Wednesday, February 19, 2014

பாலுமகேந்திரா கடைசிவரை கலையோடு மல்லுக்கட்டிய கலைஞன்


                             

‘‘அவ்வளவு சீக்கிரம் நானொன்னும் போயிடமாட்டேன் பவா, என் பேரன் வம்சி எடுக்கிற முதல் படத்த ப்ரிவியூ தியேட்டர்ல பாத்துட்டுதான் கண்ணை மூடுவேன்’’ சொல்லி பத்து நாளுக்குள்ள,
‘‘இப்படி என்னை ஏமாத்தீட்டங்களே சார்?’’
வம்சியையும் மானசியையும் உங்கள் கைகளால் புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்று நீங்களே விரும்பி, ஆசை ஆசையாய் புறப்பட்டு வந்துபோது, காய்ச்சலில் கிடந்த இரு குழந்தைகளையும் பார்த்து, ‘’இப்படி கீரத்தண்டாட்டம் வதங்கிக் கிடக்கிறீங்களேம்மா’’ என்று உங்கள் கேமராவைப் பையை விட்டு வெளியே எடுக்காமல் அப்படியே திரும்பிப்போன கணம் யாருக்கு வாய்க்கும் சார்?
உங்களைத் தெரியாதா எங்களுக்கு? குரோட்டன்ஸ் செடிகள் வாடியிருந்தாலே, அதன் இலைகளில் தூசி படிந்திருந்தாலே தண்ணீர் விட்டு அவற்றைக் கழுவி அதன்பின் உங்கள் கேமராவுக்குள் கொண்டு வருவீர்களே? தாவரங்களுக்கே இத்தனை தனி கவனிப்பென்றால் தளிர்களுக்கு?
தன் கடைசி மூச்சுவரையிலும் ஒரு கலைஞனுக்கான கனவுகளுடனும் தேடுதலுடனும் மட்டுமே வாழ்ந்த அசல் கலைஞன் பாலுமகேந்திரா, இந்த வருடச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வம்சி அரங்கிற்கு வந்து அமர்ந்து தன் புத்தகங்கள், தன் குறுந்தகடுகள் எல்லாவற்றிலும் கையெழுத்திட்டுத் தந்து கொண்டிருந்தார். அவருடனிருந்த அத்தருணங்களில் அவர் குனிந்து கையெழுத்திடும் போதெல்லாம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமிதத்தின் சிறுகசிவும் அம்முகத்தில் இருந்ததில்லை. அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களையும், ஆசிவேண்டி அவர் காலில் விழுந்து கொண்டிருப்பவர்களையும் எப்போதும் பதட்டத்துடனேயே எதிர்கொள்வார். ‘இதெல்லாம் எனக்கு அதிகம்என்பது மாதிரி என்னை ஒரு பார்வை பார்ப்பார்.
இம்முறை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அவர் அருகில் இருந்து உரையாட வாய்த்தது. உலகத் திரைப்பட ஆளுமைகளின் படைப்புகளை முன்வைத்த அய்யனார் விஸ்வநாத்தின்நிகழ்திரைபுத்தகத்தை அவரிடம் தந்தேன். முதல் பக்கத்தைப் புரட்டியவர், ‘‘நான் நேசித்த தேவதைகளுக்கும் என்னை நேசிக்கும் தேவதைகளுக்கும்’’ என்று இருந்ததைப் பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டு தனக்கே கேட்டுவிடாத மெல்லிய குரலில், ‘‘இது நான் போட்டிருக்க வேண்டியது’’ என்று சொல்லிக் கொண்டார். நான் உற்சாகமாவதை கவனித்து, ‘‘நான் கடைசி வரையிலும் என் ஆட்டோ பயாகிராபியை எழுதவே முடியாமப் போயிடுச்சே பவா. அதை எழுதினா உண்மையை மட்டும்தானே எழுத முடியும்?’’ என்று தன் திரைப்பட வசனம் மாதிரி மிச்சத்தை என்னிடமே விட்டுவிட்டு அவர் அமைதியானார்.
