Thursday, February 4, 2010

வம்சி வெளியீட்டரங்கம்.
இரண்டு நாட்கள் ஆறு நூல்கள்.
வம்சி வெளியீட்டரங்கத்தின் 2 மற்றும் 3 இலக்கமிட்ட வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையில் 30& 31 .01.2010 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நிகழ்வு கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ பள்ளி அரங்கில் உள்ள டி-பிகா அரங்கில் மாலை நேரம் ஆறு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெகிழ்ச்சியான வரவேற்புரையை கே.வி. ஷைலஜா வழங்கினார்.கவிஞர் உமா ஷக்தி முழு நிகழ்வின் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றார்.
முதலாவதாக பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’ (இதுவரை வெளியான மொத்த சிறுகதைகளின் ) தொகுப்பை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஞாநி பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தின் மீது இயக்குனர் சிம்புதேவன், கவிஞர் யுகபாரதி இருவரும் உரையாற்றினார்கள்.
இயக்குனர் மகேந்திரன் தான் எளிதில் எழுத்தாளர்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை என்றும் அப்படியான இடத்தை பாஸ்கர்சக்தி பெற்றிருக்கிறார் என்றும் அதேபோல் நல்ல அன்பராகவும் நண்பராகவும் கூட மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்றார்.
ஞாநி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த கணத்தில் தன்னையே கண்டது போல உணர்ந்ததாகக் கூறினார். யுகபாரதியும் சிம்புதேவனும் சிறுகதை மட்டுமல்லாமல் திரைக்கதை சின்னத் திரை வசனம் உட்பட எதிலும் தனி முத்திரை பதிக்கிறவர் என சிலாகித்தனர்.
நண்பர்களுக்கும் வருகை தந்தவர்களுக்கும் நன்றி கூறி பாஸ்கர்சக்தி ஏற்புரை வழங்கினார்.
அடுத்ததாக எஸ்.லட்சுமணப்பெருமாளின் கதைகள் தொகுப்பை பத்திரிக்கையாளர் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர் வெளியட கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றினார். விஜய சங்கர் படித்த அளவிலான கதைகள் உணர்வு நிலைகளைக் கிளறியதோடல்லாமல் கிராமத்தைக் காட்சிப்படுத்தியது என்றார். முத்துக்குமார் இத்தினத்தில் வெளியிடப்படுகிற மூன்று எழுத்தாளர்களது எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் வாழ்வின் மீதான அக்கறை குறித்து ஒப்புமை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் ராம் எழுத்தாளனின் தீவிரமும் உழைப்பும் ஒரு போராளியின் செயல்பாட்டுக்கு இணையானது என்கிற தொனியை பேச்சில் வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாகவும் முடிவாகவும்
க.சீ. சிவகுமாரின் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
சிவகுமாரின் தொகுப்புக்கு சுகுமாரன் வாசித்த கட்டுரை வடிவத்தை www.nayakan.blogspot.com மில் காணலாம்.கு.கருணாநிதியின் உரைக்குப்பின் ஏற்புரை வழங்கிய க.சீ.சிவகுமார் புத்தகத்தை களிகூர்ந்திருந்த மாரீசை மேடைக்கு அழைத்து பிரதியை வழங்கினார்.
பி.ஜே. அமலதாசின் நிறைவான மகிழ்வான நன்றிய்ரைக்குப் பின் அரங்கத்துக்கு வெளியே வந்து குழுமியவர்களை இந்த நூறாண்டுகளின் ஆகப்பெரிய நிலா ராத்திரி வரவேற்றுத் தண்ணொளி பொழிந்தது.
ஜனவரி 31- நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூர் மியூசியத்தின் எதிப்புறம் அமைந்துள்ள எக்சா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.வி.ஜெயஸ்ரீ வரவேற்புரை நல்கினார்.
முதலில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’
நூலினை பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக்கொண்டார்.
நூலினைக் குறித்து பிரபஞ்சனும் இயக்குனர் மிஷ்கினும் பிரதி தந்த பரவசத்தை மத்தாப்பு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அடுத்து சா.தேவதாஸ் மொழி பெயர்த்த ஹென்றி ஜேம்சின் ’அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட எழுத்தாளர் அஞ்சனா பெற்றுக்கொண்டார். வெளியிட்ட சண்முகம் நூல் குறித்த விரிவான செறிவான உரை வழங்க பத்திரிக்கையாளர் கடற்கரய் அவை கலகலக்கும் உரை வழங்கினார்.சுருக்கமான ஏற்புரையை தேவதாஸ் வழங்கினார்.
அடுத்து உதயசங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பெற்றுக்கொண்டார்.மணி மாறனின் விரிவான கதைகள் பற்றிய உரையாடலுக்குப் பின் உதயசங்கர் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வு நிறைவில் பவா செல்லதுரை நன்றியுரைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இருநாட்கள் நிகழ்ச்சிகளின் நினைவுகளிலிருந்து நான்கு நாட்களாகியும் வெளிவர இயலவில்லை. நண்பர்கள் என் மீதும் வம்சி பதிப்பகம் மற்றும் குடும்பத்தினர் மீதும் வைத்துள்ள தனிப்பட்ட பிரியத்தை மேடைகளில் கேட்டபோது நம்பமுடியாத்தாக இருந்தது. இருநாள் நிகழ்வுகளுக்கும் வந்திருந்த விருந்தினர்களும் வாசகர்களும் இந்த நிகழ்வுகளின் மீது அக்கறையும் அன்பும் என்றென்றும் மறக்க இயலாதது.
இருநாள் நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுத எண்ணமுள்ளது. அதற்கு முன் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ி