Saturday, October 22, 2016

உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க மனிதர்கள் வருவார்கள்.

நேர்காணல்

பவாசெல்லதுரை
கேள்விகள் : இவள்பாரதி







எழுத்தாளர், பேச்சாளர், இப்போது கதை சொல்லியென, தன் பயணத்தில் புதிய புதிய பரிணாமங்களை நோக்கிப் பயணிக்கும் பவாசெல்லதுரை, திருவண்ணாமலையின் அடையாளம்.

ஒரு வருடத்திற்கும் மேல் சொந்த ஊரில் நடக்கும் பவாவின்கதை கேட்க வாங்கநிகழ்வைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும்பவாவின் கதை வெளிக்காக தன் கதைகளைச் சொல்லி முடித்த ஓர் இரவில் ஆடுகளத்திலேயே அப்படைப்பாளியைச் சந்தித்தோம்.

கேள்வி: எழுதுவதோடு எழுத்தாளனின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதைத் தாண்டி கதைகளை ஏன் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது உங்களுக்கு?

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு புழுக்கமான இரவில் என் நண்பன் ஜே.பி. என்னை அழைத்து நீ எங்களுக்குச் சொல்லும் கதைகளை ஏன் இன்னும் கொஞ்சம் விரிவாக்கி ஐம்பது நூறு பேருக்குச் சொல்லக்கூடாது எனக் கேட்ட நிமிடம் அது பிடித்துப் போனது.

அந்த வாரமே திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஆஸ்ரமத்திற்கு எதிரிலுள்ளகுவா வாடீஸ்பல்சமய உரையாடல் மையத்தில் அந்நிகழ்வை நடத்துவதென அவன் முடிவெடுத்து மரங்களும், செடிகளும், சிற்பங்களும், ஓவியமுமாய் நிறைந்திருக்கும் அவ்வளாகத்தில் நான் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரின் மூன்று கதைகளைச் சொன்னேன். அறுபது எழுபது பேர் பார்வையாளர்களாய் வந்திருந்தார்கள். அவர்களில் பலரும் என்னை இருபது வருடங்களுக்கும் மேல் பின்தொடர்பவர்கள் என்பதை அறிய சந்தோஷமாயிருந்தது.

அடுத்த பதினைந்தாவது நாள் அடுத்த கதை சொல்லல். இப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை நூற்றி ஐம்பதைத் தாண்டியிருந்தது. பயணம் சரியான பாதையில்தான் என்பது நிச்சயமானபோது உற்சாகம் எங்கள் இருவரையுமே தொற்றிக் கொண்டது. இப்போது 10 நிகழ்வுகளை முடித்து விட்டோம். அதிகபட்சமாக 300 பேர் வரை பங்கெடுக்கிறார்கள்.

கதைகளை வாசிப்பது என்பது ஒரு அனுபவம். கேட்பது அதற்கும் மேலே என நினைக்கிறேன். நாம் எல்லோருமே கதை கேட்டு வளர்ந்த மரபில் வந்தவர்கள். அது விடுபட்டுப் போன ஏக்கம் ஒவ்வொரு ஆழ்மனதிலும் இப்போதும் இருக்கிறது. நான் அதை கதைகள் சொல்லி நிரப்புகிறேன் எனத் தோன்றுகிறது.

அந்நிகழ்வின் காணொளிக் காட்சியை வம்சி உடனேயே youtube-ல் பதிவேற்றுகிறான். உலகின் பல நாடுகளில் இருந்தெல்லாம் அதற்குப் பாராட்டுகளும், தொலைபேசி அழைப்புகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. எனக்கான கைக்குலுக்கல்களும், பாராட்டுகளும் இந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருகியிருக்கிறது.

கதைகளை மனிதர்கள் தொப்புள்கொடியறுத்த குழந்தைகளைத் தங்கள் கைகளில் ஏற்றுவதைப் போல ஏற்றிக் கொள்கிறார்கள்.

இதோ இப்போது என்னை இதுவரை நேரில் சந்தித்திராத, பத்து வருடங்களுக்கும் மேல் என் எழுத்தை மட்டுமே பின் தொடரும், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ரீகன், தன் நண்பர்களோடு சேர்ந்து சென்னையில்பவாவின் கதை வெளியென ஒரு நிகழ்வைத் துவங்கியிருக்கிறார்கள். இது மாதத்திற்கு ஒருமுறை நடக்கும். நீங்கள் பார்க்கிற இம்முதல் நிகழ்வில் அறுபது பேர் இருக்கிறார்கள். அடுத்த நிகழ்விலேயே இது முன்னூறைத் தாண்டும். சென்னையின் பரபரப்பும், சலிப்பும் நிறைந்த வாழ்வு உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க, மனிதர்களை உந்தும். கேளிக்கைகளை உதறிவிட்டு வாழ்வின் உயிர்த் துடிப்புகளின் சப்தமெடுத்த குழந்தைகளோடு அப்பாக்களும், அம்மாக்களும் வருவார்கள்.

கேள்வி : நீங்கள் ஒருங்கிணைக்கும்நிலம்இலக்கிய நிகழ்வுகள் இப்போது பெரிதும் கவனப்படுத்தப்படுகின்றன. அதில் என்ன அத்தனை சிறப்பு?

சு.ரா. கம்யூனிஸ்டுகளை இலக்கியத்தில் கால் நனைப்பவர்கள் என்று சொல்வார். மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிப் போன ஒரு தேசத்தில் இங்கிருந்து அதை எழுதும் ஒரு எழுத்தாளன் அவர்களோடு இருந்து மட்டுமே இயங்கவும், எழுதவும் முடியும்.

