Friday, August 19, 2011

தொடர் - 2


''நீங்களே கூப்பிடுங்க'' என்றார் எடிட்டர் லெனின்.

கொஞ்சம் நடுக்கத்துடன் நான் டெலிபோன் எண்களை அழுத்தி, எதிர்முனையின் 'யார்'? என்ற கம்பீரமான குரலுக்கு 'ஜே.கே. இருக்காரா?' என்றேன் உள்ளடங்கிய குரலாய்.

''அப்படி எவனும் இங்க இல்ல''... என்ற உஷ்ணமேறிய வார்த்தைகளோடு எங்கள் உரையாடல் அறுந்து போனது.

''சார் அப்படி எவனும் இங்க இல்லன்னு கத்தறாறு'' என்றேன் லெனினைப் பார்த்து,

அவர் கொஞ்சமும் பதட்டப்படாமல், ''ஒண்ணுமில்ல பவா, அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரை ஜே.கே. ன்னு கூப்பிடுவாங்க. நீங்க புதுசு இல்ல அதான். ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போய், நேரா கூப்பிடுங்க''.

அடுத்த அரை மணி நேரத்தில் நானும், நண்பர் எஸ்.ஆரும், ஜெயகாந்தன் வீட்டு கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

வெற்றுடம்போடு ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து, யாருடடேனா பேசிக் கொண்டிருந்தார்.

''இந்த ஊஞ்சல்ல இருந்து மட்டும்தான் பேசுவேன், லைட்டிங் மாத்தறேன், அதைப் பண்றேன், இதப் பண்றேன்னு என்னை அலைக்கழிக்க கூடாது. அதிகபட்சம் ஒரு மணி நேரம். எழுந்து போயிடுவேன். ''

எதிர்முனையில் நின்று கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒரு மக்கு மாணவனைப் போல இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சட்டென என்பக்கம் திரும்பி,

'சொல்லுங்க' என்றார்.

''சார் நான் பவாசெல்லதுரை, திருவண்ணாமலை. மாதவராஜோட friend'' என்று தொடர்ந்த என் வார்த்தையை மறித்து,

''உங்களைத்தெரியும் சொல்லுங்க'' என்றவாறு உட்கார இடம் காட்டினார்.

நான் உட்காராமலேயே, ''இவர் என் நண்பர் எஸ்.ஆர். பாண்டிச்சேரி. இந்த ஆகஸ்ட் 15 க்கு உங்களோட 'ஊருக்கு நூறுபேர்' படத்தை பாண்டிச்சேரில போடப்போறோம்..... எடிட்டர் லெனின் வர்றார். நீங்களும் வந்தா....

''எப்போ?''

''ஆகஸ்ட் 15, சாயங்காலம்''

''எங்க?''

''பாண்டிச்சேரி, அல்லயன்ஸ் பிரான்சிஸ்ல.''

''வர்றேன்.''

எங்கள் மௌனம் பார்த்து, ''பாண்டிச்சேரின்னதால வர்றேன்'' என்ற வெடித்த சிரிப்புக்குள்ளிருந்து வந்த வார்த்தைக்கு திக் பிரமை பிடித்து நின்றிருந்த அந்த தொலைக்காட்சி நிருபர் உட்பட எல்லோருமே சிரித்தோம்.

இப்படித்தான் ஜெயகாந்தன் என்ற அந்த கம்பீரமான எழுத்தாளன் எனக்கு அறிமுகமானார்.

பாண்டிச்சேரியில் படம் பார்த்து முடிந்தவுடன், மேடையில் போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளைப் பார்த்துக் கொண்டே மேடை ஏறினார். எடிட்டர் லெனின், ஜெ.கே., இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார். நான் ஒரு எழுத்தாளனின் கம்பீரத்தால் என் இருக்கையில் தலை நிமிர்ந்து உட்காருகிறேன்.

அன்று பின்னிரவில் நீடித்த என் பயணத்தின்போது மனம் ஜெயகாந்தனையே நினைத்துக் கொண்டிருந்தது. விடுபட்டிருந்த அவரின் பல படைப்புகளை தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்தேன்.

அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜி. நாகராஜன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் போல் என்னை அவைகள் ஆகர்ஷிக்கவில்லை. படைப்பு கைக்கூடும் தருணத்தில் எல்லாம் ஜெயகாந்தன் உள்நுழைந்து உபதேசம் பண்ணுவது பிடிக்கவில்லை. ''சார் please கொஞ்சம் தள்ளிக்கோங்க'' என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படைப்புகளில் அவர் ஏற்படுத்திய தர்கங்கள் என் நிம்மதியை குலைத்தன. அதுவரை நான் சரியென நம்பிக் கொண்டிருந்த எல்லாவற்றையும் கலைத்துபோட்டு கேள்வி எழுப்பின. ஒரு மாயப்பிசாசு என் குரல்வளையை நான் மூர்ச்சையாகிற வரை நெறித்தது. நான் அதனிடமிருந்து தப்பிக்க அதை சிருஷ்டித்தவனை தொலைபேசியில் அழைத்தேன்.

அவ்வுரையாடலே என்னையும் ஜெ.கே.வையும் தோழமையில் நனைத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு கொஞ்சி, விளையாடி, சண்டை போட்டு....

ஓ..... அது எத்தனை அற்புதமான காலம்?

''நீங்கள் திருவண்ணாமலைக்கு வரவேண்டும் ஜெ.கே.''

''எப்போன்னாலும்....''

பாரம்பரியம்மிக்க டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக சப்பணம் போட்டு தரையில் உட்காருகிறார். சம்பிரதாயங்களற்ற அம்மேடையின் மௌனத்தை அவரே உடைக்கிறார். மதிப்பீடு, அதிகாரம், பணம், செல்வாக்கு, புகழ், வாழ்வு எல்லாவற்றின் மீதும் நாம் அதுவரைக் கொண்டிருந்த போதை, வெறி, எல்லாம் அக்குரலின் கம்பீரத்தில், அதில் இருந்த நிஜத்தின் தீ ஜூவாலையில் பொசுங்கியதைப் பார்த்தேன். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என என் நெஞ்சைத் தடவிக் கொண்டேன். கூட்டத்தின் வெப்பம் அக்கலைஞனை மேலும் ஆவேசமாக்குகிறது. சிறுவயதிலேயே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் அப்பாவின் பயமுறுத்தல்களுக்காக கோவிலுக்குப் போனதாக ஞாபகம். என்றைக்கும் கடவுளிடம் வேண்டிக் கொண்டதில்லை. அப்படி வேண்டிக் கொண்டது நிகழ்ந்திருந்தால் ''என் அப்பன் எப்ப சாவான்?'' என்ற ஒன்றை வேண்டிக் கொண்டிருந்திருப்பேன். திரும்பி அடிக்க முடியாதவனின் மனநிலைப் போல துயரமானது வேறெது? எனக்கும், அம்மாவுக்கும் தொடர்ந்து விழுந்த அடிகளின் பதிலடிகள் எங்கள் இருவரின் மனதுக்குள்ளேயே மரித்துப்போனது. 'அப்பா' என்ற ஸ்தானத்தின் மீது சமூகம் ஏற்றியிருந்த பிம்பம் எங்கள் கோபத்தை உறையச்செய்தது. ஆகவே நாங்கள் கடவுளிடம் வேண்டியிருக்கக்கூடும்...’ எனத் தொடர்ந்த அந்த ஆவேச உரை, ‘பணம் சம்பாதிக்க எதுவும் செய்கிறான், பைனான்ஸ் நடத்துகிறான், வட்டிக்கு விடுகிறான் என்ன கொடுமை? இவன் கவிதையும் எழுதுகிறான்!’ உண்மையின் அனலில் கூட்டம் கொஞ்சம் தள்ளி உட்காருகிறது. ‘என்னை எல்லோரும் திமிர்பிடித்தவன் என்கிறார்கள், அப்படி அல்ல அது. முதுகு வளைத்து, குனிந்து, தவழ்ந்து நடக்கும் சமூகத்தில் நான் நிமிர்ந்து நடக்கிறேன். அப்படி நிமிர்ந்து நடப்பவன் திமிர் பிடித்தவன் என்றால் ஆம் நான் திமிர் பிடித்தவன் தான்’ என்ற அந்தக் குரலின் கம்பீரம் வாழ்நாள் முழுக்க என்னை நிமிர்ந்து நடக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

