Wednesday, December 5, 2018

ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்

எஸ். ராமகிருஷ்ணன்

இன்றுவரை என் மனதில் எனக்கு இரண்டு வீடுகள் உண்டென்றே நம்புகிறேன். எந்த அகாலத்திலும் நான் இறங்கி உரிமையுடன் போகக்கூடிய இடங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று என் வீடு. இன்னொன்று பவாவின் 19, டி.எம். சாரோன்,” சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் மதுரையில் நடந்த அவர் புத்தக விழாவில் இதைச் சொன்னபோது, நான் ரொம்பவும் கூச்சப்பட்டு மகிழ்ந்தேன்.

எனக்கும் ராமகிருஷ்ணனுக்குமான உறவு, ஏறக்குறைய கால் நூற்றாண்டையும் கடந்துவிட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில ஒப்பீட்டு இலக்கியத்தில் எம்.ஃபில்., பண்ணுகிறான். ரொம்ப புத்திசாலிடாஎன்று வழக்கம்போல் கோணங்கிதான் ஒரு பின்னிரவில் எனக்கு ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினான். உள்ளடங்கிய ஒரு சிரிப்போடு கைநீட்டிய ராமகிருஷ்ணனை இப்போதும் ஞாபகமிருக்கிறது.

அதன்பின் நாங்கள் பேசித் தீர்த்த இரவுகள், நடந்த பாதைகள், விவாதித்த இலக்கியங்கள், முரண்பட்ட தர்க்கங்கள் என்று இந்த இருபத்தைந்து வருடங்களும் அர்த்தபூர்வமாகவே உள்ளன. யதார்த்தமான கதைகளில் தமிழ் வாசக மனது தோய்ந்து கிடக்கிடையில், அதை சீண்டிவிட முடிவெடுத்த இரவுகூட, இப்போது நம்மைக் கடந்து விட்டிருக்கும் இதேபோன்றதொரு டிசம்பர் மாதம்தான்.

நான், கோணங்கி, ராமகிருஷ்ணன் மூவரும் விடிய விடியப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். தமிழில் யதார்த்தவாதக் கதைகளை நிராகரிப்பது. ஃபேன்டசியான, மேஜிக்கல் ரியலிச கதைகளை முன்வைப்பது. இதை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் படைப்பால் முன்வைப்பதுஎன்ற முடிவின் உருவம்தான் ஸ்பானியச் சிறகுகளும், வீரவாளும்என்ற தமிழ் - இலத்தீன் அமெரிக்கக் கதைகளின் தொகுப்பு.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, ஜே.ஷாஜகான், போப்பு ஆகியோரின் தமிழ்க் கதைகளும், போர்ஹே ஆரம்பித்து, தங்கள் நவீனப் படைப்புகள் மூலம் உலக வாசகர்களையே பிரமிக்க வைத்துக் கொண்டிருந்த பல லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் கதைகள்வரை அத்தொகுப்பில் மொழிபெயர்த்துச் சேர்க்கப்பட்டன.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அசோகமித்திரனில் ஆரம்பித்து, ஒரு இளம் வாசகன்வரை அத்தொகுப்பை முன்வைத்தே தமிழ் நவீன இலக்கியத்தை மதிப்பிட்டனர். அப்பொன்னான காலங்களின் சேமிப்பு என்று இருப்பதெல்லாம் எங்கள் எல்லோருக்குள்ளும் ததும்பி நிற்கும் நினைவுகள் மட்டுமே.

ராமகிருஷ்ணனுக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ராமகிருஷ்ணனை அடையாளம் கண்டு, ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கத் தந்து, ரஷ்ய குதிரைகளின் குளம்படி சத்தங்களில் அவர் மனதைப் பறிகொடுக்கச் செய்தவர். அவர் ஒரு இலக்கியவாதியல்ல, அரசியல்வாதி. ஆனால், பல படைப்பாளிகளின் ஆதர்சம் அவர்தான். அப்போது ஒன்றிணைந்த ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட சி.பி.ஐ(எம்) மாவட்ட செயலாளராயிருந்த எஸ்.ஏ.பெருமாள்தான் இன்றளவும் ராமகிருஷ்ணனின் ஆதர்சம்.

