீடு  என்று தலைப்பிட்டு இன்று ஜெயமோகன் (Jayamohan.in) அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்ததை வாசித்ததும், அதன் உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட்ட எனக்கும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியது.

ஜெயஸ்ரீயின் கணவர் உத்ரகுமாருக்கு அவருடைய குடும்ப பாகமாக 3 லட்ச ரூபாய் கிடைத்தபோது அதைவைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு50 அடியுள்ள மனையும் கிடைக்காத போது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.
நம் நிலத்தருகே 50 சென்ட் இடம் வாங்குவது ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவது  அது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன் மேல் கடகால் போடபட்ட போது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடகால் தோண்டி அக் கருங்கல் துண்டுகளோடு செம்மாண் கலந்து கரைத்துவிட்டு கடகாலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.

என்  நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினுபாஸ்கரின் தம்பி பிஜீ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான கனவு காண்பவனும்  கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.

அவ்வீட்டிற்கான ஒரு பிளானை தந்துவிட்டு வழக்கமான எல்லா கலைஞர்களையும் போல எங்கோயோ காணாமல்   போனான் பிஜீ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான், ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்  கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்.  கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனை தற்செயலாக சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும், தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது பத்து உடைக்கற்களை கொண்டு சீத்தாப்பளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடி, அவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்ககள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைக்கூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும் மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கற்றூண்கள் தூக்கி நிறுத்தப்பட்ட போது முற்றிலும் பரவச மனநிலையை அடைந்தோம்.

கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டை திறப்பதென்றும், எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ் செல்வன், கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.

எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின், எஸ்.கே.பி. கருணா, அ. முத்துகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர், வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி, என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.
புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டி, ஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோசத்தோடு கத்தரிக்கோலை கையில் எடுக்க, நாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்

காணிநிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும்”    என

தன் கம்பீரமான குரலில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடத்துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்துயரமும், கண்ணீரும், பெருமிமுமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக் கார தம்பிகள் வேலு, ஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புத கணங்கள் அவை.அவ்வீட்டின் மொட்டை மாடியில் பெரிய ஸ்கீரின் ஒன்றை வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிளுருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம் போட போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்துவைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை ஒரு ப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுபயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார். இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும், தமிழின் நவீன இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும்அன்று காலை கோணங்கியும், அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது. 

எல்லார் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறுப் போட்டோம். சுடுசோறும், ரத்த பொறியல், மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் கதம்பம் (போட்டி, நுரையீரல், ஈரல், கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்று தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பி  பார்த்தேன்.

ஒரு கனவு முற்றுப்பெற்றது போலவும், ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக் கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.

 திறப்புவிழா நிகழ்வுகள் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தன. அதன் இன்னொரு தொடர்ச்சியாக, அன்றுமாலை ஏழுமணிக்கு குவாவாடீஸ்சில் மிஷ்கின் தான் சமீபத்தில் மொழிபெயர்த்த ஜந்து கவிதைகளையும், தான் எழுதிய ஒரு கவிதையையும் வாசகர்கள்  முன் தன் குரலால் சமர்பித்தார்.சில விவாதங்களை தவிர்த்திருந்தால் அது ஒரு குழைவான அனுபவமாக மாறியிருக்கும்  எல்லாவற்றையும் மீறி எல்லார் மனதிலும் கவிதைத் தேங்கியிருந்தது.

Thursday, November 8, 2012


கதை கேட்கலாம் வாங்க...

கதை சொல்கிறார் பவா செல்லதுரை