முற்றம் முடிந்த அந்த வெற்றுமைதானத்தில் அமர்ந்து கையில் புகையும் ஒரு சிகெரெட்டோடு மௌனத்தை மட்டுமே குடிக்கிறார். அதற்கு முன் எந்த எழுத்தாளனிடமிருந்தும் இந்த ஆவேசத்தை நான் அடைந்ததில்லை. அடுத்த நாள் விடியும் வரை நீடித்த அன்றைய சபை உரையாடல் யாராவது ஒருவரால் சரியாக பதிவு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அப்படைப்பிற்கு நோபல் கிடைத்திருக்கும்.

மற்றுமொரு முறை திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்லூரியும் சாகித்ய அகாடெமியும் இணைந்து நடத்திய 3 நாள் கருத்தரங்கம். தொடக்க உரை ஜெ.கேயுடையது. இலக்கியம், கலை, மக்கள், மனித மதிப்பீடு அரசியல், என சுழன்றடித்த பேச்சு, மதகலவரங்கள் பற்றி பேச பேச நெருப்பென ஜொலித்து, ''ஜாதி, மத இனக் கலவரங்களில் மாறி மாறி மக்கள் கொல்லப்படுவதை விட பூகம்பம், நிலநடுக்கம், கடல் சீற்றத்தால் கூட்டம் கூட்டமாக எம்மக்கள் செத்தொழிவதில் எனக்கு சம்மதமே’’ என்ற வரிகள் இன்றும் என்னை பொசுக்கிக் கொண்டிருக்கின்றன.

அவர் எழுத்தைவிட பேச்சும், கட்டுரைகளைவிட அவரையும் பிடித்திருந்தது. அக்காலங்களில் தொடர்ந்து எங்களுடனிருந்தார். என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவின் கல்லூரி பட்டமளிப்பிற்கு கே.எஸ்.சுப்ரமணியத்தை அழைத்திருந்தோம். அவரோடு ஜெ.கே.வும் சும்மா வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் அறைகளை சாத்தனூர் அணையில் போட்டிருந்தோம். மூன்று நான்கு நாட்கள் நீடித்த அத்தங்கலில் நாங்கள் அடைந்த பரவசங்கள், வாழ்வில் வேறெப்போதும் கிடைக்காதவைகள்.

நள்ளிரவு 1மணி சாத்தனூர் காடுகளுக்கிடையேயான ஒரு ஒற்றையடி பாதை. கையோடு கொண்டுபோயிருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் ஜெ.கே. பத்திருபது பேர் நாங்கள் மண் தரையில். சுற்றிலும் மரங்களும், நீரும், ஏதோ சில காட்டுப் பூச்சிகளின் சத்தமும், வெகுத்தொலைவில் கம்பீரமாய் ஒளிர்ந்த நிலவும். கைகளில் தவழ்ந்த மதுக்கோப்பைகள் தாறுமாறாய் காலியாகிக் கொண்டிருந்தன.

என் நண்பர் கருணா, ''ஜெ.கே. இன்று ஏப்ரல் 21. மாவீரன் பகத்சிங் நினைவு நாள். இந்த அகாலத்தில் நீங்கள் பகத்சிங்கை பற்றி பேசவேண்டும்.''

முகத்தில் இருகைகளும் புதைய உட்கார்ந்திருக்கிறார். அவ்வப்போது தனக்கு நேர் எதிரே ஒளிரும் நிலாவை மட்டும் பார்க்கிறார். நாங்கள் மங்கலாகவேணும் அவருக்கு தெரியாமல் ஏதோ ஒரு விஸ்வரூபம் அவரை மறைத்ததாகவே அக்கணத்தை நாங்கள் உணர்ந்தோம்.

