Saturday, October 15, 2011

தொடர் - 10

ந்த பிரபல வாரப்பத்திரிகையின் சீனியர் நிருபர் ஒருவர் அப்போதைய தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரான தமிழ்க்குடிமகனை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் ஆகசிறந்த படைப்பாளி?

முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

தமிழில் நீங்கள் பார்த்து வியந்த படைப்பு?

கலைஞரின் பொன்னர் சங்கர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடல் இப்படியே தொடர்வதில் கடுப்பான அந்நிருபர்,

சுந்தர ராமசாமியின் படைப்புகளைப் பற்றி.....?

யார் அவர்?

தமிழின் மிக முக்கியமான, மூத்த படைப்பாளி.

உங்களுக்கு அவர் முக்கியமானவராக இருக்கலாம். எனக்கில்லை. எங்களுக்கு எல்லாமே ஐந்தமிழறிஞர் கலைஞர்தான்.

முத்தமிழ் அடுத்த அரைமணி நேரத்திற்குள் ஐந்தமிழானதில் மேலும் அதிர்வுற்ற அந்நிருபர்,

எனக்கொன்றுமில்லை சார், சுந்தர ராமசாமியின் பெயர் இவ்வருட நோபல் பரிந்துரைக்கு போயிருப்பதாக சொல்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஒரு எழுத்தாளரை, தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருக்கே யாரென்று தெரியவில்லை என்பதைப் பதிவு செய்து கொள்ளட்டுமா?

நான் மனம்விட்டு லயித்த நேர்காணல் அது.

எனக்கு அப்போது இருபதுக்கும் இருபத்தைத்துக்குமிடையேயான வயது. பி.காமில் எதுவும் விளங்காமல் தமிழ்படைப்புகளையும், சிறுபத்திரிகைகளையும் தேடி தேடிப்படித்துக் கொண்டிருந்த நாட்கள் அது. தமிழில் இன்றைய நவீன எழுத்தாளர்கள் பலர் சுஜாதா வழியே இவ்விடத்திற்கு வந்தேன் என பெருமையாகக் குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். நான் சு.ரா. வழியேதான் சுஜாதாவை தெரிந்து கொண்டேன். அவர் தயாரித்த காலச்சுவடு மலரை சுஜாதா தனக்கேயுரிய வெகுஜனப்பார்வையோடும், கிண்டலோடும் விமர்சித்திருந்தார். அவ்விமர்சனத்தில் மிகுந்த கோவமுற்று, சுஜாதாவின் வெளிநாட்டு குடை என்று சு.ரா அவருக்கு ஒரு ஆவேசமும் கிண்டலுமான பதிலெழுதியிருந்தார். அதன் பிறகே சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறு கதைகளை வாசிக்க ஆரம்பித்து இடையிலேயே விருப்பமுற்று விட்டுவிட்டேன்.

அப்போது தமிழில் காலச்சுவடு, இனி மற்றும் இரண்டே இதழ்களோடு நின்று போன புதுயுகம் பிறக்கிறது இதெல்லாம் என் வாசிப்பின் தாகத்தைத் தீர்த்தும், சுபமங்களை, புதியபார்வை, செம்மலர், தாமரை போன்ற இதழ்கள் இட்டு நிரப்பியும் என்னை செலுத்திய காலங்கள் அவைகள்.

காலச்சுவடு இதழ் முழுக்க வாசித்து முடித்து மனம்லயித்து ஒரு மாலையில், சுந்தர ராமசாமிக்கு ஒரு நீண்ட கடிதமெழுதினேன். அப்போது என்னால் எழுதப்பட்ட எல்லாக் கடிதங்களுமே காதலிக்கு எழுதப்படும் ரொமான்சோடு தான் இருக்கும். முகவரிகள் மாறினாலும் பெரிய விபத்தொன்றும் நிகழாது. என் கடித்தத்திற்கான பொறுப்பான பதில் அவரிடமிருந்து அடுத்த வாரமே என்னை வந்தடைந்தது.

