Friday, April 17, 2009

மதிப்புரை - 2 : ந. முருகேசபாண்டியன்

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - ந. முருகேசபாண்டியன்.

பல்வேறு சோதனை முயற்சியின் வழியே, தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் சாதனை படைத்திட்ட போச்சானது, கடந்த பத்தாண்டுகளில் பின்னடைவுக்குள்ளாகியுள்ளது. சிறுகதை அற்புதமான என்ற, வடிவத்தைப் ப்ரியமுடன் கையாண்டு, வாழ்வின் மேன்மைகளையும் சிழிவுகளையும் பதிவாச்சிட முயலும் படைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கறிது. இத்தகு சூழலில் புனைவு மொழியில் விசும்பிக்கொண்டு வெளிவர முயலும் பவா செல்லதுரை போன்ற கதைசொல்லிகளின் ஈடுபாடு நம்பிக்கை தருகின்றது. முரட்டுத்தனமான சம்பவங்களைக் கரடுமுரடான மொழியில் விவரிக்கும் பவாவிற்கு, சூர்யனுக்குச் கீழ் எல்லாவற்றின் மீதும் அக்கறை இருக்கின்றது. மொழி உருவாக்கிட முயலும் அதிகாரத்தைச் சிதைத்துப் புனைவின் வழியே சிறுக்கத்தை நெகிழ்விப்பது பவாவின் தனித்துவமாகும். அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவரும் பவாவின் முதல் தொகுதியான ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ ஒட்டுமொத்த வாசிப்பினம் நம்பிக்கை தருவதாக உள்ளது.

யதார்த்தமான சித்திரிப்பின் மூலம் கதை சொல்லுவது போன்று பவாவின் புனைக்கதைகள் இன்னொரு நிலையில் கலங்கான பயணிக்க முயலுகின்றன. வெறுமான சம்பவங்கள்/ அனுபவங்களின் தொகுப்பாகக் கதை சொல்லுவதில் பவாவிற்கு நம்பிக்கை இல்லை. கிராமத்து அய்யனார் கோவில் சுடுமண் குதிரை சிற்பங்கள் போல, யதார்த்ததிலிருந்து விலகி, கலையழகுடன் வேறு ஒன்றை வெளிப்படுத்த முயலுகின்றன. இயல்பான மொழியில், கட்டமைக்கப்பட்டுள்ள கதைகள், ஆழ்ந்த வாசிப்பின் போது நடப்பு வாழ்க்கை குறித்துப் பரிசீலிக்கத் தூண்டுகின்றன.

விளிம்புநிலை மக்கள் அன்றாடம் பொருளியல் ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் சொல்லுவது பவாவின் முதன்மை நோக்கமாக இல்லை. சூழலின் வெக்கை காரணமாக எல்லாவிதமான நெருக்கடிக்களுக்கிடையிலும் வாழப் பழகியுள்ளவர்கள், இக்கட்டான ஒரு கணத்தில் எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்பது பவாவின் கதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. இருளும் கசப்பும் நிரம்பி வழியும் வாழ்க்கைப் போக்கில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறித் தங்கள் இருப்பை அர்த்தமாக்கிட விழையும் விளிம்பு நிலையினரின் மனநிலை பவாவின் கதைகளில், முக்கியமான இடம் பெறுகின்றன.
‘ சத்ரு’ ‘பச்சை இருள்ன்’ ஆகிய இரு கதைகளிலும் திருடர்களுக்கும் கிராமத்தினருக்குமான உறவு நுட்பமான களத்தில் விரிகின்றது. எப்பொழுதும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் பகடி செய்யும் திருடர்களின் தந்திரங்களை ‘ஆறலைக் கள்வர்’ வழிப்பட்ட தமிழ் மரபில் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நாட்டார் கதை சொல்லலில் புத்திசாலித்தனத்துடன் நிறுவனம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகளை திருடர்கள் லாவகமாகச் சிதைக்கின்றனர். அதிகாரபீடங்களான ஜமீன்தார், பண்ணையார், அதிகாரி போன்றவர்களை எதிர்க்கும் திருடர்கள் எப்பொழுதும் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

