Monday, January 13, 2020

ஆதி விருட்சத்தின் குழந்தை

அ. முத்துக்கிருஷ்ணன்



சில பேரை நெருங்கி தரிசிக்கும் போதெல்லாம் நமக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கம் கொள்ள வைக்கும். அடுத்தக் கணமே அம்மனநிலையிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வேன். தம்பிகள் ஒரே ரத்தத்தில், ஒரே குடும்பத்தில்தான் இருந்தாக வேண்டுமா என்ன?.
என் தம்பிகள் நூற்றுக்கணக்கில் உலகம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள். சிங்கப்பூர் விமானநிலையத்தில் முன்பின் பாத்திராத எனக்காக மணிக்கணக்கில் காத்திருந்து என்னை அழைத்துப்போய் நான்கு நாட்கள் தன் சேட்டைகளின் கதகதப்பில் வைத்திருந்த பானுக்குமார் என் கூடப்பிறக்கவில்லையென்றால் என்ன?
துபாய் விமான நிலையத்திலிருந்து என் கரம்பற்றி கூட்டிப்போன ராஜா என் அம்மாவின் வயிற்றில் உருவாகாமல் போயிருப்பினும், ராஜாவின் அம்மாவை என் அம்மாவாக வாழ்நாள் முழுவதும் உணரமுடியும் என்னால்.
அ.முத்துகிருஷ்ணனுக்கு இவ்வுரிமையில் எப்போதும் முதலிடம் உண்டு. இது தரவரிசைப்பட்டியலில்லை; சேர்ந்து களப்பணியாற்றும் தோழமைகளின் நெருக்கம்.
பெரும்பாலும் கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் ஜாதியோடுதான் பிறக்கிறார்கள். காதுகுத்தல், திருமணம், ஊர்த்திருவிழா, சாவு என எல்லா இடங்களிலும் ஜாதியே முதலிடம் வகிக்கிறது. அது ஒரு கூரிய ரம்பத்தைப்போல மனிதனை செங்குத்தாகப் பிளவுபடுத்துகிறது. வளருகிறபோதுதான் அவர்களின் வாசிப்பு, தத்துவம் அரசியல், நட்பு, சேர்க்கை, உலகளாவியபார்வை, என பல இளைஞர்களை ஜாதியை உதறிவிட வைக்கிறது அல்லது மனதளவில் விலக வைக்கிறது…
அப்போதுதான் எதனாலோ மும்பை நகரம் முத்துக்கிருஷ்ணனை மதுரைக்குத் துரத்துகிறது. தாய்மொழி என்ற மகத்துவம் தன் ரத்தத்தில் கலப்பதை உணருகிறான் அந்தப் பையன். பூங்தொட்டியில் இருந்து  பிடுங்கி வேர்கள் நிலத்தில் திசையெங்கும் பரவுகிறது. நிலத்தில் நடப்படுகிறான். கல்லூரிக் காலங்களில் தன்னை “தமுஎச” என்ற  இடதுசாரி கலாச்சார அமைப்போடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். அதன் அரசியல் களமாகிய மார்க்சியத்தை முறையாகப் பயில்கிறான். தன் ஆசான்களை நுழைவாயிற் கூட்டங்களிலும், ஆர்ப்பாட்ட முழக்கங்களிலும், போலீஸ் அடக்குமுறைகளிலும் என சுலபமாகக் கண்டடைகிறான்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து ஒரு சிறு தீயை அணைந்துவிடாமல் திருப்பரங்குன்றம் வரை எடுத்துச்சென்ற சு.வெங்கடேசனுடன் இணைந்து அந்த அக்கினியை ஊதிப்பெருக்கியவர்களில் முத்துக்கிருஷ்ணனும் ஒருவனாகிறான்.
