Sunday, December 22, 2013

இம்மாத (டிசம்பர்) புத்தகம் பேசுது இதழில் என் புத்தகம் சூழ்ந்த வீடு


இம்மாத (டிசம்பர்) புத்தகம் பேசுது இதழில் என் புத்தகம் சூழ்ந்த வீடு

Saturday, December 21, 2013

யாவருக்கும் தோழன்


இம்மாத இனிய உதயம் இதழில் பிரசுரமான என் நேர்காணல், புரட்சி எழுத்தாளர் என என்னை குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்தேன். புரட்சியுமில்லை, எழுத்தாளனுமில்லை வெறும் பெயர் போதும் ஒரு மனிதனை அடையாளப்படுத்த. பொதுவாக தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே இலக்கிய கூட்டங்களை நடத்தும் களப்பணியாளர்களாக இருக்கிறார்கள். நீங்களும் கடந்த 30 வருடமாக களப்பணியில் செயல்படுகிறீர்கள். ஒரு எழுத்தாளனே இம்மாதிரியான இலக்கிய கூட்டங்களை நடத்தும் செயல்பாட்டாளனாக இருப்பது குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய முடியுமா?
பவாசெல்லதுரை: இது துரதிருஷ்டமானதுதான். சுந்தரராமசாமி தனது ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதைப்போல “நான் தமிழில் எழுத்தாளனல்லாத ஒரு வாசகனை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாசகனை சந்தித்து நான் குதூகலிக்கும்போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து இதோ நான் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை எடுத்து என்முன் நீட்டி விடுகிறான்.”
இலக்கியக் களப்பணியாளர்கள் என்ற தனியான செயல்பாட்டாளர்கள் தமிழ்ச்சூழலில் இல்லாததால், ஒரு வாசகப்பரப்பை உருவாக்க ஒரு படைப்பாளியே இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது என்ற களப்பணியையும் சேர்த்தே செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, அந்தப் படைப்பாளி தன்னுடைய படைப்புகளை முதலில் பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. இலக்கியக் களப்பணி என்பது வெறும் இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமில்லை. அந்தக் களப்பணியாளர் தான் வாழும் பகுதியைச் சுற்றியுள்ள எழுத்தாளர்களை, கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் கூட.
உதாரணத்திற்கு பத்து வருடங்களுக்கு முன் திருவண்ணாமலையில்  ஆடிட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பர் இருந்தார். நானும் எனது தோழர் சந்துருவும் அவருடனான தொடர்ச்சியான உரையாடலில் அவரிடம் அருந்ததிராயின் ஒரு ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்துத் தரும்படி கூறினோம். அவர், நான் எப்படி மொழிபெயர்ப்பது என்று தயங்கினார். இல்லை, உங்களோடு பேசும்போது உங்களுக்கு அபாரமான ஆங்கில மொழியறிவு இருப்பது புரிகிறது. நிச்சயமாக உங்களால் இது முடியும் என்று சொல்லிக்கொடுத்தோம். அவர் ”இந்தியாவில் ஜனநாயம் என்னவாக இருக்கிறது” என்ற அருந்ததிராயின் வகுப்புவாதிற்கு எதிரான அக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தார். அந்தக் கட்டுரையை பல ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரை திருவண்ணாமலைக்கு வரவழைத்து வெளியிட்டோம். அப்படி தனது முதல்மொழிப்பெயர்பைத் தொடங்கிய மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமிதான் பின் ஹாருகி முரகாமி, அருந்ததிராய், ஓரான்பாமுக், பேர்லாகர்குவிஸ்ட், ரேமண்ட்கார்வார் போன்ற பல உலக எழுத்தாளர்களின் படைப்புகளை அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
அதே மாதிரி, 1985 வரை சாவு வீடுகளில் மட்டுமே வாசிக்கப்பட்ட பறை இசையை திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய இரவில் பல்வேறு எதிர்ப்புகளிடையே மேடையேற்ற முயன்றபோது சாவுக்கு அடிக்கிற பறைமேளத்தைப் போய் ஸ்டேஜ்ல ஏத்தறீங்க என்று (முற்போக்காளர்களேகூட) எதிர்ப்பு தெரிவித்தனர். எழுந்த பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி திருவண்ணாமலை ‘பாப்பம்பாடி ஜமா’வின் பெரிய மேளம் இசையை மேடை ஏற்றினோம். அது தமிழகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த கலை இலக்கிய மேடைகளிலும், திருமணங்களிலும், இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு டெல்லி செங்கோட்டையில் கூட வாசிக்கவும், அதைத் தாண்டி உலக நாடுகளுக்கும்கூட தங்களின் இசைப் பயணங்களை மேற்கொண்டார்கள். இப்படி நமது பாரம்பரியமான கலையை, கலைஞர்களை, எழுத்தாளர்களை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதும் சேர்த்துதான் இலக்கிய களப்பணி.
அதைதான் பல படைப்பாளிகளைப் போல என் படைப்பை பலிக்கொடுத்து கடந்த முப்பது ஆண்டுகளாக நானும் செய்து வருகிறேன் .
இதுவரை நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவாகாத ஒரு நிலப்பரப்பைப் பற்றி உங்களது கதைகள் பேசுகிறது என்று மூத்த எழுத்தாளர் பிரபஞ்சனில் துவங்கி பலரும் சொல்கிறார்கள். அது எந்தமாதிரியான நிலப்பரப்பு?
பவாசெல்லதுரை: இதைப்பற்றி நான் சொல்வதைவிடவும் தமிழின் தனித்துவமிக்க மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.
தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்பு நிலை மனிதர்களின் பிரதேசங்களை அறிந்திருப்பவர் பவா செல்லதுரை மட்டுந்தான். பொதுப்பார்வைகளின் வெளிச்சத்தில் படாத வேட்டைக்கார நரிக்குறவர்களையும், இனத் தொழிலாக களவைக் கைக்கொண்டிருக்கும் உப்புக்குறவர்களையும், எலி, பாம்புகளை வேட்டையாடிக்கொண்டு உபதொழிலாக வீடுபுகுந்து திருடும் இருளர்களையும், கிணறு வெட்ட குழுவாக வரும் ஒட்டர்களையும் இவர் கதைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது.
யாருக்கும் அறிமுகமாகியிருக்காத இவர்களைப் பற்றி மேலோட்டமாக தகவல் சேகரித்து எந்த எழுத்தாளனும் அவர்களின் விசித்திர உலகையும், அவர்களிடம் ஒளிந்திருப்பதாகக் காட்டும் மேன்மைகுணங்களையும் சுவாரஸ்யமான கதைகளாக எழுதித் தப்பித்துவிடலாம். ஆனால் பவாவின் கதைகளில் அவர்கள் முழுமையான உருக்களாக, குணச்சேதாரமில்லாமல் வருகிறார்கள். அவர்களுக்கு ஜரிகை சுற்றி அலங்காரம் செய்யப்படுவதில்லை. கோல்டுபிரேம்போட்டு அவர்களின் படங்கள் மாட்டப்படுவதில்லை. அவர்கள் அவர்களாகவே காட்டப்படுகிறார்கள்.
