Tuesday, November 1, 2011

தொடர் - 13


இருள் முற்றியிருந்தது. மனம் முழுக்க ஆர்வமும், வெளிச்சமுமாயிருந்தது. போக வேண்டிய பாதையை ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததால், வெகு சுலபமாக அவ்வீட்டு வாசலை அடைந்தேன். மூடியிருந்த இரும்பு கேட்டின் வழியே உள்ளூர ஊடுருவிப் பார்த்தேன். நெடிதுயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களும், அடர்த்தியாய் பரவியிருந்த தங்கப்பெட்டி மலர்களுமாய் வீடு உள்ளடங்கி இருந்தது. எப்போதும் அப்படியில்லையெனினும் அப்போது எங்கிருந்தோ வந்து ஒரு சிறு அச்சம் உள்புகுந்தது. அதை வெல்ல நினைத்து குரலுயர்த்தினேன்.

‘‘கிரீஷ்... கிரீஷ்...’’

‘‘வெயிட் ப்ளீஸ்... ப்ளீஸ் வெயிட்..’’

என்று குரல் வந்த திசையைத் துல்லியப்படுத்த முடியவில்லை.

வீட்டினுள்ளா, தாழ்வாரமா? மரம் செறிவடர்ந்த ஈர மண்மேலிருந்தா என மனம் அலைவுற்றது. பல வருடங்களுக்கு முன், ஒரு வெப்பால மரத்திற்கடியில், அவருக்காக விடியும்வரை நின்று திரும்பின ஏமாற்றம் ஏனோ ஒரு நிமிடம் முகத்தில் அறைந்து திரும்பியது. அமைதியாய் இருக்க முடியாமல் மனம் அலைவுற்றுக் கொண்டேயிருந்தது. சர்க்கஸ் இரும்புக் கூண்டில் உலாத்தும் புலியின் தவிப்பு அது.

‘‘கிரீஷ், ஐ ஆம் பவா’’ என்று அநியாயத்திற்கு கத்தினேன்.

உடனே பதில் வரும் என கணித்து ஏமாந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து,

‘‘பவா ப்ளீஸ் வெயிட். வில் கால் யூ’’ என்று முற்றிலும் விளங்காத, ஆங்கில குழறலில் ஓங்கிய குமுறலில் ஒலி வந்தது.

‘என்ன ஆனது இவனுக்கு? உள்ளே யாருடனாவது இருக்கிறானா? கேட்டு தீர்மானித்துதானே இன்று மாலை 7.30 என்று நேரம் குறித்தோம். கொஞ்சம் அமைதியாய் இரு’ என மனத்தின் திமிறலை தலையில் தட்டி அடக்கினேன். அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின், முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே,


‘‘ஹாய் பவா’’

என்ற வார்த்தை சிக்கனத்தினூடே வழிந்த புன்னகையோடு கேட்டை திறந்து, கிரீஷ் என் தோள் அணைத்து வரவேற்று உள் அழைத்தான். அவன் மீது வியர்வையை மீறின ஒரு சுகந்த மணம் வீசியது.

‘‘சாரி... சாரி’’ என அவன் முணுமுணுத்துக் கொண்டே இயங்கினான்.

அவன் தாமதத்திற்கான காரணத்தை அச்சிறு வீட்டின் அறையிலும், பின்வாசலிலும், மர இருட்டிலும் துழாவிய, என் கள்ள மனம் புரிந்து, இன்னும் கொஞ்சம் தாராளமான புன்னகையோடு தன் கேமராவை கம்ப்யூட்டரில் இணைத்தான். பிரம்பு நாற்காலி இருக்கையிலிருந்து எழுந்து அச்சிறு திரையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேர காத்திருப்புக்குப்பின் அத்திரையில் நான் பார்த்த காட்சி, அப்படியே சில்லிட வைத்தது. படமெடுத்து நிற்கும் ஒரு நாகப்பாம்பு. எதுவும் சொல்லாது சமையலறையில் நுழைந்து எனக்கு டீ போட்டுக் கொண்டிருந்தான் கிரிஷ். நிமிடத்திற்கு நிமிடம் படம் மாறிக் கொண்டேயிருந்தது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள். அதன் கோபத்தோடு, அதன் தப்பித்தலோடு, அதன் மறைவோடு, அதன் எதிர்ப்போடு, அதன் குழைவோடு...

‘‘அய்யோ... கிரீஷ்.. இது எப்போ எடுத்தது?’’

