Friday, January 27, 2012

ஒளியின் குழந்தை மிஷ்கின்


ஈரோடுக்கு ஒரு இலக்கிய நிகழ்வுக்கு சென்றிருந்தோம். வழக்கத்திற்கு விரோதமாக நானும் நண்பர் சங்கரும் அன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போனோம். அறிந்திராத ஒரு ஊரில் என்ன படம், என்ன தியேட்டர் என்ற விசாரிப்புகளுக்கெல்லாம் இடம் தராமல், இரண்டு மணி நேரத்தைக் கடத்தவேண்டும். அவ்வளவுதான். எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதுதானே! அதேதான் அன்று எங்கள் இருவருக்குமே நேர்ந்தது.

படம் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் நானும் சங்கரும் வேறொரு அனுபவ பயணத்தில் தனித்தனியே பிரிந்தோம். அருகருகே அமர்ந்திருந்த போதிலும்கூட, மனதளவில் எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய் அலைக்கழித்தது மிஷ்கினின்அஞ்சாதே’. என்னைவிடவும் சங்கர் அப்படத்தில் கரைந்திருந்தான். ஒவ்வொரு விநாடியும் அவன் முகம் பரவசத்தால் மிளிர்வதை என்னால் அத்தியேட்டரின் செயற்கை இருட்டிலும் கவனிக்க முடிந்தது.

படம் முடிந்து, பேச்சற்று, எங்கள் அறைக்குத் திரும்பினோம். இருவரிடமும் இருந்த சொற்களை அப்படம் உறிஞ்சியிருந்தது. மௌனமும், இயலாமையும், நிதர்சனமும், இன்னும் பெயர் தெரியாத ஏதேதோ எங்களை அமைதியாக்கி இருந்தது. அது மரண அமைதி என்பதை மட்டும் உடல்வழியே உணரமுடிந்தது.
எங்கிருந்து இவர்கள் இத்தனை அடர்த்தியோடு தமிழ் சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு அகல் மாதிரி என்னுள் எரிய ஆரம்பித்தது. நான், அந்த இயக்குநரின் முந்தைய படைப்பை தேட ஆரம்பித்தேன். புத்தகங்கள் கிடைப்பதுதான் தமிழ் சூழலில் கடினம். டி.வி.டி. கிடைப்பது சுலபம்தானே?

அடுத்த நாள் இரவு ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன். இவன் ரூம் போட்டு, கைத்தட்டி, தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லும் இயக்குநர் இல்லையென்றும், தகிக்கும் நெஞ்சோடு தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்திருக்கும் இவன் நெருப்பு, அணைக்கப்படுவதற்கு முன் ஒருமுறை சந்திக்க வேண்டுமென முடிவெடுத்தேன்.

எங்கள் முதல் சந்திப்பு மிஷ்கின் அலுவலகத்தில் ட்ராஸ்கி மருது சாரோடு நடந்தது. மருது சார் என்னை அலுவலகத்திற்கு வெளியே அழைத்து,

‘‘பவா, ஃபயர் இவன். ஒரு படம் பண்றோம். தமிழ் சினிமாவையே மெரட்ட போவுது பாருங்க’’ என்றார்.

எப்போதும் பெர்முடாஸ் போட்டு, டீ ஷர்ட்டோடு ரொம்ப மாடர்னான ஆள் மிஷ்கின். பேச்சு... பேச்சு... எப்போதும் பேச்சு. எனக்கு என்றுமே அலுப்புத்தட்டாத பேச்சு. லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’, என் நண்பர் ச.தேவதாஸால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னையில் வெளியீட்டு விழா நடத்தினோம். பிரபஞ்சன், மருது, மிஷ்கின் மூவரும் புனுவலின் வாழ்வு குறித்தும், சினிமா குறித்தும் மிக அந்தரங்கமாக பேசின ஒரு சிறு சந்திப்பு அது. அக்கூட்டத்தில் மிஷ்கின் மிக அற்புதமாக புனுவலின் தோளின் மீது ஏறி நின்று பேசினான். உண்மைக்கு வெகு அருகில் நின்றிருந்தான். அந்த பேச்சில் நான் கரைந்திருந்தேன்.