தலைமுறைகள் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் அப்படத்தைப் பற்றி சரியான விமர்சனங்கள் ஏதும் வரவில்லையென்ற சிறு கவலை அவருக்கிருந்தது. மிச்சமிருக்கும் தன் ஜீவிதத்தில் இன்னும் நான்கு முழுநீளப் படங்கள் எடுத்துவிட முடியுமென்றும், அப்படி தான் தொடங்குகிற முதல் படத்தின் டிஸ்கஷனுக்கு நான் கட்டாயம் வரவேண்டுமென்றும், எப்போதும் போல் வராமல் ஏமாற்றிவிடக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டார்.
பிப்ரவரி பதிமூன்று அன்று தகவல் அறிந்தவுடன், எல்லோரையும் போல நானும் இது பொய்யாக இருந்துவிடக் கூடாதா என்று மிகுந்த தயக்கத்துடன் இயக்குநர் பாலாவைத் தொலைபேசியில் அழைக்கிறேன்.
‘‘சாருக்கு ரொம்ப சீரியஸ்ன்னும், .சி.யூல அட்மிட் பண்ணியிருக்ககீங்கன்னும்…’’ என் வார்த்தைகளை முடிப்பதற்குள்,
‘‘இப்ப எங்க இருக்கிங்க பவா?’’
‘’திருவண்ணாமலையில’’
‘‘இப்ப பொறப்பட்டீங்கன்னா சரியா இருக்கும்’’
எனக்கு புரிந்தும், புரியாமலும் இருந்தது. ஏன் இப்பவே புறப்படணும்?
யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஷைலஜாவின் கதறலுக்கருகே எங்களால் நெருங்கக்கூட முடியவில்லை. அவள் அப்படியே அழுது தீர்க்கட்டுமென வெகுநேரம் அமைதியாய் இருந்தேன்.

இந்த ஆறேழு வருடங்களில் பதினோரு மணிக்கு அவரிடமிருந்து எனக்கோ, ஷைலஜாவுக்கோ ஒரு தொலைபேசி அழைப்புவரும். அது ஒருநாளும் அரைமணி நேரத்துக்குமேல் நீடித்ததில்லை. அதில் நேற்றைய நிகழ்வு, படித்த புத்தகம், சாப்பிட்ட உணவு, மௌனியின் நினைவு, கலந்து கொண்ட கூட்டம், பார்த்த படம் எல்லாம் அடங்கிய கொலாஞ் அது. சில உற்சாக தினங்களில் அந்தத் தொலைபேசி அழைப்பு காலை எட்டு மணிக்கே வரும். எங்கிருந்து ஆரம்பிப்பார் என ஒருநாளும் ஒருவரும் அனுமானிக்கவே முடியாத துவக்கமாயிருக்கும் அது.
‘‘ஷைலும்மா, இன்னிக்கு வாக்கிங்ல என்கூட ஒரு வயசான கெழவன்மா, லொக்கு, லொக்குன்னு இருமிகிட்டே வர்றான். நாளையிலிருந்து இப்படி எவன்னா கெழவனா வந்தா திரும்பி வந்துடலான்னு இருக்கேன். என்னை மாதிரி யூத் அன்ட் எனர்ஜிக் பாசனாலிட்டிங்களோட போனாதான் அன்றைய நாள் உற்சாகமா இருக்கு’’
‘‘நேற்று குரசோவாவோட Dreams எட்டாவது முறையா பார்த்தேன் பவா. இன்னைக்கும் புதுசா இருக்கு. படைப்பு, காலத்துக்கு முன்னாடி அதுவே தன்னைப் புதுப்பிச்சிக்கும். காலத்தோட வெய்யிலிலேயும், மழையிலேயும், பனியிலேயும், நிக்க முடியாத சருகுங்க எரிஞ்சிடும் அல்லது மக்கிடும். குரசோவா கம்பீரமா நிக்கறான்’’
அவர் உரையாடல்களில் லௌகீகப் புலம்பல்கள் ஒருபோதும் இருந்ததில்லை. வீடு, அரிசி, பருப்பு, ப்ளாட், வாடகை, அப்பார்ட்மெண்ட், கார், நோய், மருத்துவம், இதிலிருந்தெல்லாம் ஒரு கலைமனம் துண்டித்துக் கொள்ளும் அல்லது துண்டித்துக் கொள்ள வேண்டுமென அவரைப் பார்த்தே புரிந்து கொண்டேன்.
