Tuesday, August 4, 2015

இரை


யா தேவி சர்வபூதேஷு ஜ்யோல்ஸ்ன* ரூபேண ஸம்ஸ்தித...


மூச்சுக்காற்று சிரமமில்லாமல் வரும் அக்டோபர் மாதத் துவக்கத்தில், ஒரு விடியற்காலையில் ப்ரமோத் நவர்க்கர் சர்க்கஸில் பெண்கள் கூடாரத்திற்கு அவசர அவசரமாக நடந்து போனார். உடம்பில் யானையை நடக்கவிட்டு சர்க்கஸில் வித்தை காண்பித்திருந்த சான்ட்ரோ முனிபாயி காவலுக்கு நிற்கவில்லையென்றால், பெண்களின் கூடாரத்திற்கான வழி அத்தனை சுலபமாய் ப்ரமோத்திற்கு இருந்திருக்காது. முனிபாயி கேட்டார்.

நீ மாஹி சகோதரிகளிடம்தானே போகிறாய்?”

ப்ரமோத் தலையாட்டினான். சிறிது நேரத்திற்கு முன்புதான் மாஹி சகோதரிகளில் நடுவிலவள், வாள் வீசும்போது ப்ரமோத்திற்கு இரையாக நிற்கும் அம்மிணி, பயிற்சிக்கு நடுவில் விழுந்தது அவனுக்கு தெரிய வந்தது.
அம்மிணி இங்கே இல்லை. எக்ஸ்ரே எடுக்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க.” - முனிபாயி சொன்னான்.

எந்த ஆஸ்பத்திரிக்கு?”

யாருக்குத் தெரியும்? சின்னவ கூடாரத்துக்குள்ளதான் இருக்கா. அவகிட்ட கேட்டுக்கோ.”

மாஹி சகோதரிகள் தங்கும் கூடாரத்தில், சர்க்கஸ் கற்று கொள்வதற்காகக் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வந்திருக்கும் ஜெயலட்சுமி, அங்கு போடப்பட்டிருந்த மடிக்கும் வசதி கொண்ட கட்டில்கள் ஒன்றில், படுத்தபடி மலையாள பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தாள். கட்டில்கள் தவிர தரையோடு அடிக்கப்பட்டிருந்த அந்தக்கூடாரத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த மூன்று இரும்புப் பெட்டிகளும், சமைப்பதற்கு ஒரு ஸ்டவ்வும் மட்டுமே இருந்தன. பெட்டிகளுக்கு மேல் சாமிப்படம் போல வைத்திருந்த ஒரு கண்ணாடி இருந்தது. அதைச் சுற்றிலும் ஒரு பழைய யார்ட்லி பவுடர் டப்பா, முடி இடம் பெயர்ந்துபோன சீப்பு, பொடுகு நிறைந்த பேன் சீப்பு, நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டுப் பாக்கெட்டுகள் போன்றவை பூஜைப் பொருட்கள்போல இறைந்து கிடந்தன. அந்த பொருட்களோடான அவனுடைய நெருக்கமின்மை அவனை அறைக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தியது. ஆனால் ப்ரமோத்தின் நிழல் அசைவதை உள்ளேயிருந்து உணர்ந்து ஜெயலட்சுமி துள்ளியெழுந்தபடிஉள்ள வாங்கஎன்றாள்.

சர்க்கஸில் சேர்ந்ததிலிருந்து அவளுக்கு ப்ரமோத்திடம் ஒரு விதமான பகைமையும், பயமும் உண்டு. பகைமை:தினமும் மாலையில் சர்க்கஸ் பேண்டின் முழக்கம் கேட்கும்போது, மின்னும் ஊதாநிறத்தில் ஜொலிக்கும் ஜிகினாப்பொட்டுகள் ஒட்டிய கறுப்பு உடையணிந்த ப்ரமோத் ஒளி உமிழும் தரைக்கு வருகிறார். அவருடன் வெள்ளித் தாம்பளத்தில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை ஏந்தியபடி அரேபிய அழகிபோல வேடமணிந்த பெண்ணும் வருகிறாள்.