என்ன காரணமென மையப்படுத்த முடியவில்லை, என் வாழ்வில் எல்லாத் தருணங்களும் இலக்கியம் மட்டுமே நிரம்பியிருக்கிறது. தொடர்ந்து கலை இரவுகள், முற்றம் என தமுஎசவில் இருந்தபோது முன்னெடுத்தவை இன்னும் தமிழ் கலை இலக்கிய உலகில் நினைவு கூறப்படுகிறது.

இப்போதுநிலம்செலவுகளைக் கருதிவம்சிபுக்ஸ்மாடியிலேயே அதை நடத்துவதென முடிவெடுத்தார்கள். ஆறு நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கின்றன.

ஆது ஒரு பெரும் அனுபவமாக மாறுகிறது. சூழலும், நாங்கள் பயன்படுத்தும் ஆரஞ்சுவண்ணக் குறைந்த ஒளியும், மலை மங்கலாகத் தெரியும் மொட்டை மாடியும், ஒரு படைப்பாளியின் ஆழத்திலிருந்து சொற்களைக் கோருகிறது.

கடந்த நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் - இன் படைப்புலகம் பற்றி இரண்டு மணிநேரம் பேசினார். ஒரு சிறு அசைவில்லை. மாடியைத் தாண்டி வராண்டாவிலும், தெருவிலும்வரை மனிதர்கள் நின்று கேட்டார்கள் ராமகிருஷ்ணன் சொன்னார், இருபது வருடங்களுக்கு முன் இங்குதான் போர்ஹேவைப் பற்றிப் பேசினேன். இப்போது மார்க்விஸ். சென்னை உட்பட தமிழ்நாட்டின் எந்நகரமும் என்னை இவர்களைப் பற்றி பேச அனுமதித்ததில்லை. அதனால்தான் இந்நகரைத் தமிழ்நாட்டின் டப்ளின் எனச் சொல்லுகிறேனென. முப்பது வருட உழைப்பு இருநூறு பேரை நுட்பமான பார்வையாளர்களாக மாற்றியிருக்கிறது.

கேள்வி : கதை சொல்லுதல், கூட்டம் நடத்துதல், தினம் தினம் உங்கள் வீட்டை நோக்கி வரும் இலக்கியவாதிகள், திரைப்பட ஆளுமைகள், வாசகர்கள் இவர்களை போஷித்தல் என்றிவை உங்கள் படைப்பின் கூர்மையை மழுங்கடிக்கவில்லையா?

மாறாகக் கூட்டுகிறது என நினைக்கிறேன். படைப்பே மனிதத் திரளும், அவர்களின் வாழ்வும்தானே. மனிதர்களற்ற, அவர்களின் முரணற்ற, ஈரமிக்க, வன்மம் நிறைந்த வாழ்வைத்தானே எத்தனை முக்கியமான எழுத்தாளனும் எழுத முடியும்?

இயல்பாகவே அது என் வாழ்வோடு இருக்கிறது. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். ஒவ்வொருவர் மீதிருந்து வரும் வாசனையும், வார்த்தைகளும், உடல்மொழியின் லாவகமுமே என் படைப்பின் நகர்வு.

பிரத்யேகமான என் நிலப்பரப்பையும், அதன் ஜீவனுள்ள மனிதர்களையும், மட்டுமே எழுதி முடித்தால் அது உலகின் எந்தப் பேரிலக்கியத்துடனும் வைத்துப் பார்க்கத் தகுந்த தகுதி பெறும்.

எங்கள் பஸ் ஸ்டேண்டில் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை ஐந்து மணிவரை மனிதர்கள் பெட்டி, படுக்கையுடன் கூட்டம் கூட்டமாக ப்ளாட்பார தரையில் படுத்து கிடப்பதைப் பார்க்கலாம்.

அவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த கிராம மண்ணை, மனிதர்கள், பங்காளிகளை, ஆசையாய் வளர்த்த ஆடு, மாடுகளை தினம்தினம் ஒரு எட்டு போய் கால் நனைத்து வந்த பம்புசெட் வாய்க்கா தண்ணியையெல்லாம் நிராகரித்துவிட்டு ஏதாவதொரு கட்டணம் குறைந்த பேருந்தில் ஏறி பெங்களூருக்கோ, சீமோகாவுக்கோ கூலிகளாய்ப் போவதற்காகப் படுத்து கிடக்கிறார்கள்.

அங்கு அவர்களுக்குக் குளிக்க, வெளிக்குப் போக, படுக்க, உறவு கொள்ள, முத்தம் தர எதற்கும் இடமில்லை, ஆனாலும் இந்த சொந்தமண் நிராகரிப்பும், ரணத்தை நோக்கிய பயணமும் எதற்கு? வயிற்றுக்குத்தான். இதையெல்லாம் எழுத முடியாத கைகள் எதற்கு? இதையெல்லாம் எழுதாமல் நான் வேறெதை எழுதிவிடப் போகிறேன். என்ஏழுமலை ஜமாஇதன் ஒரு சிறு துளிதான்.

கேள்வி : விவசாய வாழ்வு உங்களுடையது. அரசுப் பணியிலும் இருக்கிறீர்கள், இதற்கெல்லாம் ஏது நேரம்?

என் அப்பா அம்மாவுடையதுதான் நிலம் சார்ந்த வாழ்க்கை. அப்பா ஆசிரியராக இருந்ததெல்லாம் பெயரளவுக்குத்தான். எப்போதும் நிலம், ஆயில் இன்ஞின், கமிட்டிக்கு மல்லாட்டை ஏற்றுவது என தினங்கள் அவரை குஷிப்படுத்தின நாட்களை அருகிலிருந்து உள்வாங்கியிருக்கிறேன்.

