Tuesday, September 27, 2011

தொடர் - 8


ஸ். ராமகிருஷ்ணனின் தலைப்பு மறந்து போன ஒரு சிறுகதையில் மார்கழி மாதத்தில் ஏதோ ஒரு இரவின் மூன்றாம் ஜாமத்தில், ஒரு வீட்டின் ஓடுகளைப் பிரித்து களவுக்கு இறங்கும் ஒரு திருடன், அந்தப் பனிபொழியும் நிசப்தத்தில் அவனுக்கு மட்டுமே கேட்கும் ஒரு அபூர்வ ஒலியில் ஒரு நிமிடம் உறைந்து போவான். கொஞ்சம்நிதானித்துஅது அந்த வீட்டின் மேல் படர்ந்திருக்கும் பூசணிப்பூ பூக்கும் சப்தம் என்பதை உணர்வான். இந்த அபூர்வங்கள் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்காது. எப்போதாவது இந்த ஒலி திருடர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மட்டுமே கேட்கும். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, கோணங்கி இப்படி ஏதாவதொரு நள்ளிரவில் பூசணிப்பூ பூக்கும் அபூர்வத்தோடேயே மட்டும்தான் என் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான்.

ஒவ்வொரு முறையும் அவனுடன் ஒரு எழுத்தாளனோ, கலைஞனோ, வாசகனோ உடன் வருவார்கள். இவன் பாரதி, இவன் கைலாஷ், இவன் ராமகிருஷ்ணன் என மின்னல் மாதிரியான அறிமுகம் போதும் அவர்கள் என் வீட்டில் புழங்க.

அவன் குரல் கேட்டு உடலெங்கும் சந்தோஷம் பொங்கும் உவகையோடு அப்பா விளக்கைப் போடுவார். அப்பாவும், கோணங்கியும் மட்டுமே பேசித் தீர்த்த இரவுகள் உற்சாகமாய் விடிந்திருக்கின்றன.அப்பாவின் தோள்பட்டையில்பட்டப்பன் என்ற அவரின் உற்ற நண்பனின் பெயரைப் பச்சைக் குத்தி இருப்பார் என்று அப்பாவின் மரணத்தின் போது கோணங்கிசொல்லி அழ, போர்த்திய துணி விலக்கி பார்த்துக் கதறினேன்.

அவன் எப்போதும் அந்தப் பூசணிப்பூவின் மலரும் ஒலி போல எங்களுக்கு அபூர்வமானவன்தான்.

முப்பது வருட காலத்தை நான்கு 4 பக்கங்களில் அடைத்துவிட முடிய வில்லை. அதில் மார்கழிப்பனி, சித்திரை வெயில், சிபியின் இரத்தம், வம்சியின் பிறப்பு, உரையாடல்களின் கனமென, வாழ்ந்துத் தீர்த்த பாதையெல்லாம் தானியங்கள் கொட்டி இறைந்து கிடக்கிறது. நான் சிட்டுக் குருவியாகக் கொத்தினாலும் நான்கைந்து பருக்கைகளை மட்டுமே கொறிக்க முடிகிறது. கோணங்கியே எப்போதும் சொல்வது போல, நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்கமுடியாது. நான் மரமாக மாற முடியாத ஒரு மரண அவ°தை இது.

மதினிமார்கள் கதைகளின் வழியே என்னை வந்தடைந்தவன் கோணங்கி. எப்போதும் தமிழின் ஆகச் சிறந்த கலைஞன் இவன் என என் வாசிப்பில் உணர வைத்த படைப்புகள் அவை. ஆளரவமற்ற சாத்துhர் ரயில் நிலையத்தில் பிரியத்தை மடி நிறையச் சுமந்து கொழுந்தன்கள் கையில் வெள்ளரிப் பிஞ்சுகளைத் திணிக்கும் கைகளை நேரடியாய்ப் பார்க்கும் ஆசை மேலெழுந்த காலமது.