ஆனால் இந்தக் காட்டு மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பவாவின் மொழிநடை மிகமிக சௌந்தர்யமானது. அந்த வார்த்தைகளின் ஜொலிப்பில் சொக்கிப் போய் பவாவைக் காதலிக்கும் வாசகர்கள் பலநூறு பேர் உண்டு. ரேமண்ட் கார்வர், அசோகமித்திரனின் மாணவனாகிய நான் பவாவின் இந்த ‘ரொமான்டிஸ’ நடையை அவரிடம் விமரிசித்தே வந்திருக்கிறேன். ஆனால் இந்த நடை பவாவினால் செயற்கையாக வரித்துக்கொள்ளப்பட்டதல்ல. பவா எவ்வளவு நிஜமோ, அவ்வளவு நிஜம் அவர் கதைகளும். அவர் கதைகள் எவ்வளவு நிஜமோ அதைச் சொல்லும் அவர் நடையும் நிஜம். அவர் சொல்லும் கதையை அவர் மொழியில் தான் சொல்லமுடியும் என்பதை மிகதாமதமாக நானும் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
‘வேட்டை’ கதையின் ஒவ்வொரு வரிகளுக்குப்பின்னாலும் பல அத்தியாங்கள் எழுத வேண்டிய அளவுக்கு வேட்டைக்காரர்களின் வாழ்க்கை முறைகளும், கானகத்தின் இயல்புகளும் மண்டியிருக்கின்றன. வேட்டைக்காரர்களுக்கு காடு என்பது தொழில் பார்க்க வேண்டிய களம் அல்ல. அதற்கு வெளியே இருக்கிற அதன் ஒரு பகுதி அவன். அவனுக்கும் காட்டிற்கும் உள்ள உறவை மனிதர்களுக்கிடையே இருக்கும் உறவாகவோ, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவாகவோ பார்க்க முடியாது. இயற்கைக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே நடப்பது போராட்டம் அல்ல என்று இக்கதையின் உட்பிரதி புலப்படுத்துகிறது. அது கொடுத்து வாங்கல். இயற்கையின் கை எப்போதும்போல மேலேயே இருக்கிறது. ஜப்பான் கிழவன் என்ற அந்த வேட்டைக்கார குறவன் மனித சமூகத்தில் ஒருவனாக இருந்தாலும் தன்னை கானகத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்வதில்தான் விருப்பமுற்றவனாக இருக்கிறான். மதுபானக்கடை இயக்குநர் கமலகண்ணன் ஜப்பான் கிழவனும், அகிரோகுரோசோவாவின், டெஸ்ருஉஸ்ராவும் ஒரே பிரதிகள்தான் என்கிறார். ஜப்பான் கிழவனின் இன்னொரு பிரதிதான் டெஸ்ருஉஸ்ரா இருவருக்குமே அவர்கள் விரும்பினது சாத்தியப்படாமல் போவதுதான் அவர்களது தனிமனித் தோல்வி. ஏமாற்றத்தின் விளைவாக அக்கிழவன் காட்டின் மேல் போர் தொடுக்கவில்லை. திமிங்கிலமா மனிதனா, யார் உயர்ந்தவரென்று போராடி இருவரும் அழிகிற ஹெமிங்வே பாணி கதையாடலை பவா சுலபமாகத் தாண்டிச்செல்கிறார். ஜப்பான்கிழவனுக்கு தனது எல்லை தெரிந்திருக்கிறது. காடு தன்னை அனுமதிக்கும் தூரத்தோடு அவனால் பேரம் பேசமுடியாது என்ற ஞானம் அவனுக்கிருக்கிறது. காட்டின் நிலம் அனுமதிக்கும் ஆழத்திற்கு மட்டுமே வேர்பரப்ப இயலும் விருட்சம்தான் தான் என்ற ஞானம் அது. சூழலியல்அறிஞர்களும், கானுயிர்வல்லுனர்களும், மானுடவியல்ஆய்வாளர்களும் விரிவாக அலச வேண்டிய இக்கதையை இந்த நூற்றாண்டின் மகத்தான சிறுகதைகள் விரிசையில் வைக்கப்பட வேண்டிய ‘சத்ரு’விற்கு இணையாகச் சொல்லலாம்.

‘சத்ரு’வை எந்த உலக மொழியிலும் (ஜீவன் கெடாமல்) மொழிபெயர்த்து தமிழின் பிரதிநிதியாக முன்வைக்கலாம். ஆனால் சுலபத்தில் மொழிபெயர்த்து விடமுடியாத கதைதான்இது. சொல்லப்போனால் பவாவின் பெரும்பாலான கதைகளை சக இந்திய மொழிகளில் கூட துல்லியமாக மொழிபெயர்த்துவிட முடியாது. இவர் கதையுலகின் கவிச்சி வாடை தமிழ் மண்ணுக்கு, அதுவும் குறிப்பாக தொண்டை மண்டல கானகப்பகுதிக்கே உரித்தானது.
வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதையில் பஞ்சம் பேரிருட்டாக கவிந்துவருவதை வாசித்தவர்களுக்கு ‘சத்ரு’வில் பஞ்சத்தின் வேறுமுகம் காட்டப்படுகிறது. ‘கடைசியில் பாட்டியை விட்டுச்செல்வது’ என பஞ்சத்தில் இடம் பெயரும் எஸ்தர் கதை மாந்தர்கள் முடிவெடுப்பதைப்போல, அகப்பட்ட திருடனை பலிகொடுத்தாவது பஞ்சத்தை முடிவுக்குக்கொண்டுவர இக்கதைமாந்தர்கள் முற்படுகிறார்கள். பஞ்சம் மானிடர்களின் மனஈரத்தை முற்றிலுமாக உறிஞ்சியெடுத்துவிடுகிறது. எட்டி மரங்களின் பச்சையும், காய்களின் சிவப்பும், தண்ணிமுட்லான் கிழங்குகளின் ஈரமும் தமிழ் வாசிப்புலகிற்கு இதுவரை அறிமுகம் இல்லாதவை. முற்றிலும் புதிதானவை.
பச்சைஇருளனிலும் திருடனொருவன் அகப்படுகிறான். ஜமீன் அரண்மனைக்குள் அடைபட்டிருக்கும் பச்சை மரகதலிங்கம் போல ஜொலிக்கும் ‘தொரையின் ஒரே தங்கச்சியின்’ பார்வை, கட்டி இழுத்துச் செல்லப்படும் பச்சை இருளனை பயத்தோடு கும்பிடும் ஊர் மக்கள், என சட்சட்டென வரிக்குவரி ஒருவித பதற்றத்தோடு துள்ளி மறையும் காட்சி வர்ணிப்புகள், இக்கதைக்கு அளிக்கும் அதிர்வுகள் அபூர்வமானவை. வேறெங்கும் காணக்கிடைக்காதவை.
இவரின் கதையுலகில் நுழைந்துவிட்டால் எதிர்ப்படும் விநோதங்கள் எல்லாமே அபூர்வமானவை. மல்லாட்டையை உரித்தால் வெளியே வரும் ரோஸ் நிற தேவதைகளும், மரங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் சிறுவர்களும், கிணறு வெட்டும்போது புதுத்தண்ணி மண்ணைப் பிளந்துகொண்டு பீறிடும்போது வளையல்களைக் கழற்றி அந்த கிணற்றுக்குள் எறிபவளும், அப்பா அடிப்பதற்கு உயர்த்திய கையைப் பிடித்து முறுக்கியவனும் மறக்க முடியாத வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பவர்கள்.
பவாவின் எழுத்துக்களை எவ்வளவுதான் பாராட்டினாலும் எனக்கென்று தனிப்பட்ட ஆதங்கங்கள் எப்போதும் இருக்கின்றன. ‘மண்டித்தெரு பரோட்டா சால்னா’ என்ற அபாரமான கதையை நாவலாக எழுதாமல் சிறுகதையாக குறுக்கிவிட்ட ஆதங்கம்; ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’யில் ஏதோ ஒருசில வரிகளில் பொதிந்து கொள்கிற அந்த ஊமையனை, அவன் எழுப்பும் அமானுஷ்யமான உளறல் சத்தங்களை முதன்மையாக வைத்து ஒரு சிறுகதையை எழுதாத ஆதங்கம். எல்லாவற்றையும் விட இவ்வளவு அபாரமான கதைகளை படைக்கும் ஒரு கலைஞன் இவ்வளவு குறைவாக எழுதுகிற ஆதங்கம்.
இப்படி ஜி.குப்புசாமி குறிப்பிடும் கதைஉலகம்தான் என்னுடையது.
உங்களது புனைவுகளும் கட்டுரைகளும் ஒரே தன்மையில் இருக்கிறது. உங்கள் கட்டுரையில் வரும் ஆளுமைகள் புனைவுக்கான தூண்டுதலாக இருந்தாலும் அதை கட்டுரையாக மட்டுமே பதிவு செய்திருக்கிறீர்கள். அவர்களை புனைவுகளாக மாற்றும் திட்டம் எதுவும் இருக்கிறதா?
