Wednesday, March 20, 2013

வலி

ஓவியங்கள் : என். சீனிவாசன் 


அப்போதுதான்  நடக்கத் துவங்கியது போல் முடியும் போதும் உற்சாகத்திலிருந்தார்கள். ஒரு வெப்பால மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த போதும் நீண்ட நடையின் களைப்பேதும் இல்லை. இருவருமே நெடுநெடுவென வளர்ந்து, ஒல்லியாக இருந்தார்கள். தொழில் அவர்களை அப்படி இருக்கச் சொல்லி எச்சரித்திருந்தது.
ராமன் எதிர் புதரின் அசைவையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே அசைவது எதுவென தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வமுற்றிருந்தான். இரண்டாமவன் கையிலிருந்த கருங்கல்லை உருட்டிக்கொண்டு அதையேப்பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் இடைவெளியிலும் கூட இருள் அப்பி ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாதபடி பரவியிருந்தது. நடக்கும்போது உணராத குளிரை உட்கார்ந்தவுடன்தான் உணர்ந்தார்கள்.
பேசுவதற்கான சொற்களை எப்போதும் ஊரிலேயே வைத்துவிட்டுத்தான்ப் புறப்படுவார்கள். சொற்களற்ற உடல் மொழி களவின் போதான இரவுகளுக்கு அவர்களுக்கு அவசியப்பட்டது.
இப்போது இருவரின் கைகளிலேயும் கற்கள் உருண்டன. புதரின் அசைவு அதிகரித்து அடங்கியது. ராமனின் கண்களில் ஒரு சிறு மின்னல் மின்னி அணைந்தது. காட்டுப் பன்றிகள். இருட்டில் இன்னும் பார்வையால் ஊடுருவினான். ஏழெட்டுக்குட்டிகள் இருக்கும். தாய்பன்றியைத் துழாவினான், இல்லை. வெளியே மேய்ச்சலுக்கு போயிருக்கலாம். அதுவும் தன்னைப்போலத் தான் என ஒரு கனம் நினைத்தான். மின் கம்பிகளில் மாட்டாமல், நாட்டு வெடிகுண்டுகளின் மேல் சோறு பிசைந்து போடப்பட்ட உருண்டைகளைக் கடிக்காமல், நாட்டு துப்பாக்கிகளின் குறிகளுக்குத் தப்பி தினம் தினம் தன் இருப்பிடம் சேரவேண்டியுள்ளது. எதுவும் நிச்சயமில்லை. ஏனோ அக்குட்டிகளின் மீது மிகுந்த பரிவு  வந்தது. அதை நீடிக்கவிடாமல் முகத்தை இரண்டாமவன் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் வெப்பால மர உச்சியின் அசைவை கவனித்துக் கொண்டிருந்தான். கைகள் அக்கருங்கல்லை உருட்டிக்கொண்டேயிருந்தன.
காடு சப்தமடங்கி படுத்துக்கிடந்தது.
காத்திருந்தார்கள்.
ராமனின் கையிலிருந்த கல் நழுவி இடது காலில் விழுந்தது. திடுக்கென முழித்துக்கொண்டு முனுசாமியைப் பார்த்தான். அவன் பார்வை வெப்பால மரத்திலிருந்து இறங்காமலிருந்தது. கையிலிருந்த கல் அசைந்துக் கொண்டேயிருந்தது.


ராமன் உள்ளுக்குள் புறப்பாட்டுக்குத் தயரானான். ஆனாலும் முனுசாமியின் கை அசைவு நிற்காமலிருந்தது. அக்கல்லும் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தபோது  ராமன் எழுந்து நின்றான்.
எல்லாமே கச்சிதமாய் இருந்தது.
திரும்பி நடக்கும் போது ராமன் மட்டும் எதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.  தாய்ப்பன்றி புதருக்குள் நுழைவது தெரிந்தது. இருட்டு பழகிவிட்ட படியால் அதன் பின் பக்க பருமை அவனை பயமுறுத்தியது.