அயல்நாடுகளிலிருந்து வெளியாகும் தையல் புத்தகங்களில் அதிகக் கவர்ச்சியோடு இருக்கும் படங்களிலிருந்து கால்களையும், மார்பு வடிவங்களின் அளவுகளையும் திருடி எடுத்து, சர்க்கஸ் கம்பெனியின் தையல்காரன் தைத்த உடையணிந்த அம்மிணி அக்கா ப்ரமோத் நவர்க்கரிடமிருந்து ஐம்பது அடி தூரத்தில் வட்டமான ஒரு பலகையின் முன்னால் பீடத்தின்மேல் நிற்கிறாள். வெள்ளித் தாம்பாளத்திலிருந்து ப்ரமோத் ஒவ்வொரு கத்தியாக எடுத்து வலது கையை முன்னால் வீசி, பிறகு பின்னால் திரும்பி, மறுபடியும் முன்னால் வீசி, எந்தவொரு முன்முடிவுகளுமில்லாமல் அனாயாசமாகக் கத்திகளை வீசுகிறான்.

இந்த விஷயத்தில் அம்மிணி அக்கா ஏதோ ஒரு ரகசியம்    வைத்திருக்கிறாள் என்றே ஜெயலட்சுமிக்குத் தோன்றியது.

இனி பயத்தின் காரணம் : ப்ரமோத்தின் கண்கள். அவை ஒரு நாளும் சிரிப்பை உமிழ்ந்ததில்லை, மம்முட்டியின் கண்களைப் போல.

எந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க?”

ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு. பெரியக்காவும் கூடப் போயிருக்காங்க.”

சரி. நான் போயிட்டு வரேன்.”

ஒரு டீ போடட்டுமா?” - ஜெயலட்சுமி அலட்சியமாகக் கேட்டாள்.

போடேன். அடிப்பட்டது தெரிஞ்ச உடனே வெறும் வயிறோட அப்படியே இங்கே வந்திட்டேன்.”

ப்ரமோத் கட்டிலில் அமர்ந்து மலையாளப் பத்திரிகையைப் புரட்ட ஆரம்பித்தான். கூடாரத்தில் மண்ணெண்ணெய் வாசனை வந்தபோது அவன் தலையுயர்த்திப் பார்த்தான். ஸ்டவ்வின் முன்னால் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி டீ தயாரிக்கும் ஜெயலட்சுமியை ப்ரமோத் கவனித்தான். அவள் உட்கார்ந்திருந்த விதத்தில் ஏதோ ஒரு தவிப்பு இருப்பதாக அவன் நினைத்தான். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்று அவள் அப்படி உட்கார்ந்திருக்கிறாளோ? கொதிக்கும் தண்ணீரில் போடுவதற்காக டீத்தூள் எடுக்க அவள் முன்னால் குனிந்தபோது அப்படி உட்கார்ந்ததின் தவிப்பு மேலும் கூடியது. ப்ரமோத் உட்கார முடியாமல் எழுந்து அவளைப் பார்த்து நடந்தான். பிறகு குனிந்து நின்று அவளுடைய முடியைக் கோதிவிட ஆரம்பித்தான். இந்த செய்கையில் அதிர்ந்தெழுந்த ஜெயலட்சுமி கத்தினாள்.

போடா வெளியே

கூடாரத்தின் பிரச்சனை என்னவென்றால், அவற்றில் சாய்ந்து நிற்க முடியாதபடி, பக்கவாட்டு சுவர்களுமின்றி இருப்பதுதான். அப்படி சாய்ந்து நிற்க முடியாமல்போன ப்ரமோத், அவனுக்கு கைவந்த கலையான கத்தி வீசுவதைப்போல வார்த்தைகளைத் தொடர்ந்து எறியத் தொடங்கினான்.

நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறியா? எனக்கு   சொந்தமாக ஒரு கூடாரமிருக்கு.”