நிறைய வாசிக்கிறான். உலகளாவிய தலைவர்களின் வாழ்வை, அனுபவங்களை, வசிப்பிடங்களை, கொள்கைகளை, நிகழ்வுகளை கூர்ந்து அவதானிக்கிறான். ‘சேகுவேரா’ என்ற அந்த இளம்புரட்சியாளனே முத்துக்கிருஷ்ணனை அதிகம் ஆக்கிரமித்த தலைவன். அவனை கொஞ்சம் கொஞ்சமாய் தனக்குள் இருத்தி தானும் அவனைப் போலொரு புரட்சிப்படையின் கடைசி வரிசை களப்பணியாளனாகவாவது என்ற பெருங்கனவு ஒன்று அவனை விடாமல் துரத்துகிறது. அதன் ஆரம்பமாக “சே”வின் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் சேகரிக்கிறான். அதை ஒரு புகைப்படகண்காட்சியாக மாற்றுகிறான். தன் கனவு ஒன்று தன் கண்முன்னால் மலருவதை அருகில் இருந்து பார்த்து பரவசமடைகிறான்.
பெரும் பண்டல்களாகக் கட்டி அவைகளை சுமந்து கொண்டு நள்ளிரவில் டேனிஷ் மிஷன் மேநிலைப்பள்ளியின் மைதானத்திற்கு ஒரு ஆட்டோவில் இறங்கிய போதுதான் முதன் முதலில் முத்துகிருஷ்ணனை தோளணைத்தேன். அந்த சந்திப்பில் தான் அவனுடனான ஒரு நெருக்கத்தை உணரமுடிந்தது. அதற்குமுன்னும் பத்தாண்டுகள் அவன் என்னோடுதான் பயணித்திருக்கிறான். எங்கள் நிலப்பரப்பு, இயங்கும் களம் எல்லாமே வேறு வேறு. அவன் புனைவுகளில் விருப்பமில்லாதவன். துல்லியமான விவரணைகளோடு அரசியல் கட்டுரைகள் எழுதுபவன். முத்துக்கிருஷ்ணன் தன் சொந்த வாழ்வின் அலைச்சல்களை எழுதித் தீர்த்தால் மட்டும் ஆயிரம் பக்க நாவல் ஒன்று தமிழ் வாசிப்பு உலகத்திற்கு கொடையாகக் கிடைக்கக்கூடும். புனைவு அவன் ஆழ்மனதில் ஒரு நாகப்பாம்பு குட்டி மாதிரி உறங்கிக் கொண்டிருகிறது. அதன் விழிப்பும் வீரியமும் யாராலும் அறிய முடியாதது. அவன் சேகரித்த சேகுவேராவின் அரிய புகைப்படங்களை, திருவண்ணாமலையில் நடந்த ‘தமுஎச’ மாநாட்டரங்கில் காட்சிப்படுத்தினோம். ஆந்திராவிலிருந்து மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் வோல்கா,  இயக்குநர் பாலுமகேந்திரா, கவிஞர். சித்தலிங்கையா, இயக்குநர் பாரதிராஜா என பலரும் அப்புகைப்பட சேகரிப்புக்காக முத்துகிருஷ்ணனிடம் தோழமை கைக்குலுக்கல்களை மேற்கொண்டார்கள். கலைஞனுக்கு இது மட்டும்போதும்தானோ அவன் அதன் நீட்சியாக ‘சே’வின் வாழ்வை முன்வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்தான். இருபதாண்டுகளுக்கு முன் நமக்கு சமூகவலைதளங்களும், கேமராவும் வசப்படாத நாட்களிலும் அதை ஒரு பேரலையாக ஆரம்பித்து வைத்தவர்களில் முத்துகிருஷ்ணனும் ஒருவன். அந்த ஆவணப்படத்தையும், ‘சே’வின் புகைப்படங்களையும் தூக்கிக் கொண்டு அவன் தமிழ் நிலப்பரப்பெங்கும் அலைந்து திரிந்த நாட்கள்தான், அவன் அவனுக்கேப் போட்டுக்கொண்ட அடியுரம்.