ஒரு எழுத்தாளனின் டைப் செய்யப்பட்ட கடிதம் அதற்குமுன் நான் பார்த்திராதது. நண்பர்களிடம் சு.ரா.வைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் பெரிய பணக்காரரென்றும், சொந்தமாக ஜவுளிக்கடை வைத்திருக்கிறாரென்றும், அவர் டிக்டேட் செய்வதை ஷார்ட்ஹேண்டில் நோட்ஸ் எடுத்து டைப் செய்ய ஸ்டெனோ டைப்பிஸ்ட் என இரு பெண் பணியாளர்கள் உண்டெனவும் செய்திகளை மிகுந்த ஆச்சரிங்களினூடே சேகரித்துக்கொண்ட எனக்கு,

அது வரை டீ, சிகரெட், பீடி முதல் ஒரு வேளை நல்ல சாப்பாட்டுக்குவரை ஏதாவது ஒரு வேலைக்குப்போன உற்ற நண்பனை மட்டுமே நம்பியிருந்த, தாடி வளர்த்த, ஜோல்னாப்பை மாட்டித் திரிந்த நவீன இலக்கிய படைப்பாளிகளை மட்டுமே எனக்கு தெரியும்.

ஜவுளிக்கடை முதலாளியாக இருந்து சொந்தமாக கார் வைத்துக்கொண்டு எழுத்தாளராயிருப்பது என்பது எனக்கு மிகப்பெரிய மனக்கிளர்ச்சியைத் தந்தது.

ஒரு பைசாவுக்கும் பெறாதவனாக அப்போது என்னை நினைத்து,

பவா, இந்த இலக்கியம், இயக்கமெல்லாம் வேணாம், ஒழுங்காபடிச்சி,ஒரு வேலைக்குப்போறதப் பாரு என்ற சலித்துப்போன ஆலோசனைக் கேட்க குமட்டிக்கொண்டு வரும். அவர்கள் எல்லோருக்குமே எழுத்தாளன் என்பவனின் அதிகபட்ச சொத்தே ரெண்டு அழுக்கு ஜிப்பாவும், ஒரு ஜோல்னாபையும் மட்டும்தான் என நம்பிக்கொண்டிருந்தவர்களை சு.ரா.வின் இந்த லெளகீக செழுமையைச் சொல்லி வெறுப்பேற்றவேண்டும் என்ற ஆர்வம் மேலிட,

இல்லண்ணா, எழுத்தாளன் ஒண்ணும் பிச்சைக்காரன் இல்லண்ணா, என்ன மாதிரியே எழுத்தாளனா இருக்கிற சுந்தர ராமசாமிக்கு சொந்தமா தமிழ்நாட்டில பத்து ஜவுளிக்கடை, ஆறேழு காரு, அவருக்கு சொந்தமா ஆபீஸ். அதுல பத்து பேரு வேலை பாக்கிறாங்க என்று ஒரு ஆரம்ப நிலை எழுத்தளானுக்குரிய அதிகபட்ச கற்பனையை கலந்து விட்டு அவர்கள் வாயில் நுழையும் ஈயை அவர்களே எடுப்பதைப் பார்த்து ரசித்த சுவாரஸ்யமான காலமது.

ஒரு இண்லெண்ட் கடிதத்தில் டைப் அடிக்கப்பட்டே ஒன்றரைப்பக்க அக்கடிதத்தை என் பாக்கெட்டில் மடித்துவைத்து அது கிழிந்து போகிறவரை படித்த காலமது.

ஒரு இண்ட்லென்ட் கடிதம்தான் எங்களை ஒரு புள்ளியில் இணைத்தது. அவர் கதைகளில் வழிந்த கிண்டலையும், மனிதர்களை அவர் பார்த்த விதமும் தனித்துவமிக்கவைகள் எனினும் அவர் படைப்புகளில் வந்த மனிதர்கள் யாரும் என் மனிதர்கள் இல்லை என்பதை என் மனம் புரிந்து வைத்திருந்தது.

