Showing posts with label நெகிழ்வுகள். Show all posts
Showing posts with label நெகிழ்வுகள். Show all posts

Monday, December 13, 2010

கதைகளால் நிரம்பிய கிணறு


இருபது வருடங்கள் முடிந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடியிருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஜனத்திரளுக்கு கதை சொல்ல நானும், வேல. ராமமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தோம். எங்கள் இருவரின் கதை கேட்டு கூட்டம் மயங்கிக் கிடந்தது. அன்றிரவு பஸ் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டார் வேலா. வீட்டிற்கு வந்து ஒரு வேலை கருவாட்டுக் குழம்பும், கேழ்வரகுக் களியும் சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் புறப்படுவதாக திட்டம். என்னைக்கு இந்த திட்டமெல்லாம் எழுத்தாளர்களிடம் நிறைவேறி இருக்கு?
மழையின் குளிர்ச்சியில் அறையிலேயேக் கிடந்து அம்மா சமைத்துத்தர வித விதமாய் சாப்பிட்டு பகலானால் கிணற்றுக்கு குளிக்கப்போவது என்று போனது அந்த மூன்று நாட்களும்.

வேலா, கிணற்றுக்குள் முழ்கி குதியாட்டம் போட நான் கரையில் உட்கார்ந்து குதிப்பதற்கு தயாராகிறேன். உள்ளிருந்து வேலா சத்தமாக சொல்கிறார்

பவா இந்நேரம் இங்க கோணங்கி வந்தா எப்படி இருக்கும்?

அக்கற்பனையில் மகிழ்ந்து எதேச்சையாய் திரும்புகிறேன். தோலில் தொங்கும் ஜோல்னா பையோடு கோணங்கி. சில நேரங்களில் இந்த மாதிரியான அபூர்வத் தருணங்கள் வாய்ப்பதுண்டு. அன்று ஒவ்வொருவரும் கிணற்றுக்குள்ளிருந்து மேலேப் பார்த்துக் கதைசொல்ல வேண்டும். வெளியிலிருப்பவர்கள் கதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னோடு கதைக் கேட்க பத்து, இருபது பேர் வயக்காட்டு வேலைகளை ஒதுக்கிவிட்டு கிணற்று மேட்டில்லிருந்து கதைகேட்டது நினைவிருக்கிறது.

நான் ‘சிங்கார குளம்’, கோணங்கி ‘கறுப்பு ரயில்’, வேலா ‘கோட்டைகிணறு’.

‘கோட்டைகிணறு’ கதை கிணற்றுக்குள்ளிருந்து வெளிவந்ததே அச்சமூட்டுவதாக இருந்தது. வேட்டைக்கு அலையும் மிருகம் ஒன்று உள்ளிருந்து உருமுவது போலான அனுபவம் அது. கதை கேட்டு முடித்த அச்சத்தில் அதற்குப் பிறகு அந்த கிணற்றுக்குள் குதிக்கவில்லை நான். அதே மாதிரி கதை கேட்ட அச்சத்தில் வெகு நேரம் ததும்பிக் கொண்டிருந்தது அந்த கிணற்று கருநீர்.

கதை சொல்லி, கதை கேட்கும் அனுபவம் சுத்தமாக துடைத்தெறியப்படும்
இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ.காம் நண்பர்கள் என்னிடம் கதை சொல்ல கேட்டு திருவண்ணாமலைக்கு வந்தது ஆச்சரியமானது. ரெண்டு கதை சொன்னேன். ஒன்று என்னுடைய ‘வேட்டை’, இரண்டு சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘கொமலா’



Friday, May 28, 2010

தாய் வீடு


என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் மீடியாக்களில் வருவதை எப்போதும் தான் விரும்புவதில்லை என்று சொல்லுவார், ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அவர் சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அது நம் இருப்பை சொல்கிறது, சக நண்பர்களின் உரையாடலை சமீபப்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்களிடம் நம்மை அடையாளப்படுத்தி சந்தோஷமோ, சங்கடமோ கொள்ள வைக்கிறது.

சமீபத்தில் என் குடும்பம் பற்றி ஒரு முழுப்பக்க கட்டுரை கேரளா "தேசாபி மானியில்" "தாய் வீடு" என்ற தலைப்பில் வெளியாகி மூன்று, நான்கு நாட்கள் கேரளாவிலிருந்து நண்பர்களும், உறவினர்களுமாக தொலைப்பேசியில் அழைத்து பேசி நெருக்கத்தை அதிகப்படுத்தினார்கள். நம் மனோஜ் தான் (புனைவின் நிழல்) காசர்கோட்டில் உள்ள தன் சகோதரியின் வீட்டிலிருந்து அதிகாலையில் தேசாபிமானியை பார்த்து என்னை எழுப்பினார். ஆனாலும், மலையாள இளம் சேச்சிகளின் தொலைபேசி குரல்களுக்காக ஏங்கினேன். ஜோதிர்மையி சாருவிடம் என் தொலைபேசி எண்ணை கேட்டிருக்க கூடும் என்ற அற்ப சந்தோஷம் ஒரு நிமிடம் நீடித்தது அப்படிப்பட்ட எதுவும் என்னைப் போன்ற துர்பாக்கியசாலிகளுக்கு எப்போதும் வாய்க்காது. சாருவிற்கும், அய்யனாருக்குமே மொத்த பாக்கியமும் போய்ச் சேரக்கடவது.

இக்கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவசர அவசரமாக ஜெயஸ்ரீயும், சுகானாவும் மொழிபெயர்த்தனர்


தாய்வீடு
- ஷபீக் அமராவதி

எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.

என்.எஸ். மாதவனும், பால் சக்காரியாவும், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஏ. அய்யப்பனும், சந்தோஷ் ஏச்சிக்கானமும் கே.ஆர். மீராவும், பிரபஞ்சனுக்கும், அசாகமித்ரனுக்கும், கோணங்கிக்கும், நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும், கனிமொழிக்கும், மனுஷ்யபுத்திரனுக்குமிடையில் கரைகிறார்கள்.

தமிழ், மலையாள இலக்கியங்களுக்கிடையில் சங்கமிக்கவைக்கிற ஒரு பாலத்தைப் பற்றியும், அதற்கு குறுக்கும் நெடுக்குமாக ஸ்தூலமாய் தாங்கி நிற்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை நகரில் பெயரிடப்படாத அந்த வீட்டின் முகவரிதான் 19, டி.எம். சாரோன்.

தமிழின் இனிமையும் மலையாளத்தின் அழகும் கலந்திருக்கும் இந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் மர நிழல் வரவேற்கும் வாசலில் கைகூப்பி வரவேற்க, பவாசெல்லதுரையின் அம்மா தனம்மாவும், ஷைலஜாவின் அம்மாவான கேரளத்து மாதவி அம்மாவும் இருக்கிறார்கள். இரண்டு அம்மாக்களின் கருணையும் பிரியமும் விளங்கும் இந்த இடம், இந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக இருக்கிறது. இங்கே தமிழும், மலையாளமும் இழைகளாகப் பின்னிப் பிணைந்து பேசி, பழகி, அற்புதப்பட்டு, விவாதித்து ஒன்று சேர்ந்திருக்கும் மலையாளத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிற இலக்கியங்களை இந்த வீட்டின் வாசலினூடாகஎன்.எஸ். மாதவன், கெ.என். பணிக்கர், எ. அய்யப்பன் முதல் எட்டாம் வகுப்பு மாணவி சிபிலா மைக்கேல் வரை தமிழகம் ஏற்றுக் கொண்டது, இவர்களினூடாகத்தான்.