வெறுமனே உண்டு உறங்கி கழித்துக் கொண்டிருந்த நகரங்களிலும், வெளியாட்கள் யாராலும் தீண்டப்படாத கிராமங்களிலும் அவன் ஒரு நாளின் எந்த பொழுதிலும் போய் இறங்கவும், அவனைக் காத்திருந்து கூட்டிப்போக ஐந்தாறு இளைஞர்களும் எப்போதுமிருந்தார்கள். அவன் வேர்பிடிக்க தொடங்கிய காலம் இதுதான். நீண்ட பயணங்களினூடே அவன் வாசிப்பை தனதாக்கிக் கொண்டான். புனைவுகளில்லாத எழுத்துக்களே அவனுக்கு விருப்பமானதாக எப்போதுமிருந்து இந்திய அரசியலின் அனைத்து அயோக்கியத்தனங்களும், அவனுக்கு அத்துபடியானது. அதை அம்பலப்படுத்துவதை தனது எழுத்தின் அடிநாதமாக மாற்றிக்கொண்டான்.
இப்பயண மேற்கொள்ளல்களின் போதுதான் இடதுசாரி அரசியலின் நம்பகத்தன்மையும், மக்களுக்கான அர்ப்பணிகளும் அதை நோக்கி அவனை  இன்னும் நெருங்கிப் போகச் செய்தது. தடுமாற்றங்களும், குழப்பங்களும் நிறைந்த பருவம் அதுதான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு மின்னல் மாதிரி வந்து போகும்.
நீ என்னவாகப் போகிறாய்?
என்னவாகப் போகிறேன்.
எழுத்தாளன்?
அரசியல் செயற்பாட்டாளன்?
ஆவணப்படமெடுப்பவன்?
இக்கேள்விகளினூடே நீண்ட அவன் பயணங்களில் அவனே ஒரு முடிவுக்கு வருகிறான்.
’நான் பண்பாட்டு செயற்பாட்டாளன்’
அவன் முடிவெடுத்தான் என்பதைவிட காலம் அவனை அப்படி சமூகத்துக்குள் ஸ்திரப்படுத்தியது. நாம் எல்லாருமே தொடத் தயங்குகிற, வரலாற்று பிழைகளுக்கு அஞ்சி ஒதுங்குகிற அரசியல், சுற்றுபுறச் சூழல், ஜாதியம், உலகமயம் சம்மந்தமான முன்னூருக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவன் தமிழ் சார்ந்த சிறு பத்திரிகையில் எழுதத் துவங்கினான். ’உயிர்மை’ தன் பிரதான கட்டுரையாளனாக முத்துகிருஷ்ணனை நம்பி அல்லது அங்கீகரித்து மாதா, மாதம் வெளிவந்து கொண்டிருந்தது. முத்துகிருஷ்ணனின் பெயரின்றி ‘உயிர்மை’ யின் பக்கங்கள் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அதில் தொடர்ந்து எழுதினான்.
நானறிந்து இப்படி எழுத்திலும் செயல்பாடுகளிலும் வெறித்தனமாய் செயல்படுபவர்கள் ஸ்தாபனங்களில் நீடிப்பது மிகக் கடினம். ஸ்தாபனங்கள் அதன் ஊழியர்களை, களப்பணியாளர்களாகவே இறுதிநாள் வரைக் இருக்கக்கோறுகின்றன. படைப்பூக்கமுள்ள எழுத்துக்களை விட உயர்வானதும், அவசியமானதும், ஸ்தாபனம் மேற்கொள்ளும் களப்பணிகள் மட்டுமே என்கிற கொள்கையில் அது கட்டித்தட்டிப் போய் இறுகியிருக்கிறது. எப்போதும் கலைஞர்களுக்கு பனிக்கட்டிகளின் உருகல்கள் வேண்டும். கற்பாறைகளின் மீது விதைகள் துளிர்ப்பது இனியும் சாத்தியமில்லை என ஆனபோது முத்துகிருஷ்ணன் தன்னை ஸ்தாபனத்திலிருந்து துண்டித்துக் கொண்டான்.
