Friday, September 6, 2013

அம்மா



அம்மா
பறவைகள், விலங்குகள், மனிதர்களுடனான ஒரு மனுஷி
பவாசெல்லதுரை

அது யார்னு பாரு தாசுஅம்மா கைகாட்டின புளிய மரத்தடியை தாசும் நானும் ஒரே நேரத்தில் பார்த்தோம்.
திடகாத்திரமான ஒரு ஆள் உட்கார்ந்திருந்தான். முகத்தில் அநியாயத்திற்கு முடி முளைத்து, கையிலும் காலிலும் கூட அது வியாபித்திருந்ததுஅழுக்கேறிய வேட்டியும், பேருக்குப் போட்டிருந்த ஒரு சட்டையும், வேட்டியைவிட அழுக்கேறிய ஒரு துண்டுமாய் மரத்தின் உச்சியையே வெறித்துக் கொண்டிருந்தான்.நானும் தாசும் அவனை நெருங்கினோம். சிறுவயசு பையன் என்பதால் எனக்குக் கொஞ்சம் பயமிருந்தது. தள்ளியே நின்றேன்.
யாருய்யா நீ? எந்த ஊரு?’
அவன் எதுவும் பேசவில்லை.
கேக்கறேன்ல, இன்னா ஊரு, யேன் இங்க ஒக்காந்திருக்க?’
அவன் நிமிர்ந்து தாசைப் பார்த்தான். தாசும் இப்போது சற்று பின்வாங்கி நின்று கொண்டான்.
அடுத்த வார்த்தையை எங்கிருந்து ஆரம்பப்பதெனத் தெரியாமல்பசிக்குதா?’ என தாஸ் கேட்ட அந்த விநாடி, அவன் வேகமாக தலையசைத்து பசியை ஆமோதித்தான். அரவம் கேட்டுத் திரும்பினால் கையில் ஒரு உபயோகிக்கப்பட்ட லைப்பாய் சோப்பும், ஒரு ஈரிழைத் துண்டும், துணிச் சோப்புமாய் அம்மா.
பசிக்கிறவன் கிட்ட போயி என்னடா பேச்சு? அவனை நம்ம பம்புசெட்டுக்குக் கூட்டிட்டுப் போயி குளிக்க வச்சி கூட்டியாஎன்று தாஸ் கையில் அந்தப் பொருள்களைக் கொடுத்தாள்.
அவன் எழுந்தான்முற்றிலும் பிரமாண்டமாயிருந்தது அவன் உருவம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அப்பா எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த உண்டு உறைவிடப் பள்ளிக்கு மதியச் சாப்பாடு போடப் போயிருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனும் தாசும் வீட்டிற்கு வந்தார்கள். அவன் அழுக்கில் பாதியை பம்புசெட் தண்ணீர் குடித்திருந்தது.
உன் பேரு என்னாய்யா?’ அம்மா கேட்க, அவன் உருமினான்.
அது எங்கள் மீனாம்மா உருமல் மாதிரியேயிருந்தது.
தெளிவாச்  சொல்லு
கண்ணன்
எந்த ஊரு?’
தெக்க, திருக்கோவிலூருக்குப் பக்கத்துலகூடவே, அம்மா எதுவும் கேக்காமலேயேகோனாருஎன்றான். அதில் மட்டும் மிகுந்த தெளிவிருந்தது.
ஏன் காலைல இருந்து இங்க குந்தியிருக்க?’
அப்பா அம்மா இல்ல. ஊருல சண்ட, எனக்குன்னு யாருமில்ல
நாங்க இருக்கறோம்பா, ஒக்காரு சாப்புடுஎன்று அவனை அம்மா அந்தச் சிறிய வீட்டின் ஹாலில் உட்கார வைக்கவும், அப்பா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
யாருடி இவன்என்பது மாதிரி அப்பா அம்மாவைப் பார்க்க, ‘திருக்கோவிலூர் பக்கமாம், யாருமேயில்லையாம் நம்ம மீனாம்மாவுக்குத் துணையா இங்கயே இருந்துட்டுப் போகட்டும் வாத்யாரேஎன்று அம்மா சொல்ல, அப்பா எதுவும் சொல்லாமல் சாப்பாட்டுத் தட்டின் முன் அமர்ந்தார். அன்று எங்கள் எல்லோரையும்விட கறித்துண்டுகள் கண்ணன் தட்டை நிறைத்தன. அவன் ஒரு விலங்கைப்போல உருமலோடு சாப்பிட்டது, இன்னும் நினைவிருக்கிறது.
