Wednesday, March 13, 2013

நட்சத்திரங்களை இதயத்தில் ஒளித்து வைத்து

மலையாளத்தில் நண்பர் ஸ்டேன்லியின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள என் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை நூலுக்கு ஷௌக்கத் எழுதிய விரிவான கட்டுரை தேசாபிமாணியில் வெளிவந்தது. கே.வி. ஜெயஸ்ரீ அதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 


                                                                                                               
மலையாள விமர்சனம் : ஷௌக்கத்
தமிழில்  :   கே.வி.ஜெயஸ்ரீ

எனக்கு மிகவும் பிரியமான இடம்தான் திருவண்ணாமலை. பல வருடங்களாக  அவ்வப்போது வந்து தங்குமிடம். மலைக்குப் பக்கத்தில் இருபது சென்ட் இடம் வாங்கினோம். அங்கே ஒரு சிறுவீடு கட்டிக் கொள்ளும் முயற்சியில்தான் நானும் காயத்ரியும் இருக்கிறோம். இங்கே வரும்போதெல்லாம் ரமணாஸ்ரமத்தினருகே வசிக்கும் ஜெர்மன் பெண்மணி ஜோதி அம்மாவின் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அந்த அறையைப் பகிர்ந்து கொள்ள வேறொருவர் வந்ததால், புதிய இடம் தேட வேண்டியதாயிற்று. அப்போதுதான் ப்ரிய நண்பன் அருண் மூலமாக பவா செல்லதுரையை. மீண்டும் காண நேர்ந்தது. இதற்குமுன் ஒருமுறை பார்க்கவும், பழகுவுமான சூழல் உருவான போதும், ஏதோ காரணத்தினால் அதைத் தொடர முடியாமல் போனது. இரண்டு வெவ்வேறு உலகங்களில் சஞ்சரிப்பவர்கள் என்ற எண்ணம்கூட அந்த சந்திப்பின்மைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
அது எதுவாகவும் இருக்கட்டும், பவாவின் நெல் வயல்களுக்கு இடையிலிருக்கும் கெஸ்ட் அவுசில் உட்கார்ந்து கொண்டுதான் இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மனோகரமான ஓரிடம். சுற்றிலும் பச்சைப் பட்டுக் கம்பளம் விரித்தது போன்ற நெல்வயல்கள். ஸ்படிக நீர் சுரந்து வரும் பெரிய கிணறு. இதமாகத் தழுவிச் செல்லும் தென்றல். இயற்கையின் அனைத்து பாவனைகளோடும் இணங்கும்படியான தியானச் சூழல் உள்ள ஓரிடம். அருணாச்சலம் அதன் முழுமையான மகோன்னதத்தில் உயர்ந்து நிற்கிறது.
இவையனைத்திற்கும்மேல் பவாவின், அவருடைய குடும்பத்தின், ப்ரியமான இதயத்தோடு கூடிய நண்பர்களின் அவ்வப்போது ஏற்படும் சந்திப்புகள். மொத்தத்தில் அருமையான படைப்பூக்கச் சூழல்.
பவா ஓர் இதய ஜீவி. அபூர்வமாக மட்டுமே காணக் கிடைக்கும் ஓரினம். அவர் தன் வாழ்வனுபவங்களைச் சொல்லத் தொடங்கினால் அவை அபத்தங்களின் மகாபாரதமாகவே அமையும் ஆனால் அந்த அபத்தங்களில்தான் வாழ்வின் அனைத்து படைப்புச் சூழலும் லயித்திருக்கும். அதன் காரணமாகவே, அவருடைய செயல்பாடுகளில் அறிவுத்தளம் எப்போதும் மேலோங்கியிருப்பதில்லை. லாப நஷ்டங்களின் கணக்குகளுக்கு அவர் மனதில் இடமேயில்லை. அதனாலேயே அவர் அதிகம் நஷ்டங்களையே சந்திக்கவும் செய்கிறார். தோற்பவனின் வாழ்வில்தான் ஒளி மிகுந்திருக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக அவருடைய களங்கமற்ற புன்னகை சதா விடர்ந்திருக்கிறது.
