Saturday, February 16, 2013

வஞ்சியர் காண்டம்


     கடந்த புதன் கிழமை
பிரளயன் எழுதி, பேரா.ராஜீ இயக்கியவஞ்சியர் காண்டம்’  நாடகத்தை திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல் நிலைப்பள்ளி  வரலாற்று சிறப்புமிக்க சிகப்பு கட்டிட முற்றத்தில் நிகழ்த்தினோம்.
ஆறு மணிவரை நூறு பேர் கூடவரவில்லையே என்ற மனப்பதற்றம் வழக்கம்போல் அதிகரித்தது. ஏழுமணிக்குள் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் மைதானம் நிறைந்தது. ஆயிரத்திற்கும் மேல் பெண்கள்.
பிரளயனின் கல்லூரித் தோழனும், முன்னாள் அமைச்சருமான திரு.கு. பிச்சாண்டி நாடகத்தை துவக்கி வைக்க, உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள் அபுல்கலாம் ஆசாத், பிஜீபாஸ்கர், சாகித்ய அகடாமி விருதுபெற்ற  சௌக்கத் ஆகியோர் அம்மேடையை பெருமைப் படுத்தினார்கள்.
கண்ணகியின் கதையை மீளுருவாக்கம் செய்த அந்நாடகத்தின் முடிவில் கூட்டம் உறைந்து அப்படியே உட்கார்ந்திருந்தது.
பிஜீ பாஸ்கர் தன் கேமராவை தன் நண்பரும், மாதவிக்குட்டியின் கதையை மலையாள சினிமாவாக இயக்குபவரும், புகைப்படக் காரறுமாகிய Jiju Ebrahim மிடம் கொடுத்து எடுத்த அற்புத படங்கள் இவை.



  

Friday, February 8, 2013

கேப்டன் டிவி நேர்காணலில் நானும் முத்துகிருஷ்ணனும்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒரு நாள் மட்டும் போயிருந்தபோது நண்பர் செல்வம் கேப்டன் டிவி நேர்காணலுக்கு என்னையும் முத்துகிருஷ்ணனையும் அழைத்துப் போனார். நேரமின்மையால் ( எங்கள் இருவரின்) ஒரு மணி நேரத்தை நாங்களே அரை மணி நேரமாக குறைத்துக் கொண்டோம்



http://www.youtube.com/watch?v=oYKMvPiffeU

தேசாபிமானியில்...






என் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதைத் தொகுப்பு ஸ்டேன்லி அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ராஸ்பரி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருந்தது. அப்புத்தகத்தைப் பற்றி செளகத் எழுதிய மிகப்பெரிய விமர்சனக் கட்டுரை தேசாபிமானி வார இதழில் 6 பக்கங்களுக்கு வெளிவந்துள்ளன. ஒரு படைப்பாளிக்கு பரவசமூட்டும் கணமிது

Tuesday, February 5, 2013

கடைதலின்போது உண்டாகும் ஒளி

.சீ.சிவகுமார்


பத்தொன்பது டி.எம்.சாரோன் என இல்லத்தின் இலக்கத்தையே தலைப்பாக இட்ட தொகுப்பைப் படித்து முடித்ததும் வாழ்வு, சந்திப்புகள் இவற்றைப் பற்றி யோசிக்குங்கால் பாரதி கிருஷ்ணகுமார் ஒருமுறை என்னிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘ஒருவரை எப்போது சந்திக்கிறோம் என்பது முக்கியமானது. எப்போது பிரிகிறோம் என்பது அதைவிட முக்கியமானது.’

இதில் பிரிவு என்கிறபோது மிகப் பெரும்பாலும் பருண்மையானதும் பேருண்மையானதுமான மரணம் மிகத்துவம் பெறுகிறது. தவிரவும் மானசீகமாக மரணத்தையே நிகர்த்தமுகங்காணாப் பிரிவுகளும்வந்து வாய்க்கின்றன.




சந்தித்த வேளையில் சிந்திக்கவே விடாமல் ஈர்த்துக் கொள்கிறவர்கள், பழகப் பழக இனிப்பானவர்கள், பழகிப் புளித்தாலும் அறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என சந்திப்புகளும் சொந்தங்களும் பல ரகம். இப்படி நிறைய ஆளுமைகளோடு திருவண்ணாமலை மலை பற்றிய பதிவொன்றும், ஏழுமலை ஜமா பற்றிய பதிவொன்றும் இதில் இருக்கிறது. திருவண்ணாமலையை அஃறிணை வகையில் சேர்ப்பதை பெரும்பாலும் யாரும் ஒப்பமாட்டார்கள். அப்படிச் சேர்த்தால் நான் பொற்றாமரைக் குளம் தேடி அலையவேண்டி வரும்.

