Monday, January 13, 2020

நிலமெங்கும் சொற்களை விதைப்பவன்

பாரதி கிருஷ்ணகுமார்


திருச்சியில் நடந்த தமுஎச மாநாட்டின் பின்னிரவு முழுவதும் நடந்த ஒரு அரட்டைக் கச்சேரியில்தான் கவிஞர். கந்தர்வன் எனக்கு கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரதுப் புனைப்பெயர் முகவை பாலாஜி. ஆளைப் பிடித்திருந்தது. பெயரைப் பிடிக்கவில்லை. எனக்கு அந்தப்பெயர் பிடிக்கவில்லை என்பது அவருக்கு தெரிந்ததோ என்னமோ கொஞ்ச நாட்களிலேயே அவர் தன் பெயரை பாரதி.கிருஷ்ணகுமார் என எனக்குப் பிடித்தமான பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
அடுத்த வருடமே சென்னையில் நடந்த ஒரு நாடக விழாவில் கவிஞர். கந்தர்வனின் ‘விலைவாசி’ என்ற நவீன நாடகத்தில் கிருஷ்ணகுமார் விலைவாசியாக நடித்தார். அவர் உயரத்திற்கு விலைவாசி உயர்ந்துகொண்டே போகும். எந்த வசனமும் இன்றியே ஆளின் உயரத்திற்கே. பார்வையாளர்கள்  கை தட்டிக் கொண்டேயிருந்தார்கள்.
கைதட்டல் அடங்கின பத்தாவது நிமிடத்தில் நானும் அவரும் தனித்திருந்தோம். எங்கள் உரையாடலின் போது தன்னியல்பாக எங்கள் கைகள் கோர்த்திருந்ததைக் கவனித்தேன். அவரின் உயரமும், சிரிப்பும், ஒழுங்கும், எதையும் அழகியலோடு அணுகும் நேர்த்தியும் இம்மனிதனை தனியே உனக்குள் பதித்துக் கொள் என்று ஒரு அசரீரி சொன்னது.
நான் அவ்விதமே அவரை என்னுள் ஆழமாக பதித்து கொண்டேன். அசரீரிகளின் சொற்களை புறந்தள்ளி விட முடியாதில்லையா? அது தெய்வ குற்றம்.
அப்போது கிருஷ்ணகுமார் பாண்டியன் கிராம வங்கிக்கு போய் வந்து கொண்டிருந்தார். அவர் அங்கு பணி புரிவதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் உ.ஆ.க்கு போய் வந்து கொண்டிருக்க வில்லையா? அப்படித்தான் அதுவும் என எங்களை ஒப்பிட்டுக் கொண்டேன்.
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் அவர் தன் குழுவோடும் தனித்தும் இடைவெளியின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நான் பெரிதும் மதிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மிகப்பிடித்தமானப் பேச்சாளனாகவும், மனிதனாகவும் கிருஷ்ணகுமார் இருந்தார். அவருக்காக அடிகளார் தான் மேற்கொண்ட பல ஆகம விதிகளை மீறிக் கொண்டேயிருந்ததை தூரத்திலிருந்து கவனித்திருக்கிறேன்.
வங்கி தொழிற்சங்கத்தில் அகில இந்திய அளவில் பொறுப்பில் இருந்தார். இலக்கியத்தையும், தொழிற்சங்க அரசியலையும் அதனதன் எல்லைகளில் நின்று அதன் பணிகளை மேற்கொண்டார். பின்னிரவு வரை வாசிப்பு என்பதை ஒரு தவம் மாதிரி தனக்குப் பழக்கிக் கொண்டவர்களில் கிருஷ்ணகுமாரும் ஒருவர்.
ஞானக்கூத்தனின் பல கவிதைகளை ஞானக்கூத்தனே மறந்திருக்கக் கூடும். அத்தனை லாவகமாக கவித்துவ மொழி ஒரு சிந்தலுமின்றி தன் முன் பரந்து விரிந்திருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். பல பேச்சாளர்களை இந்த முப்பது வருடங்களில் கவனித்து வருகிறேன். பாரதியைத் தாண்டாதவர்கள், பாரதிதாசனை தொட தயங்குபவர்கள், வைரமுத்து, மேத்தாவோடு நின்று கொண்டு சிலையாகிவிடுபவர்கள் எல்லாமே ஓரிடத்தில் நின்று ஜீவனம் செய்பவர்களே அதிகம்.
கிருஷ்ணமுமார் அவர்களிடமிருந்து பல ஆயிரம் மைல்கள் முன்னகர்ந்து வந்து, கல்யாண்ஜியையும், மனுஷ்யபுத்திரனையும், சமயவேலையும் தனக்குள் இருத்திக் கொண்டு அவர்களின் எழுத்தை மேடைகளில் பிரவாகித்தார். நம்மை நெகிழவைத்தார். அழச் சொன்னார். அவருக்குக் கட்டுப்பட்ட வாசகர்கள் அவர் சொல்லுக்கு மயங்கினார்கள். மிரண்டார்கள்.
இந்த மனிதன் ஏன் பட்டிமன்றம் என்ற கடைந்தெடுத்த ஒரு கேளிக்கையில் போய் பங்கெடுக்கிறார் என நினைக்கும்போதே அதிலிருந்து துண்டித்துக் தன்னை முழுவதுமாக கொண்டார். உள்ளுணர்வுகளை படிக்க தெரிந்த கலைஞன்.
எனக்கு இன்னும் நெருக்கமான தோழனாகி இன்றுவரை எங்கள் தோழமை நீடிப்பது அக்கணத்திலிருந்துதான். அசாத்தியமான தொழிற்சங்க தலைமை. சொற்களில் விளையாடின் அந்த மைய ஆட்டக்காரனை ஒருநாள் திண்டுக்கல்லில் நடந்த பாரதிராஜா திரைப்படங்களுக்கான ஆய்வரங்கத்திற்கு அழைத்துப் போனது காலம். 
மேடையை ஆடுகளமாக்கி அவர் திரைப்பட ஜாம்பவான்களுக்கு முன் நிகழ்த்திய அசாத்தியமானதொரு உரையில் பாரதிராஜா கரைந்து போகிறார். தன் உடல் முழுவதும் கிருஷ்ணகுமார் மீது பட அவரை நெருக்கி அணைத்துக் கொள்கிறார்.
அன்றிரவு திண்டுக்கல் விடுதியில் நடந்த ஒரு மது விருந்துக்கு கிருஷ்ணகுமாரை அழைக்கிறார் பாரதிராஜா.
அவரை அருகிலிருந்து அவதானிக்கிறார். என்ன ஊரு?என்ன வேலை? எப்படி இப்படி தமிழ் பேசுகிறாய்? எத்தனை ஆண்டு வாசிப்பு உன் உடம்பில் இருக்கிறது? இப்படி பல ஏன், என்ன  கேள்விகளால் அந்த இரவு நீண்டுகொண்டே போகிறது.
தன்னோடு சினிமாவில் பணியற்றுமாறு பாரதிராஜா அழைக்கிறார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணகுமார் ஒரு முடிவுக்கு வருகிறார். வங்கி வேலையை விட்டுவிடுவது. சொற்போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது. இந்த இயக்குநர் பாரதிராஜவோடு இணைந்து சினிமாவைக் கற்றுக்கொள்வது.
முடிவெடுத்த இத்தருணம் சரியானதுதானா என்று இருபது வருட கடத்தலுக்குப் பிறகும் தீர்க்கமான பதிலில்லை நண்பர்களே!
வங்கிவேலை, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம், லௌகீக சுகங்கள், கூடவே இலக்கியம். இதுதான் நாம் வகுத்து வைத்திருக்கின்ற செல்நெறிகள்.
எப்போதுமே துனிந்த ஒரு கலைஞன் இதை சுலபமாக மீறுகிறான். ஐம்பெத்தெட்டு வயதுவரை கணக்கு டேலி ஆகல, அதிகாரிக்கு அடங்கி, பணக்கட்டுகளை எண்ணி முடித்து, பக்கத்து இருக்கையிலிருந்து வரும் மல்லிகைப் பூவின் மணத்தை கூட திருட்டுத்தனமாய் நுகர்ந்து, ஐம்பெத்தெட்டில் ஏதோ ஒரு மாதத்தின் முப்பதிலோ, முப்பத்தி ஒன்றிலோ ரிட்டையராகி, ஒரு ஸ்வீட், மிக்சர், காபி, கவிதை பார்ட்டி முடித்து, சில சால்வைகளும் ஒரு பூ மாலையுமாய்  அரசு வாகனத்தில் வீட்டில் போய் இறக்கிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் சக ஊழியர்களுக்கு பை சொல்லி...
இந்த நீட்டிப்பை ஒரு கலைஞன் மிகச் சுலபமாக உதறுகிறான். தன் தினந்தோற அப்பத்திற்கும், ரசத்திற்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லாத போதும் அவன் தனக்குத்தானே தன் தலையில் அந்த முள் முடியை எடுத்து அணிந்து கொள்கிறான்.
காலம்  ஈவிரக்கமின்றி அந்த முள்முடி மீது சம்மட்டியால் அடிக்கிறது. அவன் தாங்கிக் கொள்கிறான். ரத்தம் சொட்ட சொட்ட அடுத்தநாள் படபிடிப்பிற்கு நாலு மணிக்கு எழுந்து போகிறான். பத்து டூ ஐந்து என்ற தன் அன்றாடங்களிலிருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொள்கிறான்.
இதையெல்லாம் கிருஷ்ணகுமார் செய்தார். நிரந்தர சம்பளம், மனைவி, குடும்பம் என எல்லா நிராகரிப்புகளும் இருபக்கமும் நிகழ்ந்தன.
அவர் ஒரு தவம் மாதிரி சினிமாவை தனக்கு வசப்படுத்திக் கொள்ளமுடியுமா? என வெறிகொண்டு அலைந்தார்.