‘‘ஜஸ்ட் நவ் பவா. அதான் லேட்.’’

ஆவி பறந்த டீ கப்புடன் எதுவுமே நடக்காதது மாதிரியான முகபாவத்தோடு வெளியே வந்த ‘கிரிஷ் ஃபேலன்’ என்ற அந்த புகழ்பெற்ற எழுபது வயதிற்கும் மேலான அமெரிக்க புகைப்படக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தேன். டீ ஆறிக் கொண்டேயிருந்தது. கம்ப்யூட்டர் படம் நழுவிக் கொண்டிருந்தது. அது ஒரு அச்சமூட்டின இரவு.

ஒரு நண்பரின் பிரவுசிங் சென்டரில் அடுக்கப்பட்டிருந்த, யாரையும் உறைய வைக்கும் அபூர்வ புகைப்படங்களே, ஆறு மாத அலைவுறுதலுக்குப் பின், இதோ இந்த இரவில், சற்றுமுன் வெளியேறின சர்ப்பத்திற்குப்பின், என்னைக் கொண்டுவந்து இக்கலைஞனிடம் சேர்த்திருக்கிறது. கிரீஷ் ஃபேலன் கனடாவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து குடியேறி, கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இந்த ‘லேண்ட்ஸ்கேப்’ அவனுக்கும் மிகப் பிடித்துவிட்டது.

‘‘பௌர்ணமி நிலவு, உலகம் முழுக்கத் தோன்றுவதுதானெனினும், திருவண்ணாமலையிலிருந்துதான் அது தன் சகல சௌந்தர்யத்தோடும் கர்வப்படுகிறது’’ என்று வார்த்தைகளில் கவிதைத் தோய்த்து, என்னைப் பொறாமைப்படுத்தினான் கிரிஷ்.

‘‘எப்படிப் பார்த்தும், எங்கிருந்து நோக்கியும், மடியில் புரண்டும் மார்பில் குடித்தும், எத்தனை முறை இதன் உடலில் நடந்தும், எனக்கு சலிக்காதது இம்மலை மட்டும்தான். என் அருகாமையிலேயேத் தங்கி, என் ஸ்பரிசத்திலேயே இருந்துவிடு கிரீஷ்’’ என்ற அதன் அந்தரங்கமான வார்த்தைகளுக்காகவே இங்கிருக்கிறேன் பவா.

மிக சந்தோஷமான வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் முன் பகுதியில் சூழ்ந்த நரகத்தை, இம்மலைக் கழுவி சுத்தப்படுத்தி, ஒரு குழந்தைக்கு வெண்ணிற ஆடைப் போர்த்தி, பொத்திக் கொள்வது மாதிரி என்னை அரவணைத்து நிற்கிறது பவா.’’

பாம்பு கடைசியாய் வெளியேறின வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிரீஷ் தன் கம்ப்யூட்டர் முன்னமர்ந்து, எதையோ மீட்டுக் கொண்டு வந்தான். இப்போது அந்த இருட்டில், அவன் முகம் முற்றிலும் பிரகாசமடைந்திருந்தது. பின் திரும்பி என்னை அருகில் அழைத்து, தோளில் அழுத்தி உட்கார வைத்தான். திரைக்கு கைகளால் ஒலியூட்டினான்.

என்னால் நம்ப முடியவில்லை. என் பிறப்பு முதல் இன்றுவரை தினம் தினம் இம்மலையைப் பார்த்து வளர்ந்த மனம்தான் எனினும், அதன் பல பரிணாமப் பரவசம் என்னை மூழ்கடித்தது. அக்கணினித் திரை அடுத்தடுத்து மலைகளால் எங்களிருவரையும், அதனுள் இழுத்தது. இச்சிருஷ்டிகளை உருவாக்கியதன், ஒரு சிறு துளி கர்வமுமின்றி, கிரீஷ் என் முக மாற்றங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான்.

அது என் வாழ்வின் முற்றிலும் வேறொரு நாள். எனக்கு வழிவிட்டு வெளியேறின நாகத்துக்கு போலவே, அதன் ஜீவிதத்தில் யாராவது ஒருவன், அதன் அத்தனை அசைவுகளையும் அங்குலம் அங்குலமாய் படமாக்கின அனுபவத்தை, மரச்செறிவினூடே வளர்ந்த அதன் வாழ்விற்கு எவ்வளவு புதுசோ, அவ்வளவு புதுசு எனக்கு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்காரன், பருவம் கடந்து, காலம் அறிந்து, மழை, வெய்யில், நீர், தூறல், காலை, மாலை, இரவு, அதிகாலை...

