Monday, February 4, 2013

இடம் மாறி ஒளிர்ந்த தீப ஒளிகள்




        குவாவாடீஸ் பல் சமய உரையாடல் மையத்திற்குள் நானும், ஷைலஜாவும் மகள் மானசியும் சரியாக 6 மணிக்கு நுழைந்தோம். அப்போது நாற்பது ஐம்பது வெளிநாட்டுக்காரர்கள்  குழுமியிருந்தார்கள். அவர்கள் அங்கேங்கே சென்று புகைபட மெடுத்துக் கொண்டும், ஒளிரும் தீபச்சுடர்களை பார்த்துக் கொண்டுமிருந்தது அந்த வளாகத்தை இன்னும் அழகாக்கி காண்பித்தது.
என் நண்பன் புகைப்படக் கலைஞன் அபுல் கலாம் ஆசாத் வழக்கம்போல் வேட்டி ஜிப்பாவில் நின்றிருந்தான். கண்ணுக்கு மைதீட்டி, வெற்றிலைபாக்குப் போட்டு... அவன் ஒரு தனி ஆள்.   நாம் சமீபிக்க முடியாதவன்.

ஒரு சின்ன அறிவிப்புக்குப்பிறகு எல்லோரும் குவாவாடீஸின் மூன்றாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த இரு ஓவியர்களின் கண்காட்சிகளைப் பார்வையிடப் போனோம். ஒரு நிமிடம் எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது அவ்வரங்கு. பீட்டர் ஜெயராஜ், சிவராஜ் (குக்கூ) இருவரது அயராத உழைப்பு, அங்கே ஆலமர விழுதுகாய் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு விழுதுக்கிடையிலும் ஒரு ஓவியமுமென மனு கல்லேக்காடு, சீனுவாசன், இருவரது ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அது வேறொரு உலகம். எழுத்துகளில் அதை கொண்டுவந்துவிட முடியாதுஒரு பிரான்ஸ் பெண் எழுத்தாளர் அவைகளை குதித்து. குதித்து படமாக்கிக் கொண்டிருந்தார்.

சீனுவாசனின் ஓவியங்களில் கை பதித்து அது எதனால் வரையப்பட்டிருக்கிறது என்பதை அறிய முயன்ற காயத்ரி கேம்யூஸ் என்னை துணைக்கழைத்தார். நிகழ்ச்சித் துவங்குவதாக லண்டனிலிருந்து வந்து இங்கு தங்கியுள்ள மைக்கேல் அறிவித்ததும் ஓவியங்களை விட்டகல  வேண்டியிருந்தது.
உமா ரவிச்சந்திரன் என்ற நாட்டியகலைஞர் பாரதியின் மூன்று பாடல்களுக்கு பரதமாடினார். எப்போதுமே நாட்டியத்தின் மீது மனம் சாயாத நான் ஸ்தம்பித்துப் போனேன். கண்களும், முகமும், கைகளும், தனித்தனியே நம்மிடம் பேசின. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மனம் லயித்து அந்நாட்டியத்திற்குத் தங்கள் கண்களைக் கொடுத்திருந்தார்கள்.


தற்செயலாய் திரும்பியபோது அந்த வளாகம் முழுக்க தீபச் சுடரொளி முன்னிலும் பிரகாசித்திருந்தது
19.டி.எம். சாரோனிலிருந்து என்ற புத்தகத்தை From 19. DM Saron என்ற பெயரில் பேராசிரியர் ராம்கோபால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். தன் இரு அல்லது மூன்று வார்த்தைகளில் அதை அறிமுகப்படுத்தி, முன்னால் பேராயர் கிடியன் தேவநேசனிடம் அதன் முதல் பிரதியைத் தொடுத்தார் காயத்ரி காம்யூஸ். சந்தோஷமும், பெருமிதமும், துளிர்த்த கண்ணீருமாய் அதை அவர் காயத்ரியின் கைகளிலிருந்து ஸ்வீகரித்தது... கவிதை.