தமிழ் நவீன எழுத்தாளர் பவா செல்லதுரைதான் இந்தப் பாலத்தின் முதுகெலும்பு. மனைவியின் அம்மா மாதவியம்மாதான் இதைத் தாங்கி நிற்கும் தூண்.
இந்தக் குடும்பத்தின் நான்கு ஜீவன்களுக்குத்தான் இந்தத் தூணில் பாலத்தை முழுமையாக்கிய பொறுப்பு உண்டு. பவாவின் மனைவி ஷைலஜா, ஷைலாஜாவின் அக்கா ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீயின் கணவர் தமிழனான உத்திரகுமாரன், இவர்களுடைய மகள் சுகானா. மலையாளத்தின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட காலடியெடுத்து வைக்காமல் இத்தனை முக்கியமான மொழி பெயர்ப்பாளர்களாக உயர்ந்திருக்கின்றனர். பவா அவர்களுக்கு பாதையமைக்க, மாதவியம்மா வார்த்தையெடுத்துக் கொடுக்கிறார். பல விதமான விருந்துகளினூடே பவாவின் அம்மா தனம்மாளும் இதில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

பாலக்காடு பறளியைச் சேர்ந்தவர் மாதவியம்மா. முண்டூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பாலக்காடு சிவில் ஸ்டேஷனுக்கு அருகில் கல்லேக்காடு வாசுதேவனின் வாழ்க்கைத் துணையானார். முதலில் வாசுதேவனின் சேலத்து அக்கா வீட்டிலும் பின்னர் திருவண்ணாமலையிலுமாக வசிக்கத் தொடங்கினர். மலையாளத்தை மறக்காமல் இருந்த மாதவியம்மா வாசிப்பை உயிரென தொடர்ந்தார். இவர் மூலம் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும், பேத்தி சுகானாவும் மலையாளத்தை பேச்சு - எழுத்து மொழிகளால் நிறைத்தார்கள். மாதவியம்மாவோ தன் மூத்த மகளின் பாடபுத்தகத்தைத் துணையாக்கி தமிழ் எழுத்துலகத்துக்குள் பிரவேசித்தார். வாசுதேவனின் மறைவுக்குப் பின் வாசிப்பு மாதவியம்மாவின் மறுபாதி ஆனாது. பவா-ஷைலஜாவின் குழந்தைகளான ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வம்சியும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மானசியும் ஜெயஸ்ரீயின் மகன் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அமரபாரதியும், மாதவியம்மாவின் தாய்பள்ளிக்கூடத்தின் புதிய மாணவர்கள்.

எழுத்தாளன், அரசு ஊழியன், விவசாயி, சமூகப் பணியாளன், பேச்சாளன், என்பதன் கூட்டுக் கலவையின் மொத்தமே பவாசெல்லதுரை. திருவண்ணாமலை மின்வாரியத்தில் அட்மினிஸ்ரேடிவ் சூப்ரவைசராக இருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும், அமைப்பாளராகவும், பேச்சாளருமாக இருப்பவர். +1 மாணவராக இருக்கும்போதே பந்தங்களையும், அதன் சிக்கல்களையும் விசாரணை செய்யும் விதமாக, "உறவுகள் பேசுகின்றன" என்ற நாவலின் மூலமாகத்தான் பவா 1983 இல் எழுத்துலகில் பிரவேசிக்கிறார். 89இல் "எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்" கவிதைத் தொகுப்பு மூலமும் 90 இல் முகம் என்ற தனது முதல் சிறுகதை மூலமும் தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகிறார். 2008 மார்ச்சில் அவருடைய முதல் கதைத் தொகுப்பு "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" வெளிவந்தது. நவீனத் தமிழிலக்கியத்தின் கவனிக்கத்தக்க பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது விமர்சகர்களின் கருத்து. உலகத் தரமான தமிழ்க் கதைகளின் முன்னால் நிற்கும் எழுத்து இவருடையது. இப்போது புதிய ஒரு நாவலின் உருவாக்கத்தில் இருக்கிறார்.

பட்டதாரி மாணவியாக இருக்கும்போது கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருந்த ஷைலஜா திடீரென எழுதுவதை நிறுத்திவிட்டார். தன்னைவிட 2 வயது மூத்தவரான பவாவையும் அவருடைய எழுத்துகளையும் நெருங்கியறிந்ததாலும் அவர் மூலமாக அறிமுகமான நவீன இலக்கிய வாசிப்பினாலும் இது நிகழ்ந்தது என்கிறார் ஷைலஜா. இவர் படித்த திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் சீனியர் மாணவராயிருந்தார் பவா. அன்றே இலக்கிய மேடைகளில் கவனிக்கத்தக்க பேச்சாளன், கவிஞன். இப்படியான இலக்கியக் கூட்டங்களில் மூலம்தான் பவாவுடன் நட்பான இந்த சகோதரிகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகள் வரை கொண்டு சேர்த்தது. இப்போது சங்கத்தின் மாநில செயற்குழுவில் பவாவும், மாநிலக்குழுவில் ஷைலஜாவும்.

தீவிர வாசிப்பினூடே மலையாளப் புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும் திரும்பவும் எழுத்துலகில் கால் பதித்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய இலக்கிய சந்திப்பான "முற்றம்" நிகழ்ச்சியில் பேசிய பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மலையாள உரையை தமிழ்படுத்தியதுதான் ஷைலஜாவின் முதல் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அந்தச் சந்திப்பிலேயே தன் "சிதம்பர நினைவுகளை" மொழிபெயர்ப்பு செய்வதற்கான அனுமதியையும் பாலச்சந்திரன் அளித்தார். தொடர்ந்து என்.எஸ். மாதவனின் "பரியாய கதைகள்" கூக்குரல், சாராஜோசப், என். பிரபாகரன், ஆர். உண்ணி ஆகியோரின் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டு மொழிபெயர்த்தார். "சூர்ப்பனகை" என்ற பெயரில் மொழிபெயர்த்த கெ.ஆர். மீராவின் "மோகமஞ்சள்" என்ற கதைத் தொகுப்புதான் அவருடைய சமீபத்திய வரவு. குடும்ப நண்பரான நடிகர் மம்முட்டியின் "காழ்ச்சப்பாடு" என்ற சுயசரிதையும், இ.எம்.எஸ். பற்றிய, அவரது மகள் இ.எம். ராதாவின் நினைவுக் குறிப்புகளும் இனி அடுத்ததாக ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் வெளிவரப்போகிறது. குறைந்த காலத்துக்குள் தமிழ்நாட்டின் முற்போக்கு புத்தக வெளியீட்டாளர் என்ற பெயர் பெற்ற "வம்சி புக்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஷைலஜா விளங்குகிறார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி தான் இவருக்கு பதிப்பகம் துவங்க ஊக்கமளித்தவர். "திலகவதியின் குறுநாவல்கள்" தான் வம்சி புக்ஸின் முதல் புத்தகம். 2004 மே 29இல் ஆரம்பித்த வம்சி இதுவரை 130 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம் என்பவற்றைப் பரப்பும் புத்தகங்களுக்கான மை வம்சியில் எப்போதும் இல்லை.
புத்தக வெளியீட்டாளர் என்பதற்குமேல் திருவண்ணாமலையின் இடதுசாரி கலாச்சார மையமுமாக விளங்குகிறது மத்தலாங்குளத் தெருவிலுள்ள வம்சி புத்தக மையம்.

ஜவுளி வியாபாரியாக இருந்த உத்திரகுமாருடன் அடிமாலியில் வாழ்ந்த நாட்களில்தான் ஜெயஸ்ரீ தன் எழுத்துலகில் நுழைகிறார். மாத்ருபூமி நாளிதழில் "நிலவில் கால்வைத்தது கட்டுகதையா?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை 2002 இல் தமிழில் மொழிபெயர்த்தது தான் தொடக்கம். பிறகு அடிமாலியைச் சேர்ந்த சியாமளா சசிகுமாரின், "நிசப்தம்" என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தார். பால் சக்கரியாவின் பெண்கதைகள், குறுநாவலான "இதுதான் என் பெயர்" சாகித்ய அகாடமிக்காக "சக்கரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கதைகள்" எ. அய்யப்பனின் "கல்கரியின் நிறமுள்ளவர்கள்" சந்தோஷ் ஏச்சிக்கானத்தின்" ஒற்றைக் கதவு", "கவிதையும் நீதியும்" என்ற தலைப்பில் சுகதகுமாரியுடன் கவிஞர் விஜயலட்சுமி நிகழ்த்திய நேர்காணல் என மலையாள இலக்கியச் செல்வங்களை ஜெயஸ்ரீ தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
கேரள வாழ்க்கையிலிருந்து மலையாளத்தைக் கற்றுக் கொண்ட உத்திரகுமாரன், ஜி.என். பணிக்கரின் "தாஸ்த்தாவேஸ்கியின் வாழ்வும் கலையும்" என்ற புத்தகத்தை மொழிபெயர்த்தார். சேகுவராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" இன் தமிழ் திரைக்கதையையும் மொழி பெயர்த்துள்ளார். மகளான சுகானா எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது, திருவனந்தபுரம் மண்ணந்தல எஸ்.இ. தாமஸ் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த சிபிலா மைக்கேலின் "மறையுந்ந தீரம்" என்ற கதைத் தொகுப்பை "எதிர்பாராமல் பெய்த மழை" ஏன்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். பவா-ஷைலஜாவின் மகனான வம்சி இரண்டாம் வகுப்பு மாணவனாக இருக்கும்போது வரைந்த ஓவியங்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்போது "ஆன் பிராங்க் டைரியை" மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் சுகானா. சாரோனிலேயே வேறொரு தெருவில் இந்தக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தாலும் 19. டி.எம். வீட்டின் தொடர் இலக்கிய விவாதங்களில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்கிறது.



திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

அறிமுகப் படுத்துவதற்கும் மேலாக, மலையாள இலக்கியத்தைப் பற்றிய கௌரவமான தேடல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்தக் குடும்பத்தின் முயற்சிகள் களம் அமைக்கிறது. காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பி.ஏ. தமிழ்ப் பாடப்புத்தகமாக இருக்கிறது ஷைலஜா மொழிபெயர்த்த "சிதம்பர நினைவுகள்". தன்னாட்சிக் கல்லூரியான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் எம்.ஏ. முதல் வருடப் பாடப்புத்தகமாக உள்ளது ஜெயஸ்ரீ மொழி பெயர்த்த "நிசப்தம்". அதே கல்லூரியின் பி.ஏ. இளங்கலை பாடப்பிரிவிற்கு பவா செல்லத்துரையின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" பாடபுத்தகமாக இருக்கிறது. என்.எஸ். மாதவனின் பரியாய கதைகளின் தமிழ் பெயர்ப்பான "சர்மிஷ்டா" வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
”நிசப்தம்” திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் விருதும், எ. அய்யப்பனின் ”வார்த்தைகள் கிடைக்காத தீவில்” கவிதைத் தொகுப்பிற்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் கிடைத்துள்ளன. புத்தக வெளியீட்டிற்கும் மேலாக, கேரளத்தின் சின்னச் சின்ன விவாதங்களுக்குக் கூட எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்கிறது இந்தக்குடும்பம்.

கேரளத்தில் பால் சக்கரியா கொளுத்திவிட்ட விவாதமும், இப்போதைய மலையாள சினிமாப் பிரச்சினையும் கூட 19. டி.எம். சாரோனில் தொடர்விவாதப் பொருளாகின்றன.

இந்த வீட்டில் சமையல் உதவியாள் லதா கூட தண்ணீர் கேட்டால் ”வெள்ளம் வேணுமோ” என்று மலையாளத்தில் திரும்பக் கேட்கிறாள். அங்கே சென்று நாம் தமிழைத் தேடும்போது இவர்கள் மலையாளத்தைத்தான் தேடுகிறார்கள். அங்கேயிருந்து வெளியேறினால் நாம் தமிழை விட்டுவிடுவோம் சொந்த நாட்டை விட்டு வெளியேறினால் நாம் மலையாளத்தை மறப்பதுபோல. இப்போதும் இவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை விட அவர்களின் ப்ரியமான மலையாளத்தை.


Thursday, July 23, 2009

யோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2



முதல் சந்திப்பு

யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2

அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த மாமிகளுக்கு சொல்ல அவரிடம் நிறைய அகங்காரமான சொற்களிருந்தன. நானும் என் நண்பர்கள் சிலரும் வாசிப்பின் போதையில் திரிந்த காலமது. புதிய விஷயங்களை படிக்க, படிக்க பழமையான விஷயங்களில் ஒன்றுமில்லையென ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தோம். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் இல்லையெனவும், சுந்தரராமசாமி, அம்பை, நா. முத்துசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜி. நாகராஜன் என எங்கள் வாசிப்பறைகள் இவர்களின் வாழ்வுலகங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரு சின்னத்திமிர் எங்கள் மீது எங்களையறியாமல் ஏறியிருந்தது. எந்தக் கூட்டத்தில் பேசும் பேச்சாளரை விடவும் எங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தோம்.

வம்பிழுப்பதற்காகவே பாலகுமாரன் பேசவிருந்த கூட்டத்தில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். உடனிருந்த பார்வையாளர்கள் ஒன்றுமில்லாத ஆட்டுமந்தைகள். வெறும் பத்திரிகை கவர்ச்சிக்காக வந்திருப்பவர்கள். அவர்கள் எங்களை கொஞ்சம் உற்று கவனித்தால் எங்கள் தலையிலிருந்து மேதமை பொங்குவதை கவனிக்கமுடியும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு பிறகு பாலகுமாரன் ஒரு உபதேச உரையாற்றினார். வெற்றி பெற்றவர்கள் எதிரிலிருக்கும் மந்தைகளுக்கு போதிக்கும் உரை அது. பேசி முடித்து முகமெங்கும் பெருமிதம் பொங்க பார்வையாளர்களிடம் இருந்து விலகினார். விவாதத்தில் பங்கேற்பாளர்கள் யாரும், இருக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் பத்து நிமிடம் கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மௌனம் உடன் உடைபட என் ஸ்நேகிதி கோமதி எழுந்து, பாலகுமாரனின் எழுத்து எத்தனை போலியானது என்றும், அது காலத்தின் முன் நசுங்கி மிதிபட்டு மறையும் காலம் வெகு அருகில் உள்ளதென்றும் கோபம் கொப்பளிக்க பேசினார்.

இக்குரல் அவ்வரங்கம் எதிர்பாராதது. அதிர்ச்சியில் உறைந்த பலகண்கள் கோமதியின் பக்கம் திரும்பின. பாலகுமாரனின் இரு மனைவிகளும் அவ்வரங்கில் பார்வையாளர்களாயிருந்தார்கள். எதிர்பாராத இத்தாக்குதலில் கொஞ்சமும் நிலைகுலையாமல் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒலிபெருக்கியை தன்பக்கமிழுத்து,

உன் பேரென்னம்மா?

கோமதி.

என்ன படிக்கிற?

எம்.எஸ்.சி. பாட்டனி.

என் கதைகள் நீ நினைக்கிறமாதிரி வாசிப்பின் ருசிக்கானது அல்ல. அது வாழ்வின் அவலத்தை அள்ளிக் கொண்டுவருவது. அதை படிப்பதற்கு நீ இன்னும் உன்னை கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு எழுத்தை சரியாக படிப்பதற்கே பயிற்சி வேண்டும்.

நீ சரியாக எழுது

என் குரல் கோபத்தில் உயர்ந்தடங்கியது.

உங்க பெயர்.

பவா செல்லதுரை.

நான் என்ன சரியா எழுதலன்னு சொல்லு?

நான் இப்போது ஜி. நாகராஜனை, அசோகமித்திரனை, அம்பையை, சுந்தரராமசாமியை தொடந்து வாசிக்கிறேன். இப்படைப்புகள் எனக்குத்தரும் வாசிப்பனுபவத்தை உன்னுடைய ஒரு கதை கூட தரவில்லை. எப்படி வாசிப்பதென நீ எங்களுக்கு சொல்லித்தராதே, எப்படி எழுவதென இவர்களிடமிருந்து நீ கற்றுக்கொள்.

ரத்தம் கண்களுக்கேற,

செல்லதுரை நீ இனிமேல் பாலகுமாரனை படிக்காதே

”இது எஸ்க்கேப்பிசம். ” இது கோமதி

இவ்வுரையாடல் அந்த அரங்கிலிருந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியையும், கூட்டத்தில் கலகம் செய்யவந்திருக்கும் கலகக்காரர்கள் நாங்களென்றும், எங்கள் ஜோல்னா பைகளில் வெடிகுண்டுகள் கூட இருக்கலாமெனவும் முணுமுணுத்தார்கள்.ஒரு வழியாக உலை கொதிப்பதற்கு முன் தீ அடங்கியது.
இரு பக்கமும் இன்னும் பேசி தீர்க்க வேண்டிய மூர்க்கமான வார்த்தைகளின் மிச்சத்தோடேயே கூட்டம் முடிந்தது.

கூட்டம் முடிந்து பாலகுமாரன் என் அருகில் வந்து,

”உன்னோடு தனியே பேசணும்”

என கிட்டதட்ட என் கையைப் பிடித்திழுத்தார். விக்டோரியா பள்ளியின் பின்பக்க மேல்மாடியில் கோபத்தில் புகையும் சிகரெட்டுடன் என்னை மிக அருகில் சமீபத்து,

”சொல் செல்லதுரை, நான் ஒண்ணுமேயில்லையா?”

”நான் அப்படி சொல்லலையே சார்,”

இல்லை அதைத்தான் நீயும் அந்த பொண்ணும் வேற மாதிரி சொன்னீங்க? சொல்லுங்க உங்களுக்கு யார் மேல கோபம்? என்ன வேணும் உங்களுக்கு? ஏன் நிசப்தமான உலகத்தைப் பார்த்து கூச்சலிடுகிறீர்கள்? என உக்ரமான குரலில் பேசிக்கொண்டே போனார்.