கற்றிருக்கிறோம், கேட்டிருக்கிறோம், ஆனாலும் அந்த கிணற்றில் குதித்துதான் எழுவோமே என்ற உந்துதல்தான் பல கலைஞர்களை அப்பாழுங்கிணற்றில் தள்ளுகிறது. ஒரு வேளை தன் முழுகலில் மட்டும்,  ஒரு தங்கப்புதையல் கிடைத்துவிடாதா என்ற உந்துதல். கிருஷ்ண குமாருக்கு. கிணற்றின் ஆழத்திலும் இன்னொரு முள்முடிதான் கால் துழாவலில் அகப்பட்டது கிருஷ்ணகுமாருக்கு இது காலுக்கானது.
இப்போது அதே ரத்தம் காலிலிருந்து சொட்ட சொட்ட அவர் படப்பிடிப்பு தளங்களில் நடக்கிறார். தன் ரத்தத்தை தானே பார்க்க நேருகையில் அது தனதில்லை என முன்னகர்கிறார்.
எல்லோருக்கும் போலவே அவருக்கும் சினிமா துரோகத்தை, பரிசளித்தது ஒவ்வொரு நாளும் அவமதிப்பை கொடுத்துக் கொண்டேயி ருந்தது. வாஞ்சையான மனிதர்கள் திரைப்பட தளங்களுக்கு வெளியில் இருந்ததை படப்பிடிப்பு முடிந்து, ஏதோ சற்று நேரம் படுத்தெழும் தருணங்களில் அவர்  நினைத்துக்கொண்டார்.
நகரங்களில் தான் பேசிய கூட்டங்களில் ஒரு பேரலை மாதிரி எழுந்தடங்கின ஆர்ப்பரிப்புகள். தொழிற்சங்க தலைமையாய் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டு பல அதிகாரிகளின் இரவுத்தூக்கத்தை, ஒரு பிசாசின் பிராண்டல்களோடு சிதைத்துப் போட்ட நாட்களை அவர் கேமராவிற்கு பின்னிருந்து கோணம் பார்த்த கேமரா மேனுக்கும், இயக்குநருக்கும் பின்னாலிருந்து நினைத்துக் கொண்டார்.
சமீபத்தில் கோணங்கி என்வீட்டில் மூன்று முழு நாட்கள் தங்கியிருந்தான். அவன் குளித்துவிட்டு வந்து சாப்பிட வைத்திருந்த ஒரு ஆப்பிள் பழத்தை, ஒரு குரங்கு சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அவனை அற்பமாக ஏறெடுத்து பார்த்தது.
நீ பெரிய பின் நவீனத்துவ எழுத்தாளனாகவோ, மேஜிக்கல் ரியலிச எழுத்தில் ஜாலம் காட்டுபவனாகவோ இருக்கலாம் நண்பா! உனக்கான ஒரு ஆப்பிளை உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லைதானே?
குரங்கின் குரல் அவன் காதுகளில் கேட்டது. ஐந்து நிமிடத்தில். தன் துணிமணிகளை பெட்டியில் அடைத்து, கீழிறங்கி வந்து,
“நான் போறன் பவா”
“ஏன்டா திடீர்னு?”
“குரங்கு என்னைப் போகச் சொல்லிடுச்சி. எனக்கான ஆப்பிளை அது புசிக்க ஆரம்பித்தால் என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“உனக்கு இங்க வேலை இல்லடா, இது எனக்கான பிரதேசம் ,எனக்கான ஃச்ணஞீண்ஞிச்ணீஞு உன் சொந்த நிலப்பரப்புக்கு நீ புறப்படுன்னு”
அதேதான் கிருஷ்ணகுமாருக்கும் அவர் தன் தற்காலிகமாய் தள்ளி வைத்திருந்த தன் சொந்த நிலப்பரப்பை நோக்கி நகரத் துவங்கினார். நான் அறிந்த வரையில் அவருக்கு தமிழ்நாட்டிலயே பிடித்தமான ஊர் மதுரை தான்.
அங்குதான் அவர் ஆசான் எஸ்.ஏ.பி.யை அறிந்து கொண்டார். எம்.எல். அரசியல்தான் மாணவப்பருவத்தில் அவரை ஈர்த்த அரசியல். சிபிஎம், சிபிஐ, கட்சிகள் ஆயிரம் சமாதானம் சொல்லி, திமுகவின் அல்லது அதிமுகவின் குட்டி ஜமீன்தார்களுக்கு, ஊழலில் பெருத்த உடம்புள்ளவர்களுக்கு, ஆதிக்க ஜாதி திமிறில் தனக்கும் கீழுள்ளவனை கட்சியின் பெயரால் அடக்கி வைத்திருப்பவனுக்கு  தேர்தல் நேரத்தில் போஸ்டர் ஒட்ட வைக்கும் எம்.எஸ். அரசியல் அப்படியல்ல.
தங்கள் தோழர்கள் தங்கள் வியர்வையின் மிச்சத்தில் சேகரித்த தேர்தல் நிதி  ஊர் ஊராய் போய் ஓட்டுக் கேட்க  செலவழியும் திமுக, அதிமுக காரனுக்கு.
எந்த தேர்தல் நேரத்து சமாதானங்களும் ,அரசியல் தந்திரங்களும் தத்துவார்த்தரீதியில் தேர்ச்சி பெற்றிருந்த கிருஷ்ணகுமாரின் மனதைத் தொடவில்லை.
மார்க்சியக் கொள்கைகளின்  உச்சமே எம்.எல் அரசியல்தான். மத்ததெல்லாம் போலிகள் என அவர் உறுதியாய் நம்பினார்.
இந்தியாவிற்குத் தேவை ஆயுதம் தாங்கிய புரட்சி மட்டுமே. இரண்டு மூன்று எம்.பி.யோ, பத்து பதினைந்து எம்.எல்.ஏ.வோ இல்லை.
இதையெல்லாம் அவர்கள் போட்டுத்தந்த மேடைகளில் உரத்து முழங்கினார். யாரையும் தன் வசப்படுத்தும் ஆ.ஓ.வின் உடல் மொழியும், குரலும் மக்கள் கூட்டத்தில் ஏவுகணைகள் மாதிரி ஊடுறுவியது. ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், இன்னும் கொஞ்சநாளில் புரட்சி வெடித்துவிடும், மதுரையில் அதை நிறைவேற்றும் பொறுப்பை  கட்சியினரிடம் கேட்டு பெற்றுவிட வேண்டும் என பெருங்கனவு கண்டார்.
ஆனால் கூட்டங்கள் முடிந்த பின்னிரவுகளிலும் திறந்திருந்த மதுரை பரோட்டா கடைகளில், அவருக்கு நாலு பரோட்டாவும், இரண்டு ஆம்லேட்களும் தோழர்களால் ஆர்டர் செய்யப்பட்டன.
ஒரு நாள் அவர் தன் நெருங்கிய சகாவிடம் கேட்டார். தோழர் நான் கூட்டங்களில் பேசுவதோடு சரியா? நம் குழுக்கூட்டங்களுக்குக் கூட நீங்கள் என்னை அழைப்பதில்லையே?
எனக்குத் தெரியாமல் நீங்கள் ரகசியமாய் இயங்குகிறீர்கள்! அதிலெல்லாம் எனக்கு எந்த பங்களிப்பும் இல்லையா?
இல்லை என்பதை ஒவ்வொருத்தோழரும் ஒவ்வொருவிதமாகச் சொன்னார்கள்.
ரொட்டியில் ஒருவர் தேனையும், ஒருவர் ஜாமையும், ஒருவர் வெண்ணயையும் தடவி அவருக்குத் தந்தார்கள்.
அந்த இரவில் அவருக்கு எல்லாமே கசந்தது.
அடுத்த நாள் காலை அவருக்கு  தெளிவுடன் விடிந்தது. அவர் நீண்ட தூரம் நடந்து சென்று அடைந்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர அலுவலகம். மாவட்ட செயலாளர் முனியாண்டி அங்கிருக்கிறார்.  அடுத்து அவர்  சங்கமமானது எஸ்.ஏ.பி. என்ற பெரும் ஆளுமையுடன்.
இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்ற கண நேர யோசனையில் தன் நெற்றியைச் சுருக்கி, அது விரிவதற்குள் அவர் கிருஷ்ணகுமாரை அணைத்துக்கொள்கிறார்
அவர்கள் டீயும், சிகரெட்டுமாய் பலநேரம் உரையாடுகிறார்கள். கிருஷ்ணகுமாருக்கு தேர்தல் அரசியல் மீதான கசப்பை, சக்கரை தூக்கலா டீ சொல்லிஎஸ்,ஏ.பி. தணிக்கிறார்.
மார்க்சியம் இந்தியா மாதிரியான ஒரு முதலாளித்துவ நாட்டில் எப்படி செயலாற்ற முடியும் என்று தன் அனுபவமேறிய வார்த்தைகளால் தோழர். எஸ்.ஏ.பி. தன் சகதோழனுக்குக் கடத்துகிறார். ஆனாலும் இன்னும் பல கேள்விகள்  புதுசுபுதுசாய் அவருக்கு வந்து கொண்டேயிருந்தன அந்த இளந்தோழனுக்கு. சலிப்படையாத நேரக்கடத்தலில் அவைகளை ஒவ்வொன்றாக அவரே வெளியே எடுத்து பி.கே.வை சமாதானப்படுத்துகிறார். பல இரவுகளைகுடித்த தர்கம் அவை.
ஒரு இளம் கம்யூனிஸ்டை வென்றெடுக்க நீங்கள் பல பத்துமணி நேரத்தை, பல ஆயிரக்கணக்கான சொற்களை, நீங்கள் அடைந்த மார்க்சிய மெஞ்ஞானத்தை செலவிட்டே ஆகவேண்டும் தோழர்களே!
அந்த நிதானம் நானறிந்து தோழர்.வி.பி.சி.யிடமும், தோழர் எஸ்.ஏ.பி.யிடமும் மட்டுமே மிஞ்சி யிருந்தது. மற்றவர்களுக்கு இல்லை என்ற நிராகரிப்பு இல்லை. மற்றவர்களிடம்  ஒரு சாதாரண முப்பது வயது பையனிடம் நாம் ஏன் இத்தனை அனுபவச் செழுமையை கரைத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னங்காரம் இருந்தது.
இப்போது கிருஷ்ணகுமார் தமுஎச என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜன அரங்கில் முன்னணி ஊழியராக தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இருவருக்குமே நிறைந்திருந்த இரவுகள் அதுதான்.
அடுத்த நாள் ஆரம்பித்த பயணம் கிருஷ்ணகுமாருக்கு, எனக்குத் தெரிந்து இன்னுமே நிறைவடையவில்லை. கட்சியும், ஸ்தாபனமும் போகச்சொன்ன இடங்களுக்கெல்லாம் அவர் இரயிலில், பஸ்ஸில், லாரியில், டெம்போவில் என பயணித்துக் கொண்டேயிருந்தார்.
