Wednesday, August 21, 2013

நட்பின் ஒளியைப் பரவச் செய்பவன்

மலையாளம் மூலம் : டி.ஆர். ஸ்ரீஹர்ஷன்
தமிழில் : கே.வி.ஷைலஜா

‘‘என் வீட்டின் கதவைத் திறந்து யாரும் எப்போதும் உள்ளே வரலாம்’’ வைக்கம் முகமது பஷீர் இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்படி நுழையும் அனைவருக்கும் அளவிடமுடியாத பிரியமும், பஷீரின் வார்த்தையிலேயே சொல்வதென்றால் அவரால் செல்லமாக எடீ என அழைக்கப்படும் அவர் மனைவி செய்த பிரியாணியும், மாமர நிழலில் நிகழும் இலக்கிய உரையாடலும் எப்போதும் கிடைத்தது. தன்னைத்தேடி வருபவர்களுக்கு அன்பையும், உணவையும் மட்டுமல்லாது உலக விஷயங்களையும் பரிமாறியிருக்கிறார் பஷீர்.
அதனால்தான் பஷீரை நினைக்காமல் தமிழ் எழுத்தாளன் பவாசெல்லதுரையை யாராலும் வாசிக்க முடியாது. திருவண்ணாமலையில் பவாவின் வீடு வேலிகளும், படல்களும், தடுப்புகளுமின்றி எப்போதும் திறந்திருந்து நண்பர்களை அப்படியே உள்வாங்கத் தயாராக உள்ளது.
ஒரு விசாலமான மாந்தோப்பினிடையே சப்போட்டா, கொய்யா, மாதுளை என விரியும் அதன் நிலப்பரப்பில் ஒரு மீன்குளமும், குளக்கரையின் எல்லாக் கரைகளிலும் உயர்ந்து நிற்கும் மரங்களும், செடிகளுமாக நம்மை வசீகரிக்கிறது.
இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்வயல், முயல்கள், வாத்துகள், மாடுகள், கோழிகள், மகளுக்காக வளர்க்கப்படும் ஒரு குதிரையென சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் இவற்றினூடேதான் பவாவின் எளிய மண்வீடு.
விலங்குகளும், பறவைகளும், மரங்களும், மனிதர்களும் கலந்து சங்கமித்து வளரும் இந்த வசிப்பிடத்தில்தான் பவாவின் நிபந்தகளோ, எல்லைகளோ இல்லாத நட்பின் பெருமரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
மனைவியும், ‘வம்சிபுக்ஸ்’ பதிப்பாளருமான ஷைலஜாவும், மகன் வம்சியும், மகள் மானசியும் இவரின் நெடும் பயணத்தில் ஒரு நதி போல உடன் கலக்கிறார்கள்.
‘‘எல்லா நாளும் கார்த்திகை’’ என்ற இப்புத்தகம் பவாவின் வாழ்வின் சிலத் துளிகள்தான். நட்பை இதயத்தின் கனலாய் பொத்திப் பாதுகாக்கும் பவாவின் வாழ்வின் பல அடுக்குகளில் அவருடன் வரும் நண்பர்கள் பற்றியும், அவர்களுக்குள் இழையோடும் நட்பைப் பற்றியும், அதி மனோகரமான மொழியில், ஆற்றொழுக்கான நடையில் சொல்கிறது இப்புத்தகம்.
மம்முட்டி, சக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பாலுமகேந்திரா, நாசர், பாரதிராஜா, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, திலகவதி ஐ.பி.எஸ், பாலா, சா. கந்தசாமி, என நீளும் இருபத்திநான்கு நண்பர்களின் வாழ்வில் பரிணமிக்கும் ஆபூர்வ நிமிடங்களின் பதிவு இது.
மனிதன் என்ற நிலைபாட்டில் எந்த மலையாளியும் இதுவரை பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாத மம்முட்டியைத்தான் பவா இந்த புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மம்முட்டி என்ற மனிதனின் இதய ஆழத்திற்குப் போய், அவருக்கும் பவாவுக்குமான நட்பின் விசாலத்தை நமக்கும் கடத்துகிறது ஒரு அத்தியாயம்.


பாலச்சந்திரன்சுள்ளிக்காட்டின் மகன் திருமணத்திற்காக கொச்சினில் போய் இறங்கியதும், அங்கே எதிர்பாராமல் மீண்டும் மம்முட்டியைப் பார்த்ததும், பால் சக்கரியா ஒரு இரவு பவா வீட்டில் தங்கியதையும் ஒரு ஓவியம் மாதிரி பவாவால் தீட்டமுடிகிறது இந்தத் தொகுப்பில்.
எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்.க்கும் தன் குடும்பத்துக்குமான ஆத்மார்த்தமான அன்பைப் பற்றிய உரைநடை வாசிக்கும் எவரையும் அதிசயிக்க வைக்கும்.
நட்பைக் கூட சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என யோசிக்கவைக்கும் இக்காலத்தில் அதிலிருந்து முற்றிலும் விலகி, சில நினைவுகளை, ஞாபகப்படுத்துதல்களை மட்டும் நமக்கு நேராக உயர்த்திப் பிடிக்கிறது இப்புத்தகம்.
‘எல்லா நாளும் கார்த்திகை’ தேசாபிமானி வார இதழில் தொடராக வெளிவந்து, இப்போது கோழிக்கோட்டிலிருந்து இயங்கும் ‘ராஸ்பெரி புக்ஸ்’ மூலம் மிக நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பவாவின் கவித்துவம் மிக்க வார்த்தைகளை கொஞ்சமும் சிந்திவிடமால் தமிழை மலையாளத்திற்கு கடத்தியிருக்கிறார் டாக்டர். டி.எம்.ரகுராம்.


Raspberry Books
Manuelsons Towers
Muthalakkulam,
Calicut – 673 001
Ph - +91 - 495 - 4050559

e-mail : info.raspberry@gmail.com

No comments:

Post a Comment