எப்போதும் அண்டா மூடும் தாம்பாலத் தட்டில்தான் பொன்னி அரிசி சாதம் ஆறவைத்துப் பரிமாறப்படும். தாஸ் சாப்பாடும் அம்மா கொழம்பும் ஊற்றுவார்கள். ஒரு வித எரிச்சலுடனும், பொறாமையுடனும் தாஸ் ஐந்தாவது தடவையாகத் தாம்பலத் தட்டிலிருந்து அவன் தட்டுக்கு சாதத்தைத் தள்ளினான்.
நீ ஏண்டா அவனை அப்படி மொறைக்கிற? அவனும் உன்னாட்டம் இந்த வீட்டுக்கு ஒரு தொணையா இருந்துட்டுப் போறான்என அம்மா சொன்னவுடன்,
இந்த வீட்டுக்கு எத்தனை தொணை?’ என்பது போல எல்லோரையும் திரும்பிப் பார்த்தான் தாஸ். தரையில் வசந்தா அக்காவும், சேரில் செல்வராஜ் மாமாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
யாரே ஒரு ஆள் ஒரு சாயங்கால நேரத்தில் அப்பா ஸ்கூலுக்கு ஒரு நாலு வயசுப் பெண் குழந்தையோடு வந்து, ‘‘தியாகி அண்ணாமலைப்பிள்ளை அனுப்புனாரு, எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பொண்டாட்டி செத்துடிச்சி. ஒரு குழந்தையை அய்யா எடுத்துக்கிட்டாரு. என்னை மாதிரியே என் நண்பர் தனக்கோட்டி வாத்தியார் கொழந்தை இல்லாம இருக்காரு, இன்னொரு பொண்ணை நான் சொன்னன்னு அவருகிட்ட ஒப்படைச்சுடுன்னாரு’’ வசந்தா அக்காவின் கைப்படித்து அப்பாவிடம் அவன் ஒப்படைக்க, அன்று மாலை ஸ்கூல் முடிந்து அந்தக் குழந்தையின் கைப்பிடித்து அப்பா வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் அவளை ஒப்படைத்தார். அப்படி வந்து சேர்ந்தவர்தான் என் வசந்தாக்கா.
இதில் எதனோடும் தனக்கு சம்மந்தமில்லையென சாப்பிட்டுக் கொண்டிருந்த செல்வராஜ் மாமா என் அப்பாவின் சொந்த அக்கா மகன். தன் அக்காவிடம் மிகுந்த மனவேறுபாடு ஏற்பட்டு பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்தியிருந்த அப்பா, அவரை மரணத்துக்குச் சற்றுமுன்தான் மறுபடியும்  சந்திக்கிறார். அப்போது தம்பியின் கையைப் பிடித்து தன் ஐந்து வயது மகனின் கையில் புதைத்து,
தம்பி, இவனை உன் புள்ளயா வளத்து ஆளாக்கிடுப்பாஎன்ற மௌன மொழிக்கு வாக்குத் தந்ததை நிறைவேற்றும் பொருட்டு, அக்காவின் இறுதிச் சடங்கு முடிந்து சுடுகாட்டிலிருந்து அப்படியே கூட்டி வந்து வீட்டில் வைத்துக் கொண்டாராம். ’ அதன் பிறகான பல வருடங்கள் கழித்து, என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்  காலத்தின் சிறு கருணையால் கருத்தரித்தவன்தான் நான்.
இப்போது எங்கள் வீட்டில் அப்பா - அம்மாவோடு செல்வராஜ் மாமா, வசந்தா அக்கா, தேவதாஸ், கண்ணன், மீனாம்மா என்று எங்கள் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் எங்கள் வீட்டு எருமைமாடு மற்றும் கன்னங்கரேலென எப்போதும் வீட்டு வாசலில் படுத்திருக்கும் எங்கள் நாய் ஜிம்மி.
