Tuesday, October 20, 2009

ஏழுமலை ஜமா



சில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.

ஏழுமலை ஜமா குறுபடத்தை காண

7 comments:

  1. பவா,
    நாம் பேசிடாத கதைகளை இங்கே படிப்பதற்கு மகிழ்ச்சி.ஒரு நூற்றாண்டு முழுக்க பேசினாலும் தீராத கதைகளை கொண்டிருக்கும் உங்களின் மசி அவ்வப்போதாவது எழுதட்டும்.

    ReplyDelete
  2. பவா.,
    கடைசி வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது.
    கூத்துக்கள் போல வழக்கொழிந்து போனவை எத்தனையோ...

    ReplyDelete
  3. பவா,
    எழுதுவதன், வாசிப்பதன் சுவாரசியத்தைவிட வாழ்வைப் பேசிப் பகிர்வதில் உணரும் அன்யோன்யம் அதீதமானது. கூச்ச சுபாவியாகவே இருபது வருட வாசிப்பை கழித்துவிட்ட காலங்களில், உங்களை ஒரே முறை மட்டும் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. வம்சி புக்ஸ் என்ற பெயரை நான் முதன்முதலில், இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள் புத்தகத்தின் வாயிலாகத்தான் அறிமுகம். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. வணக்கம் தோழர்.

    இணையதளத்திற்கு வந்தாலே -யாரோ யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருப்பதும், அடையாளமில்லாத மொட்டைக் கடிதங்களுமாக - ஒரு குக்கிராமமாகத் தோற்றமளிக்கும்.
    உங்களது வலைப்பூ போல ஒரு சிலவைகள் மட்டும்தான் நினைவுகளைத்தூண்டுவதும், இனிமையான வாசிப்போடும் இருக்கின்றன.

    ஏழுமலை ஜமா - அற்புதமான . . . என்ன சொல்லுவது? கதையா படைப்பா சரியாகச்சொல்ல வார்த்தை இல்லை. தற்செயலாக கதையை நான் படிக்கும் முன்பாக கர்ணாவின் குறும்படத்தைப் பார்த்தேன். பின்பு, தொகுப்பில் கதை வாசிப்பு.

    வாசிப்பில் என்ன விதமாக என் உருவகப்படுத்துதல் இருந்ததோ அதை விட ஒரு படி மேலாக படத்தின் காட்சிப்படுத்துதல் அமைக்கப்பட்டிருந்தது. .
    சிறுகதைகளை படமாக எடுப்பவர்களுக்கு இந்த கதையையும், குறும்படத்தையும் ஒரு முறையாவது வாசிக்கவும்-பார்க்கவும் கொடுக்கவேண்டும்.
    எழுத்தாளனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காட்சி.ஒரு எழுத்தைக்கூட சிதைக்காத நேர்மை.

    த.மு.எ.க.ச.வின் 2009 ற்கான சிறந்த சிறுகதை நூலாக "நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை" விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. முதலில் வாழ்த்துகள் பவா.
    //த.மு.எ.க.ச.வின் 2009 ற்கான சிறந்த சிறுகதை நூலாக "நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை" விருது //

    பதிவை பற்றி
    நான் அந்த குறும்படத்தை பார்த்தபோது
    ஏற்பட்ட அதிர்வு பற்றி சொல்ல
    முடியவில்லை. உங்களின் பதிவு வழியே
    அந்த அதிர்வு மீண்டும் எழுகிறது.
    //அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு//
    கனத்து போகிறது இதயம்.

    ReplyDelete
  6. ஏழுமலை ஜமா கதையும் குறும்படமும் வ்ருவானது குறித்த தங்களது பதிவு தங்களின் படைப்பு மனத்தையும் கருணாவின் குறும்பட ஆக்கமுயற்சி வெற்றியையும் ஒருசேரஉணர்த்தியது.

    ReplyDelete
  7. ஆர்.இரவிச்சந்திரன், அருணை பொறியியல் கல்லூரி, திமலைMarch 9, 2010 at 11:52 PM

    கலையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள ஒரு கலைஞனின் மிக கொடிய தருணம், அக்கலையே, அழிவைச் சந்திக்கும் நேரம்தான்.