எழுத்தாளனுக்கும் அவனுடைய எழுத்திற்குமிடையே குறிப்பிடத் தக்க உறவொன்றுமில்லை என்ற அனுபவம் எனக்கு நிறைய இருக்கிறது. ஏதோ ஒரு நிமிடத்தில் உணர்வு பெறும் ஆளுமையின் ஒளிக்கீற்று வார்த்தைகளெனவும் கோடுகளெனவும் வெளிப்படுகிறது என்பதன்றி எழுத்தாளனின் வாழ்வில் அந்தக் கருணையைத் தேடிச் சென்றால் நிராசையே மிஞ்சும். எழுத்தாளனுக்கும் எழுத்திற்குமான இடைவெளி அபூர்வமாகத்தான் குறைந்திருக்கும். பாவனையின் இறகிலேறி யதார்த்தத்தின், கனவின் கதை சொல்லும்போது, நாம் அதை ரசிக்கலாம், வாழ்த்தலாம். அவன் ஆளுமையை உணர்ந்து ஆச்சரியப்படலாம். அங்கேயே நிறுத்திக் கொள்வதுதான் ஆரோக்கியமானது. அதற்கும் மேலே சென்றால் ஒருவேளை அகங்காரத்தின், போலித்தனத்தின் விஷம் தீண்டப்படலாம். இதற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர்தான் பவா. கதையைவிட யதார்த்தம்தான் அவருடைய வாழ்க்கை. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்பது ஒரு கதையின் பெயர் மட்டுமல்ல. அனேகம் அனேகம் நட்சத்திரங்களை கர்ப்பத்தில் ஒளித்தும் பெற்றெடுத்தும் வாழும் இதயத்தின் சொந்தக்காரர்தான் அவர் என்பதைக் கடந்த சில நாட்களின் பழக்கத்தில் உணர்ந்து கொண்டேன்.
சிறு பிராயம் முதல் தன்னைச் சுற்றி, கண்டும் கேட்டும் அனுபவித்த உலகத்தை அதன் அனைத்து தீவிரத்தோடும் ஆழத்தோடும் எழுதும்போது இயல்பாகவே நிகழக் கூடிய மிகை பாவனையோ மிகை யுக்தியோ இங்கே வெளிப்படுவதேயில்லை. நிதர்சனத்தில் எப்போதும் ஒரு விதபரபரப்போடு காணப்படும் பவாவின் உணர்விலிருந்து எவ்வளவு பொருத்தமான, சிறப்பான வார்த்தைகள் அதன்தன் இடங்களில் உட்கார்ந்து கொள்கின்றன!  
எப்படி வேண்டுமென்றாலும் பெருக்கிப் பெரிதாக்கக் கூடிய அனுபவங்களைச் சிப்பிக்குள் முத்துபோல, சிறுகதையெனும் சிறு சிப்பிக்குள் சிற்பம் போன்ற பொலிவுடன் வெளிப்படுத்தும்போது, ஆமாம், இப்படித்தான் கதை சொல்லப்பட வேண்டுமென்று நம் உள்ளம் சொல்லிச் செல்கிறது. மண் வாசனையுள்ள கதைகளை அவர் எவ்வளவு சிரத்தையுடன் அவர் எழுதிச் செல்கிறார்.பத்தாம் வகுப்பிலேயே நாவலெழுதி வெளியிட்டவர். +2 படிக்கும்போது ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியானது. அதன் பிறகே சிறுகதையின் பக்கம் திரும்புகிறார். அங்கிருந்துதான் தன்னுள்ளிருந்த நிஜ எழுத்தாளன் பிறந்து வந்தான் என்று பவா நினைக்கிறார். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரையான இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களில் அவர் எழுதிய கதைகள் மொத்தமே பதினொன்றுதான்! தியானச் சூளையில் வேக வைத்தெடுத்த சிற்பங்கள். ஒவ்வொன்றிலும் வேதனை  சூழ்ந்த வாழ்வின் வேர்வையும், மூச்செறிப்பும் நிறைந்திருக்கின்றன. தமிழக கிராம வாழ்வின் மேன்மைகளை எவ்வளவு அனாயாசமாக வெளிப்படுத்துகிறார். மலையாளிகளுக்கு தமிழிலக்கிய உலகிலிருந்து மற்றுமொரு பிரசாதம் போன்ற வரவு இந்நூல். ஸ்டான்லியின் மொழிபெயர்ப்பு மனோகரமானது. (வெளியீட்டாளர் : ராஸ்பெரி புக்ஸ் - கோழிக்கோடு) தமிழிலேயே இதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ரசனைக்குரியதாக இருக்கும். பவாவிடமிருந்து  இது போன்ற இதய நொம்பலங்களை மென்மேலும் நாம் எதிர்பார்க்கலாம்.
