அந்த வாகனத்தில் நாங்கள் ஏழுபேர் இருந்தோம்.
புசு புசுவென இப்படியும் அப்படியும் அலையுமொரு ஜெய் – நிவியின் செல்ல நாய். அதற்கு
அவர்கள் லோக்கி எனப் பெயரிட்டிருந்தார். நொடிக்குகொருதரம் அவர்கள் எல்லோர் வாயிலும்
லோக்கி லோக்கி என அதன் பெயர் அடிப்பட்டுக்கொண்டேயிருந்தது. இப்பயணம் முடியும்வரை நாம்
யாவரும் அதை லோக்கி என்று மட்டுமே அழைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தப்பித் தவறி வேறு பெயரில்
அழைத்தால் நாம் நிவியின் கோபத்திற்கு ஆளாவோம்.
ஜெய் தான் அப்பெரிய வாகனத்தை இறுதி வரை நிதானமாக
ஓட்டினார்.
அந்த ஆர்.வி. யில் ஒரு மாஸ்டர் பெட்ரூம்,
டைனிங் டேபிள், சமையலறை, கழிவறை என ஒரு மினி அபார்மெண்டேயிருந்தது.
என் நண்பர்கள் நிவியும், ஜெய்யும் மோகன்தாஸூடன்
இணைந்து ஐந்து நாட்கள் எனக்கான மட்டுமே அந்த ஆர்.வி.யை எடுத்துக் கொண்டு உடன் பயணித்தார்கள்.
கனெக்டிக்கெட் மாநிலத்தின் ஸ்டாம்போர்டில்
துவங்கிய எங்கள் பயணம், நியூயார்க், நியூஜெர்சி, பென்சிலேனியா, மேரிலேண்ட், வாஷிங்கடன்
டி.சி என தொடர்ந்தது. ஒரு தேசத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பை எந்த அவசரமும், பரபரப்புமின்றி
நிதானமாகக் கடந்து கொண்டிருந்தோம்.
நான் என் நண்பர் பழனிஜோதி நியூஜெர்சியிலிருந்து
கொடுத்தனுப்பிய கிண்டிலில் அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலிருந்தது.
இடையிடையே வாசிப்பில் மூழ்கியிருந்தேன்.
பயணத்தின் துவக்கத்தில் நாங்கள் பார்த்த
பனிப்பொழிவு, கல்மழை எல்லாம் அம்மாநில எல்லைகளை தாண்டும்போது இல்லாமலிருந்தன. இதமானக்
குளிர் எங்கள் பயணத்தை மேலும் உற்சாகப்படுத்தியது.
இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் நான்
பயணித்த பெரும் நிலங்கள் என் ஞாபகத்திற்கு வந்தன.
இந்தியாவில் சண்டிகரிலிருந்து பல மணி நேரம்
பயணித்து மணாலிக்குப் போன மேடும், பள்ளமும், நதியும், மலையுமான ஒரு நீண்ட இந்திய நிலம்
அப்போது நினைவிற்கு வந்தது.
கேரளாவில் கொச்சியிலிருந்து புறப்பட்டு காசர்கோடு
வரை போக வேண்டும் என்ற கனவொன்று கனவாகவே இன்னும் என்னுள் தங்கியிருப்பதும் நினைவில்
வந்து போனது.
இப்படி பெரும் நிலப்பரப்புகளை கடக்கும்போது,
உடன் எத்தனைப் பேர் பயணித்தாலும், உள்ளுக்குள் நான் தனி ஆளாகிவிடுகிறேன். எனக்கு பிரதேசங்களை
டூர் மனநிலையோடு எப்போதும் பார்க்க முடியாது.
அது ஒரு மாதிரியான தனித்திருத்தலில் இடம் பெயரும் மனநிலை.
அமெரிக்காவில் ரேலோவில் என் நண்பர் ராஜன்சோமசுந்தரம்
வீட்டில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்பிற்கு பின் தூங்குவதற்கு பின்னிரவானது.