நானும், ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும், வம்சி, மானசி, படிக்கும் ஸ்கூலுக்குப் போய் அவர்களை அப்படியே போட்டிருந்த சீருடையோடு காரில் ஏற்றிக் கொண்டோம். வழிநெடுக அவரின் நினைவுகள் ஒரு சூறைக்காற்று மாதிரி வண்டிக்குள் அகல மறுத்து சுழன்றது. வம்சி அநியாயத்திற்கு அமைதி காத்தான். அவன் அமைதி என்னைக் குலைத்தது. அவன் ஏதாவது பேசிவிட வேண்டுமென நினைத்தேன். தமிழ்நாட்டைத் தாண்டியும் எனக்கும் ஷைலஜாவுக்கும் வந்த தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள்கூட அழுகையும், கதறலுமாய் இருக்க, நாங்கள் எங்கள் அப்பாவைக் கடைசியாய்ப் பார்க்க போய்க் கொண்டிருந்தோம்.
‘‘அதுக்காக வண்டியை வேகமா வெரட்டாதீங்க, நிதானமா வாங்க, நீங்க வந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்’’ இது பாலா.
சட்டென நினைவு வந்து நா.முத்துக்குமாரை போனில் அழைத்தேன். அவன் அதற்கு முந்தின, நாள்தான் யுவன்சங்கர் ராஜாவோடு புறப்பட்டு லிங்குசாமி படத்திற்கான பாடல் தயாரிப்பிற்கு கோவா போயிருந்தான். அவனுக்குக் காலையிலேயே தகவல் போயிருக்கும். அவரிடம் வளர்ந்த பிள்ளை அவன். ஆனாலும் அவன் புறப்பாடு பற்றி அறிய கூப்பிட்டேன்.
‘‘என்னண்ணே?’’ எந்த பதட்டமுமின்றி, தூங்கி எழுத்தவனின் குரல் அது.
‘‘சென்னைக்குப் போயிட்டு இருக்கோம் முத்து’ ‘
‘‘என்னண்ணே, விசேஷம்? ஏதாவது நிகழ்ச்சியா?’’
‘‘முத்து உனக்கு எதுவுமே தெரியாதா? உங்க டைரக்டர் போயிட்டார்டா’’
அவன் கதறலைக் கேட்க முடியலை.
என்னண்ணே சொல்றீங்க? என்னண்ணே சொல்றீங்க?’’ என்று பிதற்ற ஆரம்பித்தான். எப்போ? எங்க? எப்படி? எந்தக் கேள்விகளுக்கும் என்னிடம் பதிலில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் முத்துக்குமாரிடமிருந்து போன்.
‘‘அண்ணா, ஏர்போர்ட்ல இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ப்ளைட் புடிச்சி ஆறு மணிக்கெல்லாம் வந்துருவேன். எனக்குத் தெரியாதுண்ணே. என் போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடிச்சு. இரவெல்லாம் கண் விழிச்சி பாடல் ரெக்கார்டு பண்ணோம். காலைல ஏழுமணிக்குதான் தூங்கப் போனோம். உங்க போன் கால்தான் என்னை எழுப்பிவிட்டுச்சி. எழுந்து பாத்தா ஜீவா மட்டும் பத்து தடவை கூப்பிட்டிருக்கா, யார் யாரோ கூப்பிட்டிருந்தாங்க. எங்க டைரக்டருக்கு என்னண்ணே ஆச்சு?’’