முனுசாமியைத் தொட்டு நிறுத்திக் காண்பிக்க நினைத்ததை செயல்படுத்தவில்லை. மனம் கலைவது தொழிலுக்கு ஆபத்து. அவர்கள் போட்ட சொந்த பாதையில் நடப்பது மாதிரி கொடி வழியே நடந்தார்கள். மல்லாட்டைச் செடிகள் இருபக்கமும் இருட்டோடு  கலந்து கருங்கடல் மாதிரி பரவியிருந்தது.
அவ்வீட்டின் முன்னிருந்த கம்பத்தில் மூடியிட்ட ட்யூப் லைட் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வீட்டின் முகப்பில் அடங்கிய வெளிச்சத்தில் ஒரு டூம் லைட் மஞ்சள் நிறத்தில் எரிந்துக்கொண்டிருந்தது. முனுசாமி வீட்டின் பின்பக்கமிருந்து முன் வாசலை எட்டிப்பார்த்தபோது மஞ்சள் வெளிச்சம் மறைந்து இருட்டு நிறைந்திருந்தது.
அவர்களுக்கான தொடர்பை உடலால் வகுத்துக்கொண்டார்கள்.
ஏதோ அசைவுகேட்டு ரகோத்மன் படுத்துக்கொண்டே சுவிட்சைப் போட்டார். பரவிய  ட்யூப் லைட் வெளிச்சத்தில் அவரெதிரே மிக அருகில் அவன் நெடுநெடுவென நின்றிருந்தான்.
கத்த நினைத்தும் குரலெழவில்லை. அருகில் மனைவியும், மகளும் படுத்துக் கிடந்ததைப் பதைபதைப்போடு பார்த்தார். தன் போர்வையை மனைவி மீது தூக்கிப்போட்டார். அது மகள் மீது விழுந்தது.
அவன் அப்பக்கம் திரும்பவேயில்லை. பார்வை அவர் மீது மட்டும் நிலைக்குத்தி நின்றிருந்தது. அவர் கட்டிலிலிருந்து எழுந்த போது அவன் இன்னும் கூர்மையானான். அவர் தப்பிப்பதற்கோ  கத்துவதற்கோ எழவில்லையென அவன் நம்பினான். மனைவியையும், மகளையும் இழப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லையென அவன் மனம் உணர்த்தியது. ஆனாலும் அவன் உடல் எச்சரிக்கையாயிருந்தது.
அவர் படுக்கையறை கதவின் தாழ்ப்பாளை விலக்கி மெதுவாய் ஹாலுக்கு வந்தார். அவனும் அவரையே பின் தொடர்ந்தான். கவனமாக ஹாலில் எரிந்த ட்யூப் லைட் சுவிட்சை அவரே அணைத்தார். இப்போது ஹால் முற்றிலும் இருண்டிருந்தது. நிறைய சாமிப் படங்கள் சுவற்றில் தொங்கின. அவர் எதற்காக தன்னை ஹாலுக்கு அழைத்து வந்தார் என்பதை ராமன் நிதானித்தான். உள்ளே மனைவியின் இருமல் சத்தம்  எழுந்தடங்கியது. வீட்டின் பக்கவாட்டிலிருந்து வெளிச்சம் ஹாலுக்கு நுழைவதை இப்போதுதான் கவனித்தான். ஆனால் அதனால் என்ன?
ரகோத்மன் தலை உயர்த்தி அவனை முழுசாய் பார்த்தார். அவன் உயரமாயிருந்தான். பார்வை தாமதிக்காதேஎன அவரை எச்சரித்தது.
எதுவும் செஞ்சிடாத, என்ன இருக்கோ கொடுத்திர்றேன்என மௌனத்தால் அவனுக்கு சொற்களைக் கடத்தினார்.
அது தெரியும் நீ வேறென்ன செஞ்சிடுவே, சீக்கிரம்’  என அவன் பார்வையால் அவரை நெருக்கினான்.
குரவலையைத் தொட்டுப்பார்த்துக் கொண்டார். மீண்டும் படுக்கை அறைக் கதவைத் திறந்தபோது, அது சடாரென சாத்தப்படலாம்  என எதிர்பார்த்து  காத்திருந்தான். அப்படி எதுவும் நடக்காமல் அவர் பீரோவை திறக்கும் சப்தம் கேட்டது. ராமன் மெல்ல நகர்ந்து அறை வாசலில்  ஒரு காலும், உள்ளே ஒரு காலும் வைத்து நின்றுகொண்டான்.