வெளியில போடா. அம்மிணி அக்கா அடிபட்டு ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்போதுதான் உனக்கு இப்படி கொஞ்சத் தோணுது இல்ல? போ... வெளியே போ.”

ப்ரமோத் திரும்பித் தன் கூடாரத்திற்கு வரும்போது கோமாளி பப்பு அவனைப் பார்த்துக் கண்ணடித்தான். தவறை மனதுக்குள் மறைத்தபடி ப்ரமோத் மீண்டும் நடக்கத் தொடங்கினாலும் பப்பு விடாமல் கண்ணடித்தான். இப்போது ப்ரமோத் அவனைப் பார்த்துச் சிரித்தான். இதுதான் நகைச்சுவையின் கொடூரம். கோமாளிகள் கோமாளித்தனம் செய்யப் போகிறார்கள் என்று அறிவித்தாலே நாம் சிரித்துவிடுவோம். சினிமாவில் மெஹ்பூபையும், ஜானிவாக்கரையும் பார்க்கும்போது அல்லது பத்திரிகைகளில் நகைச்சுவைப்பகுதி என்று பார்க்கும்போதே நாம் சிரிப்பதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோம். சிரிப்பு எதிர்பார்க்காமல் வருவதில்லை. வாள்வீசும் கலையின் அடித்தளமும் அப்படித்தான். தூரத்தில் நிற்கும் இரையின் மேல் வீசப்படும் வாள் படுமோ, படாதோ என்ற முன்னறிவிப்பின்மைதான். நிற்கும் இரையின் மேல் வாள் படாது என்று தெரிந்தும் பார்வையாளர்கள் ஒரு முறை அவனுடைய கை தவறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். மரணம் நிகழப்போகும் நிமிடத்திற்காக அவர்கள் கூட்டாகக் காத்திருக்கும் நொடிதான் தன் வாழ்க்கை என்பதை உணர்ந்தபோது ப்ரமோத் வேகமாகக் கூடாரத்திற்கு நடந்தான்.

பதினோரு மணி ஆனபோது அம்மிணியுடைய கையில் கட்டுபோடப்பட்டிருக்கிறது என்ற விபரம் அவனுக்குத் தெரிய வந்தது. அம்மிணிக்குப் பதிலாக ஒரு இரையை சர்க்கஸ் கம்பெனி முதலாளி தேடிப்பிடிக்கும் வரை உள்ள வெற்றிடத்தை நினைக்கும்போது அன்று மாலையேதுல்ஹன் வஹி வோ லே ஜாயேகாபார்க்க வேண்டும் என்று ப்ரமோத் தீர்மானித்தான். சினிமா பார்த்துவிட்டுத் திரும்பும்போது அரை பாட்டில் ரம் வாங்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். வாள் வீசுபவர்கள், உலகை அளப்பதெல்லாம் கடுகுகளின் இடைவெளியால்தான். அதனால் அவன் கையில் சிறிய நடுக்கம் கூட வராமல் இருக்க நீண்ட இடைவேளை கிடைக்கும்வரை குடிக்காமலேயிருந்தான். அதனால்   அன்று இரவு தூங்குவதற்கு முன்னால் கண்டிப்பாகக் குடித்தே தீர வேண்டும் என்று தோன்றியது.

சினிமாவிற்குப் போவதற்காகக் கூடாரத்திலிருந்து இறங்கும்போது, சர்க்கஸ் கம்பெனியின் மேனேஜர் முன்னால் நிற்பதை ப்ரமோத் பார்த்தான். இப்போது மிகவும் மோசமானதொரு கெட்டவார்த்தையைத் தான் கேட்கப் போவதை ப்ரமோத் உணர்ந்தான். அந்த மானேஜர் இப்போது புழக்கத்திலில்லாதட்ரஃபீஸ்வித்தைக்காரனாக இருந்தவன். ஒருகாலத்தில் ட்ரஃபீஸ் வித்தைக்காரர்களாக இருந்தவர்கள், தற்போது ஒருவேளை முடவர்களாகவோ அல்லது சர்க்கஸ் கம்பெனி மேனேஜர்களாகவோ மாறியிருப்பார்கள்.

