Monday, December 30, 2019

இரண்டாம் ஆட்டம்



பல்லவன்



என் நண்பன் பீனிக்ஸை தன் ஆட்டோவின் பிண்னணியில் பல்லவன் வரைந்திருந்த ஒரு உயிருள்ள ஓவியத்தைப் பார்த்து, பல மாதங்களுக்குப் பின் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன்.

இருவருக்குமே குரல் கம்மியிருந்தது. சொற்களில் லேசான நடுக்கமிருந்ததை கவனித்தேன்.

அந்தப்படம்!?”



மௌனத்தில் ஒட்டியிருந்த ஒரு சொல்லை எடுக்க வெகுநேரமானது. அவர் புளகாங்கிதமடைந்ததை இங்கிருந்தே உணர முடிந்தது.

அற்புதம்  ஓவியர்

நன்றி பவா

இருவரும் வேறென்னென்னமோ பேசினோம். ஆனால் பீனிக்ஸின் ஓவியத்தின் முன் வார்த்தைகள் மரணித்து உதிர்வதை அவதானித்தேன். அந்த ஓவியத்திற்கு அவர் ஒரு சில வரிகள் எழுதி இருந்தார். எழுத்தும் அவரின் அந்த ஓவியத்தைப் போலவே ஜீவனுள்ளதாயிருந்தது. தொடர்ந்து பிரமீள், கந்தர்வன், ஜே.கே., ஜி.நாகராஜன் என நாளுக்கு ஒரு ஓவியமும், எழுத்துமாய் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது என்னை ஆச்சர்ய நீரில் அமுக்கிப் போட்டது.

படைப்பூக்கம் ஒன்றிணைந்து முயங்கி வரும் போதெல்லாம் தன் லௌகீக வாழ்வில் அதை கரைய விடுபவர் பல்லவன் என்ற என் மதிப்பீடு மெல்ல சரியத் தொடங்கியது.

அவருக்கு எப்போதுமே என் குடும்பத்தில் பெரிய அண்ணன் ஸ்தானம். வம்சிக்கும் மானசிக்கும் அவர் எப்போதும் பெரியப்பாதான்.

ஸ்தாபனம், அமைப்பு இதெல்லாம் பல அருமையான மனிதர்களை பகைகொள்ள செய்துவிடுகிறது. அது எனக்கு மட்டும் நேரவில்லை, உலகமெங்கும் உள்ள அசல் கலைஞர்களை எப்போதும் நிலைகுலைய வைத்திருக்கிறது.

பல்லவனும் நானும் அப்படியொரு பொய் விரோதம் பூண்டு விலகியிருந்தோம். ஒரு ஓவியம் எங்களை மீண்டும் அன்பு கொள்ள செய்துவிட்டது. பூக்களின் எத்தனை உதிர்விலும் இன்னொன்று புதிதாய் பூத்துவிடுகிறதுதானே!?

ஒரு சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் ஓவியர் பல்லவன் என் பள்ளி நாட்களில் எனக்கு அறிமுகமாகிறார். அவர் ஓவியக் கூடத்திற்கு வெளியே தெருவையே வியாபித்து அவர் வைத்திருக்கும் போர்டுகளும் ஏஅஃஃஙு ஙிOO டெய்லர் கடைக்கு ஒரு வெள்ளைக்காரனின் உதட்டிலிருந்து உதிரும் கடைசித்துளி சிகரெட் சாம்பலையும் பார்த்து, யார் இந்த ஆள்? என என்னைத் தேட வைத்தது.



அவர் ஓவியக்கூடத்திலிருந்து வீசும் எனாமல் பெயிண்ட் வாசனை, என் காதலியின் மீதிருந்து மேலெழுந்த பர்ஃபியூம் வாசனைக்கு நிகரானது. இரண்டுமே என்னை அவ்வயதில் கிறங்கடித்தன.

நான் படித்த புகழ்பெற்ற டேனிஷ் மிஷன் பள்ளியின் மெயின் கேட்டுக்கு பக்கத்திலிருந்த அவர் ஓவியக்கூடத்திற்கு, திருவண்ணாமலையில் வியாழக் கிழமைகளில் ஒவ்வொரு கடைக்கும் முன்னும் வந்து நிற்கும் ஒரு  யாசகனைப் போல போய் நின்றிருக்கிறேன்.