என் மனிதர்களென்றால்....

ஓட்டைச் சட்டியை வலையில் கவிழ்த்து புகைப்போட்டு வரப்பெலி பிடித்துத் தின்று ராக்கூத்தாடும் ஒரு கிராமத்தின் கடைசி மனிதனோ,

தே, அஞ்சிரூவா என்னாத்துக்கு ஆவூம், வெத்தலைசேரு பொயலைக்காம்புக்கு கூட ஆவாது, பத்தா கொடு என பேரம்பேசிக்க கொண்டே ஒரு புதர் இருட்டில் மல்லாரும் பெண்ணோ, ஒரே பள்ளியில் படித்து, அல்லது ஒரே இடத்தில் வேலைபார்த்து, ஒரே பேருந்தில் ஊர்த்திரும்பி அக்கொடிப் பாதையும் ஊர் என்றும் காலனி என்றும் பிரியுமே, அதுவும், அம்மனிதர்களை தனித்தனியே பிரிந்து போகும் போது ஏற்படும் மன உணர்வுகளின் ஒரு துளியையோ நான் அவர் படைப்புகளில் அருந்தவில்லையெனினும் அவர் ஒரு முக்கியமான படைப்பாளியும், ஆளுமையும்தான் என தீர்மானித்ததற்கு அவர் படைப்புகளின் செய்நேர்திகள் என்னை வசீகரித்த்தே காரணம்.

அவரது சிறுகதைகளின் வழியே பயணித்து நான் அடைந்த வாசிப்பின் உச்சம் ஜே.ஜே.சிலக் குறிப்புகள்.

டைபாய்ட் காய்ச்சலில் நான் படுத்திருந்த அந்த இருப்பத்தோரு நாட்களும் நான் ஜே.ஜே. சிலக்குறிப்புகளை பலவாறாக வாசித்துப்பார்த்தேன். ஜெயகாந்தனின் ஹென்றிக்கு பக்கத்தில் எனக்குள் உட்கார ஜே.ஜே. என்ற அந்நாவலின் ஆகிருதியும் தொடர்ந்து என்னை இம்சித்து கொண்டிருந்த நாட்களில், அப்போது என் நண்பனும், இப்போது என் மனைவியின் அக்கா கணவனுமான உத்திரக்குமார் அந்நாவலை வாசித்த சூடு ஆறுவதற்குள் பஸ் ஏறி நாகர்கோவில் போய், அவரின் சுதர்சன் ஜவுளிக்கடைமுன் காத்திருந்து, அவர் கடைகட்டும்போது அவர் முன்நின்று,

நான் உங்கள் வாசகன், உங்களோடு பேச வேண்டும்

அவர் திரும்பி ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு, அன்றைய வியாபாரக் கணக்கு முடித்து, அவன் கைப்பிடித்தழைத்து அவர் அம்பாசிடரில் ஏற்றிக் கொண்டு டிரைவரைப்பார்த்து வீட்டுக்கில்லை கன்யாகுமரிக்கு என உத்திரவிடுகிறார்.

கார் கன்யாகுமரியின் பிரமாண்ட கடற்கரையை அடைந்த பிறகும் அந்த எழுத்தாளனும் அவர் வாசகனும் பேச எதுவுமற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

அரபிக் கடலின் அப்பிரமாண்டத்திற்கு முன் அவ்விருவரும் அற்ப பதர்களைப் போல நீண்ட நேரம் பேச்சற்று உட்கார்ந்திருந்ததாக உத்ரா சொன்னான்.

அவர்கள் திரும்பி நாகர்கோவில் வரும் வழியெங்கும் பெய்த அடைமழையே போதுமென முடிவெடுத்து மௌனத்தை இன்னும் நீட்டித்த போது கார் சு.ரா. வீட்டு வாசலில் நிற்கிறது.