கை நிறைய சம்பாதித்த வேலையை சினிமாவுக்காக பறிகொடுத்து, திரைப்படத் துரோககங்களால் அங்கும் நிலைக்க முடியாமல், அவர் தன் ஸ்தாபனத்தை மட்டுமே தன் ஜீவனாக நம்பிய காலம் ஒன்று அவருக்குமிருந்தது.
ஸ்தாபன ஒழுங்குகளில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்காதவர்கள், அதை விட்டு விலக நேரும் கொடுமை வாழ்நாளில் நேராமல் ஒருவருக்கும்  இருக்கவேண்டும்.
மனுஷ்ய புத்திரன் தன் ஒரு கவிதையில் சொல்வது மாதிரி...
பாம்பு நிலவைத்
தின்னும் கொடுமை
எல்லோரும் பார்க்க நிகழ்கிறது.
அது எப்போதும் ஸ்தாபனத்திலிருந்து இயங்கி பின் விட்டு விலகி நிற்கும் படைப்பாளிகளுக்கு உக்ரமாக நிகழும். தங்கள் ஸ்தாபன கட்டுபாட்டுக்குள் பாதுகாப்பாக நின்றுக் கொண்டிருப்பவர்கள் கைகொள்ளாத அளவுக்கு வெளியேறியவன் மேல் கல் எறிவார்கள்.
ஆனால் நேற்றுவரை அக்கலைஞனின் அலைந்து திரிதல், இழத்தல் எதுவும் அவர்களின் மூர்க்கம் முன் ஒரு தூசளவிற்கு கூட பொருட்படுத்தப்படாது.
புயல் எப்போதும் வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதாகத் தானே வானிலை அறிக்கையில் சொல்வார்கள்.
அந்த வருடம் அது திருவண்ணாமலையில் மையம் கொண்டிருந்தது. மப்பும், மந்தாரமும், இடியும் மின்னலும், மழையுமாய்  கொட்டித்தீர்த்த அந்நாளின் ஒன்றில்தான் ஜேக்டோ-ஜியோ-அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் அது ஒரு பௌதீக இயக்கமாக மாறி ஆட்சியாளர்களை நடுங்கச் செய்தது. எம்.ஜி.ஆர்.அப்போது முதல்வர்.
எல்லா ஊர் இயக்க போராட்டத்துக்கும் அப்போது கிருஷ்ணகுமாரின் எழுச்சியுரை தேவைப்பட்டது. ஆசிரியர் அரசு ஊழியரோ அல்லாத ஒருவர் இப்போராட்டத்தின் நியாயத்தை விளக்கிப் பேசவேண்டும் என்ற உள்ளுணர்வு அரசு ஊழியர் ஆசிரிய இயக்கங்களின் தலைமைக்கு இருந்தது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருநெல்வேலியென ஒரு நாளைக்கு இரு கூட்டங்களில் பி.கே. பேசினார். கிடைக்கும் பேருந்து நெரிசலில் அடுத்த கூட்டத்திற்கான மனத்தயாரிப்பு நிகழ்ந்து நிறையும் நாட்கள் அவை.
வருவாய்த்துறை ஊழியர் சங்க தலைவர் தோழர் வேலூர் சிவராஜ் அழைப்பின் பேரில் வேலூர் கூட்டத்தை காலையில் முடித்துக்கொண்டு மாலை திருவண்ணாமலைக்கு பெரு மழையோடு வந்து சேர்கிறார்.
ஆறரை மணிக்கு அபிராமி கல்யாண மண்டபத்தில் கட்டுக்கடங்காத அரசு ஊழியர் ஆசிரியர் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். அநேகமாக அதற்கு முன்னும் பின்னும் ஆ.ஓ.யின் அப்படி ஒரு உள்ளார்ந்த உரையை நான் கேட்டதில்லை.பேச ஆரம்பித்த பத்தாவது நிமிடம் கூட்டம் சொற்களில் உறைந்து போகிறது. அவர் மேடையை ஆடுகளமாக்கி களமிறங்குகிறார். யாரோ  எனக்கு அவர் பெயர் தெரியும்  ‘மரித்து போனவர்களை மரியாதை செய்வோம்’ ஒரு தோழர் குடித்துவிட்டு அந்த உறைந்த பனிக்கட்டிகளின் மேலேறி நின்று சலம்புகிறார்.
தன் உரையை பாதியில் நிறுத்திவிட்டு அவனை தூக்கி வெளியே போடுங்கள் என கத்துகிறார் பி.கே. ஆறேழு பேர்கள் உடனே அதை நிறைவேற்றுகிறார்கள்.
மீண்டும் நதி உறைகிறது.
அவர் விட்ட புள்ளியிலிருந்து பெரும் பிரவாகமெடுக்கிறார். பேச்சியினிடையே எம்.ஜி.ஆரை நோக்கி, உங்களுக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்குமென சொல்வது உண்மையெனில் உங்கள் தாயின் வயதையொத்த இன்னொரு தாயை நாளெல்லாம் சத்துணவு கூட அனலில் சோறாக்கிப் போட முப்பது நாட்களுக்கு வெறும் நூறு ரூபாய் கூலி என நிர்மானித்தாயே, “தீடச்t டிண் தூணிதணூ ணீணிடூடிஞிதூ, ஐ இச்ணூஞு tணி Mதூ ஊணிணிt‘ என கோபத்தின் உச்சத்தில் வேறு மொழியை பிரயோகிக்கிறார்...
கூட்டம் பெரும் அச்சத்திலும், உறைநிலையை மீறி அனலிலும் தகிக்கிறது.
அதே கோபத்தோடு மேடையை விட்டிறக்கி ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கட்சியின் தலைமை வரை அப்புகார் செல்கிறது. எத்தனை கோபமெனினும் ஒரு முதல்வரை எப்படி செருப்பால் அடிப்பேன் என சொல்ல முடியும்?
பதில் சொல்ல வேண்டிய அரசு ஊழியர் சங்க தலைவர்கள் அமைதி காக்கிறார்கள்.
நல்ல வேளை ஒரு மூத்த தோழருக்கு அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருந்தது என பி.கே. புன்னகைக்கிறார்
அந்த தோழர் நிதானமாகச் சொல்கிறார்
ஐ ஞிச்ணூஞு tணி ட்தூ ஞூணிணிt என்றால் நீ என் செருப்புக்கு சமம் என்றுதான் அர்த்தம். அடிப்பேன் என்றல்ல...
மற்றவர்கள் காப்பாற்றாமல் விட்ட இடத்தை கவிஞர் கந்தர்வன் தொடர்கிறார். கலைஞர்கள் அப்படி உணர்வுவயப்படுவார்கள்தான் தோழர். ஸ்தாபனம் எல்லா நேரத்திலும் அவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது அவர்கள் திமிறிக்கொண்டேதான்யிருப்பார்கள்.
இப்போது கட்சி அமைதி காத்தது.
கந்தர்வன், கிருஷ்ணகுமாரை நாயகனாக வைத்து ஒரு கதை எழுதினார். எனக்கும் மிகப்பிடித்தமான கந்தர்வன் கதைகளில் ஒன்று அது. இருவருக்குமே அதன் தலைப்பு இப்போது நினைவில் இல்லை.
முகமே அரசு எந்திரத்தைப் போல மரத்துப்போன ஒரு சூப்பிரடெண்ட் தன் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்டில் முதன் முதலில் ஒரு புல்புல்தாரா  வாங்குவார் அக்கதையில். அப்படி அவரை வாங்க வைத்த இன்னொரு அரசு ஊழியனும் கலைஞனுமானவன்  கிருஷ்ணகுமார்.
நீண்ட நாட்கள் கழித்து நடந்த ஒரு கலை இரவில் ஆ.ஓ.விடம் அன்பு தியேட்டர்  அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த அந்த அரசு ஊழியரை  நான் சட்டென அடையாளங்கண்டுபிடித்ததைப்பார்த்து பி.கே.சொன்னார், ‘இவரைத்தான் அன்று அந்த போராட்டக் கூட்டத்தில் நான் தூக்கி வெளியே எறியச்சொன்னேன் பவா” இப்போது அவர் சொல்கிறார், “உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். என் அன்பை எப்படி வெளிப்படுத்தணுங்கிற தடுமாற்றத்துல அப்படி பண்ணிட்டேன். என்ன? அதை நான் குடிக்காம வெளிப்படுத்தியிருக்கணும், இப்ப எக்கி ஒரு முத்தம் தரட்டுமா? இப்போ நான் குடிக்கல”....கலைஞனின் வாழ்வு, அன்பு எப்படியெல்லாம் சுழல்கிறது பார்த்தீர்களா?
எழுத்தாளர் ஜெயகாந்தன் எப்போதுமே  தன் எழுத்துக்குப் பின்னே எவனும் இல்லையென்றே உறுதியாய் நம்பினார். அதனாலயே அவர் எவன் எழுத்தையும் வாசிப்பதில்லை என்ற முரட்டுத்தனத்தை ஒருமூட நம்பிக்கையைப் போல் இறதிவரை பின் பற்றினார்.
ஆனால் தன் மேடைப்பேச்சு எப்படி எஸ்.ராமகிருஷ்ணன் (மார்க்சிய அறிஞர்), தோழர் ஜீவாவின் தொடர்ச்சியோ அதே போல தன் தொடர்ச்சி யார் யாரென அவர் சிலரை உள்ளுக்குள் உணர்ந்திருந்தார்.
பி.கே.தான் அந்த மன அலைவரிசையின் முதல் ஆள்.
’சமூகம் என்பது நாலு பேர்’ என்ற ஜே.கே.வின் கதையை எப்படியாவது தன் வாழ்நாளில் திரைக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென இயக்குநர் பாரதிராஜா பெரும் கனவிலிருந்தார். அது அவருக்கு நாற்பது வருடமாக கை கூடவேயில்லை.
அது இயல்பாக ஒரு நாள் பி.கே.வுக்கு கை கூடியது. இருவரையும் நேசித்த ஒரு தயாரிப்பாளர், இப்பரிசோதனைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க தயாராக இருந்தார்.
