Monday, February 21, 2011

இன்னுமொருக் கடிதம்

''மனிதன் பார்க்கிறான்
விஞ்ஞானி உற்றுப்பார்க்கிறான்
கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்''
என்று சொல்வார்கள். '' 19 டி.எம் சரோனிலிருந்து'' என்ற பவா. செல்லதுரையின் நூலைப் படிப்பவர்கள், பவா தன்னுடன் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்திருக்கிறார் என்பதையே உணருவார்கள். இந்த சிறிய நூலை ஒரு பெரிய வாகை மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, மண்வாசனையின் புதுமணம் மாறுவதற்குள் அதை முற்றிலும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மூச்சை ஆழ இழுப்பதைப்போல், கைபேசியில் பவாவை தொடர்பு கொண்டேன். என்னுடைய துரதிஷ்டம் அவர் எடுக்கவில்லை. பல நேரங்களிலும் இது நடப்பது தான். பிறகு. வழக்கம் போல் அவரே தொடர்பு கொண்டார். பகிர்ந்து கொண்டேன்.

''எழுத்துச் சோம்பேறி'' என்று அவரே அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானே பலமுறை அவரிடத்தில் சொல்லியிருக்கிறேன். ''ஏன் எழுதமாட்டேன் என்கிறாய். முன்னாள் எழுத்தாளர் என்று சொல்ற மாதிரி பண்ணிடாத'' என்று அவருக்கு நெருக்கமான பலருக்கும் அவரைப்பற்றி இப்படி ஒரு கருத்து உண்டு தான் ''எழுத்துச் சோம்பேறி”. ஆனால், இந்த நூலைப் படித்தவுடன் அந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்பதை எல்லோருமே ஏற்பார்கள் என்று நம்புகிறேன். ஆம். அவரின் இந்த கால இடைவெளி சோம்பேறித்தனமல்ல. மாறாக, ஒவ்வொன்றையும் தனக்குள்ளே அடைகாத்து, வளர்த்து, ஆரோக்கியமாய் வெளிப்படுத்தும் அவசியத்தின்பாற்பட்டதே இந்த அமைதி எனக்கருதுகிறேன்.

பிடித்தமானவர்களுடன் அளவளாவுவதில் அலாதி பிரியம் கொண்டவர் பவா. பேசும்போதே, புனைவுகளுடன் பேசி கேட்பவரை மதிமயங்கச் செய்யும் வல்லமை படைத்தவர். இந்தக் 'கலை' தனக்கில்லையே என கேட்பவரை ஏங்கச் செய்யும் அவருடைய சொல்லும் விதம். எழுத்திலும், அத்தகைய புனைவும், அழகும் வலிமையாய் இடம் பிடித்திருக்கிறது.

இந்த தொகுப்பிலேயே மிக, மிக, மிக பிடித்தமான, அழுத்தமான கட்டுரை 'அப்பா', தண்ணீரைத் தேடி மனிதர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஊருக்கு பொதுவாக கிணறு வெட்டும் போதே, ஊற்று தட்டுப்பட்டுவிட்ட தென்றால் ஊரே கூடி கொண்டாடும் காட்சியை இப்போதும் கிராமத்தில் காணலாம். அதிலும் சுவையான நல்ல தண்ணீர் கிடைத்துவிட்டால் நாடே நமது காலடியில் என்ற நினைப்பில் தான் நடமாடுவார்கள். தனக்கே சொந்தமான கிணற்றில் நல்ல வளமான ஊற்றுகிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும் குதூகலிப்புக்கு ''அப்பாவின் குதூகலம் என் வயதுக்கானது'' என்று ஒரு வரியில்அத்தனையையும் படம் பிடித்து காட்டிவிட்டார். 'கொட்டிக்கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?' எதைவிட? ஒவ்வொரு குழந்தைக்கும் தனது அப்பா, அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்தால் இத்தகைய கேள்விகள் எழவே செய்யும்.

மதச்சார்பற்றவராக மரணம் வரை வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் மரணத்திற்கு பிறகும் அது தொடர மார்க்சீயவாதியாகிய தன் மகனை அவநம்பிக்கையுடன் கேட்ட அந்த மனிதரை, எந்த இயக்கத்திலும் இல்லையென்றாலும் கடைசி காலம் வரை கொள்கை பிடிப்புடன் அவர் வாழ்ந்தது கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 25 ஆண்டு கால தொடர்பும், நட்பும் எனக்கும் பவாவுக்கும். இந்நூலில் குறிப்பிட்டுள்ள ஆளுமைகள் அனைவர் குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் என்னோடு பேசியிருக்கிறார். விசிறி சாமியார் தவிர யோகிராம் சூரத் குமாரோடு அவருக்கு இவ்வளவு நெருக்கமான தொடர்பிருந்தது நான் அறியாதது. ஒருவேளை இந்து மத சாமியாரைப் பற்றி பேச வேண்டாமென்று நினைத்தாரா எனத் தெரியவில்லை. மதவெறி சக்திகளும், ஆளும் வர்க்கமும் மக்களின் நம்பிக்கைகளை இதுபோன்ற சாமியார்கள் மூலம் மிகவும் தந்திரமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் விசிறிசாமியார் என்ற பிச்சைக்காரன் மணி மண்டபத்துக்குள் மாற்றப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்திருக்கிறார்.
சிபியின் எதிர்பாராத இழப்பு எல்லோராலும் தாங்க முடியாத பெருந்துயரில் தள்ளியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் பவாவின் வீட்டிற்கு சென்ற போது ''குழாயைத் திறந்துவிட்டு அதன் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிபி'' குழந்தைக்கு சளிபிடித்துக் கொள்ளப் போகிறதென்று நான் பதறிப்போய் சொன்னேன்.''அவன் விருப்பம் போல் வளரட்டுமென்று நாங்கள் விட்டுவிட்டோம்'' இது பவா. ஷைலஜாவும், ''அவன் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நேரம் கூட இப்படி தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க அவன் விளையாடிக் கொண்டிருந்த காட்சி மனதில் ஆழமாய் இப்போதும் துருதுருவென திரிந்த குழந்தையைத் தேடி யோகி ராம்சூரத் குமாரிடம் சென்ற பகுதியை படிக்கும் போது நான் தவித்துப் போனேன். பவா, குழந்தையின் பிரிவால் தடுமாறிவிட்டானோ? என்று. ஷைலஜாவின் 'என் சிபி மீண்டும் வரும் வரை எந்த ஆறுதலும் ரத்தம் கசியும் என் மனதின் விளிம்பைக் கூடத் தொட முடியாது'' என்ற வரிகள் விடையாக வந்து என்னை ஆசுவாசப்படுத்தின.

பவா வீட்டில் உணவு என்றால் கட்டாயம் அசைவம் தான் என்பது அங்கு சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். ஷைலஜாவின் சுவையான சமையலுக்காகவே மீண்டும் மீண்டும் சாப்பிடச் செல்லலாம். நேரம் தான் வாய்க்கவில்லை. சாப்பிடும் வேளையில், பினுபாஸ்கர் எடுத்த குடும்பப்படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லாமல் பவா இருந்ததில்லை. அத்தனை அழகு பவாவின் அம்மாவை நான் பார்த்திருக்கவில்லை. ''அம்மாவிடமிருந்து அந்த வாஞ்சையை அப்படியே ஷைலஜா சுவீகரித்திருக்கிறாள்'' என்ற வரியின் மூலம் ஷைலஜாவை அறிந்த ஒவ்வொருவருக்கும் பவாவின் அம்மா எப்படி இருந்திருப்பார் என்பதை உணர்த்திவிட்டார்.

ஒவ்வொருவருடைய நட்பையும், ததும்பி வழியும் அளவுக்கு அவர் அனுபவித்திருக்கிறார் என்பதை இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். ஆனால் ஒன்றைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. பவாவும் - கருணாவும் திருவண்ணாமலை இரட்டையர்கள் என்பது அவர்களை பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். இப்போது இருவருமே பேசாமல் மௌனம் கடைபிடிக்கிறார்கள். இந்த இடைவெளியும் மௌனமும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, தெரியவும் வேண்டாம். ஆனால், இரட்டையர்களை அதே நெருக்கத்தோடு பார்த்துப் பரவசப்பட ஆசை.

மனதை புரட்டிப்போடும் வல்லமை மிக்க எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்ற பவா, இதுபோன்ற தலைசிறந்த படைப்புகள் மட்டுமே உன்னிடமிருந்து வெளிவரட்டும். பாலகுமாரனைப் போல் வகைதொகை இல்லாமல் ஏராளமாய் எழுதிக்குவிக்க வேண்டாம் எப்போதாவது எழுதினாலும் இதுபோல, இன்னும் அழுத்தமான படைப்புகளாகவே உன்னிடமிருந்து வரட்டும்.

இதுபோன்ற அட்டைப்படங்கள் இனி எடுக்கப்படுமா? அட்டைப் படமே ஒரு சிறுகதை, கட்டுரைக்கு சமமாக கவனமாய் பதிவு பெற்றிருக்கிறது. பவாவின் படத்தையும் சேர்த்துத்தான்.

வாழ்த்துகளுடன்,

தோழன், பெ. சண்முகம்
மாநில செயற்க்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

2 comments:

  1. "ஒவ்வொருவருடைய நட்பையும், ததும்பி வழியும் அளவுக்கு அவர் அனுபவித்திருக்கிறார் என்பதை இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். ஆனால் ஒன்றைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. பவாவும் - கருணாவும் திருவண்ணாமலை இரட்டையர்கள் என்பது அவர்களை பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். இப்போது இருவருமே பேசாமல் மௌனம் கடைபிடிக்கிறார்கள். இந்த இடைவெளியும் மௌனமும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, தெரியவும் வேண்டாம். ஆனால், இரட்டையர்களை அதே நெருக்கத்தோடு பார்த்துப் பரவசப்பட ஆசை."

    ReplyDelete
  2. சுஜாதா, எஸ். ரா, ஜெயமோகனுக்கு பிறகு மிகுந்த எழுத்து வல்லமையுடன் திகழும் உங்களை வாங்குகிறேன். அதுவும் கமலாதாஸ் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை, சிம்ப்லி அமேசிங்.

    ReplyDelete