இருட்டில் அவர் துழாவும் சத்தத்தில் எத்தனை பவுன் தேறும் என கணக்கு போட ஆரம்பித்தான். கவனம் சிதறுவதை ஒரு நொடியில் உணர்ந்து திரும்பி   பீரோவுக்குள் பார்வையை செலுத்த முயன்ற போது ரகோத்மன் கையில் நகைகளோடும், ரூபாய் நோட்டுக் கட்டோடும் இவனை சமீபித்தார்.
இருவருமே மீண்டும் ஹாலுக்கு வந்தபோது ரகோத்மன் படுக்கை அறைக்கதவை வெளித்தாழ்ப்பாளிட்டார்.  
அவனை மிக அருகில் சமீபித்தார். அவனிடமிருந்தொரு வித்தியாசமான வாசம் வந்தது. தன் இரு கைகளிலிருப்பதை அவன் நீட்டிய கைகளுக்குள் போட்டார். அதில் இழப்பின் வலியிருந்தது. சுமூகமான பறிமாறல் அது. அடுத்த நொடி அவன் புறப்பட யத்தனித்தான். இடையிடையே பின்பக்க வாசல் பக்கமும், வீட்டின் கிழக்கு மேற்காகவும் பார்வையை சுழட்டினான். ஏதோ ஒரு சமிக்ஞை இருந்தது. அவரால் அதற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் நான்கைந்து பேர் வெளியில் நிற்கிறார்கள் என யூகிக்க முடிந்தது.
அவரைத் தாண்டி மெயின் வாசலுக்கு போகும்போது அவர் தோள்பட்டையில் லேசாக இடித்தான். இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று அவனுக்கு வழிவிட்டார். திரும்பிப் பார்த்த போது அவரும் அவன் பக்கமே திரும்பி நின்றார். அவர் கண்கள் அலைவுறுவதைக் கவனித்து இன்னும் உஷாரானான். அவர்மீது பதிர்ந்த பார்வையை அகற்றாமல் உள் தாழ்ப்பாளைத் திறந்தான். அவன் உயரத்திற்கு வாசக்கால் இருந்தது. அவன் வாசற்படியேறும்போது பெரும் ஆவேசத்துடன் அவன் லுங்கியைப் பிடித்திழுத்து அய்யோ  திருடன், திருடன்”  என பெருங்குரலெடுத்து கத்தினார், ரகோத்மன். எதிர்பார்த்திருந்தது போல் அவன் இரட்டைக்கதவில் ஒன்றை மேலும் விலக்கி சடாரென சாத்தினான். அவர் கட்டைவிரல் கதவிடுக்கில் மாட்டி நசுங்கி வலி தாளாமல் அவர் கீழே விழுவதை அருகிலிருந்து பார்த்து விலகினான்.
காலால் எத்தி அவரை உள்ளே தள்ளி வெளிப்புறம் பூட்டிவிட்டு இருட்டில் நடந்தான். பக்கவாட்டிலிருந்து வந்திணைந்த முனுசாமி அவனுக்கிணையாய் சேர்ந்து கொண்டான். விளக்குகள் அவ்வீட்டிற்குள் அங்கங்கே எரிவதை, உள்ளேயிருந்து பெரும் குரலெழும்புவதை, அவர்கள் இருவரும் இருட்டினூடே பார்த்தும் கேட்டும் எட்டி நடைப் போட்டார்கள். அருகிலிருந்த கருப்பந்தோட்டம் காத்திருந்து அவர்களை உள்ளிழுத்துக் கொண்டது. கதவுக்கருகில் திட்டுதிட்டாய் உறைந்திருந்த கரும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் இன்ஸ்பெக்டர் பலுல்லா நேராய் சமையலறைக்குப் போனார். சாப்பிட்டும் சாப்பிடாமலும், தட்டிலேயே கை கழுவியதுமாய் நான்குத் தட்டுகள் அவர் கண்களில் பட்டன. திரும்பிய போது அவர் மனைவி சி.எம்.சி.க்கு கூட்டிட்டு போயிருங்கஎன யாரிடமோ கதறுவது கேட்டது.
