Wednesday, December 7, 2011

தொடர் - 18


எனக்கு சினிமா மொழி தெரியாது. கேமரா ஆங்கிள் என்பதை மட்டும் நண்பர்களின் உரையாடல்களின்போது கவனித்திருக்கிறேன். ஆனால், பத்திருபது வருடங்களுக்கு முன்பே, சினிமா தெரியாத என்னை மாதிரியான பார்வையாளர்களை, தன் கேமராக்களின் ஜால வித்தைகளால் இரண்டு பேர் ஈர்த்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பாலுமகேந்திரா, இன்னொருவர் பி.சி.ஸ்ரீராம்.

‘மௌனராகம்’ அதன் கதையை மீறி, காட்சி அமைப்புகளை மீறி, என்னை என்னவோ செய்தது. படம் பார்த்த உணர்வுகள் அப்படியே என்னுள் படிந்திருந்தது. அதிலிருந்து மீள முடியாமல், அதனுள்ளே சுழன்று கொண்டிருந்தபோதுதான், ‘அது எதுவென’ ஒரு புள்ளியில் மனது நின்றது. அது, அப்படத்தின் இசையும், ஒளிப்பதிவும். அதுவரை கேட்டறியாத, ஒரு பெயர் தெரியாத பூச்சியின் ரீங்காரத்தையும் மீறி மனம் அப்படத்தின் ஒளியை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.

என்ன முயன்றும் அப்படத்தின் நாயகன் மோகனால், ரேவதியின் மனமொழியை அறிய முடியாமல்போய், அவன் பிரிந்து போவதென முடிவெடுக்கும் ஓர் இரவு அது. வெளியில் நிலா. அவன் தன் மென் மன உணர்வுகளை ஓர் பாடலாக உருமாற்றி, ‘நிலாவே வா’ என அதனோடு தன் துக்கத்தை பகிரத் துடிக்கும் காட்சி அது. கறுப்பு நிறமிட்ட கண்ணாடி ஜன்னல்கள் திறந்திருக்கின்றன. தன் மனைவி ரேவதி, தூரத்தில் இருட்டில் ஒரு ஓவியம் மாதிரி உட்கார்ந்திருக்கிறாள்.

அவன் பாடிக்கொண்டே அக்கண்ணாடி பிம்பத்தை பார்த்து நகர்கிறான். ‘கலைந்த, முழுமையடையாத அந்த ஓவியம் அவனிடமிருந்து நகர்ந்து, நகர்ந்து போய்க்கொண்டேயிருக்கும் அக்காட்சியை, ஸ்ரீராம் மாதிரியான மேதைகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்’ என்பதை அப்படத்தின் காட்சிகளே முதன்முறையாக எனக்குணர்த்தியது.

அதன்பிறகான என் படத்தேர்வுகளில், ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டது. ‘நாயகன்’ என்னை உறைய வைத்த ஒளிப்பதிவு. அப்படத்தின் மீது ஏதோ ஒரு செம்மண் நிறம் பூசப்பட்டதுபோல, அது ‘என்னை தனியே பதித்துக்கொள்’ என்ற பிரத்யேகத்தோடு என் முன் முகிழ்ந்தது. எவ்வளவு தடுத்தும் கேட்காத மகன், சடலமாக அந்த ஹாலில் கிடத்தப்பட்டிருப்பான். கமலஹாசன் மெல்ல, மெல்ல, உறுதி குலையாமல் நடந்து வருவார். கேமரா அவர் பின்னாலேயே ஒரு காலடித் தடமற்ற பூனைக்குட்டியின் நடைபோல பயணிக்கும். மரண அமைதி என்ற சொல் எல்லோர் முகத்திலும் படிந்திருக்கும்.

தன் மகனின் உயிரற்ற உடல்முன், அத்தகப்பன் நின்ற கணத்தில், திடீரென கேமரா டாப் ஆங்கிளுக்குத் தாவும். இதுவரையிலான நம் மன உணர்வுகளை சிதைத்து, வேறொன்றாய் மாற்றி, நம் துக்கத்தை சிந்தாமல் பிடிக்கும் அக்காட்சி அமைப்பும், டாப் ஆங்கிளிலிருந்து கீழே மகனையிழந்த அத்தகப்பனும், அவனைச் சுற்றி அதே உணர்வோடு நிற்கும் மனிதர்களில் ஒருவராக, பார்வையாளனை மாற்றும் அசாத்திய முயற்சியில், ஒரு கலைஞனுக்குக் கிடைத்த வெற்றியாக நான் பி.சி.யை நினைத்தத் தருணமது.