அந்த அரங்கிலிருந்து எல்லோரும் வெளியேறியபின், நானும் மிஷ்கினும் மட்டுமே மீந்திருந்தோம். அவ்வறையை வியாபித்திருந்த அப்பேச்சின் மணம், என்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தது. ‘போய்விடு, போய்விடு’ என்று ஏதோ ஒன்று என்னை நெட்டித் தள்ளியது. ஆனால், உள்மனம் அங்கேயே இருக்கவே விரும்பியது. எப்போதாவது நேர்கின்ற அபூர்வ மனநிலை இது. மிஷ்கினே அதைக் கரைத்து, என் கைப்பிடித்து தன் அலுவலகத்திற்கு அழைத்தார். ஒரு பெரிய அனுபவ அடைதலுக்கான அழைப்பு அது என்று எங்கள் யாருக்குமே தெரியாது.

பிரபஞ்சன், ஜி.குப்புசாமி, கடற்கரய், வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ச.தேவதாஸ் என்று நீண்ட அந்தக் குழுவில், மொத்தம் பதினாறு பேர் இருந்தோம். மதிய உணவுக்குப்பின் நாங்கள் எதிர்பாராத ஒரு கணத்தில் மிஷ்கின் தன் தனியறைக்கு அழைத்து, ‘நந்தலாலா’வை எங்களுக்குத் திரையிட்டார். படம் திரையிட்டவுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார். நான் அவர் படுக்கையில் படுத்திருந்தேன். என்னருகே பத்திரிகையாளரும் கவிஞருமான கடற்கரய். அந்த இருட்டில், நண்பர்களின் இருப்பிடங்களைத் துழாவினேன். எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ஆர்வமும், பரவசமும் இருந்தது. நாங்கள் அல்லது நான், அன்று அடைந்த ஒரு மனநிலையை இதற்குமுன் எப்போதும் ஒட்டுமொத்த என் ஜீவிதத்தால் நான் தொடாதது.


மிஷ்கினின் உதவியாளர்களும், அவர்களின் அலுவலகமும், அதன் அன்றாட உலகமும் விசித்திரங்களால் ஆனது. கிட்டத்தட்ட அதில் ஒவ்வொருவரும் எம்.இ., எம்.டெக் படித்தவர்கள். வெறும் தகவல்கள் நிரம்பிய மூளைகளை வைத்துக்கொண்டு, ஒரு வட்டம்கூட போட முடியாது என்பதை வெகுகாலத்திற்கு பின்னரே நாம் அறிகிறோம். அவர்கள் கொஞ்சம் முன்னமே அறிந்தவர்கள். அந்த அலுவலகத்திற்கு தடுப்பணையில்லை. அடுக்குகள் இல்லை. மனிதர்கள் எதன் அளவுகளிலும் பிரிக்கப்படவில்லை. அந்த வளாகத்தின் காற்றைப்போல அவர்கள் எல்லோருமே சமமானவர்கள். விவரிப்பது, விளையாடுவது, சமைப்பது, குடிப்பது, உண்பது என்று அதே மாதிரியான வாழ்வுதானெனினும், இது வேறு. சீட்டுக்கட்டுகள் அங்கு தாறுமாறாய் கலைந்து கிடக்கின்றன. அளவில்லாத கொண்டாட்டங்களினூடே தங்கள் கடந்த கால கசப்பை கரைக்கிறார்கள். அதிலும் இசைக் கருவிகளின் சத்தத்தில் தங்கள் உடலிலிருந்து பல அவமான செதில்கள் உதிர்வதை அந்த அவசரத்திலும் அவர்கள் கவனிக்கிறார்கள்.

ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கை எத்தனை துயரங்களால் மூடப்பட்டிருக்கிறது என்பதை மற்ற எவரையும் விட மிஷ்கினே நன்கறிந்தவர். அந்த உரிமையிலேயே, ஒரு உதவி இயக்குநருக்கு என்ன பெரிய வாழ்வு அனுபவம் கிடைத்துவிடப் போகிறது? அவன் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய கேன்வாஸ், அவனுக்கு முன்னால் வெறும் வெள்ளையாய் வானம் அளவிற்கு விரிந்திருக்கிறது. தொடர்ந்த வாசிப்பில் மட்டுமே ஒருவன் இதை நிரப்ப முடியும். அதன் ஒவ்வொரு அங்குல வெளியையும் அவன் தன் அனுபவ ரத்தத்தால் ஒத்தியெடுக்க வேண்டியுள்ளது என்பதை சற்றே உரிமையான வார்த்தைகளில் சொன்னபோது, நம் சகோதரர்கள் துடித்தெழுந்தார்கள்.