சாயங்காலமானால் ஏழெட்டு பேர், அளவெடுத்து உருவாக்கினது போல் வீட்டை மொய்ப்பார்கள். ராஜேந்திர மாமா, மூர்த்தி, சேகர், தேவராஜ், சிங்காரம் என்ற அவர்கள் எல்லோரும் அப்பா அம்மாவால் சொந்த ஊரிலிருந்து அழைத்து வரப்பட்டு பேருக்கு அந்த உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, வீட்டிலேயே தாஸ் அண்ணனின் தாம்பலத்தட்டுச் சோற்றுப் பரிமாறலில் சாப்பிட்டு வந்தார்கள்.
தாஸ் என அழைக்கப்பட்ட தேவதாஸின் சொந்தப் பெயர் கோவிந்தசாமி. அவரும் திருக்கோவிலூர் பக்கமிருந்து வந்து புளியமரத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மதியச் சாப்பாட்டுக்குப் பிறகுஅது என்னடா கோவிந்தசாமின்னு ஒரு பேரு. அது எனக்குப் பிடிக்கல?’ என்றுதேவதாஸ்என அம்மாவால் ஞானஸ்தானம் பெறப்பட்டவன்தான். டவுனுக்குப் போகவர ஆரம்பித்தவுடன் ஒரு இரவு சாப்பாட்டிற்குப் பிறகான ஏகாந்த வெளியில் வீட்டு வாசலில் உட்கார்ந்து,
நான் சாரோன்ல ஒரு பொண்ணப் பாத்தம்மா, பேரு ஜெயா. அதையே கல்யாணம் கட்டி வச்சிருங்கம்மாஎன்ற வார்த்தைகளில் நெகிழ்ந்த காதலைக்  கௌரவிக்கும் பொருட்டு தாஸ் - ஜெயா திருமணத்தை சாரோன் தேவாலயத்தில் அம்மாவே முன்னின்று நடத்தி வைத்து அவரை அந்த தேவாலயக் கோயில் பிள்ளையாக ஒப்படைத்தார். ஆம் சாரோன் ஆலயத்தின் முன்னாள் கோயில்பிள்ளையும், இப்போதைய கோயில் பிள்ளையான  அவர் மகன் பிரகனேஷ் எனத் தொடரும் இந்த உறவு எங்கள் வீட்டின் முன் இருந்த புளிய மரத்தடியில் அம்மா கண்டெடுத்த புதையல்தான்.
அப்பா ஊரில் இல்லாத ஓர் பின்னிரவில் எங்கள் மீனாம்மாவும், ஜிம்மியும், போட்டி போட்டுக் கத்த, அம்மா என்னையும் செல்வராஜ் மாமாவையும் எழுப்ப, கையில் ஒரு நீண்ட எவரெடி டார்ச் லைட்டோடு அவர்களைப் பின் தொடர்ந்த அமாவாசை கருக்கலது. ரோட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் எங்கள் நிலத்தை அடையலாம்அடைந்தோம். நில எல்லையை மிதித்ததும் மீனாவும், ஜிம்மியும் நின்று பம்மினார்கள். அம்மா கவனித்துவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் அறுக்கப்போகும் பொன்னி நெல் வெள்ளாமையை நாலைந்து பேர் உட்கார்ந்து கையாலேயே நிமிட்டிக் கொண்டிருக்க, டார்ச் லைட் வெளிச்சம் பட்டவுடன் எல்லோரும் எழுந்து ஓட, எங்கள் ஜிம்மி நாலுகால் பாய்ச்சலில் எட்டி ஒருவன் கெண்டைக்கால் சதையைப் பிய்த்தெடுக்க, தலைக்குப்புற விழுந்த அவன் எழவேயில்லை. அவனை நெருங்கிய அம்மா அவன் தலைமுடியைப் பிடித்தெழுப்பி முகத்தை லைட் வெளிச்சத்தில் பார்க்க, எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஊள்ளூர் ஆள் அவன். அவனை எழுப்பி, கைத்தாங்கலாய் கூட்டிப் போய் அவர்கள் விட்டுவிட்டுப் போன சாக்குப்பை நெல்லை, இரண்டு பயிரைப் பிடுங்கின வைக்கோலால் கட்டச் சொல்லி அவன் தலையிலேயே தூக்கச் சொன்னார். எதுவும் புரியாமல் அவன் மூட்டையைத் தூக்கித் தலையில் வைத்து, அம்மாவைத் திரும்பிப் பார்க்க,
