Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

Saturday, November 30, 2013

என் தோழனிடமிருந்து நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

மலை மனிதனோடு ஒரு அக பயணம்                                                                                                                                                          
                                                                    ஜி.செல்வா


ந்தைப்பொருளாதாரம், அடிப்படைவாதத்தோடு கூட்டு வைத்து நடத்தும் வெறியாட்டத்தில் மனிதம் சிக்கி வதைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்பும் பாசமும் விளைந்த மண்ணில் குரோதம் தலைவிரித்தாடுகிறது. தோழமை, நட்பு கசியும் காதல் , ஆறுதல் சொற்கள் வேண்டிநிற்கிறது மனம்.இதற்குத்தானே இதோ என நம்முன் நிற்கிறது நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” - பவா. செல்லத்துரையின் சிறுகதைத் தொகுப்பு பதினோறு கதைகளுடன். பாறைக்கும், மண்ணுக்கும் கலைகளுக்கும் உயிர் கொடுக்கும் மக்கள்! அவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தெறிக்கும் வெள்ளை பற்களின் ஒளி. இவைகள் தான் பவாவின் கதைக்களம்.
கதைகளை ஒருசேர ஒரேமூச்சில் வாசித்துவிடுவேன் என நுழைந்தால் ஒவ்வொரு கதை யும் தன்னை வெளிப்படுத்தியவுடன் வாசித்தவர் ஒரு விதமான உணர்வில் சிந்தனை வெளியில் பயணிக்கும் போது மற்ற கதைகள் கை கொட்டிச்சிரிக்கும்.சந்தைப் பொருளாதாரம் நம் பண்பாட்டை கலாச்சார நிகழ்வுகளை சீரழித்த வரலாற்று சாட்சி ஏழுமலை ஜமாகதை. பாரம்பரிய கலைகள் கூத்துக்கள் கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் காரணத்தை நறுக்கென சொல்லிச் செல்கிறார் பவா. அத்தோடு கலைஞனை கலையை நேசிக்கும் மக்களின் பிரியத்தை வெளிப்படுத்தி நெஞ்சை கணக்க செய்கிறார்.கொத்துக் கொத்தாய் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் நடத்தும் சேட்டை மிக நுட்பமாக வேறு வேறு மனிதர்கள்கதையில் வெளிக் காட்டப்பட்டுள்ளது.அப்பா - மகனின் உறவுகள், ரத்தமும் சதையுமான பேச்சுக்கள் ... மகன்கள் அப்பாவிட மிருந்து வேறுபடும் தருணங்கள்... இணையும் புள்ளிகள் இப்படியாய்... இதையும் தாண்டி இரண்டு கதைகள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது. வாழ்வு அதுவரை தந்திராத சுவையை அவர்களுக் காக வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்”. இந்த பிரியத்தை அனுபவிக்க , அவசியம் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகளில்பயணிக்க வேண்டியுள்ளது.வாழ்வின் எந்த தருணத்தில், எந்த புள்ளியில் மதத்தின் அரவணைப்பில் மனிதன் அடைக் கலம் தேடுகிறான்? அதேமனிதன் எந்த பொறித்தட்டில் கண்கள் தெறித்து மதத்தின் கட்டுப் பாட்டில் சாதியம் விதைத்திருக்கும் விஷத்தை கருவறுக்கிறான்? இரண்டும் இரண்டு தளத்தில் இரு கதைகளின் வழியே.

ஜப்பான் கிழவன் காடு காற்றின் சத்தத்திற்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறி கொள்ள வைத்த தருணத்தில்தன்கண்ணிகளை பையில் பத்திரமாக வைத்து மதத்தில் ஆறுதல டைகிறான். குளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு மருவு தீட்டு படாம காப்பத்தி வருவைதைப் பற்றி அந்த காவலுக்கு வேலை வைக்காம இந்தப் பறத்தெரு.. இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது”.. “ பறத் தெருவை நாலா பிரிச்சி பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாலும் மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க எழுதும் கடிதம் சரியா வந்து சேராததனால மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுத”.. இப்படியாகத் தொடரும் தலைமுறை கொடூரத்தை சாதியத்தை மதத்தின் பிடியிலிருந்து விலகிவந்து களம் கண்ட துசிங்காரக்குளம்”. வாசித்தவுடன் கடக்க முடியாமல் தலைமுறை பாரத்தை சுமக்க வைக்கிறது.மனிதர்களின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இயற்கையோடு சேர்த்து பின்னிப் பிணைந்து இழைத்த கதை சத்ரு”,. மனிதம் ஒரு சொட்டாக உதிர்ந்து பிரவாகம் எடுக்கிறது. இந்தப் பிரவாகத்தில் மூழ்கி தெப்பலாக எழுந்து நிற்கும் போது நமது முகங்கள் வன்மமற்று குழந்தை முகங்களாகி புன்னகை பூத்திருக்கும்.

முகம்கதையில் வரும் அம்முகுட்டி முகம் போலிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.மலை, பனிக்காலம், இருட்டு, தார்சாலை, புழுதிதெரு, காடு, குளம், வயல் இப்படியாய் இவற் றோடு காய்ந்த தலைகள், ஈர மனிதர்கள், வறண்ட வயிறு, மனிதம் பூத்து குலுங்கும் சிரிப்பு, வாருங்கள்.. இந்த மலை மனிதனோடு ஒரு அகப்பயணத்திற்கு!இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்டபிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் நூற்றாண்டுச் சிறுகதை வரலாற்றை கச்சிதமாக சொல்லி செல்வது சிறப்பு.

Wednesday, May 13, 2009

மதிப்புரை : த. எ. மாலதி.

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை.- த. எ. மாலதி.