‘‘இதயத்திலிருந்தல்ல வெறும் உதட்டிலிருந்து எழும் முத்தங்களினால், நான் நாற்பது வருட தாம்பத்யத்தை நிறைவு செய்துவிட முடியும்’’ என்று ஜி.நாகராஜன் சொல்வது மாதிரி, ஒரு அசல் கலைஞனுக்கு வார்த்தைகளின் விபரீதங்கள் நிச்சயமாய் தெரியாது. அவன் எப்போதும் இயல்பு நிலையற்றவன். பின்விளைவுகளின் கோரப்பற்களை அறியாதவன். ஆனால், தன் சக மனிதனை அள்ளி அணைத்து, தன் மடியில் கிடத்தி, தலைகோதி ஆறுதல்படுத்தும் தாயின் பரிவானவன் அவன்.

இதை அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிடாதபடி நம் வழக்கங்கள் மறிக்கின்றன. ஒரு தீபாவளி நாள் அது. தன் உதவியாளரும், முன்னாள் பத்திரிகையாளருமான வடிவேல், life is beautiful படம் பார்த்த கதை சொல்கிறார். அந்த அறை, அவர்கள் இருவரின் ஆத்மார்த்த உரையாடலால் நிறைகிறது.

‘‘இந்தப் படம் எங்க பாத்த?’’

‘‘திருவண்ணாமலையில சார்’’

‘‘எப்போ’’

‘‘பத்து வருசம் இருக்கும் சார்.’’

‘‘அப்போ எப்படி இந்த படம் பாத்த’’

‘‘சார், அங்க தமுஎசன்னு ஒரு இலக்கிய அமைப்புல பவா, கருணான்னு ரெண்டு பேர், எப்பவும் இந்த மாதிரி படங்களா தெருவுல வச்சி போடு
வாங்க.’’

‘‘தெருவுலயா?’’

‘‘ஆமாம் சார்’’

‘‘யாரு நம்ம பவாவா?’’

‘‘ஆமாம் சார்.’’

கொஞ்சநேர மௌனத்திற்குப் பின்,

‘‘வடிவேலு, என்கூட வாடா’’

‘‘எங்க?’’

‘‘வா சொல்றேன்’’

அன்றிரவு வடிவேல் ஒரு காரில் வந்து எங்கள் வீட்டில் இறங்கினார். கையில் தூக்க முடியாமல் ஒரு
பெட்டி.

‘‘என்ன வடிவேல் இது?’’

‘‘சார் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னார்.’’

நான் ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அப்பெட்டியைப் பிரிக்கிறேன். பூக்களும், சாக்லேட்டுகளும் இறைந்து கிடந்த அப்பெட்டியில், ஒரு சீல் பிரிக்காத எல்.சி.டி. பிளேயர். விலை பார்த்தேன். அறுபதாயிரத்திற்கும் சற்று அதிகம். கூடவே நூறு உலகத் திரைப்படங்களின் ஒரிஜினல் டி.வி.டி.க்கள்.

‘‘என்ன வடிவேல் இது?’’


‘‘நான் சொல்றேன் பவா’’ மிஷ்கின் தொலைபேசியில் வந்தார்.

‘‘ஒவ்வொரு முறையும் ஒரு எல்.சி.டி. வேண்டி நீங்க படற கஷ்டத்தை, அவமானத்தை எனக்குத் தெரியும். நான் உலகப்படம் பாக்க அலைஞ்சப்ப, எனக்கு எவனும் இதையெல்லாம் தெருவுல போட்டுக் காண்பிக்கல. பிலிம் கிளப்ல, பணம் கட்டி பாக்க காசில்லாம தவிச்சிருக்கேன். என்னை மாதிரி உங்க ஊர்ல ஒருத்தன் ஒரு நல்ல படம் பாக்க அலையக் கூடாது பவா’’

நாங்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் காண்பிக்கும் உலகத் திரைப்படக் காட்சியின் உபயம், மிஷ்கின் என்ற அந்த எளிய மனிதனின் பரிசுதான்.

நான், ஷைலஜா, மிஷ்கின், கூட அவரின் உதவி இயக்குநர்கள் நாலைந்துபேர் என மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோது அவர் அலுவலக அறை தட்டப்பட்டது.

