Monday, October 17, 2016

உன் சாம்ராஜ்ஜியத்தின் சிற்றரசர்கள் எங்கேயிருக்கிறார்கள்?


கோணங்கி

ஃபோர்ட் கொச்சினில் மட்டாஞ்சேரி வெல்ல மண்டிகளுக்கிடையேயான அரபிக் கடலைப் பார்த்து கட்டப்பட்டிருந்த பழமையிலும், பழமையான கட்டிடத்தில் தான் என் நண்பனும் உலகப்புகழ்பெற்ற புகைப்படக்காரனுமாகிய அபுல்கலாம் ஆசாத்தின்மாயலோகம்ஆர்ட் கேலரி முதல் மாடியிலும், என் தோழி காயத்ரி கேம்யூஸ் என தமிழிலும், ஸ்பெயினிலும் சேர்த்தழைக்கப்பட்ட புகழ்பெற்ற ஓவியரின் ஸ்டுடியோ கீழ்த்தளத்திலும் அமைக்கப்பட்டிருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன் அங்கு நான் என் கதை படிக்க அழைக்கப்பட்டேன். இரு கதைகளை நான் தமிழில் வரிவரியாக வாசித்தேன். எப்போதும் கதைகளைச் சொல்லும் நான் வாசிக்க வேண்டிய அவசியத்தை என் முன்னால் மாயலோகத்தில் உட்கார்ந்திருந்த பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களே உருவாக்கித் தந்திருந்தார்கள்.

அவர்கள் புருவம் உயர்வதையும், மொழி தெரியாமல் தத்தளித்தையும் ஒரு நிமிடமும் நீடிக்கவிடாமல் என் நண்பனும் கவிஞனுமான ஆனந் ஸ்கரியா அணைக் கட்டினான்.
என் இரு கதைகளின் வாசிப்பிற்குப்பின் பல வெள்ளைக்கார கைகள் என் கறுப்பு கைகளைப் பற்றிக் குலுக்கின.

அன்றே கீழ்த்தளத்தில் காயத்ரி கேம்யூசின் அப்போதைய ஓவியங்களின் கண்காட்சியைப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரும் நானும் திறந்து வைப்பதாக ஏற்பாடாகியிருந்தது.

எப்போதும் எந்த அகாலத்திலும் கூப்பிடும் உரிமையை சில நண்பர்களிடம் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்பட்டியலின் முதல் பெயர் கோணங்கி.
நாளை நடக்கப்போகும் அற்புதத்தை முன் கூட்டியே கணித்து முந்தினநாள் இரவு ஃபோர்ட் கொச்சினுக்கு கோணங்கியை அழைத்திருந்தேன்.

தேசாந்திரிக்கு காலம், நேரம், உடை, உணவு. உறக்கமேது?

அன்றிரவே அவன் மட்டாஞ்சேரிக்கு பஸ் ஏறினான்.

ஓவியக் கண்காட்சிக்கு வந்த கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் கொஞ்சூண்டு ரெட் ஓயின் கொடுத்து வரவேற்றார்கள் காயத்ரியும் ஆனந்தும்.

சற்றுமுன் ஆரவாரத்திலிருந்த அதேப் பார்வையாளர்கள் இப்போது மௌனத்தில் தங்களைப் புதைத்துக் கொண்டார்கள். காயத்ரியின் ஓவியங்கள் தங்கள் அடைக்கப்பட்டுள்ள சட்டகத்துக்குள் பார்வையாளர்களையும் இழுத்துக் கொண்டன. விருப்பமற்றவர்கள் சிலர் வெளியேறினார்கள்.

நானும் கோணங்கியும், கே.என்.பணிக்கரிடம் எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபோர்ட் கொச்சினை இரவு சீக்கிரமே வந்து அடைத்துக் கொள்கிறது. விருந்தினர்கள் நாங்கள் மூவர் மட்டும் மாயலோக மாடிக்கு அழைக்கப்பட்டு எங்கள் முன் பலவருட பழமையான ஒயின் வைக்கப்பட்டது.