அவர் எங்களுக்குக் கொடுத்துப் போன நிலத்தில் ஒரு சென்ட்டையும் எத்தனை கஷ்டத்திலும் விற்கவில்லை. மேம்படுத்தியிருக்கிறோம்.

ஆறு மாதத்திற்கு முன் சென்னையிலிருந்து வந்த நண்பர் வி.பி.ராஜ் (பெசன்ட் நகரில்என்ற பெயரில் ஆர்கானிக் ரெஸ்ட்ராண்ட்) இந்த நிலத்திலிருந்து ஒரு பகுதியை எங்களிடம் கேட்டார். அவர் கடந்த பதினைந்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை, சூழல் என அதற்காகவே தன்னை ஒப்புக் கொடுத்த மனிதர். எதுவும் பேசாமல் நாங்கள் நிலம் தந்தோம்.

நிலத்தில் இயற்கை வேளாண்மைக்கென ஒரு பள்ளியைக் கட்டத் துவங்கியிருக்கிறார். எங்கள் கிராமங்களில் யாரையெல்லாம் படிப்பு வராதது என வெளியேற்றப் பட்டார்களோ, யாரையெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஒதுக்கினார்களோ அவர்களே இப்பள்ளியின் இயற்கை விவசாய மாணவர்கள். ஒரு பைசா கட்டணமின்றி இவர்கள் விவசாயத்தில் நாம் இழந்தவைகளை மீட்டெடுக்கப் போகிறார்கள். பாமயனில் ஆரம்பித்து நம்மாழ்வாரின் பல மாணவர்கள் இதில் ஆசிரியர்களாப் பங்காற்றுவார்கள்.

சிறிய துவக்கம்தான். ஆனால் பெரிதாய் வளர்வோம். அதனூடே ஒரு திரைப்படப் பயிற்சி கல்லூரிக்கும் (இதுவும் கட்டணமின்றிதான்) முயல்கிறோம். நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கின்றன.

காலை ஐந்து மணிக்கு எழுகிறேன். நடை பயிற்சியெல்லாம் இல்லை. நிலத்தில் வேலைகளினூடே நடத்துவிடுவேன். பத்து மணிவரை நிலத்திலிருப்பேன். அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், மாடும், கன்றும் கோழிகளும் வாத்துகளும் என் ஸ்பரிசம் பட்டே வளர்ந்தவை.

பத்து மணிக்கு அலுவலகம். அது எனக்குள் ஒட்டவேயில்லை. ஆனாலும் என் வேலைகளைப் பிசாசு மாதிரி செய்து முடிப்பேன்.

மாலையில் மீண்டும் நிலம், விவசாய வேலைகள் என்பது முற்று பெறாதது. தொடர்ச்சியாக அதில் நீங்கள் வேலை செய்து கொண்டேயிருந்தால் ஏதோ ஒருநாள் ஒரு அபூர்வ மலர் உங்களுக்காகப் பூக்கும். ஒரு கொய்யாப்பழம் மரத்தில் பழுத்து உங்கள் கைகளில் விழும். ஒரு மா மரத்தடி வேரில் எனக்கே எனக்கென ஒரு பழத்தை மறைத்து வைத்திருக்கும்.

இதையெல்லாம் சொல்ல சொற்கள் இல்லை. எத்தனை மல்லுக்கட்டினாலும் விவசாய வாழ்வு, எத்தனை இனிது என்பது வலிநிறைந்த விவசாய வாழ்விலிருந்தே உணரமுடியும்.

இரவு பன்னிரெண்டுவரை வாசிப்பும் எழுத்தும். அது அடுத்தடுத்த நாட்களை நனைத்துக்கொள்ள, மனிதர்கள் மீதான நேசத்தை இன்னும் அதிகமாக்கக் கற்றுத்தருகிறது.

இதற்கு நடுவில்தான் தேடிவரும் நண்பர்களை கவனித்துக் கொள்கிறோம். ஷைலஜாவும், வம்சியும், மானசியும் என் மனநிலையிலேயே இயங்குவதால் இதெல்லாம் சாத்தியமாகிறது. இதன் விரிவாக உத்ரா, கே.வி. ஜெயஸ்ரீ, சுகானா, அமரபாரதியென அவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

எப்போதுமே நான் இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை இட்டு நிரப்புபவனல்ல. கோடுகள் இல்லாக் குடும்பமாகத்தான் இதை நாங்கள் வைத்திருக்கிறோம்.

கேள்வி : நவீன மலையாள இலக்கிய உலகத்தோடு உங்களுக்குள்ள தொடர்புகள் பற்றி

பால் சக்காரியாவின் யாருக்குத் தெரியும்? கதையைசதுரம்இதழில் படித்தவுடன் ஏற்பட்ட தொடர்பு அது. ஆனந்தின்நான்காவது ஆணி படித்து இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற வியப்பில் அவர்களைத் தேட ஆரம்பித்தோம்.