ஏற்காட்டில் நான்கு நாட்கள் சந்திப்பதாக திட்டமிடப்பட்ட போது ஜே.கே. ஒரு நாள் தொலைபேசியில் என்னை அழைத்து, ’நீங்களும் வாங்கோ’ என அழைத்தார். கடைசி கனத்தில் வழக்கம் போல் எதனாலோ நான் போகவில்லை (அநேகமாக மழை பெய்து கிணறு நிரம்பியிருக்கலாம்). பின்னர் ஐந்து நாள் கதை விவாதம் ஏற்காட்டில் நிகழ்ந்ததை கதை கதையாய் ஆ.ஓ. சொன்னார்...
‘நீ வந்திருக்கணும்டா‘
நான் மௌனம் காத்தேன்.
அக்கதையின் முடிவை மாற்றச் சொன்ன அத்தயாரிப்பாளரைப் பார்த்து,
‘உனக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை. வெளியேப்போ என அவர் போட்ட அறையிலிருந்து அவரை வெளியேப் போகச் சொல்லியிருக்கிறார் அதுதான் ஜே.கே.
இப்படியாக, ’சமூகம் என்பது நாலு பேர்’ இன்னும் கதையாக மட்டுமே இருந்து வாசகர்களை உயிரூட்டுகிறது.
கிருஷ்ணகுமாரை தன் மேடைப் பேச்சின் அடுத்த வாரிசு என்று, ஜே.கே. எப்போதும் சொன்னதில்லையே தவிர, தன் நடவடிக்கை, பேரன்பில், தன் சபையில் பி.கே.வுக்கு எப்போதும் இடம் தந்து கௌரவப்படுத்தியதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.
அதன் பிறகான இருபதாண்டுகளில் அவர் தனித்தே இயங்கினார். கட்சி ஸ்தாபனம் எல்லாமும் ஒரு நாள் நினைவில் தங்குவதாக மட்டுமே மாறிவிட்ட துயரம் அவருக்கும் நிகழ்ந்தது.
ஆனால் கட்சிக்கூட்டங்கள், மாநாடுகள், தமுஎச கலை இரவுகள் என அவர் அழைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். இதைத்தான் அவரின் சொற்களுக்கும் கம்பீரத்திற்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.
எந்த விவதங்களுமின்றி மௌனித்து, தன் நாட்களை மிக கவனமாகக் கையாண்டார். கூட்டங்களில் பங்கெடுப்பது, தனித்திருந்து எழுதுவது, ஆவணப்பட மெடுப்பது, திரைப்படத்திற்கு முயற்சிப்பது என்பது அவரின் வரைவுப் பட்டியல்.
அதிகம் பேசுபவனுக்கு எழுத்து கைவராது என்ற அவச்சொல்லை அவர் சுலபமாக மீறினார் என்பதற்கு அவரின் ’கோடி’, ’அப்பத்தா’ என்ற இரு கதைகளை நாம் கட்டாயம் வாசிக்க வேண்டும். அது கிருஷ்ணகுமார் என்ற எழுத்துக்காரனுக்கு மட்டுமே வாய்த்த தனி உலகம்.
ஆவணப்படங்களை அதற்குரிய தீவிரத்தோடும், நேர்த்தியோடும் கையாண்டார். முழுநீளப்பட முயற்சி வாய்த்து, அது கை தவறி கண்ணாடி குடுவையைப் போல ஒரு மென் சத்தத்தோடு உடைந்த போது, அவர் அதை ஒரு புன்னகையோடு கடந்து, அடுத்த சாத்தியத்திற்கு முயல்கிறார்.
இதெல்லாம் சரி, மக்கள் நீதி மய்யத்தில் போய் சேர்ந்தாரே அது எப்படி சரி?
நண்பர்களே, ஒரு விஷயத்தை தனித்திருந்து உங்கள் மனதோடு மட்டும் தர்கம் நடத்தி மல்லுக்கட்டிப் பாருங்கள்.
தான் உள்ளார்ந்து நம்பின கட்சிக்காகவும், தான் நேசித்த ஒரு இலக்கிய அமைப்பிற்காகவும் தொடர்ந்து இருபதாண்டுகள் தமிழ்நாட்டின் வரைபடம் எங்கெங்கு நீள்கிகிறதோ, அங்கெல்லாம் சுற்றித்திரிந்த ஒரு கலைஞன் எதனாலோ, மனக்காயப்பட்டு படுக்கையில் கிடக்கிறான்!
அவன் கரம் பற்றி ,தலைகோதி, ஒரு தாய் மாதிரி என்ன ஆச்சிடா உனக்கு? என அமைப்பின் கரங்கள் நீளவேண்டாமா?
அவன் என்னவாக வேண்டுமானால் சீரழியட்டும் என அப்படியே விட்டுவிடுவோமா?
நாம் பலரையும் விட்டுவிட்டோம்.
ஆனால் வெகுஜன அமைப்புகள், மார்க்சியத் தலைவர்கள் என தனித்தனியே அவரிடம் நட்பு வைத்திருந்தார்கள். இன்னமும் வைத்திருக்கிறார்கள்.
ஜி.ராமகிருஷ்ணனும், டி.கே.ஆரும் தான் அவரின் ஆவணப்படங்களை முன்னின்று வெளியிட்டார்கள்.
கலைஞர்களின் மனது உலோகங்களால் ஆனது அல்ல. அது எந்த ஒரு பரிவுக்கும் தாவி விடும் இடுப்புக் குழந்தை மாதிரி.
கல்லூரிக் காலம் முதல் மார்க்சியம் படித்து, காடு மேடுகளிலெல்லாம் களப்பணியாற்றி கட்சிக்காகவே உயிர் வாழ்வதாய் நாம் நம்பிய தோழர்கள் அண்ணா திமுகவில் போய் சேரவில்லையா? மார்க்சிய அரசியல் கற்றவனுக்கே இது நிகழும் போது இலக்கியம் படித்தவனுக்கு? படைத்தவனுக்கு?
அதுதான் ஆ.ஓ.வுக்கும் நேர்ந்தது. அது ஒரு சகித்துக் கொள்ளமுடியாத சங்கமம். நதியே விரும்பினாலும் அது திரும்பிப் போய்விட முடியாதில்லையா? ஆனால் அது கடலில் கலக்காமல் அங்கேயே தேங்கிக்கொண்டது அப்போதைக்கு.
அங்கிருந்து அது தன் தற்போதைய நாட்களின் படைப்பூக்க கணங்களைத் தீர்மானிக்கிறது
அந்த இடம்தான் ஆ.ஓ.என்ற கலைஞனின் இடம். இப்போது அவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக பாரதியார் பல்கலை கழகத்தில் இணைந்திருக்கிறார். வாசிப்பின் நேரத்தைக் கூட்டியிருக்கிறார். அதிகம் இலக்கியக் கூட்டங்களில் கலந்து  கொள்கிறார். நண்பர்களினுடனான பின்னிரவு வரை நீளும் சந்திப்புகளின் எண்ணிக்கையும், ஊர்களும் கூடியிருக்கிறது.
பழைய தோழிகளை இப்போது கடந்து போகையில் தன்னையறியாமல் ஒரு புன்னகை வந்து போகிறது.
மாபெரும் எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி தனது நாவலை தான் சொல்ல சொல்ல எழுத தனக்கு ஒரு ஸ்டெனோவை பணியமர்த்தினது  தெரியும் தானே?
அவர், அவள் மீது மிகுந்த காதலடைந்திருப்பதை அவளும் அறிவாள். தான் டிக்டேட் செய்யும் வார்த்தைகளுக்கிடையே அவர், அவறுக்கான தன் காதலை வெளிப்படுத்தும் வரிகளையும் சொல்லி அவளை ஏறெடுத்துப் பார்ப்பார். எதுவுமே தெரியாதது மாதிரி அவள் புன்னகையை உள்ளடக்கிக் கொண்டு இயல்பாய் மிளிர்வாள். தாஸ்தாவெஸ்கிக்கும், அவளுக்கும் குறைந்தது இருபது வருட இடைவெளி இருக்கும்.
அதனால் என்ன?
உலகத்தில், எம்மொழியில், எந்த நிலப்பரப்பில் கலைஞர்களைத் தேடி பெண்கள் வராமல் இருந்திருக்கிறார்கள்? அப்பெண்களின் நட்பை நாம்தான் ஒற்றை அர்த்தத்தில் கணக்கிடக் கற்றுக்கொண்டோம்.
எங்கள் சிபியை ஒரு விபத்தில் பறிகொடுத்து, நிமிடங்களை எப்படிக் கடத்துவது எனத் தெரியாமல் வீட்டு மொட்டை மாடியில் நானும் ஷைலஜாவும் மட்டும் தனித்து உட்கார்ந்திருந்த ஒரு முன்னிரவில் மூன்றாவது தோழனாக ஆ.ஓ. எங்களுடனிருந்தார்.
அந்த இரவு எங்கள் வாழ்நாளின் மொத்த இரவுகளிலேயே நம்பிக்கைத் தந்த இரவு. எத்தனை இழப்புகளையும் தாங்கிக்கொள் தோழா என எங்களை உரமேற்றிய இரவு.
ஆ.ஓ என்று பொது மேடைகளில் வந்து பேசிவிட்டு போகிற ஒரு ஆளுமை என நினைத்து விட்டு போகமுடியாத தோழமை ததும்பின சொற்களால் எங்களை நிறைத்த
அவர் சந்தித்த துரோகங்கள், அவர் தப்பித்த விபத்துக்கள், அவர் இழந்தமனிதர்கள் என அவர் அந்த இரவை நினைவுகளால் நிரப்பிக் கொண்டேயியிருந்தார்.
திருச்சியிலிருந்து கரூருக்கு போய்க்கொண்டிருக்கும்  ஒரு இரவுப் பேருந்தில் கடைசி இருக்கையில் தன்னுடன்  உட்கார்ந்திருந்த ஒரு சகப்பயணி அப்போதுதான் எழுந்து போய் ஓட்டுநருக்கு பின் இருக்கை காலியாக இருப்பதை அறிந்து அமர்ந்து கொள்கிறான். அவன் அமர்ந்த ஐந்தாவது நிமிடம் அப்பேருத்து விபத்துக்குள்ளாகிறது.
ஓட்டுநரும், அப்பயணியும் மட்டுமே அவ்விபத்தில் இறந்து போகிறார்கள்.
இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் பவா,  ஷைலஜா?
ஷைலஜாவின் அழுகையை மீறி
நான் அவர் கைகளை எடுத்து என்னுள் இறுக்கமாக அழுத்திக் கொள்கிறேன்.
இப்போதும் அப்படித்தான் பி.கே.



