Thursday, July 24, 2025

பாவா

சிறுகதை

 

ஏதோ சத்தம் கேட்டு, கழிப்பறை வாசலிலிருந்த வாஷ்பேஷனுக்கு கீழே சரிந்திருந்த அலமேலுவை நான்தான் முதலில் திரும்பிப் பார்த்தேன். வலது கையை இடுப்பில் முட்டுக்கொடுத்து எதையே வென்று விட்டத் தோரணையில் ட்டி.ட்டி.ஆர். கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.

மெல்ல நிமிர்ந்து, அவனை ஏறெடுத்த போது, அதற்காகவே அவனெதிரில் காத்திருந்தது போல தன் ஹூக்காலால் அவள் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். சத்தம் வெளிவராமல் தரையில் ஒட்டிக்கொண்டாள். எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் போடக் கூடாதென்று இத்தனை வருட ரயில் வாழ்க்கை அவளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது.

“எவன் மிலிட்டரியிலிருந்து காய்ஞ்சி போய் வருவான்னு காத்திக்கிட்ருக்கியா, தேவ்டியா” என சுந்தர தெலுங்கினில் குரலுயர்த்தி தன் தாய் மொழியை மலினப்படுத்தினான் கிருஷ்ணா.

எனக்கு கிருஷ்ணாவையும், அலமேலுவையும் இரண்டு வருடங்களாகவேத் தெரியும்.

“இந்த ரயில் இன்னா உங்க அப்பன் ஊட்டுதாடா அது எங்களதும்தான். அது உனக்கு சம்பளம் தருது, எங்களை சம்பாதிக்க வுடுது அவ்வளவு தான்” என ட்டி. ட்டி. ஆரிடம் குரலுயரத்திய அப்பெண்ணை அத்தனை நெருக்கத்தில் பார்த்தேன். அடிவாங்கி சரிந்திருந்த போதும் சந்தேகமின்றி அவள் அழகிதான்.

பேரழகிகளுக்கு எப்போதாவது இப்படி அலமேலு என பொருந்தாத பெயரும் வைக்கப்பட்டுவிடுகிறது போலும்!.

பேன்ட்ரிக் காரில் என்னோடு வேலைபார்க்கும் பையன்கள் ஒவ்வொருவரும் அவளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்.

எனக்கு மட்டுந்தான் அவள் அலமேலு. இல்லை அல்மேல். உச்சரிக்கும் போதே உதட்டோரம் எப்போதும் எனக்குள் ஒரு புன்னகைத் தவழும்.

என்னைப் பொறுத்தவரை அது உள்ளுக்குள் உச்சரித்துக் கொள்ள அழகிய பெயர்தான். அதை விட்டு, விட்டு கம்மம் கம்மர்கெட், ரேனிகுண்டா தக்காளி… என்பதெல்லாம். அவள் அழகுக்குத் தரப்படும் தற்காலிங்க அவமதிப்புகள்.

ஓடிப்போய் அவளைத் தூக்கி விடவோ, ட்டி, ட்டி. ஆரை தடுக்கவோ முடியாத கையாலாகதவனாய் இருக்கை நுனியில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கவே முடிந்தது.

ஒருமுறை அவள் திரும்பி என்னையும் ஏறெடுத்துப் பார்த்த மாதிரியிருந்தது. அப்பார்வையை இனி வாழ்வில் வேறெப்போதும் நான் சந்திக்கவேக் கூடாது.

மத்தியான வெய்யிலை எதிர்கொண்டு ராமகுண்டத்திலிருந்து வாரங்கல்லுக்கு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது வண்டி.

கிருஷ்ணா தெலுங்கில் அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். அத்தனையும் கெட்ட வார்த்தைகள்.

அவன் மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள். இன்று ட்யூட்டி முடிந்து போகும்போது அலமேலுவை குவாட்டர்ஸ்க்குக் கூட்டிப் போய்விட வேண்டும் என்ற அவனின் அதிகாரக் குரல், ஆரம்பத்திலேயே அவளால் நசுக்கப்பட்டு விட்டதென்ற வெறி அவன் உள்ளடங்கிய குரலிலும் தெரித்தது.

“ஒரு முழுராத்திரியும் அப்படி உங்கூடல்லாம் வர முடியாது சார் இங்கேயே டாய்லட்ரூம் இருக்கு. அதுவும் மத்தவங்க என்ன கொடுக்கறாங்களோ அதேதான் உனக்கும். உனக்காகவெல்லாம் எதுவும் குறைச்சுக்க முடியாது” என்ற வார்த்தைகளை அவள் மெதுவாக பிரயோகித்த போதும், அவனால் அந்த அனலைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதனாலதான் இந்த அடியும், உதையும்.

அவன் மனதில் ஒரு நாளைக்கு பதினெட்டு முறை, இப்படியும், அப்படியும் ஓடும் இந்த ரயில்களுக்கு அவன் தான் எஜமானன் என்ற எண்ணமும்,

நான்தான் எஜமானி என்ற நினைப்பு அவளுக்குமிருந்தது. இரண்டு அகங்காரங்களுக்கு எதிராக சற்றுமுன் மூண்ட இச்சண்டை அவளைத் தரையிலும், அவனை இடுப்பில் கைவைத்து எதிரிலும் நிற்க வைத்து விட்டது.

இப்போது கிருஷ்ணா அவளிடமிருந்து கொஞ்சம் நகர்ந்து மூடிய கதவின் எதிரில் போய் நின்று கொண்டான். இதுவரை எதுவுமே நடக்காதது மாதிரி.

எனக்கேத் தெரியும் இன்னும் பத்தே நிமிடத்தில் வாரங்கல் ஸ்டேஷன் வந்துவிடும். அவன் அங்கு இறங்கி, இயலாமையின் விரக்தியில், நிராகரித்தலின் வலியில், ஸ்டேஷனுக்கு பின்புறம் வியாபித்திருக்கும் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து, ஒரு ஆப் அடித்துவிட்டு தள்ளாடி, தள்ளாடி வீடடைவான்’. யாருமற்ற அவ்வீடு அவனை உள்ளிழுத்துக் கொள்ளும்.

இன்று ஒரு பாலியல் தொழிலாளியின் நிராகரிப்பு, அந்த மத்திய சர்க்கார் ஊழியனின் கறுப்பு கோட் போட்ட அகங்காரத்தின் மீது காறி துப்பியிருந்தது, அதுக்கூட தெரியாமல் ஏதோ வெற்றியடைந்த பெருமிதத்தோடு மூடியிருந்த கம்ப்பார்ட்மெண்ட் கதவின் முன் ஸ்டேஷனை எதிர்பார்த்து நின்றிருந்தான் கிருஷ்ணா.