ஓ... இம்மலையும் இக்கலைஞனும் எப்படி பிணைந்திருக்கிறார்கள்? ஒவ்வொரு பருவ நிலைகளிலும் அதன் அழகை அள்ளியெடுத்து பருகி முடித்த ஒரு மனிதனின் அருகாமை, எனக்கு சிலிர்ப்பூட்டியது.


‘‘கிரீஷ், இம்மலைகளை இக்கணினியிலிருந்து வெளி எடுத்து உலகுக்கு காட்சிப்படுத்த வேண்டும் கிரீஷ்.’’

‘‘எதற்கு?’’

‘‘‘இத்தனை கம்பீரமான ஒரு மலை நிழலிலா நம் வாழ்வு?’ என்ற பெருமிதமும், ‘இதன் ஆகிருதிக்கு முன், நாம் வெறும் அற்ப பதர்’ என்ற மனிதனின் உணர்த்தலுக்கும் வேண்டி.’’

‘‘நான் யோசிக்கிறேன் பவா’’

அடுத்த ஃபோல்டர் திறக்கப்பட்டது. இந்திய நிலப்பரப்பெங்கும் அவன் அலைந்து திரிந்து, அவன் காமிராவுக்குள் அள்ளிய சாதுக்கள். ஒரு பொன்னிறமான சூரிய உதயத்தில், கங்கை ஆற்றின் கரையில் நின்று குளிக்கும் ஒரு பெண்ணின் படத்தில் நான் ஊன்றி நின்றேன்.

‘‘யூ லைக் திஸ் பிக்சர்?’’
‘‘வெரி மச் கிரிஷ்’’

அப்படம் எடுக்கப்பட்ட பின்னணியை, மனம் லயிக்க சொல்லி முடித்தான். நடுநிசியைக் கடந்து கொண்டிருந்தோம்.

அடுத்த ஃபோல்டர்...

நதிகள், ஒரு தேசம் முழுதும் குறுக்கம் நெடுக்குமாய் ஓடும் நதிகள். அந்த அறை திடீரென சில்லிட்டுப் போனதாகவும், நீரின் சுழிப்புக்குள் நாங்கள் இருவரும் நின்று கொண்டிருப்பதாகவும் உணர்ந்த தருணம் அது. ஆர்வம், அடுத்த திறப்புக்காக கதவருகில் போய் நின்று கொண்டது.

‘‘இது எகிப்து. இங்கு நான், வீடுகளைத் தவிர வேறெதையும் படமெடுத்ததில்லை.’’

‘‘ஏன் கிரீஷ்.’’

‘‘ஒவ்வொரு தேசத்திலும் ஏதோ ஒன்று மட்டும்தான் என்னுள் பிரவேசிக்கிறது. மற்றதெல்லாமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. ஸ்வீடனில் ஏரி, எகிப்தில் வீடு, இந்தியாவில் சாதுக்கள்.’’

அவன் உலகத்தை இப்படி வகைப்பத்தி ஒரு கோலி குண்டு அளவுக்கு சின்னதாக்கி, தன் கணினியில் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தையின் குதூகலத்திற்கும் அப்பால், அதற்காக அவன் அலைந்த அலைச்சலும், செலவிட்ட பணமும், மொழி தெரியாத பிரதேசங்களில் சுற்றி அலைந்த காலங்களும்...

‘‘எதற்கு, எதற்கு கிரீஷ் இதெல்லாம்?’’

‘‘இது, இன்னொரு உலகம் பவா, உனக்கு எல்லா நாளும் மலை சுற்றும் அருணாசலத்தைத் தெரியுமா?’’

‘‘எந்த அருணாசலம் கிரீஷ்?’’

‘‘தினமும் காலையிலேயும், மாலையிலேயும் மலையைச் சுற்றி வலம் வரும் அந்த இளைஞன் அருணாசலம்.’’

‘‘அவரை எனக்குத் தெரியும் கிரீஷ், அவர் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஷார்ட்ஹேண்ட் மாஸ்டராய் பணிபுரிகிறார்.’’

‘‘ஓ... எனக்கு அது தெரியாது.’’

‘‘ஆவேசமான எங்கள் அரசியல் கூட்டங்கள் நடக்கும் இடங்களில், வெளிச்சம் படாத ஒரு மூலையில் அமர்ந்து எங்கள் உரைகளின் சாராம்சத்தை அவசரமாய் குடித்துக் கொண்டிருக்கும் அருணாசலத்தின் இன்னொரு முகத்தை நான் அறிவேன் கிரீஷ்.’’