ஆதி விருட்சத்தின் குழந்தை

அ. முத்துக்கிருஷ்ணன்



சில பேரை நெருங்கி தரிசிக்கும் போதெல்லாம் நமக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கம் கொள்ள வைக்கும். அடுத்தக் கணமே அம்மனநிலையிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வேன். தம்பிகள் ஒரே ரத்தத்தில், ஒரே குடும்பத்தில்தான் இருந்தாக வேண்டுமா என்ன?.
என் தம்பிகள் நூற்றுக்கணக்கில் உலகம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள். சிங்கப்பூர் விமானநிலையத்தில் முன்பின் பாத்திராத எனக்காக மணிக்கணக்கில் காத்திருந்து என்னை அழைத்துப்போய் நான்கு நாட்கள் தன் சேட்டைகளின் கதகதப்பில் வைத்திருந்த பானுக்குமார் என் கூடப்பிறக்கவில்லையென்றால் என்ன?
துபாய் விமான நிலையத்திலிருந்து என் கரம்பற்றி கூட்டிப்போன ராஜா என் அம்மாவின் வயிற்றில் உருவாகாமல் போயிருப்பினும், ராஜாவின் அம்மாவை என் அம்மாவாக வாழ்நாள் முழுவதும் உணரமுடியும் என்னால்.
அ.முத்துகிருஷ்ணனுக்கு இவ்வுரிமையில் எப்போதும் முதலிடம் உண்டு. இது தரவரிசைப்பட்டியலில்லை; சேர்ந்து களப்பணியாற்றும் தோழமைகளின் நெருக்கம்.
பெரும்பாலும் கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் ஜாதியோடுதான் பிறக்கிறார்கள். காதுகுத்தல், திருமணம், ஊர்த்திருவிழா, சாவு என எல்லா இடங்களிலும் ஜாதியே முதலிடம் வகிக்கிறது. அது ஒரு கூரிய ரம்பத்தைப்போல மனிதனை செங்குத்தாகப் பிளவுபடுத்துகிறது. வளருகிறபோதுதான் அவர்களின் வாசிப்பு, தத்துவம் அரசியல், நட்பு, சேர்க்கை, உலகளாவியபார்வை, என பல இளைஞர்களை ஜாதியை உதறிவிட வைக்கிறது அல்லது மனதளவில் விலக வைக்கிறது…
அப்போதுதான் எதனாலோ மும்பை நகரம் முத்துக்கிருஷ்ணனை மதுரைக்குத் துரத்துகிறது. தாய்மொழி என்ற மகத்துவம் தன் ரத்தத்தில் கலப்பதை உணருகிறான் அந்தப் பையன். பூங்தொட்டியில் இருந்து  பிடுங்கி வேர்கள் நிலத்தில் திசையெங்கும் பரவுகிறது. நிலத்தில் நடப்படுகிறான். கல்லூரிக் காலங்களில் தன்னை “தமுஎச” என்ற  இடதுசாரி கலாச்சார அமைப்போடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். அதன் அரசியல் களமாகிய மார்க்சியத்தை முறையாகப் பயில்கிறான். தன் ஆசான்களை நுழைவாயிற் கூட்டங்களிலும், ஆர்ப்பாட்ட முழக்கங்களிலும், போலீஸ் அடக்குமுறைகளிலும் என சுலபமாகக் கண்டடைகிறான்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து ஒரு சிறு தீயை அணைந்துவிடாமல் திருப்பரங்குன்றம் வரை எடுத்துச்சென்ற சு.வெங்கடேசனுடன் இணைந்து அந்த அக்கினியை ஊதிப்பெருக்கியவர்களில் முத்துக்கிருஷ்ணனும் ஒருவனாகிறான்.
நிறைய வாசிக்கிறான். உலகளாவிய தலைவர்களின் வாழ்வை, அனுபவங்களை, வசிப்பிடங்களை, கொள்கைகளை, நிகழ்வுகளை கூர்ந்து அவதானிக்கிறான். ‘சேகுவேரா’ என்ற அந்த இளம்புரட்சியாளனே முத்துக்கிருஷ்ணனை அதிகம் ஆக்கிரமித்த தலைவன். அவனை கொஞ்சம் கொஞ்சமாய் தனக்குள் இருத்தி தானும் அவனைப் போலொரு புரட்சிப்படையின் கடைசி வரிசை களப்பணியாளனாகவாவது என்ற பெருங்கனவு ஒன்று அவனை விடாமல் துரத்துகிறது. அதன் ஆரம்பமாக “சே”வின் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் சேகரிக்கிறான். அதை ஒரு புகைப்படகண்காட்சியாக மாற்றுகிறான். தன் கனவு ஒன்று தன் கண்முன்னால் மலருவதை அருகில் இருந்து பார்த்து பரவசமடைகிறான்.
பெரும் பண்டல்களாகக் கட்டி அவைகளை சுமந்து கொண்டு நள்ளிரவில் டேனிஷ் மிஷன் மேநிலைப்பள்ளியின் மைதானத்திற்கு ஒரு ஆட்டோவில் இறங்கிய போதுதான் முதன் முதலில் முத்துகிருஷ்ணனை தோளணைத்தேன். அந்த சந்திப்பில் தான் அவனுடனான ஒரு நெருக்கத்தை உணரமுடிந்தது. அதற்குமுன்னும் பத்தாண்டுகள் அவன் என்னோடுதான் பயணித்திருக்கிறான். எங்கள் நிலப்பரப்பு, இயங்கும் களம் எல்லாமே வேறு வேறு. அவன் புனைவுகளில் விருப்பமில்லாதவன். துல்லியமான விவரணைகளோடு அரசியல் கட்டுரைகள் எழுதுபவன். முத்துக்கிருஷ்ணன் தன் சொந்த வாழ்வின் அலைச்சல்களை எழுதித் தீர்த்தால் மட்டும் ஆயிரம் பக்க நாவல் ஒன்று தமிழ் வாசிப்பு உலகத்திற்கு கொடையாகக் கிடைக்கக்கூடும். புனைவு அவன் ஆழ்மனதில் ஒரு நாகப்பாம்பு குட்டி மாதிரி உறங்கிக் கொண்டிருகிறது. அதன் விழிப்பும் வீரியமும் யாராலும் அறிய முடியாதது. அவன் சேகரித்த சேகுவேராவின் அரிய புகைப்படங்களை, திருவண்ணாமலையில் நடந்த ‘தமுஎச’ மாநாட்டரங்கில் காட்சிப்படுத்தினோம். ஆந்திராவிலிருந்து மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் வோல்கா,  இயக்குநர் பாலுமகேந்திரா, கவிஞர். சித்தலிங்கையா, இயக்குநர் பாரதிராஜா என பலரும் அப்புகைப்பட சேகரிப்புக்காக முத்துகிருஷ்ணனிடம் தோழமை கைக்குலுக்கல்களை மேற்கொண்டார்கள். கலைஞனுக்கு இது மட்டும்போதும்தானோ அவன் அதன் நீட்சியாக ‘சே’வின் வாழ்வை முன்வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்தான். இருபதாண்டுகளுக்கு முன் நமக்கு சமூகவலைதளங்களும், கேமராவும் வசப்படாத நாட்களிலும் அதை ஒரு பேரலையாக ஆரம்பித்து வைத்தவர்களில் முத்துகிருஷ்ணனும் ஒருவன். அந்த ஆவணப்படத்தையும், ‘சே’வின் புகைப்படங்களையும் தூக்கிக் கொண்டு அவன் தமிழ் நிலப்பரப்பெங்கும் அலைந்து திரிந்த நாட்கள்தான், அவன் அவனுக்கேப் போட்டுக்கொண்ட அடியுரம்.
வெறுமனே உண்டு உறங்கி கழித்துக் கொண்டிருந்த நகரங்களிலும், வெளியாட்கள் யாராலும் தீண்டப்படாத கிராமங்களிலும் அவன் ஒரு நாளின் எந்த பொழுதிலும் போய் இறங்கவும், அவனைக் காத்திருந்து கூட்டிப்போக ஐந்தாறு இளைஞர்களும் எப்போதுமிருந்தார்கள். அவன் வேர்பிடிக்க தொடங்கிய காலம் இதுதான். நீண்ட பயணங்களினூடே அவன் வாசிப்பை தனதாக்கிக் கொண்டான். புனைவுகளில்லாத எழுத்துக்களே அவனுக்கு விருப்பமானதாக எப்போதுமிருந்து இந்திய அரசியலின் அனைத்து அயோக்கியத்தனங்களும், அவனுக்கு அத்துபடியானது. அதை அம்பலப்படுத்துவதை தனது எழுத்தின் அடிநாதமாக மாற்றிக்கொண்டான்.
இப்பயண மேற்கொள்ளல்களின் போதுதான் இடதுசாரி அரசியலின் நம்பகத்தன்மையும், மக்களுக்கான அர்ப்பணிகளும் அதை நோக்கி அவனை  இன்னும் நெருங்கிப் போகச் செய்தது. தடுமாற்றங்களும், குழப்பங்களும் நிறைந்த பருவம் அதுதான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு மின்னல் மாதிரி வந்து போகும்.
நீ என்னவாகப் போகிறாய்?
என்னவாகப் போகிறேன்.
எழுத்தாளன்?
அரசியல் செயற்பாட்டாளன்?
ஆவணப்படமெடுப்பவன்?
இக்கேள்விகளினூடே நீண்ட அவன் பயணங்களில் அவனே ஒரு முடிவுக்கு வருகிறான்.
’நான் பண்பாட்டு செயற்பாட்டாளன்’
அவன் முடிவெடுத்தான் என்பதைவிட காலம் அவனை அப்படி சமூகத்துக்குள் ஸ்திரப்படுத்தியது. நாம் எல்லாருமே தொடத் தயங்குகிற, வரலாற்று பிழைகளுக்கு அஞ்சி ஒதுங்குகிற அரசியல், சுற்றுபுறச் சூழல், ஜாதியம், உலகமயம் சம்மந்தமான முன்னூருக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவன் தமிழ் சார்ந்த சிறு பத்திரிகையில் எழுதத் துவங்கினான். ’உயிர்மை’ தன் பிரதான கட்டுரையாளனாக முத்துகிருஷ்ணனை நம்பி அல்லது அங்கீகரித்து மாதா, மாதம் வெளிவந்து கொண்டிருந்தது. முத்துகிருஷ்ணனின் பெயரின்றி ‘உயிர்மை’ யின் பக்கங்கள் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அதில் தொடர்ந்து எழுதினான்.
நானறிந்து இப்படி எழுத்திலும் செயல்பாடுகளிலும் வெறித்தனமாய் செயல்படுபவர்கள் ஸ்தாபனங்களில் நீடிப்பது மிகக் கடினம். ஸ்தாபனங்கள் அதன் ஊழியர்களை, களப்பணியாளர்களாகவே இறுதிநாள் வரைக் இருக்கக்கோறுகின்றன. படைப்பூக்கமுள்ள எழுத்துக்களை விட உயர்வானதும், அவசியமானதும், ஸ்தாபனம் மேற்கொள்ளும் களப்பணிகள் மட்டுமே என்கிற கொள்கையில் அது கட்டித்தட்டிப் போய் இறுகியிருக்கிறது. எப்போதும் கலைஞர்களுக்கு பனிக்கட்டிகளின் உருகல்கள் வேண்டும். கற்பாறைகளின் மீது விதைகள் துளிர்ப்பது இனியும் சாத்தியமில்லை என ஆனபோது முத்துகிருஷ்ணன் தன்னை ஸ்தாபனத்திலிருந்து துண்டித்துக் கொண்டான்.
ஸ்தாபன விலகல், அல்லது விலக்கல் நிகழாத கலைஞர்களின் உறக்கம் எப்போதும் நிம்மதியானவை. விலகின படைப்பாளிகளின் தூக்கம் போய் பிசாசுகள் படுக்கையின் பக்கத்தில் படுத்து பிராண்டும் இரவுகள் மிகக்கொடுமையாவை. முத்துகிருஷ்ணன் படுக்கையில் அவன் பக்கத்தில் ஒரு பிசாசு அவன் அனுமதியின்றி நிரந்தரமாகப் படுத்துக்கொண்டது. எதிர்பாராத ஒரு கொலை செய்துவிட்டதாக தன்னைத்தானே உணரும் ‘புதியபறவை’ படத்தில் சிவாஜியின் தவிப்பு போன்றது. அனுபவித்த அனுபவஸ்தர்களால் மட்டுமே அதை உணரமுடியும். என்னால் முடியும்.
நேற்றுவரை தோழமை, நட்பு, பிரியம் என இருந்த தோழர்கள் அப்படியே அந்த இரவுவோடு எல்லாவற்றையும் கத்தரித்துக் கொள்வார்கள். இயக்க நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் உங்கள் இருக்கையைத் தாண்டி அடுத்த இருக்கைக்குப் போகும். நீங்கள் இரவும், பகலும் ஓடியாடி உழைத்து உரமேற்றிய ஒரு இயக்கம்செயல்பாடுகளில்  ஒரு பார்வையாளனாகக் கூட உங்களை அழைக்காது. அல்லது உங்களால் பங்கேற்க முடியாது. அது ஒரு ரணம். காயம் ஆறுவதற்கு முன் நீங்கள் வேறு செயல்பாடுகளில் உங்களை கறைத்து தப்பிக்க வேண்டும்; அல்லது காயம் புரையோடிப்போகும்.