அலமேல் பலமுறை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனுக்கு முதுகுப்புறம் கண்கள் இல்லாமல் இருந்தது எத்தனை ஆசுவாசம் அவளுக்கு! தனக்குள் எதையோ தேடி உறுதி செய்தாள்.

மெல்ல, மெல்ல வேகம் குறைந்து வாரங்கல் ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடையில் வண்டி நிற்கும் முன் கிருஷ்ணா கதவைத் திறந்து இறங்குவதற்குள் அவள்  முந்திக் கொண்டாள்.

இயலாமையின் மொத்த ஆத்திரத்தையும், இயன்றதின் மொத்த பலத்தையும் தன் கால்களுக்கு இறக்கி, எழுந்து, நிதானித்து பின்புறத்திலிருந்து எட்டி அவனை உதைத்தாள்.

எதிர்பாராத இத்தாக்குதலில் நிலை குலைந்து தலைக்குப்புற பிளாட்பார தரையில் கிடந்தான் கிருஷ்ணா. தவறி விழுந்துவிட்டாடென நினைத்தே பல ரயில்வே ஊழியர்களும் குழுமினார்கள். ஆவேசம் இன்னும் தீர்ந்துப்போகாதவளாக அலமேலு அவன் கையிலிருந்த  ரெசிப்டு புக்கை பிடுங்கி தன் இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

“அய்யோ என் புக், புக்” என வலியையும் மீறி பிதற்றியதை அவள் உள்ளூர ரசித்தாள். தன் கண்களை ஏறெடுத்து மூன்று திசைகளையும் கவனித்தாள். ரயில்வே  போலீஸ் உட்பட பலரும் அவர்களை நோக்கி வருவது உள்ளூர ஓர் அச்சத்தை அவளுக்குத் தந்தது.

இடுப்பிலிருந்த அந்த ரெசிப்டுப் புக்கை எடுத்து அவன் முகத்தின் மீது வீசியெறிந்து தெலுங்கிலேயே மிகக் கேவலமான ஒரு கெட்டவார்த்தையை அதன்மேல் வீசினாள். அது அவன்மீதும் தெரித்தது

“பொழைச்சிப் போ நாயே”

  என மெல்ல நகரும் ரயிலில் ஏதோ, எதிர்பட்ட ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டாள். முகத்திலும், நெஞ்சிலும் அடிப்பட்ட இடங்களிலெல்லாம் எரிந்தது. இது அவள் பயணப்படும் ஊர் இல்லை. வாரங்கல்லோடு முடியும் அவள் சாம்ராஜ்யம் இன்று எதுவரை நீள்கிறதோ நீளட்டும்.




வலியா? எரிச்சலா என உடலால் அனுமானிக்க முடியவில்லை. அவனை இலக்குத் தவறாமல் உதைத்து பிளாட்பாரத்தில் தள்ளியதும். ரயில்வே டைரிக்கு அவன் தன்னிடம் மன்றாடியதையும் நினைக்கும்போது எதிரிலிருந்து கடந்த குளிர் காற்று அவள் முகத்தில் மோதி. மனநிலையை சற்று இதமாக்கியது.

ஆனால் இதற்குப்பிறகு நடக்கப்போகும் கொடூரங்கள் உள்ளுக்குள் அவளை நிலைகுலைய வைத்தது.  கிட்டதட்ட ரயில்வாழ்க்கை இன்றோடு முடிந்தது போல இருந்தது. பிறந்ததிலிருந்து ரயில் சத்தத்தை கேட்டே, தூங்கியது, விழித்தது, படுத்தது, வாழ்ந்தது எல்லாமும். இனி எந்த ஜெயிலோ, அல்லது கண்கானாத ஊரின் ஒதுக்குப்புறக் குடிசையோ? மனம் சுழன்றடித்தது. கண்களில் முன்னுக்கும், பின்னுக்குமாய் நீர் ஜாலம் காட்டி இறங்க மறுத்தது.  

என் அசைவை அனுமானித்து ஜன்னல் பக்கமிருந்த தன் பார்வையை என் பக்கம் திருப்பினாள் அலமேலு.

‘பாவா’

எனக்கு மட்டுமே கேட்கும் உள்ளடங்கிய குரலை என் உடலால் உள்வாங்கிக் கொண்டேன்.

பலமுறை பெட்டிகளை இணைக்கும் அச்சிறு இடத்தில் இக்குரலை பலவிதமான ஏற்ற இறக்கங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

சத்தமாக, மென்மையாக, கொஞ்சலாக, காதலாக, காமத்தோடு, முனகலோடு இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம். இப்போது கேட்டது இதற்கு முன் வேறெப்போதும் கேட்டிராதது.

இது ஆதூரம் வேண்டியக்குரல்.

“என்னை உன் தோள்களில் சாய்ந்துகொள் பாவா”

என்பது மாதிரியான ஒரு குரலை அலமேலுவிடம் இப்போதுதான் கேட்கிறேன். என் உடல் சில்லிடுகிறது.

நான் முதல் முதலாக அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். என் மொத்த ஆதுரத்தையும், பிரியத்தையும் அவள் இரத்த நாளங்களுக்கு கடத்திவிட முடியுமா என முயற்சித்தேன்.

அவள் என்னைப் பின்தொடர்ந்தாள். இத்தருணம் பேச்சற்றது. இருவருக்குமே சொற்கள் தேவையில்லாதது. எங்கள் மொழிகளில் நாங்கள் இதுவரை கற்றறிந்த எல்லா சொற்களும் இதோ இந்த ரயில் சடசடக்கும் சப்தத்திற்கு மாறும் இந்த கிருஷ்ணா நதியில் விழுந்து விட்டது.

எதுவுமற்றிருந்தோம்.

கைப்புதைப்பிற்கும் இந்த ஆதூரத்திற்கும் எதற்கு மொழி?

பேன்ட்ரிகார் பெட்டியில் நுழைந்தபோது எங்களை எறெடுத்த அந்த சில கண்களுக்குள் இருந்த உற்சாகமும், சந்தேகமும் உதட்டோர புன்னகையும் என்னை கவனிக்க வைத்தது.