சினிமாக்கு போகவேண்டாம்னு சொல்லத்தான் நான் வந்தேன். உனக்கு இன்னக்கி ப்ரோக்ராம் இருக்கு.”

அம்மிணி கையில அடிபட்டுப் படுத்திருக்கிறாளே?”

அவளுக்கு பதில் உனக்கான இரை கிடைச்சாச்சு.”

யாரு?”

அவ தங்கச்சி. ஜெயலட்சுமி

அவ இப்பத்தான் கயிற்றின் மேல நடக்கற பயிற்சியில இருக்கா

அம்மினிக்கு உடம்பு சரியாகும்வரை ஜெயலட்சுமி. மாஹி சகோதரிகளின் தீர்மானம்தான் இது. நான் ஒன்றும் முடிவு செய்யலை.”

வாள் வீசுவதை எதிர்த்து, இரையாய் நிற்க நல்ல பயிற்சி இருக்க வேண்டும்.”

சும்மா நின்னுட்டு போறதுக்கு என்ன பழக்கம் வேண்டியிருக்கு?”

மானேஜர் எப்போதும் போல சர்க்கû இழிவாகப் பேசியபோது ப்ரமோத் ஒன்றும் படமெடுத்து ஆடவில்லை. அவன் பொறுமையாகக் கேட்டான்.

உடல் பாகத்தில் கத்தி எங்கே, எப்போது எறியப்படப்போகிறது என்பதை, இரை முன்கூட்டியே தெரிஞ்சு வச்சிருக்கணும். பிறகு அந்தப்பாகத்தை நிச்சலனமாய் நிறுத்த வேண்டும். அதற்குப் பயிற்சி அவசியமில்லையா?

அதெல்லாம் ஜெயலஷ்மிக்கு அம்மிணி கத்துக் குடுத்திருக்கா.”

முதல் தடவையாச்சே. பயந்து நடுங்கினால் என்ன செய்யறது?”

செத்து போயிடுவா அவ்வளவுதான். ஏற்கனவே நீ ஒருத்தியைக் கொன்னுருக்கியே.”

மானேஜர் சிரித்துக் கொண்டே சொன்னார். அம்மிணிக்கு முன்பிருந்த இரையான கோமளியின் தொடையில் ப்ரமோத் வாள் வீசினதை மானேஜர் நினைவுபடுத்தினார்.

புலிகளைக் கொண்டு செய்யும் வித்தை முடிந்ததால் எங்கும் மிருகமணம் பரவியிருந்தது. ப்ரமோத்தும் ஜெயலட்சுமியும் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இடங்களுக்கு பின்வாங்கி நடந்தனர்.

ஜெயலட்சுமியின் கண்களை ஒரு பெண் கறுப்புத்துணியால் இறுகக் கட்டினாள். பிறகு அவளைக் கையைப்பிடித்து அழைத்துவந்து, வாள்வீச்சுகள் ஏற்ற, சுவடுகள் நிறைந்த, வட்டமான பலகையின் முன்னால் பீடத்தில் ஏற்றி நிறுத்தினாள். ஜெயலட்சுமி கால்கள் அகற்றி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப்போல கைகள் விரித்து நின்றாள். ஐம்பது அடி தூரத்தில் நின்று கொண்டு ப்ரமோத், மூன்று முறை மூச்சை உள்ளடக்கி வெளியேற்றினான். சிறிது நேரம் கண்மூடி நின்றவன் தன் மனசை வாள்போலக் கூர்மைப்படுத்தினான்.

