Tuesday, April 2, 2019

உதிரிப்பூக்கள்




மகேந்திரன்

இருபதாண்டுகளுக்கும் முந்தைய ஒரு நாளின் பின் பகுதியில்  அந்த இலக்கிய விவாதம் ஆரம்பித்தது.  இடம் நாமக்கல்  மாவட்டம்  பாலப்பட்டி  என்ற அழகிய ஊர். இன்றைய தமிழ் இலக்கியத்தின்  முக்கிய ஆளுமைகள் பலர் அவ்விவாதத்திலிருந்தார்கள்.  பின்னிரவு வரை நீண்ட அவ்விவாதத்தினூடே அப்படியே  காலாற நடந்து போய்  ஆற்று மேட்டில்  ஏறி நின்றோம். எதிரே நிதானமாக காவேரி ஓடிக்கொண்டிருந்தது.

இங்குதான் உதிரிபூக்கள்படத்தின் கடைசிக் காட்சியை எடுத்தார்கள் என என் சக எழுத்தாளர் ஒருவர் பரவசப்படுத்தினார். நான் ஆற்றில் இறங்காமல் கரையிலேயே  வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். உதிரிப் பூக்களின் கடைசிக் காட்சிகளை எனக்குள்  கொண்டுவந்தேன்.

செண்பகமும்  மானபங்கப் படுத்தப்பட்டாள் என்ற செய்தி அதுவரை பொறுத்திருந்த  ஊர் மக்களை  ஒன்று திரட்டுகிறது.  அவர்கள் சுந்தரவடிவேலுவை (விஜயன்) மடக்கிபிடிக்கிறார்கள்.  அடுத்த காட்சி  வெறிச்சோடிப் போன அந்தத் தெரு. வசனங்களோ, பின்னணி இசையோ இல்லை, பேரமைதி. பின் மேள தாளத்தோடு  இசை. கூடுதலாக  சுந்தரவடிவேலுடன் அவரின்  இருகுழந்தைகளின் நடை. இசை மட்டுமே நம்மோடு பேசும்; வார்த்தைகளில்லை.

இதோ நான் நிற்கிற இந்த ஆற்றங்கரையில்  நின்றுதான் சுந்தரவடிவேலு திரும்பி தன் ஊர்  ஜனங்களைப் பார்ப்பார். ஏற்கனவே இறுகிப் போயிருக்கும் அவர் முகம்  மேலும் இறுக, மூன்று வரி வசனம் மட்டுமே.

நீங்க எல்லோரும்  ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க.
இன்னிக்கி நான்  என்னைப்போல உங்க எல்லோரையும் மாத்திட்டேன்.
நான் செஞ்சதிலேய பெரிய தப்பு இதுதான்.

அவ்வளவுதான். என் பதினான்காவது வயதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முறையாக  உதிரிப்பூக்கள் பார்த்தபோது எதுவும் பிடிபடவில்லை. படத்தின் மெதுவான நகர்வு  நான் அதற்கு முன் அறியாதது.

இருபது தடவைகளுக்கு மேல் இப்படத்தை வெவ்வேறு  தருணங்களில் வெவ்வேறு மன நிலைகளில்,  வேறுவேறு இடங்களில் வெவ்வேறு வயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும்  புதுசு புதுசாய் அதிலிருந்து  எதையோ  அடைந்து கொண்டேயிருக்கிறது மனம்.

ஒரு நல்ல கலைப்படைப்பு  இப்படித்தான் செய்யும்.  பாரதி  அப்படித்தான் எனக்கு.

அழகிய கண்ணேஎன்ற அந்த ஒரே பாடலில் அஸ்வினியின் உலகமே அந்த இரு குழந்தைகள் மட்டுந்தான்,  அதற்கும் அப்பால் அவள் போக விரும்பாதவள் என்பதை இதை  விட நேர்த்தியாய் திரைமொழியில் வேறு ஒரு இயக்குநர் எப்படிச் சொல்லிவிட  முடியுமென யோசித்திருக்கிறேன்.

அப்பாடலின்  ஒரு கவித்துவமான  வரிக்கு ஒரு கறுப்பும் வெள்ளையுமான ஆட்டுக்குட்டியின்  துள்ளலை  தன் எடிட்டிங்கில் இணைத்திருப்பார் இப்படத்தின் மூலம் அறிமுகமான எடிட்டர் லெனின். மகேந்திரன்,  இளையராஜா, லெனின், அசோக்குமார் ஆகிய  கலைஞர்கள்  சேர்ந்து படத்தை  அதன் ஒவ்வொரு  பிரேமிலும  நேர்த்தியாய் குழைத்திருப்பார்கள்.  முப்பதாண்டுகள் கடந்துவிட்ட போதிலும்  இப்போதும் இப்படத்தைப்  பார்க்கையில்  அந்தரங்கமானதொரு  துக்கம், கவிந்து கொள்கிறது.  அம்மாவை இழந்து, ஆற்றில் அப்பா மூழ்கின தடமின்றி  சற்று நேரத்தில்  சகஜமாகி ஓடும் ஆற்றையே வெறித்துக் கொண்டிருக்கும்  அக்குழந்தைகளின் கண்களில்  தெரியும் இழப்பும் வெறுமையும் எதிர்காலமும் என்றென்றும் என்னைப் புரட்டி போடுபவை.  மகேந்திரன் அசல் கலைஞன்.