‘‘டேய் புவனேஷ், கதவைத்திற. யாரோ அசிஸ்டெண்ட் டைரக்டர்’’ இது மிஷ்கின்.
நான் பாதி சிரிப்பினூடே, ‘‘எத வச்
சி மிஷ்கின் அசிஸ்டெண்ட் டைரக்டர்ன்னு சொல்றீங்க?’’

கதவைத் திறந்து கசங்கிய இரு இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள்.

‘‘சார், நாங்க ரெண்டு பேருமே அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்’’

மிஷ்கின் என்னைப் பார்க்கிறார்.

‘‘ஒண்ணுமில்லை பவா. இருபது வருட அனுபவம். கதவை எப்படி தட்டணும், ஷூ சத்தத்தை எப்படி குறைக்கணும்னுகூட நம்மை கான்சியஸ் ஆக்கிடும். அதுதான் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் லைஃப். நான் அனுபவிச்சிருக்கேன். தோ, என்கூடவே இருக்கானே ஜோயல். அவன்தான் என் தாய், என் தகப்பன், என் நண்பன் எல்லாமும். மத்தியானத்துல, தான் பட்டினி கிடந்து எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்டிருக்கான். இன்னும் இவன் கணக்கையே அடைக்க முடியல’’

‘‘போதும் மிஷ்கின்’’

‘‘இல்ல பவா. இந்த ஜென்மத்துக்கும் போதுமான துயரத்தை நான் வாசிப்பின் வழியா மட்டும்தான் கடந்திருக்கேன். அன்னாகரீனாவும் குற்றமும் தண்டனையும் படிக்க மட்டுமே லேண்ட் மார்க்ல சேல்ஸ்மேன் வேலைக்கு சேர்ந்தேன். சினிமாவோட மொழி எனக்குத் தெரியும் பவா. அதை வச்சிக்கிட்டு எத்தனை அடைப்பு, எத்தனை தடங்கல், எத்தனை தடுப்பு. எல்லாத்தையும் தாண்டறதுக்குள்ள சேமிச்சு வச்ச எல்லாம் கரைஞ்சிடுச்சி பவா. இப்போ புதுசா...’’ வார்த்தைகளைத் தாண்டி சில சமயம் அழுகை முந்திக்கொள்ளும்.

கடற்கரையை ஒட்டிய ஒரு அழகான புல்வெளியில் இந்த வருடம் மிஷ்கினின் பிறந்த நாள் கொண்டாட்டம். தன் சக ஹிருதயர்களை மட்டும் அவ்விருந்துக்கு அழைத்திருந்தார். நானும், பிரபஞ்சனும், மருது சாரும் கொஞ்சம் முன்னாடியே போயிருந்தோம். நேரம் செல்ல செல்ல அந்த இருட்டை ஊடுருவி நட்சத்திரங்கள் வந்தன. இரவு 12 மணிக்கு விளக்குகள் அணைத்து, பூக்கள் கொட்ட ஒரு ராட்சஸ அளவிற்கான கேக் முன்னால் அப்போதுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட நிற்கும் ஒரு குழந்தையின் குதூகலம் முகத்தில் ததும்ப மிஷ்கின் நின்றிருந்தார். நடிகர் ஜீவாவில் ஆரம்பித்து, நரேன்வரை அங்கு குழுமியிருந்தோம்.


கேக் வெட்டப்பட்டது. அதன் முதல் துண்டு நான் எதிர்பார்த்தது போலவே தன் ஆத்மார்த்த நண்பன் ஜோயலுக்கு ஊட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாய் அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஸ்பரிசித்து நெற்றியில் முத்தமிட்டு, கேக் ஊட்டி... நான் வெளிச்சமற்ற ஒரு மரத்தடியில் நின்றிருந்தேன். இன்றைய திரையில் மின்னும் ஒரு உச்ச நட்சத்திரத்தில் ஆரம்பித்து, அவன் அலுவலகத்தைப் பெருக்கி சுத்தபடுத்தும் அந்த கடைகோடி பையன்வரை அந்த ஸ்பரிசத்தையும், முத்தத்தையும் பெற்றார்கள். எந்தவித ஜாதி, மத அடையாளமுமற்ற என் நண்பன் மிஷ்கினிடம் நானும் ஒரு முத்தம் பெற்றேன். பதிலுக்கு பரவசமாகி அவன் நெற்றியில் ஆறேழு முத்தமிட்டேன்.