கையில் நீண்ட ஒரு டார்ச்லைட்டுடன் இன்ஸ்பெக்டர் பலுல்லா வீட்டின் மேற்கே தனியாய் நடந்தார். வெளிச்சம் பரவிய இடத்தை வைத்து அவர் நடக்கும் தூரத்தை கூட வந்த போலீஸ்கார்கள் கணித்தார்கள்.

மகள் பிரமைப்பிடித்து கட்டிலில் சாய்ந்திருந்தது திறந்துகிடந்த  கதவின்வழியேத் தெரிந்தது. நிறையப்பேர் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தனர்.
மனுஷன் கரெக்டா கண்டுபிடிச்சுடுவான்என ஒரு போலீஸ்காரன் அவனுக்கே கேட்காதவாறு முணுமுணுத்ததை சக போலீஸ்காரர்கள் ஆமோதித்தார்கள். இரண்டுபேர் ஒவ்வொரு அறையாய் போய்வந்தார்கள். யாராவது எங்காவது பதுங்கியிருக்கக்கூடும் என்ற ஜாக்கிரதை உணர்வு அவர்களுக்குள் இருந்ததை அவர்களின் மெதுவான நடை உணர்த்தியது.
மனைவி, வீட்டிற்கு வெளிக்கும், உள்ளுக்கும் நடந்து யார்யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். நாற்பது அம்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோருமே இன்ஸ்பெக்டரின் திரும்புதலுக்காக காத்துநின்றார்கள். அவர் கருப்பந்தோட்ட வரப்பில் பாதை வரை போய், டார்ச் லைட் ஒளியை சுழலவிட்டு கவனித்துத் திரும்பி தன்னை பின் தொடர்ந்த நம்பிக்கைக்குரிய ஏட்டு தாண்டவராயனிடம்
 “கொறவாஸ் தான்என்றார்
எத்தனை பேர் சார்?”
நாலு
அந்த வார்த்தைக்குள் பெருமிதமும், பல வருட அனுபவமும் அடங்கியிருந்தது. தாண்டவராயனை மட்டும் அருகிலழைத்து, தன் கையிலிருந்த டார்ச் ஒலியை அருகருகே நகர்த்தி காண்பித்தார். கும்பல் கும்பலாய் நாலிடத்தில் ஈரமலம் தெரிந்தது. தாண்டவராயனுக்கு அவர் கணக்கின் துல்லியம் மீண்டும் ஒருமுறை புரிந்தது. அவர்களை நோக்கி முன்னேற முயன்ற நாலைந்து தெரு ஆட்களை ஒரு போலீஸ்காரன் கெட்டவார்த்தைச் சொல்லித் திட்டினான். தொடர்ந்த அவன் எச்சரிக்கையில் கருப்பந்தோட்டத்திற்குள் அவர்கள் ஒளிந்திருந்து  தாக்கக்கூடும் என்ற தொனியிருந்தது.  
முற்றிலும் நிலைகுலைந்திருந்த அவ்வீட்டு பெண்ணிடம் எங்கிருந்து ஆரம்பிப்பதெனத் தெரியாமல் சாருக்கு இப்ப எப்படிம்மா இருக்குஎன்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
வண்டி கண்ணமங்கலத்தை தாண்டியிருக்கும் சார்என பதட்டத்தோடு சொல்லி அடுத்த கேள்வியை எதிர்கொள்ள தயாரானாள் அவள்.
நீங்க அவன்ல யாரையாவது பாத்தீங்களாம்மா?”
இப்போது அவள் தன் வளர்ந்த மகளை தன்னோடு சேர்த்தணைத்திருந்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே,
இல்ல
உங்களுக்கெப்பத் தெரியும்?”
சார் கை நசுங்கி கத்தினப்போதான் அலறியடிச்சி நானும் எம்பொண்ணும் எழுந்தோம் சார். பீரோ திறந்திருந்தது. பெட்ரூம் கதவு வெளித்தாப்பா போட்டிருந்தது.
சாருக்கு கையில மட்டுந்தான் அடியா?”
ஆமா சார், ஆனா மயங்கி விழுந்துட்டாரு.  ஓவரா ப்ளீட்  ஆயிடிச்சு.
தாண்டவராயன் அவருக்கு மட்டுமே புரியும் எழுத்தில் இவை எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர்  பலுல்லா பதற்றமற்றிருந்தார்.  நிதானத்தோடு எல்லாவற்றையும் அணுகினார்.