பாலகுமாரன் அப்போது புகழின் உச்சத்திலிருந்தார். தமிழ்வணிகப் பத்திரிகைகள் அவரை போட்டிப்போட்டு சுவீகரித்து கொண்டிருந்தன. நான் ரொம்ப சின்ன பையனாக கலக்கத்தோடு அவர்முன் நின்று கொண்டிருந்தேன்.
பேசிக் கொண்டே தன் முகவாயில் கைவைத்து அழுத்தி, தன் பல் செட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு

”எனக்கு இன்னும் நாப்பது வயசு கூட முடியல. டபே டிராக்டர் கம்பெனி போராட்டத்துல, ”பாப்பார நாயே ன்னு போலீஸ்காரன் அடிச்சதுல ஒடைஞ்ச பல்லு.”

எந்த அனுபவமே இல்லாம ஒருத்தன் ஒரு நாவல் எழுதிறமுடியுமா?
இவ்வுரையாடல் நான்கு முழு சிகெரெட்டுகளை முடித்திருந்தது.
இருவருமே தணிந்திருந்தோம். துவங்குதலுக்கான முதல் சொல் இருவரிடமுமே தயக்கத்திலிருந்தது. சிகரெட்டின் நுனிநெருப்பு ஒரு கேரக்டர் மாதிரி எங்களுடனே அணையாமல் பயணித்தது.

என் கையிலிருந்த புத்தகமே எங்கள் மௌனம் உடைபட காரணமாயிருந்தது. பேச்சு சுழன்று, சுழன்று பிரமிளிடம் வந்து நின்றது.

”பிரமிளின் தியானதாரா படிச்சிருக்கீயா?”
இல்லை. பார்த்தது கூட இல்லை. இது நான்.

அது ஒரு அற்புதமான சிறு புத்தகம் செல்லதுரை, சாது அப்பாதுரை என்கிற ஒரு துறவியைப்பற்றி பிரமிள் எழுதியிருப்பார். அதில் தங்கள் ஊரைச்சேர்ந்த விசிறி சாமியார் ஒருவரைப்பற்றியும் கூட சில பகுதிகள் வரும்.
ஐந்நூறு பிரதிகள் வாங்கி வைத்து நான் போகிற திருமணத்திற்கெல்லாம் கொடுத்திருக்கிறேன்.
என் கண்கள் விரிய
”விசிறி சாமியார்னா யோகிராம் சூரத்குமாரா?”என்றேன்.

தெரியுமா உனக்கு? அவரை தெரியுமா? என ஆர்வத்தின் நுனி நோக்கி பாலகுமாரன் வந்துகொண்டிருந்தார்.

சூரத்குமார் எனக்கு நல்ல நண்பர். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூல் மாடியிருந்து பத்திருபது கட்டிடங்கள் தள்ளிதான் அவர் இருக்கிறார்.

நீ உடனே என்னை அவரிடம் அழைத்துப் போகமுடியுமா?

நிச்சயமாக.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் பெரியத் தேருக்கருகில் நாட்டுஓடுகள் வேயப்பட்ட, ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட அந்த வீட்டின் முன் வாசலில் நாங்கள் நான்குபேரும் நின்றிருந்தோம்.

அவர்கள் மூன்று பேரின் முகங்களிலும் பக்தியும், பரவசமும் படிந்திருந்தது. ஒரு தெய்வ தரிசனத்திற்கான மனநிலை அவர்களிடம் இருந்தது. நான் இரும்பு கம்பிகளிட்ட கேட்டில் கை வைத்து லேசாக தட்டினேன். அதற்காகவே காத்திருந்தவர் போல முதல் தட்டலுக்கே கதவைத் திறந்து வெளியே வந்தார். இருட்டிலும் கூட அவர் முகப் பொலிவின் ஒளி அவ்விடத்தில் ஒளிர்ந்தது. கையில் புகையும் சிகெரெட்டுடன் உற்சாக மனநிலையில் கதவைத்திறந்து,
என் கைகளைப் பற்றி

”வா பவா” வென அழைத்தார். என் தோள் மீது வாஞ்சையாக தட்டிக் கொடுத்து.
”எப்படி இருக்கிற?” என ஆங்கிலத்தில் விசாரித்தார்.

வாசலில் நிற்கும் பாலகுமாரனையும், அவருடைய இரு மனவிகளையும் அருகில் அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

“இவர் பாலகுமாரன் தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர், எல்லா பாப்புலர் பத்திரிகைகளிலும் இவர் கதைகள் தொடர்கதைகளாக வருகின்றன, உங்களை சந்திக்க வேண்டுமென பெரும் ஆவலில் இருக்கிறார்’’ என தொடர்ந்த என் பேச்சை இடைமறித்து.

இந்த பிச்சைக்காரனை ஏன் பார்க்க வேண்டும்? என கேட்டார்.

பாலகுமாரனை முழுவதுமாக தன் பார்வையால் குடித்திருந்தார் யோகி. அந்த பார்வையின் ஊடுறுவலின் அதிர்வில் பாலகுமாரன் நிலைகுலைந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் நான் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப்பார்த்து தான் யோகி பேசினார்.

“பவா, இவ்விடத்தைவிட்டு இவரை உடனே போகச்சொல், இவரை சந்திக்க நான் விரும்பவில்லை. இப்பிச்சைக்காரனை தேடி இனிமேல் இவர் வரவேண்டாம்.’’
சொல்லிவிட்டு அடுத்த சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டு கைகளைக் குவித்து கஞ்சாபுகையை இழுப்பதுமாதிரி இழுக்க ஆரம்பித்துவிட்டார்.

தெருவில் போவோர்களும் வருபவர்களும் அங்கிருந்தே அவரை வணங்கியதும், கண்ணத்தில் போட்டுக் கொண்டதும், சிலர் தரையில் விழுந்து வணங்கியதும் விநோத காட்சிகளாய் இருந்தது. ஏதோ ஒரு புராதனமான நகரத்தின் அகண்ட தெருவில் இக்காட்சிகள் திரையில் நடப்பது மாதிரியிருந்தது.

பாலகுமாரன் அவ்விடத்தை விட்டகன்றிருந்தார். யோகி அமர்ந்திருந்தற்கு வெகு அருகிலிருந்த ஒரு திட்டில் நான் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அவசரமாக வீட்டிற்குள்ளே போய் இரு ஆப்பிள் பழங்களோடு வந்தார். நான் எழுந்து நின்றிருந்தேன். விடை பெறுதலுக்கான நேரத்தின் உந்துதலை என் சரீரம் உணர்ந்தது.

இரு ஆப்பிள்களையும் என் கைகளில் புதைத்து,
”மை பாதர் ப்ளஸ் யு பவா” என என்னை ஆசீர்வதித்தார். சற்று முன் நடந்த நிகழ்வுகளின் சிறு சலனம் கூட இன்றி, ஒரு குழந்தைமாதிரி சிரித்துக்கொண்டிருந்தார்.

Wednesday, May 27, 2009

வாழ்வை கொண்டாடிய கலைஞன் : சந்தானராஜ்


பாராளுமன்ற தேர்தலன்று காலை என் பைக் விபத்துள்ளாகி கையையும், காலையும் உடைத்துக் கொண்டு பத்து பதினைந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுகிடக்கிறேன். நண்பர்களின் வருகைகக்காக மனம் ஏங்கி தவிக்காமல் அறை முழுவதும் கொத்து கொத்தாய் நண்பர்கள் பூத்த வண்ணம் காயத்திலிருந்து வெறுமையை துடைத்து ஆறுதலை பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று மதியம் என் ஆத்மார்த்த சகா ஆனந்த் ஸ்கரியா தொலைபேசியில் அழைத்து, "பவா, நம் சந்தானராஜ் மறிச்சு போயி" என தழுதழுத்தார்.
எந்த பதட்டமுமின்றி நான் மௌனமானேன். அசைவற்று கிடந்த என்னிலிருந்து சந்தானராஜ் என்ற அந்த மகாகலைஞனை நான் அறிந்த அந்த முதல் நிமிஷத்திற்கு சில விநாடிகளில் பயணிக்க முடிந்தது. முதன் முதலில் சா. கந்தசாமி தான் எனக்கு சந்தானராஜைப் பற்றி சொன்னார்.

சந்தானராஜ் வீட்டிற்கு ஒரு நாள் காலை டிபன் சாப்பிட போயிருந்தோம். ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளை என் தட்டில் வைத்துவிட்டு ஓடிப்போய் பேன் ஸ்விச்சை அணைத்து விட்டு "இட்லி பறந்திடும்" என எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார்.

கொஞ்சம் கொஞ்சமாய் அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் ஓவியங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்து சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் அவருடைய உடல் அடக்கத்திற்கு முன் அவருடனான எனது அனுபவங்களை தனிப்புத்தகமாக எழுதலாம். பொங்கி பொங்கி வரும் உணர்வுகளை வார்த்தைப் படுத்தும் முன் மீன்குஞ்சுகள் மாதிரி துள்ளி விடுகின்றன.