இதுக்குதானேடா இப்படி பாம்புன்னு, பூச்சின்னு பாக்காம நடுசாமத்துல திருட வந்தீங்க. எடுத்துட்டுப் போ, குத்திச் சாப்புடுஎன அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஜிம்மியும், மீனாவும் கூட அமைதியாக என்கூடவே நடக்க, அவன் மட்டும் பீதி குறையாமல் திரும்பி திரும்பிப் பார்த்து நடந்த அந்த இரவு இன்னும் நினைவிருக்கிறது.
அப்பாவுக்கும் அம்மாவுக்குமான ஒரு கடுஞ்சண்டையில், அம்மாவின் ஆன்மாவை அழிக்கும்பொருட்டு அப்பா தண்டரை விவசாயிக்கு எங்கள் மீனாம்மாவை எழுநூறு ரூபாய்க்கு விலை பேசி விற்றபோது அவள் ஆறுமாதம் கருவுற்றிருந்தாள்.
அடுத்த இரு நாட்களும் அம்மா அன்னந்தண்ணி ஆகாரமின்றிக் கிடந்தாள். அடிக்கொருதரம் மாட்டுக் கொட்டடிக்குப் போய் வந்தாள். தவிட்டுத் தொட்டியைக் கைவிட்டுத் துழாவினாள். இரண்டாம் நாள் அதிகாலை மீனாம்மாவின் உறுமல் சத்தமறிந்து கதவைத் திறந்தவளுக்குப் பேரதிர்ச்சி. அவள், மீனாம்மா வாசலில் நின்றிருந்தது. மெல்ல அதன் முதுகில் நீவிக் கொடுத்தாள். அவர்களிருவருக்குமான மொழியில் இருவரும் பேசிக் கொண்டார்கள். அந்த மொழியை அறிந்த இன்னொருவனாக கண்ணன் மாறியிருந்தான். விடிவதற்குள் மாட்டை வாங்கின தண்டரைக்காரன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
குடுக்கற மாதிரி குடுத்து ஆள வச்சி மாட்டைத் திருப்பிட்டு வந்துட்டயேம்மாஎன அவன் ஆரம்பித்ததே அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சநேரம் விவாதமும் அழுகையுமாகப் போனது. தன் காதிலிருந்த கம்மலைக் கழட்டி தேவதாசிடம் கொடுத்து, அடகுவச்சு ஆயிரம் ரூபா வாங்கிவரச் சொல்லி, அவனுக்கு எழுநூறுக்குப் பதிலாக எழுநூற்றம்பது கொடுத்தனுப்பினாள். அன்று பகல் முழுக்க அம்மாவும், கண்ணனும் மீனாவைத் தேற்றினார்கள்.
திடமானதல்ல, லேசானதுதான் வாழ்வின் இணைப்பின் கயிறு. அது ஒரு நாள் எங்கள் குடும்பத்திலும் அறுத்துக் கொண்டது. எங்கள் மீனா, ஜிம்மி, நிலம், கிணறு, கண்ணன் எல்லோரையும் பிரிந்து சாரோனுக்குக் குடிபெயர்ந்தோம்.
மத்தியதர வாழ்வெனும் நரகத்துக்குள் வீழ்ந்தது இப்படித்தான். ஆனாலும் அம்மா தன் ஒவ்வொரு நினைவாலும், செயலாலும் ஒரு நிலத்து மனுஷியாகவே இருந்தாள். நிலத்தின் நடவு, களையெடுப்பு, அறுவடையின் போதெல்லாம் அவளால் முடிந்தளவு சோறு ஆக்கி மறுநாளுக்கு தலைச்சுமையாய் எடுத்துப் போவாள். அறுவடை முடிய எத்தனை நாளானாலும் நிலத்திலேயே கிடந்தாள். தூற்றி முடிந்த நெல்மணிகளில் சரிபாதியை முன்னுவா  பின்னுவா  எனச் சொல்லிபயிர் வைத்தவர்களுக்குத் தருவாள்.