அன்றிரவு உணவை அவர் வீட்டிலேயே முடித்துக் கொண்டு

பொறப்படறேன் சார் - இது உத்ரா

சரி. வாங்க - இது சு.ரா.

வினோதங்களின் மொத்தக் குவியல்கள்தான் எழுத்தாளனும், வாசகனும்.

இச்சந்திப்பையும், உரையாடலையும எழுத்தாளர், வாசகனின்றி யார் நிகழ்த்தி இருப்பினும் அவர்களுக்கான இடம் எதுவென்பதை யோசிக்கும் போது மனம் குதூகலித்து கெக்களிக்கிறது.

படைப்பாளிக்கு மட்டும் சமூகம் வழங்கியுள்ள கௌரவ அனுமதி இவை.

சுந்தர ராமசாமி மத்தியதர, வியாபார, சமூகத்தின் கொஞ்சம் மேலடுக்குகளில் உட்கார்ந்திருந்த மனிதர்களை தன் படைப்பில் அள்ளியெடுத்திருக்கிறார். அவனின் பேரண்பு, பேராசை, களவானித்தனம், எல்லாவற்றையும் தன் கவித்துவ மொழியால் செய்நேர்த்தியாக்கியுள்ளார்.

அதீத திறமையுடன், அதே அளவு பொறுப்போடும், கொஞ்சம் கூடுதல் உரிமையோடும் தன் ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் அந்த பார்வையற்ற ராவுத்தர்பாயின் மீது லேசான ஈகோ விழுகிறது அக்கடை முதலாளிக்கு. அவரை ஏதாவதொரு நாளில் அவமானப்படுத்திவிட இரகசியமாய்த் தீர்மானிக்கிறது அக்கள்ள வியாபார மனசு.

ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாள் அது லேசான குரூரத்தோடு, ஏதோ சகல நியாயம் மாதிரியே அக்கடையில் அரங்கேறுகிறது. எப்போதோ திட்டமிடப்பட்ட அந்நாடகத்தில் நடிக்கத் தெரியாமல் ராவுத்தர் பாய் ஒடிந்து விடுகிறார்.

விடியப்போகும் ரம்ஜானுக்கு சகல உரிமையோடும் அக்கடையில் அவர் எடுத்த புதுத் துணிகளை யாரைக் கேட்டு எடுத்தாய் என்ற கடை முதலாளியின் விஷமேறிய கத்தி நேரடியாய் ராவுத்தரின் நெஞ்சில் இறங்குகிறது.

யாரைக்கேக்கணும், இது என் கடை.

உன் கடைன்னா, மொதல் போட்டது சுந்தரம் அய்யர், நீ இங்க வேலை பாக்குற சம்பள ஆள்.

ஊகித்தலுக்கும், நிஜத்திற்குமான இடைவெளி சட்டென அகலுகிறது. அடுத்த நொடி பாய் அதல பாதளத்தில் விழுந்து கிடக்கிறார். உடல் மீது படிந்த மண்ணைத் துடைத்துக் கொண்டே மேலேறி வருகிறார்.

ஓ. அப்போ இது என் கடையில்லையா? எனக்கும் இக்கடைக்குமான உறவு ஒரு பணியாளருக்கும் முதலாளிக்கும் இடையேயானதா? இதெல்லாம் தெரியாமலா இத்தனை நாள் இதில் வாழ்ந்தேன்.

பார்வையற்ற அக்கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. எடுத்தப் புதுத்துணிகள் மீண்டும் கடை ரேக்குகளில் தரம் பிரித்து அடுக்கப்படுகிறது. விஷம் போல் உடலெல்லாம் பரவும் அவமானத்தை அனுமதித்துக் கொண்டே அடுத்த அடியை தன் வீட்டை நோக்கி எடுத்து வைக்கிறார் பாய்.