ஒரு நாள் காலை டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேன் மிஷன் செகரட்ரியோடும் அவருடைய மகளோடும் சந்தானராஜை அவருடைய சென்னை வீட்டின் மூன்றாவது மாடியில் சந்தித்தோம். ஒரு காவி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டை அணியாத உடலோடு ஒரு கேன்வாசில் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஒரு திரும்பலுக்கான காத்திருப்புதான் அது எனினும் அது நிகழாமலிருக்க மனதளவில் பிராத்தித்தோம். ஒரு சிறு அசைவின் அறுதலில் அவர் எங்களோடு இருந்தார்.

நான் அவரை அறிமுகப்படுத்தினேன். கண்கள் விரிய தன் நெஞ்சோடு அவரை அணைத்துக்கொண்டு, "உன் பள்ளிக்கூடத்துலதான்யா நான் படிச்சேன்". டென்மார்க்கிலிருந்து வந்து என் கல்வி கண்ணை திறந்தேயே அதுக்கு என அவர் கையை பரிசித்து முத்தமிட்டார்.
உடனே தன் முன் தயாராக வைக்கப்பட்டிருந்த பாட்டிலை திறந்து விஸ்க்கியை ஊற்றி "எடுத்துக்கோ, இது என் நன்றி காணிக்கை" என்றார். தன் மீதேறியிருந்த கௌரவம் உதிர அந்த வெள்ளைக்காரன் ஒரு குழந்தை பால் குடிப்பது மாதிரி அந்த அதிகாலையில் விஸ்க்கியை அருந்திக் கொண்டிருந்தான்.

ஒரு அமானுஷ்ய கணத்தில் ஒரு அமானுஷ்ய மனுஷனோடு இருப்பதாக நான் உணர்ந்தேன். பேச்சு ஓவியம் பற்றி, கலையின் உன்னதம் பற்றி, கோடுகள் பற்றி, அதன் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிப்பற்றி சுழன்று சுழன்று விஸ்க்கி டம்ளருக்குள் மையமிட்டது.
அவரிடமிருந்து விடைபெறும் போது அந்த வெள்ளைக்காரனின் கண்கள் அவருடைய ஒரு ஓவியத்தின் மேல் நிலைபெற்றிருந்தது. எத்தனை பணமும் தரக்கூடிய மனநிலை அவனுக்கு இருந்தது. சந்தானாராஜ், "இது இந்திய ராணுவ தலைமையகத்திற்கு நான் தர ஒப்புக்கொண்டு செய்து கொண்டிருக்கும் ஒர்க். நீ எனக்கு கல்வியே தந்தவனாயினும் உனக்கு இதை தரமுடியாது".

அவன் என் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து போவான் என பாவனையால் நடித்துக் காட்டினார்.
எனக்கு சா. கந்தசாமி சொன்ன பறக்கும் இட்லிகள் நினைவுக்கு வந்தன.
அச்சந்திப்பிற்கு பிறகு அவருடனான நெருக்கம் இடைவெளியற்றது.

திருவண்ணாமலையிலேயே வீடு வாங்கி தன் கேன்வாஸ்களோடு வாழ நேர்ந்த பல நாட்கள் நான் அவரோடு இருந்திருக்கிறேன் அவருடைய முதுமையின் நாட்கள் வலி நிறைந்தது. "நான் ஒரு பணப்பிசாசு" என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டார் அதிகாரங்களின் மீதான மனச் சாய்வுக்கு இடம் தந்தார். ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவருடனான மூன்று மணி நேரத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து முடித்தார். தன் உடல் உபாதைகளை தீயாய் எரிந்துக் கொண்டிருந்த தன் ஓவியத் தகிப்பில் பொசுக்கிவிட முயன்றார்.

சமீப நாட்களில் என்னை தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஒதுக்கி அவரை சந்தித்த போதெல்லாம் மிகுந்த மன வெறுமையில்தான் திரும்பியிருக்கிறேன். தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை வசனம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்.

நான் ஒரு வார பத்திரிக்கைக்கு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பிரதியோடு அவரைச் சந்தித்து அதை படித்துக் காட்டினேன். என்னை கட்டி தழுவி, "என்னை நானே கண்ணாடி முன் நின்று பார்த்து பேசிக்கொள்வது மாதிரி உள்ளது" என திரும்பத் திரும்ப சொன்னார்.

வம்சி புத்தக நிலையத்தில் சந்தானராஜ், பி. கிருஷ்ணமூர்த்தி, காயத்ரி கேம்யூஸ், ஆகியோரின் ஓவியங்களை "மூன்று ஓவியர்களும் 16 படங்களும்" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினோம். ஒரு மணி நேர மேக்கப்பிற்கு பிறகு ஒரு இளைஞனான உணர்வில் எங்கள் கடைக்கு வந்தார். ரொம்ப நேரம் எங்களோடு இருந்த நாள் அது. எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை தேக்கி வைத்திருந்தார். லௌகீகமான அவரின் சில அதீத அக்கறைகளை நான் புறந்தள்ளினேன். எங்கள் இருவருக்குமான நட்பு இனைக்கப்படாமலேயே விலகிக் கிடந்ததாகவே உணர்கிறேன்.

நான் அழைத்து போன சில நாண்பர்களுடனான போதையூட்டின கொண்டாட்டங்கள் அபூர்வமானவை. காயத்ரி கேம்யூஸ்ஸின் படங்களை ரொம்ப பிடித்திருப்பதாக திரும்ப திரும்ப சொன்னார். ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி சுழன்று சுழன்று பயணித்து நிலை பெறாமல் காற்றில் அலையும் உரையாடல்கள் அவருடையது. மரணத்திற்கு மிக அருகில் அவருடைய படுக்கை இருந்தது. தன் மனைவி மகாலஷ்மிதான் அதை இன்னும் நெருக்கமக்குகிறாள் என சொல்லிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்த தன் மனைவி மகாலட்சுமியின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். மிதமிஞ்சிய அக்காதலே ஒரு ஓவியரான மகாலஷ்மியால் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் வரைய முடியாமல் போனதிற்கு காரணம்.

"குக்கூ" நடத்தின குழந்தைகள் திருவிழாவிற்கு அவரை அழைத்து டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் பேசசொன்னோம். மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்தார்.
இதோ இதுதான் என் வகுப்பறை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மீதிருந்து பீடி நாற்றம் வருவதாக (பீடி பிடித்தால் பீடி நாற்றம் வரும்தானே) என் வாத்தியர் அடித்து துரத்தினார். அதன் பிறகு எழுவது வருஷத்திற்கு அப்புறம் இப்போதுதான் இந்த ஸ்கூலுக்கு வருகிறேன். என குழந்தைகளின் குதுகலத்திற்கிடையே நீண்ட நேரம் பேசினார். அண்ணாமலையார் கோவிலுக்கு போனால் "சித்த நேரம் இருந்து விட்டு போகத் தோனுதே, ஏன் சர்ச்சுக்கு போனா உடனே வீட்டுக்கு போகலாம்ணு தோணுது? கடைசி ஜெபத்திற்கு முன்னாலேயே அங்கிருந்து வந்துடறோம்" என துவங்கிய அவரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல், "அது அந்த கட்டிட கலை சம்மந்தப்பட்டது. கிருஸ்துவ சர்ச்சுகள் வெளிநாட்டு கட்டிட கலைகளால் ஆனாது. லௌகீக வாழ்விற்கு அது உந்தும். இந்து கோவில்கள் தமிழ் மரபு சம்மந்தப்பட்டது. அது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லும். அதனால் இனி சர்ச்சு கட்டுகிற போது அதை மரபுப் படுத்தனும். நவீனத்திலிருந்து அதை மீட்டெடுக்கலாம் என்பது மாதிரியான தர்க்க ரீதியான உரையாடல்கள் என் வாழ்வில் மிக முக்கியமானது. நான் சந்தித்த பல ஓவியர்கள், குறிப்பாக மருது, ஆதிமூலம், வல்சன் என்று எல்லோருக்குமே சந்தானராஜ் ஆதர்சமாக இருந்தார். அவரை நீண்ட பேட்டி எடுக்க வேண்டுமென்று நானும் சிநேகிதி திலகவதியும் எடுத்த முயற்சி, அவருடனான ஒரு நாளை படமாக்க வேண்டும் என நானும் காஞ்சனை சீனுவாசனும் எடுத்த முயற்சி, அவரை எனக்காக மட்டும் ஒரு படம் வரையச்சொல்லி வாங்கி விட வேண்டும் என நான் ரகசியமாய் நான் எடுத்த முயற்சி எல்லாமும் நொடிகளின் இடைவெளிகளில் தோற்றுவிட்டது.