எஸ்.ஏ.பி. என்று எங்களால் பிரியத்தோடும், மரியாதையோடும் அழைக்கப்படும் அவர், ராமகிருஷ்ணனுக்கு மட்டுமின்றி, பாரதி.கிருஷ்ணகுமார், வெகுதூரத்திலிருப்பினும் எனக்கு என்று பலருக்கும் ஏதோ ஒரு வகையில் முன்னத்தி ஏர். வெளியில் ஒருவன்என்ற ராமகிருஷ்ணனின் முதல் தொகுப்பில் ஆரம்பித்து, இன்று வெளிவந்திருக்கும் சமீபத்திய தொகுப்புகள்வரை எஸ்.ராமகிருஷ்ணன்  எஸ்.ஏ.பி.யை நினைவு கூறத் தவறுவதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ஏதாவதொரு கல்லூரியில் ராமகிருஷ்ணன் ஆங்கிலப் பேராசிரியராக போயிருக்கக் கூடும். அதை, நிர்தாட்சண்யமாக மறுத்தார். படைப்பின் துளிர்ப்பை கருக்கும் இக்கல்விக்கூடங்களுக்கு, வெளியிலிருந்து செயலாற்றுவதுஎன்ற அவரின் உறுதிதான், இன்று இக்கல்லூரிகளில் பல அவரிடம் ஒரு தேதி கேட்டு காத்துக்கிடக்கச் செய்திருக்கிறது.

தன் கவித்துவமிக்க மொழியில், தன் சிறுகதைகளை செதுக்கும் ராமகிருஷ்ணனுக்கு, அவர் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்த நாட்களின் அனுபவமும் கூடி வருகிறது. அதனாலேயே அவரால் தன் ஜீவனுள்ள படைப்புகளை இன்றளவும் நீர்த்துப் போகாமல் தர முடிகிறது.

எப்போதோ படித்த ராமகிருஷ்ணனின் ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. அவள் அலுவலகம் முடிந்து அவனோடு ஒரு பஸ்ஸில் ஏறி போய்க்கொண்டிருப்பாள். எங்கே போவதென்று இருவருமே திட்டமிட்டிருக்கவில்லை. இப்படி இலக்கில்லாத திட்டமிடாத பயணங்கள் மட்டுமே நம் உயிர்ப்பை நினைவுபடுத்தும்.

ஏதோ ஒரு மலையடிவார நிறுத்தத்தில் அவர்கள் இறங்கி, அம்மலையடிவாரத்தை நோக்கி நடப்பார்கள். லேசாகக் கறுக்கும் அவ்விருட்டில் அவளுக்கு இன்று புதிதாய் பிறந்தது போலவும், புதிதாய் நடப்பது போலவும் தோன்றும். அவளையறியாமல் அவள் விரல்கள் அவன் விரல்களோடு பிணைந்திருக்கும். இந்த பிணைப்பு வேண்டியே இத்தனை வருடமாய் மனதலைந்தது.

தன் பால்யத்தை அவ்விருட்டில் அவள் மீட்டுவாள். அப்பா செத்தப்புறம், ஒவ்வொரு இரவும் பயத்தில், ஆதரவு வேண்டி அம்மாவின் விரல்கள் பற்றி தூங்கின முன் இரவுகளும், அவள் விரல்களைப் பிரித்துப்போட்டு பாயில் கிடக்க, அண்ணனின் கைவிரல்கள் பற்றித் தூங்கின அம்மாவின் பின்னிரவுகள் மனதில் முட்டின. பற்றிக்கொள்ள ஒரு கை வேண்டி அவள் பால்யத்தில் ஆரம்பித்த பயணம், இதோ இவனின் தடிதடியான கைப்பிணைப்பிலேயே நிறைவடைகிறது.

