Monday, February 21, 2011

இன்னுமொருக் கடிதம்

''மனிதன் பார்க்கிறான்
விஞ்ஞானி உற்றுப்பார்க்கிறான்
கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்''
என்று சொல்வார்கள். '' 19 டி.எம் சரோனிலிருந்து'' என்ற பவா. செல்லதுரையின் நூலைப் படிப்பவர்கள், பவா தன்னுடன் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்திருக்கிறார் என்பதையே உணருவார்கள். இந்த சிறிய நூலை ஒரு பெரிய வாகை மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, மண்வாசனையின் புதுமணம் மாறுவதற்குள் அதை முற்றிலும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மூச்சை ஆழ இழுப்பதைப்போல், கைபேசியில் பவாவை தொடர்பு கொண்டேன். என்னுடைய துரதிஷ்டம் அவர் எடுக்கவில்லை. பல நேரங்களிலும் இது நடப்பது தான். பிறகு. வழக்கம் போல் அவரே தொடர்பு கொண்டார். பகிர்ந்து கொண்டேன்.

''எழுத்துச் சோம்பேறி'' என்று அவரே அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானே பலமுறை அவரிடத்தில் சொல்லியிருக்கிறேன். ''ஏன் எழுதமாட்டேன் என்கிறாய். முன்னாள் எழுத்தாளர் என்று சொல்ற மாதிரி பண்ணிடாத'' என்று அவருக்கு நெருக்கமான பலருக்கும் அவரைப்பற்றி இப்படி ஒரு கருத்து உண்டு தான் ''எழுத்துச் சோம்பேறி”. ஆனால், இந்த நூலைப் படித்தவுடன் அந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்பதை எல்லோருமே ஏற்பார்கள் என்று நம்புகிறேன். ஆம். அவரின் இந்த கால இடைவெளி சோம்பேறித்தனமல்ல. மாறாக, ஒவ்வொன்றையும் தனக்குள்ளே அடைகாத்து, வளர்த்து, ஆரோக்கியமாய் வெளிப்படுத்தும் அவசியத்தின்பாற்பட்டதே இந்த அமைதி எனக்கருதுகிறேன்.

பிடித்தமானவர்களுடன் அளவளாவுவதில் அலாதி பிரியம் கொண்டவர் பவா. பேசும்போதே, புனைவுகளுடன் பேசி கேட்பவரை மதிமயங்கச் செய்யும் வல்லமை படைத்தவர். இந்தக் 'கலை' தனக்கில்லையே என கேட்பவரை ஏங்கச் செய்யும் அவருடைய சொல்லும் விதம். எழுத்திலும், அத்தகைய புனைவும், அழகும் வலிமையாய் இடம் பிடித்திருக்கிறது.

இந்த தொகுப்பிலேயே மிக, மிக, மிக பிடித்தமான, அழுத்தமான கட்டுரை 'அப்பா', தண்ணீரைத் தேடி மனிதர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஊருக்கு பொதுவாக கிணறு வெட்டும் போதே, ஊற்று தட்டுப்பட்டுவிட்ட தென்றால் ஊரே கூடி கொண்டாடும் காட்சியை இப்போதும் கிராமத்தில் காணலாம். அதிலும் சுவையான நல்ல தண்ணீர் கிடைத்துவிட்டால் நாடே நமது காலடியில் என்ற நினைப்பில் தான் நடமாடுவார்கள். தனக்கே சொந்தமான கிணற்றில் நல்ல வளமான ஊற்றுகிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும் குதூகலிப்புக்கு ''அப்பாவின் குதூகலம் என் வயதுக்கானது'' என்று ஒரு வரியில்அத்தனையையும் படம் பிடித்து காட்டிவிட்டார். 'கொட்டிக்கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?' எதைவிட? ஒவ்வொரு குழந்தைக்கும் தனது அப்பா, அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்தால் இத்தகைய கேள்விகள் எழவே செய்யும்.

