Saturday, February 27, 2016

ஜெயஸ்ரீயின் ‘கல்வீடு’


என் ஜெயஸ்ரீயின் ‘கல்வீடு’ மலையாளத்தில் கே.எஸ். வெங்கடாசலம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தேசாபிமானியில் வெளிவந்துள்ளது. இதன் தமிழ் வடிவம் மீண்டும். ஜெயஸ்ரீயின் கணவர் உத்திரகுமாரனுக்கு அவருடைய குடும்ப பாகமாக மூன்று லட்ச ரூபாய் கிடைத்தபோது, அதை வைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு 50 அடியுள்ள மனையும் கிடைக்காதபோது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.

நம் நிலத்தருகே 50 சென்ட் இடம் வாங்குவது, ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவதுஅது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன்மேல் கடக்கால் தோண்டப் பட்டபோது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடக்கால் தோண்டி அக்கருங்கல் துண்டுகளோடு செம்மண் கலந்து கரைத்துவிட்டு கடக்காலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.

என்  நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினு பாஸ்கரின் தம்பி பிஜூ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான, அதிகமாகக் கனவு காண்பவனும்  குறைவாகக் கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.

அவ்வீட்டிற்கான ஒரு பிளானைத் தந்துவிட்டு வழக்கமான எல்லாக் கலைஞர்களையும் போல  காணாமல்   போனான் பிஜூ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான், ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனைத் தற்செயலாகச் சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும், தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது, பத்து உடைகற்களைக் கொண்டு சீத்தாப்பள்ளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடி, அவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.

அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்கள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைகூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும், மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கருங்கற்தூண்கள் தூக்கி நிறுத்தப்பட்டபோது அனைவரும் பரவச மனநிலையை அடைந்தோம்.

அவ்வீட்டின் கட்டுமானத்தை மூன்றாகப் பகுத்துக் கொண்டோம். முதலில் கறுப்பும், நீலமும் கலந்த கருங்கற்களோடு சிகப்புக் கருங்கற்களை சேர்க்கும்போது அச்சுவர் மேலும் அழகடையும். அதைத் தேடுவது. அதையும் அதன் சுற்றுப்புறங்களிலேயே சேகரிப்பது. அதிக அலைச்சலின்றி, அவ்வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டரில் தென்மாத்தூர் ஏரிக்கரைக்கருகில் ஏழுமலை என்பவர் தோண்டி போட்டிருந்ததணைத்தும் சிகப்பு நிறமுள்ள பாறாங்கற்கள்.

நானும் ஜெயஸ்ரீயும் ஒரு மாலையில் அதைக் கண்டடைந்தபோது குதூகலித்தோம். அதன் ஒரு சிறுதுண்டை ஒரு குழந்தையை ஏந்துவதுபோல ஜெயஸ்ரீ கையில் ஏந்திக் கொண்டார்கள்.

வீட்டைக் கட்டப் போகும் மாதுவிடம் அதைக் காண்பித்தபோதுஇதான் சார், இதான் சார்என அதை ஆமோதித்தார்.

எனக்கு இதனூடே சுத்தக் கறுப்பு நிறத்திலான கற்களையும் சேர்க்க வேண்டுமென ஆசையிருந்தது. மரபான பலர்கறுப்புக் கற்களை வீட்டிற்குப் பயன்படுத்தக்கூடாதுஎனத் தடுத்ததை, ஒரு சொல்லில் நிராகரித்தேன். இக்கறுப்புக் கற்களின் பாலீஷ் செய்யப்பட்ட வடிவம்தான் கிரானைட் கற்கள். அதை வீட்டிற்கு, அடுப்புத்திட்டிற்கு என பயன்படுத்தவில்லையா என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

ஆக, இப்போது எங்கள் முன் நீலம், சிகப்பு, கறுப்பு ஆகிய மூன்று நிறங்களிலான உடைகற்கள் குவிய ஆரம்பித்தன. எனக்கு மட்டும் இன்னும் ஏதோ குறைவது போலிருந்தது. இன்னொரு நிறம் தேவைப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக பூமியில் புதைந்து கிடந்த பாறைகளை ஜே.சி.பியின் மூலம் தோண்டியெடுத்தபோது அதன் மேற்புறம் முழுவதும் அடர் மஞ்சள் நிறத்தில் உறுதிப்பட்டிருந்தது. ஒரு பக்கம் நீலமும், இன்னொருபுறம் அடர்மஞ்சளிலான கல்லும் சுலபமாகக் கிடைத்தன.

இப்போது கட்டுமானத்தைத் துவங்கினோம். மாது அநியாயத்திற்கு இருமடங்கு சம்பளம் கேட்டார். என் ஆர்வம் அவரை மட்டும் பணமாக பார்க்க வைத்து கட்டுமானத் துவக்கம் தள்ளிப் போய்விடக் கூடாதென்பதற்காக அனைத்திற்கும் சம்மதித்தேன்.

எங்கள் ஊரில் ஒரு மேஸ்திரிக்கு ஒருநாள் சம்பளம் 500/- ரூபாய்தான். மாது 1000/- கேட்டார். உதவியாளுக்கு முன்னூறுக்கு பதில் எழுநூறு கேட்டார். உள்மனதில் ஒரு கணக்குப் போட்டேன். வித்தையை உள்ளூர்க்காரர்கள் கற்றுக் கொள்வதற்கான தட்சணை இது. பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டேன். என் சம்மதங்கள் மாதுவுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் உதவியாட்கள் அனைவருக்கும் மூன்றுவேளையும் சோறு போடுவதாகச் சொன்னேன். அவ்வார்த்தை மாதுவை ஒரு சிறு குழந்தையாக்கி என் உள்ளங்கை கதகதப்பிற்குள் கொண்டு வந்தது.

எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அற்புதமான காலையில் தமிழின் மிக முக்கியக் கவிஞன் விக்ரமாதித்யன் முதல் கருங்கல்லைத் தூக்க முடியாமல் தூக்கி சனிமூலையில் வைக்க, எங்கள் எல்லோரின் பெருங்கனவு ஒன்று ஊழித்தீபோலப் பெருக ஆரம்பித்தது.

பத்துபேர் சேர்ந்து பணிபுரியும் இடத்தில் நிகழ இருக்கும் கருத்து மோதல்கள், உடல் சிராய்ப்புகள், தடித்த வார்த்தைகள், மனித ஈகோ எல்லாவற்றையும் நான் நன்கறிந்திருந்தேன். ஒவ்வொரு நாளும் ஈரமான வார்த்தைகளால், வாஞ்சையான செயல்பாட்டால் கல்லின்மீது படியும் சிமெண்ட்டை அவர்கள் துடைப்பது போலவே நானும் அவர்களறியாமல் துடைத்துக் கொண்டே போனேன். ஆனால் இது அரூபமானது.

உள்ளூர் மேஸ்திரிகள் இரண்டு மூன்றுபேரை மாதுவுக்கு உதவியாளர்களாய்ச் சேர்த்துவிட்டு என் எதிர்காலத் திட்டத்தைத் துவக்கினேன். நான் எதிர்பார்த்தது போலவே மாதுவைவிட வேகமாக காமராஜூம், குமாரசாமியும் கருங்கற்களைக் கைக்கொண்டார்கள்.

கட்டிடம் வளர வளர நாங்களனைவரும் அதனுள் அமிழ்ந்து போனோம். எங்கள் தலைகளைத் தாண்டி அது உயர்ந்திருந்தது. எங்கள் எல்லோரையும் கலவரப்படுத்திய ஜன்னல், வாசற்படிகளுக்கு, சிலாப் எப்படிப் போடுவது என்ற கேள்வி ஒரு குட்டி பிசாசைப் போல அவ்வீட்டின் முன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டது. எல்லோரும் வேலை முடித்து போய்விட்ட பின் நான் மட்டும் அக்கட்டிடப் பரப்பினுள் கையில் ஒரு சிகரெட்டோடு அலைந்து கொண்டிருந்தேன். தூரத்திலிருந்து அப்பிசாசு என் தோல்வியை எதிர் நோக்கிக் காத்திருந்தது. முடிவை உள்மனம் எட்டியபோது எதிரிலிருந்த ஒரு கட்டுக்கல்லை வன்மத்தோடு காலால் உதைத்தேன். அப்பிசாசு இடமகன்றது.
அன்றிரவு ஜெயஸ்ரீயைத் தொலைபேசியிலழைத்து காலை ஆறுமணிக்குத் தயாராக இருக்கும் படியும், ஓரிடத்திற்குப் போக வேண்டுமென்றும் மட்டும் சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

அடுத்தநாள் காலையின் பேரழகை முந்திக் கொண்டு நாங்களிருவரும் அடியண்ணாமலை கிராமத்தின், யாரையும் பயமுறுத்தும் அந்த  கல்குவாரியின் முன் நின்றோம்.

ஆண்டாண்டு காலமாய் அடியண்ணாமலைப் பாறைகளில் நெருப்பிட்டு கொளுத்தி பாளம்பாளமாகப் பலகைக் கற்களை வெட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுத்த திரேகங்களோடு அப்பாறைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.

நான் ஆறு ஜன்னல், இரண்டு வாசற்படிகளுக்கு நாலடி வீதம் பலகைக் கற்கள் வேண்டுமெனக் கேட்டேன். ஜெயஸ்ரீயின் முகத்தைக் கவனித்தேன். திகைப்பும், ஆனந்தமும், முடிவும் அறிந்த அதன் முக பாவனைகளைக் கொண்டுவர எழுத்திற்கு வலுவில்லை. கேமராக்கள் முயலலாம்.

இத்தனை அழகானதொரு கல்வீட்டிற்கு சிமெண்ட் கான்க்ரீட் சிலாப்புகள் பொருத்தமற்றவை. அதுவும் கருங்கல்லாலேயே என்ற என் தீர்மானத்தின் ஆரம்பம்தான் இந்த அடியண்ணாமலையின் பலகைக் கல்குவாரி.

இரண்டாம் நாள் காலை மாட்டு வண்டிகளில் இரண்டிரண்டு கற்களாக அவ்வீட்டின் முன் வந்து அப்பலகைக் கற்கள் இறங்கின, வாழப்போகும் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள்களின் குதூகலத்தோடு.

வண்டிமாடுகளைத் திருப்பியனுப்பிவிட்டு நானும் ஷைலுவும் இதை எப்படி இவ்வளவு உயரமுள்ள கட்டிடத்தின் மேலேற்றுவது என விவாதிக்க ஆரம்பித்தோம். என் நினைவில் எப்போதோ எங்கோ இதைவிடப் பெரிய பாறாங்கல்லை அநாவசியமாகத் தூக்கித் திரிந்த ஒரு கிரேன் நிழலாடியது.

அடுத்த அரைமணி நேரத்தில் அக்கிரேன் அவ்வீட்டின் முன் நின்றது. அதற்குள் காமராஜையும் குமாரசாமியையும் வரவழைத்திருந்தேன்.