பல்லாண்டுகள் தொடர்ந்து மழை பெய்யாமையினால் எங்கும் கடுமையான வறட்சி கொடிய பஞ்சம். உணவுக்காகக் கண்ணில் தென்படும் எந்த மனிதச் சட்டம். உயிரைத்தக்க வைப்பதற்கான போராட்டத்தில் எல்லா மதிப்பீடுகளும் அர்த்தமிழ்கின்றன. அம்மனுக்குக் கூழ் படைப்பதற்காகச் சிரமப்பட்டுச் சேகரிக்கப்பட்ட தானியத்தைத் திருடியவன் கிராமத்தினரிடம் மாட்டிக் கொள்கிறான்; திருடனைச் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவெடுக்கின்றனர். அதற்காக நச்சு இலை பறிப்பதற்காக ரங்கநாயகி கிழவி காட்டில் அலைந்து திரிகிறாள். மாவுக்காகக் கம்பினை இடித்துக் கொண்டிருக்கும் வறுமையுற்ற பெண், தன்னிடம் பிச்சையாக மாவு கேட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மாவு தருவது சாதாரண விஷயமல்ல. மாவைப் பெறும் பெண்ணின் கண்ணிலிருந்து நீர் சொட்டுகிறது அம்மன் சிலையில் கண்ணிலிருந்து துளிர்க்கிறது நீர். திடீரென வானம் பொத்துக் கொண்டு பேய்மழை கொட்டுகிறது என்ற பவாவின் கதைசொல்லலை நாட்டார் மரபில் தான் புரிந்து கொள்ள முடியும் கொடுரமான சூழலிலும் மனதில் ஈரம் சொதசொதப்பது போல, வானமும் கருணையுடன் மழை பொழிவது ஒரு வகையில் விநோதம் தான். சூழல் காரணமாகக் கெட்டி கட்டிப் போயிருந்த மக்களின் மனங்களை மழை ஈரம் மிக்கவாக்குகிறது. திருடன் விடுவிக்கப்படுகிறான். எல்லோருக்குள்ளும் இயல்பிலே இக்கட்டான நேரத்திலும் நுட்பமாக வெளிப்படும் என்பதனைச் கதை அதியற்புதமாக விவரித்துள்ளது. விளிம்பு நிலையினர் முரட்டுத்தனமானவர்கள்; நாசுக்கற்றவர்கள்; பாசங்கற்றவர்கள்; கருணையாளர்கள் என்று பவாவின் எழுத்து வழியே புனைவினைக் கட்டமைக்கலாம். அப்பொழுதுதான் திருடன் விடுவிக்கப்பட்டதற்கான தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பவாவின் கதைகளில் இருள் முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் என்பது புரியாத புதிராகப் பல்வேறு விநோதங்களுக்கு வாயிலாக இருக்கின்றது. இருளுக்குள் பலர் உறங்கிடும் வேளையில் சிலர் ஆந்தையைப் போல அறிவுக் கூர்மையுடன் பரபரத்துக் கொண்டிருக்கின்றனர். இருளுக்குப் பழகியவர்களுக்கு எல்லாப் புலன்களும் கூர்மையுடன் செயற்படும்’ வேட்டை’ கதையில் வரும் ஜப்பான் கிழவனின் உலகம், இருள்டைந்த காட்டிற்குள் உறைந்திருப்பது தற்செயலானது அல்ல. அவனுடைய நினைவுப் பரப்பில், இழந்து போன ‘காடு’’பற்றிய எண்ணம் தவிக்கிறது. இரவு முழுக்கத் தனியாகக் காட்டினில் அலைந்து திரியும் ஜப்பான் கிழவனின் நோக்கம் விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்ல என்று தோன்றுகிறது. சோடியும் வேப்பர் விளக்குகளின் ஒளியில் ஜொலித்திடும் நகர்ப்புற வாழ்க்கையுடன் இசைந்து வாழமுடியாமல், தணிந்த மனநிலையுடன் வாழ்கிறவனுக்கு அமாவாசையை ஓட்டிய இரவினில் காடு முழுக்கத் திரிவது யதார்த்தமாக இருக்கின்றது. அவன் வேட்டைக்காகக் கண்ணிகளை விரித்துக் காத்திருத்தல் என்பது, இடிந்துபோன அவனுடைய பூர்விக வாழ்வை நினைத்துப்பார்த்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேட்டையில் எதுவும் சிக்காமல், வெறுமையுடன் திரும்பும் கிழவனுக்குக் கிறிஸ்தவ துதிப்பாடல், மனதுக்கு ஒத்தடம் தருகின்றது. இயற்கையுடன் போராடித் தோல்வியடையும் மனிதனின் மனக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த மதம் அல்லது அதியற்புத ஆற்றல் தேவைப்படுகிறது என்றும் கதையை வாசிக்கலாம். எனினும் ‘ அவனுடைய பையில் பத்திரமாகக் கண்ணிகள் இருக்கின்றன’ என்ற கடைசி வரிகள் கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றன. வேட்டை என்ற கதைத் தலைப்பு, நவீன உலகில் ஜப்பான் கிழவனே வேட்டைப் பொருளாக மாறுவதைச் சூசகமாக உணர்த்துகின்றது.