எம்.டி.விசக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, என்.எஸ். மாதவன், கே.ஆர்மீரா, சந்தோஷ் ஏச்சிக்கானம், மனோஜ் குரூர், .அய்யப்பன் என இருபதுக்கும் மேற்பட்ட நவீனப் படைப்பாளிகளின் படைப்புகளை என் மனைவி கே.வி. ஷைலஜாவும், அவள் சகோதரி கே.வி. ஜெயஸ்ரீயும் 20 புத்தகங்களாகத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது இன்னும் விரிவாகி ஜெயஸ்ரீயின் கணவர் உத்திரகுமாரனும், மகள் சுகானாவும் இப்போது இரு புத்தங்களையும் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்கள். சுகானா மொழிபெயர்ப்பில் வரப்போகும் அசோகன் சருவில் கதைகள் தமிழை நோக்கிப் புதிய அலைகளைக் கொண்டுவரும்.

மலையாள வாசகர்கள் நிறைய பேருக்கு இப்போது என்னைத் தெரியும். தேசாபிமானி, சந்திரிகா, போன்ற புகழ்பெற்ற இதழ்களில் வந்த என் பத்திகளும், கதைகளும், கட்டுரைகளும் அவர்களை என்னிடம் நெருக்கமாக்கியிருக்கிறது. தினமும் ஆறேழு மலையாளக் குரல்களையாவது என் தொலைபேசி வழியே தரிசிக்கிறேன். திருவண்ணாமலைக்கு அங்கிருந்து வரும் படைப்பாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுகிறது.

சமீபத்தில் மனோஜ் குரூர் சங்க இலக்கிய தமிழ்வாழ்வை முன்வைத்து எழுதியநிலம் பூத்து மலர்ந்த நாள்வெளியீட்டு விழாவிற்கு வந்த சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் கைகளை ஒரு அதிகாலையில் ஜெயஸ்ரீ வீட்டில் வைத்துப் பற்றினேன்.

நான் ஸ்பரிசிப்பது நின்றெரியும் ஒரு தீஜுவாலையை என்பதை உணர்ந்தேன். அன்றிரவு நடந்த அப்புத்தக வெளியீட்டில்,


‘‘இலக்கியம் படியாத உடல்கள் குருடர்களையும் ஆண்மையற்றவர்களையுமே பிரசவிக்கும்’’ என அவர் பேசியபோது ஏற்பட்ட அதிர்வு என்னிலிருந்து என்றும் அகலாது. அவருடையஒற்றைக் கதவுதமிழில் கே.வி.ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது. அக்கதைகள் முழுக்க எரியும் மனதிலிருந்து எழுந்த தீதான். அன்று பின்னிரவுவரை எங்கள் வயல்வெளியில் மினுக்கிட்டாம் பூச்சிகள் தந்த வெளிச்சத்தினூடே அவருடன் நடந்து பேசித் தீர்த்த இலக்கியங்கள் வேறு யாராலும் அடையமுடியாத அனுபவங்கள்.

இருபது வருடங்களுக்குமுன் கேரளாவின் நெருப்பென பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டைச் சொல்வார்கள். இப்போது சந்தோஷ் ஏச்சிக்கானம். ஐம்பது படங்களுக்குக் கதைவசனம் எழுதியிருக்கிறார். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை பவாண்ணா, என் கதைகள் மட்டுமே எனக்கான தகுதி, அங்கீகாரம், பெருமிதம் எனச் சொல்லும் அவரின் மொத்தக் கதைகளையும் ஜெயஸ்ரீ மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறார். திருவண்ணாமலை தமிழ், மலையாள இலக்கியங்களை இணைக்கும் மனப்பாலமாக மாறியிருக்கிறது.

கேள்வி : உங்கள் குடும்பச் சூழல் எப்படி இவற்றை எதிர்கொள்கிறது?

என் குடும்பம் என்பது ஷைலஜாவும், வம்சி, மானசியும் மட்டுமல்ல. அதன் விஸ்தீரனம் இன்னும் விரிவானது. ஜெயஸ்ரீ, உத்ரா, சுகானா, அமரபாரதியில் ஆரம்பித்து, பீனிக்ஸ், மீனா, அபிதா, காயத்ரி, கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஷபி என நண்பர்களாலானது. குடும்பத்திற்கும் இலக்கியச் செயல்பாட்டிற்குமாக மெல்லிய கோடுகளற்ற வாழ்வுத்தான் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் மன அலைவுறுதலை எப்படி ஆராதிக்க வேண்டுமென அடிப்படையிலேயே கலை மனம் உள்ள ஷைலஜாவுக்குத் தெரியும்தானே! அதனால் எந்தப் பிரச்சனைகளுமின்றி இதையெல்லாம் ஒரு குடும்பமே மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடிகிறது.

நகை, பணம், வீடு, சொத்து எனச் சுருங்கிப் போன லௌகீகங்களின் மீதான நாட்டமுடைய ஒரு குடும்பச் சூழல், துரதிஷ்டவசமாக எனக்கு அமைந்திருந்தால் தற்கொலை செய்து செத்துப் போயிருப்பேன்.

கேள்வி : விவசாயி, அரசு அலுவலர், எழுத்தாளன், கதைசொல்லி, இலக்கியச் செயற்பாட்டாளன். இதில் யார்தான் நீங்கள்?

எல்லாமும்தான். நடுநிசிகளில் வாய்க்கால் நீர் காலில் நனைய அப்பாவோடு சேர்ந்து வயலுக்குத் தண்ணிகட்டிய அனுபவமேறிய பால்ய உடல் என்னுடையது. அது ஊறிப் போயிருக்கிறது. அதிலிருந்துதான் நான் உருவானேன். விவசாயத்தை மட்டமே பிரதானத் தொழிலாகக் கொண்டு இந்தியாவில் வாழமுடியாத துயர வாழ்வை என் அரசு வேலைதான் மாற்றியமைத்தது. அலுவலகத்தின் ஒரு துரும்புகூட என் மனதில் ஏறவில்லை. அது பிழைப்பதற்கான ஒரு நேர நிரப்புதல் அவ்வளவுதான்.