அப்போதுதான் நான் எழுத ஆரம்பித்திருந்தேன். வீடு நண்பர்களால் நிறைய ஆரம்பித்த காலம் துளிர்த்தது. ஒவ்வொரு நாளும் கணக்கில்லாத நண்பர்களின் வருகையால் வீடு ததும்பியது. அம்மா அசரவில்லை. கோழிகள், புறாக்கள், வான்கோழிகள், கினிக்கோழிகளென வீடும் வாசலும் பறவைகளின் சத்தங்களால் நிரம்பியது. எத்தனை பேர் வந்தாலும் சமைத்துப் போடத் தயங்கினதேயில்லை. என் இலக்கிய நண்பர்களில் இன்றளவும் அம்மாவின் பிரியத்திற்குரியவன் கோணங்கி. என்னுடனான அவன் உரையாடலை விட அம்மாவுடனும் அப்பாவுடனும் தான் விடிய விடியப் பேசிக் கொண்டிருப்பான். அவன் புறப்படும்போது அம்மா அவன் தலையில் கை வைத்து நீண்ட நேரம் ஜெபிப்பாள். ஒவ்வொரு முறை கோணங்கி அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கும்போதும் அதைத் தடுத்துத் தூக்கி நிறுத்தி நெற்றியில் ஒரு முத்தமிடுவாள்.
எங்கள் கூரைவீட்டை இடித்து மாடிவீடு கட்ட ஆரம்பித்தபோது பணக்கஷ்டத்தால் துவண்டு போனேன். அப்போது தங்கள் செட்டைகளில் வைத்துப் பாதுகாத்தது நண்பர்கள்தான்.
எழுத்தாளர்  ஜெயமோகன் பத்தாயிரம் ரூபாய் தந்து, நான் வீடுகட்டும்போது திரும்ப வாங்கிக் கொள்கிறேன் என்றார். ஜெயமோகன் வீடு கட்டும்போது அம்மா தன் தாய்வீட்டிற்குத் தயாராவது மாதிரி அதிரசம், முறுக்கு என எல்லாப் பண்டங்களோடும் பத்தாயிரத்தைக் கொண்டுபோய் தர்மபுரியில் கொடுத்துவிட்டு இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிவிட்டு வந்தார்.
செய்யாறில் நடந்த ஒரு கலை இரவில் நானும் வேல ராமமூர்த்தியும் கதை சொன்னோம். இரவே கோயம்புத்தூர் போக வேண்டிய அவர், வீட்டிற்கு வந்து அம்மாவைப் பார்த்துவிட்டு போகிறேன் என வந்தபோது வீட்டில் கோணங்கி இருந்தான். எப்போதும் போல் நள்ளிரவு கோழிக்கறி சுடுசோறு சாப்பிட்டோம். அதன் ருசி வேலாவின் கோவைப் பயணத்தை அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்தது. அடுத்தநாள் களியும் கருவாட்டுக் குழம்பும். அடைமழை பிடித்துக் கொண்டது. மழையினூடே அம்மா நிலத்து அரிசியில் சோறாக்கி, தெருவிலிருந்த அத்தனை விதவைகளுக்கும் வேலா, கோணங்கி கையால் சோறு பறிமாற வைத்தாள். நெகிழ்ந்து போன வேலா, கோயம்புத்தூர் புறப்படுவதற்கு ஐந்து நாட்களானது. அந்த ஐந்து நாள் இரவும் பகலும் வீட்டறையிலேயே கிடந்து பேசி, விதவிதமாய்ச் சாப்பட்டு, தூங்கி...
அய்யோ... அம்மா...
இனி எங்கு காண்போம் அம்மா?
சாரோன் வாழ்வு அம்மாவுக்கு ஒருவகையில் பிடித்ததுதான் என்றாலும், அவர்கள் மிக விரும்பிய தேவாலயம், ராபோஜனம்,      போதகர் வருகை, அறுப்பின் பண்டிகை, பஜனையின் கீதங்களென அவர்களின் தினங்கள் நிரம்பி வழிந்ததெனினும், மனிதர்களற்ற ஒரு வெறுமை அவளைச் சூழ்ந்து கொண்டது. எல்லோரும் அவரவர் வீட்டிற்குள்ளிருந்து மட்டும் வாழ்ந்தார்கள். சமூக வாழ்வை மறுதலித்தார்கள். மத்தியதர வாழ்வின் கௌவரவம் எல்லோரையும் வீட்டறைகளில் நெட்டித்தள்ளி பூட்டிக் கொண்டது.