பேட்டிக்காக கூடியிருந்த இருபதுக்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்களைப் பார்த்து கே.என்.பணிக்கர், ‘‘நான் என் நண்பர்களோடு தனித்திருக்க விரும்புகிறேன். பேட்டி கொடுப்பதற்கான மனநிலை இன்றில்லை. எல்லாம் ஏற்கனவே நிறைவடைந்தது போல இருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்பதை அவருக்கேயான அழகான ஆங்கிலத்தில் சொன்ன அடுத்த நிமிடம் அவர்கள் எங்களோடு கைகுலுக்கி விடைபெற்றார்கள். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அநாகரிகத்தை கேரளப் பத்திகையாளர்கள் மறுதலிதார்கள்.

அன்று பின்னிரவுவரை எங்கள் உரையாடல் நீண்டது. பணிக்கரை அனுப்பிவிட்டு நானும் கோணங்கியும் முழுக்க அடைக்கப்பட்டிருந்த மட்டாஞ்சேரி பஜாரில் நடந்தோம்.
அரபிக்கடல் எங்களுக்கு மிக அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது. கடலுக்கும் எங்களுக்குமான இடைவெளியை அற்ப வியாபார கட்டிடங்கள் அடைத்து நின்றன.

முன்னிரவில் பேசியவைகளை அசை போட்டவாறு நாங்களிருவரும் பேசாமல் நடந்தோம்.

இரண்டு மைல் தொலைவிலிருந்த ஆனந் காயத்ரி வீட்டு உள்ளறை ஒன்று எங்கள் தற்காலிக படுக்கையறையாகியிருந்தது.

படுக்க வைத்து போர்வை போர்த்தி எங்களுக்கு கறுப்பு காபித் தந்து,
சென்ற காயத்ரி கேம்யூஸ் என்ற ஸ்பெயின் நாட்டுப் பெண் எங்களை உறங்கவிடவில்லை.

நாங்கள் இருவரும் எழுத்து உட்கார்ந்து கொண்டோம். நாங்களே எங்களுக்குத் தெரியாத இருட்டில்  காயத்ரி கேம்யூஸ் என்ற அந்த மேற்கத்திய பெண்ணின் இந்திய மனம் பற்றி பேச ஆரம்பித்தோம்.

பேச்சு அன்னாகரீனா, ஃபிரைடா காலோ என்று சுற்றியலைந்த போது வெளியே விடிந்திருந்தது

கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் பார்க்க போக வேண்டுமென்ற எங்கள் நேற்றைய விருப்பத்தின் ஞாபகம் அந்த அதிகாலையில் காயத்ரி வீட்டின் முன் ஒரு அம்பாசிடர் காரைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

அந்த அதிகாலையில் போர்ட் கொச்சினின் படகுத்துறையில் நானும் கோணங்கியும் நின்றிருந்தோம். எங்கள் காரை அதன் ஓட்டுநர் வந்து நின்ற ஒரு நீண்டப்படகில் ஏற்றிக் கொண்டார். இன்னும் சில விலை உயர்ந்த கார்களும் அதனுள் ஏற்றப்பட்டு நாய் சங்கிலியால் கட்டப்பட்டது. பென்ஸ் காருக்கும் அதே நாய் சங்கிலிதான்.

அந்த Back water அழுக்கு நீரில் எங்கள் படகு எங்களையும், கார்களையும் சுமந்து கொண்டு மறுகரையை நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஏனோ அந்நிமிடம் தண்ணீரற்ற தமிழ்நாடு நினைவுக்கு வந்தது.

இருபது நிமிட பயணத்தில் நாங்கள் இறக்கி விடப்பட்டோம்.ஒருபுறம் நீரும், மறுபுறம் தென்னை மரங்களும் அடர்ந்த அந்த காலைப் பயணத்தில் நான் கோணங்கியைச் சீண்டினேன்.

 “என்ன கோணங்கி, உன் சமஸ்தானத்தின் சிற்றரசர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.”

நான் கேட்பது புரிந்து அவன் சிரிந்துவிட்டான்.

கோணங்கியின் மன உலகில் தமிழ்நாட்டை சிறுசிறு பிரதேசங்களாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அவனே பிரித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு படைப்பாளியை, கவிஞனை நாடகக்காரனை அவனே சிற்றரசர்களாக நியமித்திருந்தான்.

கண்டராதித்தன் முல்லைக்கு, பெருந்தேவி பாலைக்கு, யவனிகா மருதத்துக்கென.