அரேபியஅழகி போல வேடமணிந்த ஒரு பெண் வெள்ளித் தாம்பாளம் நிறைய பளபளக்கும் வாள்களுடன் ப்ரமோத்தை நெருங்கும்போது சர்க்கஸ் கூடாரத்தின் மேற்பகுதியிலிருந்து  எழுந்த வாத்யஇசை உச்சத்தை எட்டியது. அதிகமாய் வெளிச்சம் உமிழும் இரண்டு விளக்குகளில் ஒன்று ஜெயலட்சுமியின் மீதும், மற்றொன்று ப்ரமோத்தின் மீதும், அதீத வெளிச்சத்தைப் பாய்ச்ச, மற்ற விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, கூடாரம் இருளில் அமிழ்ந்து மௌன சூன்யத்தில் நிறைந்தது.

ப்ரமோத்தின் முதல் வாளின் வீச்சுக்கு வேகம் குறைவாகவே இருந்தது. ஜெயலட்சுமியின் விரித்துப்பிடித்த இடதுகையின்மேல் பலகையில் இடித்துக் கீழே விழுந்தது வாள். இரை, மெதுவாக நடுங்குவதைப் பார்வையாளர்கள் கவனித்தார்கள். அடுத்த வீச்சிற்காகத் தயாராகும்போது ப்ரமோத் அரேபியஅழகியின் உயர்ந்த புருவத்தில் எழும் கேள்விக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்துவிட்டு இரண்டாவது கத்தியை எடுத்தான். அது நினைத்த இடத்தில் போய் நின்றது. அதன் இடதுபாகம் அடுத்த கத்தி. பிறகு ப்ரமோத்தின் வலது கை மிகச் சரியான இடம் பார்த்து முன்னும் பின்னுமாக அசைய கத்திகள் மின்னியது. இரையின் வலதுகைக்கு குறியின் திசை மாறும்போது, தனக்கு முன்னால் நிற்பது எப்போதும் போல அம்மிணி இல்லை என்ற ஞாபகம் சட்டென அவனுக்கு வந்தது.

அன்று காலையில் அவளைவெளியே போடாஎன்று சொன்னபோது ஜெயலட்சுமியிடம் வெறுப்பு நிரம்பியிருக்கவில்லை. மாறாக அறுவெறுப்பை உமிழும் கண்களைத்தான் அவன் பார்க்க நேர்ந்தது.

கத்தி வீச்சின் முதல் பயிற்சி, கை விரித்து நிற்கும் இரையை சாக்பீஸôல் ஒரு கோட்டுச்சித்திரமாக வரைந்து பார்ப்பதுதான். நினைவு தடுமாறுகிறது என்ற உணர்வு வந்தபோது ப்ரமோத் ஒரு நிமிடம் கண்மூடி நின்று மூச்சை உள்ளுக்கிழுத்தான்.

அடுத்த கத்தி, ஜெயலட்சுமியின் வலதுகையின் நீண்ட நடுவிரல் நகத்தை தொட்டும் தொடாமலும் போனபோது அவள் பயத்தால், தன்னைச் சுருக்கிக் கொண்டதை ப்ரமோத் உணர்ந்தான்.

கத்திவீச்சின் இன்னொரு பயிற்சி, காற்றின் வேகம் அறிந்து எறிவது. அதை மறந்துதான் இப்போது கத்தி வீசுகிறோம் என்பதை ப்ரமோத் உணர்ந்தபோது, அவன் கூடாரத்தின் கொடிக் கூரைகளைக் கவனித்தான். அவை காற்றில் மெதுவாக அசைந்தபடியிருந்தன. காற்றின் வேகம் சுமாராக ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து கிலோமீட்டர்களாக இருந்தது.

அடுத்த கத்தி, மிகச்சரியாகச் சொல்லவேண்டுமானால் வலது கையின் ஆட்காட்டிவிரலிலிருந்து இரண்டு இன்ச் தூரத்தில் போய் நின்றது.