நான் அலமேலுவை மேல்தட்டில் படுக்க வைத்தேன். குழந்தை மாதிரி தன்னை சுருட்டிக் கொண்டாள். கீழேக் கிடந்த நாங்கள் மளிகைப் பொருட்கள் வாங்கும் அட்டைப்பெட்டிகளை கிழித்தெடுத்து அவளை மறைத்தேன். கிட்டத்தட்ட அவள் மறைந்துவிட்டாளென எனக்கு நானே திருப்திப் பட்டுக்கொண்டேன். இதற்கெல்லாம் நான் மட்டுமே திருப்திபட்டுக் கொள்ளமுடியும்.

உடனிருந்த பையன்களை சில சொற்களால் எச்சரித்தேன். என் கையால் என் வாயையே மூடி அவர்களை என்னை கவனிக்க வைத்தேன் நிலமை அவர்களுக்குப் புரிந்து எச்சரிக்கையடைந்தார்கள். இனி அவர்கள் அவளை பார்த்துக் கொள்வார்கள்.

எதுவுமே நடக்காதது மாதிரி பயணிகள் பெட்டியை நோக்கி நடந்தேன்.

என் வழக்கமான ரயில் பயணம் இல்லை இன்று. எல்லோரையுமே சந்தேகப்படும்படியாகவும், எல்லோருமே யாரையோ தேடி அலைவது மாதிரியும் எனக்குப்பட்டது. அது சந்தேகமில்லை நிஜம் என்பது மாதிரி ரயில்வே போலீஸ் ஒவ்வொரு டாய்லட்டையும் துழாவியெடுத்தார்கள். ரயில்வே போலீஸ் மட்டுந்தான் தேடுகிறார்கள். மற்றவர்களும் சேர்ந்து தேடுவது மாதிரி தெரிந்தது  என் பிரமைதான் போலும்.

அலமேலுவின் தோழிகளில் சிலரை எதிரில் பார்த்தேன். அவர்கள் முகங்களில் பீதி குடியேறிவிட்டிருந்தது. அவளின் தோழிகளில் பாதிபேர் வாரங்கல் ஸ்டேஷனிலேயே இறங்கி விட்டார்கள். இன்று இதெல்லாம் நடக்காமலிருந்திருந்தால் அலமேலுவும் இறங்கியிருப்பாள்.

அந்த ட்டி. ட்டி. ஆரின் முதல் உதையே இன்றைய நாளின் உற்சாகம் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டது. அவன் ரயில் அதிகாரத்தின் உச்சத்தை தன் ஷூக்கால்களுக்குள் இறக்கி வைத்திருந்திருந்ததை இதுவரை யாரும் அறியாமலிருந்தோம்.

அவளுக்கும் கூடதான் இந்த ரயிலில் உரிமையிருக்கிறது. அது அவனைவிடவும் இன்னும் நெருக்கமானது.

பரீட்சை எழுதி பாஸ் பண்ணி ரயிலேறிய நாய் அது.

அவளுக்கு அப்படியில்லை. எல்லாமே இந்த ரயில்தான்.

ராணுவத்திலிருந்து ஊருக்கு ரயிலேறும் நண்பர்களை,

“மச்சான் ராமகுண்டம் வரை எப்படியாவது சமாளிச்சிடு” என உற்சாக வார்த்தைகளில் ரயிலேற்றி விடும்போது அவர்கள் ஞாபகத்தில் இந்த ரேனிகுண்டா தக்காளி எப்போதுமிருப்பாள்.

“அலமேலுவைப் பார்த்தா இதை கொடுத்துரு” என அவளுக்குத்தான் எத்தனை எத்தனை ஸ்வட்டர்கள்! கம்பளிகள்! ஆரஞ்சு பழங்கள்! எப்போதாவது விலை உயர்ந்த பாட்டில்கள், அவ்வளவும் அன்பின் ததும்பல்கள். எல்லாவற்றையும் இன்று நாசமாக்கிவிட்டான் இந்த ட்டி. ட்டி. ஆர். கிருஷ்ணா.

என்னமோ இந்த ரயில் இவனுக்கு மட்டும் சொந்தமானதுபோல் ஆடுகிறான்.

ஒருவேளை என் வேர்களை நானே தேடிப் போனால் இதோ கேட்பாரற்று பல காலம் இந்த தண்டவாளத்தில் நிற்கும் இந்த துருபிடித்த ரயிலின் ஏதோ ஒரு பெட்டியில் கூட நான் கர்ப்ப பட்டிருக்கலாம். பாழடைந்த ரயில் பெட்டியிலிருந்து உருவான ஒருத்தியை, பரீட்சை எழுதி வேலைக்கு வந்த இவன் எப்படி எட்டி உதைக்கலாம்? அவனாக அதிகாரம் இப்போதும் இவளுக்கு புரியவில்லை.

கனவுமாதிரியும், கனவில்லாதது மாதிரியும், கனவின் மிச்சம்மாதிரியும் எழுந்து, அடங்கி மீண்டும் உயிர்பெற்று, ரயில் தடதடக்கும் சத்தத்தில் அலமேலு அப்படியே உறங்கிப் போனாள்.

ரேணிகுண்டா ஸ்டேஷன் வரை இவளைக் காபந்து பண்ணிவிட்டால் போதும். அப்புறம் அங்கிருந்து கோவாவுக்கோ, பெங்களூருக்கோ ஏன் மெட்ராஸ்க்கோ கூட ரயிலேற்றிவிட்டு விடலாம்.

மனிதர்கள் இருக்கும்வரை அலமேலுவும் பிழைத்துக்கொள்வாள். காலியாய்க் கிடந்த ஒரு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து யோசித்தபோது சட்டென ஞாபகம் வந்தது பாலாஜியின் பெயர்.

நாளடைந்த ரயில் நண்பர்களில் இன்னும் உதிராமல் மிஞ்சியவன். நீ மட்டுந்தான் என் உயிர் என இதுவரை வசனம் பேசாதவன்.

என் கைப்பேசியில் பாலாஜியை அழைத்து, கொஞ்சம் சரியாகவும், நிறைய தப்புதப்பாகவும் நிலமையை சொன்னேன். என் குரல் எனக்கே கேட்காதவாறு மௌனப்பட்டிருந்ததை அந்த ஓடும் ரயிலில் உணரமுடிந்தது.

பாலாஜியிடம் என் வேண்டுகோள் இதுதான்.