ஸ்தாபன விலகல், அல்லது விலக்கல் நிகழாத கலைஞர்களின் உறக்கம் எப்போதும் நிம்மதியானவை. விலகின படைப்பாளிகளின் தூக்கம் போய் பிசாசுகள் படுக்கையின் பக்கத்தில் படுத்து பிராண்டும் இரவுகள் மிகக்கொடுமையாவை. முத்துகிருஷ்ணன் படுக்கையில் அவன் பக்கத்தில் ஒரு பிசாசு அவன் அனுமதியின்றி நிரந்தரமாகப் படுத்துக்கொண்டது. எதிர்பாராத ஒரு கொலை செய்துவிட்டதாக தன்னைத்தானே உணரும் ‘புதியபறவை’ படத்தில் சிவாஜியின் தவிப்பு போன்றது. அனுபவித்த அனுபவஸ்தர்களால் மட்டுமே அதை உணரமுடியும். என்னால் முடியும்.
நேற்றுவரை தோழமை, நட்பு, பிரியம் என இருந்த தோழர்கள் அப்படியே அந்த இரவுவோடு எல்லாவற்றையும் கத்தரித்துக் கொள்வார்கள். இயக்க நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் உங்கள் இருக்கையைத் தாண்டி அடுத்த இருக்கைக்குப் போகும். நீங்கள் இரவும், பகலும் ஓடியாடி உழைத்து உரமேற்றிய ஒரு இயக்கம்செயல்பாடுகளில்  ஒரு பார்வையாளனாகக் கூட உங்களை அழைக்காது. அல்லது உங்களால் பங்கேற்க முடியாது. அது ஒரு ரணம். காயம் ஆறுவதற்கு முன் நீங்கள் வேறு செயல்பாடுகளில் உங்களை கறைத்து தப்பிக்க வேண்டும்; அல்லது காயம் புரையோடிப்போகும்.

முத்துக்கிருஷ்ணன் மிகச்சுலபமாக அதிலிருந்து தப்பித்தான். உலகளாவியப் பயணங்கள், வாசிப்பு, காதல் இம்மூன்றும் வேரழுகிப் போனதாக நம்பப்பட்ட அவன் நாட்களை அவனுக்கு உயிர்ப்பித்துக் கொடுத்தன. அக்காய்ந்த செடியிலிருந்து இளம்பச்சையும் ப்ரவுன் நிறத்திலும் ஆயிரமாயிரம் துளிர்களை இம்மூன்று மழைகளும் அவனுக்கு உயிர்ப்பித்துக் கொடுத்தன. முன்னிலும் ஆவேசமாக அவன் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டான். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவன் மெல்ல ஒரு பேச்சாளனாக மாறினான். கூட்டங்கள், அரங்குகள், தொலைகாட்சி விவாரங்கள் என அவன் குரல் வெளி எங்கும் சிதறியது. உயிரை அடமானத்திற்கு எழுதித் தந்து, பாலஸ்தீனம் வரை நீண்ட ஒரு தரைவழிப் பயணத்தை அவன் சுலபமாக மேற்க்கொண்டான். தமிழ் சூழலில் பிரமிப்பாக உணரப்பட்ட பயணம் அது.
இந்திய அளவில் பெரும் அறிவு ஜீவிகளுக்கு முத்துக்கிருஷ்ணன் என்ற பெயர் தெரிய ஆரம்பித்தது. அருந்ததிராயில் ஆரம்பித்து மேதாபட்கர், ஆனந்த் பட்வர்தன், ராம் புனியானி, அஸ்கார் அலி என்ஜீனியர், தியோடர் பாஸ்கரன் என பெரும் மேதைகளும், செயற்பாட்டாளர்களும் தங்கள் சபைகளில் ஒரு இருக்கையை மதுரையிலிருந்து போன அந்த குட்டிப் பையனுக்கும் ஒதுக்கித் தந்தார்கள். காதலும்,வாழ்வும் ததும்பி வழியும் தன்அன்பின் கரங்களால் ஷோபி என்ற எங்கள்தோழி முத்துகிருஷ்ணனின் நாட்களை தாங்கிப்பிடித்ததும் இந்நாட்களில்தான் .