பரந்த வெளியில் நிலம், மரம், கிணறு, மீனாம்மா, ஜிம்மி, கண்ணன், தேவதாஸ், தாம்பலத்தட்டுச் சோறென எல்லாம் இழந்த வெறுமையை எங்கள் யாராலும் இன்றளவும் ஈடு செய்ய முடியவில்லை. மீண்டும் அம்மாவின் தொப்புள்கொடி வழியே பயணித்து, இழந்த அந்த வாழ்வைக் கருவறை வாசனையோடு அடைவது மட்டுமே அம்மாவுக்கு நாங்கள் செய்யும் நிறைவஞ்சலியாக இருக்கும்.

14 comments:

  1. ஒருநாள் பவா வீட்டிற்கு அவரைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன்.வீட்டு முன் நின்றிருந்த அம்மா என்னைப் பார்த்து தலையசைத்து வரவேற்றார்கள். அவர்களை யாரென்று எனக்கும் என்னை யாரென்று அவர்களுக்கும் அவர்கள் யாரென்று எனக்கும் தெரியாது.இருந்தும் ஒரு பாசப் புன்னகையோடு என்னை அவர்கள் வரவேற்றது எனக்கு என் பாட்டியை நினைவு படுத்தியது.அவர்களும் அப்படித்தான் மனிதர்களை நேசித்த மனுஷி.எங்கள் வீட்டில் தினமும் குறந்தது ஐந்து பேராவது உணவு உண்டுதான் செல்வார்கள்.அடுத்தவர்களை வயிறார உணவு போட்டு உபசரிப்பது அந்த தலைமுறைமனிதர்களுக்கே உரிய தனிப்பெரும் குணம்.பவாவின் அம்மா கையால் உணவு அருந்துகிற கொடுப்பினை எனக்கு இல்லை.கருணை மிகுந்த அந்தத் தாயுள்ளம் ஊர்ப் பிள்ளைகளையெல்லாம் ஊட்டி மகிழ்ந்தது.பவா ! இப்படி ஒரு தாயுள்ளம் கொண்ட தாயை இழந்தது ஈடு ச்ய்ய முடியாத இழப்பு தான் !உங்களைப் போல் மானுடத்தையே வசப்படுத்திய ஒரு மகனைப் பெற்ற அந்தத் தாய்க்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி ! தெய்வங்கள் எப்போதாவதுதான் மண்ணுக்கு வருகிறார்கள் உங்கள் அன்னையப் போல !