என் நண்பன் அய்யனார் விஸ்வநாத் தான் தயாரித்த ஆங்கில உரையை அழகான ஆங்கிலத்தில் வாசித்தான். இடையிடையே அவன் உச்சரித்த கவிதைவரிகள் அற்புதம். என் நண்பன் போப்பு தமிழில் ஒரு சிறு அறிமுக உரையை  ஆத்மார்த்தமாக அச்சபை முன் சமர்பித்தான். முன்னூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் அவ்வாளகத்திற்குள் இருந்ததை, இல்லாததுபோல் செய்து தீபச் சுடரொளிகள் அங்கங்கே இருட்டை வியாபித்துக் கொண்டிருந்தன.
ஷைலஜா. “ கையிலடங்காத நீரின் சுழிப்புஎன்ற என் கட்டுரையை அப்புத்தகத்திலிருந்து எடுத்து எதிரிலிருந்த பலநாடுகளைச் சேர்ந்த அவர்கள் முன் சமர்பித்தாள். கண்ணீருக்கு மொழியேது என்று எல்லோருமே அதை தங்கள் புரிதலுக்கேற்ப பத்திரபடுத்தத் தொடங்கினார்கள். நான் பெருமிதப்பட்ட நிமிடம் அது.

என் நண்பனும், இந்த விழாவை நடத்தியவனும் எல்லைகள் கடந்த இறைசிந்தனையாளனுமான ஜே.பி. என்று எங்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட ஜாஷ்வாபீட்டர், ஒளிரும் தன் திறந்த இதயத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அத்தீப ஒளியை இன்னும் இன்னும் பிரகாசமாக்கினான்.



கூட்டம் அந்த ஆங்கில உரையில் இன்னும் இளகியது. முன்னூறு இதயங்களையும் தன் வார்த்தைகளால் கட்டிப்போடும் முயற்சி அது. அதற்காக அவன் எந்தப் பிரயத்தனமும் படவில்லை. அவர்களே தங்களை அக்கயிற்றில்  இணைத்து கொண்டார்கள். உண்மையான வெளிப்பாட்டின் முன் எத்தனைப் பெரிய பேச்சாளனும் ஒன்றுமில்லை. அதை அன்று ஜே.பி. தன் உரையால் நிரூபித்தான்.
அந்த பிரான்ஸ் பெண்ணின் கண்கள் நிறைந்திருப்பதைக் கவனித்தேன். அவள் ரமணர் முன் அமர்ந்திருப்பதை போன்ற தியான பெருமிதமது. 





கடவுளைத் தவிர்த்த ஆன்மீகத் தருணமென  அந்நிமிடத்தைப் பதியலாம். ஜே.பி.யின் ஆங்கில உரையின் தொடர்ச்சியாக நான் தமிழில் பேச ஆரம்பித்தேன்.
மரணம் மரத்துபோய்விடும் அய்யா என்று ஒரு கீரியின் மீது வண்டியை ஏற்றமறுத்த பேராயர் கிடியன் தேவநேசனின் ஓட்டுநரிடமிருந்து என் உரை ஆரம்பித்தது.



என் நண்பன் ராஜவேலுவைப் பற்றி, என் இன்னொரு நண்பன் யோகிராம் சூரத்குமாரைப் பற்றி, என் ஸ்னேகிதி சாவுக்கு சலங்கைக் கட்டி பாட்டுபாடும் லஷ்மியைப்பற்றி என் பேச்சு அங்கங்கே அறுந்தறுந்து வந்தது. என் முன்னால் இருந்தவர்கள் அவைகளை பூக்களை கையிலேந்துவதை மாதிரி ஏந்திக் கொள்வதை மனதால் உணரமுடிந்தது.




தீபங்கள் இப்போது மங்கலாகத் தெரிந்தன. அன்று குழுமியிருந்த பாக்யவான்களின் மனதில் அவைகள் பிரகாசமாக இடம்மாறி ஒளிர்ந்தன.










No comments:

Post a Comment