விவசாய வாழ்வும், அலுவலகச் சூழலும் எனக்குக் கதைகளைத் தருகிறது. நான் எழுதுவதற்கும், சொல்வதற்குமான ஜீவ ஊற்று இங்கிருந்துதான் நா நனைக்கிறது.

இதுவரை படித்து முடித்த ஆயிரக்கணக்கான கதைகள் மனதிலேயே தேங்கிக் கிடக்கிறது. அதன் மீறல் அவஸ்தையானது. அதன் வடிகால்தான் கதை சொல்லல். குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, டீக்கடைக்கு, தெருவுக்கு என தனித்தனியே சொன்ன கதைகள் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டு மைக் முன்னால் சொல்ல வைத்திருக்கிறது.

ஜீவனுள்ள கண்கள் என் கதைகளையும், சக படைப்பாளிகளின் கதைகளையும் தாகம் தீரக் குடிப்பதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்தான்.

கேள்வி : சூழலியலாளனாக, இயற்கை விவசாயியாக?

சூழலியலாளன் இயற்கை விவசாயி என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். 10 வருடங்களுக்கு முன் நம்மாழ்வரோடு போன ஒரு கார் பயணம்தான் என் நிலத்தை இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பியது. துணிந்து லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் ரசாயன உரத்தை, பூச்சி மருந்து தூக்கி எறிய வைத்தது.

சக விவசாயிகளின் கேலியாலும், கிண்டலாலும் எங்கள் செழிக்காத பயிர் தினம்தினம் வாடிப் போனது. பெரும் நம்பிக்கையோடு வரப்பில் நானும் ஷைலஜாவும் உட்கார்ந்திருப்போம்.

எங்கள் வயலில் இப்போது மண்புழுக்கள் நெளிகின்றன. தூண்டில்காரர்கள் அவற்றைத் தோண்டியெடுக்க, கொட்டாங்குச்சிகளோடு வருகிறார்கள்.

வம்சி எங்கள் வயல்வளையில் முழங்கைவரை விட்டு நண்டு பிடிக்கிறான். மழைநீரால் தலைப்பிரட்டை வரிசைகட்டி வருகிறது. போதும் இதுதான் என் கனவில் விரிந்த வயக்காடு.

பெரும் நஷ்டப்பட்டு இதை மீட்டிருக்கிறோம்.

ஆறு மாதங்களுக்கு முன் வி.பி.ராஜ் என என்னை தூரத்திலிருந்து அறிந்த ஒருவர் என்னைப் பார்க்க நிலத்திற்கு வந்தார். முதல் சந்திப்பே இடைவெளியற்றது. நிலத்தைச் சுற்றிப் பார்த்த ஏதோ ஒரு தருணத்தில் கவனித்தேன். எங்கள் இருவர் கைகளும் புதைந்திருந்தன.

சுற்றி இருக்கிற கிராமப்புற இளைஞர்கள், பயனடைய ஒரு இயற்கை வேளாண்மைப் பள்ளியை அவர் செயவில் எங்கள் நிலத்தில் கட்டியெழுப்பியுள்ளார். மேற்கூரை மட்டுந்தான் பணமின்றித் தாமதமாகிறது. நாங்களும் ராஜ் சாரும் இன்னும் கொஞ்சம் பயணித்தால் அது ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.

அதற்கருகிலேயே பட்டிக்காட்டுப் பையன்களுக்குப் பெரும் கனவாய் இன்னமும் தூரத்திலிருக்கிற சினிமா உருவாக்கத்தை அருகாக்கப் போகிறோம். ராஜ் அடிப்படையில் வைட்லைப் புகைப்படக்காரனாக ஆசைப்பட்டு மனித முகங்களைப் பதியும் Photographer ஆனவர். எடிட்டிங், Dubbing, sound என அனைத்தும் அவருக்கு அத்துபடி. அதற்கான Lab வைத்திருக்கிறார். சென்னை நெரிசலிலிருந்து நெற்பயிருக்கிடையே அவைகளைக் கொண்டுவரப் போகிறோம்.

எடிட்டர் பி. லெனின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், செழியன், வைட் ஆங்கிள் ரவிசங்கர், சாரங்கன், நாசர், மிஷ்கின், ராம், சீனுராமசாமி, ராஜூமுருகன், தாமிரா, மம்முட்டி எனப் பல நண்பர்களும் இங்கு வந்து எங்கள் கிராமத்துப் பையன்களுக்கு சினிமாவைச் சொல்லித்தரப் போகிறார்கள்.


கடந்துபோன இந்த இருபது வருடங்கள் எத்தனை மகத்தான கனவுகளை மெய்ப்பட வைத்திருக்கிறது. நான் பாக்யவான்.

Monday, October 17, 2016

உன் சாம்ராஜ்ஜியத்தின் சிற்றரசர்கள் எங்கேயிருக்கிறார்கள்?