சரிம்மா தைர்யமா இருங்க, ரெண்டு, மூணு போலீஸ்காரங்கள விட்டுட்டு போறன்.என்று தாண்டவராயனுடன் சற்றுத் தள்ளிநின்று பேச ஆரம்பித்தார்.
கொறராமன்என்ற பெயர் அடிக்கடி அவ்வுரையாடலின் வழியே கசிந்தது.
தாண்டவராயனின் தொடர் தலையாட்டல், அவனை எளிதில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை தூரத்திலிருந்து கவனித்த போலீஸ்காரர்களுக்குத் தந்தது.
கட்டு அவிழ்க்கப்பட்டும் ரணம் இன்னும் ஆறாமல் இருந்தது. வலி விரலுக்குள் உறைந்திருந்தது. ரகோத்மனின் பார்வை எப்போதும் இழுத்துத் தைக்கப்பட்ட அக்கட்டைவிரலிலேயே நிலைத்திருந்தது.
அப் பத்து நிமிட சுமூகத்தை குலைத்தது எது? இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ? பிடித்திழுத்து அவனை உள்ளேத் தள்ளிவிடலாமென மனம் யோசிக்கும் முன் உடல் முந்திக் கொண்டது.
அவன் தான் எத்தனை மேன்மையாய் நடந்து கொண்டான்!  பத்து பவுனும் கொஞ்ச பணமும் தன்னால் மீண்டும் சம்பாதிக்க முடியாததா? அவன் உருவமின்றி தன் மீதி வாழ்க்கை எவ்விதம் கழியும்? அவர்கள் நாலு பேர் என்பது நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்கமுடியவில்லை, வெளியே அத்தனை பேர் நின்றிருக்கும்போது எப்படி தனக்கு அத்துணிவு வந்தது.? அவர்கள் நாலு பேரும் திபு திபுவென உள்ளே ஓடிவந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அவன் ஒருவன்தான் என அவர் இப்போது நினைத்தார். அவனைப் போலவே எதற்காகவோ கூட மூன்று பேரை இவர்களும் கூட்டுசேர்க்கிறார்கள். நெருங்கி நின்று பார்க்கும் போது தெறித்த அவன் பார்வையில் எத்தனை எச்சரிக்கையிருந்தது. எப்படி அதை மீற நினைத்தேன்?
விசாரணை என்னென்னவோ தகவல்களை கொண்டுவந்து குவிக்கிறது. விசாரிப்புகள் காயப்பட்ட கைவிரலை மீண்டும் துளைக்கிறது. அவர் அவ்வப்போது கண்களைமூடி எதற்கோ  யாரிடமோ முறையிட்டார். அப்போதெல்லாம் வலதுகை இடது கை நசுங்கிய கட்டைவிரலின் மீது மிருதுவாய் தடவிக் கொண்டிருந்தது. கைகளுக்கிடையேயான பரிவு கவனித்தவர்களுக்குப் புரிந்தது.
முற்றிலும் ரணம் ஆறிவிட்டதாய் சொல்ல முடியாத ஒரு மாலையில் ரகோத்மன் கிழக்குக் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். தனியேப் போகுமளவிற்கு மன தைரியம் கூடிவரவில்லை துணைக்கு இன்னொரு நண்பனையும் சேர்ந்துக் கொண்டார்.
இன்ஸ்பெக்டர் அறை பளிச்சென்றிருந்தது. ஆனாலும் நாக்கை தொங்கப் போட்டு எச்சில் ஒழுகும் ஒரு நாயைப் போல அச்சம் அவ்வறை முழுக்க அங்கங்கே படுத்திருந்தது. ஆறினக் காயம் மீண்டும்  வலிப்பதுமாதிரியிருந்தது. எல்லாவற்றையும் மறைக்க முயன்றார். இன்ஸ்பெக்டரின் முகத்தில் பெருமிதமிருந்தது.  
ஆளை  பிடிச்சிட்டோம் சார், ரெண்டு பேர்தான் நீங்க கொஞ்சம் நிதானப்பட்டிருந்தா இத தவிர்த்திருக்கலாம்என அவர் கைவிரலை காட்டினார். அவனுங்க ரொம்ப டேஞ்சரஸ் ஆட்கள். அசால்ட் ரொம்ப சாதரணம். சும்மாவே கட்டையால மனுஷங்க தலையில அடிச்சிட்டு போவாங்க.