அவர்கள்தான் அவன் உலகம். அதைத்தாண்டி உலகம் சுற்றுவதாகவோ, புத்தகங்கள் பிரசுரமாவதாகவமோ ஆயிரக்கணக்காவைர்கள் அதைப் படிக்கிறார்கள் என்பதோ அவனுக்கு அக்கறையில்லை. இவர்களின் படைப்புகள் விதை தானியங்கள். மற்றதெல்லாம் மல்லாட்டைத் தொலிகள். அவர்கள் சமஸ்தானத்துக்கென்று ஒரு மறை நூலும் உண்டு. அதன் பெயர் கல்குதிரை.

வேதாகமத்தில் சங்கீதம் என்றொரு அதிகாரம் உண்டு. அதை வாசிக்காத ஒருவன் கவிதை எழுதிவிட முடியாதென நான் உறுதியாய் நம்பினேன். அச்சங்கீதத்தின் எழுது மொழியில் அதன் நியாயம் குறித்து கோணங்கி விரிவுரை ஆற்றி முடிக்கையில் நாங்கள் கொடுங்கல்லூரை அடைந்திருந்தோம்.

அப்புறம் பேச்சேது?

திருவிழா நடந்து முடிந்த வெற்று மைதானமாய் அக்கோவிலின் முன் பகுதி மண் தரை வெறிச்சோடியிருந்தது.

மிகுந்த பயபக்தியோடு கோணங்கி கண்ணகியை வணங்கினான்.

இன்னும் யாருக்கும் புரியாத அடர்த்தியான மொழியை எனக்குத் தா தாயே என்ற வேண்டுதலா இது? என நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

கொடுங்கல்லூர் கண்ணகி கோவிலுக்கு வர வேண்டும் என்ற உந்துதலை எங்கள் இருவருக்குமே அபுல்கலாம் ஆசாத்தின் பச்சை வண்ண செஃபியா டோன் புகைப்படங்களே ஏற்படுத்தியிருந்தன.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக அவன் அக்கோவிலையும், அதன் திருவிழாவையும் ஆயிரக்கணக்கில் தன் பிலிம் போட்ட கேமராவில் பதிந்திருந்தான் அதற்கு Black Mother என பெயரிட்டிருந்தான்.

அதில் ஒவ்வொரு படத்தையும், நாம் ஒரு முழுநாள் அல்லது முழு மாதம் அல்லது வாழ்நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அதில் ஒரு படத்தைதான் தன்  ‘பிதிரா நாவலின் அட்டைப் படத்திற்கு கோணங்கி, அபுலிடம் பெற்றிருந்தான்.

அக்கோவில் வளாகம் என்னை வசீகரிக்கவில்லை. அபுலின் புகைப்படங்கள் போதும்.
நாங்கள் பேச்சற்று நடந்தோம். வண்டி பெருந்தொலைவில் நின்றது.

கோவிலின் புறத்து ஒரு கள்ளுக்கடை. அக்காலையிலேயே பத்திருபது மலையாளிகள் கள் குடிக்க குழுமியிருந்தார்கள். தழையக் கட்டிய கரை வைத்த வேட்டிகளோடு அவர்கள் அந்த மர பெஞ்சில் உட்கார்ந்து வாயில் கசியும் வெண்பாலைப் போன்ற புளிப்புக் கல்லை குடித்த விதம் எங்களையும் சப்புக் கொட்ட வைத்தது. கள் மொந்தைகளின் எதிரே பொரித்த மத்தி மீன்கள். கோணங்கி கைகளை தேய்த்து சூடாக்கி கொண்டான். மலையாள கள் குடியர்களின் கவனம் எங்கள் மேல் திரும்பியது.

ஒரு மர பெஞ்சை எடுத்து குடிசைக்கு வெளியில் போட்டோம். இரண்டு மொந்தை கள்ளும் இரு தட்டு பொரித்த மத்தியும் ஆர்டர் செய்தோம்.

ஓரே மூச்சில் மொத்தையை காலி செய்தான் கோணங்கி.

காரில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

 ‘நீங்களெல்லாம் மீடியாவுல விழுந்திட்டீங்கடாகுளிர்ந்த கள் அவன் ரத்தத்தை சூடாக்கி இருக்க வேண்டும். வார்த்தைகளில் சூடும், புளிப்பும் தெறிந்தது.

நான் நிதானமாக ஒரு வாய்க் கள் குடித்தேன். யாரோ ஒரு கேரளத்தாய் தன் தமிழ்நாட்டு மகன்களுக்கு கருவாட்டுக் குழம்பை கிண்ணத்தில் கொண்டு வந்து வைத்தாள்.