ஒரு கடுங்கோடையின் புழுக்கத்தில், படம் பார்க்கும் பார்வையாளனை, குளிரின், பனியின் காட்சிபடுத்தலை அப்படியே உணர வைப்பது ஒன்றும் சாமான்ய காரியமல்ல. தொடர்ந்து தன் எல்லா படங்களிலும் பி.சி. இவைகளை அனாவசியமாக கடந்திருந்தார். அவர் என்னிலிருந்து வெகுதூரத்திலிருந்தார். பொது நிகழ்வுகளில் அதிகம் தலைகாட்டாதவர் என்றும், தன் படங்களுக்கு ஒளியின் அளவை கூட்டியும், குறைத்தும் கொடுத்துக் கொண்டிருந்த அக்கலைஞன், தன் மீது எந்த மிகை ஒளியும் விழ அனுமதிக்காதவர் என்றும் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன்.


‘வம்சி’ புக்ஸ் ஆரம்பித்து எழுத்தாளர் திலகவதியின் மொத்த குறுநாவல்களின் தொகுப்பை முதல் வெளியீடாக கொண்டுவந்தபோது, அதன் வெளியீட்டு விழாவை திருவண்ணாமலையில் நடத்தினோம். அப்போது என் ஆத்மார்த்த நண்பன் வைட் ஆங்கிள் ரவிசங்கர், பி.சி.யின் உதவியாளராக சேர்ந்திருந்தார். அவர் மூலம் அந்நிகழ்வுக்கு வர பி.சி. சம்மதித்து, அன்று மதியம் எங்கள் வீட்டிற்கு தன் ஏழெட்டு உதவியாளர்களோடு வந்திறங்கின மௌனராக காட்சியை மறக்க முடியாதது.

‘‘இவ்வளவு நல்ல பிரியாணியை இதற்கு முன் சாப்பிட்டதில்லை’’ என்பதையே இன்னும் சுருக்கி சொன்னார். அவர் பிரயோகப்படுத்தின மொழி சிக்கனம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவருடனான ஒரு முழு பகிர்தல் இதுவல்ல என என் உள்மனம் நினைத்தது. அன்று மாலை அப்பரந்த மைதானத்தில் ‘பாப்பம்பாடி’ ஜமாவின் ஊரைக்கூட்டும் இசை அதிர்வுகளை ஸ்ரீராம் கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கணமும் அவர் வேறொன்றாய் மாறிக் கொண்டிருந்தார். எந்த நிமிடமும் அவர் அந்த இசைக்கலைஞர்களோடு களமிறங்கி ஆடக்கூடும் என்ற என் அவதானிப்பு, நிகழ்ச்சித் துவங்குதலின் பொருட்டு பொய்யானது.

அவரால் எப்போதும் குறைவாகவே பேசமுடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அன்று அந்த பேரிசையின் அலையடிப்பில் திகைத்துக் கொண்டிருந்த அவர் மனம், வேறெதிலும் ஒட்டவில்லை. ‘இம்முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்’ என்ற ஒற்றைச் சொல்லுக்காக நானூறு கி.மீ. பயணித்து வந்திருந்தார். நான் உள்ளூர அவரை ரசித்தேன். எல்லா மனிதர்களும் ஒன்றுபோலில்லை. தன் பிரியத்தை, உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவைப்படாத கலைஞர்களும் உண்டுதானே. பி.சி.யின் உடல்மொழியே ஒளிதான். அதை முழுமையாய் தரிசிக்கும் ஒரு தருணத்திற்காக, நீண்டநாட்கள் காத்திருந்தேன்.
சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல-
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
தன் விரலைக் கத்தியாக்கி
தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி.