மனுஷ்யபுத்ரனின் அம்மா இல்லாத முதல் ரம்ஜானப்போலவே, புது ஆடைகளற்ற முதல் ரம்ஜானும் அதே சந்தோஷத்தோடே அவ்வீட்டில் வந்து போனது. அன்றைய இருள் சீக்கிரமே கவிழ்கிறது.
பண்டிகைகள் முடிந்த அடுத்த நாட்கள் சூன்யமானவைகள்தான். நேற்றிருந்த கொண்டாட்டத்தை சுத்தமாய் துடைத்தெறியும் வெறுமை எங்கிருந்தோ வந்து அவசரமாய் அவ்வீடுகளை அடைகாத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள்.

பேச்சுத்துணைக்கும் யாருமற்று ராவுத்தர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தான் பழகாத பகல் நேரத்தைப் பருகுகிறார்.

ராவுத்தர் இன்றி ஒரு அணுவையும் அசைக்கமுடியாத கடை முதலாளி அய்யர், தன் தோல்வியைத் துடைத்துக் கொண்டே ராவுத்தரை அழைக்க தன் பையனை அனுப்புகிறார்.

அத்தருணத்திற்கே காத்திருந்தவர்போல் எக்கி அவர் மகன் சைக்கிள் கேரியரில் உட்காருகிறார் பாய். அவர் பாதம்பட்ட கடை வழக்கமாக சுற்ற ஆரம்பிக்கிறது.

முதலாளியின் அகங்காரம் மிக ரகசியமாய், இன்னும் மிக ரகசியமாய் தக்க தருணம் நோக்கி அவர் மனவறைகளில் ஒரு விலங்கைப்போல் பதுங்கிக் கொள்கிறது.

இந்த பாயின் திமிரை போக்கும் ஒரு நாளை கடவுள் எனக்கு அருளுவான் என தன் வீட்டில் ஒரு மனப்பிறழ்வுற்றவனைப்போல் அந்நாட்களில் அந்த ஜவுளிக்கடை அதிபர் புலம்பித் தீர்க்கிறார்.

கடவுள் எப்போதும் போல் முதலாளியின் பக்கமே அன்றும் இருந்தார்.

அந்த ஜவுளிக் கடை முதலாளிக்கு கடவுள் தந்திருக்கும் வெகுமதியோடு ரயில் இறங்கி வீட்டிற்குள் நுழையும் அய்யர், வீட்டில் தூங்கும் எல்லோரையும் அந்த அகாலத்திலேயே எழுப்புகிறார்.

ஹால் லைட் போடப்பட்டு தூக்கக்கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் உட்காரும் குடும்ப உறுப்பினர்களை அய்யரின் உற்சாகம் தொற்றிக்கொள்ளாமல் இருந்ததைக் கவனித்த அவர்,

“இந்த ராவுத்தரின் கொழுப்பை அடக்க என்னக்காவது ஒருநாள் பகவான் எனக்கு அருள்புரிவான்னு சொல்லிண்டே இருப்பேன்ல்ல...,

பின்னிரவின் மெளனம்....

“இன்னக்கி அருள் புரிஞ்சிட்டான்என்று சொன்னபடியே தன் ப்ரீஃப்கேசைத் திறந்து சின்னக்கருவி ஒன்றைக் கையில் எடுத்து,ஒரு கோடிக்கரை வேட்டி 18.50 பைசான்னா 22 வேட்டி என்ன வெல?

அய்யரம்மா ரொம்ப இயல்பாக,எங்களுக்கு எப்படித் தெரியும் ராவுத்தருக்குத்தான் தெரியும் எனச்சொல்லி அய்யரின் அந்நேர சந்தோஷத்தைக் குலைக்க முயன்றாள்.ஆனால் அதற்கெல்லாம் இடம்தராத அவர்,

18.50 x 22 = 407 என்று அந்த கருவியில் கணக்குப்போட்டு, ஒரு நொடியில் 407 ரூவா என்று முகமெல்லாம் பரவசமாகி சொல்ல, அய்யரம்மா வெகுளித்தனத்தோடு,அய்யோ ராவுத்தரோட மூளைய இந்தப்பெட்டில யார் அடச்சிருப்பா? என சொல்ல,அய்யரின் கோபம் தலைக்கேறி,

அடி அசடே அவன் திமிர அடக்க பகவான் கண்டுபிடிச்ச மிஷின் தாண்டி இந்த கால்குலேட்டர் என அவள் முன் போடுகிறார்.