முத்துக்கிருஷ்ணன் மிகச்சுலபமாக அதிலிருந்து தப்பித்தான். உலகளாவியப் பயணங்கள், வாசிப்பு, காதல் இம்மூன்றும் வேரழுகிப் போனதாக நம்பப்பட்ட அவன் நாட்களை அவனுக்கு உயிர்ப்பித்துக் கொடுத்தன. அக்காய்ந்த செடியிலிருந்து இளம்பச்சையும் ப்ரவுன் நிறத்திலும் ஆயிரமாயிரம் துளிர்களை இம்மூன்று மழைகளும் அவனுக்கு உயிர்ப்பித்துக் கொடுத்தன. முன்னிலும் ஆவேசமாக அவன் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டான். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவன் மெல்ல ஒரு பேச்சாளனாக மாறினான். கூட்டங்கள், அரங்குகள், தொலைகாட்சி விவாரங்கள் என அவன் குரல் வெளி எங்கும் சிதறியது. உயிரை அடமானத்திற்கு எழுதித் தந்து, பாலஸ்தீனம் வரை நீண்ட ஒரு தரைவழிப் பயணத்தை அவன் சுலபமாக மேற்க்கொண்டான். தமிழ் சூழலில் பிரமிப்பாக உணரப்பட்ட பயணம் அது.
இந்திய அளவில் பெரும் அறிவு ஜீவிகளுக்கு முத்துக்கிருஷ்ணன் என்ற பெயர் தெரிய ஆரம்பித்தது. அருந்ததிராயில் ஆரம்பித்து மேதாபட்கர், ஆனந்த் பட்வர்தன், ராம் புனியானி, அஸ்கார் அலி என்ஜீனியர், தியோடர் பாஸ்கரன் என பெரும் மேதைகளும், செயற்பாட்டாளர்களும் தங்கள் சபைகளில் ஒரு இருக்கையை மதுரையிலிருந்து போன அந்த குட்டிப் பையனுக்கும் ஒதுக்கித் தந்தார்கள். காதலும்,வாழ்வும் ததும்பி வழியும் தன்அன்பின் கரங்களால் ஷோபி என்ற எங்கள்தோழி முத்துகிருஷ்ணனின் நாட்களை தாங்கிப்பிடித்ததும் இந்நாட்களில்தான் .
புறக்கணிக்கப்பட்டவர்கள் ஸ்திரப்பட வேண்டிய இடம் இதுதான். இதையும் தவறவிடுபவர்கள்தான் தொடர் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி சித்தபிரமைப்பிடித்து, தற்கொலைகளுக்கு முயன்று, அல்லது தான் இதுநாள்வரை ஆத்மார்த்தமாய் செயல்பட்ட இயக்கத்தின் மீது சேற்றையள்ளிப்போட்டு, புதையுண்டுப் போவார்கள். நானறிந்து தமிழகத்தில் இயக்கத்திற்காகவும், தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் திறந்திருப்பது நான்கைந்து கதவுகள் மட்டுமே. எந்த அகாலத்திலும் நீங்கள் அவ்வாயில்களின் வழி சென்று அவர்களின் வீட்டில் தங்கிகொள்ளலாம் சாப்பிடுவதில் நீங்கள் பசியாறவும் ஒரு கவளம் சோறு நிச்சயம் இளைப்பாறிக்கொள்ளலாம். எப்போதும் மூடுண்ட கதவுகளுக்குப் பின்னாலிருந்து இயக்கத்தின் முண்ணனி ஊழியன் என்று தன்னைப் பிரகடனப்படுத்துவது உலகை ஏமாற்றுவது. 
மதுரையில் முத்துக்கிருஷ்ணனின் வீடு அந்த நாலைந்தில் ஒன்று. குடும்ப உறுப்பினர்களையே செயல்பாட்டாளர்களாக்குவது, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளையும், இயக்கத்தையும் அவர்களை முழுமையாக அங்கீகரிக்க வைப்பது. இது வெறும் சொற்களாலோ, கட்டளைகளாலோ ஒருபோதும் முடியாது. உங்கள் ஆத்மார்த்த செயல்பாடுகள்தான் உங்களை நோக்கி உங்கள் குடும்பத்தை நெருங்க வைக்கும். உங்கள் தினங்களின் மேற்கொள்ளல்களை அங்கீகரிக்க வைக்கும். அல்லது அவர்கள் கருமாரியம்மன் கோயிலுக்கோ, வேளாங்கன்னிக்கோ, படவேடு மாரியம்மனுக்கோ, மேல்மலையனூர் மாரியம்மனுக்கோ உங்கள் குழந்தைகளை உங்களுக்குத் தெரியாமல் கொண்டுபோய் சந்தனம் பூசி மொட்டைபோட வைப்பார்கள். இது இடைவெளி. அரசியல், இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப வக்கற்ற நாம் எப்படி மேடையில் ஏறி ‘ ஏ மானுட சமுத்திரமே? என மக்களை மந்தைகளாகக் கருதி கூவமுடியும்? அவனுக்கும் பிரியமான ஒரு தங்கையும் தம்பியும் உண்டு. பெரும் படைப்பூக்கமும், புதியவைகளை சாத்தியமாக்கும் வல்லமையும் கொண்ட இளம் பெண்ணாக தங்கை கல்யாணியின் இருபதாவது வயதில் நான் அவளைத் திருவண்ணாமலையில் சந்தித்தேன். என் குடும்பத்தில் இருந்த எல்லோருக்கும் கல்யாணியை அப்படிப் பிடித்துப்போனது.  கல்யாணியைப் போலொரு சிநேகிதியை யாருக்குத்தான் பிடிக்காது?
என் நண்பன் ஜே.பி இயக்குநராக இருந்து செயல்பட்ட ‘குவாவாடீஸ்’ பல்சமய உரையாடல் மையத்தில் ஜே.பி கல்யாணி, நான் மூவரும் சேர்ந்து மஞ்சம்ப்புல் வேய்ந்த ஒரு குடிசையை வடிவமைத்தோம். அதை கட்டி மேலெழுப்புகிற பணியை கல்யாணி ஒற்றை மனுஷியாக தன் தோள்களில் ஏற்றுக் கொண்டாள். குவாவாடீஸில் வேய்ந்த மஞ்சம் புல் தான், இன்றைய பத்தாயத்தின் நீட்சி.  சுட்ட செங்கற்கள் இத்தனை சாத்தியமுள்ளது என்பதை, அவளுடைய அன்றாட செயல்பாடுகளை பார்த்தே அறிந்து கொண்டேன். குவாவாடீஸ் சர்வதேச அளவில் இன்று புகழ்பெற்றிருப்பினும் பெரும்  கட்டிடங்களால் வியாபித்திருந்தாலும்; இன்றளவும் அம்மஞ்சப்புல் வேய்ந்த குடில் அப்படியே நடுநாயகமாக இருந்து,வரும் மதங்களைக் கடந்த தர்க்கவாதிகளை தன்னுள் இருத்திக் கொள்கிறது.
மதுரைக்கென வாய்த்த தனி அடையாளங்கள், எனப்படுவது இரவு சாப்பாட்டுக்கடைகள். கோனார்கடை கறி தோசை, மதுரை மல்லி, அம்மா மெஸ் கறிச்சோறு என சாதாரணர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். ஆனால் எந்த ஊரின் அடையாளமும் இப்படிப் பொதுமைப்படுத்தவைகளோடு நின்று போவதில்லை. திருவண்ணாமலை என்ற சிறு நகரத்தின் அடையாளம் அண்ணாமலையார்க் கோவில், கிரிவலம், ரமணாஸ்ரமம் மட்டுமா? யாராலுமே வடிவமைக்க முடியாத, டேனிஷ் மிஷன் பள்ளியின் அந்த ரெட்பில்டிங் இல்லையா? சென்னை சாலையில் ஒரு படகு துடுப்போடு நிற்பது மாதிரி நின்று கொண்டிருக்கும்  படகு வடிவிலான ஆர்.சி. சர்ச் இல்லையா? எங்கும் கிடைக்காத சுவையோடு எங்கள் மண் பிரசவிக்கும் நாட்டு மல்லாட்டை கொட்டைகள் இல்லையா? தனிச் சுவையோடு விளைந்துப் பெருகும் களம்பூர் பொன்னி அரிசி இல்லையா? இது எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு நிலப்பரப்பின் அடையாளம். உங்கள் வசதிக்கு, உங்கள் தேவைக்கு, உங்கள் வருமானத்துக்கு, எவைத் தேவையோ அதை மட்டும் மக்களின் பொது புத்தியில் போதையூசிகள் மாதிரி ஏற்றுவதில்லை, ஊர் அடையாளங்கள்.
மதுரையின் தனிஅடையாளங்களில் ஒன்று முத்துக்கிருஷ்ணன் உருவாக்கிய ‘பசுமை நடை’. ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மனிதர்களை அது தன்னகத்தேக் கொண்டு பெரும் ஆலமர விருட்சமாய் இப்போது வியாபித்திருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தன் விரல்விட்டு எண்ணக் கூடிய நண்பர்கள் உதவியோடு, மழைக்குப் பிந்தின ஒரு பகலில் ஒரு சிறு செடியாக அதை மதுரை மண்ணில் ஊன்றினான். பெரு மழைகளில் அதன் மீது குனிந்து நின்று அவர்கள் அதை மழையினின்றுக் காத்தார்கள். தாங்களே அதன் மீது படர்ந்து வெயிலை உள்வாங்கி அதை குளிர்ச்சிப்படுத்தினார்கள். மனித அமில சிதறல்களை தங்களின் உரமேறிய தோள்களில் சிதறவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனுக்கு தன் சக மனிதர்களின் மீது இருக்கும் பிரியம் தான் இந்த அமைப்பை ஒரு ஆலமரமாக வளர்க்க உதவியிருக்கிறது. அவன் ஒரு ஆதி மனித விருட்சம்தான் .
பார்க்க பார்க்க அது அநியாயத்திற்கு வளர்ந்துவிட்டது. பச்சைகிளிகள் அதன் சிகப்புபழங்களை அருந்த பெயர் தெரியாத திசைகளிலிருந்தெல்லாம் பறந்து வருகின்றன. பரந்து விரிந்த அதன் வேரடிப்பரப்பில் எத்தனை எத்தனையோ மனிதர்கள் படுத்து உறங்குகிறார்கள். புத்தகங்களை கொண்டு வந்து அதன் நிழலில் அமர்ந்து வாசிக்கிறார்கள். ஒரு விலகளாளன் போல முத்துகிருஷ்ணன், தூர நின்று அதன் வியாபிதத்தை ரசிக்கிறான்.
ஆறிலிருந்து அறுபதுவரை என்ற படத்தின் இறுதியில், தன் குடும்பத்தின் வளர்ச்சியை, துரோகத்தை, புறக்கணித்தலை, ஒரு ஈசிச்சேரில் சாய்ந்து உட்கார்ந்து ரஜினி அசை போடுவார். கடந்த காலங்களின் கசப்புகள் மெல்ல கரையும். முத்துக்கிருஷ்ணனுக்கு அப்படியான தருணம் இது.
(அப்படியான ஓர் இரவு இரு மாதங்களுக்கு முன் எங்களுக்குள்ளும் நிகழ்ந்தது. சாத்தூரில் தியாகண்ணன், கௌரி அக்கா மகன் நிருபன் திருமணத்திற்கு போய், அவர் எங்களுக்கு அளித்திருந்த ஒரு விலையுயர்ந்த வாடகை அறையில் தங்கியிருந்தோம். குழுமியிருந்த சில நண்பர்களுக்கும் அன்று ஏனோ கொஞ்சம் குடிக்கலாம் எனத் தோன்றியது. பதினோரு மணிக்குப் போய் ஒரு குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்து கொஞ்சம் வோட்கா குடித்தோம். அது போதைக்காக அல்ல; இந்த இரவில் மனக்கசப்புகள் வெளியேற வேண்டும், அதற்காக. இரண்டாவது கோப்பை காலியானதும் முத்துக்கிருஷ்ணன் என் கைகளை இறுகப்பிடித்து நெருக்குகினான். இந்த தொடுதல் பரிவானதல்ல, கோபம் கொப்பளிப்பது என்பதை அழுத்தம் வெளிப்படுத்தியது எனக்கு.
என்ன ஆச்சுடா?
”நீங்களெல்லாம் ஏன் பவா, கல்யாணி கணவன் தட்சிணாமூர்த்தியின் மரணத்திற்கு வரல?”
”அதன் பிறகும் வந்துகூட கல்யாணியை பாக்கலை?”
நான் நெருக்குதலில் இருந்து அவள தப்பிக்க பாக்குற தைரியம் வரலைடா !’
”சும்மா தப்பிக்காதீங்க பவா,உங்க கூட பொறந்த தங்கச்சியின் கணவன் இறந்திருந்தா போகாம இருந்து, இப்படி ஒரு வார்த்தையால சமாதானம் சொல்லமுடியுமா உங்களாலா?”
இப்போது இன்றும் வெளிச்சம் குறைந்த அந்த அறையில், குனிந்து முத்துக்கிருஷ்ணனின் கால்களைத் துழாவினேன்… அவை அங்கிருந்து ஏற்கனவே அகன்று விட்டிருந்தன.
எப்பொழுதுமே முத்துக்கிருஷ்ணனை நான் தொலைபேசியில் அழைக்கும் போது ”எந்த நாட்டில் இருக்கீங்க தோழர்” என்று தான் ஆரம்பிப்பேன். என் நண்பர் மிஷ்கினும் எப்பொழுதுமே என்னப்பா முத்துக்கிருஷ்ணன் தாயகம் திரும்பிட்டானா என்றே கிண்டல் செய்வார். அப்படி விளையாட்டாக பேசத்தொடங்கி அவன் இப்பொழுது ட நாடுவிட்டு நாடு அலைபவனாகவே மாறிப்போனான். இதோ இந்த கட்டுரையை நான் எழுதும் போதும் அவன் எந்த நாட்டில் அலைகிறான் என்று தெரியவில்லை.