கவிஞர் சச்சிதானந்தன் சொல்வார், என் பாட்டியின் தங்கை முழுப்பைத்தியம், என் சித்தியும் அப்படியே, குடும்பத்தில் பலரும் இந்த மனப்பிறழ்வின் எல்லைகளைத் தொட முயற்சிப்பவர்கள். அவர்களின் விதை நான். நான் மட்டும் எப்படி கோழிக் கொண்டைகளின் சிவப்பைப் பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியும்?

மனப்பிறழ்வுக்கும் எழுத்துக்குமான இடைவெளி ஒரு மெல்லிய கோடு மட்டுமே. காலம் முழுக்க இருவருமே இதைக் குறுக்கும் நெடுக்குமாக இரகசியமாகவேனும் கடந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கோணங்கியின் எழுத்துகளும் அப்படியே. என்ன செய்ய, என்னைப் போல மரமாக மாறமுடியாதவனின் கிளைகளில் ஒரு கிளியும் உட்கார மறுக்கிறது.

கோணங்கி ஆரம்பத்தில் கூட்டுறவு சொசைட்டியில் செகரட்டரியாக வேலை பார்த்தான். இப்போது நினைத்தால் அதை யாராலும் நினைவின் முற்றத்திற்குச் சிரிப்பில்லாமல் கொண்டுவர முடியாது.

விவசாய வாழ்வு, தொடர்ந்து அதன்மீதே கொட்டிய அமில மழை, நேசித்த நிலம் அவனையே காவு கொண்ட கொடூரம் இதையெல்லாம் தமிழில் அவன் ஒருவன் மட்டுமே தன்கைத்தடி கேட்ட நுhறு கேள்விகளில் படைப்பாக்கி இருக்கிறான். அக்கதை விவசாயியையே பலிகேட்ட விவசாயத்தைப் போலவே அவனுடைய அரசாங்க வேலையை காவு கேட்டது அக்கதை.

ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்து, தன் தோள்ப் பையோடு தேசாந்திரியாக இந்தியாவின் வடக்கும், தெற்குமாக அவன் பயணித்த காலங்களும், துhரங்களும் பட்ட அனுபவமும், பெற்ற வலியும் ஏராளம்.

அப்படி ஒரு பயணத்தினிடையே அதே போலொரு அகாலத்தில் துhக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த என் முன் கோணங்கியும் அவன் நண்பன் பாரதியும், மழையில் நனைந்தும், குளிரில் விறைத்தும் நின்றிருந்த காட்சி கேன்வாஸில் வரையப்பட்ட கோட்டோவியம் போல் அப்படியே தெரிகிறது.

கல்வராயன் மலைக்குகல்குதிரை பிடிக்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போனான். கல்வராயன் மலையில் அப்போது போதகராயிருந்த என் நண்பர் கிடியன் தேவநேசனுக்கு அவன் வருகையைச் சொன்னேன். மூன்று இரவுகளுக்குப் பின் ஒரு ஞாபகம் மேலிட்ட மாலையில் அவரை அழைத்து கோணங்கியைப் பற்றி விசாரித்தேன். அவரின் கள்ளச் சிரிப்பொலி தொலைபேசியில் வழிந்தது. சுவாரஸ்யமுற்று நான் ஊடுருவியதில், அவன் முதல்நாளேஅவர் தந்த அறையை நிராகரித்து கல்வராயன் மலை பழங்குடிகளோடு இரண்டறகலந்து விட்டான் என்றும், இரண்டாம் நாள் அதிகாலை தன் நடைப்பயிற்சியின்போது பார்த்த, இரத்தம் சொட்டச் சொட்ட மூங்கிலில் கட்டி காட்டுப் பன்னியைச் தூக்கி வந்த நால்வரில் உங்கள் நண்பர் கோணங்கியும் ஒருவர் என்று சொன்னார்.