பெண் மனதின் நுட்பங்களைச் சித்திரிக்கும்’ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ மாறுபட்ட புனைவுமொழியில் விரிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான மேரி வில்லியம்ஸ், வீட்டின் முன் இரவு வேளையில் குறிசொன்ன ஊமையனின் குரலைக் கேட்டு நடுங்குகிறான். ‘ இந்தக் குழந்தையும் தனக்குத் தங்காமல் போய் விடுமோ’ என்று நினைத்துக் கலக்கமடைகின்றான். இருளின் சிறகுகள் எங்கும் நீக்கமறப் பரவுவது போல மனம் புணைந்திடும் வேதனைகள் உலுக்கியெடுக்கின்றன. ஊமையனின் குழறலான மொழியினால் மன அமைதியை இழந்திடும் மேரியின் துயரம் அளவற்றுப் பொங்குகின்றது. "குழந்தை யேசு பிறந்து விட்டார் நலமுடன்" என்ற சேதியுடன் சாக்லேட் வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தாவின் பேச்சு, அவளுக்குள் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. "எந்தச் சேதாரமும் இன்றி குழந்தை பிறந்ததா" என்ற, அவனுடைய கேள்வியும், "தாயும் சேயும் நலம்" என்ற பதிலும் நுட்பமானவை. மேரி தனது துயரத்தை யேசுவின் பிறப்புடன் ஒப்பிட்டு அடையும் மன அமைதி முக்கியமானது. மனம் ஏதோ ஒன்றின் காரணமாக அடையும் வேதனையும் பின்னர் அதிலிருந்து விடுபடுவதும் மேரியை முன்னிறுத்திப் பவா கட்டமைக்கும் புனைவு சுவராசியமனாது. இந்தக் கதையும் முழுக்க இருளில் நடைபெறுவதாகப் புனையப்பட்டுள்ளது. சிதைவு, பச்சை இருள் ஆவிய கதைகளிலும் இருட்டு முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் மனிதனின் மனநிலையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் பவாவின் கதைசொல்லலின் முக்கிய இடம் வகிப்பது தற்செயலானது அல்ல.