கோணங்கி

ஃபோர்ட் கொச்சினில் மட்டாஞ்சேரி வெல்ல மண்டிகளுக்கிடையேயான அரபிக் கடலைப் பார்த்து கட்டப்பட்டிருந்த பழமையிலும், பழமையான கட்டிடத்தில் தான் என் நண்பனும் உலகப்புகழ்பெற்ற புகைப்படக்காரனுமாகிய அபுல்கலாம் ஆசாத்தின்மாயலோகம்ஆர்ட் கேலரி முதல் மாடியிலும், என் தோழி காயத்ரி கேம்யூஸ் என தமிழிலும், ஸ்பெயினிலும் சேர்த்தழைக்கப்பட்ட புகழ்பெற்ற ஓவியரின் ஸ்டுடியோ கீழ்த்தளத்திலும் அமைக்கப்பட்டிருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன் அங்கு நான் என் கதை படிக்க அழைக்கப்பட்டேன். இரு கதைகளை நான் தமிழில் வரிவரியாக வாசித்தேன். எப்போதும் கதைகளைச் சொல்லும் நான் வாசிக்க வேண்டிய அவசியத்தை என் முன்னால் மாயலோகத்தில் உட்கார்ந்திருந்த பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களே உருவாக்கித் தந்திருந்தார்கள்.

அவர்கள் புருவம் உயர்வதையும், மொழி தெரியாமல் தத்தளித்தையும் ஒரு நிமிடமும் நீடிக்கவிடாமல் என் நண்பனும் கவிஞனுமான ஆனந் ஸ்கரியா அணைக் கட்டினான்.
என் இரு கதைகளின் வாசிப்பிற்குப்பின் பல வெள்ளைக்கார கைகள் என் கறுப்பு கைகளைப் பற்றிக் குலுக்கின.

அன்றே கீழ்த்தளத்தில் காயத்ரி கேம்யூசின் அப்போதைய ஓவியங்களின் கண்காட்சியைப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரும் நானும் திறந்து வைப்பதாக ஏற்பாடாகியிருந்தது.

எப்போதும் எந்த அகாலத்திலும் கூப்பிடும் உரிமையை சில நண்பர்களிடம் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்பட்டியலின் முதல் பெயர் கோணங்கி.
நாளை நடக்கப்போகும் அற்புதத்தை முன் கூட்டியே கணித்து முந்தினநாள் இரவு ஃபோர்ட் கொச்சினுக்கு கோணங்கியை அழைத்திருந்தேன்.

தேசாந்திரிக்கு காலம், நேரம், உடை, உணவு. உறக்கமேது?

அன்றிரவே அவன் மட்டாஞ்சேரிக்கு பஸ் ஏறினான்.

ஓவியக் கண்காட்சிக்கு வந்த கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் கொஞ்சூண்டு ரெட் ஓயின் கொடுத்து வரவேற்றார்கள் காயத்ரியும் ஆனந்தும்.

சற்றுமுன் ஆரவாரத்திலிருந்த அதேப் பார்வையாளர்கள் இப்போது மௌனத்தில் தங்களைப் புதைத்துக் கொண்டார்கள். காயத்ரியின் ஓவியங்கள் தங்கள் அடைக்கப்பட்டுள்ள சட்டகத்துக்குள் பார்வையாளர்களையும் இழுத்துக் கொண்டன. விருப்பமற்றவர்கள் சிலர் வெளியேறினார்கள்.

நானும் கோணங்கியும், கே.என்.பணிக்கரிடம் எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபோர்ட் கொச்சினை இரவு சீக்கிரமே வந்து அடைத்துக் கொள்கிறது. விருந்தினர்கள் நாங்கள் மூவர் மட்டும் மாயலோக மாடிக்கு அழைக்கப்பட்டு எங்கள் முன் பலவருட பழமையான ஒயின் வைக்கப்பட்டது.

பேட்டிக்காக கூடியிருந்த இருபதுக்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்களைப் பார்த்து கே.என்.பணிக்கர், ‘‘நான் என் நண்பர்களோடு தனித்திருக்க விரும்புகிறேன். பேட்டி கொடுப்பதற்கான மனநிலை இன்றில்லை. எல்லாம் ஏற்கனவே நிறைவடைந்தது போல இருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்பதை அவருக்கேயான அழகான ஆங்கிலத்தில் சொன்ன அடுத்த நிமிடம் அவர்கள் எங்களோடு கைகுலுக்கி விடைபெற்றார்கள். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அநாகரிகத்தை கேரளப் பத்திகையாளர்கள் மறுதலிதார்கள்.

அன்று பின்னிரவுவரை எங்கள் உரையாடல் நீண்டது. பணிக்கரை அனுப்பிவிட்டு நானும் கோணங்கியும் முழுக்க அடைக்கப்பட்டிருந்த மட்டாஞ்சேரி பஜாரில் நடந்தோம்.
அரபிக்கடல் எங்களுக்கு மிக அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது. கடலுக்கும் எங்களுக்குமான இடைவெளியை அற்ப வியாபார கட்டிடங்கள் அடைத்து நின்றன.

முன்னிரவில் பேசியவைகளை அசை போட்டவாறு நாங்களிருவரும் பேசாமல் நடந்தோம்.

இரண்டு மைல் தொலைவிலிருந்த ஆனந் காயத்ரி வீட்டு உள்ளறை ஒன்று எங்கள் தற்காலிக படுக்கையறையாகியிருந்தது.

படுக்க வைத்து போர்வை போர்த்தி எங்களுக்கு கறுப்பு காபித் தந்து,
சென்ற காயத்ரி கேம்யூஸ் என்ற ஸ்பெயின் நாட்டுப் பெண் எங்களை உறங்கவிடவில்லை.

நாங்கள் இருவரும் எழுத்து உட்கார்ந்து கொண்டோம். நாங்களே எங்களுக்குத் தெரியாத இருட்டில்  காயத்ரி கேம்யூஸ் என்ற அந்த மேற்கத்திய பெண்ணின் இந்திய மனம் பற்றி பேச ஆரம்பித்தோம்.