புறக்கணிக்கப்பட்டவர்கள் ஸ்திரப்பட வேண்டிய இடம் இதுதான். இதையும் தவறவிடுபவர்கள்தான் தொடர் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி சித்தபிரமைப்பிடித்து, தற்கொலைகளுக்கு முயன்று, அல்லது தான் இதுநாள்வரை ஆத்மார்த்தமாய் செயல்பட்ட இயக்கத்தின் மீது சேற்றையள்ளிப்போட்டு, புதையுண்டுப் போவார்கள். நானறிந்து தமிழகத்தில் இயக்கத்திற்காகவும், தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் திறந்திருப்பது நான்கைந்து கதவுகள் மட்டுமே. எந்த அகாலத்திலும் நீங்கள் அவ்வாயில்களின் வழி சென்று அவர்களின் வீட்டில் தங்கிகொள்ளலாம் சாப்பிடுவதில் நீங்கள் பசியாறவும் ஒரு கவளம் சோறு நிச்சயம் இளைப்பாறிக்கொள்ளலாம். எப்போதும் மூடுண்ட கதவுகளுக்குப் பின்னாலிருந்து இயக்கத்தின் முண்ணனி ஊழியன் என்று தன்னைப் பிரகடனப்படுத்துவது உலகை ஏமாற்றுவது. 
மதுரையில் முத்துக்கிருஷ்ணனின் வீடு அந்த நாலைந்தில் ஒன்று. குடும்ப உறுப்பினர்களையே செயல்பாட்டாளர்களாக்குவது, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளையும், இயக்கத்தையும் அவர்களை முழுமையாக அங்கீகரிக்க வைப்பது. இது வெறும் சொற்களாலோ, கட்டளைகளாலோ ஒருபோதும் முடியாது. உங்கள் ஆத்மார்த்த செயல்பாடுகள்தான் உங்களை நோக்கி உங்கள் குடும்பத்தை நெருங்க வைக்கும். உங்கள் தினங்களின் மேற்கொள்ளல்களை அங்கீகரிக்க வைக்கும். அல்லது அவர்கள் கருமாரியம்மன் கோயிலுக்கோ, வேளாங்கன்னிக்கோ, படவேடு மாரியம்மனுக்கோ, மேல்மலையனூர் மாரியம்மனுக்கோ உங்கள் குழந்தைகளை உங்களுக்குத் தெரியாமல் கொண்டுபோய் சந்தனம் பூசி மொட்டைபோட வைப்பார்கள். இது இடைவெளி. அரசியல், இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப வக்கற்ற நாம் எப்படி மேடையில் ஏறி ‘ ஏ மானுட சமுத்திரமே? என மக்களை மந்தைகளாகக் கருதி கூவமுடியும்? அவனுக்கும் பிரியமான ஒரு தங்கையும் தம்பியும் உண்டு. பெரும் படைப்பூக்கமும், புதியவைகளை சாத்தியமாக்கும் வல்லமையும் கொண்ட இளம் பெண்ணாக தங்கை கல்யாணியின் இருபதாவது வயதில் நான் அவளைத் திருவண்ணாமலையில் சந்தித்தேன். என் குடும்பத்தில் இருந்த எல்லோருக்கும் கல்யாணியை அப்படிப் பிடித்துப்போனது.  கல்யாணியைப் போலொரு சிநேகிதியை யாருக்குத்தான் பிடிக்காது?
என் நண்பன் ஜே.பி இயக்குநராக இருந்து செயல்பட்ட ‘குவாவாடீஸ்’ பல்சமய உரையாடல் மையத்தில் ஜே.பி கல்யாணி, நான் மூவரும் சேர்ந்து மஞ்சம்ப்புல் வேய்ந்த ஒரு குடிசையை வடிவமைத்தோம். அதை கட்டி மேலெழுப்புகிற பணியை கல்யாணி ஒற்றை மனுஷியாக தன் தோள்களில் ஏற்றுக் கொண்டாள். குவாவாடீஸில் வேய்ந்த மஞ்சம் புல் தான், இன்றைய பத்தாயத்தின் நீட்சி.  சுட்ட செங்கற்கள் இத்தனை சாத்தியமுள்ளது என்பதை, அவளுடைய அன்றாட செயல்பாடுகளை பார்த்தே அறிந்து கொண்டேன். குவாவாடீஸ் சர்வதேச அளவில் இன்று புகழ்பெற்றிருப்பினும் பெரும்  கட்டிடங்களால் வியாபித்திருந்தாலும்; இன்றளவும் அம்மஞ்சப்புல் வேய்ந்த குடில் அப்படியே நடுநாயகமாக இருந்து,வரும் மதங்களைக் கடந்த தர்க்கவாதிகளை தன்னுள் இருத்திக் கொள்கிறது.