உக்கிரமான இறந்தகால அனுபவங்களைக் கொஞ்சமும் கலப்பின்றி அவர் வெளிப்படுத்தும் போது அது மக்களின் வரலாறாக மாற்றமடைகிறது. நேர்மையும் உண்மையுமான வரலாறு எழுத்தாளனின் இதயத்திலிருந்துதான் பல்வேறு காலங்களில் பிறவியெடுக்கிறது. காலக் குறிப்புகளுடனான வரலாற்றுப் புத்தகங்களைவிட சத்தியத்தை அறிந்துகொள்ள இப்படிப்பட்ட கதைகள்தான் நமக்கு உதவுகின்றன என்பதை பவாவின் கதை சொல்லல் நமக்கு உணர்த்துகிறது. வாழ்வின் எல்லாப் பரப்புகளிலும் துடிப்போடு இயங்கும் அவருடைய அனுபவ உலகம் அவ்வளவு ஆழமும், அகலமும் உடையதாக இருக்கிறது.
இவ்வளவு வேறுபட்ட நட்பு வளையத்தோடு வாழ்பவர்களை அபூர்வமாகத் தான் நான் சந்தித்திருக்கிறேன். எதையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டேயிருக்கும் அந்த இதயத்தை நான் அதிசயமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகக் குறுகிய நாட்களின் அனுபவமே என்னை இப்படியெல்லாம் சொல்ல வைக்கிறது.
ஷைலஜா சொன்னது போலவே சத்ருகதைதான் என்னையும் மிக உலைத்தது. கனிவின் ஈரமேற்ற பாவனையில் இதயத்தைத் தூய்மையாக்குகிறது இக்கதை. பசியோடு எதிரே நிற்கும் தாய்க்கும், குழந்தைகளுக்கும் தன்னிடம் மிகக் குறைவாகவே எஞ்சியிருக்கும் உணவிலிருந்து எவ்வளவு இயலுமோ அவ்வளவைப் பகிர்ந்து கொடுக்கும்போது இயற்கைகூடக் கனிந்து மழையைப் பெய்விக்கிறது.
குரூரமான கிராமம் மழையின் கனிவில் கருணையேறி நிற்கிறது. அம்மன் பிரசாதம் குற்றவாளியை விடுதலை செய்கிறது. ஒருவனின் கருணை எப்படி இயற்கையிடமும் சுற்றுமுள்ள மனிதர்களிடமும் கசிந்து தயையின், கருணையின் பிரவாகமாகிறது என்பதை நாம் அனுபவத்தால் உணர்கிறோம்.