Sunday, January 12, 2020

முரண்பாடுகளுடனான தோழன்


சு.வெங்கடேசன்





அது ஒரு அடை மழைக்காலம். இரவு பதினொருமணியிருக் கலாம். கும்மிருட்டில் திறந்திருந்த கதவின் வழியே வந்த உருவத்தை அடையாளம் காணவேண்டிய அவசியமில்லை எனக்கு. அது,சு.வெங்கடேசன், கல்லூரி மாணவனைப் போலொரு உருவம். அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மஞ்சம்புல் வேய்ந்திருந்த எங்கள் வீட்டில் ஒரு கயிற்றுக்கட்டிலில் நான் படுத்திருந்தேன் விளக்குகளுக்கு வெளிச்சமூட்டப்பட்டது.

தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த அம்மாசாப்பிட்டியாப்பாஎன வாஞ்சையான குரலில் வெங்கடேசனை நோக்கி கேட்டாள்.

அம்மாவுக்கு, இந்த உலகில் எல்லா மானிடர்களும் எப்போதும் சாப்பிட்டு பசியாறி இருக்க வேண்டும்.பசித்த வயிறுகள் எப்போதும் அவளைப் பதட்டப்படுத்தின.

வெங்கனேஷனின்  பலமான தலையாட்டலில் அவள் விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கப் போனாள்.

நினைவிருக்கிறது. அதிகாலை மூன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தோம் .இலக்கியம் பற்றி ஒரு வார்த்தையும் பேசினதாக நினைவில்லை.இயக்கம் குறித்தும்,களப்பணி குறித்தும், கலையிரவு பற்றியும்,அதற்ககு கூடுகிற பல ஆயிர மனித சங்கமம் பற்றியும் பேசினோம்.

இருவருமே சொற்களால் போதையூட்டப் பட்டிருந்தோம்
விடிந்தவுடன் நான் வெங்கடேசனை என் எம்..டி.பைக்கில் ஏற்றிக்கொண்டு கலையிரவு வேலைகளுக்கு என்னுடன் கூட்டிப்போனேன்.அப்போது எங்களைத் தேடிவரும் எத்தனைப் பெரிய படைப்பாளிகளையும் நாங்கள் அப்படி இம்சித்திருக்கிறோம்.

பல்லவன் ஆர்ட்ஸ்-சில் பல்லவன் வரைந்து கொண்டிருப்பதை,சிந்து அச்சகத்தில் நோட்டீஸ் அச்சாகிக் கொண்டிருப்பதை ,கீO கட்டிடத்தில் நவீன பல வண்ண காகித தட்டிகள் நூற்றுக்கணக்கில் கவிதைகளையும்,எழுத்தாளர்களின் வரிகளையும் தன்னுள் இருத்திக்கொண்டு சுவரில் சாய்த்தி வைக்கப்பட்டிருந்ததை,ஊரிலுள்ள பல தனவான்களிடம் நாங்கள் கையேந்தியதை,நள்ளிரவில் ஏதோ ஒரு ரோட்டுக் கடையில் நின்றுகொண்டே பரோட்டா தின்றதை என்று அந்நாள் முழுவதையும் எங்களுடனே இருந்து உள்வாங்கினான் வெங்கடேசன்.
புன்னகைத்த முகம்,நட்புக்கு கைநீட்ட அழைக்காத உடல் மொழி,எப்போதும் தீவிமான யோசனை,தீர்மானிக்கப்பட்ட வெற்றியை நோக்கிய நகர்தல் என வெங்கடேசனை நான் எனக்குள் வரைந்து கொண்டேன்.

அப்போதுபாசி வெளிச்சத்தில்என்ற ஆர்ட்தாள்களில் வண்ணமயமான கவிதை புத்தகத்தை வெங்கடேசன் வெளியிட்டிருந்தான்.அக் கவிதைகளில் ஒன்று கூட என் நினைவில் இல்லை.ஏன் எனில் அவை கவிதைகள் இல்லை.வெங்கடேசனுக்கும் நினைவில் இருக்க சாத்தியமில்லை.அடிப்படையில் வெங்கடேசன் கவிஞன் இல்லை.
விட்டேத்தியான மனநிலையும்,இலக்கின்றி ஊர் சுற்றலும்,மனநிலை பிறழ்வுக்கு தன்னை பலிகொடுப்பதும்,தன்னையே உதறி சாலையில் போட்டுவிட்டு ஒரு பரதேசி மாதிரி வேறு இடத்திற்கு நகர்வதும் வெங்கடேசனின் வாழ்வில்லை.

விக்ரமாதித்யன், .அய்யப்பன்,ஓவியர் சந்துரு என்ற கலைஞர்களுக்கான இடம் அது.

ஆனால் பல ஆண்டுகள் ஊறலில்போட்டு காய்ச்சின, போத்துவா சாராயம் மாதிரி ஒரு நாள் தன் தீவிரமான,கவித்துவமான உரை நடையோடு ஆயிரம் பக்கங்களில் அவன்கோட்டம்என்ற நாவல் மூலம் விஸ்வரூபமெடுத்த போது தமிழ் இலக்கிய உலகமே அவனைத் திரும்பிப் பார்த்தது.

சென்னையில் நடந்த தமுஎச மாநாட்டில் அப்புத்தக வெளியீடு பல புத்தகங்களுக்கிடையே ஒன்றாக நடந்தது.நான்தான் அந்நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.காவல் கோட்டம் எங்கள் கைக்கு வர தாமதமாகிக் கொண்டேயிருந்தது. நிகழ்ச்சிமுடியப்போவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தமிழினி வசந்த குமாரால் மிக நேர்த்தியான தயாரிப்பில் அப்புத்தகம் மேடை வந்தடைந்தது.

புத்தகத்தின் களமே என்னை வியப்பூட்டியது.அதைஎழுதியக் கைகளை பெருமிதத்தோடுப் பார்த்தேன்.அதன் கையெழுத்துப் பிரதியை எங்களுடன் மேடையிலிருந்த தமிழ்ச்செல்வன் மட்டும் அப்போது படித்திருந்தார்.தான் போகிற இடமெல்லாம் அந்நாவலின் அதிகபட்ச சாத்தியங்களை அவர் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததாக   சொன்னார்கள்.

தம்பிகள் நண்பர்கள் பட்டியலில் எப்போதும் இருக்கமாட்டார்கள் போல.என்னிடம் அவர் அதைப்பற்றி பேசினதில்லை.நான்தான் அவரிடம் நான் வாசித்த பல  கதைகளை அப்போதைக்கப்போது 
ஒப்பித்துக்கொண்டிருப்பேன்.குறிப்பாக மலையாளத்தில் வந்தநவீன  பெண் கதைகளை.என் ஸ்ருதி தமிழ்செல்வனுக்கு சேரவேயில்லை.அவர் ஒவ்வொரு கதைகளையும் வேறு ஒரு கோணத்தில் சொல்லி அவைகளைபெரும்பாலும் நிராகரித்தார்.கே.ஆர்.மீராவின் இரு கதைகளை,சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் கொமாலாவை நான் மிகுந்த உற்சாகச்தோடு அவருக்கு சொல்லத் தொடங்கி வதங்கின முகத்தோடு தொலைபேசியைத் தொங்கப் போட்டிருக்கிறேன்.
அவ்வருடத்தின் சிறந்த நாவலாக அது விகடன் குழுவால் அறிவிக்கப்பட்டபோது நான் அதிர்ந்து போனேன்.அதெப்படி,டிசம்பர் 25-ந் தேதி மாலை வெளியிடப்பட்ட ஆயிரம்பக்க நாவல் அவ் வருடத்தின் சிறந்த நாவல் பட்டியலில் ஜனவரி முதல்வார விகடனில் வரமுடியும்?
நான் பிரபஞ்சன் சாருடனான ஒரு சிகரெட் இரவில் கொதித்தேன்,மூன்று முழு  சிகரெட்களும் தீர்ந்து போகும் வரை. அவர் என் சுடு சொற்களையும்,புகையையும் சேர்த்து உள்ளிளுத்தார்.

எல்லாம் முடிந்து என்னை ஏறெடுத்தார்.அவர் முகம் கொஞ்சம் இருகியிருந்தது.

நான்தான் பவா, அந்நாவலை சிறந்த நாவலென சிபாரிசு செய்தேன்.’
எப்படி சார் சாத்தியம்?

இருபத்தைந்தாம் தேதிதான் புத்தகமே வந்தது,அதற்குள் எப்படி அதை சிறந்த நாவலாக கருத முடியும்?

அவர் புதிதாய் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சொன்னார்.
சிறந்த நாவல்களென எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட எதன் மீதும் மனம் ஒப்பவில்லை.என்னைச் சுற்றிலும் மேகங்கள்  மாதிரி பெரும் அதிருப்தி சூழ்ந்த வேளையில்,இந்நாவலின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.முதல் இருநூறு பக்க வாசிப்பிலேயே இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று என்று முடிவெடுத்தேன்.