உடலின் ஓரங்களில் கத்தியால் கோடு வரைத்து முடித்திருந்தபோது ப்ரமோத், ஜெயலட்சுமியின் அகன்ற கால்களுக்கிடையில் கத்திகளை வீசத் தொடங்கினான். வலது கணுக்காலின் மேல் நான்கு கத்திகளை அவளுடைய முட்டிவரை வீசினான். இந்த முட்டிகள்தான் காலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தது என்ற நினைவு வந்தபோது அவன் கத்தி எறிவதை நிறுத்தினான். கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுத்துக்கொண்டு, தண்ணீர் குடித்து, மனதை ஒருமைப்படுத்தி முடித்தபோது கால்களுக்கிடையில் கத்திகளால் ஒரு முக்கோணம் வரைத்து முடித்திருந்தான்.

இசை மேலும் பார்வையாளர்களை முறுக்கேற்ற ஆரம்பித்தது. ப்ரமோத் தன் முன்னே குனிந்து நின்ற அரேபிய அழகியிடம் கேட்டான்.

கண்ணாடி

இன்னக்கி வேணுமா உனக்கு?”

கண்ணாடி தா

இன்னக்கி வேணுமா உஸ்தாத்? இன்னக்கி பலமுறை நீ குறி தவறி வீசியதை நான் கவனித்தேன்.” அரேபிய அழகி சொன்னாள்.

 ப்ரமோத் சட்டென வெள்ளித் தட்டிலிருந்து கை நிறைய கத்திகளை வாரியெடுத்தான். அந்த நிமிடங்களின் இடைவெளியில் மிரண்டுபோன சங்கீதக்காரர்கள் பேண்டு வாசிப்பதை நிறுத்தினார்கள். அவன் ஒரே மூச்சில் கால்களுக்óகு நடுவில் கத்திகளை எறிந்து முன்பு கத்தியால் போட்ட முக்கோண வடிவத்தை மேலும் அடர்த்தியாக்கினான்.

சீக்கிரம் தா

ப்ரமோத் கைநீட்டியபோது, அரேபிய அழகி வாலுள்ள ஒரு கண்ணாடியை அவனிடம் கொடுத்தாள். பேண்டு கலைஞர்கள் மேலும் இசையை அதிரவைத்து பார்வையாளர்களின் தொண்டையில் நீர் சுரப்பதை துல்லியமாக்கினார்கள். ப்ரமோத் திரும்பி நின்று இரையைக் கண்ணாடியின் வழியாக பார்த்தபடி  அடுத்த கத்தியை எடுத்தான். அது ஜெயலட்சுமியின் தலைக்குமேல் காற்றில் பறந்து வந்து ஒரு முடியிழையை இணைத்துக்கொண்டு பலகையில் குத்தி நின்றது.

வெள்ளித் தாம்பாளத்தின் கடைசிக்கத்தி, உச்சந்தலைக்கு நேராக வரும்போது ஜெயலட்சுமியின் புருவங்களுக்கு இடையில் சுருசுருவென ஏதோ ஒரு நமைச்சல் ஏற்பட்டது. கத்தி பலகையில் குத்தி நிற்கும் சத்தம் கேட்டபோது அவள் பார்வையாளர்களின் கைதட்டல்களைக் கேட்டாள்.

ஜெயலட்சுமியைப் பீடத்திலிருந்து இறக்கியபோது பலகையில் கத்தியால் வரையப்பட்ட அவளது உருவத்தை ப்ரமோத் பார்த்தான். அதற்குள் இருக்கும் வெற்றிடத்தைப் பார்த்தபோது ஆத்மாவின் வடிவம் இதுவாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

அரங்கின் நடுவில் நின்று ப்ரமோத் பார்வையாளர்களின் பாராட்டை ஏற்றபோது ஒரு பெண் கண்களைக் கட்டிய ஜெயலட்சுமியை அங்கே கொண்டு வந்து நிறுத்தினாள். அப்போதும் அவள் நெற்றி, சுருக்கங்கள் நீங்காமல் இருந்தது.

கண்களைக் கட்டிய கறுப்புத் துணியை அந்தப் பெண் அவிழ்த்தபோது ஜெயலட்சுமி கண்ணுயர்த்தி ப்ரமோத்தைப் பார்த்துச் சட்டெனச் சிரித்தாள்.

No comments:

Post a Comment