மதச்சார்பற்றவராக மரணம் வரை வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் மரணத்திற்கு பிறகும் அது தொடர மார்க்சீயவாதியாகிய தன் மகனை அவநம்பிக்கையுடன் கேட்ட அந்த மனிதரை, எந்த இயக்கத்திலும் இல்லையென்றாலும் கடைசி காலம் வரை கொள்கை பிடிப்புடன் அவர் வாழ்ந்தது கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 25 ஆண்டு கால தொடர்பும், நட்பும் எனக்கும் பவாவுக்கும். இந்நூலில் குறிப்பிட்டுள்ள ஆளுமைகள் அனைவர் குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் என்னோடு பேசியிருக்கிறார். விசிறி சாமியார் தவிர யோகிராம் சூரத் குமாரோடு அவருக்கு இவ்வளவு நெருக்கமான தொடர்பிருந்தது நான் அறியாதது. ஒருவேளை இந்து மத சாமியாரைப் பற்றி பேச வேண்டாமென்று நினைத்தாரா எனத் தெரியவில்லை. மதவெறி சக்திகளும், ஆளும் வர்க்கமும் மக்களின் நம்பிக்கைகளை இதுபோன்ற சாமியார்கள் மூலம் மிகவும் தந்திரமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் விசிறிசாமியார் என்ற பிச்சைக்காரன் மணி மண்டபத்துக்குள் மாற்றப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்திருக்கிறார்.
சிபியின் எதிர்பாராத இழப்பு எல்லோராலும் தாங்க முடியாத பெருந்துயரில் தள்ளியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் பவாவின் வீட்டிற்கு சென்ற போது ''குழாயைத் திறந்துவிட்டு அதன் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிபி'' குழந்தைக்கு சளிபிடித்துக் கொள்ளப் போகிறதென்று நான் பதறிப்போய் சொன்னேன்.''அவன் விருப்பம் போல் வளரட்டுமென்று நாங்கள் விட்டுவிட்டோம்'' இது பவா. ஷைலஜாவும், ''அவன் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நேரம் கூட இப்படி தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க அவன் விளையாடிக் கொண்டிருந்த காட்சி மனதில் ஆழமாய் இப்போதும் துருதுருவென திரிந்த குழந்தையைத் தேடி யோகி ராம்சூரத் குமாரிடம் சென்ற பகுதியை படிக்கும் போது நான் தவித்துப் போனேன். பவா, குழந்தையின் பிரிவால் தடுமாறிவிட்டானோ? என்று. ஷைலஜாவின் 'என் சிபி மீண்டும் வரும் வரை எந்த ஆறுதலும் ரத்தம் கசியும் என் மனதின் விளிம்பைக் கூடத் தொட முடியாது'' என்ற வரிகள் விடையாக வந்து என்னை ஆசுவாசப்படுத்தின.

பவா வீட்டில் உணவு என்றால் கட்டாயம் அசைவம் தான் என்பது அங்கு சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். ஷைலஜாவின் சுவையான சமையலுக்காகவே மீண்டும் மீண்டும் சாப்பிடச் செல்லலாம். நேரம் தான் வாய்க்கவில்லை. சாப்பிடும் வேளையில், பினுபாஸ்கர் எடுத்த குடும்பப்படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லாமல் பவா இருந்ததில்லை. அத்தனை அழகு பவாவின் அம்மாவை நான் பார்த்திருக்கவில்லை. ''அம்மாவிடமிருந்து அந்த வாஞ்சையை அப்படியே ஷைலஜா சுவீகரித்திருக்கிறாள்'' என்ற வரியின் மூலம் ஷைலஜாவை அறிந்த ஒவ்வொருவருக்கும் பவாவின் அம்மா எப்படி இருந்திருப்பார் என்பதை உணர்த்திவிட்டார்.

ஒவ்வொருவருடைய நட்பையும், ததும்பி வழியும் அளவுக்கு அவர் அனுபவித்திருக்கிறார் என்பதை இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். ஆனால் ஒன்றைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. பவாவும் - கருணாவும் திருவண்ணாமலை இரட்டையர்கள் என்பது அவர்களை பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். இப்போது இருவருமே பேசாமல் மௌனம் கடைபிடிக்கிறார்கள். இந்த இடைவெளியும் மௌனமும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, தெரியவும் வேண்டாம். ஆனால், இரட்டையர்களை அதே நெருக்கத்தோடு பார்த்துப் பரவசப்பட ஆசை.

மனதை புரட்டிப்போடும் வல்லமை மிக்க எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்ற பவா, இதுபோன்ற தலைசிறந்த படைப்புகள் மட்டுமே உன்னிடமிருந்து வெளிவரட்டும். பாலகுமாரனைப் போல் வகைதொகை இல்லாமல் ஏராளமாய் எழுதிக்குவிக்க வேண்டாம் எப்போதாவது எழுதினாலும் இதுபோல, இன்னும் அழுத்தமான படைப்புகளாகவே உன்னிடமிருந்து வரட்டும்.

இதுபோன்ற அட்டைப்படங்கள் இனி எடுக்கப்படுமா? அட்டைப் படமே ஒரு சிறுகதை, கட்டுரைக்கு சமமாக கவனமாய் பதிவு பெற்றிருக்கிறது. பவாவின் படத்தையும் சேர்த்துத்தான்.

வாழ்த்துகளுடன்,

தோழன், பெ. சண்முகம்
மாநில செயற்க்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Sunday, February 20, 2011

ஒரு கடிதம்

அன்பு பவா அவர்களுக்கு தாழ்ந்த வணக்கம்....

உங்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்... கடந்தவாரம் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எஸ்.ரா அவர்களுடன் வந்திருந்தேன்.. நாங்கள் அங்கு வரும்வரை மூவரும் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம் ... மறுநாள் சென்னை வந்தடையும் வரை பேச்சு உங்களை சுற்றியே இருந்தது..

நானும் எனது நண்பனும் ஒருமுறை கொச்சியில் நடந்த திரைப்படவிழாவில் அபர்னாசென்னின் 36chowrengi lane எனும் படத்தை பார்க்க நேர்ந்தது.... இரவுக்காட்சி... எப்போதும் படம் முடிந்ததும் அதை பற்றி விவாதிப்பது வழக்கம்..ஆனால் அப்படம் முடிந்ததும் நடந்தே ஹோட்டலுக்கு வந்தோம்... இருவரும் ஒருவார்த்தை பேசிக்கொள்ள வில்லை. அன்று என்னால் உறங்கமுடியவில்லை...அதற்குபிறகு உங்கள் விழாவிற்கு வந்தபின்புதான் மீண்டும் அந்த அனுபவத்தை அடைந்தேன்...

