Wednesday, March 21, 2018

சுடுசோறும் பங்குக்கறிக்குழம்பும் பின்னிரவுகளும்!



இதுவரை அம்மாவின் நினைவையும், அவள் தந்துவிட்டுப் போயிருக்கும் ருசியையும் சேர்த்து மீட்டெடுக்காமல் உணவைப் பற்றி என்னால் ஒரு வரியையும் எழுதிவிட முடியாது.

நேரந்தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, இரண்டு வேளை காபி, டீ என்ற வரையறைகள் நல்உணவிற்கு எதிரானைவை.

எப்போது ஒரு ருசியான உணவின் மீது ஆர்வம் மேலிடுகிறதோ, அதன் தேவை வேண்டி நாக்கு நம்மிடம் யாசிக்கத் துவங்கும் முன் அவை நம் உணவுத் தட்டிலிருக்க வேண்டும்.

எப்போதும் என் அம்மா அப்படித்தான். எங்கள் முன் ருசியான உணவை வைத்தாள். பல காலம் ருசியால் எங்களை அடைகாத்து வைத்திருந்தவள் அவள். அந்த அட்சயபாத்திரத்திலிருந்து ஒரு துளியை மட்டும் இப்பொழுது நான் வெளியே எடுக்கிறேன். அது குறைந்துவிடாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு என் சொந்தச் சேமிப்பு கிடங்கிலிருக்க மனம் விரும்புகிறது.

நிலப்பரப்பின் பொருட்டு வேண்டுமானால் உணவை வகைப்படுத்தலாம். அந்த நிலப்பரப்பில் எதன் விளைச்சல் அதிகமோ அதுவே அப்பிரதேச உணவையும் தீர்மானிக்கிறது. எங்கள் பூமியில் மல்லாட்டை. (சரி வேர்கடலை அல்லது நிலக்கடலை) மல்லாட்டை, துவையலில் துவங்கி முருங்கைக் கீரை, கருவாட்டுக் குழும்பு வரை அதன் இருப்பின்றி ஒரு சாப்பாட்டையும் நாங்கள் ருசித்ததில்லை. இரவுச் சாப்பாடு பெரும்பாலும் மண் தரையில் பாய்ப்போட்டு தெருப்பசங்களோடு சேர்ந்து தான். சுடுசாதம் வடித்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வந்து வைக்கோலால் ஆன பிரமனையின் மீது கிடத்துவாள் அம்மா.



ஒரு பெரும் தாம்பாளத்தட்டில் அம்மியில் அரைத்து உருட்டப்பட்ட மல்லாட்டைத் துவையல் உருண்டை இருக்கும்.  அது ஒரு சிறு பூசணிக்காய் அளவிற்கானது.

கழுவி முடிக்கப்பட்ட பத்திருபது எவர்சில்வர் தட்டுகள், இரண்டு மூன்று குடிநீர் சொம்புகள் அதன் அருகே இறைந்துக் கிடக்கும்.

அவ்வளவுதான், இரவு உணவு. லேசாக குழைக்கப்பட்ட ஆவிபறக்கும் சுடுசோறும் எவ்வளவுத் தேவையோ அவ்வளவு எடுத்துக் கொள்ளும்படியான மல்லாட்டைத் துவையலும்  ஒரு ஓரமாக நல்லெண்ணெய் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.

 மல்லாட்டைத் துவையலோடு சுடுசோற்றைச் சேர்த்து பிசையும் போது கை லகுவிற்கோ, நா வழுக்கிற்கோ நல்லெண்ணெய் தேவைப்படலாம். நான் ஒரு போதும் அதைச் சேர்த்ததில்லை. எங்கள் கொல்லை மேட்டில் மல்லாட்டையின் முதல் எதிரியே எள் தான். இப்படி நேர் எதிரிகள் இருவர் என் உணவுத்தட்டில் பகைமை பாராட்டுவதை எப்போதும் நான் அனுமதித்ததில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திற்குமென பிரத்தியேகமான ஒரு உணவு வாய்க்கும். ஆனாலும் வீடுகளில் வாய்க்கப்பெறும் உணவே தனித்துவமானது. எங்கள் வீட்டுக் களியையும், கறிக்குõழம்பையும் தாண்டி உலகின் எத்திசையிலும் வேறொரு ருசியை இதுவரை சுவைத்ததில்லை.