அவனுக்கு எப்போதும் தானிய வகைகளும், காட்டுப்பன்னியின் இரத்தக் கவிச்சியும், தீப்பெட்டியில் இரண்டு கொடுக்காப்புளி தழைகளோடு படுத்துக் கிடக்கும் பொன் வண்டுகளும்தான் வேண்டும். நவீனத்தையும் நாம் வசதி எனப் போற்றும் பலதையும் அவன் தன் சுண்டு விரலால் தள்ளிவிட்டு வந்திருக்கிறான்.

வாழ்வின் பேருவகை பொங்கும் ஒரு காதலுக்கான இரகசியக் கணம் என்பது காதலியின் மடியில் படுத்து சரீரத்தால் அதிகமும், வார்த்தைகளால் கொஞ்சமுமாய் உரையாடின பொழுதுகள்தான். அது அவர்களுக்கு மட்டுமேயானது. அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்து எல்லாம் வறண்டுபோன ஒரு வெற்றிட காலத்தில் அவர்கள் மட்டுமே எடுத்துப் பருகிக் கொள்ள அவர்களுக்குள்ளேயே ஒரு திறக்கப்படாத ஊற்று மாதிரி பொதிந்து கிடப்பது.

அதை அடைத்து நிற்கும் அச்சிறுக்கல்லை மெல்ல எடுத்தால் . . . . . . . .

. . . நானும் என் நண்பனும் மட்டும் தாமரைக் குளத்தின் பச்சை நீரில் முட்டிக்கால் வரை நனைய விட்டு நாங்கள் பருகிய எங்கள் காதல் காலங்கள். தன் இழந்த காதலைச் சொல்ல கோணங்கி என்ற அந்த மகா கலைஞன் வார்த்தைகள் வராமல் தவித்த அந்த இருள்கவிழ்ந்த குளப்படிக்கட்டுகளை இப்போது கடக்கும்போதும் திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன். எனக்குக் காதலியின் மடியில் படுத்துக் கிடந்த நாட்கள் ஞாபகத்தில் இல்லை. கோணங்கியுடன் நீரில் பாதியும், நினைவில் பாதியுமாய்ப் புதையுண்ட அந்த நாளே இவ்வெறுமையைத் துடைத்துக் கொள்ளும் ஒரே ஈரிழைத் துண்டு எனக்கு.

அதன் பிறகான நாட்களில் தமிழ் வாழ்விலிருந்து தன் உடைநடையை ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, வெகு துhரத்திற்கு அவனே வலிய சுமந்து சென்று மந்திரவாதியின் தலையில் உட்கார்ந்திருக்கும் கிளிக் கழுத்தில் ஒளித்து வைத்துக் கொண்டான். கிளியைக் காப்பாற்ற கோணங்கி விதவிதமான பல புதிரான விடுகதைகளில் வாழ வேண்டியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன் திருவண்ணாமலைக்கருகில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டில் தமிழ் நிலப்பரப்பை முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொன்றாகப் பிரித்து அவன் கண்டராதித்தனுக்கும், ஸ்ரீநேசனுக்கும், பழனிவேலுவுக்கும் சகட்டு மேனிக்கு கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிளியின் உயிர் இரகசியம் அறிந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களுக்கான, அவனால் முடிந்த எளிய நலத்திட்ட உதவிகள் அது.

ஆனால் இதெல்லாம் இல்லை அவன் மனம் என்பதை நானறிவேன். என் சிபிக்குட்டியை ஒரு விபத்தில் இழந்து, பித்து பிடித்தலைந்து, என் வம்சியின் பிறப்பின் கணத்திலேயே மீண்டும் என்னை மீட்டெடுத்தேன். வம்சியின் வருகைக்காக ஐந்து கிலோ கருப்பட்டி மிட்டாய்களோடு கோவில்பட்டியிலிருந்து புறப்பட்டு வந்து, மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாட்களில் என் பழைய கோணங்கியைக் கண்டேன்.