உங்கள் விழா என்னை பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பி அழைத்து சென்றது...அன்று வீதிநாடகம் மற்றும் தெருக்கூத்தின் மீது தீராத மோகம் கொண்டிருந்த காலம்...திரு புரிசை கண்ணப்பதம்பிரான் வீட்டில் தங்கியிருந்து அவர்களுடன் பயணப்பட்டு நேர்த்தியான அவர்களது கலை வடிவத்தில் கரைந்து போனதும்..கொட்டிவாக்கத்தில் திரு ந.முத்துசாமியுடன் இருந்த நாட்களும் கண்முன்னால் நிழலாடியது....

பின் சினிமாவிற்குள் வந்ததும் மெதுவாக அவற்றுடனான தொடர்பு மெலிந்து ஒரு காலத்தில் அறுந்தும் போயிற்று.. காரணம் தெரியவில்லை....ஒருவேளை அவற்றை பற்றி பேச எவரும் கிடைக்காமல் போனதால் இருக்கலாம்...

விழா முடிந்த அவ்விரவுப்பனியில் உணவருந்தியதும் விடை பெறும்போது நான் கை குலுக்கிய பின் என்னை அன்போடு மெல்ல அணைத்தீர்கள்...

இவரை ஏன் பல ஆண்டுகள் முன்பே நமக்கு அறிமுகமில்லாமல் போயிற்று என்று மிகவும் வருந்தினேன்..

நீங்கள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு தாமதமாக கிடைத்தீர்கள்..?

உங்கள் பணியில் இருக்கும் எளிமை, எழுத்திலும் இருக்கிறது என்பதை உங்கள் புத்தகங்களிருந்து அறிந்தேன்... மேற்கொண்டு என்ன எழுதுவது என்றறியாமல்...

அன்புடன்
மணிகண்டன்

Tuesday, February 15, 2011

வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011)



திருவண்ணமலையில் நடைபெற்ற வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011),

டேனிஸ் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை







Monday, February 7, 2011

19.டி.எம்.சாரோனிலிருந்து...



இப்புத்தக கண்காட்சிக்கு என் ''19.டி.எம். சாரோனிலிருந்து...'' கட்டுரைத் தொகுப்பு வெளியாகி பல நண்பர்களால் வாசிக்கப்படுவது தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் உறுதி செய்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இதைவிட சந்தோஷமானத் தருணங்கள் வேறென்ன?

தொகுப்பை வாசித்து முடித்த அடுத்த கணமே, மொழிபெயர்ப்பாளர் குப்புசாமி தொலைபேசியில் அழைத்து ஒரு பித்துப் பிடித்த மனநிலையில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பேசிக் கொண்டே போனார். உரையாடலின் நெகிழ்வைத் தாங்க முடியாமல், எழுத முடியுமாவெனக் கேட்டேன்.

அடித்தலும் திருத்தலுமான கையெழுத்துடன் ஏழெட்டுப் பக்கங்களை அன்றிரவே எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பினார். நாலு பக்கங்களுக்கு மேல் வாசிக்க திராணியற்று வைத்துவிட்டேன். கடைசிப் பக்கங்களை அவர் மனைவி நர்மதா சொன்னது மாதிரி ஆரணிப் பிசாசோ அல்லது
அயலர்லாந்து பிசாசோ எழுதினது மாதிரியேதான் இருக்கிறது என .நினைக்கிறேன்.


ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பம், என் வாழ்க்கையின் உன்னதமான தருணம்.

இருபதுகளைத் தொட்டிருந்த அந்தப் பருவத்தில்தான் என் ரசனைகளும், தேடல்களும், பரவசங்களும் என் வருங்கால ஆளுமையை வடிவமைக்கத் தொடங்கியிருந்தன. அப்பாவுக்கு நான் படிப்பில் அவர்எதிர்பார்க்கின்ற அளவுக்கு தீவிரத்தைக் காட்டாத்தற்கு என் இலக்கிய வாசிப்பும், சங்கீத மோகமும்தான் காரணம் என்று திடமான நம்பிக்கை. வீட்டுக்குள் எந்தக் கதைப்புத்தகம் பார்த்தாலும் அதை அக்கக்காகக் கிழித்து எறிவார். எங்கள் வீட்டு ரேடியோ பழங்கால கிளியர்டோன்அலைவரிசைகளுக்கு க்ரீம் கலரில் பட்டன்கள் இருக்கும்.

வலதுபக்கக் குமிழைத் திருகினால் சிவப்புக்கம்பியில் ஸ்டேஷன்களைத்தேடி நகரும்.

அப்பா அவருக்கான செய்திகள் மட்டும் கேட்பதற்காகச் சென்னை-1 நிலையத்தின் எழுநூற்றிச் சொச்ச எண் வரிசையில் அந்தச் சிவப்புமுள் இருக்குமாறு வைத்துவிட்டு, உள்ளே அதை திருப்பும் கயிறை அறுத்துவிட்டிருந்தார்.