எந்த விவாதமும் வேண்டாம். செயல்படுத்துவோம் என முதல் கல்லை கிரேனில் மாட்டி அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு காமராஜ் நின்று கொள்ள, ஒரு வித்தை மாதிரி அக்கல் வானவெளியில் அலைந்து அக்கட்டிட ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து கொண்டது. அதன் மீதேறி நின்று காமராஜ் கைத்தட்டி குதூகலித்தது இன்னும் நினைவில் அகலாதது.

திரும்பிப் பார்த்தால் பக்கத்தூர் ஜனங்கள் பாதிக்கும் மேல் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தார்கள். நான் உள்ளூர பெருமிதத்திலிருந்தேன். மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் எல்லாப் பலகைக் கற்களும் அதனதன் இடத்தில் அம்சமாக உட்கார்ந்து கொண்டன. மனித உடலால் சாத்தியமற்ற ஒன்றை, அவனால் வடிவமைக்கப்பட்ட இயத்திரம் ஒரு அடிமையைப் போல நிறைவேற்றித் தந்துவிட்டது. ஸ்லாபுக்கும் மேலே ஆறுவரிகள். ஆறு நாட்களில் நிறைவடைந்தன.

அடுத்து வீடுகட்டும் ஒவ்வொருவரின் பெருங்கனவான கான்க்ரீட். அது நிறைவடைந்துவிட்டால் பாதிவீடு முடிந்துவிடும். எதுவும் எதிர்ப்பார்ப்பில்லையெனில் அப்படியே அடுப்பு பற்ற வைக்கலாம். கான்க்ரீட் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். நண்பர்களின், உடன் பணிபுரிபவர்களின் நகைகளும் வளையல்களும் அடகுக் கடைகளுக்குப் போய் ஜல்லிகளாகவும், மணலாகவும் சிமெண்டாகவும் குவிந்தன.

கான்க்ரீட்டுக்கான நாளாக ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்த்தெடுத்துக் கொண்டோம். சனிக்கிழமை இரவே எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு எங்கள் நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போய்ச் சேர்ந்தோம்.

வம்சி அப்போது சிவாஜிகணேசன் படங்களாகப் பார்த்துத் தீர்த்துக் கொண்டிருந்தான். கையோடுவசந்த மாளிகைகொண்டு வந்திருந்தான். இரவு பத்து மணிக்கு மேல் அப்படத்தைப் பார்க்கத் துவங்கினோம்.

யாருக்காக? இது யாருக்காகஎன கணேசன் அந்தக் கண்ணாடி மாளிகையின் முன் நின்று சுழன்று, சுழன்று நடிக்கும்போது தாங்கமுடியாத ஏதோ ஒன்று எங்களை அழுத்த, அப்படியே அப்படத்தை அணைத்துவிட்டு வெளியேறினோம். தென்னை மரத்தின் ஓலைகளின் சப்தம் அலாதியாயிருந்தது. அங்கிருந்து நடந்து நாளைக் காலை கான்க்ரீட் போடப் போகும் ஜெயஸ்ரீயின் வீட்டின் முன் நின்றோம்.

அந்த நள்ளிரவில் சற்றுமுன்தான் கம்பி கட்டி முடித்து தொழிலாளர்கள் இறங்கியிருந்தார்கள். கட்டிடத்தின் மேலேறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிலுமிருந்ததுஒரு முடிவுக்கு வருமுன்பே வம்சியும், மானசியும் சுகானாவும் ஹரியும் எதன் வழியோ அக்கட்டிடத்தின் மேலேறி அவர்களின் உலகிற்கு எங்களை அழைத்தார்கள். வளைய முடியாத, ஏற முடியாத உடல் வளர்ந்திருந்த எங்கள் இயலாமை வெட்கித் தலைகுனிந்தது.

எப்படியோ ஒவ்வொருவராய் மூச்சு வாங்க மூச்சு வாங்க ஏறினோம். அக்கட்டிட உயரத்தில் நின்று அந்த அகாலத்தில் மலையை நோக்கினோம். மலை பாதி வரைந்து முடிந்த ஒரு யானையைப் போல வெகுதூரத்தில் படுத்துக் கிடந்தது. இன்னும் மூன்று திசைகளில் திப்பக்காட்டின் நீட்சி தெரிந்தது. வெள்ளி நட்சத்திரம் ஒன்று எங்கள் தலைகளுக்கு மேல் நின்று எங்கள் மேல் வெளிச்சம் உமிழ்ந்தது.

கட்டி முடிக்கப்பட்ட கம்பிகளின் மேலேயே படுத்துக் கொள்ளலாமாவென ஒரு கணம் யோசித்தோம். படுத்திருக்கலாம். முடியவில்லை. ஆனால் அதன்பிறகு ஒருவரும் தூங்கவில்லை. சிவாஜிகணேசன் மீண்டும் மீண்டும் யாருக்காக? யாருக்காக வென எங்கள் தூக்கங்களைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்.

காலை ஆறு மணிக்குள் ஒரு டெம்போவில் நாற்பது ஐம்பது பேர் வந்திறங்கினார்கள். பெரும்பாலும் உரமேறிய பெண்கள். கான்க்ரீட் பாலு என்ற அந்த முப்பது வயதுக்கும் உட்பட்ட பையன் தன் ட்ரேட்மார்க் சிரிப்போடு என்னருகே வந்து,

ஆரம்பிச்சிடலாமாண்ணே?” என்றான்.