குளிர் இன்னும் மிச்சமிருந்த அடுத்த நாள்
நிதானமானதொரு காலையில் ராஜன், ……… ஷைலஜா, பிரகாஷ் என் மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ், அனு
என நாங்கள் காரில் ஏறும் வரை எங்கேப்போகப் போகிறோம் என்றோ, எவ்வளவு தூரம் பயணிக்கபோகிறோம்
என்றோ எனக்குத்தெரியாது. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் என் இலக்கிய
நண்பர்கள் என்னை உல்லாசப்பயணம் கூட்டிப் போகிறவர்கள் அல்ல என்ற பெரும் நம்பிக்கையிருந்தது
எனக்கு.
அன்று அப்படித்தான் ஆனது. அமெரிக்காவின்
மிக நீண்ட பரந்து விரிந்து தொடர்ந்த நிலமும், கடலும் எங்களை ஆச்சர்யப்படுத்தியது.
ராஜன் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞன். இசை,
கதை, கவிதை, அமெரிக்காவின் மறைக்கப்பட்ட வரலாறு என அந்த கார்ப்பயணம் நீண்டுகொண்டேயிருந்தது.
பலமணி நேரப்பயணத்திற்குப் பின் நாங்கள் இறங்கிய
இடம் கொஞ்சம் குன்றும், பசுமையானதொரு புல்வெளியும் கொண்ட மிகப்பரந்த மைதானம்.
இது எதற்கு தேவையில்லாமல் இங்கே? என எல்லோரும்
கேட்கும் ஒரு பழைய கூரை.
ராஜன்தான் சொன்னார். இந்த குடிலில் தங்கிதான்
ரைட் சகோதர்கள் முதன் முதலில் விமானத்தை ஓட்டிப்பார்த்தார்கள்.
நான் பரபரப்படைந்தேன். சில வருடங்கள் இங்குத்தங்கி,
இந்த குன்றின் மேலிருந்துதான் தங்கள் பறக்கும் பரிசோதனைகளை ரைட் சகோதரர்கள் துவக்கினார்கள்.
எத்தனை வீழ்ச்சிகள்?
எத்தனைத் தோல்விகள்?
எல்லாவற்றையும் கடக்க காலம் அவர்களுக்கு
கற்றுத் தந்திருந்தது. பொறுமை எழுத்தாளனுக்கு மட்டுமல்ல, ஆய்வாளனுக்கும்கூட. ஏன் இந்த
உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கும் கூட அதீத பொறுமை தேவைப்படுகிறது
என்பதை நாம் ரைட் சகோரதரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.
முதல் வீழ்தலில், அல்லது தோல்வியில் வீடு
திரும்பிவிடும் ஒருவனை வரலாறு தன் எந்தப் பக்கங்களிலும் எப்போதும் நினைவில்
வைத்துக்கொள்ளாது.
ரைட் சகோதர்கள் தங்கள் முயற்சிக்காக அங்கேயேக்கிடந்தார்கள்.
அந்த இடம் வடகரோலினா மாநிலத்தின் கிட்டிஹாக். ரைட் சகோதர்கள் என பின்னாலில் அழைக்கப்பட்ட
வில்பமும், ஆர்.வி.லும் 1900 ல் தங்கள் முதன் முயற்சியில் ஒரு சிறு விமானம் போன்ற ஒன்றை
இங்கிருந்துதான் பறக்கவிட்டார்கள்.
மூன்றாண்டுகள் அவர்களின் கடும் உழைப்பும்.
தொடர் தோல்விகளும் இப்போது நாங்கள் நிற்கும் இந்த சிறு குன்றிலிருந்துதான் அச்சிறுவிமானம்
போன்ற ஒரு கருவியை தரையிலிருந்து 10 அடி உயரத்தில் பறக்கவிட்டார்கள். 12 வினாடிகள்
மட்டுமே நீடித்த அச்சிறு பயணமே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது.
அன்று ஒரு நாள் மட்டுமே உற்சாகத்தின் விளிம்பில்
அவர்கள் இருவரும் நான்கு முறை பறந்தனர்.
