Saturday, October 1, 2016

மீண்டும் கௌதமிடமிருந்து....

ஒருவனின் வாழ்க்கை முழுதும் செவ்வகக கட்டங்களாக படர்ந்து தொடரும் நாட்களின் பரப்பிலிருந்து சில நாட்கள் மட்டும் ஒரு எறும்பு புற்று போல மேலெழுந்து வந்துவிடுவதுன்டு. ஒரு கோபுரம் போலே நிமிர்ந்து வளர்ந்து நிற்பதுண்டு. பின்வரும் நாட்கள் பல இதை  திரும்பிப் பார்த்தபடி, இன்று பெற்றுக்கொண்ட வண்ணங்களை மீண்டும் மீண்டும் இட்டு நிரப்பியபடி செல்லும். எனக்கு அவ்வாறான நாட்களில் இது ஒன்று என ரிஷிவந்தியத்தின் தைலக்காடுகள் வழி ஊடுருவி வந்துதொட்ட அந்த வெய்யோனுக்கு தெரிந்திருக்கும்!

எனக்கு ஜெயஸ்ரீ அவர்களின் வீட்டுக்கு வழியை தொலைபேசியில் சொல்லிவிட்டு "அங்கே போய் இருங்கள் கெளதம், நான் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி அணைத்த சில நிமிடங்களில் ஜெயமோகனின் பதிவில் பார்த்திருந்த, எங்கள் பிற்கால வீட்டின் விதையாய் எங்கள் குடும்ப பேச்சுக்களில் கிடக்கும், தான் எழும்பி நிற்கும் நிலத்திலிருந்து எந்தவகையிலும் தன்னை துருத்திக்கொண்டில்லாமல் இருந்த  "கானகம்" வீட்டின் முன்னிருந்தேன். அளவான வண்ணம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டியின் அருகில் காரை நிறுத்த நேர்ந்ததின் துணுக்குறளை ஜெயஸ்ரீ மற்றும் அவர் கணவரின் மலர்ந்த முகங்கள் துடைத்துப்போட்டது.

அந்த அகன்ற, முழு  வீட்டுக்குமாய் நிலவின் இரண்டு பக்கங்களிலும்  விரிந்த முற்றத்தின் ஒரு பக்கத்தில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து கேரளா இலக்கிய சூழல் பற்றியும், நிலம் பூத்து மலர்ந்த மலர்கள் பற்றியும், அந்த வீட்டின் அழகு பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டதை லியோ டால்ஸ்டாய் இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டின் முன்பாய் பரந்து கிடந்தது தோட்டம்.

கொஞ்ச நேரத்தில் பைக்கில் வந்து கை பிடித்து அமரச்சொல்லி எங்களிடம் பேச தொடங்கிய பவாவிடம் முதல் முறை பார்ப்பத்திற்கான அளவிடுதல் எதுவுமில்லை. வந்தவர்களுக்கு மெகா முக்கியத்துவம் கொடுத்து, உபசரித்து அவர்களை அன்னியப்படுத்தி வைக்கும் "விருந்தோம்பல்" எதுவுமில்லை. ஒவ்வொரு இடமாக தோட்டத்தில் சுத்திவர தூரத்திலிருந்தே கவர்ந்திழுக்கிறது அந்த பெரிய உருண்டை கற்கள். என் கண்களும் கால்களும் செல்லும் திசை கண்டு "இத ராஜா கல்லுன்னு சொல்வாங்க கெளதம்! இங்க நிறைய கடந்தது" என்கிறார் பவா. 

தாழ்ந்து படர்ந்த இரட்டை மாமரத்தின் அடியில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் போல எழிலான ஒன்றை அன்று பிறகு நான் காணவில்லை. இயந்திர உலகின் விதியாய் ஆகிவிட்ட கச்சிதம் இல்லாத அதன் வடிவங்களும், முன் பின் அமைந்த வரிசைகளும், மார்பில் சாய்த்துக்கொண்டு மகனின் தலையை வருடும் அம்மாவின் கூந்தல் போன்று படர்ந்திருந்த மாமரமும் எழுச்சியை தந்த விஷயங்கள். அதில், கிட்டத்தட்ட அதே கலரில், அதே சீரின்மையுடன் கட்டியிருந்த வேட்டியை சுருட்டி, கால் மடக்கி அமர்ந்து, வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டே அடிக்கடி என் பக்கம் திரும்பி "இதுல பாருங்க கவுதம்" என்று அவர் பேசியபோது முதுகில் உறுத்தியது இருக்கையின் உடைந்த பிசிரா இல்லை என் தகுதியின்மையா என்று தெரியவில்லை. 

