Monday, December 28, 2009

வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்
சில ஆண்டுகளுக்கு முன் என் முதல் கடிதத்திற்கு பதில் எழுதிய
சுந்தர ராமசாமி இந்த வருடம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய
புத்தகம் என்று குறிப்பிட்டது மசானபு ஃபுபேகாவின் ”ஒற்றை
வைக்கோல் புரட்சியை”.

காலத்தின் சுழற்சியில் பூவுலகின் நண்பர்களோட சேர்ந்து வம்சி
புக்ஸ் சுற்றுசூழல் வரிசையில் 16மிக முக்கிய புத்தகங்களை
கொண்டு வருவது என்றும் அதில் முதல் 8புத்தகங்களையாவது
இப்புத்தக கண்காட்சியின் நிறைவுக்குள் கொண்டு வரும் முயற்சியில்
இரவு 10மணிக்கு அதன் 8அட்டைபடங்களை நிறைவு செய்தோம்.
மதிக்கத்தக்கவனும், நேசிக்கததக்கவனுமான புகைப்பட கலைஞனும்
சூழலியல் வாதியுமான ஆர்.ஆர். சீனிவாசனும் அவர் நண்பர்
ஆர். கனேசனும் இவ்வளவு அழகான அட்டை படங்களை
வடிவமைத்து தந்தார்கள்.

நண்பர் ஆதி. வள்ளியப்பனும், நானும் கடந்த 48 மணிநேரத்தில் 48 தடவைகளாவது தொலைப்பேசியில் உரையாடி இதன் வடிவத்தையும் வார்த்தைகளையும் செழுமைப்படுத்தினோம். என் மருத்துவ விடுப்பு
முடிந்து மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி அலுவலகத்திற்கு
ஒரு பொய் மருத்துவ சான்று கொடுத்து சேரவேண்டும். சேருவதா
அல்லது என் நிலத்திற்கே போய் தீவிர விவசாயியாக மாறி
மண்ணோடும், நீரோடும்,சேரோடும் மிதி படும் மகத்தான இயற்கை
வாழ்வைத் தேடி இப்புத்தகங்கள் என்னை நகர்த்துகின்றன.

Wednesday, December 23, 2009

புதுப்படைப்புகளுக்கிடையே...

புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்


இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.

மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.

கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.


-நாளை பேசுகிறேன்.

Wednesday, December 16, 2009

வம்சி வெளியீடுகள் - 2010

வம்சி வெளியீடுகள் - 2010

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - வலைப் பக்கங்களில் தன் தர்க்கக்குரல் மூலம் வியாபித்திருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
3. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
4. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com