தன் நாற்காலியை விட்டு எழுந்து,

''பகத்சிங்... பஞ்சாபில் பிறந்த அம்மாவீரன்….’’ என ஆரம்பித்த ஆரம்பம் மட்டுமே எனக்கு இப்போது நினைவிருக்கிறது. 1.50க்கு மூச்சிறைக்க பத்து பேருக்கு மட்டுமேயான அவ்வுரையை முடித்து உட்காருகிறார். யாரும் யாரோடும் பேசிக் கொள்ளாமல் ஒரு செயற்கை தடுப்பணையால் வியாபித்திருந்த அக்காட்டின் விஸ்தீரணத்தை நடந்து கடந்தோம்.

அடுத்தநாள் மதிய உணவிற்கு என் வீட்டிற்கு வந்திருந்தார். தனக்கு என்னென்ன வேண்டுமென ஷைலஜாவுக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

கேப்பை களியும் தலைக்கறிக்குழம்பும், கூட கொஞ்சம் பண்ணைக்கீரையும், முருங்கை இலை போட்ட கேழ்வரகு அடை என்று நீண்ட அந்த உணவுப்பட்டியல் என் குழந்தைகளுக்கே புதுசு.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த அந்த மதிய உணவின் நேரத்தில் உணவைப் பற்றி நானறியாத பல புதிய தகவல்களை சொல்லிக்கொண்டேயிருந்தார். ''கீழே போகப்போகத்தான் நமக்கு நல்ல ருசியான உணவு சாத்தியம். நட்சத்திர ஹோட்டல்களில் சக்கைகளே உணவாக உண்ணக்கிடைக்கும்.

என் அப்பா தீவிர சைவம். கடலூரில் தினம் ரண்டனாவை மாலை டிபனுக்காக எங்களுக்குத் தருவார். ஆரியபவன் தோசைக்கு மட்டுமேயானது அக்காசு. கூடவே என் அக்காவேறு துணைக்கு. வழியில் அவளை கன்வின்ஸ் செய்துவிடுவேன். இருவரும் ரோட்டோர ஒரு தோசைக்கடைக்காய் ஒதுங்கி நிற்போம். அப்போதுதான் சுடச்சுட வார்த்த தோசைகளோடு, அந்த மண் சட்டியிலிருந்து அகப்பையில் மொண்டு மொண்டு ஊற்றின மீன்குழம்பு வாசமும் ருசியும் இன்றளவும் உலகின் எந்த நாட்டிலும் எனக்கு கிடைக்காதவைகள்.

ஜனசக்தி ஆபீசில் எனக்கு கிடைத்த கம்யூனிஸ்டு சைவ உணவை, எங்கள் அலுவலகம் பெறுக்க வந்தவனிடம் ரகசியமாய் தந்துவிட்டு அவன் வீட்டு களியும் கருவாட்டுக் கொழம்பையும் பின் பக்க வாசல் வழியே வாங்கித்தின்ன தேகம் இது. அடித்தள மக்கள் மட்டுமே ருசியை இன்றளவும் தங்கள் உணவுகளில் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.''

அதன்பின் அவர் எதற்காகவேனும் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, கலைஞரோடு சமரசமாகி,......................... .

ஒரு படைப்பாளியாய் விஸ்வரூபமெடுத்து, கம்பீரமாய் எழுந்து நின்று பகத்சிங்கைப்பற்றி ஒரு அகாலத்தில் வீர உரையாற்றிய அந்த ஜெயகாந்தன் மட்டுமே என்னுள் என்றென்றும் நிறைந்திருக்க மிச்ச நினைவுகளை காலம் கருணையற்று அழித்துவிடட்டும்.

6 comments:

 1. பவா அவர்களே ! ஜே.கே பற்றி பதிவினை படித்தேன். அவர் தயாரித்த முதல் படம் "உன்னைப் போல் ஒருவன்" அதனைத் தயரித்த ஜே.கே. யின் கம்பெனி பெயர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் .தண்டாயுதபாணி என்பது அவருடைய தந்தையின் பெயர் என்பார்கள். பாசமுள்ள மகன் தான் ஜே .கே.---காஸ்யபன்

  ReplyDelete
 2. பவா, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எழுத்துகள் உங்களுடையவை. காட்சிப் படிமமெனக் கண்ணெதிரில் திரை காட்டும் உங்கள் மாயக் கரங்களைக் கொஞ்சம் எனக்கும் கடன் கொடுங்களேன். எழுதும் விரல்களுக்கு என்றென்றும் என் அன்பு.