ஒருவரை கூப்பிட்டு "தம்பி மோட்டார் போட்டு இந்த மரத்துக்கெல்லாம் தண்ணி உடுப்பா....இப்பவே உடு. எப்படி வாடி போச்சு பார்" என்பதை அவர்குரல் தெரிந்தவர்கள் அவர் மொழியில் கற்பனை செய்துகொள்ளுங்கள் . அவரின் தாய்மையும், கெஞ்சலும்தான் அதில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியும் தானே?. அதன் குழந்தை வடிவத்தை தன் மகன் வம்சியிடம் "எவ்ளோ வருசமா இந்த மைக் செட் சொந்தமா வாங்கணும்னு நினைச்சோம். இன்னைக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கில்லடா!"  என்று அன்றிரவு கேட்டபோது காண நேர்ந்தது.

இந்த பதிவை "ரத்தின சுருக்கமாக"வைக்கும்  எண்ணத்தினால்மட்டும் பகலில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் தாண்டி மனம் இரவு 10:00 ஐ தொடுகிறது.காட்சி 1:
இடம் : கானகம் 
நேரம் : பகல் 10 மணி 
சஹானாவிடம் நண்பர் : பாப்பா உனக்கு டீ போட தெரியுமா?
சகானா : ஹ்ம்ம்.
நண்பர் : எங்களுக்கு டீ போட்டு தரிய்யா
சகானா: ஹ்ம்ம் 
நண்பர் : [அடுத்த இரண்டு நிமிசத்திற்கு டீ போடும் முறையில்,  இடுபொருட்களின் அளவுகளில் பல மேற்குறிப்புகள் தருகிறார்]
சகானா அது ஒரு அருமையான டீ; நன்றி. 

பி. கு: அன்று யோசித்து ஆனால் பின் பாத்திரங்களை கழுவாமல் வந்துவிட்ட குற்ற உணர்ச்சியை அடுத்த முறை போக்கிவிட வேண்டும்.காட்சி 2: 
இடம் :  19 டி ம் சாரோனின் மொட்டை மாடி 
நேரம் : இரவு 10 
கெளதம் குமாரின் அழகிய குறும்படம் ஒன்றை அவரின் மொபைல் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது நினைத்தாற்போல திரும்பி என் கைகளை கனமாக தொடுகிறார் பவா
பவா: கெளதம், இன்னைக்கு நீங்க இங்கேயே தூங்கறீங்க. 10.30 மணிக்கு மேல வண்டியில போகக்கூடாதுன்னு ஷைலஜா கண்டிப்பா சொல்லிட்டாங்க!
நான் :  [பேச என்ன இருக்கிறது அதில், மௌனத்துடன் கவுதம் குமாரின் படத்தில் ஆள்கிறோம் மீண்டும்]


காட்சி 3: 
இடம் : பவா/ஷைலஜா வின் உணவறை
நேரம் : இரவு 10:30 
பொருட்கள்: நானும் மாலதியும் கனவு கண்டுகொண்டிருக்கும் வகையிலான ஒரு டைனிங் டேபிள். அழகிய ஆனால் டேபிளுக்கு சற்றே உயரமான மூங்கில் இருக்கைகள். 

[ மேசை நடுவில் இரு நண்பர்களுடன் ]  பவா : எனக்கு இன்னும் ஒரு தோசை!  [அடுத்த அரை மணி நேரத்திற்கு இந்த வரி மீண்டும் மீன்டும் ஒலித்தது]


[தரப்பட்ட தோசைகளை சட்னியில் வழித்து வழித்து சாப்பிட்ட பின் பாயசம் டம்ளரில் வந்தது. முழு பச்சை பருப்பு போட்டு செய்த பாயசம். அவல் பாயசம் இல்லை என்று பிரகாசுக்கு சின்ன குறை போல. அந்த குறையுடன் ஒரு வாழை பழத்தை எடுத்து பிரகாஷ் தோலுரிக்க போக, ]