இன்னும் அரைமணி நேரத்தில் என் பேன்டரி காரிலிருந்து பத்திரமாய் அலமேலுவை இறக்கி, ப்ளாட்பாரத்தில் காத்திருக்கும் ரயில்வே போலீசாரின் கண்களுக்கு மறைத்து உன்னிடம் ஒப்படைக்கிறேன். அடுத்த பத்துநிமிடத்திற்குள் தெற்குநோக்கிப் போகும் ஏதாவது ஒரு வண்டியில் அவளை ஏற்றிவிட்டுவிடு. அது போதும் அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள். அவளுக்கு அதீத அழகும், ட்டி.ட்டி.ஆரையே எட்டி உதைக்கும் தைர்யமுமிருக்கிறது.

அலமேலுவை அவனுக்கும் தெரிந்திருந்தது. அவளை யாருக்குத்தான் தெரியாமலிருக்கும்? எப்போதும் ராமகுண்டத்தில் ஏறி வாரங்கல்லில் இறங்கி விட்டாலும், அவள் வசீகரம் விஜயவாடா, ரேனிகுண்டா வரை நீண்டு பரவியிருந்தது.

வண்டி ஐந்து நிமிடமே ஐந்தாவது நடைமேடையில் நிற்கும் இத்தருணத்தில் இந்த அழகியின் பறிமாற்றம் ஒரு சின்ன சேதாரமின்றி நடந்து விடவேண்டும்.

நடக்கும்.

இத்தனை வருட ரயில் அனுபவம் இந்த தைர்ரியத்தை எனக்குள் விதைத்திருந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பிளாட்பாரத்தில் என் கைப்பிடித்து நடந்து வந்த அலமேலுவை யாரும் சந்தேகப்படவில்லை. என் மனைவியுடன் நான் ப்ளாட்பாரத்தில் நடக்கிறேன்.

ஒரு மனமொத்த தம்பதிகளின் ப்ளாட்பார நடை அது. ஒரு தற்காலிகம் எங்கள் இருவருக்கும் அப்படிப்  பொருந்தியது.

நாடக பாணியில் பாலாஜியின் கைகளை பிடித்தெல்லாம் இல்லாமல். என் சில சொற்களில், அலமேலுவை என்னிடமிருந்து பாலாஜியின் திசைக்கு நகர்த்தினேன்.

கண்களில் நீர் கோர்க்க அவள் என்னைத் திரும்பிப் பார்த்து

“பாவா”

நன்றியை நனைந்திருந்த அவள் கண்களிலிருந்துப் பெற்றுக் கொண்டேன்.

அவ்வளவுதான்.

ரயில் நகரும் சப்தத்தில் “பாவா”வை மட்டும் எனக்குள் இறுத்திக்கொண்டு பழக்கப்பட்ட கால்களால் ஓடும் ரயிலில் ஏறினேன். என்னவோ இதுவரை காத்திருந்த மாதிரி தூக்கம் வந்து அழுத்தியது.

விழித்தபோது காட்பாடி ஜங்ஷனிலிருந்தேன். இங்கிருந்து வேறு ரயிலில் ஒரு மணி நேரப் பயணம். என் ஊரும் இப்படி ஒரு ஜங்ஷன்தான். ஜோலார்ப்பேட்டை.

நானும் ஒரு ஆண் அலமேலுதான்.

குழந்தையிலேயே ஜங்ஷன் ரயில் சப்தம் கேட்டுதான் அனுராதா, நர்சிங் ஹோமில் பிறந்தேன். கடைசி ரயில் சப்தம் கேட்டுதான் தூங்கினேன். எழுவேன், சாப்பிடுவேன், புணர்வேன், வாழ்கிறேன்.

நானும் ஒரு ஆண் அலமேலுதான்.

ஆனால் இந்த ரயில் எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு வந்ததில்லை. இது எங்கள் ஊரில் ஐந்து நிமிடம் நின்று அப்புறம் போய்விடும். அதற்குள் இதிலிருந்து இறங்கிவிட வேண்டும். அப்படித்தான் இன்றும் இறங்கி விடுவேன்.

கிருஷ்ணாவைப் போல ரயில் அதிகாரம் என் ரத்தத்தில் ஏறிவிடவில்லை.

அலமேலுவைப்போல் அவள் உடலெங்கும் எப்போதும் ஒரு ரயில் சடசடத்து ஓடிக்கொண்டிருக்கவில்லை.

பின்னிரவில் ரயில் சப்தத்தினூடே என் வீடடைந்தேன். அலமேலுவை ரேணிகுண்டாவிலேயே விட்டு விட்டேன்.

அப்பின்னிரவிலும் பழைய சோற்றில் கத்திரிக்காய் சாம்பாரை ஊற்றி பிசைந்து கொடுக்கும் மாலதியின் பிரியத்தில் கரைந்தபோது, அந்த ரயில் சத்தம் என்னைவிட்டு வெகுதூரம் போயிருந்தது.

காலம் எப்போதும் தன் கையில் ஒரு ரப்பரை வைத்துக்கொண்டே பயணிக்கிறது. மழை, வெய்யில், புயல், கொரனா எதுப்பொருட்டும் அது தன் கையிலிருக்கும் ரப்பரை தவறவிடுவதேயில்லை.

நினைவுகளை, காதலை, மனிதர்களை, ரயிலை, பேண்டரிகாரை, அலமேலுவை இப்படி எல்லாவற்றையும் அது தவறாமல் அழித்து விடுகிறது.

அதேகாலந்தான் பேண்ட்ரிகாரின் கதவுகளை எனக்கு மூடி, பின் கூரியர் நிறுவனத்தின் கதவைத் திறந்துவிட்டது. இதில் என் திருப்தி என்பது இரண்டுமே எனக்குப்பிடித்த பயணம் சம்மந்தப்பட்டது என்பது மட்டுந்தான்.

நண்பர்களுக்காக என்ற பொய்க் காரணத்தோடு நேற்றிரவு கூடுதலாக இரண்டு பெக் உள்ளே போனபோதே இப்படி ஏதாவது ஏடாகூடமாய் நடக்கும் என நினைத்தேன்.

இல்லையெனில் காலை 3.10க்கு ஜோலார்ப்பேட்டை ஜங்ஷனிலிருந்து சென்னைக்கு வண்டியேற வேண்டியவன் இப்படி மதிய நேரத்து தெலுங்கு குரல்களை கேட்டு கொண்டே ரேணிகுண்டாவில் இறங்குவேனா?