அவர் ஓட்டிய விமானம் 59 விநாடிகளில் 852
அடியைக்கடந்தது.
இதெல்லாம் வரலாறு.
இன்று மாலை 7.10க்கு சென்னை விமான நிலையத்தில்
விமானம் ஏறி அடுத்தநாள் காலை 9.00க்கு நியூயார்க்கை அடைவதென்பது நமக்கெல்லாம் ஒரு அதிசயமில்லை.
அது ஒரு நிகழ்வு. அவ்வளவுதான். ஆனால் அதன் துவக்கம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இந்த சிறு கொட்டகையில் தங்கிதான், ரைட்சகோதர்கள்
இந்த மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை செய்துமுடித்தார்கள்
என்பது எங்களாலேயே நம்ப முடியாததாக இருந்தது. உலகின் எத்தனை பெரிய வரலாற்றுச் சாதனைகளும்,
போராட்டங்களும் இப்படிதான் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை அந்த இடம்
எங்களுக்கு மீண்டும் நிரூபித்தது. அவர்களின் லட்சியத்தை முடிக்க, பலமுறை இக்குன்றின்
மீதேறி, முடிக்க முயன்று பலமுறை வீழ்ந்தார்கள் என்ற வரலாறு என் முன் இப்போது பரந்திருந்த
போது நான் சிலவிநாடிகள் உடல் சில்லிட்டு போனேன்.
நன்றாக நினைவிருக்கிறது. அக்குன்றுக்குக்கீழே
மிகப் பெரிதாய் வியாபித்திருந்த பெயர் தெரியாத ஒரு மரத்தடியில் நின்று நான் படமெடுத்துக்கொண்டேன்.
பிரகாஷ் என்மனநிலையை சிதறவிடாமல் அப்படியே
சுவிகரித்திருந்தான்.
இதோ இந்த ஆர்.வி. பயணம், இதே அமெரிக்காவின்
இன்னொரு நிலப்பரப்பான நார்த் கரோலினாவை எனக்குள் இப்போது கொண்டு வருகிறது.
கையில் முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய
இடத்தில் ……………. இப்போது ரஷ்யாவை அடைந்திருந்தான். புனைவு, நினைவு, இப்போதைய நிஜப்பயணம்
என எல்லாம் கலந்த ஒரு விவரிக்க முடியாத மனநிலையில் நான் பயணிப்பது தெரியாமல், ஜெய்
நிதானமாக வண்டியோட்டிக் கொண்டிருந்தார். நிவி எனக்கான ரொட்டித் துண்டுகளில் பட்டரையும்,
தேனையும் சரிவிகிதத்தில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த ஆர்.வி. பயணத்தின் ஐந்து நாட்களிலும்,
ஒரு முறை சாப்பிட்ட உணவு இன்னொரு தடவைக்கு இல்லை. அதன் பெயரெல்லாம் எனக்குத் தெரியாது.
அது எந்த நாட்டு உணவு வகை என கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இல்லை. ஆனால் இப்பயணத்திற்காக
மட்டுமே நிவி தன் பண்ணையிலிருந்து பதப்படுத்திக்
கொண்டுவந்திருந்த தேன், இயற்கைகாய்கறிகள், வெண்ணெய் கட்டிகள், மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி,
வளர்ப்புக்கோழிகள், முட்டைகள் என எல்லாமும் அந்த ஆர்.வியின் பல்வேறு அடுக்குகளில் நிறைந்திருந்தன.
கண்களுக்கு எட்டும்பார்வையில் ஒயின்பாட்டில்களும்,
விஸ்கி, வோட்கா பாட்டில்களும் மிதமிஞ்சியிருந்தன.
நான் தான் முத்துலிங்கத்தின் அக்கதையில்
வரும் அகதிவாலிபன் ரஷ்யாவிலிருந்து எப்படித் தப்பித்து உக்ரைன் போகிறான்? என உலக வரைபடத்தை
மனதால் கடந்துக் கொண்டிருந்தேன்.