ரேடியோ கேட்கவேண்டுமானால் சென்னை ஒன்று அலைவரிசை மட்டும்தான். விவிதபாரதி, சிலோன் எல்லாம் கேட்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.02 க்கு வரும் நேயர் விருப்பம் மட்டும் கேட்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் அப்பா என்னைக் கடைக்கு வரச்சொல்லிவிடுவார்.

அந்த நாட்களில் எனக்கு ஹிட்லர், முசோலினி, இடி அமீன் எல்லோரையும் விட மிகக் கொடூரமானவர் அப்பாதான்.

அவர் என்மீது கட்டுப்பாடுகளை இறுக்க இறுக்க அதை எதிர்க்கிற , மீறிச் செயல்படுகிற பிடிவாதம் அந்த வயதுக்கான குணமாக இருந்தது. 83 ஜூன் மாதத்தில் பன்னீர் புஷ்பங்கள்வெளியாகியிருந்தது. என் உன்னதமான வாழ்க்கைப் பருவத்தை வர்ணமயமாக மாற்றி, என் வாழ்நாளில் நான் அடைந்த அதிகபட்ச சந்தோஷத் தருணங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்த இளையராஜாதான் அந்தப்படத்திற்கு இசை.

வீட்டில் ரேடியோ முடமாகி இருக்கிறது. எதிர்வீட்டு வானொலியில் அடுத்தப் பாடல் இடம்பெற்ற படம் பன்னீர் புஷ்பங்கள், பாடுவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி. பாடல் கங்கை அமரன், இசை இளையராஜா என்கிறது. எந்தப்படத்தின் பாடல்களையும் அதுவரை நான் கேட்டிருக்கவில்லை.

எதிர்வீட்டிலிருந்து கேட்கும் பாடலுக்காகக் காத்துக்கொண்டு வாசற்படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் என் தொடைகளுக்குள் மின்சாரம் போல ஒரு அதிர்வு. வயிற்றுக்குள் திடீரென தசைகள் சுருங்கி என் செவிகள்
தீட்டப்பட மெதுவாக அந்தப்பாடலின் துவக்க இசை கேட்கத் தொடங்குகிறது. அந்தக் கித்தார் பின்னல்கள் என்னை அடைந்த அந்தக் கணத்திலேயே ஒரு மகத்தான சங்கீதத்தைக் கேட்கப்போகிறோம் என்று உள்ளுணர்வு அறிவித்துவிடுகிறது. பதற்றம் அதிகரித்து ஒரு தெய்வ தரிசனத்தின் முந்தைய வினாடிபோல என் அக இயக்கம் ஸ்தம்பிக்கிறது.

மேற்சொன்ன அந்த உணர்வு அல்லது உணர்வற்ற நிலை பவா செல்லத்துரையின் அப்பாகட்டுரையின் முதல் பாராவுக்குள் நுழைந்த கணமே ஏற்படுகிறது.(19.டி.எம். சாரோனிலிருந்து)

இரண்டாவாது பாராவின் முதல் வரியைக் கடக்க முடியவில்லை. கண்கள் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் திரும்பிக் கொள்கிறது. கட்டுரையில் அதிர்ச்சிகரமாக எதுவும் ஆரம்பித்திருக்கவில்லை.உண்மையில் எதுவுமே தொடங்கியிருக்கவில்லை.

கிணறு வெட்டப்போகிறார்கள். பவாவின் நிலத்தில் கிணறு வெட்டுவதைப் பார்க்க, அவர் அப்பாவோடு சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து போவதுதான் முதல் பாராவில் நடக்கிறது. ஆனால் வரப்போகிற வரிகளை எதிர்கொள்ள தைரியமின்றி கைகள் புத்தகத்தை மூடுகின்றன. நிலைகொள்ள முடியாமல் மீண்டும் திறக்கிற பக்கத்தில் விசிறி சாமியார் ராம்சுரத்குமார்
அனுபவங்களின் சில வரிகளைக் கண்கள் மேய்கின்றன. மனம் பதியாமல் புத்தகம் மீண்டும் மூடிக்கொள்கிறது.

மீண்டும் திறக்கப்படுகிறது. கண்கள் குவியும் வரிகளில் மீண்டும் ராம்சுரத்குமார், வரிகள் கலைய பாலகுமாரன் பல்செட்டை கழற்றி எடுத்துவிட்டு பவாவிடம் பேசியவை ஏற்கனவே நான் அறிந்தவை.

மன அதிர்வுகள் மட்டுப்பட்டு மீண்டும் 89ம் பக்கத்தை விரல்கள் பிரிக்கின்றன. இம்முறை சுயக்கட்டுப்பாடின்றி வரிகள் பார்வையில் ஓடத்தொடங்கி விடுகின்றன. நான் என்பது என்னிலிருந்து விலகி விட்டிருப்பது வெகுதூரத்தில் உறைக்கிறது. இந்த அனுபவம் வாசிப்பில் கிடைப்பது மிக அபூர்வத் தருணங்களில்தான் என்று புத்தி முணுமுணுப்பது என்னிலிருந்து விலகி வாசிக்கிற மற்றொரு நானுக்குகேட்கிறதா தெரியவில்லை. வரிகளில் எழுத்தாளன் எழுதாத சப்தங்கள் காதுகளுக்குள் கேட்கின்றன.

