Sunday, November 28, 2010

இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்குத் திரும்புதல்


இமாக்குலேட் கேம்யூஸ் என்ற ஸ்பானிய பெயரை, காயத்ரி கேம்யூஸ் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டு, தன் காதல் கணவனும் கவிஞனுமான ஆனந்த் ஸ்கரியாவுடன் இந்தியா முழுக்கச் சுற்றித் திரிந்து, இப்போது திருவண்ணாமலையில் கொஞ்சம் நிலம் வாங்கி, குடில் அமைத்து, மரம் வளர்த்து, செடி அரும்பிப் பூப்பூக்கும் தருணங்களைத் தனதாக்கிக் கொண்டு வாழும் காயத்ரி கேம்யூஸ் எனக்கு அறிமுகமானது ஓவியர் பி. கிருஷ்ணமூர்த்தி மூலம்தான்.

அவருடைய ஒரு ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைக்க யாரை அழைக்கலாம் என யோசித்த போது, எனக்கு அவரால் முன்மொழியப்பட்ட பெயர் காயத்ரி கேம்யூஸ். எப்போதும் புதியவைகளைத் தேடியடைய நாட்களைத் தள்ளிப் போடாத நான், அடுத்த பத்தாவது நிமிஷத்தில் ரமணாஸ்ரமத்திற்கு முன் நீண்டு செல்லும் அத்தெருவில் காயத்ரி-ஆனந்த் வீட்டு காம்பவுண்டுக்கு முன் நின்றேன்.
புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் நுனியில் இருந்தேன்.

வெற்றுடம்புடனும், நீண்டு தொங்கும் முடியுடனும், அதே அளவிற்கான தாடியுடனும் ஒரு புதிய மனிதனை நான் எதிர்கொண்டேன். அவர், அந்த வீட்டுத் தாழ்வாரத்தில் கால் நீட்டி உட்கார்ந்து புகைத்துக் கொண்டிருந்தார். உதடுகளில் பொருந்தியிருந்த பீடியிலிருந்து வந்து கொண்டிருந்தது பீடிப்புகையில்லை
என்பதை அறிய அதிக நேரம் தேவைப்படவில்லை.

‘நான் கிருஷ்ணமூர்த்தி சாரின் நண்பன்’

‘எந்த கிருஷ்ணமூர்த்தி?’

‘ஓவியர். பி. கிருஷ்ணமூர்த்தி’.

நிதானமாக நான் அந்த வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அறையெங்கும் வியாபித்திருந்த கேன்வாஸ்களுக்கிடையிலிருந்து கையில் எனக்கான ஒரு தேநீர்க் கோப்பையோடு வெளிவந்து கைகுலுக்கிய அந்த மனுஷி தான் இன்றளவும்

என் ஆத்மார்த்த ஸ்நேகிதி காயத்ரி கேம்யூஸ். காயத்ரியே ஒரு மோனலிசா ஓவியம் மாதிரியிருந்தார். கடந்துவிட்டது இருபது வருடங்கள்.இதனிடையே எத்தனை எத்தனை
அனுபவங்கள், உரையாடல்கள், தோல்விகள், துரோகங்கள், செழுமைகள், வீழ்ச்சிகள். எல்லாவற்றையும் உள்வாங்கி உதறிவிட்டு நட்பை மட்டுமே தனக்குள் தேக்கித் தினம் தினம் புதுப்புதுப் படைப்புகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் காயத்ரியின் ஓவியங்கள் முதல் பார்வையில் நம்மை ஏமாற்றக் கூடியவை. இதில் என்ன இருக்கு என்று ஏமாற்றும் அதன் ஆழம்.

இந்திய இளம் ஓவியர்களில் காயத்ரியின் இடம் பின்னுக்குத் தள்ள முடியாதது. அதற்காக அவர் கொடுத்த விலை மதிப்பிட முடியாதது. தன் எல்லா ஓவியங்களுக்குள்ளும் ஒளித்து வைத்திருப்பது இயற்கையின் ரகஸியங்களைத்தான்.