பேச்சு அன்னாகரீனா, ஃபிரைடா காலோ என்று சுற்றியலைந்த போது வெளியே விடிந்திருந்தது

கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் பார்க்க போக வேண்டுமென்ற எங்கள் நேற்றைய விருப்பத்தின் ஞாபகம் அந்த அதிகாலையில் காயத்ரி வீட்டின் முன் ஒரு அம்பாசிடர் காரைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

அந்த அதிகாலையில் போர்ட் கொச்சினின் படகுத்துறையில் நானும் கோணங்கியும் நின்றிருந்தோம். எங்கள் காரை அதன் ஓட்டுநர் வந்து நின்ற ஒரு நீண்டப்படகில் ஏற்றிக் கொண்டார். இன்னும் சில விலை உயர்ந்த கார்களும் அதனுள் ஏற்றப்பட்டு நாய் சங்கிலியால் கட்டப்பட்டது. பென்ஸ் காருக்கும் அதே நாய் சங்கிலிதான்.

அந்த Back water அழுக்கு நீரில் எங்கள் படகு எங்களையும், கார்களையும் சுமந்து கொண்டு மறுகரையை நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஏனோ அந்நிமிடம் தண்ணீரற்ற தமிழ்நாடு நினைவுக்கு வந்தது.

இருபது நிமிட பயணத்தில் நாங்கள் இறக்கி விடப்பட்டோம்.



ஒருபுறம் நீரும், மறுபுறம் தென்னை மரங்களும் அடர்ந்த அந்த காலைப் பயணத்தில் நான் கோணங்கியைச் சீண்டினேன்.

 “என்ன கோணங்கி, உன் சமஸ்தானத்தின் சிற்றரசர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.”

நான் கேட்பது புரிந்து அவன் சிரிந்துவிட்டான்.

கோணங்கியின் மன உலகில் தமிழ்நாட்டை சிறுசிறு பிரதேசங்களாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அவனே பிரித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு படைப்பாளியை, கவிஞனை நாடகக்காரனை அவனே சிற்றரசர்களாக நியமித்திருந்தான்.

கண்டராதித்தன் முல்லைக்கு, பெருந்தேவி பாலைக்கு, யவனிகா மருதத்துக்கென.

அவர்கள்தான் அவன் உலகம். அதைத்தாண்டி உலகம் சுற்றுவதாகவோ, புத்தகங்கள் பிரசுரமாவதாகவமோ ஆயிரக்கணக்காவைர்கள் அதைப் படிக்கிறார்கள் என்பதோ அவனுக்கு அக்கறையில்லை. இவர்களின் படைப்புகள் விதை தானியங்கள். மற்றதெல்லாம் மல்லாட்டைத் தொலிகள். அவர்கள் சமஸ்தானத்துக்கென்று ஒரு மறை நூலும் உண்டு. அதன் பெயர் கல்குதிரை.

வேதாகமத்தில் சங்கீதம் என்றொரு அதிகாரம் உண்டு. அதை வாசிக்காத ஒருவன் கவிதை எழுதிவிட முடியாதென நான் உறுதியாய் நம்பினேன். அச்சங்கீதத்தின் எழுது மொழியில் அதன் நியாயம் குறித்து கோணங்கி விரிவுரை ஆற்றி முடிக்கையில் நாங்கள் கொடுங்கல்லூரை அடைந்திருந்தோம்.

அப்புறம் பேச்சேது?

திருவிழா நடந்து முடிந்த வெற்று மைதானமாய் அக்கோவிலின் முன் பகுதி மண் தரை வெறிச்சோடியிருந்தது.

மிகுந்த பயபக்தியோடு கோணங்கி கண்ணகியை வணங்கினான்.

இன்னும் யாருக்கும் புரியாத அடர்த்தியான மொழியை எனக்குத் தா தாயே என்ற வேண்டுதலா இது? என நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

கொடுங்கல்லூர் கண்ணகி கோவிலுக்கு வர வேண்டும் என்ற உந்துதலை எங்கள் இருவருக்குமே அபுல்கலாம் ஆசாத்தின் பச்சை வண்ண செஃபியா டோன் புகைப்படங்களே ஏற்படுத்தியிருந்தன.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக அவன் அக்கோவிலையும், அதன் திருவிழாவையும் ஆயிரக்கணக்கில் தன் பிலிம் போட்ட கேமராவில் பதிந்திருந்தான் அதற்கு Black Mother என பெயரிட்டிருந்தான்.

அதில் ஒவ்வொரு படத்தையும், நாம் ஒரு முழுநாள் அல்லது முழு மாதம் அல்லது வாழ்நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அதில் ஒரு படத்தைதான் தன்  ‘பிதிரா நாவலின் அட்டைப் படத்திற்கு கோணங்கி, அபுலிடம் பெற்றிருந்தான்.

அக்கோவில் வளாகம் என்னை வசீகரிக்கவில்லை. அபுலின் புகைப்படங்கள் போதும்.
நாங்கள் பேச்சற்று நடந்தோம். வண்டி பெருந்தொலைவில் நின்றது.

கோவிலின் புறத்து ஒரு கள்ளுக்கடை. அக்காலையிலேயே பத்திருபது மலையாளிகள் கள் குடிக்க குழுமியிருந்தார்கள். தழையக் கட்டிய கரை வைத்த வேட்டிகளோடு அவர்கள் அந்த மர பெஞ்சில் உட்கார்ந்து வாயில் கசியும் வெண்பாலைப் போன்ற புளிப்புக் கல்லை குடித்த விதம் எங்களையும் சப்புக் கொட்ட வைத்தது. கள் மொந்தைகளின் எதிரே பொரித்த மத்தி மீன்கள். கோணங்கி கைகளை தேய்த்து சூடாக்கி கொண்டான். மலையாள கள் குடியர்களின் கவனம் எங்கள் மேல் திரும்பியது.