    'ஏழுமலை ஜமா' என்ற, இவ்வளவு கனமான கதையை ஜனரஞ்சகமாக சொன்ன அதே நேரம், கதையின் அழுத்தம் சிறிதும்

    குறையாமல் இயக்கப்பட்டதால், இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை.
    திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமம் ஒன்றை மையாமாக கொண்ட கதையிது.

    ஏழுமலை என்பவர் ஒரு கூத்து வாத்தியார். துரியோதனன் கேரக்டர் செய்வதில் பெயர் பெற்றவர். அவரது குழுவின்

    'பாஞ்சாலி சபதம்' நாடகம் போன்றவை உள்ளுர் திருவிழாவில் அடிக்கடி அரங்கேற்றப்படும்.
    ஒருமுறை திருவிழாவில் நாடகத்திற்குப் பதிலாக, திரைப்பட வீடியோ காண்பிக்கப்படும் என அறிந்து அவரது ஜமா

    அதிர்கிறது. பிழைப்புக்கு வழிதேடி ஒவ்வொருவரும் ஒரு தொழில் தேடிக்கொள்கின்றனர். நமது வாத்தியாரும், பெங்களுர்

    சென்று காய்கறி மூட்டை தூக்கி பிழைக்கச் செல்கிறார். உள்ளூரில், வாத்தியார் என்று பெயர் பெற்ற ஏழுமலை,

    பெங்களுரில், அவமதிக்கப்படுகிறார். மீண்டும் ஊர் திரும்புகிறார்.

    அவரது ஜமா உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதிக்கும்போது ஒவ்வொருவரும் ஒரு யோசனை சொல்கிறார்கள்.
    ரிக்ஷா ஓட்டுவது, கரும்பு வெட்டுவது, கட்டிட வேலை பார்ப்பது என விதவிதமான யோசனைகள் கிளம்புகின்றன.

    எல்லாவற்றையும் நிராகரித்த ஏழுமலை, 'போங்கடா, வந்துட்டானுங்க. வாத்தியாரே, கூத்து போடலாமான்னு ஒருத்தராவது

    கேக்கறீங்களாடா' என்று கேட்டுவிட்டு விரக்தியோடு நகர்கிறார். கலைஞனுக்கும் மற்ற சாதாரண மனிதனுக்கும் உள்ள

    வித்யாசத்தை சிறுகாட்சியில், குறைந்த நேரத்தில் மனதில் பதிய வைக்கிறார்கள். உண்மைக்கலைஞனால் கலையைத்தவிர

    வேறெதையும் பிழைப்பாக ஏற்க இயலாது என்பது தெளிவாகிறது.

    'வாழ்க்கையில் கவிதை எழுதுபவன் கவிஞனல்ல. கவிப்புணர்வையே வாழ்வாக ஏற்றுக்கொண்டவனே கவிஞன்' என்ற

    பாரதியின் விளக்கம் கவிஞனுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு கலைஞனுக்கும் தான் என்று புரிந்தேன்.

    பின் ஏழுமலை, மிதமிஞ்சி குடித்து விட்டு திரிகிறார். ஒரு புது கூத்து கூட்ட ஒத்திகையை பார்க்க நேர்கிறார். அந்த

    கூட்டத்தின் வாத்தியாரின் தவற்றை ஏசிவிட்டு ஏழுமலை, ஆடிக்காட்டுகிறார். இறுதியில் நிலைதடுமாறி விழுந்து

    விடுகிறார். இறுதியில் இவர் யாரென அறியப்படுகிறார்.

    வலிமையான கதை. சிக்கலில்லாத திரைக்கதை. தத்ரூபமான, படைப்புத்திறனுள்ள ஒளிப்பதிவு, அற்புதமான எடிட்டிங்,

    சிறந்த இயக்கம் இப்படத்தின் நிறைவுகள். ஒளிப்பதிவாளர் மற்றும் அவர் துனைவர்கள் மிகவும் பாராட்டப்பட

    வேண்டியவர்கள்.தத்ருபமான இசை கொடுத்தவர்கள் இக்கலையில் தேர்ந்தவர்கள் என்பதால் இசை சிறப்பாக அமைந்ததில்

    ஆச்சரியம் ஏதுமில்லை. இசையை சத்தமில்லாமல்(noiseless) கொடுத்த சவுண்ட் எடிட்டருக்கு பாராட்டுக்கள்.

    சிற்சில இடங்களில் வசனம்(novice) சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், இது மாபெரும் படைப்பு என

    அறியப்படும்.

    ReplyDelete