லேசாக எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன். இனி  மறுபடியும் இரவுக்குத்தான் சென்னை போக முடியும் அதனாலென்ன? அதற்குள் எனக்குக் கொடுக்க வேண்டிய கலெக்டர் வேலையை வேறு யாருக்காவது கைமாற்றி விட்டு விடுமா என்ன சென்னை?

ப்ளாட்பாரத்தில் இறங்கி பயணிக்கும் பல தெலுங்கு குரல்களைக் கடந்து, எதிர்ப்பட்ட டீக்கடையில் சக்கரை கம்மியான ஒரு டீ சொல்லிவிட்டு காத்திருத்தலின் இடைவெளியில்,

“பாவா”

பல வருட களிம்பேறிய அக்குரல்.

இத்தனை உள்ளடங்கிய ‘பாவா’ வை அலமேலு மட்டுந்தான் உச்சரிக்கக் கூடியவள்.

அக்குரல் கேட்டு நான் திரும்புவதற்குள்,

என் தோளில் அவள் வலதுகை புதைந்திருந்தது.

“ஹேய் அல்மேல் எப்படியிருக்க?... என்ன இங்க?”

நான் அதே பழைய உற்சாகத்தோடு ஏறக்குறைய கத்தினேன்.

அப்போதுதான் ஏழாண்டுகளுக்கு முன் இதேமாதிரி ஒரு மதிய நேரத்தில், அவளை இதே பிளாட்பாரத்தில் இறக்கிவிட்ட நினைவு மின்னல் மாதிரி வந்துப் போனது.

“இங்கேயே செட்டிலாயிட்டியா அலமேலு”

என்ன காரணத்திற்கோ என் கண்களில் காரணமில்லாமல் நீர்கோர்த்துக் கொண்டது.

மகிழ்ச்சியில் கூட கண்களில் நீர் கோர்க்குமா என்ன?

“நான் எங்க பாவா செட்டிலானேன், அவன்தான் என்னை இங்கேயே செட்டிலாக்கிட்டான்”

என அலமேலு கைக்காட்டிய திசையில் பாலாஜி பால்கேன்களை மினி லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தான்.

எனக்கு எல்லாமே புரிந்தது.

அதே பத்துநிமிடம் எனக்காக மட்டும் காத்திருந்தது மாதிரி ரயில் புறப்பட்டு சென்னையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பழக்கப்பட்ட என் ரயில் கால்களால் கூட ஓடி அதைப் பிடிக்க முடியவில்லை.

 

Wednesday, July 23, 2025

வீணை


பவா செல்லதுரை


மிக அழகாக பார்சல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வீணையை என் அருகாமையில் உணர்ந்தபோது, ஒரு பெண்ணின் நெருக்கமான இருப்பை நான் அழுத்தமாக உணர்ந்தேன். பஸ் மேடுபள்ளங்களில் குலுங்கியதில் அந்த உணர்வு மேலும் தீவிரமடைந்தது.

வாழ்வின் அபூர்வமான தருணங்கள் இப்படி எப்போதாவதுதான் நிகழும். இரவு பத்து மணியளவில் அந்தக் கூரியர் நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து மூடுகையில், அந்த இளைஞன் அவசரமாக ஒரு புல்லட்டில் வந்து சேர்ந்தான். பாதி மூடியிருந்த ஷட்டருக்கு முன் அவனைப் பார்த்தபடி நான் அப்படியே நின்றிருந்தேன். அவன் கையில் ஒரு பொக்கிஷத்தைப் போல ஏந்தியிருந்த அந்த பார்சலுடன் என்னை உற்று நோக்கினான்.

"ஐ அம் ஸ்டீபன் ராஜ்,  ஃப்ரம் சேலம்."

"இது வீணை."



"நாளைக்கு எப்படியாவது கோவாவுக்குப் போய்ச் சேரனும். எவ்வளவு செலவானாலும் சரி. நாளைக்கு அவர்களுக்கு பர்த்டே. இது என்னோட கிஃப்ட்." பாதி ஆங்கிலம், பாதித் தமிழ், மீதிப் பதற்றத்துடன் அவன் சொல்லி முடித்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டே நிதானமாக ஷட்டரை இழுத்து மூடினேன். நிராசை நிறைந்த அவன் கண்களைக் கவனித்தேன். அவனை மேலும் நிலைகுலைய வைக்க மனம் ஒப்பாமல்,  "நான் இன்றிரவு கோவாவுக்குத்தான் போகிறேன். பில் போட மாட்டேன். நேரடியா டெலிவரி பண்ணிவிடுகிறேன், எழுநூறு ரூபாய் ஆகும். பரவாலயா?" என்றேன் நிதானமாக. அடுத்த நொடி, அவன் தன் பின்புறப் பேண்டு பாக்கெட்டிலிருந்து எடுத்த பரிசிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை என் கைக்குள்ள திணித்து, "இத வச்சுக்கோங்க, எப்படியாவது நாளைக்குள் அவங்ககிட்ட சேர்த்தா போதும்," என்றான். அவனின் துள்ளல், உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டதற்குக் காரணம், அந்த பேக்கிங்கில் எழுதப்பட்டிருந்த பெயர் தான்.

மிஸ். ஜெனிபர் பிலோமி. அதற்குக் கீழ எழுதப்பட்ட முகவரி எதுவும் என் மனதில் பதியவேயில்லை. இப் பெயருக்குரிய பெண்ணை ஒரே நிமிடத்தில் பேரழகியாகக் கற்பனை செய்து கொண்டேன். அதற்குள் நானே அவளது முழு உருவத்தையும்  ஓவியமாக வரைந்து முடித்திருந்தேன். ஒரு பெண்ணின் பெயருக்கான வசீகரம் கண நேரத்தில் ஓர் ஆண் மனதில் இத்தனையும் செய்து முடித்து விடுகிறதுதானே. நான் இப்பொழுது காதல் ததும்பிய ஸ்டீபன் ராஜ் ஆகவே மாறியிருந்தேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீது ஒரு விதப் பித்திருந்தது. நான் கையில் ஏந்திக் கொண்டிருந்த வீணை, வண்ணநிலவனின் 'கடல்புறத்து பிலோமியை' ஏந்திக்கொண்டது மாதிரி ஸ்பரிசித்துக் கொண்டேன். ச. தமிழ்ச்செல்வனின் கதையில் வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்களின் க்யூ வரிசை என் ஜபாகத்திக்கு வந்து போனது. வருகை பதிவேட்டில் இருக்கும் ராமாயி, மாரியம்மாகளுக்கு நிமிர்த்து பார்க்கத் தேவையில்லாத முகங்களும் பிருந்தா, சவீதா, லீனா, நீமா போன்ற பெயர்களுக்கு நிமிர்ந்து பார்க்கத் தூண்டும் உருவங்களாகவும் இருக்கும். அப்படியெல்லாம் பெயருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை நிமிர்ந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. வேலை பார்க்கும் இக் கூரியர் நிறுவனத்திலும் இந்த அனுபவம் தினம் தினம் நிகழ்வதுதான். 'கடலோரக் கவிதைகள்' ஜெனிபர் டீச்சர் வேறு என் கண்முன் வந்து வந்து போனார்கள். இப்போது இந்த பார்சலின் மேற்பகுதியில் மிக அழகான கையெழுத்தில் எழுதியிருக்கும், பிலோமியை நான் நிமிர்ந்து பார்க்கத் தேவையிராது. அவள் பேரழகியாகத்தான் இருக்க முடியும். அதுவும் சேலத்திலிருந்து இரவு பத்து மணிக்கு ஒருவன் அவசர அவசரமாக வந்து ஒரு வீணையை அவள் பிறந்தநாளுக்கு அவ்வளவு தூரம் அனுப்புகிறானென்றால், அவள்தான் கோவாவிற்கே பேரழகியாக இருக்க வேண்டும்.

யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று ஒருமுறை கவனித்துவிட்டு, வீணையை என்னில் இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டேன். அது மற்றவர்களின் கண்ணுக்குத்தான் வீணை, எனக்கு பிலோமி! இக்கணத்தில் மிகுந்த பரிதாபத்தோடு ஸ்டீபன் ராஜை வேறு, மனம் நினைத்து கொண்டது. பஸ் ஒரு சீரான வேகத்தில் எங்கள் அணைப்பை அங்கீகரித்ததுப் போலச் சென்று கொண்டிருந்தது. எனக்கு எப்போதும் நல்ல மனநிலை, நல்ல தூக்கத்தையும் தானாகவே கொண்டு வந்து சேர்த்துவிடும். ஊரடைதலை ஏதோ ஓர் உள்ளுணர்வு அறிவித்து எழுப்பிவிடும். அன்றும் அவ்வாறே நிகழ்ந்தது. பழக்கமான கோவாவின் பனாதியை அடைந்திருந்தேன். என் பிலோமியை கையில் ஏந்தியபடி இறங்கியதைச் சிலர் வேடிக்கை பார்த்தனர். எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலையை நான் நேற்றிரவு பயணத்தின் துவக்கத்திலேயே கடந்திருந்தேன்.

கோவாவில் எனக்கென்று எப்போதுமிருக்கும் அந்த அறையில் ஒரு சுவரின் மீது அதைச் சாய்த்து வைத்து விட்டுக் குளிக்கலாம் என முடிவு எடுத்தேன். அதை கையாளும் ஒவ்வொரு நிமிடமும் எனக்குள் ஏற்பட்டிருந்த பொறுமையும் நிதானமும் என் வாழ்வில் இதற்கு முன் இருந்ததில்லை. குளித்து முடித்து இருப்பதிலேயே நல்ல உடையாக தேர்ந்தெடுத்து, டக் பண்ணும் பொது அந்த உடை எனக்கொரு ஆபீஸர் அந்தஸ்தை தந்திருந்தது. எதிர்ப்பாரத இந்தப் பயணத்திற்கு இந்த உடைத்தேர்வு பெரிதும் கை கொடுக்கும். நான் எப்போதுமே கூரியர் நிறுவனத்தின் டெலிவரி பாய் இல்லை, அதற்கும் இரண்டு படி மேலே. எங்கள் மண்டலம் முழுவதும் பயணப்படவும், ஆய்வு செய்யவும் எனக்கு கிடைத்த சிறு அதிகாரம் சட்டையைச் டக் செய்யக்கூடிய அந்தஸ்தையும் கூடவே தந்திருந்தது. இப்போது என் அறைக்கட்டிலில் உட்கார்ந்து எனக்கு மிக அருகில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த வீணையின் நீள அகலத்தை என் கண்களால் அளவிட்டேன். அது அப்படியே பிலோமியின் நீல அகலமாகத்தான் இருக்க வேண்டும். வீணைதான் எத்தகைய கம்பீரமான இசைக் கருவி! மற்ற இசைக்கருவிகளைப் போல அதை அலட்சியமாகக் கையாண்ட எந்த ஒரு மனிதரையும் நான் இதுவரை பார்த்ததில்லை. அதுவே அதற்கான உன்னதத்தைக் கலைஞர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. ஐந்தாவது முறையாக, ஆங்கிலத்தில் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த, அந்தப் பெயரை இப்போதும் நான் நிதானமாகப் படித்தேன்.

Miss. Jenifer Philomi

அதற்கும் கீழ் எழுதப்பட்டிருந்த முகவரியை இப்போதும் படிக்க முடியவில்லை, அதை மனம் வெளியே தள்ளியது. வாஸ்கோவிற்கு இங்கிருந்து சில மைல்கள் பயணிக்க வேண்டும். என் பயண எல்லை இதுவரை மட்டும்தான், ஆனால்  இப்போது நான் ஓர் அழகிய பெயருக்காக மட்டுமே ஆறு ஏழு மயில்கள் பயணிக்கப் போகிறேன். மனமெல்லாம் காதலை நிரப்பிக் கொண்டு, கடற்கரையை எதிர்கொண்டு இன்னும் சில நிமிடங்களில் அவளைச் சந்தித்து விடப் போகிறேன். அதுவும் இல்லாமல் நான் கூரியர் நிறுவன பணியாளன் இல்லை. அதனால்தான் எழுநூறு ரூபாய்க்கு பில் போடவில்லை.

இக்கணம் என் பெயர் எனக்கு மறந்து விட்டது. என் பெயர் ஸ்டீபன் ராஜ். ஜெனிஃபர் பிலோமி என்ற அந்த அழகிய பெயருக்காக, ஸ்டீபன் ராஜ் என்ற அந்த சேலத்து இளைஞனின் சார்பில், என்ன அவன் சார்பில், நான் ஸ்டீபன் ராஜாகவே  போகிறேன். எனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை என்பது எதுவுமில்லை. கோவாவின் இந்நிலம், இக் கடல் என எல்லாமும் இனி எனதே. ஒரு பெயர் இப்படி ஒருவனுக்கு இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தியிருக்கிறதே! வாஸ்கோடகாமா நான் அடிக்கடி சென்று பழகிய இடமில்லை என்றாலும், சில முறை சுற்றித் திரிந்த பிரதேசம் தான். எப்பொழுதுமே அதன் சந்து பொந்துகள் என் நினைவில் நிற்காதவை. ஆனாலும் ஸ்டீபன் ராஜுக்கு பிலோமிபோல எனக்கும் சில ஜெனிஃபர்கள் இப்பிரதேசத்தில் உண்டு.