வறுமையின் கடும் வெம்மையிலும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், பிறருக்கு உதவுவதில் கருணை வழிந்தோடுவதைக் காணும்போது மனித நேயத்தின்மீது நமக்கு மிகுந்த நம்பிக்கை தோன்றுகிறது நம்முடைய இதயமும் அதன் எல்லா குரூரங்களிலிருந்தும் வெளியேறி கனிவுள்ளதாகிறது. ஈரமுள்ள இதயங்களில்தான் நன்மையுடையதும் நீதியுடையதும் தயை பொங்கி மேலெழும் என்ற உண்மையை மீண்டும் உணர்த்துகிறது இந்தக் கதை.
அருளில்லாமவிட்டால் அது வெறும் அஸ்தி தோல்
நரம்பு நாறும் ஓர் உடம்புதான் அவன்
பாலையில் பிரவகிக்கும் ஜலம் போன்றவன்
பயனற்ற மணமற்ற புஷ்பம் போன்றவன்
என்று நாராயண குரு பாடிய பாடலே இந்தக் கதையை வாசித்து முடித்தபோது என் உள்ளத்தில் மேலெழுந்தது.
கிராமத்தின் பரிசுத்தத்திலிருந்து நகரத்தின் குரூரங்களுக்குள் சென்று விழும்போது சிதிலமடையும் மதிப்பீடும்கள் பற்றி நம் எல்லோருடைய மனமும் வேதனை கொள்வது உண்மையே. ஏழுமலை ஜமாவின் உயிர்ப்போடு இருந்த கிராம வாழ்க்கை பெருகி வரும் பொறுப்புகளின் சூழலில் பட்டு பட்டணத்திற்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. கடைசியில் கிராமத்துக்கே வந்து சேரும்போது பட்டணத்து நாகரிகம் கிராமங்களை நிலைகுலைய வைத்திருப்பதை அறிந்த ஏழுமலையின் இதயம் வெந்து போகிறது. கடைசியில் அந்தச் சிறு ஜமா வாத்தியார் நாகரிகர்களான கூத்தாட்ட கும்பலுக்கு நடுவே ஆடிக் கொண்டே மயங்கி விழும்போது ஒரு நூறு கேள்விகளை நம் இதயங்கள் நோக்கி எய்கிறார் பவா.
தீட்டு, தீண்டாமை இவற்றின் கொடூரமான உண்மைக் கதைகளை எத்தனை முறை கதைகளாக, கவிதைகளாக, திரைப்படங்களாக நாம் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். எனினும் எவ்வளவுமுறை நாம் சொல்லித் தீர்த்தாலும் தீராத வேதனை சிங்காரக் குளம் வாசிக்கும் போதும் நம்மை விழுங்குகிறது. எத்தனை எத்தனை மனிதர்களின் தியாகமும், தீரமும்தான் இன்றைய நம் சுதந்திர வாழ்விற்கு உரமாக்கப் பட்டுள்ளதுஎன்பதை உணரும்போது கண்கள் பனிக்கின்றன இதயம் நன்றியில் குழைந்து கொள்கிறது. இன்னும் நாம் சென்றடைய வேண்டிய சுதந்திர உலகங்களை நமக்கு உணர்த்துகிறது. அடிமைத்தனம் மரணம்தான் என்று அது நமக்கு நினைவூட்டுகிறது. சுதந்திரம் யாருடைய இலவசமுமல்ல என்பதும் அது நம்முடைய பிறப்புரிமைதான் என்பதும் மீண்டும் மீண்டும் உள்ளே எதிரொலிக்கிறது.
அவருக்கும் என் அம்மாவுக்குமான வாழ்க்கையில் இனி எந்த ஒட்டுறவுக்கும் சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால்... ஆனால்... எனக்கு?” என்ற மகனின் கேள்வி இதயத்தைதான் அழுத்தியது. வேற்றுமைகளாலும் மனக் கசப்புகளாலும் இறுகக் கட்டப்பட்டு கிடக்கும் பந்தங்களின் உலகம் விவரிக்க இயலாதது. எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடியாத விடுகதை அது. ஒருவனின் பக்கம் நின்று கேட்கும்போது அவன் சொல்வதே சரியெனத் தோன்றும். அவனை விட்டு அடுத்தவன் பக்கம் நின்று பார்த்தால் இவனிடமும் தவறில்லை என்பதை உணரும் நாம் மிகுந்த குற்றவுணர்வுக்குள் ஆழ்ந்து போவோம். சரி, தவறுகளின் உலகம் நாம் கட்டம் மாற்றி மிதிக்கும்போது மாறி மாறி வரும்.