எப்போதும் கையில் கசியும் புகையோடு அவர் எதிர்கொண்ட விதம் அப்போது என்னை ஆகர்ஷித்தது.

பள்ளி நாட்களில் வகுப்பறைகளில் இருந்த நேரத்தைவிட அவர் ஓவியக் கூடத்திலிருந்த தருணங்களே அதிகம் எனக்கு.

ஒரு மாணவனைப்போல, ஒரு தம்பியைப்போல, ஒரு பணியாளனைப்போல நான் அங்கு என்னை உருமாற்றி உருமாற்றி அமர்ந்து கொண்டேன். அவர் வரைவதை, வண்ணங்களை வாரி இறைக்கும் தைரியத்தை, தவறை தன் சுண்டு விரலால் சுண்டிவிடும் லாவகத்தை குளிர்ந்த மது மாதிரி என்னுள் இறக்கிக்கொண்டு போதையேறியிருந்த நாட்கள் அவை.

நிறைவுறும் ஒவ்வொரு ஓவியத்திலும் சைன் போர்டிலும் அவர் பல்லவன் என கையெழுத்திடும்போதுஎன்கிற எழுத்தை திருப்பிப்போட்டு, தன்னை தனியே அடையாளப் படுத்திக்கொள்வார். திருப்பிப்போடப்படும்வே பலபேரை அவர் ஓவியக்கூடத்திற்குள் இழுத்து வரும்.



ஒரு பெருங்கலைஞனுக்கான எல்லாவித கொண்டாட்டங் களிலேயுமே அவரின் இளமையான நாட்கள் கழிந்தன. பாக்கியவான்களுக்கு மட்டுமே அது வாய்க்கும். ஒழுக்க சீலர்கள் என்று தங்களை நம்பிக் கொள்பவர்கள் கழிவறையைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு மனம் கசந்து அழக்கடவது.

அப்போதெல்லாம் ஓவியருக்கு நீராகாரம் அருந்தும் பழக்கமிருந்தது. அது அவரை குழந்தையாக்கி குதூகலிக்க வைக்கும்.  திருப்பதியில் போய் மொட்டை போட்டுக் கொண்டு  கும்பல் கும்பலாய் மனிதர்கள் சொந்த ஊர்களுக்கு  பேருந்தில் திரும்புவார்கள். நீராகாரம் அருந்தி முடிந்த ஆனந்தத்தில் தலைவனும், அவர் நண்பர் ராமலிங்கமும் ஏதாவது ஒரு பேருந்தில் சில மொட்டைகளின் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்வார்கள். யாரும் கவனிக்காத வேளைகளில் நறுக் நறுக்கென சில மொட்டைகளுக்கு  கொட்டும் விழும். சில நேரங்களில் பெரும் கலவரமாகி அவர்களுக்குள்ளாக  அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்ப்போம். கலைஞர்களின்  விளையாட்டிற்கு  எல்லையில்லைதானே.

ஒரு டிசம்பரின் மழை இரவு அது. அன்றும் நீராகரமே  உணவு. திட உணவை நோக்கி பெரியார் சிலைக்கு  எதிலிருந்த  ஒரு இரவு உணவுக்கடைக்குச் சென்றோம்.  பரோட்டாவும், சிக்கன் கறியும் ருசியால் நிரப்பப்பட்ட இரவு கடை அது.

நாங்கள் இருவரும் போய் உட்காருகிறோம். கீத்து வேயப்பட்ட  அந்த இரவு பரோட்டா கடைக்கு சம்மந்தமில்லை... ‘டக் செய்யப்பட்ட பீட்டர் இங்லேண்ட்சட்டை,  டை, ஷீ இவைகளோடு ரத்த சிவப்பில்  ஒரு எக்ஸ்சிகியூட்டிவ் எங்கள் எதிர் பென்ச்சில் உட்காருகிறார்.