அம்மாவின் தனிச்சிறப்பே எதற்குமே மெனக்கிடாததுதான். பகல் பன்னிரென்டு மணிக்குதான் விறகடுப்பைப் பற்றவைப்பாள். சமைக்கும் போது அம்மாவுக்கு கூடுதலாக இரண்டு கைகள் முளைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு அடுப்பில் கறிக்குழம்பைக் கூட்டுவாள். இன்னொரு அடுப்பில் களி கிண்டுவதற்கு சுடுத்தண்ணீர் கொதிக்கும். உதவிக்கு இன்னொரு ஆளை ஒருபோதும் அவள் அனுமதித்ததேயில்லை.

உங்களின் கவிதைப் பிரவாகத்தின் போது இன்னொரு மனுஷனை உதவிக்கு அழைப்பீர்களா?

முரட்டு பிடிவாதத்தோடு பல ஆண்டுகளாய் கட்டிக் காப்பாற்றும் அவளின் தனிப்பட்ட உலகத்தில் இன்னொரு ஆளுக்கு அனுமதியில்லை

தாம்பாளத் தட்டில் பத்திக்க பத்திக்க களி உருண்டைகளை உருட்டி வைப்பதற்கும், கறிக்குழம்பின் குழைவிற்கு, கொஞ்சம் ஏந்தல்கத்திரிக்காயின் முழுமையைக் கொட்டி இறக்குவதற்குமான இடைவெளி ஒரு நிமிடத்திற்கும் குறைவானது.

சமையல் நிறையும் போது அம்மாவின் முகம் வியர்வையாலும் பெருமிதத்தாலும் பிரகாசிக்கும்.

சிற்பத்தின் கண்திறந்த வினாடி சிற்பியின் முகம் பார்த்திருக்கிறீர்களா?

அதுதான் அம்மாவின் அப்போதைய முகம்.

தட்டில் களியின் மேடு மறையும் வரை கறிக்ழுழம்பால் நிரப்புவாள்.

ஒரு மழைக்கால மத்தியானத்திலோ, வெய்யிலேறிய பகல் நேரத்திலோ நீங்கள் ஒரு முறை களியையும், கறிக்குழம்பையும் சாப்பிட்டுவிட்டால் போதும்.  வட தமிழ்நாட்டின் ஒரே ஒரு உணவிற்கு முன் உலகின் மிகச்சிறந்த நூறு சுவையான உணவையாவது ஈட்டுகட்டிவிடலாம்.

இக்கேழ்வரகுக் களியோடு போட்டி போட்டுச் சேரும் இன்னொரு குழம்பு, கருவாட்டுக்குழம்பு  அதற்கும் சேர்மானம் ஏந்தல் கத்திரிக்காய் தான்.

மொதகெண்டை, நெத்திலி, கெழங்கா, பலாப்பொடி என்ற விசித்திர பெயர்களால் எங்கள் மக்களால் செல்லங்களாக அழைக்கப்படும் இச்சிறு உலர் மீன்களின் ருசி கத்திரிக்காய்களோடு குழையும் போது அது உலகில் யாருக்கும் கிட்டாத தனி ருசியை எங்களுக்குத் தரும்.

ஏர் ஓட்டியோ, அண்டை கழித்தோ, நாற்று பிடுங்கியோ, மத்தியானப் பசி குடலைப் பிடுங்கும்போது நீரோடும் வாய்க்காலில் குந்தி எங்கள் சம்சாரிகள் குண்டாஞ்சோற்றை, கருவாட்டுக் குழம்போடு சேர்த்துப் பிசைந்து உள்ளே தள்ளுவதை என் சிறுவயதில் வாய் பிளந்து நின்று பார்த்திருக்கிறேன்.

அம்மாவின் ருசியை அவள் எங்கிருந்து அறிந்து கொண்டாள் என்பதறிய அவள் இறக்கும்வரை கேட்டுப் பார்த்தேன். ஒரு பெருமிதப் புன்னகை. அவ்வளவு மட்டுந்தான்.