 ‘நீங்கள்ன்னா?’

 ‘ஜெயமோகன், ராமகிருஷ்ணன், நீ என்னை பார்க்காமல் மீண்டும் மொந்தையின் ஊறிய வெண்நீரில் ஆர்வமானன்.

 ‘நீயெல்லாம் மீடியாவுல இல்லையா?’

மிக அருகே என்னை ஏறெடுந்தான்.

அசைட்பத்திரிகையிலே உன்னை போட்டோ எடுக்க வந்தப்போ போய் குடுத்தியே, அது எதில் சேர்த்தி நண்பா?’’

 “விகடன்ல உன் எழுத்தைப் பத்தி ஒரு வரியும் எழுதாம, உன் சுவாரஸ்மான அலைதலை பத்திரிகை மொழியில் எழுத அனுமதிச்சயே அது என்ன நண்பா?”

நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.

விவாதம் முற்றினால் அவன் கொடுங்கல்லூரிலிருந்து கோவில்பட்டிக்கு கண்ணகியைப் போலவே ரிவர்சில் திரும்பி நடக்கக் கூடியவன் என்பதை நானறிவேன்.

அல்லது

கொடுங்கல்லூர் கோவிலுக்கு பின்னால் மூணாவது மையிலில் ஆறாவது தென்னை மரத்திற்குப் பக்கத்தில் அவனை வாசித்த அல்லது அவனை அறிந்த ஒரு வாசகன் இருப்பான். அவன் பேர் கணேஷ்ராம் என்று நமக்கு ஏழு வருஷம் கழித்து சொல்லுவான்.
பின் விளைவுகளை கனிந்து நான் அமைதியானேன்.

வரும் வழியில் நாங்கள் இலக்கிய விவாதம் எதுவும் செய்யவில்லை. அவன் காயத்தி கேம்யூஸ் என்ற அந்த ஸ்பெயின் நாட்டு ஓவியக்காரியின் பேரன்பை நினைவு கூர்ந்தான். குளிருக்கு அவள் போர்த்திவிட்ட கம்பளியின் கதகதப்பு எதற்கு ஒப்பானது என உவமைப்படுத்தினான்.

எப்படி இப்படி அன்பான மனிதர்கள் உன்னை தேடி வந்தடைகிறார்கள். உன் சிறு கூட்டில் இத்தனை பறவைகளுக்கான இடமெங்கே என உரை நடையை கவிதையாக்கினான்.

காலையில் சென்ற வழித்தடத்தின் முற்கள் அகற்றப்பட்டு பூக்கள் தூவப்பட்டிருந்தன.
நாங்கள் இருவரும் மட்டாஞ்சேரி பஜாரில் ஒரு சிறு தலச்சேரி பிரியாணிக் கடையிலிருந்தோம். அக்கடையெங்கும் உலக புகழ்பெற்ற ஓவியன் எம்.எஃப்.உசேன் விதவிதமாய் பிரியாணி சாப்பிடும் படம் மாட்டப்பட்டிருந்தது. அவர் இக்கடை பிரியாணிக்காக மட்டுமே இங்கு ஒரு மாதம் தங்கியிருந்ததாக அக்கடைக்கார பாய் எங்களுக்கு புரியும் மலையாளத்தில் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு சற்றுமுன்பே சாப்பிட்டு முடித்து முற்ற வெயிலில் நின்று சிகெரெட் பிடித்துக் கொண்டிருந்தான் கோணங்கி.

நான் சாப்பிட்டு முடித்து வெளியே வந்து பார்த்தால் அந்த மாயாவி அங்கிருந்து மறைந்து விட்டிருந்தான்.

மட்டாஞ்சேரி பஜாரில் ஒரு மணிநேரம் அலைந்து திரிந்து தேடின களைப்போடு, நானும் எதிரேவந்த கோயம்புத்தூர் பஸ்ஸிலேறினேன்.


நன்மாறன்


ஓசூர் தாலுக்காபீஸ் ரோடு உங்களுக்கும் கூட இன்னமும் என்னைப் போலவே நினைவிருக்கும். வாழ்வு தன் அலைகழிப்பில் சுழித்தாட்டி கரையில் தூக்கியெறிந்த கலைஞன் அவன். அட்சாலையே அவனால் உயிர்ப்போடிருந்த ஒரு காலமுண்டு.

நன்றி 
அந்திமழை
 

No comments:

Post a Comment