உலக இலக்கியங்கள் மன அழுத்தங்கள் நிறைந்த உறவுகளின் கதைகளால் பெருகி வழிவது என்பது வெறும் வார்த்தைகளல்ல. யாராலும் எளிதில் பதில் காண முடியாத ஓர் உலகம் அது. மற்றவர்களின் பிரச்னைகளுக்கு மிக எளிதில் பதிலளிக்கக் கூடியதும், அவனவன் பிரச்னைக்கு ஒரு போதும் விடைகாண முடியாததுமான விடுகதைதான் உறவுகளின் ஆணிவேராய் இருக்கும் இந்தப் போராட்டம். அப்பா, அம்மா, மகன் இவர்களுள் யார் சரி? யார் பக்கம் நாம் நிற்பது? மகனின் வேதனை நிஜமானதுதான். அப்பாவின் கோபத்தின் பின்னிலும் வெட்டுப்பட்ட இதயத்தின் துடிப்பிருந்தது. அம்மாவிடமும் அவளுக்கேயுரிய நியாயங்கள் இருக்கலாமல்லவா? மொத்தத்தில் அங்கே மேலோங்கி நிற்கும் சூழலை வெளிப்படுத்திவிட்டு பின்வாங்கவே ஒரு எழுத்தாளனால் முடியும். இல்லையெனினும் அப்படிப் பின்வாங்குமிடத்தில்தானே கதை அதன் கடமையை முடித்துக் கொள்கிறது.
முகம் கதையை வாசித்தபோது இவான் இலியச்சின்  மரணம்தான் என் மனதில் நிறைந்தது. டால்ஸ்டாயின் அந்தக் கதை எப்போதும் நம்மிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முகங்களெல்லாம் பொய் முகங்களாக மாறுகின்றன? பொய் முகங்கள் அணியும்போதுதான் வாழ்வின் தனிமை சிதைகிறது என்பதை நாம் அறிவதேயில்லை. எதற்காக நாம் இப்படி தனிமை சூழ்ந்த வாழ்வை விட்டு நீங்கி மாச்சரியத்தின், போலி கௌரவத்தின் பாரத்தை நோக்கிக் கவரப்படுகிறோம்? இனம் புரியாத மர்மம் தானிது.
அம்முக்குட்டியின் களங்கமின்மை இன்னும் எத்தனை நாட்கள் அவளிடம் தொடரும்? பெரியவர்களின் செயல்களின் இழுப்பில் அவளும் அமிழ்ந்து போவாள். பின்னர் வர்ண ஜாலங்கள் காட்டும் இவ்வுலகில் தனக்கான இடம் தேடும் போராட்டத்தில் அவளின் முகப் பொலிவிலும் கார்மேங்களின் நிழல் விழும். இயல்புத் தன்மை சிதைவதைப் பற்றி பவா வியாகூலமடைவது அவருடைய கதைகள் எல்லாவற்றின் உயிரோட்டமாகவே இருக்கிறது. ஆதரவின்மையிலும் ஓர் எதிர்பார்ப்பாக அம்முக் குட்டியின் களங்கமின்மை பவாவிடமும் இருப்பதுதான் கதைகள் முழுக்க ஒளியாய் உடன் வருகிறது.