மானஷி : அண்ணா இருங்க இருங்க. இதுதான் கடைசி பழம் 
மானஷி : அண்ணா அத அந்தன்னா கிட்ட கொடுங்க 
[அவல் பாயசமும் இல்லாமல் இப்பொழுது பழமும்போய்விட்ட ஏமாந்த முகத்துடன் பிரகாஷ் பழத்தை நீட்டினார்]
வம்சி :  அந்த மிளகாய் கறிவேப்பிலையை என் ப்ளட்-ள்ள வைங்க [அதையும் வம்சியே செய்கிறான்]
வம்சி : பாயசத்தை பிளேட்-ள்ள ஊத்துங்க 
பிரகாஷ் : [ஒரு அப்பளத்தை போட்டு ] இதை ஒடைச்சு விடுங்க 

[நான் என் நுனி விரல்களால் அப்பளத்தை ஓடைக்க....எல்லாரும் சிரிக்க....பிரகாஷ் தன் கையால் உடைத்து காண்பிக்கிறார் - செம்புலம் கலந்த பெயனீர்]

மானஷி : முழு கையிலும் பாயசம் பட்டால் ஒன்னும் தப்பில்லை!

[இது எல்லாத்தையும் பார்த்துக்கொண்டே தன் பாயச டம்ளரை வாய்க்கு கொண்டுசெல்கிறார் பவா]
வம்சி : அப்பா, நீங்க மதியம் தான பாயசம் குடிச்சீங்க! [அவர் டம்ளர் பிடுங்கப்பட்டு என் தட்டில் ஊற்றப்படுகிறது]

[எல்லா திசைகளிலிருந்தும் வந்து விழுந்த கட்டளைகளின் பேரில் வாழைப்பழத்தையும், இரண்டு அப்பளங்களையும் பாயாசத்துடன் சேர்த்து பிசைய....என் விரலிடுக்குகளில் பாயசம் வருகிறதா என்று அந்த கும்பல் உறுதி செய்துகொண்டிருக்கொம்போதே லா. சா. ரா. நெய் விட்டு பிசையும் கதையை சொல்கிறார் அந்த அறையின் சிறந்த கதைசொல்லி. நான் படும் பாட்டை ரசித்தபடி ஷைலஜா]  

அமிர்தமாய் இனித்த அந்த பாயசத்தை பிரகாஷிடம் ஒரு கை கொடுத்துவிட்டு சாப்பிடும்பொழுது நான் அழுதுவிடுவற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதை உணர்ந்தேன்.


காட்சி 4: 
இடம் : வம்சியின் அறை 
நேரம் : இரவு 11:30 

இத்தனை அழகிய நாளின் பின்னிரவுக்கு மட்டும் சிறப்பாக அமைய அருகதை இல்லாமல் போய்விடுமா என்ன? வம்சி மற்றும் பிரகாஷ் எடுத்த புகைப்படங்களை வம்சியின் அறையில் இருட்டில் பார்க்கிறோம். வம்சியின் அற்புதமான படங்கள், நல்ல வேளை இவனிடம் 12 வது பற்றியோ, படிப்பு பற்றியே இதுவரை பேசவில்லை என என்ன வைக்கிறது. அழுத்தி பிசைகையில் பருப்பு பாயசம் போல விரலிடுக்கில் வெளிவருகிறவன் வம்சி என்று எண்ணிக்கொண்டேன். 

பிரகாஷ் கீழே படுத்துக்கொள்ள, நானும் வம்சியும் ஆளுக்கிரு தலையணை வைத்து இருட்டு நிறைந்த அறையில் பவாவின் இரன்டு "கதை கேட்க வாங்க" பதிவுகளை கேட்கிறோம். ஒரு மின்மினி அறையின் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு புத்த பிச்சுவின் நிதானத்துடன் எதையோ எழுதி அந்த இரவை ஆசிர்வதித்து சென்றது.


உயிரினங்களில் மரபணுக்களை படித்து அதன் பண்புகளை நிர்ணயிப்பது என் தொழில். அடுத்தமுறை இவ்விரு குடும்பங்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு துளி சதையை கிள்ளி எடுத்துவர திட்டம். விருந்தோம்பலின் மரபணுவை இவர்களிடம் கண்டறிய முடியாவிட்டால் வேறெங்கு முயல? 


பி. கு: இத்தனையும் சாத்தியாமாக்கி கொடுத்த முத்துராமன் சாருக்குக் நான் கடமைப்பட்டுள்ளேன்
15.09 GB (100%) of 15 GB used

No comments:

Post a Comment