பகை வென்று முடித்த ஒரு அரசனைப்போல் அடுத்தநாள் கடைக்கு அந்த கால்குலேட்டரோடு போய், நேற்றிரவு வீட்டில் நிகழ்த்திய அதே காட்சியை கடை ஊழியர்கள்முன்னும் நிகழ்த்திக் காண்பிக்கிறார். ராவுத்தரும் அதை மெளனமாக காதுகளால் உள்வாங்குகிறார். அய்யர் ஒரு அற்ப புழுவென ராவுத்தரைப்பார்த்த பார்வையை எதிர்கொள்ள நல்ல வேளை பகவான் ராவுத்தருக்கு கண்களைத் தராமலிருந்தான்.

ஒரு பக்கம் ஒரு அற்ப குரூரத்தோடும், இன்னொருபக்கம் பெரும் காயத்தோடும் அக்கடை நாட்களை நகர்த்துகிறது. ராவுத்தர் தன் முக்கியத்துவம் இழந்து கல்லாவுக்கருகில் போடப்பட்டுள்ள ஒரு மரஸ்டூலுக்கு வந்துவிடுகிறார். அவர் இல்லாமல் இருப்பினும் நட்டம் ஒன்றுமில்லை.

வியபாரம் மந்தமான ஒரு நாள் மாலை நாலுமணிவாக்கில் ஒரு கல்யாணத்துக்கு புடவை எடுக்கவேண்டி ஒரு கோஷ்டி உள்நுழைகிறது.

இருபத்தியஞ்சு சுங்கிடி சேலை வேணும்.

ஒரு சிறு அலசலுக்குப்பின், சுங்கிடிச்சேல ஸ்டாக் இல்ல என்று பதில் வருகிறது.அவர்கள் வெளியேறப்போகும் நேரம் ராவுத்தரின் குரல் உரத்து ஒலிக்கிறது.

கொஞ்சம் நில்லுங்க

கல்யாணக்கூட்டத்தின் அசைவின்மையை ராவுத்தர் மெளனத்தால் உணர்கிறார். கடை அவர் சொல்லுக்கு நிசப்தமாகிறது.

மணி ஏழாவது ரேக்குகிட்ட ஒரு ஸ்டூலப்போட்டு ஏறு

அந்த கடைப்பணியாள் ஸ்டூல் மீது ஏறிநின்றுப்பார்க்கிறான்.

மேல ஆறாவது தட்டிலப் பாரு

பார்க்கிறான்.

நாற்பதுக்கும் மேற்ப்பட்ட சுங்கிடிச்சேலைகள் அடுக்கில் இருப்பதைப்பார்த்த அப்பணியாளன் ஆச்சர்யமுற்று கூவுகிறான்

ஆமாம் பாய்

நாப்பது பொடவைக்கு மேல இருக்கும் பாரு...

ம் இப்படி சரக்க வச்சுக்கிட்டே இல்லன்னு சொன்னா அய்யரு போட்ட மொதலு என்னாவறது?

50 சுங்கிடிப்புடவை வாங்கி இதுவரை ஆறு மட்டுமே விற்று,மீதி 44 புடவை ஏழாவது ரேக்கில் ஆறாவது தட்டில் இருப்பது மட்டுமல்ல, அந்தக்கடையில் இண்டு இடுக்குகளிலெல்லாம் ராவுத்தர் மனதாலும் உடலாலும் வாழ்கிறார் என்பதை உணராத அய்யரின் மனக் கதவு லேசாய் ஆட்டம் தருகிறது.ஆனாலும் கதவின் தாழ்ப்பாள் மூடப்பட்டேயிருக்கிறது.