காட்டிற்குள் செல்லும் போதெல்லாம் தாயின் கருவறைக்குள் திரும்புவது போன்ற அனுபவத்தையே நான் அடைந்திருக்கிறேன். மௌனத்தின் மிக்க அருகாமையைத் அதன் அனைத்து பரிணாமங்களின் வழியிலும் நான் தேடியதும் அனுபவித்ததும் அங்கேதான். குடகு மலைக் காட்டில் சுற்றித் திரிந்த பத்து நாட்கள்தான் என் மனதில் வந்து நிறைகிறது. பயமும், நடுக்கமும், நிராசையும், பீதியும், மௌனமும், ஆரவாரமும் எல்லாம் அவற்றின் தீவிரத்தோடு உலைந்தாடிய தினங்கள். பாம்பும் புலியும் கரடியும் காட்டெருமையும் சஞ்சரிக்கும் வனத்தில் என் முதல் வாசம் அது. பரிச்சயமற்ற உலகில் அகப்பட்டவனின் அனைத்து உபாதைகளும் அனுபவித்த தினங்கள் அவை.கட்டுரையாளர்  ஷௌக்கத்துடன் நூலாசிரியர் பவாசெல்லதுரை

வேட்டைகதை வாசித்தபோது முற்றிலும் மாறுபட்ட உலகம்தான் வெளிப்பட்டது. காடு ஒவ்வொருவருக்கும் அவர்களையே தான் திரும்பத் தருகிறது. வேட்டைக்குச் செல்பவன் காணும், அனுபவிக்கும் காட்டை ஒருபோதும் நான் அனுபவிக்க முடியாது. அவனுடைய கண்ணும் காதும் தேடுவதை ஒருபோதும் நான் தேடுவதேயில்லை. வன ஜீவிதத்தின் மாறிக் கொண்டேயிருக்கும் களங்கமின்யை அதன் எல்லா தீவிரத்தோடும் சூட்சுமத்தோடும் பவா வெளிப்படுத்தும்போது அற்புதமான ஒரு எழுத்தாளன் கிடைத்துவிட்டானென்ற எண்ணமே நமக்கு ஏற்படுகிறது.
மூடநம்பிக்கைகள் நம்பிக்கைகளாக, சமூக அறிவின்  உயிரோட்டமாக மாறுவதும் அது வாழ்வின் அளவுகோலாக ஆவதும் ஒரு விபரீதம்தான். யுக்திவாதத்தை அறைகூவியபடி, என்றும் தொடரும் விடுகதை அது. பழமையான விசுவாசங்களும் நவீன நம்பிக்கைகளும் இழைந்து இணைந்து கிடக்கும் மனித அறிவு எளிதில் விடைகாண முடியாத விடுகதையே. சம்பவங்களை வரையறைக்குள் தளைத்து விடாமல் வெளிப்படுத்துவது மட்டுமே ஒரு எழுத்தாளனால் செய்ய முடியும். நியாய அநியாயங்களின் உரைகல்லில் உரைத்துப் பார்க்காமல் எந்தவிதச் சிக்கலுமின்றி கதை சொல்லிப் போகிறது நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை. நம்பிக்கைகளின் சுழலில் அகப்பட்டு வாழ்வின் இசை நசிந்து போவதும் அதே நம்பிக்கை வாழ்வின் எதிர்பார்ப்பாக மாறுவதும் இங்கே நிகழ்கிறது.
அவஸ்தை என்பது நமக்கொரு புதிய அணுபவமல்ல. எப்போதும் நம்மைச் சுற்றிக் காணப்படும் நித்ய அனுபவம்தான். ஒருவிதத்தின் இல்லாவிடில் வேறொரு விதத்தில் நாமெல்லோரும் அனுபவிப்பதும் நாளை அனுபவிக்கப் போவதுமான மறுதலிப்பின் உலகம். சத்தியத்தின் வழியில் சஞ்சரிப்பவர்களுக்குக் காலம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சன்மானம்தான் அது. இருப்பவனுடன் எப்போதும் எல்லோரும் இருப்பார்கள். இல்லாதவனின் வாழ்க்கை எப்போதும் இல்லாமையிலேயே தொடரும். அதிகாரமும் புகழும் பணமும் நம்மை முதல் வரிசையில் ஒளியோடு நிறுத்தும்போது, சில கணங்கள் நிலைத்திருந்து இருளில் மறைந்து போகும் நீர்க்குமிழிகள்தான் அவை என்பதை நாம் உணர்வதேயில்லை. நாளை யாராலும் கவனிக்கப்படாதவனாக ஆக்கும், சமூகத்தின் மறுதலிப்பில் கனன்று எரியும் விதைகள் அந்த மின்னலில் ஒளிந்திருக்கிறதென்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள்?