‘‘அது வேண்டாம் எனக்கு. அவன் யாராய் வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் தினம் ஒருமுறை என்று ஆரம்பித்து, அது ஒரு புற்று போல வளர்ந்து, வளர்ந்து, மலை சுற்ற மட்டுமே அவனுக்கு பொழுதுகள் புலர்ந்தும், உலர்ந்தும் போனது. இது எதற்கு பவா? அருணாசலத்தின் வாழ்வை நீ எதில் அடக்குவாய்?’’


விடை தெரியாத பல ஆயிரம் கேள்விகள், மனதின் ஏதோ ஒரு மூலையில் தேங்கி நிற்பதைப்போல, இதுவும் அதற்குள் சங்கமித்தது. பால் கலக்காத இன்னொரு கோப்பைத் தேநீரோடு கிரீஷ் வந்தபோது, மழை துவங்கியிருந்தது. ஏனோ எனக்கு மணி பார்க்கத் தோன்றவில்லை. மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, விடிந்திருந்தது.

அதன்பிறகான பல நாட்களில், கிரீஷ் தன் கறுப்பும் வெளுப்புமான பல ஸ்நேகிதிகளோடு ஒரு ஜீணீஸீtலீமீக்ஷீ வண்டியில் என்னைக் கடந்திருக்கிறான். ‘உலகின் ஒட்டுமொத்த சுவையை ஒரு சின்ன சாக்லேட் பேப்பரில் சுற்றி, தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறான்’ என என்னை பொறாமைப்படுத்தும், அவனின் டூ வீலர் பயணங்கள்.


விட்டொழிக்க முடியாமல், கவ்விப் பிடித்துள்ள என் பத்து மணி அலுவலக வாழ்வின் பரபரப்பிலும், நான் ‘கிரீஷ் உடனான சர்ப்பம் புகுந்த அந்த இரவையும், மலையின் அப்பிரமாண்ட ஆகிருதியின் அருகில்கூட அண்டமுடியாத என் அகங்காரத்தையும் நினைத்துக் கொள்வேன். உலகெங்கும் நடந்து திரிந்த, அந்த கால்களை கூர்ந்து பார்க்கும்போதெல்லாம், தீபத்தன்று வாணவேடிக்கைகள் தீர்ந்து, எல்லா கொண்டாட்டங்களும் முடிந்துபோன பின்னிரவுகளில் நின்றெரியும் தீபச்சுடர் என் நினைவில் நெடுநேரம் ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

4 comments:

 1. ...படமெடுத்து நிற்கும் ஒரு நாகப்பாம்பு. எதுவும் சொல்லாது....
  திருவண்ணாமலையின் அழகும், கனடாவிலிருந்து வந்து மலையில் கால் பதித்த நண்பரின் அன்பும் அலாதியானதுதான்.

  ReplyDelete
 2. your description about Krish makes me think he is also a "Saadhu",but Bava we all are tightly coupled with family and relationship. So i guess we never gonna be like Krish in this life, but at least we can live like him whenever we get some space... that's all
  Take care

  Cheers
  Shiva
  shiva.george@gmail.com

  ReplyDelete
 3. திருவண்ணாமலையை ஒரு முறை பார்க்க வேண்டும். எனக்கு பொறாமையாக இருக்கிறது வாசிக்கும் போது. தலைப்பும் கூட பவா brand.. superb.

  ReplyDelete
 4. எங்கிருந்தோ ஒரு நாட்டிலிருந்து வந்து நம் நாட்டில் திருவண்ணாமலையில் வசிக்க விரும்பும் அந்த புகைப்படக்காரரை ஈர்த்த அந்த மலையை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மேலும், பல நாடுகளில் ஒவ்வொன்றாக சுற்றி எந்தெந்த நாடுகளில் எதை படம் பிடிக்க விரும்பினார் என்பதை அறியும் போது ஆச்சர்யமாயிருக்கிறது. உப பாண்டவத்தில் ஒவ்வொரு கதையையும் கேட்க ஒவ்வொருவரிடமும் எஸ்.ரா செல்வார். அதைப்போல இந்தியாவில் சாதுக்கள், எகிப்தில் வீடு என அவர் தேர்வு செய்து படமெடுப்பதாக தோன்றியது. அற்புதமான நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். பகிர்விற்கு நன்றி.
  -சித்திரவீதிக்காரன்.

  ReplyDelete