அந்நிமிடம் மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை வரிகள் நினைவிற்கு வந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதம். நாடெங்கும், நகலெடுக்கப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்கள் சகிக்க முடியாதவைகளாகியிருந்தன. கலெக்டர்களுக்கு முன், அப்போதைய பிரபலமான குத்துப்பாடல்களுக்கு, எங்கள் குழந்தைகளின் அசிங்கமான அசைவுகள் எனக்கு குமட்டின. அதை மாற்ற எந்த சாமான்யனாலும் இயலாததெனத் தெரிந்து, அதிலிருந்து தப்பித்து வெகுதூரம் போக நினைத்தோம்.
சுனாமியில், எய்ட்ஸில் அப்பா, அம்மாக்களை இழந்து, சமூகத்தின் முன் யாருமற்றவர்களாக நின்ற முன்னூறுச் சொச்ச குழந்தைகளை விடுதிகளிலிருந்து சேகரித்தோம். திருவண்ணாமலை, சமுத்திர ஏரிக்கரையின் கீழ் விரிந்த மரச்செறிவுகளுக்கு அவர்களைக் கொண்டுவந்தோம். அப்புதிய இடமே அவர்களை ஓர் குதூகலமான உலகிற்குக் கொண்டு போனது. ஏற்கெனவே ஒரு வண்டி நிறைய களிமண் அடித்து பதப்படுத்தி வைத்திருந்தோம். வண்ண பலூன்கள் ஒரு மரத்தடியில் கொட்டிக் கிடந்தன. பாட்டும், இசையும், அக்குழந்தைகளின் உற்சாக பீறிடலும் எந்த மனசையும் பறிகொள்ளும்.

அதில் ‘‘ஐம்பதுக் குழந்தைகளுக்கு கேமரா கற்றுக்கொடுக்க வரமுடியுமா சார்?’’ என பி.சி.யிடம் தயக்கத்தோடு, ஆனால் உரிமையோடு கேட்டேன்.

‘அதைவிட எனக்கு என்ன புடுங்குற வேல’ என பதிலளித்தார். அதில் சென்னை நகர சலிப்புத் தெரிந்தது. தன் மனைவியுடன் அந்த ஏரிக்கரைக்கு வந்திறங்கியபோது, நான் கையில் வைத்திருந்த ஒரு பூங்கொத்துடன் அவரை எதிர்கொண்டேன்.

அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். உடல் மொழியால் எங்கள் பிரியங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டபோது, அவர் மனைவியின் கைக்கு அப்பூங்கொத்து மாறியிருந்தது. நாங்கள் எல்லோருமே குழந்தைகளாக மாறியிருந்தோம்.
காலையில் ஒரு சின்னப்பையன் கையில், விலை உயர்ந்த நிக்கான் கேமராவைக் கொடுத்து, வித்தை கற்றுத் தந்துகொண்டிருந்ததை சற்று விலகி நின்று கவனித்தேன். இதற்கு என்ன அர்த்தம்? உலகமே வியந்து பார்க்கும் ஒரு இந்திய ஒளிப்பதிவின் மேதை, ஒதுக்குப்புறமான இந்நகரில் அப்பா அம்மாவற்ற இந்த குழந்தையின் கையில் கேமராவைத் தந்து ஆங்கிள் பார்க்கும் காட்சி என்னுள் என்னென்னவோ உணர்வுகளைத் தந்தது. ஓடிப்போய் மீண்டும் ஒருமுறை அக்கலைஞனை ஸ்பரிசத்தால் கௌரவப்படுத்த நினைத்தேன்.

அக்குழந்தை வளர்ந்து, படித்து, அவனுக்குத் திருமணமாகி தன் மனைவியிடம் அப்புகைப்படம் காண்பித்து, ‘‘என்னை அணைத்து நின்று சொல்லிக் கொடுப்பவர்தான் இந்திய ஒளிப்பதிவின் உச்சம் பி.சி.ஸ்ரீராம்’’ என சொல்லும்போது, அம்மனைவியால் இதை நம்ப முடியுமா? நான் கலவையான உணர்வுகளால் குழைந்திருந்தேன்.