ஒரு நாகரிகத்திற்காக கூட எதிரில் இரண்டு பேர்  உட்கார்ந்திருக்கிறார்களே என எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இரண்டு ப்ளைன் ஆம்லேட் ஆர்டர் செய்துவிட்டு, தன் பிரீப்கேஸிலிருந்து ஒரு விலையுயர்ந்த மது பாட்டிலை  எடுத்து, திறந்து ஜஸ்கீயூப்கள்  மிதந்த கண்ணாடி குடுவையிலிட்டு  மழையினால் சில்லிட்டிருந்த தன் இரு கைகளையும் சூடுபறக்க தேய்த்துக் கொள்கிறார்.

பல்லவனுக்கு அந்த அதீத நாகரீகமும், சுத்தமும் பிடிக்கவில்லை.
அதையேப் பார்த்துக் கொண்டிருந்தவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அந்த குப்பியை எடுத்து சவகாசமாக குடிக்க ஆரம்பிக்கிறார்.

எக்சிகியூட்டிவ் பதற்றத்தை கொஞ்சமும் தன் உடல் மொழியால் காண்பிக்காமல் மனதுக்குள் எரியவிடுகிறார்.

டபுள் ப்ளைன் ஆம்லேட்டுகள் அந்த அழுக்கடைந்த மேசைக்கு  வருகின்றன.
அதற்குறியவனை வெறிக்க வைத்துக்கொண்டே அதையும் சாப்பிடுகிறார் ஒவியர்.

இப்போது எக்சிகியூட்டிவ் மெல்ல எழுந்து மீதி சரக்கை பேக் செய்து தன் பிரீப்கேஸீக்குள்  வைத்து மூடி,  மறக்காமல் இரண்டு ஆம்லேட்டுகளுக்கான  பணத்தைக் கொடுத்துவிட்டு,  சுவாரசியமாய்  ஆம்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓவியரிடம் வந்து

கேரியான்என  சூடான தன் கரங்களைக் கொடுத்து விடைபெற்று சென்ற காட்சி அவர் ஓவியத்தைப் போலவே  நினைவில் தங்கிவிட்ட ஒன்று.
கலைஞர்கள் இப்படித்தான் என அந்த எக்சிகியூட்டிவுக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம்.  எனக்கு நன்கு தெரிந்திருந்தது.

எனக்கு பல்லவன் என்ற கலைஞனின் ஆர்பாட்டமும், கொண்டாட்டங்களும் பிடித்திருந்தன. ஒரு வகையில் நான் வாழ விரும்பிய வாழ்வை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் எனலாம்.

தன் ஓவியக் கூடத்திலிருந்து கடைசி மனிதனும் வெளியேறும் கணத்துக்காக அவர் எப்போதும் காத்திருப்பார். அக்காத்திருப்பின் தவிப்பு எனக்குத் தெரியும். என்னைப் போகச்சொல்லி ஒரு நாளும் சொன்னதில்லை. எல்லோரும் போனபின் அக்கூடத்தின் எல்லா விளக்குகளையும் என்னை அணைக்கச் சொல்வார்.

அதற்காகவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஆணியடிக்கப்பட்ட மரப்பலகையில் ஒரு செவ்வக வடிவிலான கண்ணாடியைப் பொருத்துவார். இருட்டில் அவர் கையிலிருந்து புகையும் கோல்ட் பிளாக் சிகரெட் கூட எனக்குத் தெரியாது.

கண்ணாடிக்கு முன் 40’x50” , 30”x40” என்ற அளவிலான மிகப்பெரிய துணி பேனரோ, பெயிண்ட் அடிக்கப்பட்ட தகர ஃபிரேம்களோ அவருக்காகக் காத்திருக்கும்.

தனியறையில் ஒருவனின் தொடுதல் வேண்டி மல்லார்ந்து படுத்திருக்கும் வேட்கை கொண்ட பெண்ணின் விரகதாபம் போன்றது அது.

தான் வரையப்போகும் படத்தை அக்கண்ணாடியில் சின்னஞ்சிறுசாக வரைந்து, அம்மரச்சட்டத்தில் பொருத்தி இரண்டடி பின்னகர்ந்து ஒரு டார்ச் லைட்டில் அக்கண்ணாடியின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுவார்.

ஒரு தேர்ந்த வேட்டைக்காரனின் லாவகமும், கவனமும் குவியும் கணமது. இப்போது அந்தப்படம் எதிரிலிருந்த பேனரில் அசாத்தியமான பெரிய சைசில் பிரதிபலிக்கும்.

