Friday, November 16, 2012

ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு


ஜெயஸ்ரீயின் வீடு  என்று தலைப்பிட்டு இன்று ஜெயமோகன் (Jayamohan.in) அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்ததை வாசித்ததும், அதன் உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட்ட எனக்கும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியது.

ஜெயஸ்ரீயின் கணவர் உத்ரகுமாருக்கு அவருடைய குடும்ப பாகமாக 3 லட்ச ரூபாய் கிடைத்தபோது அதைவைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு50 அடியுள்ள மனையும் கிடைக்காத போது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.




நம் நிலத்தருகே 50 சென்ட் இடம் வாங்குவது ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவது  அது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன் மேல் கடகால் போடபட்ட போது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடகால் தோண்டி அக் கருங்கல் துண்டுகளோடு செம்மாண் கலந்து கரைத்துவிட்டு கடகாலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.

என்  நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினுபாஸ்கரின் தம்பி பிஜீ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான கனவு காண்பவனும்  கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.

அவ்வீட்டிற்கான ஒரு பிளானை தந்துவிட்டு வழக்கமான எல்லா கலைஞர்களையும் போல எங்கோயோ காணாமல்   போனான் பிஜீ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான், ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்  கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்.  கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனை தற்செயலாக சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும், தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது பத்து உடைக்கற்களை கொண்டு சீத்தாப்பளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடி, அவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.



அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்ககள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைக்கூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும் மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கற்றூண்கள் தூக்கி நிறுத்தப்பட்ட போது முற்றிலும் பரவச மனநிலையை அடைந்தோம்.

கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டை திறப்பதென்றும், எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ் செல்வன், கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.

எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின், எஸ்.கே.பி. கருணா, அ. முத்துகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர், வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி, என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.




புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டி, ஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோசத்தோடு கத்தரிக்கோலை கையில் எடுக்க, நாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்

காணிநிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும்”    என

தன் கம்பீரமான குரலில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடத்துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்துயரமும், கண்ணீரும், பெருமிமுமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக் கார தம்பிகள் வேலு, ஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புத கணங்கள் அவை.



அவ்வீட்டின் மொட்டை மாடியில் பெரிய ஸ்கீரின் ஒன்றை வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிளுருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம் போட போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்துவைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை ஒரு ப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுபயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார். 



இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும், தமிழின் நவீன இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும்அன்று காலை கோணங்கியும், அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது. 









எல்லார் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறுப் போட்டோம். சுடுசோறும், ரத்த பொறியல், மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் கதம்பம் (போட்டி, நுரையீரல், ஈரல், கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்று தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பி  பார்த்தேன்.

ஒரு கனவு முற்றுப்பெற்றது போலவும், ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக் கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.









 திறப்புவிழா நிகழ்வுகள் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தன. அதன் இன்னொரு தொடர்ச்சியாக, அன்றுமாலை ஏழுமணிக்கு குவாவாடீஸ்சில் மிஷ்கின் தான் சமீபத்தில் மொழிபெயர்த்த ஜந்து கவிதைகளையும், தான் எழுதிய ஒரு கவிதையையும் வாசகர்கள்  முன் தன் குரலால் சமர்பித்தார்.



சில விவாதங்களை தவிர்த்திருந்தால் அது ஒரு குழைவான அனுபவமாக மாறியிருக்கும்  எல்லாவற்றையும் மீறி எல்லார் மனதிலும் கவிதைத் தேங்கியிருந்தது.

2 comments:

  1. பொறாமையாய் இருக்கிறது பவா...

    ReplyDelete
  2. i have saved this post. and also shared with like minded people. it is my dream to have a home like this. one of these years... and i know who to get in touch with, at that time. :)

    thanks for sharing generously!!!!

    ReplyDelete