அன்று இருட்டும்வரை அந்த ஐம்பதுக் குழந்தைகளுக்கும் அவர் தனித்தனியே ஒளிப்பதிவு சொல்லிக் கொடுத்தார். அவர் பின்னால் அக்குழந்தைகள் அணிவகுத்து படமெடுக்க, ஏரிக்கரை மீது நடந்து சென்ற காட்சி இதுவரை எந்த சினிமாவிலும் நான் பார்க்காதது. ஐம்பத்தியோராவது குழந்தையாக அவர் மனைவியும் இந்நிகழ்வுகளில் கலந்திருந்தார்.
குழந்தைகள் எடுத்த அத்தனைப் படங்களும் உடனே பிரிண்ட் போடப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் அவர் கையெழுத்திட்டார். அது பிரேம் செய்யப்பட்டு அக்குழந்தைகளுக்கு தரப்பட்டது. இந்நிகழ்வு ஒரு பத்திரிகையாளரால் பதிவு செய்யப்பட்டு ‘பூக்கள் பூத்த தருணம்’ என அவ்வார விகடனில் வெளியாயிற்று. அதைப் பார்த்த கோவை வாசகர் ஒருவர், விகடன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு என் தொலைபேசி எண் வாங்கி, என்னை அழைத்தார். அவர் குரல் கம்மியிருந்தது.

சுற்றி நின்றிருந்த அக்குழந்தைகளினூடே, வளர்ந்த குழந்தையான பி.சி.ஸ்ரீராம் குனிந்து நின்று ஒரு குழந்தைக்கு கேமராவை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த ஸ்டில் பிரசுரமாகியிருந்தது. அருகில் கொப்பளித்த சந்தோஷத்தை மீறி, ஒரு குழந்தையின் முகத்தில் படிந்திருந்த சோகத்தை அந்த வாசகர் அச்சின் வழியே உணர்ந்திருந்தார்.


அதை ஜெராக்ஸ் எடுத்து அப்பையனின் முகத்தை ரவுண்ட் செய்து, ‘‘இப்பையனுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை இவன் படிப்பு முடியும்வரை நான் அனுப்பி வைக்கிறேன்’’ என கடிதம் எழுதியிருந்தார். அவசர அவசரமாய் நான் அந்த ஜெராக்ஸில் இருந்த அப்பையனின் முகத்தைப் பார்த்தேன். அவன் என் மகன் வம்சி.

எல்லாத் துயரங்களையும் உதறி, வாழ்வு நம்மை ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.

8 comments:

  1. அருமையான பதிவு...

    மனுஷ்யபுத்திரனின் கவிதை வரியில் ஒரு சிறு திருத்தம்; அது "பாவனை ரத்தம்".

    சிவப்புப் பாவாடை
    வேண்டுமெனச் சொல்ல
    அவசரத்திற்கு
    அடையாளமேதும் சிக்காமல்
    விரலைக் கத்தியாக்கி
    தன் தொண்டையறுத்து
    பாவனை ரத்தம்
    பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி

    http://manushyaputhiran.uyirmmai.com/post/e0aeaae0af88e0aea4e0aea4e0aebfe0aeaf-e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aebfe0aea9-e0ae9ae0aebfe0aea4e0aeb1e0ae9fe0aebfe0ae95e0ae95e0aeaae0ae9fe0ae9f-e0ae95e0aea9e0aeb5e0af81e0ae95e0aeb3.aspx

    http://bodhai.blogspot.com/2011/09/blog-post_2178.html

    ReplyDelete
  2. பவா ஒவ்வொருமுறை படிக்கும் போதும் ஏதாவது செய்து விடுகிறது உம் எழுத்து.வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பிள்ளைகளை வெளியில் விட்டு ,பள்ளியில் சிமெண்ட் மூட்டைகளை பூட்டி வைத்திருந்ததை சொன்ன பவா, இந்த குழந்தைகளுக்கு புகைப்படக் கலை கற்றுத் தரக் கேட்டதில் வியப்பில்லை . அன்புடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எல்லாத் துயரங்களையும் உதறி, வாழ்வு நம்மை ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது./

    சிலிர்க்கவைத்த பகிர்வு..
    மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  6. ஏதாவது செய்யனும் ஏதாவது செய்யனும்னு தோனும் ஆனா நீங்க செய்துட்டு இருக்கீங்க..மனசார வாழ்த்த பாராட்ட தோனுது..எவ்ளோ பெரிய camera மேதை P.C.sir இவ்வளவு எளிமையா participate பண்ணவும் ஒரு நல்ல மனசு வேனும்..அது இருக்கறதுனால தான் பெரிய மனுசங்களா இருக்காங்க..இல்லையா???

    ReplyDelete
  7. பவா ஒவ்வொருமுறை படிக்கும் போதும் ஏதாவது செய்து விடுகிறது உம் எழுத்து.வேறு என்ன சொல்ல I accept , it is a emotional writing ,

    ReplyDelete