விளக்குகள் மீண்டும் ஒளியூட்டப்படும்.

ஒரு சாய்விருக்கையிலிருந்து கணநேரம்  படத்தை அவதானித்துக்கொள்வார். அதற்குள் ஆறேழு கோல்ட் பிளாக் சிகரெட்டுகள் புகைந்து சாம்பலாகியிருக்கும். கறுப்பு வண்ணம் தோய்க்கப்பட்ட பிரஷ்ஷில் அப்படத்தை அப்படியே ஒற்றி ஒற்றி எடுப்பார்.



ஒவ்வொரு ஒற்றலும், அப்போதுதான் தலைகுளித்து ஈரம் சொட்ட சொட்ட குளியலறையிலிருந்து வந்து சிந்தும் ஒரு யுவதியின் முத்தத்திற்கு ஒப்பானது.

ஓவியக்கூடம் இழுத்து மூடப்படும் அப்பின்னிரவில், தோளில் தொங்கும் ஜோல்னா பையோடு என் கேரியரற்ற சைக்கிளில் தனியே வீட்டிற்கு வருவேன். மனம் அவரின் அசுரத்தனமான அந்த இயங்குதலிலேயே கிடக்கும்.
விவாதம் சூடேறும் நாட்களில், “நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்டே இல்லை, வெறும் சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்எனக் குரலை உயர்த்தியிருக்கிறேன்.

ஒரு ஓவியத்தை சொந்தமாக உங்களால் உருவாக்க முடியாது, பல்லவன், நீங்கள் வெறுமனே நகலெடுத்திருக்கிறீர்கள் என அவரைச் சீண்டுவேன்,
ஒரு பார்வையில் என்னைக் கடந்துவிடுவார். ஒருவேளை இப்போது அவர் ஆரம்பித்திருக்கும் இரண்டாம் ஆட்டத்திற்கான காத்திருப்பு என அதை இப்போது எடுத்துக் கொள்கிறேன்.

அவ்வண்ணமே அவர் வரைந்த சில்க்ஸ்மிதாவின் ஒரு ஒயின்ஷாப் ஓவியம், ஆர்டர் கொடுத்தவரால் நீண்டநாள் எடுத்து செல்லப்படாமலேயே அவர் ஓவியக்கூடத்திற்குப் பக்கத்து சந்தில் வைக்கப்பட்டிருந்தது. அக்கூடத்திற்கு சில்க்ஸ்மிதா தெரு என  வெகுஜனங்களால் பெயரிடப்பட்டது. யாராவது ஒருவன் தொட்டால், ஸ்மிதா எழுந்து வந்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கையிலும், ஆர்வத்திலும் பல நூறு பேர்கள் அப்பேனரை ஸ்பரிசிப்பதை நான் தூர நின்று ரசித்திருக்கிறேன்.

மிகு போதையில் அதை முத்தமிடுவதும், கட்டி அணைக்க முயலுவதும், வணங்குவதுமான பல விசித்திர மனிதர்களை ஒரு புன்னகையுடன் கடந்திருக்கிறேன்.

பெரியார் சிலைக்கு எதிரிலிருந்த மணி டீக்கடைக்கு, ஒரு ஜோல்னா பையோடு நான் தேநீர் அருந்தும் படம். அப்போது ஊரெங்கும் பிரசித்தம் பெற்றது.அப்போர்டில் பார்த்த  யாரும் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்து, புன்னகைப்பார்கள்.

மெல்ல நான் பல்லவன் என்ற அந்த ஓவியனை, வாசிப்பின் பக்கம் நகர்த்த முயன்றேன். தோல்விதான் மிஞ்சியது. இன்னும் கணநேரம்தான், என நான் நினைக்கும் பொதெல்லாம் அவர் பின்னகர்ந்து ஓடிப்போய் தன் ஓவியக்கூடத்திற்குள்  அமர்ந்து கொள்வார்.

இருக்காதா பின்னே? நானே அந்த எனாமல் பெயிண்ட் வாசனையில் கிறுகிறுத்திருந்தபோது, அதையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுக்கு!?