ஒரு மர பெஞ்சை எடுத்து குடிசைக்கு வெளியில் போட்டோம். இரண்டு மொந்தை கள்ளும் இரு தட்டு பொரித்த மத்தியும் ஆர்டர் செய்தோம்.

ஓரே மூச்சில் மொத்தையை காலி செய்தான் கோணங்கி.

காரில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

 ‘நீங்களெல்லாம் மீடியாவுல விழுந்திட்டீங்கடாகுளிர்ந்த கள் அவன் ரத்தத்தை சூடாக்கி இருக்க வேண்டும். வார்த்தைகளில் சூடும், புளிப்பும் தெறிந்தது.

நான் நிதானமாக ஒரு வாய்க் கள் குடித்தேன். யாரோ ஒரு கேரளத்தாய் தன் தமிழ்நாட்டு மகன்களுக்கு கருவாட்டுக் குழம்பை கிண்ணத்தில் கொண்டு வந்து வைத்தாள்.

 ‘நீங்கள்ன்னா?’

 ‘ஜெயமோகன், ராமகிருஷ்ணன், நீ என்னை பார்க்காமல் மீண்டும் மொந்தையின் ஊறிய வெண்நீரில் ஆர்வமானன்.

 ‘நீயெல்லாம் மீடியாவுல இல்லையா?’

மிக அருகே என்னை ஏறெடுந்தான்.

அசைட்பத்திரிகையிலே உன்னை போட்டோ எடுக்க வந்தப்போ போய் குடுத்தியே, அது எதில் சேர்த்தி நண்பா?’’

 “விகடன்ல உன் எழுத்தைப் பத்தி ஒரு வரியும் எழுதாம, உன் சுவாரஸ்மான அலைதலை பத்திரிகை மொழியில் எழுத அனுமதிச்சயே அது என்ன நண்பா?”

நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.

விவாதம் முற்றினால் அவன் கொடுங்கல்லூரிலிருந்து கோவில்பட்டிக்கு கண்ணகியைப் போலவே ரிவர்சில் திரும்பி நடக்கக் கூடியவன் என்பதை நானறிவேன்.

அல்லது

கொடுங்கல்லூர் கோவிலுக்கு பின்னால் மூணாவது மையிலில் ஆறாவது தென்னை மரத்திற்குப் பக்கத்தில் அவனை வாசித்த அல்லது அவனை அறிந்த ஒரு வாசகன் இருப்பான். அவன் பேர் கணேஷ்ராம் என்று நமக்கு ஏழு வருஷம் கழித்து சொல்லுவான்.
பின் விளைவுகளை கனிந்து நான் அமைதியானேன்.

வரும் வழியில் நாங்கள் இலக்கிய விவாதம் எதுவும் செய்யவில்லை. அவன் காயத்தி கேம்யூஸ் என்ற அந்த ஸ்பெயின் நாட்டு ஓவியக்காரியின் பேரன்பை நினைவு கூர்ந்தான். குளிருக்கு அவள் போர்த்திவிட்ட கம்பளியின் கதகதப்பு எதற்கு ஒப்பானது என உவமைப்படுத்தினான்.

எப்படி இப்படி அன்பான மனிதர்கள் உன்னை தேடி வந்தடைகிறார்கள். உன் சிறு கூட்டில் இத்தனை பறவைகளுக்கான இடமெங்கே என உரை நடையை கவிதையாக்கினான்.

காலையில் சென்ற வழித்தடத்தின் முற்கள் அகற்றப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருந்தன.
நாங்கள் இருவரும் மட்டாஞ்சேரி பஜாரில் ஒரு சிறு தலச்சேரி பிரியாணிக் கடையிலிருந்தோம். அக்கடையெங்கும் உலக புகழ்பெற்ற ஓவியன் எம்.எஃப்.உசேன் விதவிதமாய் பிரியாணி சாப்பிடும் படம் மாட்டப்பட்டிருந்தது. அவர் இக்கடை பிரியாணிக்காக மட்டுமே இங்கு ஒரு மாதம் தங்கியிருந்ததாக அக்கடைக்கார பாய் எங்களுக்கு புரியும் மலையாளத்தில் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு சற்றுமுன்பே சாப்பிட்டு முடித்து முற்ற வெயிலில் நின்று சிகெரெட் பிடித்துக் கொண்டிருந்தான் கோணங்கி.

நான் சாப்பிட்டு முடித்து வெளியே வந்து பார்த்தால் அந்த மாயாவி அங்கிருந்து மறைந்து விட்டிருந்தான்.

மட்டாஞ்சேரி பஜாரில் ஒரு மணிநேரம் அலைந்து திரிந்து தேடின களைப்போடு, நானும் எதிரேவந்த கோயம்புத்தூர் பஸ்ஸிலேறினேன்.


நன்மாறன்


ஓசூர் தாலுக்காபீஸ் ரோடு உங்களுக்கும் கூட இன்னமும் என்னைப் போலவே நினைவிருக்கும். வாழ்வு தன் அலைகழிப்பில் சுழித்தாட்டி கரையில் தூக்கியெறிந்த கலைஞன் அவன். அட்சாலையே அவனால் உயிர்ப்போடிருந்த ஒரு காலமுண்டு.

நன்றி 
அந்திமழை