‘‘காலைல அஞ்சு மணிக்கு, அட்டாக்கும், ஸ்டோர்க்கும் ஒண்ணா வந்துருக்கு’’
‘‘பாலாண்ணன் ஊர்ல இருக்காரா?’’
‘‘அவர்தான் கூட இருந்து எல்லாத்தையும் பாத்துகிறார். நீ சீக்கிரம் வா’’

நாங்கள் தசரதபுரம் போலீஸ் பூத்தருகில் இறங்கி நடந்தோம். அங்கிருந்து சினிமாபட்டறை ஸ்டுடியோவரை சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள். திசைகள் மனிதர்களால் மறைந்திருந்தன. அழுகையும், பதைப்பும், அவரசமுமாய் நாங்கள் எங்கள் அப்பாவை சமீபித்தோம்.
ஒரு கண்ணாடிப் பேழைக்குள் அவருக்கு மிகவும் பிடித்தமான கறுப்பு பேண்ட், அடர் பச்சை சட்டை, புளூ கலர் ஜீன்ஸ் தொப்பியில் நீண்டு படுத்திருந்தார். கால்கள் ஒரு பஞ்சுக் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தன.
ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும் குரலெடுத்து அழுதது, அந்த இடத்தையே அல்லோகலப்படுத்தியது. நான் அமைதியாய் அவர் காலடியில் நின்று கொண்டேன். நீண்ட நேரம் கழித்து அந்த இடத்தை நிதானித்தேன். தலைமாட்டில் அர்ச்சனா நின்றுகொண்டு, தன் முந்தானையாலும், கையிலிருந்த ஒரு சிகப்பு நிற டவலாலும் அப்பேழையை நிமிடத்துக்கொருமுறை துடைத்து விட்டுக்கொண்டிருந்தார். அழுது வீங்கிய கண்களோடு, சுகா அவருக்கருகில் நின்று விழும் மாலைகளை எடுத்துபோட்டுக் கொண்டிருந்தார். தம்பி மாரி செல்வராஜ், வரும் ஜனங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் அகிலாம்மா ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார். நான் அவர் கைகளை என் கைகளோடுப் பிணைத்துக் கொண்டு,
‘‘ஷங்கி வந்தாச்சாம்மா?’’ என்றேன்.
பெங்களூர்லயிருந்து வந்துகிட்டே இருக்கான்’’ குரலசைவிலிருந்து நானே யூகித்துக் கொண்டேன்.
எந்தச் சலனமுமின்றி சார் படுத்திருந்தார். கடந்த மாதம் இதே தேதியில்வம்சிபுத்தக அரங்கில் அவரை சந்திக்கிறேன்.
‘‘தப்பிச்சி, தப்பிச்சி போயிடறீங்களே பவா, கொஞ்சநேரம் கூட உட்காருங்க’’ எப்போதும் அந்த ஆளுமையின் அனல்காற்று, அது குளிர்ந்திருந்த போதிலும் என்னால் தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை.
நான் அவருக்கு ஒருடீசொன்னேன்.
‘‘சக்கரை கம்மியா,’’ உடன் அதைத் திருத்துகிறார். ‘‘டபுள் சுகர்’’ என்னை இளக்காரமாய்ப் பாத்து, ‘‘எனக்கு சுகரெல்லாம் இல்ல. போன வாரம் வெற்றி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் ஃபுல் செக்கப் பண்ணான் பவா, ஆம் பர்பெக்ட்லி ஆல் ரைட். இன்னும் நாலு படம் பண்ணுவேன். இந்தப் படத்து டிஸ்கஷனுக்கு நீங்க வாங்க’’
ஒரு மாசத்துக்குள்ள என்ன சார் ஆச்சு? ‘தலைமுறைகளுக்கு சரியான ரிவ்வியூ எதுவும் வரலை. நீங்ககூட இதுவரை எதுவும் சொல்லல
குழம்பிய என் குற்ற உணர்வின்மேல் மெல்ல ஒரு கல்லெறிந்தார். ‘‘எங்க குடும்பத்துக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு பண்றேன். எப்போ வர்றீங்க?’’