கானக அழகை அதன் அனைத்து தீவிரத்தோடும் வெளிப்படுத்துகிறது பச்சை இருளன்என்ன மனோகரமான மொழி. ஆழப் பதியும் வர்ணணை. அவ்வளவு அழகான அனுபவ உலகம். என்ன சொல்வது என்பதல்ல, எப்படிச் சொல்வது என்பதுதான் கதையின் சௌந்தர்யம் என்று பவா இங்கே நம்மை அனுபவிக்க வைக்கிறார்.
ராஜாம்பாளை விவரிக்குமிடத்தில் கதை சொல்லலின் அழகு பாவனை எவ்வளவு ஆழத்தில் உருவாகி வருகிறது. இதய மணிகளிலிருந்து ராஜாம்பாள்கள் ஈசல்களைப் போல் உயிர் பெறுகின்றனர். வயல் வரப்பிலமர்ந்து நாமும் கனவு காண்கிறோம். கனவுலகப் பயணத்தின் சொர்க்க வழிகள் நமக்குள்ளேயும் ஒளியைப் பரப்புகின்றன. யதார்த்தத்தினுடையதும் கனவினுடையதுமான ஸ்வர லயம் எவ்வளவு அழகோடு பவாவின் கதையில் சங்கீதமாய் கசிகிறது. இன்னும் இன்னும் இப்படியான கதைகள் அவரிடமிருந்து வரட்டுமென்று நாம் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
சிதைவுஎன்ற கதை அதிபயங்கரச் சிதைவையே நமக்குத் தருகிறது. அப்பாவுக்கும் மகனுக்குமான வைராக்யமென்பது மனித குலத்தின் நெடிய கால அளவுக்குப் பழமையேறியது. உயிரியல்படி மகன் தாயின் இரண்டாம் கணவனே. தன் மனைவியின் இரண்டாம் கணவனை எந்த அப்பா சகித்துக் கொள்வார்? தன் மனைவியை இன்னொருவன் அனுபவிப்பதான மனநிலையையே மகனும் எதிர்கொள்கிறான். இரண்டு கணவர்களுக் கிடையிலான போராட்டம்தான் அப்பாவுக்கும் மகனுக்குமிடையே நடக்கிறது. அம்மா, மனைவி என்றெல்லாம் சமூக அமைப்பில் வேறுபடுத்திப் பார்க்க முடியுமெனினும் உயிரியலின் தூண்டுதல்களுக்கு அதெப்போதும் உதவிகரமாக இருந்ததேயில்லை என்பதாலேயே பருவமடைந்த ஆண்குழந்தைகளை அம்மாவுடனும், பெண் குழந்தைகளை அப்பாவுடனும் உறங்க நாம் சம்மதிப்பதேயில்லை. நிஜம் நாமனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பதன் பிரதிபலன்தான் இது. மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதை, தந்தையை விட தாயே துரிதப்படுத்துகிறாள். மகனை வெளியே அனுப்பிப் படிக்க வைப்பதிலும் திருமணம் செய்வதிலும் அவசரப் படுத்துவதில் முதலிடம் தந்தைக்கே. இதன் பின்னிலுள்ள மனோதத்துவத்தைத் தெரிந்து கொள்ளும் போதுதான் நாம் அதிர்வின் விளிம்பில் நிற்கிறோம்.