அம்மி கொத்துவதற்கோ கொக்கு விற்பதற்கோ வரும் ஒருவரைப் பற்றிய வியப்பைப் பதிவு செய்வதனால் அந்த எளிய மனிதர்களையும் ஆளுமைகளாகச் சித்தரித்துவிடும் திறன் பவா.செல்லதுரையின் நா மொழி, பேனா மொழி இரண்டுக்கும் உண்டு. ஒப்பாரி பாடுகின்ற லட்சுமி அம்மா ஒரு ஆளுமையாக மலர்வது அந்த நோக்கில்தான். ‘துக்கத்தின் தேவதையான அவரைப் பற்றிய சித்தரிப்பில் தூரத்து மலையடிவார மர நெருக்கத்துப் புகை அவன் இருப்பை அவளுக்குச் சொல்லும்...’ என்று அவரது கணவரைச் சொல்லும் வரியாகட்டும்; ‘பிண வாடை வீசும் ரூபாய் நோட்டுக்களில் அந்தக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தாள்என்கிற வரிகளாகட்டும் புனைவு வகைகளுக்குப் பயிலும் மொழி நடையே பவா மேற்கொள்ளுவது.

உதடுகளில் பொருத்தியிருந்த பீடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது பீடிப் புகையில்லை என்பதை அறிய அதிக நேரம் பிடிக்கவில்லைஎன்பது மாதிரியான வெளிப்பாடுகள் வாசிப்பை மெத்தவுமே சுவாரசியப் படுத்துகின்றன.

தொகுப்பினை அழகாக்கும் இன்னொரு அம்சம் இதில் தென்படும் புகைப்படங்களும் ஓவியங்களும். இதில் பங்குபற்றும் மாந்தர்களாகவே வருகிறவர்களில் சில பேர் புகைப்படக்காரர்களாகவும் ஓவியர்களாகவும் இருக்கிறார்கள். வெளி மனிதர்கள் நீங்கலாக இதில் சிறப்பான பதிவாக வந்திருப்பதுஅப்பாபற்றிய பதிவு.மொத்தத்தில் மிகநேர்த்தியுடன் வந்திருப்பது ஓவியர் சந்தானராஜ் பற்றிய பதிவுதான் என்றாலும், அப்பாவைப் பற்றி எழுதும் போது உண்டாகிற தன்னெழுச்சி தவிர்க்க இயலாதது. (எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக் கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்...) கிணற்றின் வற்றாத ஜீவநாடியான ஊற்றைக் கண்டடைந்து குதூகலிக்கும் அவர் சிறையும் வறுமையும் வந்துற்றாலும் கொள்கையில் தவறலாகாது என்கிற சித்த உறுதி மிகுந்தவராக வாழ்ந்து மரித்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பின் விழைவையும் விருப்பத்தையும் சொல்லும் கட்டியம் போன்ற பகுதியாக, ‘பால்யத்தின் மீது வைக்கப்படும் தீஎன்னும் கட்டுரை வெளிப்பட்டிருக்கிறது.

ஆன்மீகத்திலிந்து மனிதனுக்குஎன்னும் கட்டுரை, பேராயர் கிடியன் தேவ நேசன் அவர்களுடனான நினைவுகளை உடையது. ‘கீரிப்புள்ளதானே அடிச்சிட வேண்டியதுதான...’ என்ற அவரது கூற்றுக்கு அவரது கார் ஓட்டுனர், ‘அப்புறம் மரணம் மரத்துப் போயிடுமய்யா...’ என்று பதில் சொன்னதைப் படித்ததும் கொஞ்சம் ஸ்தம்பித்தேன். இப்படித்தான் ஒளிபொழிந்து வானில் வெடிக்கும் வாணவெடியில் அதன் வெளிச்சப் பரப்புக்கும் மேலே சிலசமயம் ஈர்க்குச்சிகள் போய்விடுகின்றன.