செம்மண் கலந்து புரண்டோடும் ஒரு காட்டாற்றின் கட்டற்ற வெள்ளத்திலிருந்து கரை ஒதுங்கும் ஒரு காய்ந்த மரக்கட்டையைப் போல இத்தனிமையில் அவருடனான என் ஒவ்வொரு நாட்களையும் இப்போது  மீட்டெடுக்கிறேன்.

அரசு ஊழியர் சங்கத்திற்கான மாநில மாநாடு வேலூரில் நடந்தது. அதற்காக  மெகா பெரிய சைசில் ஒரு பேனரை வடிவமைக்கும் பொறுப்பை தோழர் சந்துரு, பல்லவனை நம்பி ஏற்றிருந்தார். வழக்கம்போல் வரைவதற்கான முன்னேற்பாடுகளில் நாங்கள் மூவருமிருந்தோம்.

கற்சிற்பங்களினான ஒரு ரஷ்ய ஓவியம் அதற்கென கண்டெடுக்கப்பட்டது. கண்ணாடி பிரதிபலிப்பு முடிந்து, அடுத்தநாள் காலை, வரைதல், துவங்கியது.
பல நாட்கள் நான் பல்லவனுக்காக டீயும், பில்டர் கோல்ட் பிளாக்கும் பாக்கெட், பாக்கெட்டாக வாங்கி வரும் பணியாளனாயிருக்கிறேன்.



அவர் வரைந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு சிகரெட் பற்ற வைத்த கையோடு, ஓவியம் பற்றிய தீவிர விவாதத்திற்கு நான் இன்னொரு தீக்குச்சியை உரசினேன்.

தீ மள மள வென பரவியது. ஆற்றாமையின் உக்கிரத்தில் அவர் ஐந்து லிட்டர் சிகப்பு பெயிண்ட் டப்பாவை எடுத்து ஓவியம் வரையப்பட்டிருந்த அந்த பெரிய பேனர் மீது விசிறினார்.

சந்துரு தோழர் மனமுடைந்து, இந்த நெருப்பை எதைக் கொண்டு அணைப்பது என தெரியாமல் தவிக்க, எதைக் கொண்டும் அணைக்க முடியாது என நான்  சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

பயத்தில் இரண்டு மூன்று நாட்கள் அப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. மூன்றாவது நாள் இரவு, அப்பேனர் முன்னிலும் அழகோடு 

உருமாற்றமடைந்து  பெரியார் சிலை எதிரில் ஏற்றப்பட்டிருந்தது. 
மக்கள் கூட்டம்கூட்டமாய் நின்று அதன் வனப்பை, பிரமாண்டத்தை ரசிப்பதைப்பார்த்து, ஒரு பெரும் கலைஞனை அவமதித்துவிட்ட  அவமானத்தில் ஒரு வாரம் அவர் ஓவியக் கூடம் பக்கமே போகாமல் இருந்துவிட்டேன்.

கலைஞனுக்கு  ஏது கோபமும், குரோதமும்? அடுத்த வாரமே ஒரு மூத்த அண்ணனின் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொண்டார்.’

அந்த வயதில் எப்போதுமே சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாக்கிட வேண்டும் என்ற துடிப்பு எங்கள் எல்லோரிடமும்  உண்டு. உலகப் புகழ்பெற்ற ஓவியனின் ஒரு ஓவியம். கடலுக்கிடையே உயர்ந்த ஒரு பாறை மீதமர்ந்து ஒரு சிங்கம் சூர்ய உதயத்தைப் பார்க்கும் காட்சி அது.

மஞ்சளும், ஆரஞ்சும், வெண்மையும், சிகப்புமாய் வர்ணம் அக்கடற் பரப்பை வியாபித்திருக்கும்.  நீலம் கடலிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருக்கும்.

அப்படத்தை ஒரு Painting Collections-ல் இருந்து எடுத்து புது உற்சாகத்தோடு  அடுத்த நாள் காலை பல்லவனிடம் காட்டினேன்.  இடது கையில் அதை வாங்கிப் பார்த்துவிட்டு வலதுகையில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு,

சொல்லு என்ன பண்ணனும்?”

இதை பெரிய பேனரா வரையணும்” - என் தயங்கிய வார்த்தைகளை அவர் உள்ளுக்குள் ரசிப்பதுத் தெரிந்தது.