அவர் பேச்சை தொடரவிடாமல் அவர் இப்ப நான் என்ன பண்ணனும் சார்என்றார். எதையும் தவிர்த்து தப்பிக்கும் எரிச்சலும், எச்சரிக்கையுமாக.
ஒண்ணுமில்ல. பயப்படாதீங்க. எல்லாந்தான் முடிஞ்சிருச்சே. அப்புறம் ஏன் ஆத்ரப்படறீங்க பாக்கறீங்களா?”
வேணாம் சார், அவனைப்பாத்து இனிமே என்னாகப் போவுது?”
ச்சே, ச்சே அப்படி சொல்லாதீங்க, அவனுங்கதானான்னு நீங்கதான் கன்பார்ம் பண்ணனும். அவனுங்ககிட்ட எதுவும் பேச்சு கொடுக்க வேணாம்.
தாண்டவராயன்தான் அவர்களிருவரையும் லாக்கப் ரூமூக்கு  கூட்டிப் போனார். அவ்வரையின் வெளியில் நின்றிருந்த ஒரு பெண் சட்டென இவர்களைக் கடந்து போனாள். அவர் எதிர்பார்த்தது மாதிரியே அவள் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.
இவரை எதிர் கொள்வது மாதிரி முனுசாமி நின்றிருந்தான். அவன் கையில் கேரிபேக் இருந்தது. இவர்களைப் பார்த்ததும் ஒரு மூலையில் அதை விட்டெறிந்தான். இன்னொருவன் சுவர் பக்கம் திரும்பிப் படுத்திருந்தான்.
தாண்டவராயன், “டே எந்திருச்சி வாடா நாயே, பெரிய மயிறுமாதிரி படுத்திருக்கஎன்று கத்தினார். அவன் இதற்கெல்லாம் அஞ்சாதவன்மாதிரி மெல்ல எழுந்து லுங்கியை இறக்கிவிட்டு விட்டு கம்பிக் கதவருகே வந்து நின்றான். இவர் மட்டும் ஒரு அடி தள்ளிநின்றார். அவன் பார்க்கவேண்டும்  என்பதுபோல இழுத்து வைத்துத் தைக்கப்பட்ட இடது கை விரலை மேல் நோக்கித் தெரிய வைத்திருந்தார்.
அவன் அதைப் பார்த்து உடன் பார்வையை விலக்கிக் கொண்டான். அன்றிரவு காட்டில் அப்பன்றிக் குட்டிகளைப் பார்த்தபோதும் அதே போல்தான் அவன்  பார்வை விலகியது.
அவனை நேரடியாய் பார்ப்பதை அவர் தவித்தார். இருவருக்குமிடையே ஒரு கருந்திரையை அவர் மனம் வேண்டியது. அந்த ஹாலில் நின்று மிக அருகில் அவன் கண்களை ஏறெடுத்தவர்தான் அவர். ஆனால் இப்போது அவனைப் பார்ப்பதற்கு எதுவோ தடுத்தது. அவன் சஞ்சலமற்றிருந்தான். அவரை முழுவதுமாய் பார்த்தான். அவன் பார்வையில் எந்த பொய்யுமில்லை. எல்லாந்தான் முடிந்துவிட்டதே என்கிற பார்வை அது. அவர்தான் அவனை நேரடியாய் பார்க்கமுடியாமல் தத்தளித்தார். எதுவும் பேசாமல் ரகோத்மன் இன்ஸ்பெக்டர் ரூமூக்குள் நுழைந்தார். கூட வந்த நண்பனும் தாண்டவராயனும் வெளியிலேயே நின்று கொண்டார்கள்.
இன்ஸ்பெக்டர் உட்கார சொல்லி கைகாட்டினதை கவனிக்காதது மாதிரி அன்னிக்கு நைட் வந்தது இவனுங்க ரெண்டு பேருமே இல்ல சார்”  என்றார். எதிலிருந்தோ விடுபட்ட வார்த்தை உடைந்திருந்தது.  நன்றி 
உயிர் எழுத்து 
மார்ச் 2013

No comments:

Post a Comment