பிலோமியின் தெருவைக் கண்டுபிடிப்பதிலோ! அல்லது வீட்டைக் கண்டறிவதிலோ! அதிகச் சிரமம் இருக்கவில்லை. மாறாக, என் கற்பனையில் வரைந்திருந்த சுற்றுச்சுவர் கொண்ட பெரிய பங்களாவிற்குப் பதிலாக, குறுகலான சந்தில் ஓடுகள் வேயப்பட்டிருந்த ஒரு சாதாரண வீடாக அது இருந்தது.

ஓட்டு வீடுகளில் ஜெனிஃபர்  போன்ற தேவதைகள் வசிக்க மாட்டார்களா என்ன? காலிங் பெல்லில்லாத அந்த வீட்டின் கதவுகள் தட்டப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு திறந்தன. ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட எழுத்துக்கள் கொண்ட சிவப்பு நிற டீ ஷர்ட்டும் பாவாடையும் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், எதிரே ஒருவன் பெரிய பார்சலுடன் நிற்பதை எவ்வித ஆச்சரியமின்றி எதிர்கொண்டாள். நான் சற்றுத் தயங்கி "மிஸ் ஜெனிஃபர் பிலோமி" என்று இழுத்துச் சொன்னதும், ஏதோ ஞாபகம் வந்தவளைப் போல, "எஸ், கம் இன்" என்ற குரலை மட்டும் கதவருகில் விட்டுவிட்டு அந்தச் சிறு ஹாலுக்குள் நடந்தாள். நான் வேறு வழியின்றி அவளைப் பின் தொடர வேண்டியிருந்தது. ஜெனிஃபர் பிலோமி இவளாக இருக்க வாய்ப்பே இல்லை. கதைகளில் கூட எப்போதும் தேவதைகள் உடனே வெளிப்பட்டடுவதில்லை. அவர்களின் வசிப்பிடங்களை அடைய இன்னும் இன்னும் நாம் மெனக்கெட வேண்டியிருக்கும். “அது இதுவரை யாரும் தீண்டியிராத அழகிய வெற்று கணைகள்.” கூரியர் தொழிலுக்காக நான் விட்டொழித்த கவிதை வரிகள் தொக்கி தொக்கி ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, ஒரு வயர் பின்னிய கூடை நாற்காலியில் நான் உட்கார வைக்கப்பட்டேன். கண்ணாடி டம்ளரில் இருந்த குளிர்ந்த நீரை அந்த முப்பத்தைந்து வயது சிவப்பு டி ஷார்ட் காரி என் கைகளுக்கு மற்ற முயன்ற போது நான் சர்வ ஜாக்கிரதையாக அந்த வீணையை மேற்குப் பக்கச் சுவரில் சாய்த்து வைத்துவிட்டு டம்ளரைப் பெற்றுக் கொண்டேன். அமைதி, மௌனம், காதல் ததும்பல் அப்படியெல்லாம் அந்த அரை எதையும் அனுமதிக்க வில்லை.

"ம், சொல்லு." என்ற சூழலே என்னை அடுத்துப் பேசத் தூண்டியது. நான் டெலிவரி பாய் இல்லை என்ற எண்ணம் மட்டும் என் மூளையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தொலைக்காட்சியில் நேர்காணலில் பேசுவது போல, "நான் சேலம் ஸ்டீபன் ராஜின் நண்பன். அவனால் இன்று.  ஜெனிஃபர் பிறந்தநாளுக்கு வர இயலவில்லை. அதனால் இந்தப் பரிசை என்னிடம் கொடுத்து அனுப்பினார்," என்று எனக்குள் முந்திய வார்த்தைகளை நான் மிகச் சரியாக வெளிப்படுத்தி விட்டேன். இப்போது அப் பெண் வலது பக்கமாக இருந்த அந்தச் சிறிய அறையை நோக்கி ஜெனி அல்லது பிலோமி என்று அழைப்பாள் என நான் எதிர்பார்த்து ஏமாந்தேன்.

"நான்தான் . ஜெனிஃபர்  பிலோமி, ஆனால் இன்று எனக்குப் பிறந்தநாள் இல்லையே!" வார்த்தைகள் மட்டும் என் காதுகளுக்குள் போய்க்கொண்டிருந்தது. நான் அந்த ஹாலில் இடைவெளியின்றி, எந்த ஒழுங்குமுறையுமின்றி ஒட்டப்பட்டிருந்த அப் பெண்ணின் கடந்த காலத்து நிமிர் பருவங்களைச் சுமந்த புகைப்படங்களை அப்போதுதான் கவனித்தேன். பல சினிமா பத்திரிகைகளில் வந்த அட்டைப்படங்களை நினைவூட்டின அவைகள். ஏமாற்றத்துடன் கூடிய ஆசுவாசம் என்பார்களே அதை அந்த அறையிலிருந்து எடுத்து எனக்குள் நிரப்பிக் கொண்டேன். நான் முற்றிலும் இலகுவாகியிருந்தேன் அல்லது தெளிவடைந்திருந்தேன். இனி எந்த அறையிலிருந்தும் தேவதைகள் வெளிப்படப் போவதும் இல்லை.

"இல்லையே!, என் நண்பன் ஸ்டீபன் இன்றுதான் உங்கள் பிறந்தநாள் என்று சொல்லி இத்தனை அருமையான ஒரு பிறந்தநாள் பரிசோடு அத்தனை தூரத்திலிருந்து என்னை அனுப்பி வைத்தானே!" என் வார்த்தைகளை இடைமறித்து, "நான் ஒவ்வொருவரிடமும் ஒரு நாளை என் பிறந்த நாளாகச் சொல்வேன். அதை சீரியசாக எடுத்துக்கொண்டு இப்படி ஒரு பரிசுப் பொருளுடன் உன்னை அனுப்பியிருக்கிறானே... இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது?" இரவு காதல் ததும்பும் மனதோடு அவளை ஏந்தி இருந்த ஸ்டீபன்ராஜ் இப்போது அவள் வார்த்தைகளில் அதவாகி இருந்தான். எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்சமும் வடிந்துவிட்டது. இப்போதுதான் அவள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த பார்சலை முழுமையாகப் பார்த்தாள்.