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கள், அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  3. நல்ல எழுத்து நடை!


    நினைவுகள் எப்போதும் துணையிருக்கட்டும்!

    ReplyDelete
  4. மிகுந்த வருத்தமளித்தது பவா. கடைசியாக வீட்டிற்கு வந்தபோது என் நவீனன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து அனுப்பினார். என்றென்றும் மறக்க முடியாதது.

    ReplyDelete
  5. வந்தவருக்கெல்லாம் உணவளிப்பது மிகப்பெரிய விஷயம். தலைவணங்குகிறேன்!

    ReplyDelete
  6. Dear Bava..

    I was deeply shocked by this news.
    May god give mother's soul an eternal rest and peace.
    My heartfelt condolences for you and family.

    V. Ramesh.Hosur

    ReplyDelete
  7. அம்மா என்னும் அந்த நிறைந்த கனிவின் பேரன்பில் நானும் திளைத்திருக்கிறேன் அண்ணா.அம்மாவுக்கு என் இதய அஞ்சலி.

    ReplyDelete
  8. பதிவைப் படித்துவிட்டு கலங்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை தோழர். நான் முதல்முறை உங்களை சந்தித்தது, உங்கள் வீட்டில் நள்ளிரவில். அடுத்த நாள் உங்கள் அம்மாவின் கையால் சாப்பிட்ட தோசையும் தேங்காய் சட்னியின் வாசமும், மிளகாய் சட்னியின் காரமும் இன்றும் உடன் இருக்கிறது. உங்கள் ஏற்பாட்டில் என் திருமணம் நடந்து, விருந்து என்று முதலில் காலடி எடுத்து வைத்தது உங்கள் வீட்டில்தான். இரவுப் பொழுதை உங்கள் வீட்டில் நானும் மேகலாவும் அம்மாவின் அறையில்தான் கழித்தோம். அடுத்த நாள்தான் அம்மா இரவில் எங்கே தூங்கியிருப்பார்கள் என்று யோசித்தேன். கேட்க ஏனோ பயம், தயக்கம்... தன்னளவில் நிறைவான வாழ்வை வாழ்ந்த மாமனுஷி அவர். அம்மாவின் நினைவைப் போற்ற எங்கள் குடும்பம் உங்களுடன் இருக்கிறது தோழர்.கலங்க வேண்டாம்.
    - பாலு சத்யா

    ReplyDelete
  9. அம்மா என்ற மனுஷியை அடையாளம் காட்டும் எழுத்து பவா. படிக்கும்போதே கண்கள் நிறைந்து விட்டன.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. மீண்டும் பிறந்தாலும் அந்த நாள் போல் சமூகம் இருக்குமா அண்ணா? பொருளாதார நிலையும் நீங்கள் சொன்னது போல் எல்லோருமே ஒரு மத்திய தர வாழ்க்கையில் வீட்டுக்குள்ளேயே வாழ்கிறார்கள் (வாழ்கிறோம் என்பதும் சரியோ?)

    ReplyDelete
  12. Great! வேறு வார்த்தை இல்லை. அவர் நீரோடை. அதனோரம் நடப்பட்ட மரங்கள் நாம்.

    ReplyDelete
  13. எழுத்தின் நெகிழ்ச்சி உங்கள் அம்மாவின் உருவத்தை என் அம்மாவின் உருவமாய் வரைகிறது.

    ReplyDelete