பவாசெல்லதுரை: நான் சின்ன வயசிலயிருந்து வாசித்தவைகள் பெரும்பாலும் புனைவுகள்தான். அரசியல், தத்துவம், இவற்றை புனைவுகள் அளவுக்கு வாசித்ததில்லை. இதற்கு காரணம், என் அம்மா சின்ன வயதில் எனக்கு சொன்ன கதைகள் இன்னும் எனக்கு பெரிய புனைவுகளாக மட்டுமே தங்கியிருக்கிறது. மேலும் நான் வாசித்தவைகள் பெரும்பாலும் புனைவுகள்தான். என்னை ஒரு இலக்கிய கூட்டத்திற்கோ, கட்சிக் கூட்டத்திற்கோ, வாயிற்கூட்டங்களுக்கோ, களப்போராட்டங்களுக்கோ, திருமண நிகழ்ச்சிகளுக்கோ, அழைத்து பேசச்சொன்னால் அதில் நான் படித்த புனைவுகளைப்பற்றித்தான் பேசுவேன். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் கட்டுரைகளாக எழுதுவதற்காக பல்வேறு பொதுவான விஷயங்களைக் கருவாக எடுத்துக்கொண்டு எழுதுகிறார்கள். ஆனால், நான் எனது நிலம் சார்ந்த மனிதர்கள், சந்தித்த ஆளுமைகள், அவர்களைப்பற்றி எனக்கு தெரிந்த மொழியில் எழுதுகிறேன். நான் புனைவுகளுக்கு தனியான மொழியையும் கட்டுரைகளுக்கு தனியான மொழியையும் தேர்வு செய்வதில்லை. எனக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் எழுதுகிறேன். நான் எழுதிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளில் ஒரு சிறுகதைக்கான, குறுநாவலுக்கான, நாவலுக்கான கரு இருக்கலாம். நிச்சயமாக அவை புனைவாக எழுதுவதை காலம்தான் தீர்மானிக்கும்.
ஆரம்பகால தமுஎச-வின் செயல்பாடுகள் இன்றையச் சூழலுக்கு தேவையாக இருக்கிறதா?
நிச்சயமாக. முன்பைவிட இன்று அதிகமான தேவை இருக்கிறது. இத்தனை வருடங்களாக த.மு.எ.ச திருவண்ணாமலையில் இலக்கியக் கூட்டங்கள், கலை இரவுகள், கருத்தரங்கங்கள், புத்தக அறிமுகங்கள், நவீன நாடகங்கள் என அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நானும் எனது நண்பன் கருணாவும் ஒருங்கிணைத்து நடத்தி இருக்கிறோம். இந்த செயல்பாட்டின் மூலம் திருவண்ணாமலையில் ஒரு இருநூறு தீவிர இலக்கிய வாசகர்களைக்கூட உருவாக்கவில்லை. இது இந்த செயல்பாட்டின் தோல்வி கிடையாது. ஆனால், இந்த செயல்பாடுகளும் இல்லையென்றால் குறைந்த பட்ச வாசகர்கள் கூட உருவாகி இருக்க மாட்டார்கள். திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 50 இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அந்த அமைப்புகளில் தமிழ் பேச்சருவிகளும், பேச்சுப்புயல், இடிமுரசு என்ற பட்டப்பெயர்களோடு நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒருவகையில் தன்னுடைய பெயர் பிரபலம் அடைய வேண்டும். பெரிய ஆளுமைகளோடு நட்புகொள்ள வேண்டும். அவர்களை அனைவரும் புகழ வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு மட்டுமே செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். ஒரே ஆள் ஆறு இலக்கிய அமைப்புகளில் வெவ்வேறு பொறுப்பிலிருக்கிறார். இவர்களுக்கு நம்முடைய பாரம்பரிய கலைகுறித்தோ, நல்ல எழுத்து, நல்ல புத்தகங்கள் குறித்தோ, நம் சமூகம் குறித்தோ எந்த அக்கறையுமில்லை. இவர்கள் வெறுமனே விளம்பர விரும்பிகள் மட்டுந்தான். இந்தச் சூழலில் குறைந்தபட்ச வாசகர்களையாவது உருவாக்க முன்பு ஆயிரம் நிகழ்ச்சிகள் என்றால் இன்று அதைவிட தமுஎச போன்ற கலைஇலக்கிய பண்பாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் பலமடங்கு அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், பொருளாதார நெருக்கடிகள், செயல்பாட்டாளர்களின் பற்றாக்குறைகளால் தமுஎச அமைப்புகளின் நிகழ்ச்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.
முதலில் நிறைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் இடதுசாரி சிந்தனைகளோடு வந்தவர்கள் பின்னால் ஏன் இடதுசாரி கோட்பாடுகளை விடுத்து எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாவும் மட்டுமே தனித்துப்போனார்கள்? இது இடதுசாரி சித்தாந்தத்தின் தோல்வியா? இடதுசாரிகளின் தோல்வியா?
பவாசெல்லதுரை: இதை நான் இடதுசாரி சித்தாந்தத்தின் தோல்வியாகவோ இடதுசாரிகளின் தோல்வியாகவோ பார்க்கவில்லை. நான் இன்றுவரை இடதுசாரி சித்தாந்ததை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு படைப்பில் செயல்பட்டு வருகிறேன்.  முதலில் இடதுசாரி சிந்தனைகளோடு வருகிற எழுத்தாளர்கள் கலைஞர்கள் கருத்து முரண்பாடுகள் காரணமாகவோ இயக்கத்துக்குள்  இருக்கும் புழுக்கம் தாளாமலோ, தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள் காரணமாகவோ வெளியேறுகிறார்கள். பொதுவாக எல்லா அமைப்புகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஏன் அமைப்புகளில் இருக்கும் முரண்பாடுகளைவிட நம்முடைய குடும்ப அமைப்புகளுக்குள் மனைவி மக்கள் இடையே நிறைய முரண்பாடுகள் வருகிறது. ஆனால், யாரும் குடும்ப அமைப்புகளைவிட்டு வெளியேறுவதில்லை. காரணம் குடும்பத்தைவிட்டு வெளியேறினால் உறவுகளை இழக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தின் மூலமாக வரும் பூர்விக சொத்துகளை இழக்க வேண்டியிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரி அமைப்புகளோடு முரன்பாடு ஏற்படும்போது மிக எளிதாக வெளியேறுகிறார்கள். அவர்கள் கம்யூனிசம் என்கிற லட்சியத்தை வெறுமனே மேலே போட்டுக்கொள்கிற சட்டையாக கருதுகிறார்கள். அதனால்தான் முரண்பாடுகளை விமர்சித்து அமைப்புக்குள் சகித்துக்கொண்டிருக்காமல் வெளியேறுகிறார்கள்.
நீங்கள் சிறுவயது முதலே மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதன் செயல்பாட்டாளராகவும் செயல்படுபவர். உங்கள் கொள்கைக்கும், செயல்பாட்டிற்கும் நேர் எதிர்திசையில் பயணிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் எப்படி இன்றளவும் உங்கள் நண்பராகப் பயணிக்கிறார்?
இதே கேள்வி பத்திரிகையாளர் ஞாநியிடமும் ஒருமுறை கேட்கப்பட்டது. அவர் சொன்ன பதிலையே நானும் சொல்ல விரும்புகிறேன். நான் ஜெயமோகனை எனக்கு நேரெதிர் திசையில் பயணிப்பவராகக் கருதவில்லை. அவரின் முதல் நாவல் ரப்பர் வந்தது முதல் இப்போது வெளிவந்திருக்கும் வெண்கடல்வரை அவரின் புனைவுகளைத் தொடர்ந்தும், கட்டுரைகளை விட்டுவிட்டும் வாசித்திருக்கிறேன். படைப்புகளில் ஜெயமோகன் தொட்ட இடங்கள் வேறெந்த எழுத்தாளனும் தொடமுடியாத உயரம். ‘திசைகளின் நடுவேஎனும் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பில் மாடன்மோட்சம்’ ‘நதி‘போதி’படுகை’ ‘கிளிக் காலம்’ ‘ஜெகன்மித்யை’ ‘பல்லக்குபோன்ற கதைகள் இன்றளவும் என்னுள் நீடித்திருப்பவை. குருகுலங்களை, அதன் அதிகாரங்களை எள்ளிநகையாடுபவையும், அதன் மீதான கடும் விமர்சனங்கள் கொண்டவையுமாக இத்தொகுப்பில் பலகதைகள் உள்ளன. ஒரு இந்துத்துவவாதியால் இப்படிப்பட்ட படைப்புகளை ஒருபோதும் எழுத முடியாது.