கிணற்றிலிருந்து வெட்டி வெளியே விழுகிற மொரம்பில் ஈரம் தெரிய அப்பாவும் பவாவும் கிணற்றுக்குள் இறங்கும்போது வயிறு சுருங்கிக்கொள்கிறது. கிணற்றுக்குள் இருந்து மேலே பார்க்கும் வரிகளில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஹென்றியைப் புத்தி நினைவுக்கு கொண்டுவருகிறது. சனி மூலையில வாத்தியாரஎன்று கிணறு வெட்டுபவர் சொன்னதும் அதை பவா எழுதாவிட்டாலும் அந்த வார்த்தை ஹோவென எதிரொலிக்கிறது. ஊற்றுத்தண்ணீர் மேலிருக்கும் பாறை நெம்பித் தள்ளப்பட படிக்கிற முகத்தில் நீர் தெளிக்கிறது.

அப்பா

அப்பா

அப்பா

என் அப்பாவோடு நான் கிணற்றில் இறங்கியதில்லை. கட்சி வேலைகளில் ஈடுபட்டதில்லை. அப்பாவும் பிள்ளையும் எதிரெதிர் கட்சி ஏஜெண்டுகளாக பூத்தில் உட்கார்ந்ததில்லை. ஆனால் சுய அனுபவ ஒப்பீட்டில் நெகிழ்கிற விஷயம் அல்ல இது. ஒரு யுனிவர்சல்அப்பா. ஒரு எடர்னல்மகன். இதைத் தமிழில் எப்படிச் சொல்ல?. வார்த்தைகள் மனதிலிருந்து மறைத்து விட்டிருந்தன.

தெருவெல்லாம் துரத்தித் துரத்தி அடிக்கிற அப்பாவை பவாவின் கதைகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சண்டையில் அப்பாவின் பெட்டியைத் தெருவில் வீசியெறிகிற அந்த வரிகள் ஏற்படுத்தும் அதிர்வு அச்சமூட்டுவதாக இருக்கிறது. முதல் வாசிப்பில் இந்த வரிகள் அடித்த வலி ஒரு ஊமை வலியாக ஆழத்தில் திண்ணென்று விழுந்திருக்கிறது. வெளியே வலி இன்னமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இந்தக் கட்டுரை நிச்சயமாக இன்னும் பல முறை படிக்கப்படலாம். எப்பொழுது படித்தாலும் இந்த வரியை என்னால் நிச்சயம் தாண்ட முடியப் போவதில்லை. இந்த அபாரமான கட்டுரையின் மையப்புள்ளி இந்த சம்பவத்தின் அடுக்குகளுக்குள் ஆழத்தில் பொதிந்திருப்பது தூரத்து நட்சத்திர மினுக்கம் போல தெரிகிறது. கண்களை ரொம்ப சுருக்கிப் பார்க்கும்போது அது நட்சத்திர மினுக்கமா அல்லது கண்ணின் ஈரப் பிசுபிசுப்பில் உண்டான ஜொலிப்பா என்பதை அறுதியிட முடியாமலிருக்கிறது.

இப்போதைக்கு இந்த ஊமைவலி மட்டும் அலைவட்டங்கள் போட்டபடிதான் இருக்கின்றன. சீக்கிரம் அலைகள் கரையை உடைத்து மேலேறிவிடலாம். அதற்குமுன் இந்தப்பக்கத்தைக் கண்கானாமல் ஒளித்துவைத்து விட வேண்டும்.

ஒரு புத்தகம் பயமுறுத்துமா? பயப்படுத்துகிற புத்தகம் என்ன புத்தகம்? பதறவைக்கும் வரிகளை மீண்டும் தேடியெடுத்து வாசிக்க இயலுமா? அப்படி மீண்டும் வாசிப்பது ஒரு வித மசோக்கியசித்ரவதைதானா? வெற்றான நிலப்பரப்பு. அதிகம் உயரமில்லாத, ஆளரவமற்ற கோட்டாங்கல் குன்று பனியும் தூறலுமான மாலை. பாறையில் மல்லாந்து படுத்திருக்கிறார் அப்பா. வானத்தை வெறித்தபடி படுத்திருப்பவரின் கண்ணிலிருந்து நீர் வழிகிறது. பக்கத்தில் எட்டிமரத்தில் அவர் கட்டிவைத்திருக்கும் சுருக்குக் கயிறு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருக்க பின்னணியில் திருவண்ணாமலைக் குன்று மங்கலான ஓவியம் போல அமைந்திருக்கிறது. எழுந்து சுருக்குக்கயிற்றில் தலையை நுழைத்துக்கொள்வதற்கான நிமிடத்திற்காக எதிர்பார்த்து அசையாமல் அவர் படுத்திருக்கும் காட்சி வரிகளிலிருந்து எழும்பிவந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.

இன்றிரவு என்னால் தூங்க முடியப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் முளைக்கின்றன.

என் சுவாசத்தில் வெப்பம் மேலேறி மூச்சு கனக்கிறது. இன்னும் சில நொடிகளில் ஒரு பேரண்ட வெடிப்பு நிகழப் போகிறது என வானத்திலிருந்து கேட்கிறது. புலன்கள் தீட்டப்படுகின்றன.