  ReplyDelete
 3. ஜே.கே பற்றிய எந்த செய்திகளும் என்னை கவர்திழுக்கும் தன்மை உள்ளவைதான். அவரை புகைபடத்தில் பார்க்கும்போதே எனக்கு உதறல் எடுக்கும் .நீங்களெல்லாம் சிங்கத்தின் அருகில் அமர்ந்து அதன் பிடரியினை வருடும் பேரு பெற்றவர்கள். சிறந்த ஒரு பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 4. பிரியமிக்க பவா,
  உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

  சிறுகதையோ,கட்டுரையோ,வாழ்வனுபவங்களை சொல்லும் எழுத்தோ, எதுவாக இருப்பினும்
  ஒரு கனவுத்தன்மை குடிகொண்டுவிடுகிறதே அந்த மாயம் தான் என்ன?

  உங்கள் அனுபவமா, வாழ்வு சொல்லித்தந்த பாடமா இல்லை,மனிதர்களை நெருங்கி ஆராயும் நுண்ணுணர்வா?
  என்னால் பகுத்துணர முடியவில்லை பவா!

  உங்களின் மனதில் வண்டலாக படிந்து போயிருக்கும் அன்பு தான் உங்கள் வழி படைப்புகளாக மிளிர்கிறது என்கிற உண்மை இப்போது மெல்ல மனதில் ஊர்ந்துகொண்டிருக்கிறது பவா....

  அதிகம் எழுதப்படாத வடஆற்காட்டு மனிதர்களின் வாழ்வும் நிலப்பரப்புகளும் இன்னும் உங்கள் எழுத்துக்களில் பதிவாகட்டும் பவா... நிறைய எழுதுங்கள். இது உங்கள் வாசகனின் வேண்டுகோள்.

  நெஞ்சு நிறைந்த அன்போடு
  சரவணன்,

  ReplyDelete
 5. பிரியமிக்க பவா,
  உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

  சிறுகதையோ,கட்டுரையோ,வாழ்வனுபவங்களை சொல்லும் எழுத்தோ, எதுவாக இருப்பினும்
  ஒரு கனவுத்தன்மை குடிகொண்டுவிடுகிறதே அந்த மாயம் தான் என்ன?

  உங்கள் அனுபவமா, வாழ்வு சொல்லித்தந்த பாடமா இல்லை,மனிதர்களை நெருங்கி ஆராயும் நுண்ணுணர்வா?
  என்னால் பகுத்துணர முடியவில்லை பவா!

  உங்களின் மனதில் வண்டலாக படிந்து போயிருக்கும் அன்பு தான் உங்கள் வழி படைப்புகளாக மிளிர்கிறது என்கிற உண்மை இப்போது மெல்ல மனதில் ஊர்ந்துகொண்டிருக்கிறது பவா....

  அதிகம் எழுதப்படாத வடஆற்காட்டு மனிதர்களின் வாழ்வும் நிலப்பரப்புகளும் இன்னும் உங்கள் எழுத்துக்களில் பதிவாகட்டும் பவா... நிறைய எழுதுங்கள். இது உங்கள் வாசகனின் வேண்டுகோள்.

  நெஞ்சு நிறைந்த அன்போடு
  சரவணன்,

  ReplyDelete
 6. //கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார். நான் ஒரு எழுத்தாளனின் கம்பீரத்தால் என் இருக்கையில் தலை நிமிர்ந்து உட்காருகிறேன்.//

  // ‘பணம் சம்பாதிக்க எதுவும் செய்கிறான், பைனான்ஸ் நடத்துகிறான், வட்டிக்கு விடுகிறான் என்ன கொடுமை? இவன் கவிதையும் எழுதுகிறான்!’//

  சிங்கம் சிங்கந்தான்.

  ReplyDelete