கலைமனம் என்பது மனித மரபுகளை, கட்டுப்பாடுகளைத் தாண்டி தனக்கான உள்ளுணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்திக் கொள்வது கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல்வேறுவித போராட்டங்கள் நடைபெற்றாலும் தனக்கான வாழ்வியில் பாதையில், இழந்த உணர்வுகளின் ஆழத்தில் மீண்டும் மனம் சென்று இழப்புகளை மீட்டெடுக்க முயல்கிறது. ஏனோ காலச் சக்கரத்தின் இறுகிய பற்களில் ஒவ்வொரு தனிமனிதனின் விருப்புகள் துண்டிக்கப்பட்டு அந்தர வெளிகளில் தொங்க வைத்துவிடுகிறது. மரபுகளற்ற வெளிகளில் திரைகளின்றி பரிபூரணத்துவத்தோடு இயங்கும் முகங்கள் சிலவே. கலைஞன் பவாசெல்லதுரையும் ஆழ்மனப் பதிவுகளை மீட்டுக் கொணர்ந்து, மனிதத்தை மறந்த அரைமனிதர்களையும், தன் இயற்கை வாழ்வைத் துய்த்த அலாதியான தருணங்களையும், தன் உணர்வுகளோடும், ஆளுமையோடும் வாழும் பெண்களையும் இவர் கதை பரப்புகளில் நிரம்ப வைத்துள்ளார்.

பவாவின் கதைகளில் தனிச்சிறப்பாக வெளிப்படுவது, ஒவ்வொரு கதையின் உள்ளூட்டத்திலும் வீழ்படிவாக விளங்குவது மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சியும், மனித குலம் இயங்குவதற்கு ஆதார அச்சாணியாய் இருக்கும் தூய அன்பும், தனிமனிதனின் அடிப்படைத் தேவை நிறைவேறாதபொழுது, வன்முறை உயிர்த்தெழும் தீவிரமும், நேசமற்ற மனிதர்களின் உயர்சாதி இறுக்கத்தின் வெறித்தனமும், ஒவ்வொரு இழைகளாக மனிதர்களை இணைத்து இறுக்கிப் பிடித்து வாழ்வைக் கொண்டாட வைக்கும் காதலும், தம் வாழ்வோடு ஒருங்கிணைந்த பண்பாட்டுக் கலைகளும், அவைகள் தனிமனித உணர்வுகளில் உயிரோடு கலந்திருக்கும் பாங்கும், இயற்கையோடு கரைந்து வாழ்ந்த வாழ்வனுபவங்களின் நம்பகத் தன்மையும், நேசமும் உயிர்ப்பும் என்று விரவிக் கொண்டிருக்கும் பல உணர்வுகள் எச்சத்தில்...

தன் மண்ணின் விழுமியத்தோடும், இயற்கையோடும் கலந்த தன்மையால் பவாவின் கதைகளில் மாறாத உயிர்ப்புத் தன்மை மிளிறிக் கொண்டேயிருக்கிறது.
என் மனவெளிகளில் ஓயாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளில் சில "முகம்"கதை சராசரியான மனித இயல்பை, குடும்ப நிறுவனத்தில் மனித உணர்வுகள் சிதைக்கப்பட்டு தன் மனம் சார்ந்த வாழ்வை வாழ முடியாத மனிதனின் இயல்பும் முகமுடி அணிந்து அருவமாய் இயங்கும் உறவுகளின் போலித் தனமும் வெளிச்சமிட்டுக் காட்டி தன் சுய முகத்தை தொலைக்கும் மனிதர்களை குழந்தை மனத்தின் புனிதத்தை வெளிப்படுத்தி நம் முகத்திரையை கிழிக்கிறார்.

கபடமற்ற மனிதனின் உணர்வுகள் உறிஞ்சப்பட்டு ஆதிக்க வெறியர்களால் சுரண்டப்படும் அவலமும், அதனால் அவரைச் சார்ந்துள்ள குடும்பம் சிதைவுறும் அவலத்தையும், உள்ளத்தை மறைத்து உதட்டளவில் உரையாடும் நவீன நாகரிகத்தின் இழிதன்மையும் கலைத் தன்மையோடு வெளிப்படும் "வேறுவேறு மனிதர்கள்" ஒரு முக்கிய பதிவு.

அன்பைப் பருக முடியாத குழந்தைகளின் ஏக்கத்தையும், மன உலகத்தையும் பதிவு செய்து, தடம் மாறும் வாழ்வின் வலிகளை வெளிப்படையாய் காற்றின் அதிர்வுகளில் செவிப்பறைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்து, விளிம்புநிலை மக்களின் வலிகளை இனங்காட்டுகறது "மண்டித்தெரு பரோட்டா சால்னா"

கலைஞனின் உயிரோடும், உணர்வோடும் கலந்திருப்பவை கிராமியக் கலைகள். தலைமுறை, தலைமுறையாய் இதிகாசங்களையும் புராணங்களையும் நடித்துக் காட்டி, மனிதர்களின் ஆன்மாவோடு கலநது புத்துயிர்ப்பூட்டி, உழைப்பின் கடுமையை மறக்கச் செய்து ஆடலில் மகிழ்ச்சிப் பிரவாகத்தை கண்டடைவது கலைமனம்.
கலைகளின் இழப்பு, பண்பாட்டைச் சிதைத்து நாகரிகப் போர்வையின் விளிம்பில் சிக்கி, தத்தளிக்கும் மனங்களை வெளிக் கொணர்கிறது "ஏழுமலை ஜமா" எழுத்தோவியம்.

மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் வர்க்கத்தின் உச்சக்கட்ட கோரப் பற்களை உடைத்தெறிகிறது "சிங்காரக் குள மல்லிகாவின் ஆண்மைத் திறம்". ஆம், பலவேளைகளில் ஆண்கள் ஆமையாய் உள்ளொடுங்கும் நிமிடங்களில் பெண்களின் புலித்திறம் வெளிப்பட்டு வரலாற்றின் கண்களை விழிக்கச் செய்கிறது. இதோ ஒரு தலைமுறையின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது சிங்காரக்குளம். இரட்டைக் குவளை முறையும், தீட்டும், ஏளனப் போக்கும், போராட்டமும் என பல வலிகளின் உட்பிரிவுகளை ஒரு முகமாய் தாங்கித் துயருரும் அடித்தள மக்களின் உணர்வுகளை அப்பட்டமாய் விளக்கிக் காட்டுகிறது சிங்காரக் குளம். பெண்மையின் ஆற்றலை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளும் பவாவின் நேர்மை பாராட்டிற்குரியது.