ஏழாம்உலகம்நாவல் படித்து நான்கு நாட்கள் காய்ச்சல் வந்து கிடந்திருக்கிறேன். அது கடவுளை மறுக்கிற, நகையாடுகிற பிரதிதான். ‘காடு’ ‘கொற்றவைஒரு எளிய வாசகனை சவாலுக்கு அழைப்பவை. விஷ்ணுபுரத்தில் என்னால் சுலபமாக இன்றளவும் பிரவேசிக்க முடியவில்லை.
நான் காண விரும்பிய, சென்றடைய விரும்பிய மனிதர்களை அறத்திலும் வெண்கடலிலுமாகன்னை கொண்டுபோய் சேர்க்கிறார் ஜெயமோகன். மார்க்சிய லட்சியவாதத்தின் முற்றிய எளிய மனிதர்கள்தான் அறம்’ மற்றும் ‘வெண்கடல்’ தொகுப்பின் நாயகர்கள்.
தர்மபுரி நக்சலைட் வேட்டையில் ஒரு பறவையைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்ட அப்புவின் படுகொலைகைதிகள்’ சிறுகதையில் நம்மை உலுக்குகிறது. மார்க்சிய சார்புள்ள படைப்பாளர்கள் தவறவிட்ட இடம் இது. வெண்கடல் தொகுப்பில் உள்ள வெறும்முள்என்றொரு கதையை இதுவரை நான் படித்த சிறுகதைகளின் உச்சம் எனச் சொல்லமுடியும். என் சமகாலத்தில் எழுதத் துவங்கி எழுதிக்குவித்து இத்தனை உயரத்திற்கு சென்றிருக்கிறார் ஜெயமோகன். ஒரு சக படைப்பாளியாய் நான் மகிழ்ச்சியும், சற்று பொறாமையும் படுகிறேன்.
ஆனால் தன் கட்டுரைகளில் அவரின் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை. இதை அவரே சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்,
‘‘என் முப்பதாண்டு கால நண்பர் பவாசெல்லதுரை. என் கருத்துகளோடு முரண்படுபவர், முற்றிலும் நிராகரிப்பவர். ஆனால் என் வாழ்வின் எல்லா அரிய தருணங்களிலும் என்னுடன் இருந்திருக்கிறார்’’ என்கிறார்.
இதைப் படித்து நானே அவரைத் தொலைபேசியில் அழைத்து,
நான் உங்கள் எல்லாக் கருத்துகளையும் நிராகரிப்பவன் அல்ல. லவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே, அதை ஆமோதித்தார். அவரைத் தொடர்ந்து இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி எனக் குற்றம் சாட்டுபவர்கள் அதற்கான ஆதாரமான தர்க்கங்களை எழுத்தின் முன் வைக்க வேண்டுமென விரும்புகிறேன், அவர் படைப்புகளிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும். அதை விடுத்து வழிவழியாக இதே குற்றச்சாட்டை மேலோட்டமாக முன் வைப்பது ஏற்கத்தக்கதல்ல, அவரே பலமுறை தன் எழுத்தில் பதிவு செய்திருப்பது போல.
‘‘நான் ஆர்.எஸ்.எஸ். தான், பி.ஜே.பி.தான், இந்துத்துவவாதிதான் என என்னை நானே அறிவித்துக்கொண்டால் அது எனக்குக் கூடுதல் பலம்தானே. அதை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறேன்’’ எனச் சொல்கிறார்.
என் எளிய வாசிப்பில் அவர் படைப்புகள் மானுட மேன்மைக்கானவையும், மனித மனநுட்பங்களை கூட்டுபவையும்தான். அப்படிப்பட்ட ஒரு படைப்பாளியோடு சகபயணியாக பயணம் போவதைப் பெருமையாகத்தான் கருதுகிறேன். எப்போதுமே எனக்கு உடன்பாடில்லாத கருத்துகளோடு அவர் முன்வருகிறபோது முதல் ஆளாய் எதிர்த்திருக்கிறேன். எதிர்ப்பேன். இந்தப் புரிதல் எங்கள் இருவருக்குமிடையே என்றென்றைக்கும் நீடித்திருக்கும்.
அதே போல அவர் அருண்மொழியைத் திருமணம் செய்த நாள் முதல் அவரின் சொந்த, இலக்கிய வாழ்வை நன்கறிவேன். இதுவரை திருவண்ணாமலை கூட்டங்களுக்கு பலமுறை வந்ததுண்டு. ஒருமுறைகூட ஒரு ரூபாய்கூட போக்குவரத்துக்கென வாங்கினதில்லை. நல்ல அறை போடுங்கள் எனக் கேட்டதில்லை. இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தல் என்பதை தன் இலக்கியச் செயல்பாடாகவே கருதிவருபவர் அவர். ஆயிரம் ரூபாய் கவரில் குறைகிறது என்பதற்காக அறையை விட்டகலாத எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் நான் நன்கறிவேன். எத்தனை பெரிய வசதி படைத்தவனையும் துச்சமாகத் புறந்தள்ளுவதையும் கவனித்திருக்கிறேன். தன்னை பணத்தால் அல்ல. வாசிப்பால், மனதால் நெருங்கினால் மட்டுமே அவனை ஏற்கும் குணம் படைத்தவராகவே ஜெயமோகனைப் பார்க்கிறேன்.
மூன்றாம்தரப் படைப்பாளிகளையும், சினிமாக்காரர்களையும் சகித்துக் கொள்கிற கலைஇலக்கிய மேடைகள் மாற்றுச் சிந்தனை கொண்டவராக இருப்பினும், தமிழில் இத்தனை மகத்தான படைப்புகளைக் கொடுத்த ஒருவனை ஏற்க மறுப்பது நம் மனத்தடைகள் அல்லது அடையமுடியாத ஏமாற்றங்கள் என்றே என்னால் பார்க்க முடிகிறது.
நீங்கள் ஆரம்பத்திலிருந்து செயல்பட்ட தமுஎசவிலிருந்து விடுத்து இப்போது டயலாக் என்ற தனியான அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகிறீர்கள். முன்புபோல இல்லாமல் இப்போது செயல்பாடுகளும் கொஞ்சம் குறைவாக தெரிகிறது. இது குறித்து சொல்லுங்கள்?
பவாசெல்லதுரை: நான் இப்போதும் தமுஎசவின் ஊழியன்தான். கடந்த 25 வருடங்களாக நான் தமுஎசவில் செயல்பட்டு இருக்கிறேன். செயல்பட்ட காலங்களில் நான் முதலில் களப்பணிக்கு முதலிடமும் இரண்டாவதாகத்தான் என் படைப்புகளுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தேன். அந்த காலங்களில் நான் மிகவும் குறைவாகத்தான் எழுதியிருக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களில் நான் இலக்கிய களப்பணியை இரண்டாவதாகவும் படைப்பு மனநிலையை முதன்மைப்படுத்தியும் செயல்பட்ட  வருடங்களில் எனது நான்கு தொகுப்புகள் வந்திருக்கின்றன. அதேபோல நானும் என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவும் சேர்ந்து துவக்கிய ‘டயலாக்’ என்ற கலை இலக்கிய சமூக உரையாடல் மையம் தமுஎசவிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது கிடையாது. தமுஎசவிலிருந்து செய்யமுடியாத சில விஷயங்களை செய்யவும் தமுஎசவின் நீட்சியாகவும்தான் நான் இந்த டயலாக் மையத்தை கருதுகிறேன். இன்றைக்கும் திருவண்ணாமலை தமுஎச நடத்தும் எனக்குப் பிடித்த இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெற தவறுவதில்லை. இதை சகதோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் படைப்புகளில் வரும் எளிய விளிம்பு நிலை மனிதர்கள் அன்பும், பெருமிதமும் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், யதார்த்த வாழ்வு குரூரமும், துரோகமும், வன்மமும் நிறைந்ததாக இருக்கிறதே இந்த முரண்பாடு குறித்து.?