"இது என்னவென்று உனக்குத் தெரியுமா?" அவள் என்னை ஒருமையில் அழைக்கின்ற நெருக்கத்திற்கு வந்திருந்தாள்.

"வீணை," என் வார்த்தையே கவிதையாகி இருந்தது.

"இது என்ன விலையிருக்கும்?"

"தெரியல.... ஆனா முப்பது நாற்பதாயிரம் ரூபாய் வரை இருக்கும்."

"எனக்கு வீணையைப் பற்றி எதுவும் தெரியாது, நான் அதைப் பார்த்ததுகூட கிடையாது. இதை உங்கள் நண்பர் சேலத்திலா வாங்கினார்?" இப்போது நானே அவள் அனுமதிக்குக் காத்திராமல் பார்சலை பிரித்தேன். கூரியரில் வேலை பார்க்கும் எனக்கு பார்சலை பிரிக்கும் பொது மட்டும் இவ்வளவு நுட்பம் எப்படி கை கூடுகிறது? நான் இன்னமும் பிலோமியாகவே கையாளுகிறேன். வீணையின்ன் கம்பியில் கட்டித் தொங்கவிடப்பட்ட அட்டையில் நான் சொன்னதை விடக் கூடுதலான விலை இருந்தது. அது சேலத்தில் வாங்கப்பட்டதில்லை. "தஞ்சாவூர்" என முழு முகவரி தெளிவாக இருந்தது.

"இல்லை, இதை தஞ்சாவூர் சென்று உங்களுக்காக வாங்கி வந்திருக்கிறான்." அவள் உதட்டோரத்தில் ஓர் அலட்சியமான புன்னகை தோன்றி மறைந்ததைக் கவனித்தேன். எல்லாப் பெண்களின் உதடுகளும்,  எல்லா வகையான அக உணர்வுகளையும் மறைத்து வைத்திருக்கும் மர்மமான பிரதேசங்கள் போலும்.

"நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?" அவளிடமிருந்து தெளிவான வார்த்தைகள் வெளிவந்தன.

"சொல்லுங்கள்,"

என்று சொல்ல நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை. அது ஒன்றும் அவசியமில்லை என்பது போல அவளே,

 "இதை வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டு பணமாகக் கொடுக்க முடியுமா?"

 இப்போது என் கண்களைப் பார்க்காமல் அந்த வீணையைப் பார்த்தவாறு பேசினாள். என் கடைசி சொட்டு எதிர்பார்ப்பும் வழிந்து விட்டிருந்தது. என் எதிரில் நிற்கும் இவள் பெயர் கூட என் நினைவிலிருந்து அகன்றது. நேற்று இரவிலிருந்து என் இரு கைகளிலும் ஏந்திப்பிடித்திருந்த பிலோமி என்ற பீங்கான் பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கி விட்டது. எந்த வசீகரமான பெயர் ஓர் இளைஞனை 800 கிலோ மீட்டர் தூரம் அலைக்கழித்து, அழைத்து வந்ததோ அப்பெயர் இப்போது  ஞாபகத்தில் இல்லை. இப்போது, கொரியர் நிறுவனத்தின் சட்டையை டக் செய்த சாதாரணமானதொரு அலுவலராக பேச ஆரம்பித்தேன்.  அது முழுக்க முழுக்க தொழில் முறைப் பேச்சு.

"பணமாக மாற்றி கொடுக்க முடியாது மேடம். முதலில் இந்த பார்சலை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு ரசீதில் ஒப்பமிட்டுத் தர வேண்டும்."

"பின்பு இந்த பார்சலை வேறொரு கூரியர் கடைக்கு எடுத்துச் சென்று  அந்த வீணை கடைக்கு புக் செய்ய வேண்டும். அதில் இந்த வீணையை அவர்களே எடுத்துக்கொண்டு பணமாக அனுப்ப முடியுமா..? என்ற உங்கள் வேண்டுதல் கடிதத்தையும் இணைக்கலாம். அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் உரிமை." என் வார்த்தைகளில் வெளிப்படுத்தலில் அவள் என்னைக் கண்டடைந்திருந்தாள்.

"நீங்கள் கூரியரில் வேலை பார்க்கிறீர்களா?"

நான் ஒரு நிமிடம் தடுமாறி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நாளை பிறந்த நாளாக சொல்கின்ற இவள் முன், “முதலில் ஸ்டீபன் ராஜின் நண்பன், கூடவே கூரியரில் வேலை பார்க்கிறேன்”.

 இப்போது அவள் ஹாலில் இருந்து நகர்ந்து அச்சிறு அறையில் பாதி மறைத்தும் விலகியும் இருந்த திரைச்சீலையின் முன் நின்று என்னை ஊடுருவினால். தவிர்த்தல் எனக்கும் பழகியதுதான். அவள் ஊடுரும் கண்களை தவிர்த்து அந்த வீணையைப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.

"ஒருநாள் இதே காதல் மீதூர ஸ்டீபன் ராஜ் இங்கு வந்து இக்காதல் பரிசை தேடினால் அவனை எப்படி எதிர்கொள்வீர்கள்?" அவள் இன்னும் இரு அடிகள் என்னை நெருங்கி வந்து தலை குனிந்து நின்றாள். சத்தம் இல்லாத ஒரு தருணம்...  அறை அதனை உள்வாங்கிக் கொண்டது. அவள் வீணையைப் பார்த்துக்கொண்டே என்னிடம் சொன்னாள்,

 "இதைப் பழையபடி பேக் செய்து இந்தப் பரண் மீது வைக்க முடியுமா?" நிமிர்த்து அவள் கை காட்டிய பரணையைப் பார்த்தேன். தேவையில்லாத பொருட்களால் நிரம்பித் ததும்பியது அப்பரல். எந்த மனிதனும் ஒரு வீணையைச் சற்றே அலட்சியமாகக் கையாண்டதைக்கூட நான் பார்த்திராதபோது இதை நான் பரண் மீது தூக்கிப் போட முடியாது.

"என்னால் அது முடியாது." மறுபடியும் அதே வார்த்தை சொன்னேன்.

“உங்கள் நண்பனுக்காக இதை நீங்கள் செய்யக் கூடாதா”

“என் நண்பனுக்காகத்தான் இதை என்னால் செய்ய முடியாது”

முற்றும்