ஆட்டுக்கால் சூப் வைத்து, பத்திக்க பத்திக்க சொம்பு, சொம்பாய் வீட்டிலிருப்பவருக்குத் தரப்படும். சொல்லி வைத்தாற்போல் என் தட்டில் மட்டும் இரண்டு மூன்று கால் துண்டுகள் அமிழ்ந்து கிடக்கும். கை துழாவாலில் கால் தட்டுப்படும்போது அப்போதுதான் முதன் முதலாய் பார்ப்பது போல நன்றியின் பொருட்டு அம்மாவை ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.

இரவு முழுக்க ரா அடுப்பில் பூக்க வைக்கப்பட்ட ஆட்டின் கால்கள், அதனோடே சேர்த்து வேறொரு பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்ட மொச்சைக்கொட்டைகளோடு சேரும் சேர்மானம், எல்லா மனிதர்களுக்கும் கை வரம் பெறாத பெரும் வரம். அம்மா வரம் வாங்கி வந்திருந்தாள்.

ஆக,

ஆட்டுக்கால், மொச்சை சேர்த்து செய்யப்பட்ட குழம்பு, சோற்றுக்கும், தோசைக்கும் என பிரத்தியேகமாய் செய்யப்பட்டவை. ஒரு போதும் நாம் அவரசப்பட்டு அதனோடு இட்லியையோ, சப்பாத்தியையோ சேர்த்து அவமானப்படுத்திவிடக் கூடாது.

தான் இறப்பதற்கு ஆறுமாதத்திற்கும் முன் வீட்டிற்கு வந்த எழுத்தாளர். ஜெயகாந்தன் கேட்டார்.

ஷைலஜா, களிக்கு கூட தொட்டுக்க எது மிகச்சிறந்த சேர்மானம்?

கறிக்குழம்பு

கத்திரிக்கா, கருவாட்டுக் குழம்பு இல்லை என்பது போல உதடு சுழித்தவரிடம் ஒரு நிமிடம் அதை நீடிக்கவிடாமல்,


பண்ணைக்கீரை ஜே.கே. என்ற போது சட்டென மலர்ந்து அதுஎன அவர் இடிபோல் சிரித்தது இப்போதும் நினைவிருக்கிறது.

பண்ணைக் கீரையென்றால்?

எங்க ஊர் கொல்லைமேடுகளில் விதைக்கப்படும் வானம் பார்த்த விதைகளில் மானாவாரி மல்லாட்டை, கம்பு, கேழ்வரகு, எள்ளு, கொள்ளு, உளுந்து, துவரையென பட்டியல் நீளும். அதன் துளிர்த்தலுக்கும் முன் ஆறேழு பேர்களில் எங்களால் அடையாளப்படுத்தப்படும் இக்கீரைகள் முளைக்கும். அதன் ஊட்டம், முதன்மைப் பயிரைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.

மல்லாட்டைக்குக் களைவெட்டிக் கொண்டே எங்கள் பெண்கள் முன் மடியில் இக்கீரைகளை ஆய்ந்து போடுவார்கள். சிறுவயது நடுவயதுப் பெண்களின் மடிகளை விட ஆயாக்களின் மடிகளில் இருமடங்கு கீரை நிறையும். அக்கீரையைக் கடைந்து வடகம் போட்டுத் தாளித்தால் எட்டூரு பகையாளியும் நம் பங்காளியாகி ஒரு கிண்ணக் குழம்புக்காக வீட்டுவாசலில் காத்திருப்பார்கள். 

என் நீர்கதையில் நான் பங்குக்கறிக் குழம்பைப் பற்றி சொல்லியிருப்பேன். பெரும்பாலும் பங்குக்கறி அகாலத்தில்தான் பங்கு பிரிக்கப்படும். விபத்திலோ, குள்ளநரியின்  கவ்வலிலோ அடிப்படும் ஆட்டை ஒரு கயிற்றால் மரத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு, அதன் தோல் நீக்கி, குடலெடுத்து, ஈரல் பிரித்து, பிச்சியை நீக்கி அது ஒரு அறுவை சிகிச்சை நிபுணனுக்கும் கைவராது மக்கா,

ஆட்டின் எடைக்கு ஏற்ப பத்தோ, இருபதோ பங்கு பிரியல் நடக்கும். பங்குக்கறியின் சிறப்பே ஆட்டின் எல்லா உறுப்புகளும் சம விகிதத்தில் இருப்பதுதான். பிரிக்கும் கைகளில் நீரள்ளி கறிக்குவியலை உருட்டும் லாவகம், ஒரு கிரிகெட் மேட்சில் ஸ்பின் பௌலராலும் சாத்தியப்படாதது.