போர்ட் கொச்சினுக்கு கதை சொல்லப் போய், மொழி தெரியாத அந்த நண்பர்களின் அன்பில் கரைந்து, அங்கிருந்து கோணங்கியைத் தொலைபேசியில் அழைத்த இரவின் விடியலில் அவன் என்னுடன் இருந்தான். வேண்டுதல்கள் சுமந்த இரு யாத்திரிகர்களைப் போல, நாங்களிருவரும் கொச்சியிலிருந்து புறப்பட்டு கொடுங்கல்லுhரில் போய் கண்ணகிச் சிலையைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு அந்த அதிகாலை மழையினுhடே ஒரு கூரைக்கடையில் கள்குடித்து, மீன் தின்ற நாள் எழுதிமுடித்த ஒரு உன்னதப் படைப்பிற்கு நிகரானது.

இலக்கிய கூட்டங்களில் எப்போதும் பேசும் பேச்சாளனல்ல கோணங்கி. இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் நடத்திய ஒரு இலக்கிய கருத்தரங்கில் திடீரென ஒரு புயல் மாதிரி பிரவேசித்து அவன் ஆற்றிய உரை அதற்கு முன் வேறு எவராலும் எப்போதும் கேட்டறியாதவைகள். அக்கருத்தரங்கில் அதன்பின் பேச வேண்டிய மூன்று முக்கிய இலக்கியவாதிகளும்பேச முடியாமல் அதோடேயே அக்கூட்டத்தை முடிக்க வேண்டியதிருந்தது. இதுதான் ஆத்மாவின் உள்ளிருந்து எழும் ஒரு நிஷப்படைப்பாளியின் ஆவேசக் குரல். அதைக் கேட்ட பாக்கியம் இருமுறை திருவண்ணாமலை வாசகர்களுக்கு வாய்த்திருக்கிறது.

இதோ இப்போதும் மகாராஷ்ராவின் பெயர் தெரியாத ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து காய்ந்த சுரைக் குடுக்கைகளைச் சேகரித்தவாறு அலையும் இந்த நாடோடிக் கலைஞனின் வருகைக்காக, திக்கித் திக்கி அவன் உதிர்க்கும் ஆதித் தமிழ்ச் சொல்லை அள்ளிப் பருகுவதற்காகக் காத்திருக்கும் ஆளுமைகளை நானறிவேன்.

அவனை ஒரு பேட்டி எடுக்கவோ கதை எழுதி வாங்கவோ பிரபலமான தமிழின் பத்திரிக்கைகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வுயுற்றதையே கோணங்கியின் ஒரு புகைப்படங்களை வேண்டி தவமிருந்த பத்திரிக்கைகளை நானறிவேன். நேர்காணலுக்காக கோவில்பட்டி வரை சென்று பேட்டி எடுக்க முடியாமல் திரும்பிய தமிழ் சேனல்களின் வாடிய முகங்களையும் நான் எதிர் கொண்டிருக்கிறேன்.

கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.

அடர்மழை நாளொன்றின் அதிகாலை அது. நான் என் கிணற்று மேட்டில் காவலிருக்க, கிணற்றில் குதித்து நீந்திக் கொண்டே வேலா, என் கோட்டைக் கிணறு கதைச் சொல்லவா?’ என இரு மடங்கு சத்தத்தில் கத்துகிறார். உள்ளேயிருந்து கேட்கும் குரலைக் கரையிலிருந்து அள்ளுகிறேன். கதையின் உக்ரத்தை நீரில் கரையாமல் அப்படியே வைத்து விட்டு.

பவா இந்நேரம் கோணங்கி இங்க வந்தா எப்படி இருக்கும்?’ இது வேலா.

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, மேற்கு திசையில் திரும்பிப் பார்க்கிறேன்.

தோளில் தொங்கும் நீண்ட தோல்ப் பையோடு இரவெல்லாம் விழித்த களைப்பின்றி சட்டைப்பட்டன்களைக் கழட்டியபடியே ஓடி வந்து அந்தக் கிணற்றில் குதித்த கோணங்கியின் அந்நிமிடம், பூசணிப்பூவின் அபூர்வ சத்தம் அருந்தின அத்திருடனுக்கும், எங்களுக்கும் மட்டுமே வாய்த்தவை.


-நன்றி மீடியா வாய்ஸ்