Tuesday, May 31, 2011

மூன்றாம் பிறை - மேலும் ஒரு கடிதம்

அன்பு கே வி ஷைலஜா அவர்களுக்கு

உங்களுக்கு என்னை நினைவில் இருக்க வாய்ப்பில்லை. இந்த அஞ்சலைப் படிக்க அது தடையுமில்லை. மூன்றாம் பிறை என்ற அருமையான - எளிய, ஆனால் அற்புதமான அனுபவத் தொகுப்பின் மொழி பெயர்ப்பை வாசித்து முடித்த திளைப்பில் எனது வாழ்த்துக்களைச் சொல்லும் அவசரத்தில் இந்த மடல்.

காஞ்சி நண்பர் மோகன் நேற்று இரவு என்னை அழைத்தபோது இந்தப் புத்தகத்தை அப்போதுதான் திருவண்ணாமலையில் இருந்து வாசித்துக் கொண்டுவந்த பரவசத்தில் பேசிக் கொண்டே இருந்தார். இன்று நான் வேறு ஒரு பணி நிமித்தம் காஞ்சி சென்றவனை வழியனுப்ப அவர் ரயிலடிக்குக் கொண்டு சேர்க்கும்போது, வழிப்பயணத்திற்கு வாசிக்க எனும் சாக்கில் ஞாபகமாக அந்தப் புத்தகத்தைக் கேட்டு வாங்கி வந்துவிட்டேன். மாம்பலத்தை எட்டும் போது உங்கள் எண் அந்தப் புத்தகத்தில் இருக்குமே, வாழ்த்திவிடலாம் என்று நான் பார்க்கும் அதே நேரத்தில் அத்தனை பொருத்தமாய் காஞ்சி தோழர் மோகன் என்னை அழைத்து, ஷைலஜா எண் புத்தகத்தில் இருக்குமே அதை அனுப்பி வையுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதும் நேர்ந்தது...சென்னை சேர்ந்த அடுத்த நிமிடம் உட்கார்கிறேன் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு எழுத..

மம்மூட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழி பெயர்ப்பு இத்தனை கவிதையாய் இருக்குமானால், மலையாளத்தில் அது எப்படி ஒலிக்கும் என்று அறிந்து கொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.

வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே சொல்ல வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அதைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்து மீறலை, போலித் தனத்தை, கூசாது பொய்யுரைப்பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்மூட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியார் கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.

தான் என்னவாய் இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

தனது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவுகூறலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக் கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது. ரத்தம் தோய்ந்த முகத்துடனான முதல் ரசிகனும், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், ஆக் ஷன் பாபுவும், ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்துவைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் அந்த மூத்த தம்பதியினரும், இன்ன பிறரும் என்றென்றும் எனதருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.

தன்னை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில் தான் மிகப் புகழுடன் உலா வருகிறோம் என்பது அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை....எல்ல்லவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.

ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

மம்மூட்டி அருகே உட்கார்ந்தபடி தனது வேட்டியின் நுனி காற்றில் பறக்க தனது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.

மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: இதைத் தமிழில் அவரே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தனது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் மம்மூட்டி என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் வேண்டாமே என்று அப்படியே மலையாளம் நனைந்த தமிழில் விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம் ! ) குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...

வாழ்த்துக்கள் ஷைலஜா..

எஸ் வி வேணுகோபாலன்

No comments:

Post a Comment