Saturday, November 5, 2016

உங்களுக்கு என்ன ஆச்சி பவா?

இக்கேள்விக்கான பதிலை வைக்கம் முகமது பஷீரின் அந்த பிரசித்தி பெற்ற மங்குஸ்தான் மரத்தடியிலிருந்து ஆரம்பிக்கலாம். அம்மர நிழலில் நின்று பஷீரின் மருமகளோடும், பேரன்களோடும் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் உடல் முழுக்க வேர்த்துக் கொட்டியதை உணர முடிந்தது.

உற்சாக மனநிலையில் அது எனக்கு இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டது. பஷீரின் வீட்டு பின்புறமே அரபிக் கடல்தான். அதன் பொன்னிறமான மணல்வெளிகளில் நடந்து திரிந்த போது வியர்வை இன்னும் அதிகரித்தது. வெய்யிலின் பொருட்டு என் உடல் நினைத்திருக்க வேண்டும். பொருட்படுத்தத் தோன்றவில்லை.

அப்படியே மாலை ஆறுமணிக்கு பேல்ப்பூர் ஹையர் செகண்டரி ஸ்கூல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி அரங்கில் துவக்கவுரையாற்றினேன். அநியாயத்திற்கு உணர்வு வயப்பட்ட நிலையில் அமைந்த உரை அது.

கலாச்சாரத்தில், பண்பாட்டில், கலையில், இலக்கியத்தில் தமிழர்களுக்கான இடம் இரண்டாம் இடம் என நினைத்திருக்கும் ஒரு மலையாளியின் மனதை அது அப்படி இல்லை என நிரூபிப்பதற்கான ஆவேசம்.

நான் ஜே.கே. சில குறிப்புகளிலிருந்து துவங்கினேன். ஒரு தமிழ் எழுத்தாளன் என பாலுவின் கைகள் ஜே.கே.வின் முன் நீளும்போது,

‘‘உங்க ஊர்ல அந்த அம்மா, பேர் என்ன சிவகாமி, கொண்டையை முடிஞ்சிடுச்சா?’’ என ஜே.கே. அலட்சியப்படுத்துவானே, அது அல்ல நாங்கள் என பேசி முடித்த போது என் சட்டை தெப்பலாக நனைத்திருந்தது. அங்கிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த அரை மணி நேர கார் பயணத்தில் கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் தோழர் முரளியோடு நடந்த உரையாடலில் என் வார்த்தைகள் லேசாக தடுமாறுவதை கவனித்தேன்.

இரவு எட்டரை மணிக்கு என் நண்பன் நஜீப் குட்டிபுரம்,

‘‘பவாண்ணா, எங்க வீட்டோட மூத்த மகன் நீங்கதான் தங்கை நஸ் ரீனைப் பக்கத்திலுள்ள கல்லூரி விடுதிக்குப் போய் பார்த்துவிட்டு வர வேண்டும்’’ என அழைத்து போனார்.

நஸ் ரீனும் அவள் தோழிகள் பலரும் ஒரு இருட்டான முட்டு சந்தில் நிறுத்தப்பட்டிருந்த எங்கள் காருக்கருகில் நின்று எங்களோடு பேசிக் கொண்டிருக்கையில், 
உடலுக்குள்ளிருந்த அந்த பூச்சாண்டி வியாபித்து வியர்த்துக் கொட்டி தன்னைக் கவனி என நினைவுபடுத்தினான். இம்முறை அவன் வெளிப்பாடு உக்கிரமானது.

நான் நஜீபின் தோளைத்தொட்டு,

‘‘எனக்குக் கொஞ்சம் முடியல நஜீப், என்ற சொல் முடியுமுன் எங்களுக்கு எதிரிலிருந்த மிகப்பெரிய மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் என்னைப் படுக்கவைத்து இ.சி.ஜி. எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இளம் மருத்துவர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து Echo, ECG, Sugar, B.P என தங்கள் வழக்கமான மருத்துவ ஆராட்சிகளில் இயங்கினார்கள்.

நான் நேரம் பார்த்தேன். மணி பத்தரை, 11.30க்கு எனக்கு திரும்புதலுக்கான ட்ரெயின். பதட்டமாகிவிட்டது. 

எதன்பொருட்டோ என் பயணம் தள்ளிப் போகப் போகிறது என உள்ளூர பயந்தேன்.

மாறாக, ‘‘நார்மல்’’ எனச்சொல்லி விடுவித்தார்கள். என்னைப் பார்க்க வயநாட்டிலிருந்து வந்திருந்த ஓணான் பட இயக்குநர் சென்னன் பல்லாச்சேரி நான் ரிசல்ட்டோடு வருகிறேன் நீங்க ஸ்டேஷனுக்கு போங்க என சொல்ல கிட்டதட்ட திருவண்ணாமலையைப் போலவே இருபது நண்பர்களுடன் நான் கோழிக்கோடு ரயில்வே நிலையத்திற்குப் போனேன்.

இடையே புகழ்பெற்ற கோழிக்கோட்டின் கிரில் சிக்கனின் பாதியை முடித்திருந்தேன். (நஜீபின் மீற முடியாத அன்பு அது)

ரயில் நிலையத்திற்கு தன் இரண்டு பிரத்தேயகமாக ஃபிரேம் செய்யப்பட்ட ஓவியங்களோடு வந்து என்னை சந்தித்த கேரளாவின் முக்கிய ஓவியன் கணேஷ்பாவுவின் அன்பில் நனைந்து அதன் விலை ஸ்டிக்கரைப் பார்த்தேன்.
ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் என்றிருந்ததை நான் கவனிக்கும் முன் அதை தன் கூரிய நகத்தால் கிழித்து,

சாரி பாவண்ணா, இது உங்களுக்கு என ப்ளாட்பாரத்தில் தன் வழக்கப்படி முழந்தாளிட்ட கணேஷ்பாபுவை நான் என் இதயத்தில் எந்த இடத்தில் வைப்பது?

என் லக்கேஜை ஒரு கையிலும், இன்னொரு கையில் என் மருத்துவ ரிசல்ட்டையும் எடுத்துக் கொண்டு வந்த சென்னன் பல்லாச்சேரி,

ஒண்ணுமில்லை பாவாண்ணா என்ற வார்த்தைகளில் லேசான தயக்கமிருத்ததை ஏனோ கவனித்துத் தொலைத்தேன்.

அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு ஜோலார்பேட்டை ஜங்ஷனில் இறங்கியபோது நேற்றைய வியர்வை நினைவுக்குவர அங்கிருந்து என் நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அழைத்துச் சொன்னேன். இப்பவே திருவண்ணாமலைக்கு வர வேண்டாம். ஒரு ரூம் போட்டு ரெஸ்ட் எடுங்கள் என சொன்ன கருணாவின் குரல் வழக்கமானது அல்ல என்பதையும் கவனித்தேன். 

அவ்விதமே செய்தேன். தர்மபுரி கூட்டம் முடித்து அன்று மாலை ஆறு மணிக்கு ஷைலஜா வந்து என்னை அழைத்து வந்தாள். வீடடைந்தபோது கோழிக்கோட்டின் வியர்வை மணம் என்னைவிட்டு முழுவதும் அகன்றிருந்தது.

No comments:

Post a Comment