Wednesday, July 17, 2013

'எல்லா நாளும் கார்த்திகை' - மலையாளத்தில்‘மீடியா வாயஸ்சில்’ என் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தமிழில் பத்தியாக வந்து கொண்டிருந்தபோதே, மலையாளத்தில் தேசாபிமானியிலும் பத்தி வந்தது. நான்கு மாதங்களுக்கு முன் திருச்சூருக்கு பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் ஒரு நாள் போனபோது நாலைந்து வாசகர்கள் என்னிடம் வந்து அக்கட்டுரைகளை பற்றி சிலிர்த்து பேசினார்கள். மிளகும், பாக்கும், தேங்காயும் என் வண்டியில் ஏற்றி தங்கள் அன்பைப் பகிர்ந்தார்கள்.

கேரளா முழுக்க அக்கட்டுரைகளுக்கு பெரும் வாசகர்கள் உண்டு. எம். முகுந்தன், சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், இந்துமேனன் என்று அதன் வாசகர் தளம் விரிந்து கொண்டேயிருந்தது.

தற்போது ராஸ்பெரி பப்ளிகேஷன்ஸ் சார்பில் மிக அழகான வடிவமைப்பில் ஓவியர் ‘அரஸ்’சின் ஓவியங்களுடன் அது புத்தகமாக வந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அதற்கான வெளியீட்டு விழாவை மஞ்சேரியில் நடத்த உள்ளது ராஸ்பெரி. அது என் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் டாக்டர். ரகுராமின் சொந்த ஊர். மட்டுமல்ல கேரள பேரழகிகள் நிறைந்த ஊர் எனவும் சொல்வர்கள்.

Wednesday, July 3, 2013

குகைமரவாசிகள் - ஓர் அனுபவம்


https://plus.google.com/photos/107163301877725502178/albums/5897359399140757281இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் மு.ராமசாமியின் ஸ்பார்டகஸ் நாடகத்தை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பனிபடர்ந்த பசும்புல் தரையில் உட்கார்ந்து பார்த்தபோது கோணங்கி எனக்கு முருகபூபதியை அறிமுகப்படுத்தினான்.
“என் கடைசி தம்பி பேரு முருகன்”
பி.ஏ,. கடைசி வருடம் படித்து கொண்டிருப்பதாக சொன்ன அந்த இளைஞன் என்னிடம் மிக வாஞ்சையாக கையைக் குலுக்கினான். அதன் பிறகான இந்த கால் நூற்றாண்டு என்னென்னவோ ஜால வித்தைகளை நிகழ்த்திவிட்டது. முருகன், முருகபூபதியாக, தமிழின் மிக முக்கிய நாடக ஆளுமையாக உருவெடுத்து நிற்கிறான்.
‘செம்மூதாய்’ தவிர மற்ற எல்லா நாடகங்களையும் நாங்கள் திருவண்ணாமலையில் நிகழ்த்தியிருக்கிறோம். குறிப்பாக வனத்தாதி 10 நாள் ஒத்திகையையும், என் மகன் வம்சி பிறந்திருந்தபோது திப்ப காட்டில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் சைக்கிளில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொண்டு போவேன். அம்மாவும், அம்மம்மாவும், ஷைலஜாவும் மாறி மாறி சமைத்து தருவார்கள்.
ஒவ்வொரு நாடகத்துக்கும் அவர்களைப் போலவே உயிரைக் கொடுத்து உழைப்போம். திப்பக் காட்டின் மையத்தில் நிகழ்ந்த அந்நிகழ்வுக்கு கூட 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிறைந்திருந்தார்கள்.
ஒவ்வொரு நாடகம் முடிந்தும் திரும்பி செல்லும் போதும் பார்வையாளர்களின் முகங்களை நுட்பமாக பார்ப்பேன். ஏமாற்றமும், துக்கமும், பறிகொடுத்த உணர்வுமாய் திரும்புவார்கள். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் நம்பிய, தன் படைப்பின் உருவாக்கத்தில் அவன் பிறவாரமாகவே இருக்கிறான்.
இரு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சூர்ப்பணங்குக்கும் இப்போது நடந்த குகைமரவாசிகளுக்கும் காட்சிகளில், வசனத்தில், கோரியாகிராப்பியில் பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லை. நடிகர்கள் உயிரை உருக்கி, கசக்கிப் பிழிந்து தங்களை மண் வெளிகளில் காட்சிப்படுத்துகிறார்கள். அதை பார்வையாளர்களால் உள்வாங்க முடியாத திணறல் நமக்கு புரிகிறது.
பூபதியிடமும், மணல்மகுடிக் குழுவிடமும் தமிழின் முக்கிய படைப்பாளிகள் மனத்திறந்து உரையாட வேண்டும். தன் அடுத்த நாடகத்தை வேறு ஒரு எழுத்தாளரின் பிரதியை Seript கொண்டு உருவாக்கவேண்டுமென பார்வையாளர்களின் சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தேன்.
இந்நாடகத்துக்காக நானும் நண்பர் கார்த்தியும், ஷைலஜாவும் மிகக் கடுமையாக உழைத்தோம் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்து அந்த உழைப்பை கௌவரப்படுத்தினார்கள். சுமார் 50,000 ரூபாய் இதை நிகழ்த்துவதற்கு செலவானது. நண்பர்கள் மகி, துரை, தவநெறிச்செல்வன், பூக்கடை சங்கர் ஆகியோர் இதன் ஒரு பகுதியை பகிர்ந்து கொண்டார்கள். வழக்கம் போல் இருபதாயிரம் ரூபாய் கடன் நிற்கிறது. பார்க்காலம் ஏதாவது நிகழும் அந்த அர்பணிப்பு மிக்க கலைஞர்களின் முன் இதெல்லாம் ஒன்றுமில்லை.