பங்குபிரித்து முடித்தவுடன், பிரித்தவன் கண்கள் கறி உருண்டையின் மீது நிதானமாக நகரும். மேடு பள்ளங்கள் இட்டு நிரப்பப்படும். தங்கம் அளக்கும் தராசில் நிறுத்தாலும் எடை கூடுதல் குறைச்சலாக இருக்காது.

அகாலத்தில் கதவு தட்டப்பட்டு கறி கைமாறும் அந்நொடியே, அது எத்தனை ராத்திரியெனினும் நாம் சமைக்கத் தொடங்கிவிட வேண்டும்.

நம் தாமதம், பங்குக் கறியின் கவுரதைக்கு இடப்படும் சவால். நீங்கள் கறியை ப்ரிஜீக்குள்ளோ, ப்ரீசருக்குள்ளோ வைத்தால் அது தன் ருசியை ஒரு நத்தையின் உடலைப்போல உள் நோக்கி உறிஞ்சிக் கொள்ளும்.

சுடுசோறும், பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளுக்கு உகந்தவை. இதை திருட்டுக்கறி, களவாட்டு கறி என சொல்வது ஆடுகளை அவமானப்படுத்தும் சொற்கள்.

குழம்பு கொதித்தடங்கியதும், சுடுசோற்றோடு, தூங்கிக் கொண்டிருக்கும் வீட்டாட்களின் முகத்தில் தண்ணி தெளித்து எழுப்பி சோற்றுத்தட்டை  நீட்டிப் பாருங்கள், பிறகு அவர்கள் காலத்திற்கும் ருசியின் அடிமைகள்.

நாம் சமைப்பதற்கு உலோக பாத்திரங்களையோ, மண் சட்டிகளையோ மட்டுந்தானே சார்த்திருக்க வேண்டியிருக்கிறது?

அதெல்லாம் இல்லை.

அடிப்பட்ட ஆடோ, மாடோ, மானோ மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டு கறி பிரிக்கப்படும். எலும்பையும், சதைகளையும் பிரித்தெடுத்து ஆணிணஞுடூஞுண்ண் என்ற அவமானத்தை அவ்விலங்குகளுக்கு கிராமத்து ஆட்கள் ஒரு போதும் தருவதில்லை.

ஆக, சதையோடும், எலும்போடும் ஒரு அன்னக்கூடையிலோ, ஈச்சங் கூடையிலோ  கழுவி அலசப்பட்டு கறி கொட்டப்படும்.

மசாலா சேர்த்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் தொங்கும் பிராண்டட் மசாலாத்தூள் எங்கள் நாட்டு உணவுக்கு எதிரானவை.

காய்ந்த மிளகாயும், தனியாவும், கொஞ்சம் மஞ்சளும் சேர்த்து பதமாக உலர்த்தியெடுக்கப்பட்டு அரைத்தெடுக்கப்படும் மிளகாய் சாந்து, கூட கொஞ்சம் கல் உப்பு, சரியாக நீர் கலந்து கறியில் இச்சாற்றைப் பிரட்டி எடுக்கப்பட்டு அன்னக்கூடையிலேயே சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கறி நிறைக்கப்பட்ட அன்னக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஒரு சுடு பாறைக்குப் போய் விடவேண்டும். கழுவி முடிக்கப்பட்ட பாறையில் காய்ந்த விறகையும் சுள்ளிகளையும் கொண்டு ஆனமட்டும் எரியூட்ட வேண்டும். இப்போது கற்பாறையே நெருப்புப் பிழம்பாக மாறிவிடும்.

ஊற வைக்கப்பட்ட கறித்துண்டுகளை எடுத்து பாறையில் வீச வேண்டும். நீளமான மூங்கில்க் குச்சிகளால் அவைகளை பிரட்டி விட வேண்டும். வெந்ததும் வேகாததும் தீய்ந்ததுமாய் கிடைக்கும் பொன் வருவல் துண்டங்களை மெதுமெதுவாய் சூட்டில் வாட்டி ஒன்று போல ஆக்கி எடுத்து, ஏதாவதொரு பெரு மரத்தடியில் போத்துவா சாராயம் நிரப்பப்பட்ட குவளைக்குப் பக்கத்தில் இப்பொன்னிற துண்டங்களை அடுக்கி வைத்து...