சம்மந்தமேயில்லாமல் ஜன்னலுக்கு வெளியே தெருவில் அல்லது வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் இப்போது நின்றிருக்கிற பூனை (அந்த சாம்பல் புள்ளி பூனையாகத்தான் இருக்கவேண்டும், என்னைப்பார்க்கிறபோது போன ஜென்மத்து ஞாபகம் வந்ததுபோல கண்ணைச் சுருக்கி, பின் உக்கிரமாக முறைக்குமே, அதே பூனையாகத்தான் இருக்கும்.) ம்மியா...வ்எனக் காதுக்குள் கேட்கிறது. தொண்டை வரள்கிறது.

திடீரென வானவேடிக்கைகள் அந்த சாயங்கால கீழ்வானத்தில் பளிச்சிடத் தொடங்குகின்றன. வெடிச்சத்தங்கள் பல்வேறு சுருதிகளில் கிட்டத்திலும் தூரத்திலும் கேட்க, அந்தத் திருவண்ணாமலை உச்சியில் தீபம்
ஏற்றப்பட்டிருக்கிறது. தீபச்சுடரொளி பற்றிப் பிரகாசிக்க அதன் அலைக்கழிக்கும் பிழம்பில் விதிர்விதிர்த்துப் போகிறது.

எல்லாம் அடங்குகிறது. எல்லாமும். முற்றிலும்.

மூன்று நாட்களுக்கு-

அடுத்த மூன்று நாட்களுக்கு அந்த எட்டிமரக்கிளையில் அந்தக் தூக்குக்கயிறு ஆடிக்கொண்டிருக்கிறது.

அப்பாக்கள் மெதுவாக எழுந்திருக்கின்றனர்.

அப்பாக்களில் ஒருவர் கயிறை அவிழ்க்கிறார்.

ஒரு அப்பா சுருக்கிட்டுக்கொள்கிறார்.

இன்னொரு அப்பா தன்னிடமிருந்து ஒரு அப்பாவைத் தூக்குக்கயிற்றில் மாட்டித் தொங்கவிட்டு விட்டு அவர்மட்டும் தனியாக இறங்கி வருகிறார்.

மற்றொரு அப்பா தூக்குக்கயிற்றை அவிழ்க்காமல் கீழிறங்கி வருகிறார்

வேறொரு அப்பா பின்னாடியே வந்து தன்னை சுருக்கிட்டுக்கொள்கிறார்.

ஆனால் எல்லா அப்பாக்களின் மகன்களும் அப்பாக்களை வேடிக்கையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மகன்களால் மரத்தை நெருங்கும் அப்பாக்களின் கையைபிடித்து நிறுத்த முடிவதில்லை.

கழுத்தை நெரிக்கும் சுருக்கைத் தளர்த்திவிட மகன்களுக்குக் கை கூடுவதில்லை.

அந்த நேரங்களில் மகன்களின் கைகள் காற்றாகத்தான் மாறிவிடுகின்றன.

மகன்களுக்கு சாட்சி சொல்கிற கண்களும், வாழ்க்கை பூராவும் குத்திக் கிளறிக் கொண்டேயிருக்கப் போகிற ஞாபகங்களும், பின்னொரு காலத்தில் எழுதியே தீர்க்க வேண்டிய விரல்களும் மட்டுமே வாய்க்கின்றன.

மகன்களின் துர்க்கனவுகள் எப்போதும் அப்பாக்களை ஒட்டியே இருப்பது ஓர் உதிர்க்க முடியாத பாரம். மகன்களின் சாபங்கள் அப்பாக்களை ஒருபோதும் தீண்டிவிட முடியாத சோகத்துக்கு அடுத்தபடி இதுவாகவே இருக்க முடியும்.

மேலும்.......

http://umakathir.blogspot.com/2011/01/19.html

.

Thursday, February 3, 2011

ஆன்மீகத்திலிருந்து மனிதனுக்கு






என் இருபதாவது வயதில் நான் முதன் முதலாக கிடியன் தேவநேசன் என்ற பெயருடைய அக்கிறிஸ்துவத் திருச்சபையின் பாதிரியாரைச் சந்தித்தேன். அதற்கு முன்பும், பின்புமான ஏராளமான பாதிரியார்களைச் சந்தித்திருக்கிறேன். யாருக்குமே பெரிய அளவிற் இறைஞானமோ, அதைத் தாண்டியவற்றில் ஆர்வமோ இருந்து பார்த்ததில்லை. பாதர் ஜோஸ் மாதிரியானவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைகளில் விதிவிலக்கானவர்கள். அவர்கள் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறினார்கள், அல்லது வெளியேற்றப்பட்டார்கள்.