இடம் பெயர்ந்த மனிதர்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலைகள் இவைகளின் உருவங்களை வெவ்வேறு மனநிலைகளில் குழைக்கிறார். அதனதன் இடங்களிருந்து மாற்றிச் சீட்டுக் கட்டுகளைப் போல கலைத்துப் போடுகிறார். எப்படிப் போட்டாலும் இயற்கையின் மகோன்னதம் ஒளிரும் பேரழகு அவ்வோவியங்களில் பிரதிபலிக்கிறது. சூரியனை ஒரு அறைக்குள் அடைத்துவிட ஒருபோதும் முயன்றதில்லை. சூரியனை அதன் தொலைவில் இருந்தே
நமக்கு அதன் சூட்டோடும், ஒளியோடும்
உணர வைக்கிறார். இவ்வுலகின்
மனிதர்கள் உட்பட சகல ஜீவராசிகளுக்கும் விதிக்கப்பட்ட இடப்பெயர்வே காயத்ரியின் ஓவியங்களின் அடிநாதம். இந்த இடப்பெயர்வுக்குள்ளான மனிதர்கள், பறவைகள், வாழ்விடங்கள் மறுக்கப்பட்ட விலங்குகள், நீரின் போக்குகள், எல்லாமும் அவரின் தூரிகையின் வழியே கேன்வாஸ்களில் அடைக்கலமாகின்றன. இந்த இடப்பெயர்வு நம்மை இயற்கையிலிருந்து எத்தனை எத்தனை தூரத்திற்கு அப்பால் கொண்டுவந்து போட்டிருக்கிறது. எங்கே தொலைத்தோம் நம் பொறையாத்தம்மனையும், பச்சையம்மனையும்? நம் தேடுதலைப் போலவே காயத்ரியும் ஸ்பெயினில் தொலைத்த தன் பச்சை மாமாவை நம்மூர் பச்சையம்மன்களில் தரிசிக்கிறார். இந்த இரு சிறு தெய்வங்களும் சந்திக்கும் இடம் இயற்கைக்கு மட்டுமே சொந்தமானது. அதற்கு தேவஸ்தானமோ, கருங்கல் மதிலோ, மூன்று கால பூஜையோ தேவையில்லை. பெரும் மழைப்பொழிவையும், கவியும் பனியையும், உருக்கும் வெய்யிலையும் குடித்து வாழும் நம் மூதாதையர்தான் இங்கே பச்சையம்மனும் அங்கே பச்சை மாமாவும்.

வண்ணங்கள் குழைத்துத் தீட்டவும், சிற்பங்கள் செய்யவும், புகழ்பெற்ற ஓவியர்கள் குறித்தும் சிறுவர்களுக்குத் தன் அரைகுறைத் தமிழில் சொல்லித் தருகிறார். தன் படைப்பாளுமை இவ்விதம் கரைய, வருமானம் தரும் படைப்பாக்கங்கள் அவரது விரல்தீண்டலுக்காக ஒரு காவல்நாய் மாதிரி வாசலில் காத்து நிற்கும்.
காயத்ரியின் ஒரு புதிய கண்காட்சியைக் காண நானும் கோணங்கியும் போர்ட் கொச்சினுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். தேநீருக்குப் பதிலாக ரெட் ஒயின் கொடுத்துப் பார்வையாளர்கள் வரவேற்கப்பட்டது எங்கள் இருவருக்கும் தமிழ்நாட்டின் இலக்கிய கூட்டத்தின் எங்கள் இருவருக்கும் தமிழ்நாட்டு இலக்கிய கூட்டங்களின் ஓழுக்கப்பட்டியலை நீனைவூட்டியது.நினைவூட்டியது.

அன்றிரவு வீசிய பனிக்காற்றில், கடுங்குளிரில் படுத்திருந்த எங்கள்மீது ஒரு கம்பளியைப் போர்த்தி, கொசுவர்த்தி ஏற்றித் தூக்கத்தை அமைதிப்படுத்திய
காயத்ரி பற்றி அ
டுத்தநாள் காலை கோணங்கி சொன்னான்,

‘எந்த ஒரு வெள்ளைக்காரர்களுக்கும் கிட்டாத இந்திய மனம் வாய்க்கப்பெற்ற விநோத மனுஷி இவள். நம்மூர் மதினிமார்கள் மாதிரியே’

மிகவும் முக்கியமான இடம். பலருக்கும் வாய்க்காத அல்லது பலரும் கடந்து சென்றுவிட்ட இந்த இடம்தான் காயத்ரி என்ற மனுஷியைப் படைப்புகளை மீறி நேசிக்கவைக்கிறது.

டென்மார்க் ஸ்நேகிதி ஒருத்தியுடன் பலநாட்கள் நட்பாக இருந்துள்ளேன். எனது நண்பர் ஒருவர் சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் அவருக்கு விருந்து கொடுத்திருக்கிறார். நானும் பலமுறை எனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளேன். ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள வெளிநாட்டுக்காரர்களுக்கான உணவகம் ஒன்றில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை வரவேற்று காபி ஆர்டர் செய்தார். இறுதியில் அந்தக் காபிக்கான பில்லை என்னையே தரச் செய்தார். இத்தன்மையின் அதிர்விலிருந்து மீளப் பல நாட்களானது எனக்கு.

ஆனால் தனது தீவிரமான படைப்பாக்கத்திற்கு நடுவில் தன்னைக் காண வரும் நண்பர்களுக்கும், சுற்றியுள்ள குழந்தைகளுக்கும் தானே சமைத்து உபசரிக்கும் காயத்ரியின் தன்மை வேறு யாருக்கும் வாய்க்காதது.

காயத்ரியின் சமீபத்தியப் படைப்புகளில் தாங்கமுடியாத தனிமை திரும்பத் திரும்ப அழுத்தமாகத் தீட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பலநூறு மரத் தூர்களுக்கு மத்தியில் கட்டில் போட்டு தூங்கமுயலும் ஒரு மனித முகம் ஆயிரம் பக்க நாவலைவிடப் பெரும் தொந்தரவு தரக்கூடியது. எனக்கு அந்த ஓவியத்தை வீட்டில் மாட்ட முடியாது. அதில் அழுத்தும் தனிமை என்னைக் கொல்லும்.

மரத்தையும், பச்சையத்தையும் இழந்த பறவைகள், வளைந்த இரும்புக் கம்பிகளில் கூடுகட்ட முயலும் துயரம் மனதைப் பிசைகிறது. மரம் வளர்க்கப் போதிக்கப்படும் ஒரு நூறு உபதேசங்களை ரத்துசெய்து விட்டு இப்படத்தைப் போஸ்டராக்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் காட்சிப்படுத்தலாம்.

நேரடியான வண்ணங்களைத் தனது ஓவியங்களில் தொடர்ந்து மறுக்கிறார். காயத்ரியின் விரல்களால் ஏதோவொரு விகிதத்தில் குழைவுபெறும் கலவை நம்நினைவுகளில் ஏற்கனவே படிந்துள்ள வண்ணத்தை அழிக்கிறது.

இந்த மையம்தான் காயத்ரியின் படைப்பியக்கம். இந்த வெளியில்தான் ஒரு ஜிப்சி மாதிரி அவர் அலைந்து திரிவது. அல்லது இந்த இடப்பெயர்வைத் தாங்கமுடியாத ஒரு பெண் மனதின் பிரதிபலிப்புகள் தான் கேன்வாசில் வண்ணங்களாகப் பதிகிறது.
நான் சென்ற மாதம் என் ஸ்நேகிதியும், கவிஞருமான தமிழச்சி திருவண்ணாமலைக்கு வந்திருந்தபோது, அவருக்குப் பரிசளிக்க காயத்ரியின் ஓர் ஓவியத்தைத் தேர்ந்தெடுக்கலாமென என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவிடம் சொன்னபோது, ஒரு நிமிடமும் யோசிக்காமல் சம்மதித்தார். கலைஞர்களின் அருமையைத் தனக்குள் தேக்கி வைத்துள்ள நண்பர் அவர்.

ஒரு கவிதையைக் காட்சிப்படுத்தியிருந்தது மாதிரியான ஒரு சிறு ஓவியம், அப்பரிசுக்குத் தன்னைக் கோரியது. மறுக்க மனமின்றி அதைக் காயத்ரியிடம் கேட்டேன்.

‘எவ்வளவு பைசா தருவாங்க பவா?’

என்று தன் அரைகுறைத் தமிழில் கேட்ட விநாடி, நான் மெல்லத் தலை திருப்பி காயத்ரியின் முகத்தையே பார்த்தேன். இது காயத்ரியின் குரலே அல்ல.

இருபது வருடங்களுக்கு முன், தன் சாம்பல் நிறக் கேன்வாசிலிருந்து இறங்கி வந்த கள்ளம் கபடமற்ற அதே குழந்தையின் முகம்தான், இப்போதும் என் சிநேகிதி காயத்ரியின் முகம். முற்றிய தன் படைப்பை ஒரு நாளின் எந்நேரமும் தன் சக கலைஞர்களிடம் காட்டி மகிழும், கவிமனதை இன்றளவும் காப்பாற்றி வைத்திருக்கிறார்.

விலை மதிப்பிட முடியாதவைகள் தன் படைப்புகள் என்ற சிறு அகம்பாவம் எல்லாக் கலைஞர்களைப் போலவே காயத்ரிக்கும் உண்டு. காலைக் கவ்விப் பிடித்திழுக்கும் வெறிநாயின் கோரப் பற்களாய்த் தினவாழ்க்கை அவர்களையும் கவ்விக் கொண்டுள்ளது. ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி இயங்கும் கைகளையும் மறிக்கிறது அவரின் அன்றாடங்கள்.

அவரே வடிவமைத்து, பார்த்துப் பார்த்துக் கட்டிய ஒரு பெரும் குடில், கட்டி முடித்த பத்தாவது நாள் ஒரு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து முடிந்த சாம்பலின் முன், பெருகும் துக்கத்தை மறைக்க முயன்று அமைதியாய் நின்றேன்.

தன் சில ஓவியங்களும், பொருள்களும், கணினியும் கருகிய அந்த இடத்தில் நிலைகுலையாமல் நின்றிருந்த பிம்பம் இப்போதும் அகலாதது. தன் மனநிலைகளை ஓவியமாக வரைவதும், கேலரிகளுக்கு அதை விற்பதுமாகத் தன்னைச் சுருக்கி கொண்ட படைப்பாளி இல்லை காயத்ரி. தன் வீட்டிற்கருகில் வேரூன்றி இருந்த 30 வருட
பழமையான வேப்பமரத்தை
வெட்ட விடாமல் தடுத்த அவரின் மூர்க்கம் கண்டு பின்வாங்கிய திருவண்ணாம லையின்பலம்வாய்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை எனக்குத் தெரியும்.

நிலத்தை அழித்து ப்ளாட் போடுபவனுக்கு, நீரை மறித்து மணல் அள்ளுபவனுக்கு, காட்டை அழித்து மரம் கடத்துகிறவனுக்கு, குழந்தைகளின் பால்யம் சிதைத்து ஸ்கூல் நடத்துகிறவனுக்கு, உடல் வேட்கைக்காக ஆள் பிடிக்கிறவனுக்கு,
பெரும்பான்மை மக்களின் அறியாமையில் அரசியல் செய்கி
றவனுக்கெல்லாம் பணம் தொடர்ந்து குவிகிறது. அவர்களை வசதியான வாழ்
விற்கு அப்பாலும் எதையாவது தேடி அலையச் செய்கிறது. காயத்ரி போன்ற உன்னதங்களைத் தொடர்ந்து பழிவாங்குகிறது. ஆனால் உலகம் முழுக்கத் தாமதமாகவே என்றாலும் கலைஞர்கள்தான் ஜெயிக்கிறார்கள்.

காயத்ரியின் பயணம் மிக எளிமையானது. அது தன் வண்ணங்களின் வழியே இழந்த இயற்கையைச் சென்றடைய முயல்வது அல்லது இந்த விருப்பமற்ற இடப்பெயர்வை முற்றிலும் நிராகரிப்பது.