‘‘இல்ல சார், எங்க ஊர்லயே படம் ரிலீஸ் ஆகி இருக்கு. இங்கேயே பாத்துடறோம்’’
அன்றிரவே குடும்பத்தோடு படம் பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் படம் கைகூடவில்லை. அவர் எங்களிடம் சொன்ன பல காட்சிகளின் விடுபடல்களை மனம் கோரியது.
தன் பேரன் ஆதியோடு ஒரு மேட்டு நிலத்தில் ஏறிப் போவார். சூரியகாந்திப் பூக்கள் பூத்திருக்கும் பெருங்காடு அந்நிலப்பரப்பு. அவர்கள் இருவரும் அந்த ரம்மியத்தில் அப்படியே நிலைத்து நிற்பார்கள்.
அவர் ஆதியைப் பாத்து,
‘‘ஆதி, இந்தப் பூக்களெல்லாம் நான் சொல்றதை அப்படியே கேக்கும்’’
‘‘எப்படி?’’
‘‘இப்போ இந்தப் பூக்கள் எந்த திசையில பாத்து இருக்கு?’’
‘‘east- தாத்தா’’
‘‘தாத்தா சொன்னா இது இன்னைக்கு ஈவினிங் வேற பக்கம் திரும்பிடும்’’
‘‘எல்லா ப்ளவர்ஸ்சுமேவா?’’
‘‘ஆமா’’
‘‘சொல்லுங்க பாப்போம்’’
தன் இரு கைகளையும் உதட்டருகே குவித்து அந்த மண் மேட்டில் ஏறி நின்று சத்தம் போட்டு,
“turn westside” எனக் கத்துவார்.
‘‘திரும்பலயே தாத்தா’’
‘‘உடனேவாடா, இன்னைக்கு ஈவினிங்ல’’
தாத்தாவுக்குத் தெரியாமல் ஆதி, தனியே நடந்து வந்து மண் திட்டில் ஏறிநின்று அந்த சாயங்கால அதிசயத்தை தரிசிப்பான்.
எல்லாப் பூக்களும் மேற்கில் தலை திரும்பியிருக்கும். தன் தாத்தாவின் சொல்மீது ஆதிக்கு ஒரு மயக்கமே பிறக்கும் கணமது. இக்கவித்துவமான காட்சி படத்திலில்லை.
‘‘எவ்வளவு தேடியும் சூர்யகாந்தித் தோட்டம் அருகில் கிடைக்கல’’
படம் பார்த்து முடிந்தும் நாங்கள் அது பற்றி அவரிடம் எதுவும் பேசவில்லை. அந்த மௌனத்தைப் புரிந்துகொள்ள முடியாத கலைஞனா அவர்? அதன்பின் அவரும் அது பற்றி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.
சொல், உணவு, உடை, தொப்பி, என எதையும் தனக்கென்று பிரத்தேகமாய்த் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வார். செலவழிப்பது அதிலிருந்து மட்டுந்தான். நிதானம் எப்போதும் இன்னொரு உடல்போல அவரைப் போர்த்தியிருந்தது.
ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போதும் எங்களை இரவு உணவுக்கு அழைத்துப் போவார். உணவு வகைகளை அவர் order பண்ணும் விதம் அலாதி. உணவு மேசைமீது குவியும் உணவு வகைகள் அவருக்கு என்றுமே உவப்பில்லை. இரவு சாப்பாடு இரண்டு மணி நேரமாவது நீடிக்க வேண்டுமென விரும்புவார். அத்தருணங்களிலான உரையாடல் அவருக்கு முக்கியம். படித்த கதைகள், பார்த்த படங்கள், இரகசியங்களால் மட்டுமேயான மாயப் பெண்கள். இவை அவரின் பேசு பொருள்கள்.
தனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் சுகா பரபரப்பாகிறார். அவர் கண்கள் தன் முன்னால் நிற்பர்வர்களின் ஒழுங்கைக்கோறுகிறது.
‘‘பவா, ராஜா சார் வர்றார். கொஞ்சம் இவங்களைத் தள்ளி நிக்கச் சொல்லுங்க’’
நானும் மாரி செல்வராஜூம் அப்பொறுப்பையேற்கிறோம். அடுத்த ஐந்தாவது நிமிடம் தன் வழக்கமான வெள்ளுடையில் ராஜா வருகிறார். ரோஜாக்களிலான ஒரு மாலையை தன் ஐம்பதுவருட நண்பனின் உடல்மீது போர்த்துகிறார்.
மிக அருகில் நின்று தன் பார்வையாலும், பழைய நினைவுகளாலும் அவரை அருந்துகிறார். தன் அருகில் நிற்பவர்களின், சலசலப்பு, விசும்பல் ஒலி, மரணத்தின் வாசம் எதுவும் அவரை அப்போது ஒன்றும் செய்யவில்லை. பின்னோக்கி, காலத்தின்முன் கைப்பிணைத்து நின்ற இரு நண்பர்களின் நினைவுப் பகிர்தல் அது. ஜாதி, மதம், இனம், தேசம் எல்லாம் கடந்து, இருவேறு திசைகளிலிருந்து வந்து கலையால் இணைந்த இரு மனங்களில் ஆத்மார்ந்த அஞ்சலி அந்நிமிடம்.
‘‘ஸ்டோர்க் வந்து இருபது நாள் விஜயாவுல படுத்திருந்தேன் பவா. என் அறைக் கதவு அசையும் போதெல்லாம் இரு நண்பர்களின் வருகைக்காக மனம் ஏங்கும். அது ஒரு இயலாதவனின் எதிர்பார்ப்பின் உச்சம்.
ஒன்று இளையராஜா
இன்னொன்று கமல்ஹாசன்.
இருவருமே நான் டிஸ்சார்ஜ் ஆகிறவரை வரவேயில்லை. அது அவர்களிருவருக்கும் என் மீது பரிவில்லை, அக்கறையில்லை என்பதல்ல. கலைஞர்களின் வாழ்வு அப்படி. விஜயா ஆஸ்பெட்டலுக்கும், பிரசாத் ஸ்டுடியோவிற்கும் நூறடி தூரமில்லை இதில் பிரச்சனை, மனநிலை. ஆனால் நான் ஆஸ்பத்திரியிலிருந்து நேராய் ராஜா வீட்டுக்குத்தான் போனேன். அவன் என்னைத் தழுவிக் கொண்டான். அந்த ஸ்பரிசம் வேண்டியே போனேன். அவன் உடல் சூட்டை எனக்கு அக்கணத்தில் கடத்தினான். போதுமெனக்கு’’
இதோ ராஜா, தன் நண்பனின் சூடில்லாத உடலை ஒருமுறை சுற்றி வந்து கால்மாட்டில் நின்று கையெடுத்துக் கும்பிடுகிறார். பேரமைதி தவழ்ந்த அக்கணத்தை எல்லோரும் விரும்பினோம்.
பின்னணியில் அவர் உடல் தகனம் குறித்து நிறைய கருத்து பரிமாற்றங்கள், மீறல்கள், விட்டுக் கொடுத்தல்களென்று நீண்டு கொண்டிருந்தன. ஒரு முடிவுக்கு வரமுடியாமல் பாலா தவித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தநாள் காலை மீண்டும் பாரதிராஜா வந்தார். நான் அவர் கைப்பிடித்து அழுதேன்.