நவீன உலகில் தமிழர் வாழ்க்கையில் நசித்துப்போன மேன்மையான விஷயங்களில் தெருக்கூத்துவும் ஒன்று. மரபு வழிப்பட்ட உன்னதமான கலையைத் தொலைத்துவிட்டு, அது குறித்து எவ்விதமான பிரச்ஞையுமற்று வேறு ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பது, காலந்தோறும் தொடர்ந்து நடைபெறுகின்றது. கலையின் மேன்மையும் சீரழிவும் யாருடைய கையிலும் இல்லை. ஆனால் அந்தக் கலையுடன் தன்னுடைய வாழ்வைப் பிணைத்துக் கொண்ட ஏழுமலையின் இருப்புதான் பிரச்சினை. வேறு ஒன்றில் பொருத்திக் கொண்டு, சராசரியாக வாழ்வது என்பது அடையாளச் சிக்கலை ஏற்படுத்திகின்றது. பலரின் மத்தியில் வேடம் தரித்து, அடவுகளுடன் ஆடிக் குதிக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடிச் கொண்டிருக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஏழுமலையின் காலடிகள், எப்பவும் கூத்துக்கான அடவுகளுடன் இயங்குகின்றன என்பது வலியைத் தரும் உண்மை. சாராய போதையில் துள்ளிக் குதித்து அடவுகளை ஆடிடும் ஏழுமலை மயங்கி விழுந்தவுடன், அவருக்குத் தண்ணீர் தர பல கால்கள் ஓடின என்பது கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றது. விடுவிப்பு இல்லாத இக்காட்டான நிலையிலும் நம்பிக்கையின் ஒளிச்சீற்றுப் பரவிட எழுதுவது பவாவின் கதைகளில் தென்படும் சிறப்பம்சம். இருளுக்குள் ஒளியைக் காண்பது போல, இடைவிடாத துயரங்களுக்கிடையிலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் பவாவின் கதைகள் வாழ்வின் மீதான நேசிப்பைச் சொல்லுகின்றன.

முகம், வேறுவேறு மனிதர்கள், சிதைவு, மண்டித்தெரு பரோட்டா சால்னா போன்ற கதைகள் நகர்ப்புற வாழ்க்கையிலூட்ட, மனித இருப்பை விசாரிக்க முயலுகின்றன. எனினும் மலைகளும்,நிரம்பிய காட்டுப் பிரதேசத்தைப் பின்புலமாகக் கொண்ட கதைகளில் பவாவின் புனைவுகள் அளவற்றுப் பொங்குகின்றன. காட்டிற்கும் மனிதனுக்கென பூர்விகக் தொடர்பானது வெவ்வேறு காட்சிகளாக விரிந்திருப்பது கதைகளில் பலமாக உள்ளது.
வாழ்க்கை தரும் நெருக்கடிகளின் ஊடே மனஇருப்பின் அவஸ்தைகளை விவரிப்பது பவாவின் தனித்துவம். யதார்த்தம் சூழலில் நம் அடையாளம் எப்படியும் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்திப் புனைவின் வழியே, பவா கட்டமைக்க முயலும் கதைமொழி, வாசிப்பால் தொந்தரவை ஏற்படுத்துகின்றது. "முகம்"கதையில் புகைப்பட ஆல்பத்தில் பதிவாகியிருக்கும் பெருங்கதையாடல் வேறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகிறது. சாதாரண விஷயத்தையும், தன்னுடைய மொழி ஆளுமையின் வழியே வேறு ஒன்றாகப் படைப்பது பவாவின் கதைசொல்லலை வளம் மிக்கதாக்குகிறது. அசலான தமிழ்ப் புனைகதை ஆக்கத்தில் பவா படைப்பளுமையின் மூலம் தனக்கான இடத்தினை உறுதி செய்துள்ளார் என்றும் தொகுப்பினை மதிப்பிட இடமுண்டு

3 comments:

 1. பவாவிற்கு, சூர்யனுக்குச் கீழ் எல்லாவற்றின் மீதும் அக்கறை இருக்கின்றது. மொழி உருவாக்கிட முயலும் அதிகாரத்தைச் சிதைத்துப் புனைவின் வழியே சிறுக்கத்தை நெகிழ்விப்பது பவாவின் தனித்துவமாகும்
  பாவாவின் எழுத்துக்கள் அனைத்தும் படிக்க ஆசையாக உள்ளது, எல்லா புத்தகங்களையும் வாங்கி படிக்க இருக்கிறேன்.

  குப்பான்_யாஹூ

  ReplyDelete
 2. எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.
  http://dubukku.blogspot.com/2009/04/blog-post.html

  ReplyDelete
 3. Anna Blog Super

  - Anand Baskaran

  ReplyDelete