மது விலக்கு இல்லையெனினும் இதற்கு மேல் இதை எழுதி விட முடியாது.

எங்கள் ஊர் ஏரிகளில் பிடிபடும் சிறு மீன்களில் கெளுத்தியும் குறவையும் உளுவையும்தான் ருசியானவை.

கெளுத்தி என்றாலே அது கைவிரல் கனத்துக்கும் சற்று குறைவானதுதான். பெரும்பாலும் எல்லா கெளுத்தியுமே சினையுற்றிருக்கும்.

அம்மா அவைகளை செனக்கெளுத்தி என கையிலெடுத்துக் காண்பிப்பாள்.

முட்டைகளாலான அதன் அதீத ருசி ஏழேழு ஜென்மத்துக்கும் கிட்டாத ஒன்று.

நேற்றிரவே மண் சட்டியில் வைக்கப்பட்ட குழம்பில் இரவெல்லாம் மீனூறும். மூட்டப்பட்ட விறகடுப்பில் ஒரு சிறு  இசை லயத்தோடு தோசை வார்க்கப்படும். குழிவிழுந்த தோசைகளை இம்மீன் குழம்பு கொண்டு மூடாக்கு போட்டுக் காத்திருந்து சாப்பிடு மகனே,

வாழ்ந்ததின் ருசியை முழுவதும் உணரலாம்.

கோழிகளால் நிறைந்திருக்கும் வீட்டின் சுற்றுப்புரமே எனக்கும் வாய்த்த காலம் அது. எத்தனை நள்ளிரவிலும் கோணங்கியையும், எஸ். ராமகிருஷ்ணனையும் தெருமுக்கில் பார்க்கும் நேரம், அது எத்தனை அகலமாயிருப்பினும் அம்மா ரெண்டு கோழிகளின் கழுத்திற்கு கத்தியைக் கொண்டு போவாள்.

இப்போது போல நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி என்ற வகைபாடு அப்போதில்லை. கோழி என்றாலே அதுவீட்டில் வளர்க்கப்பட்டு பக்கத்து வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து ஊர் சண்டையை ஒட்டுமொத்தமாக இழுத்துக் கொண்டுவரும் போக்கிரிக் கோழிகள்தான்.

அறுக்கப்பட்ட கோழிகளை கொதிநீரில் குளிப்பாட்டி மஞ்சள் தடவி துண்டம் போட்டு,

அம்மா அதைக் கூட்டுகிற அழகே அருகிலிருந்து பார்க்கும் ஒருவனின் மன உறுதியைக் குலைக்கும். குழம்பு கொதித்தடங்கும் போது, லேசாக  குழம்புசட்டியின் வட்டத்திற்கு நல்லெண்ணெயைக் காட்டுவாள் அது சுவைகூட்டும், ஓரத்தில் எண்ணெய் மிதக்கும். அது இன்னும் கறியின் கவிச்சியை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும் என அம்மா யாருக்கோ வகுப்பெடுத்தது காதில் இப்போதும் கேட்கிறது.

இதெல்லாம் ஒன்றுமில்லை. கேழ்வரகும், கம்பும் சரி சமமாய் சேர்த்து உரலில் இடிக்கப்பட்ட மாவை இரவு அம்மா அமிர்தத்தை கரைப்பது போல கைகொண்டு கரைத்து, ஒரு வெள்ளைத் துணியால் வேடு கட்டிவைத்து உறியில் தொங்கவிடுவாள். அது இரவெல்லாம் புளித்து காலையில் நுரைத்து இதுவரை மனிதகுலம் கண்டிராத ஒரு அதீத ருசியைத் தந்துவிடும் முனைப்போடு வீடெல்லாம் தன் மணம் பரப்பும்.

நீர்ஊற்றி கரைக்கப்பட்ட கூழில் பச்சைமல்லாட்டை பயறுகளை உறித்துப்போட்டு ரெண்டு சொம்பு குடித்துவிட்டு அதோடு செத்துபோகலாம். நிறைவான வாழ்விற்கு அது ஒன்று போதாதா மானிடா!