காட்டு வாழ்க்கையை அங்குலம், அங்குலமாய் துய்த்துப் படர்ந்திருக்கும் கலைமனம் அவற்றின் ஏறற, இறக்கங்களையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தி, மனித உணர்வுகள் நாகரிக முதிர்ச்சியில் செயல்படுவதாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் இயற்கை மடியில் தவழ என்றுமே மறுப்பதில்லை. தாய்மண்ணின் மடியோடு தவழ்ந்து, தவழ்ந்து உறைவதையே பெரிதும் பேறாகக் கருதுகிறது.

"ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்" வாசித்து முடித்தவுடன் என் மனத தோணிகளில், ஆயிரமாயிரம் தேவதைகள் வெண்சிறகோடு சிறகடித்துப் பறந்து பயணிப்பது போன்ற லயிப்பு.நிறைந்த ஆசைகளின் வெளிப்பாடுகள் கற்பனை வெளிகளில் சரம்பாடி இதம் சேர்க்கிறது கவிமனத்தில் இழந்த அன்பினை அழகினை மீட்டுக் கொணர்ந்து சுகம் சேர்க்கிறது நினைவின் அதிர்வுகளில் ராஜாம்பாள் என் நினைவுக் கிளைகளிலும் தொற்றி, உணர்வுக் காம்பினைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாள். என் இரவின் மணித் துளிகளை இனிமையாக்கி மகிழச் செய்தது இக்கதை. இதுதானே படைப்பின் உச்சம்.
தன் படைப்பின் மூலம் வாசிப்பை ருசிபடுத்தலே கலைஞனுக்குக் கிடைக்கும் வெற்றி. இதனுள்ஒரு சாதி பேதத்தை தாண்டும் உயிர்மீட்டும் மனிதம் வெளிப்பட்டு வாழ்வியல் குறிக்கோளை எடுத்துக் காட்டும் திறம், பவாவிடம் வாய்த்துள்ளமையால், ஒரு படைப்பாளனாக வெற்றி பெற்றிருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம், தனியுடைமை ஆக்கப்பட்டு சூரர்களின் சொர்க்கமாக சமூகம் மாறும்போது, உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகளில் குருதிகளைத் தேக்கும் மனிதர்கள் தடம் மாறுவது இயற்கையே. அப்படித்தான் "சத்ரு" கதையிலும் இருளன் சித்தரிக்கப்பட்டுள்ளான். இப்பதிவு சமூகத்தில் வாழும் எத்தனையோ அப்பிராணிகளை வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கை பொய்க்கும் நிலையில் மனித சமூகம் வன்முறைச் செயல்பாடுகளில் இறங்கி மனித நேயத்தைத் தொலைக்கும் அவலத்தை சித்தரிக்கிறது. அதனால்தான் இயற்கையின் மீது மனம் கவிந்த நம் முன்னோர்கள்.
"நீரின்றி அமையாது உலகு" - என்றனர். எவ்வளவு நுட்பமாக இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அறியச் செய்திருக்கிறார் பவா. வன்முறையின் ஆணிவேரை, ஆழப்பிடுங்கி வெளிக்காட்டி விநோதப்படுத்துகிறார்.

மனிதர்கள், அவரவர்களின் உணர்வுகளைப் பிறருக்காக தியாகம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் சிதைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக தன் மனச் சிந்தனைகளின் விடுதலை உணர்வோடு செயல்பட்டு வாழ்வதே வாழ்தலின் இயல்பு. முகமூடி வாழக்கை அருவருக்கத்தக்கது. சிதைவுகள் மீண்டும் சேர்வதுமில்லை வாழ்வதுமில்லை.
குழந்தையை விரும்பும் பெண்ணின் உளவியலுணர்வை மையமிட்டுள்ளது "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை". ஆம். கருவறைகள், இருளறைகள் அல்ல.

நட்சத்திரங்களையும், முத்துக்களையும் உருவாக்கும் ஒளியறைகள். மானுடத்தை ஜனிக்க வைக்கும் ஆதார உறுப்பறைகள். தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் மனவுணர்வு, புற வெளிகளில் காணும் காட்சிகளிலும் படிந்திருப்பதை அழகுபட வருணித்திருக்கிறார்.
தன் உளவலிகளை, மனச்சிதைவுகளை, புறக்காட்சிகளில் காணும் இயேசு பிறப்பு நிகழ்ச்சியின் வழி ஆற்றிக் கொள்ளும் பெண்ணின் இருப்பை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது இக்கதை. குழந்தைப் பெறுதலை முக்கியப்படுத்தும் சமூகத்தின் மனோநிலையும் அதன்வழி பெண்ணின் உணர்வு சார்ந்த வலிகளையும் வெளிப்படுத்துகிறது இக்கதை.
மொத்தத்தில் மனிதனின் கூருணர்ச்சிகளை மையமிட்டு, புடம்போட்டு, சமூகத்தின் தனிமனித உணர்வுகளின் சிதைவு நிலைகளையும், மனிதத்தின் இழப்பையும், சாதிவேரை, ஆழத்தோடு பிய்த்தெறிய முனையும் போராட்டமும், சராசரி மனிதன் சமூக மரபுக் கட்டுக்களுக்கு அஞ்சி, தன் அகத்திற்குள் வாழும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் அவை வெளிப்படுத்த இயலா நிலையில் கற்பனைகளோடு இயங்கும் யதார்த்த வாழ்வின் இயல்பையும் தன் படைப்பின் மூலம் வெளிப்படையாகவே பேசுகிறார் பவா.

இச்சிறுகதைத் தொகுப்பு காட்டும் நில வருணனைகளின் தனிச் சிறப்பும், மனித இயல்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் தன்மையையும் இழைத்துக் கொடுத்திருக்கும் பவாவின் உயிர்போடு கூடிய இக்கதைகள் மனிதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உச்சத்தை எட்டியுள்ளது.

Friday, May 8, 2009

மெளனம் கலைந்து மன்னிப்பு


"ஆசிரியைக்கு அன்புடன்" - ஆவணப்படம்

நெய்வேலி செல்வன், நவீன கலை இலக்கியச் சூழலிலில் தொடர்ந்து புழங்கும் பெயர். அவர் ஒர் புகைப்பட கலைஞர். தேடித் தேடி வாழ்வின் அவலத்தையும், அழகையும் தன் புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் நாங்கள் நடத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டிற்கு அவர் புகைப்படங்களை காட்சிப்படுத்த நினைத்து பெரும் ஆர்வத்துடன் அவரிடமிருந்து அவர் படைப்புகளை பெற்றோம். சிலர் மீது மட்டுமே குவியும் வேலைப் சுமையில் மூச்சுதிணறி, அவர் புகைப்படங்களை கௌவரமாக காட்சிக் படுத்தாதது மட்டுமல்ல, மதிப்புமிக்க அப்புகைப்படங்களை அவரிடம் திரும்பவும் ஒப்படைக்க முடியவில்லை. அவர் என் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். உணர்ச்சி குவியாலாகி எல்லாவற்றையும் உடனே நிறைவேற்றிவிடவேண்டும் என்ற மனநிலையிலிருந்து சற்றேனும் விலக வேண்டும் என்றுணர்ந்தேன்.