அவன் இப்போது உக்ரைனில் தன் சகாக்கள் ஏழெட்டுப்பேரோடு
ஒரு புறநகர்பகுதி வாடகைவீட்டில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பது எனக்குத் தற்காலிக
நிம்மதியைத்தந்தது. இதுவரை அவனுக்கு எதுவும் நிகழவில்லையென்பதே என் தற்காலிக நிம்மதிக்குக்
காரணம்.
அமெரிக்காவில் நாயை யாரும் நாய் என்று சொல்லிவிடக்
கூடாது என்பவை மாதிரியான மதிப்பீடுகளை நம்மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதனால்தான்
நான் இப்பயணம் முழுவதும் லோக்கி என்று மட்டுமே அழைக்க கற்றுக்கொண்டேன்.
இச்சமயத்தில் எனக்கு தேவையில்லாமல் கு. அழகிரிசாமியின்
‘வெறும்நாய்’ ஞாபகத்திற்கு வந்து, நான் மட்டுமே சிரித்துக்
கொண்டேன். நல்லவேளையாக என் சிரிப்புக்குக் காரணத்தை அவர்கள் யாரும் கேட்கவில்லை.
அமெரிக்கா தந்த அதீத சுதந்திரத்தில் லோக்கி
இப்படியும், அப்படியும், வலமிருந்து இடமாகவும், மேலிருந்துக் கீழாகவும் என் மீதேறி
விளையாடிக்கொண்டிருந்தான்.
லோக்கிக்கு எப்படி ‘வெறும்நாய்’ கதையைக் கடத்துவது என யோசிக்க ஆரம்பித்தேன்.
அமெரிக்காவின் முன்னால்ஜனாதிபதி பைடன் பெயரில்
இயங்கும் ……… வெல்கம்சென்டரில் எங்கள் இரவுத்தங்கலுக்காக ஆர்.வி. பார்க் செய்யப்பட்டபோது,
ஒரு நீண்ட நேரப் பயணத்தில் வானத்தையோ, வெளியையோ பார்க்க முடியாத ஏக்கத்தில் நான்தான்
முதலில் அவ்வாகனத்திலிருந்து குதித்திறங்கினேன்.
வெளிப்புறக்குளிர் என்னை இன்னும் அதனுடன்
சேர்த்தணைத்துக் கொண்டது.
ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் இந்த மாதிரியான
வெல்கம்சென்டர்கள் உண்டு என்பதை நண்பர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்.
நவீனகழிப்பறைகள், குளியலறைகள், பலநாட்டு
உணவுவகைகள், மதுபானக்கடைகளென பல ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் அவ்வளாகத்தில்
எங்கள் ஆர்.வியைப் போல பல ஆர்.வி.க்களும், கார்களும், ட்ரக்குகளும் இடைவெளிகள் விட்டு
நின்றுகொண்டிருந்தன.
அங்குதான் இந்த இரண்டாவது பயணத்தின் முதல்
ஹோம்லெஸ்சைப் பார்த்தேன். சொல்லி வைத்ததுபோல மேலே மேலே பல அழுக்குச் சட்டைகள், அதன்மேல்
சில கிழிந்தகோட்டுகள், அழுக்கேறிய ஷூ.
பல வடிவங்களில், பலவண்ணங்களில் தோளில் மாட்டப்பட்ட
பைகள்.
அமெரிக்காவைப் பற்றி இப்படி அடிக்கடி நியாபகப்படுத்தவேண்டிய
காட்சிகளும் உண்டு.
இரவில் மிதமான ஒயின் அருந்துதல் உடலுக்கு
நல்லது என்ற சொல்லப்படாத ஒரு மருத்துவரின் வார்த்தைகளை, சொல்லப்பட்டதாக நானே யூகித்துக்
கொண்டு அவ்வார்த்தைகளின் சுகத்தில் தூங்கிவிட்டேன்.
No comments:
Post a Comment