தாமதமாக வந்திருக்கலாம் பவா,ஆனால் இது அசாத்திய வாசக உழைப்பையும்,களப்பணி அனுபவத்தையும் உள்ளடக்கியது. அதனாலயே இது என் முதன்மைத் தேர்வு.அவர் முடித்தபோது நான் அமைதி காத்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் அந்நாவலை ஆயிம் பக்க அபத்தம் என்ற சொல்லாடலை அதன் மீது  அமிலத்தை மாதிரி ஊற்றிய போதும், அது தமிழ் வாசகர்கள்  மத்தியில் தீவிரமாக வாசிக்கப்பட்டது. அந்நாவலின் பக்கங்கள் ஜெயமோகனால் விரிவாக அலசப்பட்டு அறுபது பக்கங்களில்,  ஒரு காத்திரமான விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

அந்நாவலின் வரும் ஒரு கிழவியின் பாத்திரத்தைப் போல் உயிர்ப்புள்ள ஒரு பாட்டியை தன் வாசிப்பு இதுவரை கண்டதில்லை என ஜெயமோகன் எழுதினார்.

இரு பெரும் எழுத்தாளர்களின் மாறுபட்ட கருத்துக்களை அது தன்மீது சுமந்து கொண்டே ஒரு நதியைப் போல தமிழ் நிலப்பரப்பெங்கும் பயணித்தது.
சு.வங்கடேசன் என்ற உரைநடைக்காரனை தீவிர, இலக்கிய வாசகர்களும் தங்களுக்கு  உள்வாங்கிக் கொண்டார்கள்.

இன்று வரை காவல்கோட்டத்திற்கு பாராட்டுகளும்  நிராகரிப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வாரம் வெங்கடேசனுக்குகனடா தோட்ட இயல்விருது அறிவிக்கப்பட்ட போது,நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி தேவி பாரதி,மிகக்கடுமையான சொற்களில் வெங்கடேசனை நிராகரித்தார்.கனடா தோட்ட அமைப்பாளர்களுக்கு அவர்களின் தவறான தேர்வு இது என சாபம் கொடுத்தார்

பொதுவாக முக நூல் விவாதங்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் நான்,அதற்கு எதிர்வினையாற்றினேன்.ஒரு விமர்சகனோ,வாசகனோ அதை செய்யட்டும்,ஒரு சக படைப்பாளி நீங்கள், ஏன் பொங்குகுறீர்கள் எனக் கேட்டேன்.

அகிலனுக்குத் தரப்பட்டஞான பீடவிருதில் ஆரம்பித்து கோ.வி.மணிசேகரனுக்கு கிடைத்தசாகித்திய அகாடமிபரிசுவரை தேர்வுகள் சரியானதுதானா தேவி பாரதி?

எப்போதுமே என் முதன்மை நண்பர்களின் பட்டியலில் சு.வெங்கடேசன் இருந்ததில்லை.அவன் தன்னை ஸ்தாபன ஒழுங்குக்கு ஒப்புக்கொடுத்து அதன் வழியே படைப்பாளிகளை அணுகுகிறான் என்ற ஒவ்வாமை எனக்கு உண்டு.
இது எல்லாமே ஒரே வாசில் மாறியது.

சங்க இலக்கிய வாழ்வை மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதி கே.வி.ஜெயஸ்ரீ தமிழுக்கு மொழி பெயர்த்த,’நிலம் பூத்து மலர்ந்த நாள்நாவலை வெளியிட்டு பேச நான் வெங்கடேசனை அழைத்தேன்.ஒரு புன்னகையோடு எனக்குவருகிறேன்என ஒப்புகைக் கிடைத்தது.
அப்பயணத்தின் போதுதான் வெங்கடேசன் மீது எனக்கிருந்த பல ஒவ்வாமைகள் கரைந்தன.ஒவ்வொன்றையும் மழையில் நனையும் மனிதனைக் கழுவி சுத்தப்படுத்தும் மழையைப்போல அந்நாள் என்னை சொஸ்தப்படுத்தியது.

மழை, மனிதனின் வெளிப்புற அழுக்கை மட்டும் சுத்தப்படுத்தும் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது உள்புறத்தையும் சேர்த்தே கழுவி விடும் வல்லமை கொண்டது என்ற இரகசியம் புரிய ஆரம்பித்த நாள் அன்று.
நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் ஜீவனை அன்று வெங்கடேசன் தன் முன் குழுமியிருந்த பல நூறு வாசகர்களுக்கு ஒரு கடத்தியைப் போல கடத்தினான்.வாசகர்கள் அந்த உரையின் உண்மையில் மழையில் கரையும் மணசுவர்  மாதிரி கரைந்து கொண்டிருப்பதை மைதானத்தின் தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றிரவு நான், மனோஜ் குரூர்,சந்தோஷ் எச்சிக்கானம்,முருகேச பாண்டியன் என நாங்கள் நான்கு பேரும் பத்தாயத்தில் ஒரு வட்டவடிவமான குடிலுக்கு கீழே உட்கார்ந்திருந்தோம்.

திறக்கப்படாத ஒரு விஸ்கி பாட்டில்என்னை எடுத்துக்கோஎன ஒரு காதலியின் முதல் உடல்தருகையைப் போல எங்கள் முன் காத்திருந்தது.நாங்கள் அதன் தவிப்பை உள்ளுக்குள் ரசித்து உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தோம்.

உரையாடலை மனோஜ் இப்படி மலையாளத்தில் ஆரம்பித்தார்.‘நான் தண்ணியடிச்சு ஆறுமாதம் இருக்கலாம்சட்டென முந்திக்கொண்டு சந்தோஷ் சொன்னார்,நான் குடித்து ஆறு மணிநேரம் கடந்துவிட்டதுபவா அண்ணா.
படைப்பாளிகளின் கொண்டாட்டம் இப்படித்தான் துவங்கும்.

ஒழுக்கக் கோட்பாடுகளின் கோடுதாண்டாமையால் வெங்கடேசன் தவறவிட்ட அலாதியான இரவு அது.

மலையாள இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தை விட பின் தங்கிவிட்டன என்ற என் வாதத்தை எந்த தர்கமுமின்றி  அம்மூவரும் அப்படியே ஏற்றுக்கொண்டது பெரும் வியப்பைத் தந்தது.

ஷைலஜா, எம்.டி.யோட எந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தாங்க?
விலாபயாத்திரை,தமிழில் இறுதி யாத்திரை.அவர்கள்  இருவர் முகமும் ஒருசேர  இறுகுவதை அந்த இருட்டிலும் நான்  கவனித்தேன்
நான் சொன்னேன்,தமிழில் நான் வாசித்தவரை,எம்.டி.முக்கிமான படைப்பாளி இல்லை.

சட்டென அவர்கள் என்னை ஆமோதித்தார்கள்.சந்தோஷ் என் கைகளைப் பிடித்துக் கொண்டு,
சரியான மதிப்பீடு பவாண்ணா,என்றார்.

அவர் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் ரைட்டர், அவ்வளவுதான். கேசவ்தேவ்,.வி.விஜயன்,முகுந்தன்,பஷீர்,சக்காரியா,மாதவன் இந்த வரிசையில் எம்.டி.க்கு மலையாள இலக்கியம் எப்போதும் இடம் தந்ததில்லை.
என் வாசிப்பு மதிப்பீடுகள் சரியானவைதான் என்பதில் நான் அடுத்த மிடறுவைக் குடித்தேன்.

அந்த நீண்ட இரவின் உரையாடலில்தான் சு.வெங்கடேசன் இதே சஙக இலக்கிய வாழ்வையும், பாரியையும் முன் வைத்து ஒரு பெரும் நாவலை எழுதிக்கொண்டிருப்பதை முருகேச பாண்டியன் சொன்னார்.

கபிலர் வாழ்ந்த அரகண்டநல்லூர் வரை பயணித்து ஒரு மலையாளியாகிய என்னாலயே பாரியையும்,கபிலரையும் எழுத்தில் கொண்டு வந்துவிட முடியுமெனில் அதைவிட சிறப்பாக தமிழ் எழுத்துக்காரனால் முடியும்தானே என மனோஜ் அகமகிழ்ந்த காட்சி இன்னும் அகலாதது.

அவர்களின் தீர்க்க தரிசனப்படியேவேள்பாரிவிகடனில் தொடராக வந்து பெரும் வாசகப் பரப்பை அடைந்தது.அதன் வாசகர்கள் உலகெங்கும் வியாபித்திருக்கிறார்கள்.

என் சமீபத்திய வளைகுடா நாடுகளின் பயணத்தின் போது ஒவ்வொரு நாட்டிலும் வெங்கடேசனுக்கும் வேள்பாரிக்குமென வாசகர்கள் இருந்தார்ள்.ஒரு நண்பனை, உறவினனை, மகனை, சகோதரனை நலம் விசாரிப்பது போல என்னிடம் அவர்கள் வெங்கடேசனை நலம் விசாரித்தார்கள்.வேள்பாரி அதன் உயரத்தை அதை எழுதியவனாலயே நம்ப முடியாத உயரத்தை அடைந்தது.

எழுத்திலிருந்து, தான் பல ஆண்டுகளாக அடை காத்து வைத்திருந்த அரசியலில், ஒரு சரியானத்  தருணத்தில் வெங்கடேசன் நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தன் சிபிஐ (எம்)கட்சியினரால் முன் மொழியப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன்.
ஒரு தொலைபேசியின் வழியே கூட அதை நான் வெங்கடேசனுக்கு கடத்தவில்லை. எனக்குத் தெரியும் எந்த பரபரப்பிலும், நேரமின்மையிலும், வாசிப்புக்கும், எழுத்துக்குமென, தன் இரவுகளை இரகசியமாக ஒதுக்கி வைத்துக்கொள்ளும் படைப்பு மனம் எப்போதும் அவனிடம் உண்டு.ஒரு பாசிச அரசின் அடாவடிகளும் ,அலைக்கழிப்புகளும்  கூட அம்மனசை  ஒன்றும் செய்துவிட முடியாது.

வெங்கடேசனின் வெற்றி மிக சுலபமாக, ஒரு கனிந்த கனி உதிர்வதைப்போல நிகழ்ந்தது.மக்கள் மாற்றங்களை எப்போதும் விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்தார்கள்.
 வெற்றியின் பெருமிதங்கள் அடங்கிய ஒரு நிதானமான தருணத்தில்,மகளுடனான ஒரு கார் பயணத்தில்  நான் வெங்கடேசனை அழைத்தேன்.

வாழ்த்துகள்டா எம்.பிஎன்றேன் அதே மஞ்சம்புல் வீட்டு வாஞ்சதைகளோடு.
உரத்த சிரிப்பு அங்கிருந்து கேட்டது.கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்போனை மானசியிடம் கொடுஎன்ற சொல்லுக்கிணங்க அவளிடம் தந்தேன்.
சித்தப்பா வாழ்த்துக்கள்என ஆரம்பித்த அந்த நொடி அவள்,எங்கள் ஓட்டுநர் ரமேஷ் திரும்பி பார்க்கிற அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தாள்.அவர்கள் உரையாடல் முடியும் வரை காத்திருக்க முடியாதத் தவிப்பிலிருந்தேன்..
அவள் தொலை பேசியை ஒரு கையால் மூடிக்கொண்டு ,
ஒண்ணுமில்லப்பா,‘பாரு மானசி உங்க அப்பன், ஒரு எம்.பி.யை வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசுறான்ன்றார் சித்தப்பா.
ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் பதவி முப்பது வருட முரண்பாடுகளுடான நட்பை ஒருநாளில் துடைத்துவிடக் கூடியதா என்ன வெங்கடேஷா.