மதுரைக்கென வாய்த்த தனி அடையாளங்கள், எனப்படுவது இரவு சாப்பாட்டுக்கடைகள். கோனார்கடை கறி தோசை, மதுரை மல்லி, அம்மா மெஸ் கறிச்சோறு என சாதாரணர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். ஆனால் எந்த ஊரின் அடையாளமும் இப்படிப் பொதுமைப்படுத்தவைகளோடு நின்று போவதில்லை. திருவண்ணாமலை என்ற சிறு நகரத்தின் அடையாளம் அண்ணாமலையார்க் கோவில், கிரிவலம், ரமணாஸ்ரமம் மட்டுமா? யாராலுமே வடிவமைக்க முடியாத, டேனிஷ் மிஷன் பள்ளியின் அந்த ரெட்பில்டிங் இல்லையா? சென்னை சாலையில் ஒரு படகு துடுப்போடு நிற்பது மாதிரி நின்று கொண்டிருக்கும்  படகு வடிவிலான ஆர்.சி. சர்ச் இல்லையா? எங்கும் கிடைக்காத சுவையோடு எங்கள் மண் பிரசவிக்கும் நாட்டு மல்லாட்டை கொட்டைகள் இல்லையா? தனிச் சுவையோடு விளைந்துப் பெருகும் களம்பூர் பொன்னி அரிசி இல்லையா? இது எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு நிலப்பரப்பின் அடையாளம். உங்கள் வசதிக்கு, உங்கள் தேவைக்கு, உங்கள் வருமானத்துக்கு, எவைத் தேவையோ அதை மட்டும் மக்களின் பொது புத்தியில் போதையூசிகள் மாதிரி ஏற்றுவதில்லை, ஊர் அடையாளங்கள்.
மதுரையின் தனிஅடையாளங்களில் ஒன்று முத்துக்கிருஷ்ணன் உருவாக்கிய ‘பசுமை நடை’. ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மனிதர்களை அது தன்னகத்தேக் கொண்டு பெரும் ஆலமர விருட்சமாய் இப்போது வியாபித்திருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தன் விரல்விட்டு எண்ணக் கூடிய நண்பர்கள் உதவியோடு, மழைக்குப் பிந்தின ஒரு பகலில் ஒரு சிறு செடியாக அதை மதுரை மண்ணில் ஊன்றினான். பெரு மழைகளில் அதன் மீது குனிந்து நின்று அவர்கள் அதை மழையினின்றுக் காத்தார்கள். தாங்களே அதன் மீது படர்ந்து வெயிலை உள்வாங்கி அதை குளிர்ச்சிப்படுத்தினார்கள். மனித அமில சிதறல்களை தங்களின் உரமேறிய தோள்களில் சிதறவிட்டார்கள். முத்துக்கிருஷ்ணனுக்கு தன் சக மனிதர்களின் மீது இருக்கும் பிரியம் தான் இந்த அமைப்பை ஒரு ஆலமரமாக வளர்க்க உதவியிருக்கிறது. அவன் ஒரு ஆதி மனித விருட்சம்தான் .