அம்மாதம் பதினேழாம்தேதி பில் கட்டாத்தால் கடைக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கடை முதலாளி முதல் பணியாள் வரை பதைக்கும்போது லேசான ஒரு குரல் உள்ளடங்கி ஒலிக்கிறது.

கால்குலேட்டருக்கு 15ந்தேதி கரண்ட் பில் கட்டணும்னு தெரியாதில்ல

ராவுத்தரின் கரம்பற்றி அழைத்துப்போகும் கோமதி என்ற சிறுமி கேட்கிறாள்.

உன்னப்பாத்தா பாவமா இருக்கு தாத்தா

ஏம்ம்மா

இந்த்க்கடையில நீ எப்படி இருந்த தாத்தா, இப்ப உன்ன ஒரு மூலைல ஸ்டூல் போட்டு உக்காரவ்ச்சிட்டாங்களே தாத்தா

போடி அசடே அப்பல்லாம் நான் கணக்குப்புள்ளையா இருந்தேன், இப்ப ஜென்ரல் மேனேஜராயிட்டேன்.

சு. ரா வின் ஆகச் சிறந்த படைப்பியக்கத்திற்கு இக்கதை ஓர் உதாரணம். எல்லாக் கதைகளையுமே அவர் வரிவரியாய் எழுத்தெழுத்தாய் செதுக்கினார். தன் படைப்பிற்கு உண்மையாய் வாழ்ந்தார்.

நான் ஒவ்வொரு முறையும் என்னபுத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற பட்டியலை மிகுந்த அக்கறையோடு எனக்கு அனுப்பிவைப்பார். ஒற்றை வைக்கோல் புரட்சி முதல் செம்மீன் வரை நான் படித்தது அந்தப்பட்டியலில் இருந்துதான். பட்டியலில் நான் நிராகரித்த புத்தகங்களும் உண்டு.

1999-ல் ஒரு நவம்பர் மாத மழையினூடே என் விருப்பத்துக்கு வேண்டி திருவண்ணாமலைக்கு வந்தார்.அம்முற்றத்தில் அவர் ஆற்றிய உரை அதற்கு முன்னும் பின்னும் பழக்கமில்லாதது. ஒரு எழுத்தாளனின் உரை என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்த இரவு அது.

ஒரு எழுத்தாளன் தன் வாசகர்களோடு நேரடியாய் பேசவேண்டிய அவசியம் இல்லை. டால்ஸ்டாயும்,தாஸ்தாவேஸ்கியும் இல்லாமலேயே அவர்களின் அமரத்துவமான படைப்புகளை நாம் வாசிக்கிறோம். இப்படியான கூட்டங்களில் கிடைக்கும் நேரடியான உற்சாகத்திற்கு அவன் எழுத்தை பலி கொடுத்துவிடுவான். ஆகவே நான் பேச்சில் நம்பிக்கையற்றவன் என ஆரம்பித்து,

ஒரு நல்ல உரை என்பது அவ்வுரையை அதை பேசியவனே ஒலி நாடாவில் கேட்டு எழுதுகிறபோது ஒரு வார்த்தையும் உதிராமல் இருக்கவேண்டும். அப்போது அவன் தெரிந்து கொள்ளலாம் தன் எதிரில் உட்கார்ந்திருப்பவனை ஏமாற்ற, மகிழ்விக்க தான் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை...

முற்றம் முடிந்து வீடு திரும்பிய அன்றிரவு ஒரு ம்ணிக்குமேல் அவர் அன்று பேசிய உரையை டேப்ரிக்கார்டரில் போட்டுக்கேட்டேன்.

ஒரு வரியையும் அதிலிருந்து நீக்கிவிட்டு அச்சேற்றமுடியாத அடர்தியான உரை அது. அதுவரை இலக்கிய உரைகள்மீது எனக்கிருந்த பார்வையை முற்றிலும் சு.ரா.தான் மாற்றினார்.