Tuesday, April 14, 2009

பாட்டுக்கார லட்சுமி

திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோ மீட்டருக்கும் அப்பால், சு.வாளவெட்டி என்கிற ஒரு கிராமத்தில் இறங்கி, யாரை விசாரித்தாலும் பாட்டுக்கார லட்சுமியை அடையாளம் காட்டுவார்கள். அவரை விசாரிக்கும்போதே எவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து போகும். ஐம்பதிலிருந்து ஐம்பந்தைந்துக்குள் இருக்கும் லட்சுமி அம்மாவிற்கு வாளவெட்டி சொந்த ஊரோ, கட்டிக் கொடுத்த ஊரோ இல்லை. ஏதோ ஒரு ஊர். அந்த ஊரிலேயே இப்போதிருக்கும் சீமைஓடு போட்ட வீடு நான்காவதோ, ஐந்தாவதோ.

ஊர்பற்றியோ, வசிப்பிடம் பற்றியோ, தொழில் பற்றியோ, சாப்பாடு பற்றியோ, பட்டினி பற்றியோ கவலையின்றி, தனக்குத் தெரிந்த பாடல்களை தன் கரகரத்தக் குரலில் பாடி அதன் வீரிய விதைகளை இம்மாவட்டம் முழுக்க விதைத்து வைத்திருக்கிறார். ஏதோ ஒரு வீட்டில் நிகழும் மரணம் லட்சுமியை அந்த இழவு வீட்டுக்கு அழைக்கிறது. பெரும் குரலெடுத்து, மாரடித்து கண்ரப்பைகள் வலிக்க அழுது தன் துக்கத்தை தன் சக மனுஷிகளுக்கு மாற்றுகிறார். ஜாதி, மதம் அழியும் அந்த நிமிடங்கள் மிக முக்கியமானவை.

லட்சுமியின் சொந்த ஊர், புதுப்பாளையத்திற்கு பக்கத்தில் மூலக்காடு. வறுமை தின்று தீர்த்த மிச்சங்களாக அவர்கள் வீட்டில் நான்கு பெண்கள். வயல் வேளைகளில், அத்தனைப் பணிகளும் அவளுக்குப் பதினைந்து வயதுக்குள்ளேயே அத்துப்படி. ரொம்ப சின்ன வயசிலேயே யாரோ ஒருவனுக்கு கட்டி வைத்து கடமையை முடித்துக் கொண்ட பெற்றோர்கள். அவன் நல்லவனில்லை. அவன் தொழில் சாராயம் காய்ச்சுவது. தூரத்து மலையடிவார மரநெருக்கத்து புகை அவன் இருப்பை அவளுக்குச் சொல்லும். வாழ்தலுக்கான நெருக்கடியில், தன் சொந்த விருப்பங்களை பொசுக்கிப் போட்டு விட்டு, சாராயம் காய்ச்ச, அழுகிய வாழைப்பழத்திலிருந்து குப்பையில் கிடக்கும் பேட்டரி வரை பொறுக்கி தன் கணவனுக்கு அன்பு செய்தாள். அவன் வடித்தெடுக்கும் திரவத்தை மற்றவர்களுக்கு மொண்டு கொடுத்து பணிவிடை செய்தாள். குடிவெறியின் தொடுதல்களையும், சீண்டல்களையும் அருவறுப்போடு அனுமதித்தாள்.

அவன் காய்ச்சிய சரக்கை முதலில் அவன் ருசிபார்த்தான். அதீத ருசியால் தன்னை பறிகொடுத்து, அதற்குள்ளேயே மூழ்கிப் போய் கிடந்தான். குடும்பம், தன் மனைவி, குழந்தைகள் எதுவும் அவன் ஞாபகத்திலிருந்து அகன்றிருந்தன. காலத்தின் குரூரம் அவளை ஒரு வி‘க் கொடிபோல சுற்றியிருந்த போதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எதற்கோ காத்திருந்தாள். எதுவும் நிகழவில்லை. தன் மௌனத்தைத் தானே கலைத்து, வடிசலில் வழித்திருந்த சாராயப் பானையை எட்டி உதைத்து கவிழ்த்தாள். ஒரு கல்லெடுத்து, அதன் மீது போட்டு அதை சுக்குநூறாக்கி தன் வெறியை அதன் மீது துப்பினாள்.

இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் தன் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, அந்த மலையடிவார கிராமத்தைத் திரும்பிப் பார்க்கவும் திராணியற்று நடந்தாள். அதன் பிறகு இந்த மாவட்டமே அவள் வசிப்பிடம். தனக்கு கிடைத்த அதீத சுதந்திரத்தை தன் மனம் போன போக்கில் துயரத்தோடு அனுபவித்தாள்.

அன்னக்கூடையில் மாட்டுக்கறி எடுத்து புதுப்பாளையும் சந்தையில், கூவிக்கூவி விற்றாள். தன் குரலின் வலிமை இன்னும் இரண்டு நாட்களுக்கு தன் குழந்தைகளின் வயிற்றை நனைக்குமென்ற உறுதியிருந்தது.

கறி விற்பதைவிட காய்கறி விற்பது இன்னும் கொஞ்சம் கவுரவமெனக் கணக்குப் போட்டாள். சுட்டெரிக்கும் வெயிலில் காய்கறிகள் கொட்டி, தனக்கேயுரிய ராகத்தோடு கூவிக்கூவி விற்று சந்தையைக் கலகலப்பாகவும், தன் சகவியாபாரிகளை கலக்கத்துக்கும் உட்படுத்தினாள். தன் பக்கத்து வீடுகளில் நடந்த மரணங்கள் அவளுக்குள் ஒரு ஊசி மாதிரி இறங்கி வலிக்க ஆரம்பித்தது. தனக்குள் தேங்கிப் போயிருந்த இந்த வாழ்வின் பெரும் துக்கம் பாடல்களாக உடைப்பெடுத்தது. அவள் குரல் பல மைல்களை அநாவசியமாகக் கடந்தது. அவள் பாடல்களில் புதைந்திருந்த சோகம் யாரையோ பறிகொடுத்து நின்ற குடும்பத்துக்கு தேவையாய் இருந்தது. இரவு, பகல் எந்நேரமும் சாவு வீட்டிலிருந்து அவள் குரல் தேடி ஆள் வரும். பஸ்úஸô, லாரியோ, சைக்கிளோ எந்த வாகனமும் எந்த அகாலத்திலும் அவளைச் சுமந்து கொண்டு போனது.

மரண வீடுகளில் தங்கள் பெரிய மேளங்களால் முழங்கிய "பாப்பம்பாடி ஜமா" தோழர்கள் அவளுக்குச் சிநேகிதர்களானார்கள். அவர்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் ஏதோ ஒரு கண்ணி இறுக்கிக் கட்டியிருந்தது. அவர்களின் பறை முழங்கும் சத்தத்திற்குத் தன் இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆட்டம் போட்டாள். ஒரு மரணத்திற்கான மொத்தக் கண்ணீரையும் ஒரு அணைக்கட்டு மாதிரி தனக்குள் தேக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய விட்டாள்.

மரணவீடுகளில் அவள் மீது வீசியெறியப்படும் ரூபாய் நோட்டுகளைப் புழுதியிலிருந்து எடுத்து தன் இடுப்புக்குள் சொருகினாள். அவமானப்படுதலிலேயே அமிழ்ந்திருந்த இந்தக் குடும்பத்திலிருந்தும் குழந்தைகள் படித்தார்கள். பிணவாடை வீசும் ரூபாய் நோட்டுகளில் அந்தக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தாள்.

தன் கடமை முடிந்ததாகக் கருதிய கணம், தன் பிள்ளைகளிடமிருந்து விடை பெற்றாள். எந்த கிராமத்து கட்டி முடிக்கப்படாத குடிசையும், உதிர்ந்து போன ஓட்டு வீடும் அவளைத் தன்னில் வசிக்க பாசக்கரம் நீட்டி அழைத்தது. தன்னை நோக்கி நீளும் கரங்களுக்குள் தன்னை ஒப்புவித்து, எச்சில் ஒழுக சிரிக்கும் குழந்தை மாதிரி அதற்குள் அடைக்கலமானாள்.

சு.வாளவெட்டி கிராமத்தில், தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வியாபித்திற்கும் அந்தப் பெரிய ஆலமரமும், அதன் பிரமாண்ட நிழலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகளும்தான் அவளுக்கு தற்போது நெருக்கமான ஸ்நேகிதர்கள்.
மூட்டை மூட்டையாக காய்கறிகளையும், வெங்காயத்தையும் தலையில் சுமந்து தனி மனுஷியாக பேருந்தின் மேலேற்றிய பலமான உடல்வாகும் மனமும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

அகால இரவுகளில் பெருங்குரலெடுத்து பாடி தன் தனிமையைக் கரைக்கும் லஷ்மியின் குணத்தையும் மனதையும் நாம் படிப்பதற்கு, அவள் தினம் தினம் தான் சம்பாதிப்பதில் பாதி ரூபாய்க்கு, அதிகாலையிலேயே இட்லிகளை வாங்கி ஒரு தாம்பாலத்தட்டில் வைத்து அக்குரங்குகளைச் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் விதமே போதும்.

தன் கணவன் தன்னை மலையடிவாரத்தில் சாராயப்பானைகளோடு விட்டு விட்டு போனபிறகு அவளுக்கு பல ஆண்களோடு ஸ்நேகிதம் உண்டு. ஆனால் அது மனரீதியான உறவல்ல. தன் மன வலியை, இன்றொரு வலி மூலம் பழி தீர்த்துக் கொள்ளும் பகைமை.

ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடல்கள் மூலம் துடைத்த லஷ்மியின் மரணத்திற்கு இவர்கள் யாரும் வரப்போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக்கூடப் போவதில்லை.

கடவுளே,

நான் இந்த தேசத்தின் எந்த திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா

Saturday, April 11, 2009

குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத சுகந்தன்


எந்த சட்டத்துக்குள்ளும் அடைக்க முடியாமல் அவன் திமிறிக் கொண்டேயிருந்தான். ஒரு பாடகனுக்கென வரையறுக்கப்பட்டிருந்த உன்ன வரைமுறைகள் எதையும் அநாவசியமாக உதறித் தள்ளினான். ஆனாலும் அவன் தொண்டைக்குள் புல்லாங்குழல்களால் கூடு கட்டி ஒரு குயில் நிரந்தரமாக வசித்துக் கொண்டேயிருந்தது.

தமிழக இடதுசாரி மேடைகளை அவன் தன் குரலால் வசியப்படுத்தியிருந்தான். ஒரு வன்முறையாளனைப்போல மேடையேறி, ஒரு குழந்தையைப் போல தன் குரலால் கொஞ்சுவாள். முறைப்படி இசை கற்க அவன் எடுத்த முயற்சியை மூன்றே நாட்களில் அவனே நிராகரித்தான். யாரும் எளிதில் அணுகிவிட முடியாதபடியான ஒரு முரட்டு பாவனையை பிடிவாதமாய் கடைபிடித்து, அதில் தோற்றுக் கொண்டே இருந்த பச்சைக் குழந்தை சுகந்தன்.

பெருங்காற்றில் உதிர்ந்து போகும் சருகென அவனை நண்பர்கள் துயரத்தோடு எதிர்பார்த்த நிமிடங்களில், அதே மரத்தில் ப்ரவுன் கலரில் துளிர்க்கும் இலையாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவான். மாறி மாறி நடந்த இந்த உயிர்ப்பின் விளையாட்டில் சென்றவாரம் அவன் தோற்றுப் போனான்.

சினிமப் பாடல்களுமின்றி, கிராமியப் பாடல்களுமின்றி அவன் தனக்கென 500க்கும் மேற்பட்ட பாடல்களை சேகரித்து வைத்திருந்தான். பரிணாமன், நவகவி, மகாகவி பாரதி, ரமணன் ஆகியோரின் வரிகளோடு, குவார்ட்டர், குவார்ட்டராய் அவன் காலி செய்த பாட்டில்களும், உறிஞ்சின மீதியாய் சிதறிக்கிடந்த சிகரெட்டுகளுக்கும் மத்தியில் அவன் கரைத்த இரவுகளில் கண்டெடுத்த மெட்டுகளில்தான் நாம் இதுவரை பல இலக்கிய மேடைகளில் கரைந்து, அழுதது, சந்தோஷித்தது எல்லாமும்...

பாடுவதற்கு நல்ல மேடை, சக்திவாய்ந்த ஒலிபெருக்கி, உடன் வாசிப்பதற்கு சரியான கலைஞர்கள், இதெல்லாம் அவன் எதிர்பார்த்ததில்லை. சில நண்பர்கள் போதும், மனதுக்குப் பிடித்த ஒரே ஸ்நேகிதி போதும், பாடிக்கொண்டே இருப்பான். தன் பாடல்கள் அவர்கள் மீது நடத்தும் வன்முறையை உள்ளூர் ரசித்தவனாக அடுத்த பாடலுக்குத் தாவுவான்.

எந்த பெரிய அங்கீகாரத்தையும் யாரிடமிருந்தும் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. பாடுவதன்றி மற்றதெல்ல தன் வேலையில்லை என்பது ஒரு தவம் மாதிரி அவனிடம் தங்கியிருந்தது. எத்தனைப் பெரிய பாராட்டுக்களையும், ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுக்கு மேல் அனுமதித்தவனில்லை. திரைப்பட மோகம், இசை ஆல்பங்களின் மேல் சாய்வு என்று எதிலும் தன் மனச் சாய்வுக்கு இடமளிக்காத கலைஞன். குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத அந்த கலைஞனின் குரலைத்தான் போன வாரம் ஈவிரக்கமின்றி காலம் காவு வாங்கியது.

மழை மனிதர்கள்

மரங்களடர்ந்த கேரள போர்ட் கொச்சின் பகுதியில், வியாபித்திருக்கும் அந்த பழமையான ஆலமரத்திற்கு ஒவ்வொரு வருடமும் அங்குள்ள கலைஞர்களும், ஓவியர்களும் எடுக்கும் விழாவிற்கு நான் தொடர்ந்து இருமுறை பயணித்திருக்கிறேன். பரந்து விரிந்து பயமூட்டும் தின்மையோடு நிற்கும் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட அந்த அரசமரத்தை அவர்கள் "அம்மச்சி மரம்" என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். தன் அம்மச்சியின் மடியில் அமர்ந்து அதன் பேரக்குழந்தைகள் எடுக்கும் விழா அலாதியானது. நினைவில் உதிரும் மனிதர்களுக்கிடையே சில அபூர்வமான மனிதர்களையும், கலைஞர்களையும் அவர்களிடையேயான உரையாடல்களையும் ஒரு புள்ளியாக்கி எனக்குள் எப்போதும் பாதுகாத்திருக்கிறேன்.

காஷி ஆர்ட் கபே என பெயரிடப்பட்ட அந்த சின்னஞ்சிறு அரங்கின் சிவப்பு டெரகோட்டா பதிக்கப்பட்ட தரையில் அங்கங்கே பல நாடுகளிலிருந்து வந்திருந்த வாசகர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். புகைப்பதற்கும், குடிப்பதற்குமான முழு சுதந்திரம் அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. அப்போதுதான் பறிக்கப்பட்ட புத்தம் புதிய பூக்களால் நிரம்பிய செம்பு உருளிகள் அங்கங்கே நம் மனதை ஒருமைப்படுத்துகிறது. நிசப்தம் ஓர் அரூபமாக அங்கே தங்கியிருக்கிறது. கவனிக்கப்படாத தாடியும், அழுக்கடைந்த ஜிப்பாவுமாக ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் இச்சூழலின் மீது எவ்வித அக்கறையுமற்று கையில் பிடித்திருந்த ஒரு கிரையான் பென்சிலால் அந்த வெள்ளை சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் தன் கை லாவகத்துக்கு எடுத்துக் கொண்ட அளவு அந்த சுவற்றின் நீள அகலம் முழுவதையும்.

உலக வர்த்தக மைய நொறுங்கலின் சத்தத்தை சில மைல்களுக்கு அப்பாலிருந்து கேட்ட, கட்டிட இடிபாட்டை பயந்து நடுங்கிய உடலசைவில் உணர்ந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞர் அதைப்பற்றிய தன் மன சித்தரிப்பை கவிதையாக்கி அந்த அரங்கில் அன்று வாசித்துக் கொண்டிருந்தார். மொழி விலகல் காரணமாக நான் அதில் கவனமின்றி இருந்தேன். அசுரத் தனமாக இயங்கிய அந்த ஓவியனின் கை வேகத்தை மீறி என் மனம் நகரவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் வரைந்து முடிக்கப்பட்ட அச் சுவரோவியம் ஒரு பாரம்பரிய வெங்கல உருளி. முற்றிலும் கிரையானில் நிரப்பப்பட்டிருந்த அதன் வசீகரம் அங்கிருந்த யாவரையும் ஒரு வெளிச்சம் போல் இழுத்தது. அங்கிருந்த வெளிநாட்டுக்காரர்கள் அந்த ஓவியனை அணைத்து முத்தம் தந்து தங்கள் அன்பைச் சொன்னார்கள். அதில் துளியும் ஆர்வமற்றவனாக அங்கிருந்து வெளியேறி ஒரு மர இருட்டில் நின்று தன் சிகரெட்டினுள் அடைக்கப்பட்ட புகையிலை துகளை வெளியே எடுத்து, அதுனுள், தான் மடித்து வைத்துள்ள காகித்தத்திலிருந்து எடுக்கப்பட்ட துகளை நிரப்பி நிதானமாக புகைக்கத் துவங்கிய நிமிடத்தில் நான் வல்சனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

ஒரு புன்னகையால் அதை அங்கீகரித்த வல்சன், நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதில் பெரும் உவகை கொண்டு சந்ரு மாஸ்டர் தெரியுமா? ட்ராஸ்கி மருது அறிமுகமா? என விசாரிக்கும் போதே அவர் கை அழுத்தத்தின் நெகிழ்வை உணரமுடிந்தது.