சாரோனுக்கு வந்துபோன பயணிகளின் மீதான நெகிழ்ச்சியினூடாக இல்லத்துக்கு வராதவராகவும் பவாவை ஈர்த்தவர்களில் ஒருவராகவும் ஒருத்தர் இருக்கிறார், இம்பாஸிபிள் ஃபிரண்ட். அவர் திருவண்ணாமையில் நிறுவனமயமாய்த்திரிந்தஆளுமைகளில் ஒருவர். விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட ராம் சுரத் குமார். இந்தப் பிச்சைக்காரனை ஏன் தேடிவந்தாய் என வினவுகிற அவரே சந்தித்தோர் விடைபெறுகையில்என் தகப்பன் உன்னை ஆசீர்வதிப்பான்என்னும்போது தேவகுமாரனாக மாறுகிறவராக இருக்கிறார். ராம்சுரத்குமாருடனான சந்திப்புகளை இந்தப் பதிவுத் தொகுப்பின் மிகச் சிறந்த பதிவாகக் கருதுகிறேன். ‘சாத்தியமற்ற நண்பன், சாத்தியமில்லாத நண்பன், எப்படி இருந்தாலும் நண்பன் நண்பன் தான்எனப் படித்து முடிக்கிறபோது தோன்றியது.

திருவாச்சியும் தலைப் பின்புறத்தில் ஒளிவட்டமும் சூட்டப்பட்ட பிரதிகளைக் காணும்போது ஆன்மீகம் என அறியப்படும் தளங்களும் தாளங்களும் மீட்டெடுக்கப்படுவது சாத்தியம்தான். இதை மீறுவதற்கு மனிதமனம் டி.என்.. ஏணியைக் கத்தரித்துப் பழகவேண்டும். வேலையில்லாத காலங்களில் அலைந்தபோது யோகியின் மீது பொறாமையுற்றது, பாலகுமாரன் நிமித்தமான மற்றும் யாரோ ஒரு அலுவலர் நிமித்தமான அவருடனான சந்திப்புகள், மகன் சிபியின் இழப்பின்போது தம்பதியராய்ப் பார்த்துவிட்டு வந்தது என யோகியுடனான நேரங்களை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் பவா.

ஆசிரமத்தின் கேட்டில் ஒரு கரிச்சான் குருவி உட்கார்ந்திருக்கிறது. இரண்டுபுறமும் திறந்து மூடும் கேட்டில் குருவி உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை. இதில் உணருவதற்குத்தான் நிறைய இருக்கிறது.

அஞ்சலிக் குறிப்பாககுரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத கலைஞன்சுகந்தன் பற்றிய பதிவு இருக்கிறது. காற்றில் கலந்த ஈர ஓசை சுகந்தனுடையது. குரலின் சுகந்தத்தோடு மதுவின் கந்தமும் இருந்த சரீரமும் சாரீரமும் சுகந்தனுக்கு.

ஆட்களைப் பற்றிப் பேசும்போது பதிவுகள் முடிவதற்கு முன்னாகவே அவர்களைப் பற்றிய அகச் சித்திரம் தட்டுப்பட்டுவிடுகிறது. இதற்கு பவாவின் எழுத்துப்போக்கோ அல்லது பினு பாஸ்கர் மாதிரி, ‘நான் பூனைகளோடு விளையாடிக் கொண்டிருப்பேன்என்பது போன்ற பதில்களைச் சொல்லுகிற ஆகிருதித் தன்மைகளோ காரணமாக இருக்கலாம்.‘

இதிலுள்ள கட்டுரைகள், எழுதப் படும்போது புத்தக வடிவத்தை உத்தேசிக்காததன் விவிதத் தன்மையை பெற்று, கால ஓட்டத்தின் வளர் தன்மையின் லயமான புள்ளியில், நூலாக ஆக்கம் பெற்றிருக்கிறது. மாயா லோகம் போன்ற விவரிப்பில் ஃபோர்ட் கொச்சினும் டேனிஷ் மிஷன் பள்ளியும் பவாவின் எழுத்துக்களில் துலங்குகின்றன.

நீண்ட சந்திப்புகள் அல்லது காலத்துக்குப் பின் மனிதர்கள் மாறிப்போவதைச் சொல்லும் அனுபவங்களும் இதில் இருக்கின்றன. மலை சார்ந்தும் மண் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏராள தாராள மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவரான பவா.செல்லதுரை மிகச் சில(ர் உடனான) அனுபவங்களை மட்டும் இத் தொகுப்பில் தந்துள்ளார். இன்னும் நிறைய அனுபவப் பதிவுகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டுவதாக இத்தொகுப்பு இருக்கிறது.
சுழல்கள் இல்லாத நெடுநீர் நதியில் நிலவொளியின் படகுப் பயணம்போல அவ்வளவு மிருதுவாக இருக்கிறது இது. அகம் பேசுதலை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும் சுகமான மெல்லிசை, பயணித்தலின் ஊடாகக் காதோடு வருகிறது.


 நன்றி  : அம்ருதா மாதஇதழ்  (ஜனவரி 2013