பி.பி.சி.யில் சு.ரா.வைப் பேட்டியெடுக்க வந்திருந்த ஒரு பெண் நிருபர் கேட்கிறார்.

உங்கள் கதைகளின் மாஸ்டர் பீஸ்

எல்லாமே – இது சு.ரா.

இருப்பினும் ஏதோ ஒன்று பிரத்தேயகமாக.

எனக்கு என் படைப்புகள் எல்லாமும் முக்கியமானவைகள்தான். ஆனால் என் நண்பர் சி.மோகன் எப்போதுமே ரத்னாபாயின் ஆங்கிலம் என்ற என் சிறுகதைதான் என் படைப்பின் உச்சம் என்கிறார்.

என் நண்பர் சி. மோகனிடம் கேட்டேன், எப்படி சார் ரத்னாபாயின் ஆங்கிலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

எப்போதும்போன்ற நிதானத்துடன் அவர் சொன்னார்.

அந்த ரத்னாபாய் வேறு யாருமில்லை பவா, ராமசாமி சார்தான்.மொழிக்கு தன்னை முழுக்க ஒப்புக்கொடுத்தவனின் பலிபீடம் அது.


-நன்றி மீடியா வாய்ஸ்

5 comments:

 1. போடி அசடே அப்பல்லாம் நான் கணக்குப்புள்ளையா இருந்தேன், இப்ப ஜென்ரல் மேனேஜராயிட்டேன்.

  அருமை .
  இனி திரு சுந்தர ராமசாமி அவர்களின் கதையை தேடி படிக்க வேண்டும்.
  மிக்க நன்றி ஐயா.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

  ReplyDelete
 2. ''நான் ஒவ்வொரு முறையும் என்னபுத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற பட்டியலை மிகுந்த அக்கறையோடு எனக்கு அனுப்பிவைப்பார். ''( நானும் பிரபல எழுத்தாளரின் நூறு சிறந்த கதைகளை தேடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.) நீங்கள் உதவினால் நல்லது. நன்றி. காலச்சுவடை மிஸ் பண்ணுகிறேன்.

  ReplyDelete
 3. சுந்தர ராமசாமி அவர்களோட “குழந்தைகள்,பெண்கள் ஆண்கள்” படிச்சிட்டு என் அம்மாதான் சொன்னாங்க கண்டிப்பா இதை படின்னுட்டு, அப்ப படிக்கலை பின் அவங்க இறந்தபிறகு அம்மா சொல்லிருந்தாங்கன்னு படிச்சேன் அருமையா இருக்கும் அவரோட நடை.ரொம்ப பிரம்மிப்பா இருந்தது அப்புறம் “ஒரு புளிய மரத்தின் கதை”ன்னு ஒவ்வொன்னா படிச்சேன்.சிறுகதை தொகுப்புல சாதாரன மக்களையும் தொட்டிருக்கார்ன்னு தோனுது..படிச்சு கொஞ்ச காலம் கடந்தும் திரும்பவும் ஆசை வருது சு.ரா.வின் “ கு.பெ.ஆ” படிக்க.ரொம்பவும் சந்திச்சிருகனும்னு தோன்ற வச்ச மனிதர்.எஸ்.ரா, நாஞ்சில் எல்லாருமே சு.ரா.வை mention பண்ணிருப்பாங்க...

  ReplyDelete
 4. Bava,
  I have been reading your writings for the past 1 year and felt very close to my heart.
  The most important things is i also have a dream of building a house with gravel but my dream became true in your life.It's always happy one when our dream comes true in somebodys life because life is too short so lets live with everyone.
  Stop by at my place when you come to chennai, convey my wishes to the family.

  Cheers
  Shiva
  shiva.george@gmail.com

  ReplyDelete
 5. முதன் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. தினம் தினம் கார்த்திகை தொடர் பரவசமாக உள்ளது.. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் சு.ரா வைப் பற்றிய இந்தப் பதிவு என்னை நெகிழச் செய்து விட்டது!

  ReplyDelete