பத்துடீசொல்லு
சொன்னேன்.

அன்றிரவும் ஆட்களின் அப்புறப்படுத்தலுக்குப் பின் கிடைத்த எங்கள் இருவருக்குமான தனிமையில் அவர் கண்ணாடியில் அச்சிங்கத்தின் பிடறி மயிரை வரைந்து முடித்து எக்ஸ்போஸ் பண்ணும்வரை உடனிருந்தேன்.

பொறப்படு

அந்த பொறப்படுவில் ஏதோ ஒரு உத்தரவிருந்தது.  புறப்பட்டேன்.  இந்த ஆள் முகத்திலேயே பட்டுவிடக்கூடாது என்ற வெறியில் சைக்கிள் மிதித்தேன்.
அன்று மாலை யார் உந்துதலுமின்றியே என் கால்கள் பல்லவன் ஆர்ட்ஸை நோக்கி நடந்தது.

சில்க் ஸ்மிதா, வைக்கப்பட்டிருந்த அதே கார்னரில் சிங்கம் சூர்ய உதயம் பார்க்கும் அப்படம் முழுமைப் பெற்று வைக்கப்பட்டிருந்தது.  சுற்றிலும் இரண்டு மூன்று பேர் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூர நின்று ஒரு வெள்ளைக்காரன் அதைப் புகைப்பட மெடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து அவனுடன் போய் நின்று கொண்டு படத்தை உள்வாங்கினேன். ஓவியம் ஒரிஜனலைவிட மெருகேறியிருந்தது. இன்னும் கண நேரத்தில் சூர்யக் கதிர்கள் தன் முரட்டு உடம்பில் படப்போகும் பரவசத்தில்  சிங்கம் அதை உற்றுப் பார்ப்பது மாதிரியிருந்தது.

நான் அநியாயத்திற்கு பரவசமாகி, என் பல்லவனை அணைத்துக் கொண்டேன்.
இப்படி பல நிகழ்வுகளில் நான் வியப்படைந்த தருணங்கள் ஒரு நாள் முடிவுக்கு வந்தன.

பிரிந்த நண்பர்களைப்பற்றிய தவறான தகவல்களை மட்டுமே நிகழ்காலத்தில் தாங்களும் நண்பர்களாய்  இருப்பதாய் தங்களையே நினைத்துக் கொள்ளும் நண்பர்கள் தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அது எங்கள் இருவரின் வாழ்விலும் எங்கள் நண்பர்களால்  துல்லியமாய் நிறைவேற்றப்பட்டது.

காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடக்கூடும் என்பதில் பெரும் நம்பிக்கை உடையவன்  நான்.

இதோ பல்லவன் என்ற கருப்பசாமியின் அய்யா, அல்லது ஓவியன், பீனிக்ஸ் என்ற இறந்துபோன என் இன்னொரு நண்பனை நினைவு வைத்து, அவனை தன் ஓவியத்தால் உயிர்பித்து எனக்கு பரிசளித்து என்னை நோக்கி நட்புக்கரம் நீட்டுகிறார்.

நான் என்னில் கசிகிறேன்.

அப்படத்தை திரையில் பெரிதாக்கி என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்  காட்சிப்படுத்துகிறேன்.

உணர்வு மேலிட்டு, ஷைலஜா, பல்லவனை அழைத்து கண்ணீர் மல்க ஒரு ஓவியனின்  உயிர்த்தெழுதலுக்கான  தன் நன்றியைத்  தெரிவிக்கிறாள்.

என் பிள்ளைகள் என் அருகிலமர்ந்து தன் பெரியப்பாவின் கடந்த கால படைப்பூக்கமுள்ள நாட்களை அவர்களுக்காகச்  சொல்லச் சொல்கிறார்கள்.

நான் அவர்களுக்கு பல்லவன் என்ற ஒரு ஓவியனின் கதையைச் சொல்கிறேன். என் கதையின் நாயகன் தன் வீட்டின் ஒரு மூலையிலமர்ந்து மரணித்துப் போன ஆறேழு கலைஞர்களை தன் தூரிகையின் மூலம் உயிர்பித்துவிட  முயன்று கொண்டிருக்கிறான்.