நான் போவேனா, நீ போவாயான்னு எப்பவுமே பேசிக்குவோம். அவன்தான் முந்திகிட்டான். என்னபாரதின்னு கூப்ட்ட ஒரே மனுஷன் பவா
தன் உணர்வு நிலையிலிருந்து விடுபட்டு மௌனியை வரவழைத்தார். மௌனிமீது பாலு மகேந்திரா வைத்திருந்த பிரியம் சொல்லில் அடங்காதது. பிரிவாற்றாமையின் துயரத்தை கடந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர் அனுபவித்தார். மௌனியின் நினைவுகள் மேலெழும்பி வரும் போதெல்லாம் தன் மௌனி நடித்த கதைநேரக் கதைகளின் DVD-யைப் பார்த்துத் தீர்ப்பார்.
மௌனி அவர் உடலருகே வந்து மௌனமாக நிற்கிறார். எல்லார் கண்களும் அவர் மீதே குவிகிறது. மீடியா பரபரப்பின் விளிம்புக்கு வர முந்துகிறது. எதையும் பொருட்படுத்தாமல் அவர் தன் பாலுவின் அசைவற்ற உடலையே பார்த்தபடி நிற்கிறார்.
அவரிடமிருந்து உதிரப்போகும் ஒரு வார்த்தைக்கான எதிர்பார்ப்பில் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
‘‘கொஞ்சம் இந்த மூடியை அகற்றுங்க, நான் அவரைத் தொட்டுப் பாக்கணும்’’
அது முடியாதது. கடந்த இருபத்திநாலு மணி நேரமா ஐஸ்ல வைக்கப்பட்ட உடல்.
உடனே அதைப் புரிந்துகொண்டு தன் உடல் சரித்து அந்தக் கண்ணாடி வழி தெரிந்த அவர் முகத்தருகே குனிந்து அழுந்த ஒரு முத்தம் தருகிறார். ஐந்து வருட இடைவெளியில் அவர் பாலு ஒரு முத்தம் பெறுகிறார்.
இதற்கெல்லாம் தர்க்கமோ, விவாதமோ, துரோகமோ, காதலோ, வெறுப்போ, புரிதலோ இல்லை. எந்த நேரத்திலும் மனித வாழ்வில் எதுவும் நடக்கும். அப்படித்தான் நடந்தது.
தேசியவிருது பெற்ற பாலாவை கௌரவிக்கும் பொருட்டு இயக்குநர்கள் சங்கம் ஒரு விழாவைச் சென்னையில் நடத்தியது. அதில் மணிரத்னமும், கமல்ஹாசனும் பாலாவுக்கு நினைவுப் பரிசை வழங்குவார்கள் என அறிவிக்கிறார்கள். புளகாங்கிதத்தோடு முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் தன் குரு பாலுமகேந்திராவைப் பார்க்கிறார் பாலா. தன் மாணவன் பாலா இப்போது பெறப்போகும் அவ்விருது தன் கற்பித்தலுக்குக் கிடைக்கும் கௌரவம் என நினைக்கிறது மனது.
சட்டென மேடையேறி, யாரும் எதிர்பாராததொரு தருணத்தில்,
‘‘என்னை மன்னிக்கனும், நான் இந்த விருதை என் டைரக்டர் கையால வாங்கிக்கணும்னு நெனைக்கிறேன்’’
படைப்பாளிகளின் அவ்வரங்கு மௌனத்தால் உறைகிறது. கமலும், மணியும் தங்கள் புன்னகையால் ஒரு மாணவனின் குரு பக்தியை மெச்சி ஒதுங்கி நிற்க,
சார் மேடையேறுவதை வழிமறிந்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார் பாலா. அவர் விரும்பியபடி விருதை அவர் கையாலேயே பெற்றுக் கொள்கிறார்.
ஆனாலும் உள்ளுக்குள் பொங்கும் ஆற்றாமை அடங்கவில்லை பாலாவுக்கு,
அந்த விழா மேடையின் பின்நின்று என்னைத் தொலைபேசியில் அழைக்கிறார்,
‘‘பவா, சாருக்கு நாம ஒரு விழா நடத்தணும் ஸ்ரீதேவியிலிருந்து எல்லாரையும் கூப்பிடலாம். இவங்களுக்கு அவரோட உயரம் தெரியலை’’
பெட்டியிலிருந்து அவர் உடலை வெளியெடுத்தபோது எழுந்த பெரும் கதறலில் எங்களுக்கு அவர் உயரத்தைத் துல்லியமாய் உணர முடிந்தது.
நான் சில்லிட்ட அவர் கால்களை என் தோள்களில் கிடத்திக் கொண்டேன். இயக்குநர் சேரன் அந்த உடலைத் தாங்கிக் கொண்டார். கட்டுக்கடங்காத கூட்டத்தை விலக்கிக்கொண்டு நாங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவ்வண்டியில் ஏற்றினோம். அதற்கும் முன் ... ஜெயபாலன் தன் நாற்பதாண்டு கால நண்பனுக்காக எழுதிய கவிதையை அவர் காலடியில் நின்று வாசித்தார்.
பாலா, ராம், சசி, வெற்றி என்று அவர் மாணவர்கள் அந்த வண்டியில் ஏறிக்கொள்ள பாரதிராஜாவும், மகேந்தரன் சாரும் முன்னால் நடக்கிறார்கள். அவர்கள் களைப்புற்றபோது கைக்கொடுத்து வண்டியின் மேல் ஏற்றப்பட்டார்கள்.
வண்டி போரூர் மின் மயான சுடுகாட்டிற்குள் வந்து நிற்கிறது. அந்தத் தொப்பி சரிந்துவிடக் கூடாதென்று தம்பி மாரிசெல்வராஜ் அதைத் தாங்கிப் பிடிக்கிறான்.
யாரோ ஒரு இயக்குநர். ‘சைலன்ஸ்எனப் பெருங்குரலில் கத்துகிறார். மரண அமைதிக்குச் சட்டென இடம் தருகிறது மயானம். இருபக்கமும் வழிவிட்டு மனிதச் சங்கிலியாய் கோர்த்து நிற்கிறது இளம் இயக்குநர்களின் கரங்கள்.
அலுங்காமல் அவர் உடல் தூக்கி வரப்பட்டு சடங்கு மேடையில் கிடத்தப்படுகிறது.
ஒரு சடங்கும் அங்கு செய்யப்படவில்லை. ஒரு மயானத் தொழிலாளி, தன் திருப்திக்கு ஒரு கற்பூரத்தை அவர் தலைமாட்டில் ஏற்றி வைக்கிறான்.
அதிலொன்றும் கஷ்டமில்லை அவருக்கு. நான் வலுவிழந்து கொண்டிருப்பது எனக்கே தெரிந்து ஒரு ஜன்னலைப் பிடித்துக் கொண்டேன்.
எரியூட்டும் அறைவுக்கு அவரைத் தூக்கிப் போனார்கள். ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும், மகள் மானசியும் அங்கேயே காத்திருந்தார்கள்.
அந்த அறையினுள் பிடிவாதமாக ராம், பாலா, சீனுராமசாமி, சுகா, முத்துக்குமார், வெற்றியென எல்லோரும் நுழைந்தார்கள்.
ஓரிரு நிமிடங்களில் பெரும் அலறலோடு சுகா ஓடி வந்தார்.
‘‘முத்து, வாத்தியார் நெஞ்சில் கற்பூரத்தை வச்சி கொளுத்தறாங்கடா, சுடுண்டா, அவரு தாங்க மாட்டாருடா, வேணான்னு சொல்லு’’ என்று முத்துக்குமாரின் நெஞ்சில் குத்துகிறார்,
எதற்கும் உடையாத பாலாவும், ராமும் உடைந்துபோய் வெளியே வருகிறார்கள். நான் உள்ளே நுழைகிறேன்,
‘‘பவாண்ணே, எங்க டைரக்டர மூணு டப்பாவுல சாம்பலா தருவேன்னு சொல்றாங்கண்ணே’’
‘‘மூணு டப்பாவாண்ணே அவரு?’’

அக்குரல் அந்த மின்மயானத்தையும் தாண்டி வெளியேயும் கதறியழ வைத்தது.

No comments:

Post a Comment