முதல் சந்திப்பிலேயே சிலர் மனதுக்குள் சுலபமாக நுழைந்துவிடுவார்களே, அதுபோல கிடியன் தேவநேசன் கண்களும், தான் நம்பும் விஷயத்தின் மீதான உறுதியும், திருச்சபையைத் தாண்டி சமூகம், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், தமிழ்மரபு, திருக்குறள், சங்க இலக்கியம் இப்படி எல்லாவற்றின்மீதும் அவருக்கிருந்த ஞானமும் ஆர்வமும் என்னை அவருக்கு மிக அருகில் வைத்தது.
நானும் அவரும் அவருடைய என்ஃபீல்ட் புல்லட்டில் புரிசைக்குக் கூத்து பார்க்க ஒரு நீண்ட பயணம் போன இரவும், வழி நெடுக மின்னிய மினுக்கிட்டாம் பூச்சிகளும் இன்றும் எங்களால் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவ அடிப்படைவாதத்தின் நேர்க்கோட்டிலிருந்து கொஞ்சம் விலகியே நடந்தவராக அவரைச் சொல்வேன். அவருடைய வாழ்வு அவரை அப்படி மாற்றிப் போட்டதாக உணர்கிறேன். தன் நாற்பதாவது வயதில் தன் பணியின் நிமித்தம் கல்வராயன் மலைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்கிறார். இயற்கையின் மகோன்னதத்திற்கு தன் ஜன்னலைக்கூடத் திறக்காமல் மூடப்பட்ட அறையிலேயே வாழ்வை முடிக்கும் பல கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு மத்தியில் கிடியன் ஜன்னல்களை மட்டுமின்றி, கதவுகளையும் அகலமாகத் திறந்து வைக்கிறார். சுற்றிலுமிருந்த ஆதிவாசி மக்கள் தங்கள் நேசிப்புக்குரிய மனிதனாக இவரிடம் நெருங்குகிறார்கள். இச்சமயத்திற்காகவே காத்திருந்தது மாதிரி தூண்டிலை இழுத்து மீன்களை அறுவடை செய்யும் மற்ற மதவாதிகளைப் போலன்றி, அம்மக்களின் இயல்பை, மதத்தை, இயற்கையின் மீதான பற்றைக் கொஞ்சமும் மாற்ற முயற்சிக்காமல், அவர்களில் ஒருவராக தான் மாறினார். 1990இல் ஒரு மார்ச் மாதத்தில், ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதற்காக வெறிகொண்டலைந்த என் நண்பன் கோணங்கியை அவரிடம் அனுப்பி வைத்தேன்.

கோணங்கி சென்ற இரண்டாவது நாள் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் பதில் சொன்னார். உங்கள் நண்பருக்கு நான் கொடுத்த அறை, உணவு, ஃபேன் காற்று எதுவுமே தேவைப்படவில்லை, அவர் ஆதிவாசிகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். இரண்டற என்ற வார்த்தை உச்சரிப்பின்போது அவரிடம் தெறித்த கிண்டலைச் சமவெளியில் இருந்தே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நேற்று அதிகாலை என் நடைப்பயிற்சியின்போது பார்த்தேன். இரவு வேட்டையில் சிக்கிய காட்டுப்பன்னியை இரத்தம் சொட்டச்சொட்ட தூக்கி வந்த ஆறு பேரில் கோணங்கியும் ஒருவர். கல்வராயன் மலையில் சுத்தமான கஞ்சா எங்கிருக்கிறது என்பதும் இந்த மக்களுக்கு அத்துபடி.

நான் கோணங்கியை அவன் மனநிலைக்கு ஏற்ற இடத்திற்குத்தான் அனுப்பியதாகப் பெருமிதப்பட்டுக் கொண்டேன். அம்மலைக்காட்டில் சுற்றி அலைந்து அவன் தரைக்குக் கொண்டு வந்ததுதான் 'கல்குதிரை.' தொடர்ச்சியான வாசிப்பே அவரை சராசரிகளிடமிருந்து அன்னியப்படுத்தியது. திருச்சபைகள் எதிர்பார்ப்பதோ, அதிகாரம் பிரித்துக் கொடுத்தலையும் உத்யோக பிச்சையிடலையும், என்ன விலை தந்தேனும் லௌகீக வாழ்வின் உச்சத்தை அடைதலையும்தான். இதை, தொடர்ந்து கிடியன் அலட்சியப்படுத்தினார். ஒரு பறவையின் சிறகில் பட்டுத்தெறிக்கும் மழைநீர் மாதிரியானது பதவி என்பதில் இறுதிவரை உறுதியுடன் இருந்தார். அதனால் தானடைந்த நேர்மையை, கம்பீரத்தைத் தனதாக்கி வைத்திருந்தார்.
அவருடனான என் பல உரையாடல்களின் முடிவில் பேச்சற்று போயிருக்கிறேன். நீடிக்கும் மௌனத்தினூடே அவர் சொன்ன செய்திகளின் காட்சி வடிவத்தில் மூழ்கியிருக்கிறேன்.

நீண்ட மலைப்பாதை. மழைபெய்து முடிந்த குளிர்ந்த இரவு. காரில் வாய்த்த இரவுப் பயணமது. முன்சீட்டில் உட்கார்ந்து தூங்குகிறார். ஓட்டுனர் அடித்த பிரேக்கில் தலைமோதி அதிர்ந்தெழுந்து நெற்றியைத் தடவிக் கொண்டே பாதையைப் பார்க்கிறார். கண் நீண்ட தொலைவிற்கு எதுவுமில்லை.
''அப்புறம் ஏன் இப்படி ஒரு பிரேக் அடிச்ச?''

அந்த வயதான டிரைவர் தலை திருப்பாமலேயே நிதானமாக பதில் சொல்கிறார்.

''ரோட்டை ஒரு கீரிப்புள்ள கிராஸ் பண்ணுச்சுங்க''

''கீரி தான, அடிச்சிட வேண்டியதுதான?''

''அப்புறம் மரணம் எனக்கு மரத்துப் போயிடும் அய்யா''

நான் பேச்சற்றுபோன தருணங்களில் இதுவும் ஒன்று.

பாதிரியாரிலிருந்து பேராயராக உயர்ந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட கிரீடம், செங்கோல், அதிகாரம் எல்லாமும் அவரை மக்களிடமிருந்து பிரித்து விடுமோ என பயந்தேன். தன் கீரிடத்தையும், செங்கோலையும் பேராலாயத்தில் வைத்துவிட்டு அவர் மெல்ல நடந்து வந்து எளிய மக்களின் கை பிடித்தார்.
அவருடைய பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். அவை எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. மேதமைக்கும் எளிமைக்கும் இடையிலான சொற்பொழிவுகள்தான் அவை. ஆனால் சில முக்கிய மரணங்களின்போது அவர் ஆற்றிய உரைகள் அவரே அறியாமல் முக்கியமானவை. மரபுகள் வழியே மனிதனைப் பார்ப்பது அவருக்கு வாய்த்திருந்தது.

ஆனால் தொடர்ந்த வாசிப்பிலும்கூட வசீகரமான மொழி அவருக்கு வாய்த்திருக்கவில்லை. இலக்கியம் தவிர்த்த பொருளாதார அரசியல் சம்மந்தமான புத்தகங்கள் அவருக்கு வறண்ட மொழியையே அளித்திருந்தன.
டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேனிஷ் மிஷன் செக்கரட்ரி ஒருவர் தமிழகத்தின் முக்கியமான பல ஓவியர்களைச் சந்திக்க வேண்டுமென தன் மகள் பொருட்டு விரும்பியபோது அப்பயணத்தை என் நண்பன் ஜாஷ்வா பீட்டருக்காக நான் நிறைவேற்றித் தந்தேன்.

அப்பயணத்தில் பிஷப் கிடியனின் எங்களுடனான இருப்பில், கலைஞர்களின் பெருவாழ்வும், விட்டேத்தியான மனநிலையும், லௌகீக வாழ்வை புறந்தள்ளும் குணமும் அவரைப் பெரிதும் கவர்ந்தது.

''பாதிரியார்கள்தான் பற்றற்று இருக்க வேண்டுமென எப்போதும் நினைப்பேன். அப்படி ஒருவரையும் என் வாழ்வில் சந்தித்ததில்லை. கலைஞர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் பவா'' எனத் தன் வியப்பைத் தொடர்ந்து அப்பயணத்தின்போது வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.
சந்தானராஜ், ட்ராஸ்கி மருது, டக்ளஸ், சஜிதா போன்ற ஓவியர்களுடான சந்திப்பும், ஓவியர் ஆதிமூலம் வரைவதை அவர் அறையிலேயே உட்கார்ந்து பார்க்கும் பெரும் வாய்ப்பும் அன்று வாய்த்தது.

ஒரு முறை என்னை அவருடனான ஒரு உரையாடலின் போது பார்த்த சர்ச் பாதிரியார் ஒருவர், 'அய்யா, பவா ஒரு தடவைகூட சர்ச்சுக்கு வந்ததில்லைங்கய்யா' என்ற புகார் மனுவை வாசித்தார்.

பிஷப் கிடியோன் புன்னகைத்துக் கொண்டே ''நீங்க எத்தனை தடவை அவர் நடத்துற முற்றத்துக்குப் போயிருக்கீங்க டேனியல்?'' என்று கேட்டார். மனித ஞானத்தையும், அனுபவத்தையும், ஆராதனைகளிலிருந்தும் முற்றத்திலிருந்தும் பெற்றுக்கொள்வது ஒன்றுதான் என்று அவர் உள்ளூர நம்பினார்.

மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு இங்கிலாந்து பயணத்தின்போது, அங்கேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பேச்சடங்கிப்போன ஒரு மனிதனாக சி.எம்.சி. மருத்துவமனையில் பார்த்தேன். எனக்கு, தன் கண்களால் நன்றி சொன்னார். கை அழுத்தத்தால் அன்பைப் பரிமாறினார். தன் உடல் சுகவீனத்தின் பொருட்டு விடை பெற்றுக்கொண்ட மிக உயர்ந்த பிஷப் பதவியை அதன் பிறகான நாட்களில் திரும்பிப் பார்க்காமல் இன்னும் எளிமையான வாழ்விற்கு வந்தார். இந்த மனநிலை அசாதாரணமானது.

ஆறு மாதத்திற்கு முன் என் உறவினர் திருமணத்தில் எதிர்பாராத விதமாக அவரை தேவாயத்தில் தன் மனைவியோடு பார்த்தேன். கையில் ஒரு பாட்டுத்தாளை வைத்துக்கொண்டு பாட முயற்சி செய்து கொண்டிருந்தார். எங்கள் பழைய நாட்களின் நினைவு பெருகியது. எப்போதும் கடவுள் நம்பிக்கையற்ற நான், ''கடவுளே இவருக்கு மீண்டும் பேசவும் பாடவுமான நாட்களை வாய்க்கச் செய்வாயாக'' எனக் கண்ணீர் மல்க இறைந்து மன்றாடினேன்.
புகைப்படங்கள் - ஆர்.ஆர். சீனிவாசன்