"வல்சன்" என்று கேரளக் கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்டும் "வல்சன் கூர்ம கொல்லேரி"தன் நூண்கலை படிப்பை சென்னை ஓவியக் கல்லூரிலும், தன் முதுகலை படிப்பை பரோடா நுண்கலைக் கல்லூரியிலும் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு முறை வல்சனை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென்ற என் ஆர்வம் ஒரு தொலைபேசி உரையாடலிலேயே நிறைந்தது. நான் அழைத்த அன்றே அவர் கொச்சியிலிருந்து புறப்பட்டார். எப்போதும் போல் ஒரு இலக்கிய நிகழ்விற்கான தயாரிப்பு வேலைகளில் நாங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மழை நாட்கள் அது. ஒரு யாத்ரீகன் மாதிரி என் வீட்டுக்குள் நுழைந்து, தான் தங்குவதற்கான ஒரு இடத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன் கையோடு கொண்டு வந்திருந்த சில புகைப்படங்களை எங்களுக்கு காட்சிப்படுத்தினார். எங்கள் வியத்தலை இதுவெல்லாம் ஒன்றுமில்லையென கூச்சப்பட்டார்.

ஒரு கவிதா நிகழ்வு மேடைக்கு முன் வீணை போன்ற வடிவத்தில் வைக்கப்பட்டிருந்த சுடுமண் சிற்ப பானையில் வண்ணப் பூக்கள் நிரம்பி ததும்பும் அழகில் நான் நீண்ட நேரம் மூழ்கியிருந்ததை கவனித்த வல்சன், "இது ஒன்றுமில்லை பவா.. ரெண்டு பெரிய பானைகள் வாங்கி வாý என சொல்ல அடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சாத்தியப்பட்டது. பானையின் வாய்ப்பகுதியில் குறுக்காக ஒரு ஆக்சே பிளேடால் அறுக்க ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அறுதெடுத்தப்பிறகு பானை இரண்டாக பிளந்தது. சிதைவில்லாமல் கிடைத்த ஒரு படைத்தலில் மகிழ்வுற்று, ஒரு கறுப்பு காப்பியும், தன் பிரத்யேக சிகெரட்டையும் உள்ளிழுத்து, பிளக்கப்பட்ட பானைகளை எதிர் எதிரே ஒன்று சேர்த்து தேங்காய் நார் கயிற்றால் பிணைத்தார். ஒரு படுத்திருக்கும் வீணை. அதன் குழி பாகத்தில் தண்ணீர் நிரப்பி பூக்கள் நிரப்பி முற்றத்தில் வைத்து அழகுப்பார்த்தோம்.

இதை ஆரம்பம் முதல் அருகிலிருந்து கவனித்த என் நண்பர் ஒருவர், மிகுந்த மரியாதையோடும், லேசான பயந்தோடும் வல்சனிடம்

"சார் இந்த பானையை அறுப்பதற்கு உங்களுக்கு இரண்டு மணி நேரமாகிறது. - என்னால் மூன்று நிமிடத்தில் பழுதில்லாமல் அறுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே தன் கையோடு கொண்டுவந்திருந்த மின்சார இன்ற்ற்ங்ழ் ரைக் கொண்டு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு பானைகளை அறுத்துக் காட்டினார்.

"இது எனக்கு தோணாம போச்சோ"வென்று வல்சன் தன் தலையில் கைவைத்து சிரித்துக் கொண்டார். என் குழந்தைகளுக்கு வல்சன் அன்பான நண்பனாகி அவர் கூடவே ஒட்டிக்கிடந்தார்கள். நாங்கள் அப்போது நடத்திய இலக்கிய நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட பிளக்கப்பட்ட பானைகளில் உருவான உருளிகளில் பூக்கள் நிறைந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த மைதானத்தை கட்டுகட்டாய் வாங்கிய மூங்கிலிலிருந்து பிரமாண்ட குடில் செய்து அழகுபடுத்தினார். இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் அதற்குள் விளையாடிக் கொண்டிருந்த அழகை விட அக் கூட்டம் பெரிதாய் எதையும் தந்துவிடவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் எங்களுடனே தங்கியிருந்த நாட்கள் மீண்டும் கோரமுடியாதவைகள். பக்கத்திலிருந்த ஒரு குயவர் வீட்டிற்குப் போய், வல்சனே உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மண்குவளைகள் இன்றும் அவரின் அடையாளங்களாக எங்களால் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு பால்கனியில் மூங்கில்களைக் கொண்டு ஒரு உருவத்தை வடிவமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் கேட்டது 5 கட்டு மூங்கிலும், தான் சொல்கிறபடி அதை பல்கோண வடிவங்களில் பிளந்து கொடுப்பதற்கு ஒரு ஆளும். மூங்கில் கட்டுகளோடு எனக்கு தெரிந்த மூங்கில் கூடை முடையும் ஒரு குறப் பெண்ணையும் கூட்டி வந்தேன். மிகுந்த உற்சாகமடைந்த இருவரும் தங்கள் புதிய படைப்பை அன்று காலையிலேயே துவங்கினார்கள். முற்று பெறாத தன் பணியினூடே அன்று மாலை என்னை அழைத்த வல்சன், இந்த வேலை சலிப்பூட்டுகிறது பவா. இந்த பெண்தான் என் படைப்பின் இரகசியங்களை கண்டடைய விரும்புபவளாக இருக்கிறாள். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். இவளை பின்னாள் உட்கார வைத்து ஊர் சுற்ற வேண்டும், மலை சுற்ற வேண்டும்.... என ஒரு குழந்தையைப் போல குதூகலித்தார். ஒரு நாள் அறிமுகத்திலேயே அவரோடு பயணிப்பதற்கு அப் பெண்ணுக்கும் பேராவல் இருந்தது. அதன் பிறகான மூன்று நாட்களை அவரின்றி அல்லது அவர்களின்றி நாங்கள் நகர்த்தியிருந்தோம். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறியும் ஆவல் எங்களுக்குள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

மூன்றாவது நாள் மாலை வல்சன் மட்டும் அதே சைக்கிளில் உற்சாகம் குறைந்தவராக வந்து தன் பொருட்களை, துணிகளை எடுத்து வைத்து தான் புறப்படுவதாக சொன்னபோது என் பையன் அவரை தன்னோடு இன்னொரு நாள் இருக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து கேட்டுக் கொண்டான். தோளில் மாட்டிய தன் உடமைகளை கீழறிக்கி வைத்து விட்டு தன் பயணத்தை ஒத்திப் போட்டு எங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலை சுற்றும் வழியில் உள்ள ஒரு குளத்தைப் பார்த்தேன். சிங்கத்தின் வாய் பிளந்திருப்பது மாதிரி இருப்பதுதான் அதன் நுழைவாயில். (சிங்க முக தீர்த்த குளம்) புராதன அழகோடு கூடிய அதன் மீது யார் சுண்ணாம்பு அடித்து கெடுத்தது? என்ற கேள்விக்கு நான் மொளனமாக இருந்தேன். அடுத்த முறை என் திருவண்ணாமலைப் பயணம், அதன் மீதேறியிருக்கும் சுண்ணாம்பை அகற்றி அதன் பழமையை, அதன் புராதன அழகை மீட்டெடுப்பதுதான் என்று சொல்லி கேரள பாரம்பரிய புட்டு செய்து கொட்டாங்குச்சியில் கொடுத்தார். அரிசி புட்டில் பழமும், நெய்யும் கலந்து பிசைந்து உண்ணும் ருசி எனக்கு வல்சன் ஏற்படுத்தியதுதான்.

எங்கிருக்கிறீர்கள் வல்சன்?

மீண்டும் எப்போது வருவீர்கள்?

சிங்க முக தீர்த்த குளம் இம் மழையில் நிறைவதற்குமுன்

அந்த கூடைமுடியும் குறப்பெண் என்னைப்பார்க்கும் போதெல்லாம்


"அந்த சார் எப்ப வருவார்ண்னே?" என்ற கேள்வி மங்கும் முன்.