பார்க்க பார்க்க அது அநியாயத்திற்கு வளர்ந்துவிட்டது. பச்சைகிளிகள் அதன் சிகப்புபழங்களை அருந்த பெயர் தெரியாத திசைகளிலிருந்தெல்லாம் பறந்து வருகின்றன. பரந்து விரிந்த அதன் வேரடிப்பரப்பில் எத்தனை எத்தனையோ மனிதர்கள் படுத்து உறங்குகிறார்கள். புத்தகங்களை கொண்டு வந்து அதன் நிழலில் அமர்ந்து வாசிக்கிறார்கள். ஒரு விலகளாளன் போல முத்துகிருஷ்ணன், தூர நின்று அதன் வியாபிதத்தை ரசிக்கிறான்.
ஆறிலிருந்து அறுபதுவரை என்ற படத்தின் இறுதியில், தன் குடும்பத்தின் வளர்ச்சியை, துரோகத்தை, புறக்கணித்தலை, ஒரு ஈசிச்சேரில் சாய்ந்து உட்கார்ந்து ரஜினி அசை போடுவார். கடந்த காலங்களின் கசப்புகள் மெல்ல கரையும். முத்துக்கிருஷ்ணனுக்கு அப்படியான தருணம் இது.
(அப்படியான ஓர் இரவு இரு மாதங்களுக்கு முன் எங்களுக்குள்ளும் நிகழ்ந்தது. சாத்தூரில் தியாகண்ணன், கௌரி அக்கா மகன் நிருபன் திருமணத்திற்கு போய், அவர் எங்களுக்கு அளித்திருந்த ஒரு விலையுயர்ந்த வாடகை அறையில் தங்கியிருந்தோம். குழுமியிருந்த சில நண்பர்களுக்கும் அன்று ஏனோ கொஞ்சம் குடிக்கலாம் எனத் தோன்றியது. பதினோரு மணிக்குப் போய் ஒரு குறைந்த வெளிச்சத்தில் அமர்ந்து கொஞ்சம் வோட்கா குடித்தோம். அது போதைக்காக அல்ல; இந்த இரவில் மனக்கசப்புகள் வெளியேற வேண்டும், அதற்காக. இரண்டாவது கோப்பை காலியானதும் முத்துக்கிருஷ்ணன் என் கைகளை இறுகப்பிடித்து நெருக்குகினான். இந்த தொடுதல் பரிவானதல்ல, கோபம் கொப்பளிப்பது என்பதை அழுத்தம் வெளிப்படுத்தியது எனக்கு.
என்ன ஆச்சுடா?
”நீங்களெல்லாம் ஏன் பவா, கல்யாணி கணவன் தட்சிணாமூர்த்தியின் மரணத்திற்கு வரல?”
”அதன் பிறகும் வந்துகூட கல்யாணியை பாக்கலை?”
நான் நெருக்குதலில் இருந்து அவள தப்பிக்க பாக்குற தைரியம் வரலைடா !’
”சும்மா தப்பிக்காதீங்க பவா,உங்க கூட பொறந்த தங்கச்சியின் கணவன் இறந்திருந்தா போகாம இருந்து, இப்படி ஒரு வார்த்தையால சமாதானம் சொல்லமுடியுமா உங்களாலா?”
இப்போது இன்றும் வெளிச்சம் குறைந்த அந்த அறையில், குனிந்து முத்துக்கிருஷ்ணனின் கால்களைத் துழாவினேன்… அவை அங்கிருந்து ஏற்கனவே அகன்று விட்டிருந்தன.
எப்பொழுதுமே முத்துக்கிருஷ்ணனை நான் தொலைபேசியில் அழைக்கும் போது ”எந்த நாட்டில் இருக்கீங்க தோழர்” என்று தான் ஆரம்பிப்பேன். என் நண்பர் மிஷ்கினும் எப்பொழுதுமே என்னப்பா முத்துக்கிருஷ்ணன் தாயகம் திரும்பிட்டானா என்றே கிண்டல் செய்வார். அப்படி விளையாட்டாக பேசத்தொடங்கி அவன் இப்பொழுது ட நாடுவிட்டு நாடு அலைபவனாகவே மாறிப்போனான். இதோ இந்த கட்டுரையை நான் எழுதும் போதும் அவன் எந்த நாட்டில் அலைகிறான் என்று தெரியவில்லை.


No comments:

Post a Comment