நான் பரவசமானதொரு மனநிலையிலிருந்தேன். ஷைலஜா அவர்கள் அனைவருக்கும் மதிய உணவின் ஆயத்தத்தில் அலைந்து கொண்டிருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் முதல் தட்டு ஜல்லிக் கலவை தயாராகி கட்டிடத்தின் கிழக்கு மூலையில் கொட்டப்பட்டபோது அவர்கள் அனைவரும் ஆரவாரக் கூச்சலிட்டார்கள்.

அது பற்றிக் கொண்டது. கல் நெரியும் சப்தமும், மணல் குழையும் நேர்த்தியும், சிமெண்ட் சேரும் அழகும், அவர்கள் கொண்டு வந்திருந்த கான்க்ரீட் இயந்திரத்தின் பெரும் சப்தமும் மனித உழைப்பின் மகத்துவத்தை எல்லோருக்குமாக நிரூபித்துக் கொண்டிருந்தது.

அது தொடர்ச்சி. இடையில் ஏற்பட்ட தொய்வு ஃபேன்ட்டா, 7 அப்பால் நிரப்பிக் கொள்ளப்பட்டது. பேச்சு... பேச்சு... அவர்களுக்குள்ளான ஆசைகள், வாழ்வுகள், கணவன்கள், கள்ளக்காதலன்கள், நிறைவேறாமைகள். எல்லாமும் நாம் கெட்டவார்த்தைகளெனப் பிரித்து வைத்திருக்கும் சொற்களைக் கொண்டே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். இடையிடையே சிரிப்பும், கும்மாளமும், கலவையை அள்ளி வீசிக் கொள்வதும், இளம்பெண்களின் மாரில் அதுபட்டுத் தெறிக்கும்போது ஆராவாரமிடும் இளம் பையன்களும்.

சே, இவர்கள் வாழ்வு எவ்வளவு அழகானது?

எந்தப் புகாருமற்றது!

எல்லாம் முடிந்து மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் எங்கள் கிணற்றடி புங்கமரத்திற்குச் சாப்பிட வந்தார்கள். வீழ்த்தப்பட்ட வாழைமரங்களைப் போலிருந்தார்கள். உடல் களைப்பையும் அசதியையும் மீறி, வேலை முடிந்த திருப்தி அந்த உழைப்பாளி மக்களின் முகங்களில் படிந்திருந்தது. நாங்கள் தரப் போகும் இருநூறு ரூபாய் கூலிக்கான உழைப்பில்லை அது. ஒரு எளிய குடும்பத்துக்கான வாழ்விடத்தைத் தங்கள் கரங்களால் நிறைவு செய்த சக மனிதத் தோழமை.

மணக்க மணக்க கதம்ப சாம்பாரில் ஆரம்பித்து, ஷைலஜாவின் பிரத்யேக சேமியா பாயசத்தில் நிறைவுற்ற மதிய உணவு அது. அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த டிபன் கேரியரிலும், பிளாஸ்டிக் கேரிபேக்குகளிலும் மீதியை தங்கள் குஞ்சுகளுக்காகச் சேகரித்துக் கொண்டார்கள்.

இருபத்தியொரு நாள் இடைவெளி எங்களை மேலும் நிதானப்படுத்தியது. இழைத்த தவறுகள், பட்ட அவசரங்கள். எல்லாவற்றையும் திருத்தியது. கான்க்ரீட்டின் மேல் கடலென நீர் ததும்பி நின்றது. ததும்பலில் நனைந்த கருங்கற்கள் மேலும் நிறம்காட்டி அழகூட்டியது.

எனக்கொரு மேற்பார்வையாளர் தேவைப்பட்டார். என் அன்றாட அலுவல் பரபரப்பு அதைக் கோரியது. ஜெயஸ்ரீயுடன் வேலை பார்க்கும் ஃபிலோமினா டீச்சரின் மாமா என்றறியப்பட்ட ராஜா அப்பணிக்கு வந்து சேர்ந்தார். அவர் மரபான அனுபவம் என்ற மணல் கயிற்றால் எங்களைக் கட்டியிழுக்க, பட்ட அனைத்துமே உதிர்ந்து போயின. நாங்கள் நவீனத்திலும் லாரிபெக்கர் என்ற மேதையின் நிழலிலும், அவரை வழி நடத்திய காந்தியின் சொல்லிலும் உறுதிப்பட்டிருந்தோம்.

மீண்டும் கட்டிடத்தின் இறுதி வேலைகளின்போது காமராஜ் தன் சகாக்களோடு காணாமல் போயிருந்தான். இடையிடையே நாங்கள் மாற்றிய மேஸ்திரிகள், சீத்தாப்பள்ளிப் பழ வடிவ அடுக்கலுக்குப் பயந்து ஓரிரு நாட்களில் வழக்கமான செங்கல் வேலைகளுக்குப்  போனார்கள். ஆனால் எதன் பொருட்டும் அப்பணி நிற்காமல் குமாரசாமி என்ற மேஸ்திரி அப்புது வடிவத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தான்.

கருங்கல் தூண் நின்று, விசாலமான அதன் தாழ்வாரமும், என் நண்பர் அருண் (மைசூர்) பிரத்யேமாகத் தயாரித்து அனுப்பிய தேக்கு ஊஞ்சலும் அவ்வீட்டின் முன்புறத்தை பிரமிக்க வைத்தன. மாடியின் போர்டிகோவைப் பச்சை மூங்கிலால் வடிவமைக்க நினைத்து, நாள்தாங்காமையை யோசித்து, சிமெண்ட்டால் மூங்கிலைப் போலப் பிரதியெடுத்தோம். எல்லாம் கச்சிதமாக நிறைந்த ஒரு இரவில் அடைமழை வந்தது.

கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டைத் திறப்பதென்றும், எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக, என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ்ச் செல்வன், கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.

எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின், எஸ்.கே.பி. கருணா. முத்துகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர், வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.

புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டி, ஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோஷத்தோடு கத்தரிக்கோலைக் கையில் எடுக்க, நாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்,

காணிநிலம் வேண்டும் - பராசக்தி

காணிநிலம் வேண்டும்    என

தன் கம்பீரமான குரலில் கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடத் துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்துயரமும், கண்ணீரும், பெருமிதமுமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக்காரத் தம்பிகள் வேலு, ஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புதக் கணங்கள் அவை.

அவ்வீட்டின் மொட்டைமாடியில் பெரிய ஸ்கிரீன் ஒன்று வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிலிருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம்போடப் போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்து வைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை, ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுவயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார்.

இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும், தமிழின் நவீன இலக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும், அன்று காலை கோணங்கியும், அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது.

எல்லோர் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறு போட்டோம். சுடுசோறு, ரத்தப்பொறியல், மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல், கதம்பம் (போட்டிநுரையீரல், ஈரல், கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்றுத் தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்
.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பிப்  பார்த்தேன்.

ஒரு கனவு முற்றுப் பெற்றது போலவும், ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக்கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.   
Friday, February 12, 2016

பாலு மகேந்திரா: உடல்மொழியோடு வாழும் கலைஞன்


வருடம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். தன்னை விமர்சித்து திரைப்படங்களில் காட்சிகள் வருகிறது என்பதால் திரைப்பட தணிக்கை மசோதாவை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெரியார் திடலில் ஒட்டுமொத்த கலைஞர்களும் படைப்பாளிகளும் சங்கமித்திருந்த தினம் அது. வெளிர்நீலநிறத்தில் ஜீன்ஸ் பேண்டும், வெள்ளை சட்டையும், தன் ட்ரேட் மார்க் தொப்பியுடனும் ஒரு பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார் பாலுமகேந்திரா. எல்லோரையும்போல அக்கூட்டத்தில் ஒதுங்கி நின்று என் ஆதர்சன கலைஞனை தரிசித்தேன். தேர்ந்தெடுத்துக் கொண்ட மிகுந்த நிதானத்துடன் மேடையேறினார். தன் கவித்துவமான உரையை இப்படித் துவங்கினார்.

கேமராவை என் உயிராக மதிப்பவன் நான். அதன் மீது ஒரு ஆக்டோபஸ் அடைத்துக் கொண்டு நிற்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.” 

இச்சொற்கள் மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது. அங்கிருந்து வெளியேறி சாலையோரம் நெடுநேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஊர் திரும்பிய பிறகும் நினைவுகள் அந்த அம்பாசிடர் காரையும், எழுந்தடங்கிய கரவொலியையும், கேமராவை வழி மறிந்து நிற்கும் அந்த ஆக்டோபஸ் படமும் என்னை சுழன்றடித்துக் கொண்டிருந்தன.


மனம், பாலுமகேந்திரா எனும் அப்படைப்பாளியை ஒரு முறை தனிமையில் சந்திக்கக் கோரியது. உடனே கனவு மெய்ப்பட்டது. நானும், நண்பர் பிரளயனும் அருணாசலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு தனியறையில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் உரையாடின வாய்ப்பு அது. கருத்தியல் ரீதியாக தவறாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டிருந்தது. "எப்படி பிரளயன் இப்படி நடக்குது? ஒரு பிரச்சினையை சரியா, டீல் பண்ண தெரியலைன்னா அமைதியா இருந்துடணும். தப்பா எடுக்கக்கூடாது. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினர் மீது நடந்துவதற்கும் பெயர் தாக்குதல். கலவரம் அல்ல. அது கலவரம்ன்னு நாம சொன்னா நாம தப்பு பண்றோம். இதை சரியா அனலைஸ் பண்ணாம ஒரு படைப்பை அவசர அவசரமா உருவாக்கினா அது அறியாமை. அந்த நிகழ்வை பணமாக்குற அவசரம். இதை உங்கள மாதிரி ஆட்களே சரியா புரிஞ்சுக்காம பாராட்டுவிழா நடந்தறீங்க! என் நம்பிக்கைகள் சரிய ஆரம்பிக்குது".

சமூகத்தின் மீது பற்றுள்ள ஒரு கலைஞனின் ஆவேச உஷ்ணம் அந்த அறைமுழுக்க பரவியிருந்தது. அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் நான் வெளியேற முயன்றேன். அவர் என்னைந் தடுத்து "எங்க போறீங்க? உட்காருங்க என்றார்". "அது ஏதோ ஒரு கிளையில நேர்ந்த தப்பு சார்" பிரளயனின் குரலில் நடுக்கமிருந்தது.

"எப்படி பிரளயன் இப்படியெல்லாம் சொல்றீங்க. இதை நான் செய்யல. என் கைதான் செய்யததுன்னு. அது உங்க உறுப்பு. சரியில்லைனா வெட்டிபோட்டுடுவிங்களா?"

அறையெங்கும் உஷ்ணம் தகித்தது. எங்கள் மௌனத்தால் அதை குறைக்க முயன்று தோற்றோம். அச்சந்திப்புதான் பாலுமகேந்திரா எனும் கலைஞனை எனக்குள் முழுவதுமாய் கொண்டுவந்தது.