என் காலத்திய ஒரு அசல் கலைஞனுக்கு என்னாலான எளிய பரிசு அது மட்டுமே.


10 comments:

 1. அற்புதமான எழுத்து பவா. மிஷ்கினின் எளிமை அந்த ஒரு அற்புதமான இரவு விருந்தில் தங்கள் வயல் வீட்டில் கண்டபோது ஆச்சர்யமடைந்தேன், அவரிடம் பேச ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருந்தீர்கள் எனக்கு, ஆனால் அவரை அத்தனை அருகில் பார்த்த எனக்கு பேசத்தோன்றவில்லை. பார்க்கவும் கேட்கவும் மட்டுமே தோன்றியது.

  ReplyDelete
 2. மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு, நான் மிஷ்கினை வெகுவாக ரசிப்பவன், சித்திரம் பேசுதடி,அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என அத்தனை படங்களையும் எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான சஞ்சலமும், சந்தோஷமும், ஆச்சர்யமும் நம்மை ஆக்கிரமிக்கும்,கால்களின் வழியே முகத்தின் தவிப்பை வெளிப்படுத்தும் அவரின் அற்புத வழி இதுவரை யாருமே செய்யாதது. நன்றி , ஒரு படைப்பாளியைத்தாண்டி ஒரு உத்தம மனிதனை அறிந்து கொள்ள மிகவும் உதவிய பகிர்வு.

  ReplyDelete
 4. மிக்க நன்றி , எனக்கு தேவையான நேரத்தில் கிடைத்த அரிய விஷயம்

  ReplyDelete
 5. மிஷ்கினோட எந்த படத்தையும் மிஸ் பண்ணியதில்லை.அவரோட ஒவ்வொரு படத்தை நான் பார்த்ததுக்கு பின்னால ஒரு நிகழ்வு இருக்கும்.ஒரு friend சொன்னாங்க “நந்தலாலா” ரொம்ப நல்லாயிருக்கு மிஷ்கினோடது sunday க்குள்ள பார்த்திருங்க நல்ல படம் எடுத்திருவாங்கன்னு.sunday தான் time கிடைச்சது ticket கிடைக்கலை அடுத்த நாள் எடுத்திருவாங்கன்னு secondshow பார்த்திட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ளே ஒரே thrilling தான். ஆனா theater ல இருந்த ஒவ்வொருத்தரும் ஏதோ தவம் செய்றமாதிரியும் தியானத்தில கட்டுண்ட மாதிரியும் அவ்வளவு involve ஆகிப்பார்த்திட்டு இருந்தாங்க.(secondshow ம் full லா இருந்தது)என்னோட இன்னொரு friend சொன்னாங்க அது ஒரு japaneese movie ய தழுவி எடுக்கப்பட்டதுன்னு. என்னவாயிருந்தா என்ன நல்ல படத்தை தந்ததுக்காக thanks to மிஷ்கின்...

  ReplyDelete
 6. திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போதும் மிஷ்கினைக் கடந்து போய்விட முடிவதில்லை, அதுவும் நந்தலாலா பார்த்தபிறகு..

  நன்றி பவா!

  ReplyDelete
 7. திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போதும் மிஷ்கினைக் கடந்து போய்விட முடிவதில்லை, அதுவும் நந்தலாலா பார்த்தபிறகு..

  நன்றி பவா!

  ReplyDelete
 8. மிக அற்புதமான பதிவு அண்ணா... நான் அவ்வளவாக படம் பார்ப்பதில்லையென்றாலும் அண்ணன் மிஷ்கின் படம் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். உங்களைப்போலவே என்னை மிகவும் பாதித்தது அல்லது கவர்ந்தது ’அஞ்சாதே’. அதன் பிறகே ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன். ‘நந்தலாலா’ பல முறை பார்த்துவிட்டேன்.

  நல்ல மனிதர்களின் நட்பு எப்பொழுதும் கவிதைபோலவே இருக்கும்...

  -பூரணி எமிலி

  ReplyDelete
 9. மிஷ்கினின் படைப்பில் மனிதனின் உணர்வுகள் தான் பேசப்படும் உணர்ச்சிகள் அல்ல.

  ReplyDelete