ஓராண்டுக்கு பிறகு அவர் புகைப்படங்களின் அத்தனை பிரதிகளையும் சேலம் மணியண்ணனிடம் சொல்லிலி அவர் விரும்பியபடியே திருப்பி கொடுத்த பின்புதான் என் குற்றவுணர்வு குறைந்தது.மௌனம் எங்கள் இருவருக்குமான இடைவெளியை மூன்று வருடங்களாக அடைகாத்தது. கடந்தமாதம் செல்வனிடமிருந்து ஒரு கூரியர் வந்திருந்தது. இன்னும் மிச்சமிருந்த சிறு நடுக்கத்துடன் பிரித்தேன். இரண்டு ஈயஈ – கள். அன்றிரவே அவருடைய "ஆசிரியைக்கு அன்புடன்" படத்தை ஷைலஜா மற்றும் என் குழந்தைகளோடு பார்த்தேன். எல்லோருக்குமே அப்படம் பிடித்திருந்தது.

நெய்வேலிலி குளோனிலி பள்ளியில் பாட்டாசிரியையாக பணிபுரிந்த ஸ்டெல்லா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியைப் பற்றியது அப்படம்.குளோலினி பள்ளியின் ஒரு வெள்ளிவிழா கூடுகையில் பழைய மாணவர்கள் சங்கமித்திருக்கிறார்கள். பேச்சு தங்கள் பிரியத்திற்குரிய ஸ்டெல்லா டீச்சரை மையம் கொண்டிருக்கிறது.அவர்களின் தற்போதைய வசிப்பிடம், வாழ்நிலை எல்லாவற்றையும் தேடி கண்டைந்து சக நண்பர்களிடம் பகிரவேண்டிய பொறுப்பு பொறியாளராகி பெங்களூரில் வசிக்கும் ஆனந் (பழைய மாணவர்) என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஆனந் தன் பழைய இரட்டை ஜடை போட்ட அழகிய ஸ்டெல்லா டீச்சரை முதுமையேறி, வறுமைதின்று கொண்டுயிருக்கும் ஒரு கிழிந்த பழத்துணி மாதிரி தனிமையுற்று, தான் வளர்க்கும் இரண்டு கிளிகளிடம் தன் தனிமையின் கதையை ஒப்புவித்திருக்கும் எவ்வித ஆதரவற்றவளாக ஸ்டெல்லா டீச்சரை கண்டைகிறான்.

தன் பழைய டீச்சரின் நிகழ்காலம் ஆனந்தை பல கேள்விகளுக்கிடையே சிக்கவைக்கிறது. முதலிலில் ஒரு ஸ்ரீங்ப்ப்ல்ட்ர்ய்ங் – வாங்கி தன் நண்பர்களின் (ஸ்டெல்லா டீச்சரிடம் படித்தவர்கள்) எண்களை பதிந்து அவர்களுக்கு பரிசளிக்கிறார்.

தனிமையின் சகிக்க முடியாத மௌனத்தை சத்தம் கலைத்து கொண்டேயிருக்கிறது. தன் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரிடம் நீளும் உரையாடல்கள், ஸ்டெல்லா டீச்சரின் பகல்களை ஈரப்படுத்துகிறது. தன் முகத்தில் தோன்றும் புதிய பொலிவையும், உதட்டோரம் துளிர்க்கும் ஒரு புன்னகையையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. அந்த மாணவர்களின் எதிர்பார்ப்பும் அது தான். வெறும் 1250 - ரூபாய் ஓய்வூதியத்தில், பெங்களுரில் வாழநேரும் அவலத்திலிருந்து ஸ்டெல்லா டீச்சரை அந்த பழைய மாணவர்கள் மீட்டெடுத்து நெய்வேலிலியிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன் தாயைப்போல அவளை பராமரிக்கிறார்கள்.

ஒரு நாள் தான் பணிபுரிந்த குளோனிலி பள்ளிக்கு கைத்தாங்கலாக அழைத்துபோய் பழைய ஞாபங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். தான் பாடலெடுத்து பாடிய அறை, தான் தங்கியிருந்த – தனக்கு பிரிவுஉபச்சார விழா நடந்த மேடை, தான் பிரியத்தோடு வாசித்த பியானோ- கவிதையான காலங்கள் அது.

நாற்பதாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தன் மாணவர்களின் குரூப் போட்டோ அவர் முன் காட்சிப்படுத்தப்படுகிறது. இரட்டை ஜடைபின்னலோடு ஸ்டெல்லா டீச்சர் ஒரு மர நாற்காலிலியில் உட்கார்ந்திருக்க, உட்கார்ந்தும், நின்றுமாய் அம்மாணவர்கள்.
இப்போது அதே நெய்வேலியில் பிரபல மருத்துவராயிருக்கும் டாக்டர் செந்தில் அப்புகைப்படத்தை ஸ்டெல்லா டீச்சரிடம் காண்பித்து.

"இவர்களை தெரிகிறதா டீச்சர்?"

இது பி. சாந்தி. இவன் கே. செந்தில் இவன் ஆனந் ….. இவ ஹேமலதா…
அற்புதம்… ரத்தத்தோடும் ஜீவனோடும் தன் மாணவர்களை ஸ்நேகித்த ஒரு ஆசிரிய மனசுக்கே இது சாத்தியம்.

நிற்கிறவர்களின் வரிசையில் மூன்றாவதாக காக்கி கால் சட்டையும், வெள்ளைசட்டையும் போட்டு, மிலிலிட்ரி விறைப்போடு நிற்கும் அச்சிறுவன்தான். இன்று இப்படத்தை தன் ஆசிரியைக்காக எடுத்து நமக்கு தந்து, நம் சக மனிதர்கள் மீதான பொறுப்பின்மையை குற்றவுணர்வுக்குள்ளாக்கி நிற்கும் ந. செல்வன்.

இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியைகள் ஞாபங்களில் ஒளிருவார்கள். அதுதான் செல்வன் என்கிற புகைப்பட கலைஞன் கரடுதட்டி போயிருக்கிற நம் வறண்ட வாழ்வில் மழைமாதிரி நீரைப்பொழிகிறான்.

அக்கலைஞனிடம் எனக்கிருந்த நீண்ட மௌனத்திற்காக ஸ்டெல்லா டீச்சரின் வழியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, April 28, 2009

மதிப்புரை - 3

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை தொகுப்பிற்காக

முடிவற்ற வசீகர வெளியில் வலி உணரும் தருணங்கள் -உதயசங்கர்.

கலை ஒரு வசீகரம், கலை ஒரு வலி மிக்க வேதனை, கலை ஒரு துயர் மிகுந்த பாடல். கலை ஒரு நம்பிக்கைக் கீற்று. கலை ஒரு புலம்பல். கலை வாழ்வின் உயிர்த்துடிப்பு. கலை ஒரு விந்தைவெளி. கலை ஒரு இன்பம். கலை ஒரு மாயஜாலம். கலை தனக்கான இரத்த பலிகளைத் தானே வேட்டையாடிக் கொள்ளும் காட்டுத் தெய்வம். கலை உக்கிரம் மிகுந்த அக்னிக் குண்டம். கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்களின் பட்டியலில் இதோ இன்னுமொரு புதிய வரவு. ஒரு புதிய கலைத்திறப்பாய் நம் முன் விரிந்து படபடக்கிறது üநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைý பவாசெல்லதுரையின் சிறுகதைத் தொகுப்பு.
புத்தகத்தை விரித்தவுடன் கல்லும் முள்ளும் கீறிப் பிறாண்டி ரத்தம் துளிர்க்கும் திரேகம். எதையும் ஊடுருவி உள்ளொளி காணும் தீர்க்கமிக்க கண்கள். தீராத வாழ்க்கையை நடந்தே தீர்க்க முளைத்த உறுதியான கால்கள். எதையும் எதிர்கொள்ள, எதையும் புரட்டிப்போடும் வல்லமை கொண்ட கவிச்சி வாடை வீசும் கைகள். பச்சை மணம் கமழும் முறுக்கேறிய உறுதியான உடலோடு மரணத்தையும் நேர்கொள்ளும் தைரியத்துடன் நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில் நம்முன்னே வந்து நிற்கும் ஜப்பான் கிழவன் இல்லை பச்சை இருளன் இல்லை பொட்டு இருளன் இல்லை பவாசெல்லதுரை.

அன்றாடத்தின் செயற்கை நீருற்றின் செயற்கையான சுழிப்புகளோடு ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் கணங்கள் திகைத்து நிற்கின்றன. மூச்சுத் திணறுகிறது. உடல் பதறுகிறது. நா நடுங்க எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் நிலைகுலைந்து யார் நீ என்று குழளுகிறது வாய். போலியான இந்த நாகரீக வாழ்க்கையின் அந்தப் பக்கத்திலிருந்து தன் முரட்டுக்கைகளை நீட்டுகிறான். தப்பிக்கவே முடியாத முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நாம் சந்தேகத்துடனும் பயத்துடனும் தயங்கித் தயங்கி நம் கைகளை நீட்டித் தொடுகிறோம். தொட்ட கணத்திலேயே நம் வாழ்வு மாறி விடுகிறது. வாழ்க்கை பற்றிய நம்மதிப்பீடுகள் சுக்குநூறாகித் தகர்ந்து விடுகின்றன. ரசவாதம் நிகழ்ந்தது போல காட்டின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்குமுன்னால் ஜப்பான் கிழவன் போய்க் கொண்டிருக்கிறான் திப்பக்காட்டிற்குள். அவனுடைய வேட்டையின் தந்திரங்களை காடு முறியடிக்கிறது. தற்காலிகமாய் தோல்வியடைந்த அவன் ஸ்தோத்திரப் பாடல்களுக்குள் அடைக்கலம் புகுவதற்குப் புறப்படுகிறான். ஆனால் இன்னமும் வேட்டையின் கண்ணிகள் அவன் நெஞ்சில் பத்திரமாகவே இருக்கின்றன. திரும்பி வரும் பெரும் நம்பிக்கையோடு.

கண் மூடித்திறப்பதற்குள் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்ட திருட்டு இருளன், விசித்திரங்களால் அடுக்கப்பட்ட பஞ்சத்தினால் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த ஊரின் பாறை வீட்டில் மரணத்தின் கடிவாயில் கிடக்கிறான். அனுக்குமலை காட்டின் பச்சிலைச் சாற்றினால் உடல் ஊதிச் செத்துப்போகக் காத்திருக்கிறான். பஞ்சத்தினால் வன்மமும், குரோதமும் கொலைவெறியும் ஏறிய மனிதர்கள் ஓரிரவு மழையினால் கருணை நிரம்பி வழிகிறார்கள். மழை கருணையைப் பொழிகிறது. பவாசெல்லதுரையின் கலை நம் உயிர்வரை பாய்கிறது நமக்குள் தூர்ந்து போன ஊற்றுக்கண்ணைப் பொத்துக் கொண்டு கருணை பொங்குகிறது.

கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சை இருளன். நரியின் பற்களையே ரம்பமாக்கி கூண்டை உடைத்து ஜமீன் மாளிகையிலிருந்த மரகதப்பச்சை ஒளி பின் தொடர பாய்ந்து செல்கிறான் கோட்டங்கல் குன்றை நோக்கி அதிகாரங்களுக்கு எதிரான கலகக்குரல் எழுப்புகிறான்.
எல்லோரிடமும் மனசின் ஒரு நிலவறையில் கருமியின் கைக்காசு போல பத்திரப்படுத்திய ஈரமும் கதகதப்பும் நிரம்பிய ஒரு ராஜாம்பாளின் நினைவுகள் இருக்கும். மனசு துயருரும் போதெல்லாம் அந்த நினைவுகளை எடுத்துப்போர்த்தி மீண்டும் வாழ்வை எதிர்கொள்ளும் வலிமை பெறவைக்கும். ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள், ரயில்வண்டி விளையாட்டில் பின்னால் கொத்தாய் சேர்த்துப்பிடித்த உணர்வில் ததும்பிக் கொண்டிருக்கிறது. அங்கே ராஜாம்பாள் இல்லை. ஆனால் அவள் சேர்த்துப்பிடித்து கசக்கிய சட்டையின் கசங்கல் இன்னும் இருக்கிறது. ராஜாம்பாளும் தோழர்களும் நதியின் அக்கரையிலுள்ள காட்டின் முகப்பிலிருந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஏரோதின் வாளின் கூர்மை மேரியின் எத்தனை குழந்தைகளைப் பலி கொண்டு விடுகிறதுஙு கன்னிமரியாளின் பிரசவவலியினூடாக தன் குழந்தையையும் காப்பாற்றி ஆசீர்வதிக்க ரட்சகர்களைத் தேடுகிறாள். வழிகாட்டும் நட்சத்திரமும் வழிமறந்து மறைந்து விடும் போது துயருற்ற மேரி கன்னிமரியாளுக்குச் சுகப்பிரசவம் என்ற சேதிகேட்டபோதுதான் நம்பிக்கை கொள்கிறாள். பரிதவித்து வலியும் வேதனையும் இறைஞ்சுதலுமான மேரி நம்மையும் ஆட்கொண்டு விடுகிறாள்.

எத்தனையோ தலைமுறைகளாய் யாரும் காணாத மர்மமான சிங்காரக்குளம் ஒரு குறிலிடாகிறது. குளத்தில் விழுந்து இறந்து போன மல்லிகா தன் மரணத்தின் மூலம் ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிறாள். அந்த ஆத்திரம், கோபம், பயம், இயலாமை சிங்காரக்குளத்தை வெவ்வேறு தளங்களில் வாகிக்கத் தூண்டுகிறது.

கலையின் உயிர் எது என்றறிந்த கலைஞனான கோணலூர் ஏழுமலை நவீன வாழ்க்கையின் கோரநகங்களில் சிக்கிச் சிதறுண்டு போகிறான். வாழ்க்கை அவனை பெங்களூர் மார்க்கெட்டில் மூட்டை சுமக்கச் சொல்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. அவனுடைய கலையை இழிவு படுத்துகிறது. கோணலூர் ஏழுமலை சவால் விடுகிறான். அடங்க மறுக்கிறான். கலகம் செய்கிறான், மீறலின் துடிப்பு கோணலூர் ஏழுமலையை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கிறது. இரத்தபலி கேட்கும் வாழ்க்கைக்கு எதிராக போராடத்தயாராகிறான் கோணலூர் ஏழுமலை.
üமண்டித்தெரு பரோட்டா சால்னாýவில் தன் வாழ்வை கடைத்தேற்றும் ஈஸ்வர் தாயின் அரவணைப்பறியாமல் தந்தையின் லட்சியச் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டு நிராதரவான நிலைமையில் அலையும் ஈஸ்வரன் வாழ்வின் விசித்திரமான இன்னொரு பக்கம்.

தன் உடலை அர்ப்பணித்து, எந்த ஜாமத்திலும் யாருடனும் சைக்கிளின் பின்னால் ஏறிச் சுற்றும் சுதந்திரத்தை விஜயாவின் சத்தமான சிரிப்பின் பின்னாலுள்ள வாழ்வின் துயரம். உறவுகளின் போலிமையை முகங்களிலும், வாழ்வின் அவலத்தை வேறு வேறு மனிதர்களிலும் எதிர்கொண்டு திகைத்து நிற்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறோம். நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

கூர்ந்த வாசிப்பைக் கோரும் பவாசெல்லதுரையின் கதைகள் தமிழிலக்கியத்தின் பரப்பை இன்னும் விரிவாக்கி இருக்கின்றன. முதல்தொகுப்பு என்று யாராலும் சொல்லமுடியாதபடிக்கு கதைகளை தேர்ந்த சிற்பியைப்போல செதுக்கியிருக்கிறார். மௌனமான பல இடங்களில் கலை ஆட்சி செய்கிறது. புனைவின் உச்சத்தையும், ஒரு புதிய யதார்த்தவாதத்தையும் இவருடைய கதைகள் கட்டமைக்கின்றன.

அனுபவங்களின் சாரம் ஏறிய முதிர்ந்த மொழிநடை, அடர்த்தியான இந்த வாழ்வைச் சொல்ல அடர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல ஒற்றை வரிகளில் வாழ்வின் தரிசனமும் கவித்துவமும் பொங்கி வழிகின்றன. வாசிக்கும் போது தான் அதை உணர்ந்து அனுபவிக்க முடியும்.

தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் இது ஒரு முக்கியப் பதிவு. ஒரு புதிய கொடை. உலகத்தின் எந்தமொழியிலும் இந்தத் தொகுப்பிலிருந்து குறைந்தது நான்கு கதைகளையாவது மொழிபெயர்க்க முடியும். அதற்கான வலிமையும் கலை உச்சமும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. பவாசெல்லதுரை என்ற கலைஞனுக்கு கலை கைவரப்பெற்றுள்ளது. எனவே தான் தொகுப்பை வாசிக்கும் போது நம்முடனேயே இருக்கிறார் பவாசெல்லதுரை அழுகையும் கோபமும் கண்ணீரும் ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது. வாசித்து முடிக்கும் போது பித்துப்பிடித்த நிலையில் நீண்ட பெருமூச்சுகள் விடுகிறோம். நாம் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் பவாசெல்லதுரை என்ற ஜப்பான் கிழவன் என்ற பச்சை இருளன் மீது படும்போது அவர்கள் சிரிக்கிறார்கள். அது பைத்தியக்காரனின் வசீகரமான சிரிப்பு. கலையும் மர்மமாய் நம்மை நோக்கிச் சிரிக்கிறது.

Friday, April 17, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,

டாக்டர். கே. எஸ். சுப்பிரமணியன்


நண்பர் பவா செல்லதுரையின், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர் பவா இலக்கியக்களனில் ஒரு படப்பாளி; ஓர் ஆர்வலர்; ஒரு செயல்பாட்டளர் அல்லது தேர்ந்த இலக்கியவாதிகளை, வயது என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டு, இனங்கண்டு அவர்களுக்கு ஒரு களம அமைத்துக் கொடுப்பது; படைப்பாளி - வாசகர் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில கருப்பொருள்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைக் கட்டமைப்பது - இவை போன்ற பணிகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருபவர் பவா. இன்று, அவரது நூலுக்கு வெளியீட்டு விழா என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளின் அடிநாதம் காட்டு மணம். காட்டின் குளுமையும், அச்சுறுத்தும் தன்மையும்; காட்டில் வியாபித்திருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், பச்சிலைகள், மலர்கள், முட்கள், வனாந்திரத்தில் அலைந்து திரியும் விலங்கினங்கள்; பாடிப் பறந்து இனிமையை விநியோகிக்கும் பறவைகள்; வாழ்க்கைக்காக அயராது போராடி, அதே நேரத்தில் வாழ்க்கையை ருசித்து ரசிக்கும் வனவாழ் மக்கள், கானக மணம் நம்மேல் இதமாகக் கவிகிறது. வானம் பொய்த்தால், அம்மக்கள் எதிர்கொள்ளும் வரட்சியும் சோகமும் நம் இதயத்தில் வண்டாய்க் கரிக்கிறது.
காட்டைச் சார்ந்த, இத்தகைய அதீதமான மன ஆக்கிரமிப்பு அல்லது அள்ங்ள்ள்ண்ர்ய் ஏன் என்ற வினா இயல்பாக எழுகிறது. பாவவின் சொந்தஊர் காட்டின் எல்லையுடன் ஒட்டி உறவாடும் கிட்டத்தில் உள்ளது. அவரது தந்தையார் இருளர் இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தனர். பவாவின் பால்ய இருளர் இன மக்களாலானது.

இந்தப் பின்புலத்தில், ‘முல்லை’ என்ற பெயர் தாங்கிய முன்னுரையில் பவாவின் வாககுமூலம் அர்த்தம் உள்ளதாக விளங்குகிறது. இதோ பவா:
“ நான் திமிரத்திமிர காலம் என்னை அங்கிருந்து அறுத்துக்கொண்டு வந்து, இந்த நகரத்தில் போட்டது. என்னை ஆக்ரமித்த ஈரமான, குதூகல ஞாபகங்களை அதனால் இன்னும் கூட அழிக்க முடியவில்லை.
.............
நான் விட்டுப் பிரிந்த பதுங்குமுயலையும், ஒழக்குள்ள நரியையும், தவக்கரடியையும் சந்திக்கவே முடியாத துயரத்தை காலம் என்மேல் ஏற்றியிருக்கிறது. என் படைப்பின் மூலமாவது மீண்டும் அந்த நிலப்பரப்பை, பழங்களை, விலங்குகளை, பால்யகாலத் தோழர்களை சென்றடைய எத்தனிக்கும் முயற்ச்சியே இந்நூல்” என்கிறார்.
இம்முயற்ச்சியில் பவா கணிசமாக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லை அவரது காடுகள் பாலும், அங்கு வாழும் மக்கள் பாலும், ஓர் ஒற்றுணர்வை, ஓர் அன்யோன்யத்தை வாசகர்களிடமும் ஊக்கி யிருப்பது அவரது படைப்பாக்கத்தின் வெற்றி.

இத் தருணத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியக் களத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவிவரும் ஒரு செல்நெறியை விமரிசப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், கிராமப் புறங்களிலிருந்து நகர்களையும் பெருநகர்களையும் நோக்கி புலம் பெயர்தல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. இந்தப் பின்புலத்தில் இழந்த கிராம வாழ்வு சார்ந்த பின்னோக்கிய ஏக்கம் அல்லது சர்ள்ற்ஹப்ஞ்ண்ஸ்ஹ இயல்பாக விளைகிறது. இந்த யதார்த்தப் பின்னணியில் சொந்த மண்சார்ந்த ஏக்கம் ஒரு சோகமாக, ஒரு கையறு நிலையாக இலக்கியப் படைப்புக் கருவாக இடம்பெற்று வருகிறது. பல தரமான இலக்கியப் படைப்புகள் செழுமையான அறுவடையாக விளைந்துள்ளன.

இந்தத் திக்கில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தப் பிரிவு ஏக்கம் நிரந்தரமான ஒன்று இல்லை. முதல் பத்தாண்டு காலத்தில் இந்த ஏக்கத்தில் உண்மை இருக்கும் காலப்போக்கில், புதிய களத்தில் இயன்ற அளவு புலம் பெயர்ந்தவன் காலூன்றுகிறான்,வேர் பாய்ச்சுகிறான். புதிய களத்தின் இயங்கு நெறிகளை உள்வாங்கிக் கொள்கிறான். புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்கிறான். அவனது சாமர்த்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்ப வெற்றி / தோல்வியை எதிர் கொள்கிறான். இது அவனது யதார்த்த இயங்கு களனாகவே உருப்பெற்று விடுகிறது.

மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்த பின்பும், பின்னோக்கிய ஏக்கத்தைக் கட்டிக்கொண்டு புலம்புவது ஒரு மாயை ; ஒரு சுயஏமாற்று; ஒரு பொய்யான சுய ஒத்தடம். ஒரு படைப்பாளி இதைச் செய்யும் போது சுயஏôமாற்றுதலை மீறி இந்தப் போக்கு ஒரு பொய்யான வியாபார்ச் சரக்காகும் அபாயத்துக்கு ஆளாகிறது. இந்த சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ உத்தி, வேர்மண் விநியோகம் செல்லுபடியாகும் வியாபாரமாக வடுப்பட்டு விடுகிறது. இது குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற எல்லாத் திணைகளுக்கும் பொருந்தும்; எல்லா நிற மண்ணுக்கும் பொருந்தும்.

இரண்டு / மூன்று பத்தாண்டுகள் நகரிலோ, பெருநகர்லோ வாழ்ந்த பிறகு, தன் வேர்மண்ணிலிந்தே அந்நியப்பட்டுப் போதல் நிகழ்கிறது. இது ஒரு சோகம் இது ஓர் இழப்பு. நகர மண்ணிலும் வேர்பாய்ச்ச முடியாமல் இருப்பது ஒரு துயரமான இயலாமையும் உயிர்ப்புள்ள, படைப்புக்கு உகந்த கருப்பொருளாக அமையும்.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போதும், காடுகள் சார்ந்த பவா செல்லதுரையின் ககைகளில் வனாந்திர மணத்தில் கலப்படம் இல்லை, அவற்றில் உள்ள உண்மையின் கதகதப்பு நம்மைத் தொடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை இனங்காண முடிகிறது. பவா இப்போது வாழும் திருவண்ணாமலை நகரம் அவரது படைப்புக் களனான காட்டுப் பகுதிக்கு மிகவும் அருகிலேயே உள்ளது என்று பவாமிடமிருந்து அறிகிறேன். இரண்டு: அவரது இயல்பான சார்பை ஒட்டி, பவா இருளர் இனத்தை, உள்ளடக்கிய வேர்மட்ட மக்கள் நலவில் தீவிரமான, தொடர்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். எனினும், காலம் போக்கில் பவாவின் படைப்புலகம் காட்டிலிருந்து மெல்ல விலகி நகர்ப்புற வாழ்வியல் கரிசனைகளை நோக்கிப் பயணிப்பது இயல்புக் கட்டாயம் என எண்ணுகிறேன்.

காட்டுமணம் முன்னுரிமை பெற்றுள்ள அதே நேரத்தில், இந்தத் தொகுப்பில்உள்ள கதைகள் அழகான ஒரு நிறப்பிரிகை போல் காட்சி அளிக்கின்றன. முத்தான கதைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவம் உள்ள நிகழ்வுக்களன்; இயல்பான மொட்டவிழ்ப்பு; இறுதியில் எதிர்பாராத ஒரு ‘சுளீர்’.

சிறப்பாக அமைந்துள்ள கதைகளில் ஒரு சிலவற்றையாவது தொட்டுச் செல்லாவிட்டால் என் உரை மூளியாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு.

‘’ஏழுமலை ஜமா’ பின்னோக்கிய ஏக்கத்தின் வார்ப்படம். கோணலூர் ஏழுமலை. கூத்து ஐமாவின் முக்கிய அங்கம். வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அவனை பெங்களூருக்குத் தள்ளியது. சில ஆண்டும் பெருநகர வாழ்க்கை அவனுக்கு மூச்சு முட்டியது பாட்டின் சத்தமும், லயமும், பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகளும்; அவனை பஸ் ஏற்றி விட்டிருந்தது. கிராமத்தின் முகமோ மாறியிருந்தது. சினிமா ஸ்டார்களின் ஆக்கிரமம் மதுவில் மனவேதனையை மழுங்கடிக்கும் முயற்சியூடே தொலைவிலிருந்து கூத்துப் பாட்டின் மெலிந்த ஒலி ஒலி நோக்குத் தள்ளாடுகிறான். ஜமாவில் சங்கமிக்கிறான். சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ வின் கலாநேர்த்தியான, உள்ளத்தைத் தொடும் படைப்பு.

‘வேட்டை’ வேட்டைதான் ஜப்பான் கிழவனின் குலத்தொழில்; வாழ்வாதார ஈடுபாடு. அவனது கண்ணின் வீரியமும், கண்ணியின் வெறியும், அம்பின் குறியும் எதையும் தப்ப விடாது. பறவையாயினும் சரி, குஞ்சானாலும் சரி; காட்டுப் பன்றியாயினும் சரி, குட்டியாயினும்சரி. ஒரு பேரிழப்பு; அதைத் தொடர்ந்து ஒரு ரசவாதம். இதோ பவா:

“ ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து.... ஜன்னி வந்து செத்துப் போனதுக்கு அப்புறம் ..... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக”.

‘சத்ரு’: அருமையான சிறுகதை வடிவத்துக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு பொட்டு இருளனின் திருட்டு சாகசங்கள் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் அவனுக்கு ஓர் இதிகாச பிம்பத்தை உருவாக்கி இருந்தது. காட்சி மாற்றம். பல்லாண்டு வரட்சியில் வதங்கி ஒடுங்கிப் போயிருந்தது கிராமம். இறுதி முயற்சியாக சாமிக்குப் படையால். மணி மணியாகச் சேகரித்த சோளம் மாவாக்கப்பட்டது. அதிலேயே கைவைத்துடன் உயிர்மாய்க்க உறுதிபூண்டது கிராமம். திடீரென்று, ‘மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது. பூமி நனைகிறது; உள்ளம் குளிர்கிறது; வன்மம் மறைகிறது.

இனி ஜென்மத்தும் திருடாத மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா போ, போய் பொழச்சிக்கோ, எல்லோர் குரலும் நனைந்திருந்தது

சினமும், சீற்றமும் கருணையாய்ப் பரிணமிக்கும் மந்திர தருணத்தில் நாமும் நனைந்து கரைகிறோம். நம்மை அறியாமல் நம் கண்கள் பனிக்கின்றன.

பவாவின் இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டத்தக்க இன்னோர் அம்சம் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி. வீரியமும், நளினமும், கவித்துவமும் இயல்பான மீட்டலில் நம்மைத் தொடுகின்றன.

பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்கள்; சிங்காரக் குளத் தண்ணீர் முழுவதுமே, ‘பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?’ என்ற பிரமிப்பு; ‘மண்ணில் ஊனப்பட்ட விதைகளில் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முறைத்தும், மறைந்தும் போக்குக் காட்டிடும்’ காட்சி; ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களில் காத்திருத்தல்,’ பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு, அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த யாருமற்ற தனிமை - இவ்வாறு கவித்துவம் நம்மை ஆங்காங்கு ஆலிங்கனம் செய்கிறது.

இறுதியாக, வரட்சியின் வெம்மையையும், பஞ்சத்தின் குரூரத்தையும் நம் கண்முன் நிறுத்தம், கந்தகச் சொற்களால் வடிக்கப்பட்ட சித்திரம்:“ தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.

பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில், உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபத்தில் மீந்தது”.

சொல்லின் சக்தியை நம்முள் விதைத்து, நம் உள்மன ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். படைப்பாளி. பவாவின் படைப்புலகம் மேலும் ஆழமும், அடர்த்தியும் கொண்டு சிறக்க என உளமார்ந்த நல்லாசிகள்.