அம்மா மீதும், தன் அண்ணன் மீதும் எழுந்த சொல்ல முடியாத ஒரு வெறுப்பு இதோ இவன் அருகாமையில் கருகுகிறது. இத்தனை வருட வாசிப்பின் அடைக்காத்தலிலும் அப்படியே மனதின் கதகதப்பில் இக்கதை படிந்திருக்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் ராமகிருஷ்ணனின் பாய்ச்சல் நாம் அளவிட முடியாதது. கலை இலக்கியத்தின் அத்தனை துறைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு இயங்குவதற்கான ஒரே காரணம், அவரின் இடைவிடாத வாசிப்பு மட்டுமே.

பைபிளை, இயேசுவின் வாழ்வை மறுவாசிப்புக்குட்படுத்தி ஏராளமான புனைகதைகளை அதிலிருந்து எடுத்தவர்களாக மலையாளத்தில் பால் சக்காரியாவையும், ஆனந்தையும் சொல்லலாம். இப்படி ஒரு படிப்பாளி தமிழில் இல்லையேயென அக்கதைகளை வாசிக்கும்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு. ஆனால், தன்னுடைய  நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்என்ற ஒரு சிறுகதையின் மூலம் ராமகிருஷ்ணன் சக்காரியாவையும், ஆனந்தையும் தாண்டிப் போயிருப்பார்.

மாட்டுத் தொழுவத்தில் துவங்கிய இயேசுவின் பால்யமும், கல்வாரி மலையில் அனுபவித்த துயரத்தின் முடிவுமே சிலுவையறைதல் என்பது நமக்கெல்லாம் தெரிந்த இயேசுவின் வரலாறு. அதற்கிடையே ஒரு மனிதனின் அதி உன்னதப் பருவமான இயேசுவின் பருவ வயது நம் நினைவில் இல்லை. அதையே நட்சத்திரங்களோடு சூதாடுதல் பேசுகிறது. நாம் தவறவிடக்கூடாத படைப்பு இது.

யாமம்நாவலின் வாசிப்பின்போது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அவரை அழைத்துப் போசியிருக்கிறேன். அந்நாவல் எனக்கு இன்னும் ஒரு அமைதியைத் தந்தது. அனைத்தையும் துறத்தல் என்ற தர்க்கம், என் சக மனிதன்மீது இன்னும் நேசத்தைக் கொடுத்தது.

இந்த நவம்பரில் சென்னையில் தொடர்ந்து ஏழு நாட்கள் உலக இலக்கியங்கள் குறித்த அறிமுகத்தை ராமகிருஷ்ணன் ரஷ்யன் கலாச்சார மையத்தில் நிகழ்த்தியது ஒரு பெரும் சாதனை. இதுவரை நிகழாதது. அவ்வுரையைக் கேட்க இலக்கிய வாசகர்கள் இடம் கிடைக்காமல் அலைந்தது, தரையில் உட்கார்ந்து கேட்டது எல்லாமும் ஜீவன் மிக்க அப்படைப்பிற்கும், ராமகிருஷ்ணனின் அலங்காரமற்ற கவித்துவ உரைக்கும் கிடைத்த அங்கீகாரம்.

சமீபத்தில் ஒரு மழை மாலையில் நான், கோணங்கி, ராமகிருஷ்ணன் மூன்று பேரும் தொடர்ந்து வெவ்வேறு திசைகளிலிருந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். நிறைவடையாத அப்பேச்சை, “டேய் ராமகிருஷ்ணா. ஒரு ஜோல்னாப் பையை மாட்டி, பஸ் ஏறி திருவண்ணாமலை வா. நீ புறப்படும்போது சொல்லு, நானும் கோவில்பட்டியிலிருந்து புறப்படுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டோ புடிச்சி பவா வீட்டுக்கு போவோம். அப்போ பேச ஆரம்பிச்சா நீ எப்ப திரும்புவேனு தெரியாது...