அமைதி ததும்பும் அவர் முகம் எப்போதும் எனக்கு உஷ்ணத்தையும், ரௌத்தரத்தையுமே உணர வைக்கும்.
அழியாத கோலங்களில் ஆரம்பித்து அது ஒரு கனா காலம் வரை ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொன்றாய் கால இடைவெளிகளில் பார்க்க ஆரம்பித்தேன். உச்சத்தை தொட்டவைகள், தொடமுயன்றவைகள், படைப்பாக கைக்கூடாதவைகள், எதற்காகவோ சமரசமானவைகள் என்று எல்லா உணர்வுகளையும் திரைவழியே ஒரு இருட்டறையிலிருந்தே ஸ்வீகரிக்க முடிந்தது.

காலத்தின் ஏதோ ஒரு புள்ளி எங்கள் இருவரின் கரங்களை இறுக பிணைத்திருந்தது. வம்சி புக்ஸ்சின் முதல் புத்தகமான திலகவதி குறுநாவல்களை வெளியிட அவரையும், பெற்றுக் கொள்ள பி.சி.ஸ்ரீராமையும் அழைத்திருந்தோம். இருவருமே மொழியை கைகளின் வழியே கடத்த கற்றிருந்தார்கள். அன்று மதியம் எங்கள் வீட்டில் நடந்த விருந்து இருவரையும் உற்சாக மனநிலைக்கு கொண்டு போனது. மதிய உணவிற்கும், மாலை நிகழ்விற்குமான இடைவெளி நான்கு மணிநேரம்.

என் நண்பர் எஸ்.கே.பி.கருணா அவருடைய கல்லூரி கலையரங்கிற்கு 300 பேரை வரவழைத்தார். பி.சி.யும் அவரும் அப்போதுதான் முகிழ்ந்த ஒரு பூவை கையிலேந்தி ஓடும் சிறுமியைப் போல கையிலிருந்த தன் இரு படங்களோடு அக்கலையரங்கிற்கு விரைந்த அந்த இரு கலைஞர்களின் கால்களின் வேகத்தை என் வீட்டு மொட்டை மாடியில் நின்று அளவெடுக்க முயன்றேன்.

அந்நிகழ்வு எங்கள் இருவருக்குமிடையேயிருந்த எல்லாவற்றையும் துடைந்தெறிந்து தூய்மையாக்கியது.

அழியாத கோலத்தில் ஷோபா டீச்சரின் அழகை, மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் குதூகலத்தை, ‘யாத்ராவில்  மம்முட்டி, ஷோபனாவின் காதலை, ‘வீடுதிரைப்படத்தில் அர்ச்சனாவின் சோகத்தை, அது ஒரு கனா காலத்தில் தனுஷின் தவிப்பை, என்று ஒவ்வொரு சந்திப்பிலும் அவரிடமிருந்து ஒவ்வொன்றை நான் அடைந்த தருணங்கள் இன்றளவும் என்னால் அடைகாக்கப் படுபவைகள்.

தொலைபேசியில் நிகழ்ந்த ஒரு சிறு உரையாடலின் முடிவில் அவர் எங்களுடன் திருவண்ணாமலையில் இருந்தார். மலைசுற்றும் பாதையின் விளிம்பில் உள்ள ஒரு விடுதியில், ஜன்னலை திறக்காமலேயே மலை தெரியும் 101ஆம் அறையை அவர் தேர்ந்தெடுத்தார்."
.கே. பவா, நான் குறைந்தது பத்து நாட்கள் இங்கிருப்பேன். ஒவ்வொரு நாளும் காலை முதல் எனக்கு இத்தனிமையை தாங்கி கொள்ளும் வரை எழுதுவேன். முடியாதபோது காரெடுத்து வம்சிக்கு வருவேன். எப்போவெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்போதெல்லாம் ஷைலுவிடம் சொல்லி சாப்பாடு வேண்டும் என்பேன். ஆனால் ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் இருவர் மட்டும் தனியே உட்கார்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் பேசியாக வேண்டும். இதுதான் என் திட்டம்".

எல்லா பருவத்திலும் ஆதர்ஷமாக நினைக்கும் தன் ஆளுமை உங்கள் எதிரே நின்று கைபிணைத்து இப்படி சொன்னால் நீங்கள் என்னவாய் ஆவீர்கள். நானும் அவ்விதமேயானேன்.

திட்டமிட்ட முதல்நாளே மாலை ஐந்துமணிக்கெல்லாம் வம்சி புக்ஸ் ஸ்டாலுக்கு வந்து கல்லாவிற்கு முன்னிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எப்போதும் உடனிருக்கும் தொப்பியை தவிர்ந்து, மப்ளரில் ஒரு மாதிரி தலைப்பாகைக் கட்டி கழுத்தில் ஒரு சுற்று சுற்றியிருந்தார். அலுவலகத்திலிருந்து வம்சிக்கு போன எனக்கே ஒரு நிமிடம் அடையாளம் தெரியவில்லை. நாலைந்து வாசகர்கள் புத்தகங்கள் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். கடைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் திகைத்து மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

"
டேய் பாலுமகேந்திரா சார்டா. வம்சில உட்கார்ந்து கையெழுத்து போடறாரு, சீக்கிரம் வா, நல்ல கேமரா கெடைச்சா கூடவே எடுத்துகிட்டு வா" போன்றக் குரல்கள் கடைக்கு வெளியே சகஜமாக ஒளித்தன.

நான் அவரை ஏறெடுத்தேன். சலனமற்றிருந்தது அவர் முகம். பெரும் சந்தோஷத்திலிருந்தார். நீண்ட நேரம் கடையிலிருந்து விட்டு, “பவா ரூமுக்கு போலாமா?” என்றார்.

இரவு எட்டுமணிக்கு நானும் அவரும் அந்த 101ஆம் எண் அறையின் பால்கனியில் தனித்திருந்தோம். மலை எங்களிருவரின் முன் பிரமாண்டமான யானையைப்போல படுத்திருந்தது.

நீண்ட நேரம் மௌனமாயிருந்தோம். யார் எதிலிருந்து துவங்குவதென ஒரு ஆரம்ப சொல்லிற்கான அவஸ்தை அது.

அவர்தான் ஆரம்பித்தார்.

ஜெயமோகனோட அக்னிக்காற்று படிச்சிருக்கீங்களா பவா?”

படிச்சிட்டேன் சார்.”

அதை யீறீவீனீ பண்ணலான்னு இருந்தேன்.”

கதையின் சுருங்கிய வடிவத்தை என் முன்னே வைத்தார். பேச்சு எங்கெங்கோ சுழன்றடித்தது. சித்திக்கும் மகனுக்குமான பாலியல் உறவு அதன் மையம். ஒரு தமிழ்மணம் அதன் திரைவடிவை ஏற்காது என்பது என் வாதம். பேச்சறுந்து பாலாவுக்கு வந்து நின்றது.

அவனுக்கு என் மீது இருப்பது அன்புன்னு சொல்ல முடியல பவா, அது வெறி. தாங்கமுடியாத வெறி. அது எப்போ எப்படி வெளிப்படுன்று சொல்ல முடியாது. அநேகமாக பாலா அவன் அப்பாவுக்கு அப்புறம் என்னிடம்தான் நிறைய முரண்பட்டான். அது முற்ற முற்ற அதிலிருந்து கொட்டும் அன்பின் கனிகளை கையிலேந்திக் கொள்ளலாம் நாம் எல்லோருமே.”கவிதைவரிகளைத் தாண்டிய இவ்வுரையாடளால் நான் முற்றிலும் கரைந்திருந்தேன். விடைபெற்று அங்கிருந்து தன்னந்தனியே தூறும் மழைத்துளிகளை முகத்திலேற்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். வழிநெடுக இந்த இரு கலைஞர்களின் ஆகிருதிகள் என்னை வெதுவெதுப்பாக்கி கொண்டேயிருந்தன.

கேரளாவில் ஓர் இளம் பெண் நிருபர் பாலுமகேந்திரா சாரை மிக நீண்ட நேர்காணல் எடுத்திருந்தார். நானறிந்து அவர் மன ஆழத்திற்கு சென்று அவரை முற்றிலும் வெளிக்கொண்டு வந்த நேர்காணல் அதுதான். அவரை கோபப்படுத்த, அவரை துக்கத்துள்ளாக்க, அவரை நிலைகுலைய வைக்கவென்று அப்பெண் பலநாட்கள் பயிற்சியும், சில நாட்கள் ஒத்திகையும் மேற் கொண்டிருக்க வேண்டும்.

ஷோபாவின் தற்கொலையில் உங்களுக்கு பங்குகிருக்குன்னு சொல்றாங்களே?”

நீண்ட மொளனம். அப்படியே உட்கார்ந்திருந்திறார். இதுவரை யாரிடமுமே பகிர்ந்து கொள்ளாத்தை உங்கிட்ட பகிர்ந்துக்கிறேன்மா.

ஷோபா என்னை விட வயசுல ரொம்ப சின்னவ. கிட்டதட்ட என் மக வயசு.”

அவளுக்கு என்கிட்ட ஒரு வெறித்தனமான காதல் இருந்தது. பல முறை நான் அதை கண்டித்திருக்கிறேன். அதில் நான் வெற்றியடைஞ்சிரலாம்னு நம்பினேன். அப்போதான் அப்படி ஒரு துர் சம்பவம் நடந்துவிட்டது. உயிரற்ற அவள் உடல்முன் நான் நின்றபோது அடைந்த நடுக்கம், இன்னமும் அப்படியே கிடக்கிறது...”

ஒரு கலைஞனா என்னால என்ன பண்ண முடியும், எப்பவுமோ சொல்லாததை இப்போ சொல்றேன்.

ஷோபாதான் மூன்றாம்பிறை ஸ்ரீதேவி. இப்போ எல்லாமுமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அந்நேர்காணலை ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்தாள். பல இடங்களில் அவளால் அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே கிடந்ததை கவனித்திருக்கிறேன். ஒரு மனிதனை மீடியா வழியே அறிவதற்கும் அருகிலிருந்து அறிவதற்குமான இடைவெளிகள் அதிகம்.நானறிந்து அவரும் ஷைலஜாவும் தொலைபேசியில் பேசாத நாட்கள் மிகக்குறைவு. உறைந்திருக்கும் அவர் மௌனத்தின் மீது எப்போதும் ஒரு சிறு கல் எறிய பயப்படுவேன் நான். ஆனால் அவர்கள் இருவரும் உரையாடுவதை, ஷைலஜா பல இடங்களில் நெகிழ்வதை, அழுவதை, உரையாடலுக்கு பின் மௌனமாவதை, குழந்தைகளை அழைத்து தாத்தா சொன்னதாக சொல்வதை கேட்டுக் கொண்டேயிருக்கிற பாக்யவான் நான்.

புதிய படங்கள் பார்த்தவுடன் என்னையோ ஷைலஜாவையோ தொலைபேசியில் அழைத்து அப்படம் பற்றிய தன் உணர்வுகளை அப்படியே பகிர்ந்து கொள்வார். சென்னை புத்தகக் காட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் வம்சிக்கு வந்து உட்கார்ந்து பல எழுத்தாளர்களோடு, வாசகர்களோடு உரையாடுவதை ஒரு பழக்கமாகவே இன்றளவும் வைத்திருக்கிறார். அப்படி அவர் வரும் ஒவ்வொரு நாளிலும் ஒரு புதிய செய்தி இருக்கும்.

ஷைலு, ‘ஆடுகளம்பிரிவியூ பாத்துட்டு அப்படியே வரேன். அற்புதமான படம். சரியான ஜூரிஸ் அமைந்தால் இந்த படத்துக்கு குறைந்தது ஆறு நேஷ்னல் அவார்ட் நிச்சயம் என்றார்.”
அது அவ்விதமேயானது.

ஒரு திரைப்படத்தின் அனைத்து நுட்பங்களும் புரிகிற மனதால்தான் இப்படி ஒரு stணீtமீனீமீஸீt அளிக்கமுடியும்.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 பார்த்துவிட்டு அரைமணி நேரம் அதைப்பற்றி பேசினார். "இது தமிழ் படத்தின் அடுத்த பரிணாமம். புதிய இளைஞர்களின் இத்தகைய முயற்சிகள் என் நம்பிக்கைகளை அதிகரிக்கின்றன" என்ற வார்த்தைகள் உலரும் முன் அதை நண்பர் பாலாஜிக்கு கொண்டு செல்ல வேண்டி அவரை அழைத்தேன். சத்யம் தியேட்டரில் படம் பார்த்துட்டு வெளியே வந்த அவரை எதிர்கொண்டு போய் கைகளை பற்றிக்கொண்டு "பாலாஜி, என்னைவிட வயசுல சின்னவனாயிட்ட இல்லாட்டி கால்ல விழுந்திருப்பேன்பாஎன்று சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா சார்.. "பவா இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டுமெனக்கு என்று நெகிழ்ந்த பாலாஜி சக்திவேலின் பெருமிதம் எனக்குள் அப்படியே கிடக்கிறது. 
"‘நீர்ப்பறவைபார்த்துவிட்டு அதே சத்யம் தியேட்டரிலிருந்து வெளியே வந்தவரின் எதிரில் சகல எதிர்பார்ப்புகளுடனும் போய் நின்னேன் பவா. ஒரு வார்த்தை பேசல. தன் ரெண்டு கையாலேயும் என் கன்னத்தை பிடிச்சி அழுத்தி ஒரு முத்தம். வெள்ளை முடிகள் முகத்தில் பதிந்த அம்முத்தம் தந்த பரவசம் எப்போதும் போகாது பவா".. இது சீனுராமசாமியின் நெகிழ்ச்சி.
இக்கலைஞன் தன் இளம் தலைமுறையோடு எப்படி ஓர் உறவை வைத்திருக்கிறார்! தன் காலத்திய கலைஞர்களின் வெற்றியை உடல்மொழியால் வார்த்தைகளால் பெருமிதப்படுத்தும் மனம் எத்தனை ஆளுமைகளுக்கு வாய்த்திருக்கிறது?
நண்பர்களுடனான ஒரு காலை நேர சந்திப்பில் தன் அருகிலிருந்த பெரியப்புகைப்படமொன்றை எடுத்து என் முகத்தருகே நீட்டினார்.
பவா இந்த ஆள உங்களுக்கு தெரியுதா?”. அந்த குளோசப் புகைப்படத்தை உற்றுபார்த்தேன். ஷைலுவும் நண்பர்கள் முருகன், கார்த்தி என்று யாருக்கும் அவரை அடையாளப் படுத்த முடியவில்லை.இல்லை சார் பார்த்ததில்லை.”
இல்லயே, இந்த ஆளுக்கு உங்களை தெரியுமாமே, உங்க வீட்டுக்கு பலமுறை வந்ததாகவும், சாப்டதாகவும் சொல்றாரேஎன்றார்.

கொஞ்சம் ஆர்வத்தோடு மீண்டும் பார்க்கிறோம். பிடிபடவில்லை.
நெற்றியிலிருந்து ஆரம்பித்து மேல்கழுத்து வரை முடிந்த ஒரு நீறீஷீsமீuஜீ அது.
எங்கள் ஆர்வத்தை அறிந்து சிறு புன்னகையுடன் அப்புகைப்படத்தை தன் முகத்தருகே வைத்தார். அல்லோரும் ஆச்சர்யத்தால் உறைந்தோம்.

"
நான்தான் பவா, என் அடுத்த  படந்துல காமிர முன்னால நிற்க போறேன்". அவர் என் மகள் மானசியைவிட துள்ளலிருந்தார். படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கியவுடன் அவர் வேறு ஆளாக பரிணமிக்கிறார். அதுவரை மௌனத்தால் தன் நிறைமொழியை அடைகாக்கிறார். படப்பிடிப்பில் ஒரு துள்ளல், ஒரு சந்தோஷம் எல்லாமுமாக தான் விரும்பியவண்ணம் அதை நிதானமாக கடக்கிறார். தன் படைப்பு முகிழும் அக்கணத்தின் உச்சத்தை முதலிலேயே தீர்மானித்து விடுகிறார். அதை நோக்கி பயணிப்பது மட்டுமே அவர்வேலை. இப்போது அதனருகே நின்று திரும்பி பார்க்கிறார். பெருமிதத்தோடு கூடிய ஒரு புன்சிரிப்பு உதட்டோரம் கசிகிறது.