ஒரே நேரத்தில் உயிரியல் தூண்டல்களுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையில் அகப்பட்டு காலந்தள்ள  வேண்டிய நமக்கு மன அழுத்தங்கள் ஏற்படுவது இயல்புதான். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னைகளின் வேர்வரைத் தோண்டிச் சென்றால், அவர்களே கூட உணர முடியாமல், அவர்களுக்குள் உருவாகும் தூண்டுதல்களை நாம் அறிய முடிந்தால், எல்லோரிடத்தும் தயை மட்டுமே தோன்றும். சொல்லிலடங்கா இயலாமையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு போதும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று நாம் விரும்பும் நிந்திக்கத் தக்க எதிர்வினைகள் நம்மிடமிருந்து சந்தர்ப்பத்திற்கேற்ப உணர்ந்து மேலெழும்போது நாமே ஆச்சர்யத்தில் மூழ்கி விடுகிறோம். எத்தனை முறை அப்படியான எதிர் வினைகளின் வழியில் நாம் பச்சாதாபப் பட்டிருக்கிறோம்.
உறவுகளின் அசுவாரசியங்களைச் சர்ச்சைக்கு உள்ளாக்கும் போதெல்லாம் குரு நித்யா தன் சுயசரிதத்தில் முன்னுரையாகச் சொல்லியிருந்த வரிகள்தான் என் நினைவில் ஊறும்.
எனக்கு இப்போது எழுபத்துமூன்று வயது என் குருநாதர் நடராஜ குரு உயிரோடிப்பதாகக் கருதுவோம். என்னைவிட குருவிடம் நெருங்கிப் பழகும் ஒருவரை நான் கண்டால், எனக்கு அவர்மீது பொறாமையே தோன்றும். ஆனால் என் பொறமையை நான் புறந்தள்ள மாட்டேன். என் பொறாமை அவருக்கு இடைஞ்சல் உண்டாக்கும் விதம் எதிர்வினை வராமலிருக்க நான் முயல்வேன். முள்ளில்லாத செடியின் ரோஜாவாக நான் விரும்பவில்லை. விதையற்ற திராட்சையாகவும் விரும்பவில்லை.மனித மனதின் ஆழங்கள் தொட்ட ஒரு ஞானியின் வார்த்தைகள் இவை.
பவா இன்னும் எழுதுவார். அவரால் எழுதாமலிருக்க முடியாது. எழுத்து அவ்வளவு இயல்பாக அவருக்குள் நிறைந்திருக்கிறது. ஆனால் அவற்றை எழுதிவிடுவதற்கான நேரமும் சூழலும் எதனாலோ அவருக்கு வாய்ப்பதில்லை. அவருடைய சக்தி பலப்பல விஷயங்களில் சிதறிக் கிடக்கிறது. அதையெல்லாம் செய்து முடிக்க பலரும் இருக்கிறார்கள். எனில் காலத்தின் முன்னால் விட்டுச் செல்ல, உணர்வில் சுருண்டு கிடக்கும் கதைகளை வேறு யாராலும் எழுதிவிட இயலாது. இந்த உண்மையை பவா உணர்கிறாரோ இல்லையோ? ஒரு வேளை இது நம்முடைய விருப்பம் மட்டுமேயாக இருக்கலாம். அப்படியே ஆகட்டும் என்ற ப்ரார்த்தனையோடு ப்ரியமுடன்...    2 comments:

  1. ஷௌக்கத்துக்கும் ஜெயஸ்ரீக்கும் நன்றி

    அடியார்கும் அடியேன்.......

    ReplyDelete
  2. மனதின் ஆழத்திலிருந்து எழுதப்பட்டுள்ள ஈரமிக்க மதிப்புரை. பவா இன்னும் அதிச்கமாக எழுத வேண்டும் என்பதே என் ஆசையும் எதிர்பார்ப்பும். ஷௌக்கத்துக்கு நன்றி. பவாவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete