Tuesday, May 3, 2016

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் எனும் சிறு நகரத்தில்தான் இப்பெரும் சோகம் நிகழ்ந்தது.

நினோமேத்யுஅனுஷாந்தி இருவரும் கணவன் மனைவியோ, காதலர்களோ அல்ல. இருவருமே வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள்.

  நினோமேத்யு அனுஷாந்திக்கிடைய ரகசிய உறவு ஏற்படுகிறது. அதற்கு அனுஷாந்தியின் கணவனும், மகளும் தடையாக இருப்பதாகக் கருதி அவர்கள் இருவரையும் நினோமேத்யு கொலை செய்கிறான். வலுவற்ற சாட்சியங்களால் அவன் விடுவிக்கப்படலாம் என்ற தருணத்தில் இவ்வழக்கின் 43 - வது சாட்சியும்  ஒரு கல்லூரிப் பேராசிரிரும் நினோ மேத்யுவின் அப்பாவுமான அம்மகத்தான மனிதனால் நினோ மேத்யுவிற்கு உரிய தண்டனை கிடைக்கிறது

இனி பிரபல திரைக் கலைஞர் மம்முட்டி எழுதுகிறார்.


சொல்லிடங்காத துயரம்


மலையாள மூலம் : மம்முட்டி
தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ




ஆற்றிங்ல் கொலை வழக்கு எல்லோரையும் போல் என்னையும் குலைத்தது. அதன் தீர்ப்பு வந்தவுடன், மறைந்து போயிருந்த அந்த வழக்கைப் பற்றிய சில நினைவுகள் என் மனதில் மேலெழுந்து வந்தது. ஒருவேளை என்னுள்ளிருக்கும் பழைய வக்கீல் தொழில் மீதான ஆழ்மன விருப்பமே இத்தகையத் தீர்ப்புகளை நுட்பமாய் கவனிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

ஆனால், இக்கொலை என் மனதை மிகவும் பாதித்த ஒன்று. இந்த வழக்கில் ஒருவனுக்கு கிடைத்த தூக்கு தண்டனையோ, ஒரு அம்மாவே தன் மகளைக் கொல்ல உடந்தையாக இருந்ததாலோ மட்டுமல்ல, இவ்வழக்கின் 43 ஆம் சாட்சியான இதுவரை யாருமே பார்த்தேயிராத அந்தத் தகப்பனின் முகமே எல்லாவற்றையும் மீறி என்னை வேதனைக்குள்ளாக்குகிறது.

மகன் வழித்தவறிப் போகிறான் என்பதை அறிந்த அந்த அப்பா தன் மகனுக்கு எழுதிய கடிதம் தான் இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரமாய் இருந்தது. அப்பாவின் தொலைபேசியைப் பயன்படுத்தியே, அக்கொலை திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது வழக்கின் இன்னுமொரு முக்கிய ஆதாரம். இந்த இரண்டு ஆதாரங்களுமே இவ்வழக்கின் திருப்புமுனையாக மாறியது. அத்தகப்பன் நீதிமன்றத்தின் முன் தன்னை உண்மையாய் ஒப்புக்கொடுத்ததால் மட்டுமே இவ்வழக்கின் தீர்ப்பு முற்றிலும் மாறியது.

தன் சொந்த மகனுக்குத் தூக்குக் கயிறு உறுதி என்பதை அறிந்தபிறகும் நீதியின் பக்கம் நின்ற அத்தகப்பனின் முன்னால் இந்த உலகத்தின் அனைத்து தகப்பன்களும் தலைகுனிந்து நிற்க வேண்டியுள்ளது. தன் பிள்ளைகள் மீதான ரத்த உறவு கடைசி கணத்திலேனும் எல்லோருடைய மனதையும் அசைத்துப் பார்க்கும். ஆனால் தன் மகனால் கொல்லப்பட்டு, விழுந்து துடித்த ஒரு சிறுமியின் முகத்தை, தன் சொந்த மகனின் முகத்தைவிட தீத பிரியத்தோடு  அத்தந்தை பார்த்திருக்கிறார்.

நான் சொன்ன எதையும் என் மகன் கடைசி வரை பொருட்படுத்தவேயில்லையெனஅவர் நீதிமன்றத்தில் சொல்கிறார். தன் சொல் புறக்கணிக்கப்பட்ட போது, இதெல்லாம் மானுட அறத்திற்கு எதிரானவைகள் என கெஞ்சிக்கேட்டு அவர் மகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவால் இதற்கு மேல் வேறென்ன செய்துவிட முடியும்? அக்கடிதத்தின் சொற்களை ஆழ்ந்து வாசித்திருந்தால், நினோமேத்யூ என்ற அந்த இளைஞன் இக்கொலையை செய்திருக்கவே முடியாது. ஒரு தாய் சமூகத்தின் முன் என்றென்றும் தீராக் களங்கமாக நின்றிருக்க மாட்டாள்.

பெற்றோரின் அனுபவச் செறிவை உதாசீப்படுத்தும் ஒவ்வொரு குழந்தையும் வழி தவறிச் செல்லும்போது இத்தகப்பனை நினைவு கொள்ள வேண்டும். எப்போதும் பெற்றோர் உங்கள் பாதைகளின் தடைகளாக வருவதில்லை. நீங்கள் எவ்வளவு வளர்ந்துவிட்டாலும் அவர்கள்  சொல் கேட்டு நீங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அந்த நம்பிக்கைதான் அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருக்கிறது. மனம் போன போக்கில் போகும்போது தவறான உறவுகள் உருவாது இயல்புதான். ஆனால் அதைத் திருத்துவதற்கான வாய்ப்புகள் வரும்போது அதை ஒதுக்கித் தள்ளுவதுதான் இதைவிடப் பெரிய தவறாகிறது.

அத்தகப்பன் நிம்மதியாக உறங்கி எவ்வளவு நாட்களாகி இருக்கும்? மகன் பக்கம் நிற்பதா? நீதியின் பக்கம் நிற்பதா? இறந்துபோன பரிதாபத்துக்குரிய அந்த கணவனுடனும், குழந்தையுடனும் நிற்பதா? என்றெல்லாம் நினைத்து நினைத்து மனம் வெம்பி அவரின் வாழ் நாட்களை அவர் நகர்த்தியிருக்க வேண்டும். இனி அதுவே மீதமிருக்கும் அவர் வாழ்வில் நீளும்.

அம்முதிய மனதின் உருகும் துயரத்தை ஒவ்வொரு குழந்தையும் உணர வேண்டும். ஒவ்வொரு பெற்றவர்களின் மனதும் தன் பிள்ளைகளுக்கான அதீத அக்கறையோடே இருக்கிறதுஉங்களின் ஒரு பொய்யினால் அவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும். தன்னுடன் பேசாமலிருந்த மகனை ஒரு கடிதத்தின் மூலம் திரும்பி வரவழைக்க முயன்ற தந்தையின் மனதுதான் ஒவ்வொரு பெற்றோரின் மனதென்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் நீங்கள் உங்கள் பெற்றோரின் தொடர்ச்சியே. அவர்கள் உங்கள் வாழ்வின் இருளில் விளக்கு வெளிச்சத்துடன் காத்திருப்பவர்கள்.

அத்தந்தை ஏற்றி வைத்த விளக்கின் ஒளியைக் காண முடியாத மகனுக்காக இப்போது கும்மிருட்டில் கொலைக்கயிறுதான் காத்திருக்கிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்து அயல்நாடுகளில் வேலை செய்வோராக, விடுதியில் தங்கிப் படிக்கவென  இருக்கும் நீங்கள் எதைச் செய்தாலும் அவர்களுக்குத் தெரியாது என்பது உண்மையே. ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் சரியானதை மட்டுமே செய்து கொண்டிருப்பீர்கள் என்றெண்ணி நம்பிக்கையோடு தூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்  அவர்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையேனும்   தொலைபேசியில் அழைக்க வேண்டும். அவர்களை உங்கள் நிகழ்கால வாழ்வோடு இணைத்துக் கொள்வது உங்களுக்கான வாழ்வின் அரண்.

வாய்ப்பிருந்தும் தன் மகனைக் கைவிட்ட தந்தையல்ல அவர். அறத்தோடு வாழும் ஒரு தகப்பனின் வெந்துருகும் நெஞ்சம் எப்படிப்பட்டதென்று படம் பிடித்துக் காட்டிய மனிதர். நினோமேத்யூ இனியும் சட்டத்தின் துணைகொண்டு நீண்டு பயணிக்கலாம். ஆனால் அத்தகப்பன் நீதிமன்றத்தில் கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கல்லில் செதுக்கியது போலிருக்கும்.



நான் சொன்ன வார்த்தைகள் எதையும் என் மகன் கடைசிவரை கேட்கவேயில்லை’’