பவாசெல்லதுரை: விளிம்புநிலை மனிதர்கள் என்பது சரியானதுதானா என்று எனக்கு தெரியவில்லை. நடுத்தர மக்களால் மிகச்சாதாரணமானவர்கள், அற்ப மனிதர்களாக கருதப்படுகிற எளிய மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை எந்தப் புகாருமின்றி, வாழ்க்கையின் போக்கில் சந்தோஷமாக வாழ்கிறவர்கள். மத்தியதர மேல்தட்டு வர்க்க மக்களும் தன்னை மெத்த படித்தவர்களாக நினைத்துக்கொள்பவர்களும்தான் மாசு படிந்த மனத்தவர்களாகவும் மேலும் மேலும் பொருள்களை வாங்கிக் குவிக்கிற பேராசைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இந்த மனிதர்கள் அப்படி இல்லாமல் எளிமையாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் வன்மமும் குரூரமும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது ஆனால், அவை தேவை கருதி உடனே வெளிப்பட்டு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் உடன் விலகி போகின்றன. மீண்டும் எப்போதும் போல எல்லாம் மறந்து அன்பும் பிரியமும் நிறைந்த சகஜமான வாழ்க்கையில் தொடர்கிறார்கள். என்ன செய்வது என் கண்ணில் படும் எளிய மனிதர்கள் அன்பும் பெருமிதமும் நிறைந்த மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். அதைத்தானே எழுத முடியும்.
எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், திரை ஆளுமைகள் இப்படி பல்வேறுபட்ட ஆளுமைகளின் நட்புவட்டம் இருக்கிறது உங்களுக்கு. இவர்கள் எல்லோரும் அடிப்படையில் என்ன மாதிரியானவர்களாக இருக்கிறார்கள்?
பவாசெல்லதுரை: இவர்கள் எல்லோரும் அடிப்படையில் கலைஞர்களுக்கே உரிய விதவிதமான மனநிலைகளை உடையவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒரே கூரையிலிருந்து  உள்வாங்கிக்கொள்வது என்பது கடினமான விஷயம். ஆனால், பொதுவாக தமிழ்நாட்டில் முன்பின் அறிமுகமில்லாத எந்த வீட்டுக்கு சென்றாலும் ஒருவேளை சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும் என்று நம்புகிறேன். எங்கள் வீட்டுக்கு வருகிற எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு உணவு அளிக்கிறோம். அவர்கள் வெளிச்சத்தில் இருக்கிற ஆளுமையாக இருந்தாலும் பெரிய அளவில் யாருக்கும் தெரியாத ஆளுமையாக இருந்தாலும் எல்லோரையும் சமமாகத்தான் பார்க்கிறேன். இந்திய அளவில் மிக முக்கிய சிற்பியான வல்சன் கூர்மகொல்லேரியும் தமிழின் மிக முக்கியமான கவிஞரான விக்கிரமாதித்தியனும் எங்கள் வீட்டு சிறு அறையில் ஒருவாரத்துக்கும் மேல் தங்கியிருந்த அவர்களின் இடையறாத உரையாடல்கள், அவர்களைப் பற்றிய பொதுவான ஒரு பிம்பத்திற்கு எதிர்மறையான ஒரு வாழ்க்கைமுறையை வாழ்ந்ததும் பற்றி ஒரு அற்புதமான நாவலை எழுதும் அளவிற்கு சுவாரசியமானது.

எழுத்து மொழியாக இனி ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம். தமிழ் பேச்சு மொழியாக மட்டும் இருந்தால் போதுமானது என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் சமீபத்திய அதிரடியான கருத்து  குறித்து?
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்று தலைப்பிட்டு நவம்பர் 4 ‘தி இந்து’ (தமிழ்) இதழில் வந்துள்ள அக்கட்டுரையை மூன்றுமுறை படித்தேன். நண்பர்களுடன் பலமுறை விவாதித்தேன். நான் அறிந்தவரை மேம்போக்காகவோ, சொல்லக் கேட்டோ, முந்தைய வன்மத்தாலோ வந்து குவிந்த எதிர்வினைகள்தான் அதிகம். நாம் பழகியிருக்கிற ஒரு விஷயத்தை இன்னொருவன் எடுத்துரைக்கும்போது நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இக்கட்டுரைக்கு இவ்வளவு எதிர்வினையாற்றும் நாம் Keyboardகளும், எழுத்துருக்களும் கணினி அறிமுகமான இத்தனை ஆண்டு காலத்தில் தமிழில் வரவேயில்லையே? அதுகுறித்து இதுவரை எவ்விதம்  எதிர்வினையாற்றியிருக்கிறோம்? களமிறங்கி போராடியிருக்கிறோம்.
இருந்த போதிலும் இக்கட்டுரையில் சொல்லப்படும் அடிநாதமான மையத்தை நான் மறுக்கிறேன். அரசாலும், மக்களாலும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது என்பதற்காகவே அது எத்தனை மோசமானதாக இருந்தாலும் அதை நாம் கைக் கொள்ளலாம் என்கிற கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. ஆங்கிலம் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுவிட்டது. அதனால் அதையே நம் குழந்தைகளுக்கும் பயிற்சியாக்கலாம் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
ஆயிரம் குறைகள் இருப்பினும் மெக்காலே கல்விமுறை நாடெங்கும் பரவலாக்கப்பட்டுவிட்டது. அதில் இருக்கும் குறைகளைச் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள்  களைவதற்கு வழி சொல்ல வேண்டுமேயொழிய நாம் மறுபடி குருகுலக் கல்விக்கே சென்றுவிடலாம் என்பது அபத்தத்தின் உச்சம்.
எத்தனை விமர்சனங்கள் இருந்த போதிலும் ஜனநாயக ஆட்சிமுறை நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். அதன் தோல்விகள், போதாமைகள், ஏமாற்றங்களை அறிவு ஜீவிகளும், படைப்பாளர்களும் தொடர்ந்து விமர்சித்து அதை செழுமைப்படுத்தி கரத்தாலும் கருத்தாலும் உழைக்க வேண்டுமேயொழிய, மாற்றாக மன்னராட்சியைப் பரிந்துரைப்பதல்ல.
மொழிமீது ஓர் உணர்வு கொந்தளிப்புள்ள தமிழ்ச்சூழலில் இப்படிப்பட்ட அதிரடியான கருத்துகள் எதிர் விளைவையே உருவாக்கும்.
மாற்றாக தமிழிலேயே Keyboard-களையும் எழுத்துருக்களையும் உருவாக்க வேண்டுவது, நம் குழந்தைகளுக்கு நம் மரபான, நவீன இலக்கிய வாசிப்புகளைக் குடும்பங்களிலும், பள்ளிகளிலுமிருந்து துவங்குவது போன்றவற்றுக்கான திறப்பாக ஜெயமோகனின் இக்கட்டுரை அமைந்திருக்க வேண்டுமென்பது என் கருத்து.
ஆனால் நாம் எப்படி எதிர்வினையாற்றியுள்ளோம்? தமிழ் தேசியம் பேசுபவர்கள் கூட ஜெயமோகன் குறிப்பிடுகிற அந்த  Translitration வடிவத்தில்தானே கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் எழுத்துருவைப் பெறுகிறோம். நாம் தினமும் செய்யும் இதையே ஏன் நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரக்கூடாது என்று ஒரு புதிய விவாதத்திற்கு அழைத்தால் உடனே நாம் நீ மலையாளி, ஆர்.எஸ்.எஸ். தாயைக் கூட்டிக் கொடுப்பதற்கு சமம் என்று தனிப்பட்ட தாக்குதலுக்குத்தயாராகிறோம். இந்த மாதிரியான கருத்துகள் எங்கிருந்து எழுகின்றனவென்றால், பல ஆண்டுகாலத் தோல்விகளிலிருந்தேதான். உதாரணமாக இப்போது நம் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வியைக் கற்க வேண்டுமென்கிற ஆசை உள்ளூர கிட்டத்தட்ட எல்லாப் பெற்றோருக்கும் இருக்கிறது. அது அப்பிள்ளைகளின் வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்டதாக இருப்பதால் அதை அடைய சுலபமான வழியை நாமே நம் பிள்ளைகளுக்குக் காண்பித்துத் தருகிறோம். இப்படி பேருக்குத் தமிழையும் முதன்மையாக ஆங்கிலத்தையும் எடுத்துப் படிக்கும் ஒரு மாணவனால் இரண்டிலுமே வெற்றியடைய முடியவில்லை. நான் வாழும் திருவண்ணாமலையில் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களில் தமிழ் நவீன, மரபான இலக்கியங்களைப் பயின்றவர்கள் முப்பது பேர்கூடத் தேறமாட்டார்கள். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பிழைப்பிற்காகத் தமிழ் படித்தாலும் அதிகம் மேலோட்டமான வாசிப்பையே மேற்கொள்கிறார்கள். என் படைப்புகளை எம்.ஃபில். செய்துள்ள ஒரு மாணவன் நான் ஜெயகாந்தனோடு உள்ள ஒரு புகைப்படத்தை அவன் ஆய்வறிக்கையில் பிரசுரித்து எழுத்தாளர் பிரபஞ்சனோடு பவா செல்லதுரை எனக் குறிப்பிட்டிருக்கிறான்.. அந்த ஆய்வேடு அவனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை அவனுக்கு உறுதி செய்திருக்கிறது. அம்மாணவனோடு மிகுந்த சீற்றத்தோடு உரையாடும்போது அவன் ஜெயகாந்தனை, பிரபஞ்சனை ஒரு வரிகூட வாசித்ததில்லை என ஒப்புக்கொண்டான். ஆக தமிழில் இவர்கள் இருவரும் எழுதிய ஒரு வரியைக்கூட வாசிக்காதவன் ஆய்வியல் நிறைஞராக முடிகிறதென்றால் இதெல்லாம் ஒரு மொழியின், இன்றைய கல்வியின் தோல்வியில்லையா?
நாம் எல்லோருமே ஏதோ ஒரு பொதுபயத்தால் உந்தப்பட்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த அன்றைய இரவே கார் டிக்கிகளில் பணத்தை திணித்துக்கொண்டு ராசிபுரத்திற்கும், நாமக்கல்லுக்கும் பயணித்து தனியார் கல்வி நிறுவனங்களின் கல்லாப்பெட்டியை நிரப்புபவர்களாகவே மாறியிருக்கிறோம். இக்கடும்போட்டியில் தன் பிள்ளைகள் பின்தங்கி விடக்கூடாது என்ற உந்துதலில் நாமே நம் பிள்ளைகளைப் படுபாதாளத்திற்குத் தள்ளிவிடுகிறோம். காலத்தின் பின் நின்று அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு நிச்சயமாக நம்முன் பதிலிருக்காது. பணக்காரப்பிள்ளைகளின் முன் தலைகுனிந்து நிற்கும் பெற்றோர்களாக மட்டுமே நாம் இருக்கமுடியும். ஏனெனில் இந்த பண சம்பத்தித்தை அவர்களின் பால்யம் அழித்து, உறவுகளை இழந்து, விளையாட்டுகளை மறந்து, சாவு வாழ்வுகளைப் புறக்கணித்து நாம் அவர்களுக்கு ஈட்டி தந்திருக்கிறோம். இப்பொருளீட்டல் பார்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், நுகர்வு கலாச்சாரத்திலும் கரைந்து இத்துரோகமிழைத்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு இப்பிள்ளைகளாலேயே அனுப்பவைக்கிறது. இதைத் தானே நாம் ஓடிஓடிச் செய்துகொண்டிருக்கிறோம்.
ஜெயமோகனின் இக்கட்டுரைமீது நிகழ்ந்த இக்கொந்தளிப்பு இவைகளின் மீதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதே என் கேள்வி?
சமீபத்தில் உங்கள் கதைகள் கட்டுரைகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மலையாளத்திற்கும் மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. உங்கள் எழுத்துகளுக்கு மற்ற மொழி வாசகர்களிடம் என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது?
திருவண்ணாமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நிரந்தரமாகவும் வந்து போய்க்கொண்டும் தங்கியும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கோவில், ரமணர், யோகிராம் சுரத்குமார் மட்டுமில்லாமல் இவர்களைத் தாண்டி திருவண்ணாமலையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நினைக்கிறார்கள். ஆனால், இவைகளைத் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு நாம் கொடுக்க முடியவில்லை. இந்த சூழலில் என்னுடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு நான் சம்மதித்தேன். திருவண்ணாமலையில் எனது நண்பன் ஜே.பி. குவாவாடிஸ் என்ற பல்சமய உரையாடல் மையத்தை நடத்திக்கொண்டிருக்கிறான்.  அங்கே எனது ஆங்கில பொழிபெயர்ப்பு நூல் வெளியானது. அங்கு வந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனது புத்தகத்தை வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார்கள். அவர்களுக்கு திருவண்ணாமலையைப் பற்றி அதுவரை இருந்த அண்ணாமலையார் கோவில், ரமணர், யோகிராம் சுரத்குமார் என்ற பிம்பங்களைக் கடந்து திருவண்ணாமலையை சுற்றியிருக்கும் கிராமங்கள், நரிக்குறவர்கள், குறவர்கள், எளிய மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை சூழல் அறிமுகமானது. அதற்குப் பிறகு அவர்களிடமிருந்து நிறைய தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும்  வந்துகொண்டு இருக்கிறது. அடுத்து எனது கட்டுரைகள், கதைகள் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் வெளியாகும் இதழ்களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. இதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாசகர்களின் அன்பும் கிடைத்திருக்கிறது.
எனது கட்டுரைகள் மலையாள இதழான தேசாபிமானியில் ஸ்டேன்லி, டாக்டர் ரகுராம் ஆகியோர்கள் மொழிபெயர்த்து தொடராக வெளிவந்திருக்கிறது.  ஒரு முறை திருச்சூருக்கு அருகில் முண்டூர் என்ற கிராமத்தில் இருக்கும் எனது நண்பரின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தோம். அங்கே தேசாபிமானியில் எனது கட்டுரைகளைப் படித்து அறிந்திருந்த நான்கு இளைஞர்கள் நான் வந்திருப்பதை தெரிந்து அதிகாலையில் வந்து சந்தித்து எனது எழுத்தைப் பற்றி உரையாடியது மகிழ்ச்சியான தருணம். மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் கிடைத்த வாசகர்களின் அன்பு ரொம்ப மகிழ்ச்சியானது.

சமீபத்தில் எனது எல்லா நாளும் கார்த்திகை மலையாள மொழிபெயர்ப்பு தேசாபிமானியில் தொடராக வெளியாகி அது கேரள வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கேரளாவின் மஞ்சேரியில் எனது புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு 500 க்கும் மேற்பட்ட மலையாள வாசகர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் எனது எழுத்தைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். சில வாசகர்கள் என்னைவிட வயதில் பெரியவர்கள் என் காலில் விழுந்து வணங்கியபோது நான் உடனே பதற்றமடைந்து தடுத்தேன். இந்த மாதிரியான காலில் விழும் கலாச்சாரத்திற்கு எதிரானவன் நான். அதற்கு எதிராகத்தான் எழுதுகிறேன். ஆனால், நீங்கள் காலில் விழுகிறீர்கள் வேண்டாம் என்று சொன்ன போது அவர்கள் ”எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாங்கள் ஒருபோதும் அரசியல்வாதிகளின் காலில் விழமாட்டோம். ஆனால், ஒரு எழுத்துகாரனின் காலில் விழுவதை மரியாதையாக நினைக்கிறோம்.” என்று சொன்னது கேரள வாசகர்கள் எழுத்தாளனை சமூகத்தின் ஆன்மாவாக மதிக்கும் கௌரவத்தை பெற்றபோது மகிழ்ச்சியில் மெய்சிலிர்த்துப்போனேன். அடுத்து கேரளாவின் இரண்டு முக்கிய இதழ்களில் தொடர் எழுதவும் கேட்டிருக்கிறார்கள். நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் தமிழ்நாட்டின் ஒரு மூலையில் எழுத்தாளனாக வாழும் எனக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசும் வாசகர்களிடமிருந்து கிடைத்திருக்கும் நட்பையும் அன்பையும் நினைக்கையில் இந்த வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் வாழ்வாகதாக நினைக்கிறேன்.

Monday, December 16, 2013

பாமயனுடன் ஒரு மாலை


மூன்று மணிக்குத் துவங்க வேண்டிய உரையாடல் நான்கு மணிக்கு ஆரம்பித்தது. வழக்கமாக இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் ஒரு முகமும் இல்லாதது புதுசாயிருந்தது. விவசாயிகள் அறுபது எழுபது பேர் சேற்று கால்களுடனும், அழுக்கேறிய வேட்டி லுங்கிகளுடனும் குழுமியிருந்தனர். எங்கள் நிலத்தை பராமரிக்கும் சோமுவுக்காக வெகு நேரம் காத்திருந்தோம். நான் முதலில் இயற்கை வேளாண்மைக்கு சோமு, அவர் மனைவி கண்ணம்மாவின் மனதையும்தான் உழ வேண்டியிருந்தது. அதனாலேயே இந்த நீண்ட காத்திருத்தல்.
அநியாயத்திற்கு வெகு எளிமையாகவும், மென்மையாகவும் இருந்தார் பாமயன். நான் கற்பனை செய்திருந்த மனிதர் அவரில்லை. நான் ஒரு சிறு உரையாற்றினேன். அருகில் நாற்பது வருடம் இதில் உரமேறிய ஒரு மனிதனை வைத்துக் கொண்டு பேசுகிறேன் என்ற கவனமிருந்தது எனக்கு. ஆனாலும் எனக்கும் விவசாயத்திற்குமான உறவு அக்கரையை துவக்கத்திலேயே உடைத்தது.
தோழர் சொன்னது போல என வெகு இயல்பாய் தன் உரையை ஆரம்பித்தார் பாமயன். உள்ளடங்கியக் குரல், விவசாயிகளால் எட்டமுடியாத மொழி, ஆனாலும் அவர்கள் எல்லோரும் அம்மூன்று மணி நேரமும் அவருடனேயே இருந்தார்கள்.
அவர் ஒரு முறையும் உச்சரிக்கவில்லையெனினும், சேறும், வரப்பும், களையும், வயலும், உரமும், நீரும், சாமையும், கேழ்வரகும் அவரிடமிருந்து வந்தன. மிக மிக நிதானமாகப் பேசினார்.
நம் பரம்பரிய விவசாயம் எத்தனை மகத்தானது, யார் யாரெல்லாம் இதை எப்படி எப்படியெல்லாம் சீர்குலைத்தார்கள், நாம் எவ்விதம் இவர்களிடம் சிக்குண்டோம்? எதையெல்லாம் இழந்தோம்? இனி இழப்பதற்கு இந்த உப்பு சப்பற்ற வெறும் நிலம் தவிர வேறென்ன இருக்கிறது நம்மிடம்! அவரின் கேள்விகளில் நான் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதை உணர்ந்தேன்.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு மீந்துபோன வெடி உப்பைதான் ரசாயன உரமாக மாற்றினார்கள். இதையும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தி, நம் கைகளாலேயே நம் நிலத்தைப் பாழ்படுத்திய சூழ்ச்சியை விளக்கிக் கொண்டிருக்கையில்,
‘‘பூச்சி மருந்து அடிக்கலைன்னா, பூச்சிங்க நெல்பயிரை ஒரே நாளில் அரித்து வெள்ளையாக்கிருதே அதை எப்படி சார் போக்கறது?’’ என்ற அவசர அபயக்குரல் நாலா பக்கங்களிலிருந்தும் கேட்டது.
நாற்பது ஐம்பது வருடங்களாக சேறும் சகதியுமான குட்டையில் ஊறினவர்கள் நாம். ஒரே நாளில் ஒரு ரட்சகர் வந்து நம்மை தூய்மையாக்கி, சொஸ்த்தப்படுத்தி விடவேண்டுமென்ற அவசரமது.
பாமயன் மாதிரி தன் வாழ்நாளின் எல்லா நாட்களையும் இதற்காகாவே இழந்தவர்கள் ஒரு போதும் நிதானமிழக்கமாட்டார்கள்.
அவர் தன் பேச்சை இன்னும் சுலபப்படுத்த முயன்றார். மேலும் பூச்சிகளை மனிதன் எவ்வளவு முயன்றாலும் முற்றிலும் அழித்துவிட முடியாது. முடியுமெனில் நாம் ஏன் கொசுவை இன்னும் அழிக்கவில்லை. ஆயிரக்கணக்கான வகையுள்ள நம்மால் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து அல்ல. நம்மிடமே உள்ள நம் பாரம்பரிய முறைகளை, அனுபவங்களை வைத்து மட்டும்.
‘‘களைகள் வயலுக்கான வரப்பிரசாதம்’’ என்று நிறுத்தி விவசாயிகளின் கலவரமடைந்த முகங்களைப் பார்த்தார்.
ஆமாம், எந்தெந்த இடங்களில் எந்தெந்த சத்து மிகுகிறதோ அங்கெல்லாம் அக்களைகள் செழிந்து வளர்கின்றன.
 “அது ஒரு விவசாயிடம் தன் செழுமையைப் பேசுகிறது. அவைகளைப் பிடுங்கியெடுத்து திரவமாக்கி, மீண்டும் வயல்களுக்கே தெளியுங்க. பயிர் சமப்படும். வயலிலிலிருந்து பிடுங்கப்பட்ட அக்களைகளை நீருற்றும் பைப் அருகிலேயே குவித்து வையுங்கள். அவைகள் அழுகி மீண்டும் நிலத்திற்கே போகும். எங்கெங்கே எந்தெந்த சத்து குறைகிறதோ அதை இவை இட்டு நிரப்பும்” இப்புதுத்தகவல் எல்லோரையும் அதிசயிக்க வைத்தது.
வயல்களிலும், செடிகளிலும், மரங்களில் இருந்தும் அகற்றப்படும் களைகளை, தழைகளை ஒருபோதும் எரிக்காதீர்கள். அது தன் எடையில், வீர்யத்தில் நூறில் ஒரு பங்காக குறைகிறது. அப்படியே எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே, அதற்கே திருப்பித்தாருங்கள். பயிர் தன் தாவர கரங்களை உங்களை நோக்கி நீட்டி அதை வாங்கிக் கொள்கிறது. தயவுசெய்து அதன் மொழியை புரிந்து கொள்ள முயலுங்கள். அது பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள். உங்களையன்றி வேறு யாரிருக்கிறார்கள் அவைகளுக்கு. உங்கள் குழந்தைகளை வேரோடு அழிக்க  உரக்கடைகளுக்கு நீங்களே போவீர்களா?
சில இடங்களில் ஒரு கவிஞனுக்கும் மேலான இடத்தை சுபலமாக அடைந்தார்.
நம் கான்வென்ட் குழந்தைகள் பாவம். காரிலோ, ஆட்டோவிலோ, ஸ்கூல் வேனிலோ தினம் தினம் ஒரே பாதையில் பயணித்து, ஒரே ரைம்ஸ் பாடி, ஒரே பாடம்படித்து, அதே வாகனங்களில் திரும்பி, வீட்டுக்குள் அடைந்து போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அவர்களை சமூக வாழ்வை மறுதலிக்க நாமே பழக்குகிறோம். வனங்களில் சுற்றித் திரிந்த யானைகளைக் குழிவெட்டிப் பிடித்து கொண்டு வந்து தெருக்களை சுற்றி பிச்சையெடுக்க சொல்லிக் கொடுத்த குரூர மனம் படைத்தவர்கள்தானே நாம்?
ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மாத சம்பளம் பெறும் ஒரு ஐ.ஐ.டி. பேராசிரியர் நினைத்தால் சென்னையிலோ, மும்பையிலோ தூய்மையான, நல்ல குளிர்சியான, வாகனப் புகையில் நனையாத ரெண்டு இளநீரைக் குடித்துவிடமுடியுமா?
அது நமக்கு மட்டுமே வாய்த்த பாக்யம். ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைபார்க்கிறவனும், நான் முன்பு சொன்ன கான்வெண்ட் பையனும் ஒன்றுதான். ஒரே வித்தியாசம் அவன் கால்சட்டைப் போட்டிருப்பான். இவன் பேண்ட் போட்டு இன் பண்ணி டை கட்டியிருப்பான். ஸ்கூல் பையனைக் கூட்டிப் போக மஞ்சள் கலர் வேன் வரும்.ஐ.டி. பையனைக் கூட்டிப் போக நீலக்கலரில் கம்பெனி வேன் வரும், அவ்வளவு தான் வித்தியாசம். ஒரே பாதை, ஒரே அலுவலகம், ஒரே கேண்டீன். என்றும், நாள் முழுக்க கசங்காத அதே ‘டை’யோடு மீண்டும் கம்பெனி வேன். மாறாத அதே சாலை, அறை அல்லது வீட்டையடைதல். மீண்டும் இன்னொரு நாள். இவர்களுக்கு செத்துப்போனால் கூட எந்த சுடுகாட்டுக்கு எப்படி கொண்டுபோக வேண்டும் என்றுகூட தெரியாது.
இவர்கள் கான்வெண்டில் படித்து, கம்பெனியில் வேலை பார்த்து எதை தான் அடைந்தார்கள்? ‘பீட்சா’ வையும், கே.எப்ஃ.சி.யையுமா?
 ஒன்றுமேயில்லை. அதற்காக எல்லாவற்றையும் இழந்தார்கள்.
 பறக்காத ஒரு இனத்தை நாம் எப்படி கோழி என்பது? ஒரு நாட்டுக் கோழியின் வாழ்வை கவனித்து பாருங்கள். அதுவே தன் முயற்சியில் முட்டையை உடைத்துக்  கொண்டு வெளிவருகிறது. துருதுருவென தெருவெங்கும், குப்பையெங்கும் அலைந்துத் திரிந்து தனக்கான இரையைத் தானே தேடிக் கொள்கிறது. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எப்படியெல்லாம் ஓடி ஒளிந்து ஆட்டம் காண்பிக்கிறது. தன் சக கோழியோடு காதல் கொள்கிறது. கருத்தரித்து முட்டையிடுகிறது.
இது எதுவுமின்றி ஒரு கூண்டில் அடைபட்டு, லாரிகளில் ஏற்றி அடைக்கப்பட்டு, வரும் வழியிலேயே செத்து உதிரும் ஒரு இனத்தை எப்படி நாம் கோழிகளோடு ஒப்பிட முடியும். வேண்டுமானால் அவைகளை உயிருள்ள பிளாஸ்டிக் குப்பைகள் என அழைக்கலாம்.
‘‘பயிர்ல பூச்சி வந்தா என்னா பண்றது, அத சொல்லு சார்’’ ஒரு விவசாயி அவரை இடைமறிக்கிறார்.
பாமயன் ஒரு நிமிடம் அந்த சிமெண்ட் போடப்பட்ட களத்தையும், அதன் மீதமர்ந்திருந்தம் விவசாயிகளையும் உற்றுப்பார்க்கிறார்.
ஒவ்வொரு முகத்திலும் இழப்பின் வலியும், சீக்கிரம் மீளுவதற்கான முயற்சியும் தெரிகிறது. ஆனாலும் இத்தனை வருடங்களாக கட்டிக் காத்ததை தப்பேயெனினும் சுலபத்தில் விடமுடியவில்லை.
இயற்கை விவசாயம் என்பது உங்களை விடவும், புதிதாய் விவசாயத்திற்கு வரும் இளைஞர்களுக்கே சுலபத்தில் பிடிபடுகிறது.
ஏன்?
ஏனெனில் நீங்கள் ஏற்கனவே நிரம்பித் ததும்புகிறீர்கள். உங்கள் பாத்திரம் விஷநீரால் நிறைந்திருக்கிறது. நன்நீரை  அடைய மொத்தப் பாத்திரத்தையும் சொட்டு மீதியின்றி நீங்களே காலி செய்ய வேண்டும். அதன் பிறகே புதிய நீரை அதில் நிரப்பமுடியும்.
புதிதாய் விவசாயத்திற்கு வருபவர்களின் பாத்திரம் காலியானது. மட்டுமல்ல, தூய்மையானது. நேரடியாக அதில் நன்நீர்தான் நிரம்பும்.
எனக்குப் புரிந்தது.
சொற்கள் அவர் நாவுக்குள்ளேயே சுழன்றது. ஆனால் நீரிலிருந்தே வெளிக்காற்றை சுவாசிக்க தன் செவ்விதழ்களை விரித்து காட்டும் மீன்களைப் போல நாங்கள் அதை சுவாசித்தோம்.
கமலையில் நீரைத்த நம் பண்பாடு மிக உயர்வானது. யாருக்கும் தீங்கு நினைக்காதது. ஆழ்துளை கிணறுகளை பூமியில் அழுத்தி, அழுத்தி இல்லாதவனிடமிருந்த நீரை இருப்பவன் அபகரித்தான். நீரிழந்த உழவனை அதை விற்றுவிட்டு அல்லது விட்டுவிட்டு மூட்டைத் தூக்கவும், டெலிஃபோன் கேபிள் புதைக்கவும் பள்ளம் தோண்டவும், சித்தாள் வேலைக்கும் துரத்தினோம். மந்தை மந்தையாய் நம் நகர பேருந்து நிலைய கட்டாந்தரையில் அகதிகளைப் போல இரவுகளில் உழவனைப்படுக்க வைத்தோம். பெங்களூருக்கும், சீமோகாவுக்கும் பஸ் ஏற்றினோம். மாமரத்தடியில் காத்தாட படுத்துக்கிடந்த மத்தியானங்களை அவன் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டின் மூத்திர நாத்தத்துடன் பெங்களூரில் இருப்பு கொள்ளமுடியாமல் திணறுகிறான்.
தன்மரத்திலிருந்து இறக்கிய தூய பனங்கள்ளை தன் மரத்தடி நிழலிலேயே அமர்ந்து ஒரு மண்டலமருத்தி மகிழ்ந்தவனுக்கு சீமை சாரயத்தை நாம்தான் பழக்கினோம். பரந்துவிரிந்த தன் நிலப்பரப்புகளில் ஏதாவதொரு புதர்மறைவில் உடற்கழிவைப் போக்க உட்கார்ந்தவனிடம் கக்கூஸ் கட்டி அதற்கும் ஐந்து ரூபாய் கட்டணம் வாங்கி பீ நாத்தத்தில் உழல விட்டோம்.
பிடிவாதமாக போக மறுத்தவர்களை, அவர்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரனுக்கு ஈன விலைக்கு விற்க வைத்து, ‘தென்றல்நகர்’ ‘தீபம் நகர்’ என ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட இடங்களில் போடப்பட்ட தென்னங்கீற்று கொட்டைகளில் செக்ரியூட்டி ட்ரெஸ் போடவைத்து ஒரு உழவனை, மண்ணோடு சம்மந்தப்பட்டவனை, எத்தனை குரூரமாக பார்க்க ஆசைப்பட்டோமோ அத்தனை குரூரமாக பார்த்துவிட்டோம்.
ஒருமுறை இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வரோடு திருச்சியிலிருந்து ஒரு நீண்ட கார் பயணம் போக வாய்த்தது, ஐந்து நிமிட எங்கள் மௌனத்தை அவர்தான் உடைத்தார்
 “என்ன பண்றீங்க தம்பி?”
       “E.B.யில வேல பார்க்கிறேன் அய்யா, ஆனா அடிப்படையில விவசாயி”
 “அதென்னா அடிப்படையில விவசாயி?”
 “அப்பா வாத்தியாராவும், விவசாயியுமா இருந்தார். நான் E.B.யிலேயும், விவசாயத்துலேயும் இருக்கேன்”
‘‘அப்படி ஆக்கிடுச்சி தம்பி நம்ம விவசாயம். தொரத்துது. எத்தன நாளக்கிதான் அது நம்பள தொடர்ந்து கடங்காரனா ஆக்கறதை சகிச்சிக்க முடியும்? ஆனா ஒருபோதும், என்ன கஷ்டத்திலயும் இருக்கிற நெலத்தை வித்திடாதீங்க தம்பி’’
 “ஒருபோதும் மாட்டேன்ய்யா, இருக்குற நெலத்தை வித்து புள்ளைக்கு மெடிக்கல் சீட்டோ, என்ஜினியரிங் சீட்டோ வாங்குற எண்ணமில்லை. அவங்களுக்கு சீர் பண்ணப்பட்ட நெலமும், தேனா இனிக்கிற ஊத்து நெறைஞ்ச கெணறும், ஒவ்வொரு நாளும் நானும் ஷைலஜாவும் பாத்து பாத்து வளத்த மரமும் மட்டுந்தான் நாங்க வச்சிட்டு போற ஜீவாமிர்தம்”
அவர் கைகள் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டன. ‘‘தமிழ்நாடெல்லாம் சுத்தி சுத்தி இதத்தான் சொல்றேன்.  அவன் நெலத்தை அவனே ஈன வெலைக்கு வித்துட்டு அவனே செக்ரியூட்டியா நின்னு காவ காக்கறான்’’ சட்டென அவர் கண்களைக் கவனித்தேன். நீர் ததும்பி நின்றது.
அதற்கெல்லாம் பெயருண்டா என்ன? எழுதிவிட எழுத்துக்குத்தான் பலமுண்டா?