கோணங்கி முடிக்கும்முன்பே, ராமகிருஷ்ணன்,

ஒரு வாரம் ஆனாலும், ஒரு மாசம் ஆனாலும் அங்கேயே கிடக்கலாம்ணே.

ராமகிருஷ்ணன், வெயிலின் குழந்தை. அவரின் எல்லாப் படைப்புகளிலும் வெயில், ஒரு நிழல்போல அவரைப் பின்தொடர்வதை அவரை வாசிக்கிற எவராலும் உணர முடியும். அவர் காட்டும் வெயில் பிரதேசத்து மனிதர்கள், மனம் நிறைய அன்பைச் சுமந்தலைபவர்களாகவே இருக்கிறார்கள். யாமம்நாவலில் மலையில் ஒரு திருடன் பிடிபடுவான். ரத்தமிளாறுகளாய் உருமாறியிருந்த அவன், முதுகோடு சேர்த்து ஒரு மரத்தில் கட்டப்பட்டிருப்பான். அம்மலையின் சொந்தக்காரர் கிருஷ்ணப்ப கரையாளர், அவனை மெல்ல நிமிர்ந்து பார்ப்பார். திருடனின் தீட்சண்யமான பார்வையை அவரால் எதிர்கொள்ள முடியாது.

இவனை அவுத்து விடுங்க...என்ற சொல்லின் தொடர்ச்சியாய்,

போய் என்ன பண்ணுவே?”

மறுபடியும் இதே மலையிலதான் திருடுவன்.
அப்பதிலில் அதிர்வுற்று,

ஏன்?”

இம்மலையைத் தவிர வேற எதுவுமே எனக்குத் தெரியாது.

இந்த உரையாடல் கரையாளரைத் தலைகீழாய்ப் புரட்டிப் போடும். எதன் அதிகாரத்தாலோ இம்மலை எப்போதோ தனக்கு உடமையானது. இதன் நீளம், அகலம், இதில் உள்ள மரங்கள், கொடிகள், நீர்நிலைகள், சிறு அருவிகள், புதரின் மறைவில் உறங்கும் விலங்குகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதன் உடமையாளன். அப்படியிருக்க, இம்மலை மட்டுமே தன் சுவாசமாய், இதன் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் வாழும் இவன் எப்படி திருடனாவான்?
இக்கேள்வி கரையாளருக்கு மட்டுமல்ல, நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு நாளில் நம்மை நோக்கியும் எழுகிறது. ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு எழுத்துக்குள்ளேயும் புதைந்திருக்கும் வாழ்வின் பெரும் இரகசியங்களும், சிக்கல்களும் ஒரு வாசகனை அந்த எழுத்துக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய நிகழ்வின் ஒருங்கிணைப்பில் தீவிரமாக இருந்த பொழுதில்தான் என் மகன் சிபி, ஒரு பஸ் விபத்தில் பலியானான்.

அதைக்கேட்டு நானும் ராமகிருஷ்ணனும், ட்ராட்ஸ்கி மருதுவும் ஓடினோம். அய்யோ, எங்கள் குடும்ப நட்சத்திரம் ஒன்று இப்பூமியில் புதையுண்டு போனதேஎன்று ராமகிருஷ்ணன் கதறியது எங்கள் எல்லோருக்குள்ளும் அப்படியே கிடக்கிறது. பல ஆண்டுகள் கழித்து எங்கள் மகனுக்கு ஒரு கல்லறை கட்டி அதில், ‘இடையில் ஒரு நட்சத்திரம் மாதிரி மின்னி இங்கு ஒளிந்திருக்கிறான் எங்கள் சிபிஎன எழுதி வைத்துவிட்டு இன்னமும் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment