Monday, January 7, 2019

தீக்குச்சிபிரபஞ்சன்

என் தொலைபேசி மத்தியானத்திலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சில அழைப்புகளை எதிர்கொள்ள திராணியற்றுத் தவிக்கிறேன். பல அழைப்புகளை எடுத்து விம்மல் ஒலியை கேட்டு அணைக்கிறேன். பவாண்ணா என்ற கேவலில் நம் பிரபஞ்சனை விட்டுட்டோமே என்கிற குற்றச் சொல் என்னை கிழ்நோக்கி அழுத்துகிறது.

எல்லோராலும் மரணம் எதிர் பார்க்கப்படுகிற ஒன்றுதான் என்றாலும், அது நமக்கு பிரியாமானவர்கள், நம் வீட்டு மனிதர்களை அழைத்துப்போக வரும்போது மட்டுந்தான் நாம் துடித்துப் போகிறோம்.இன்று காலை அது தன் வாழ்நாள்  முழுக்க ஒரு கையில் தன் அன்றாடத்திற்கான ரொட்டித்துண்டுகளை சேகரித்துக் கொண்டே மொத்த மானுட விடுதலைக்காக கீதம் இசைத்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான கலைஞனை அழைக்க வந்திருந்தது. முன்னமே அறிந்திருந்தால் அவரை அரண் அணைத்து  மறைத்திருப்போம். எங்கள் சரீரத்தை அதற்கு தின்னக் கொடுத்திருப்போம். மனிதர்களைப் போல, அரசைப் போல மரணமும் எங்களை இன்று வஞ்சித்தது. குழந்தைகளுக்கு பலூன் கொடுத்து போக்குகாட்டி அது எங்கள் அப்பனை எங்களிடமிருந்து   பறித்ததுவெறும் கையோடு தெருவில் நிற்கிறோம்.

பிரபஞ்சனுடன் என் நட்பு இறுதி கால் நூற்றாண்டைக் கடக்கிறது. மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையைப் போல நாற்றுகளிடையே இட வேண்டிய இடைவெளி குறித்து துல்லியமான கணக்கிருந்தது எங்கள்  இருவருக்கும். நீர் பெருகும் போதும், வேர் காயும்போதும் அது ஒரு விலகல்மாதிரியோ, அழுகல் மாதிரியோ மற்றவர்களுக்குத் தெரியலாம். ஒரு விவசாயிக்குத் தெரியும், அது வேர் பிடித்தல், பச்சையம் பெருகுதல், பயிர் எழும்புதல்.

இந்த உணர்வு பிரபஞ்சனோடு தொடர்பிலிருந்த ஒவ்வொரு படைப்பாளருக்கும், வாசகனுக்கும் எப்போதும் ஏற்பட்டிருக்கும். கருணை மிகுந்ததும், கருணையற்றதுமான இந்த வாழ்வை அதன் சகல அகங்காரத்தோடும் எதிர் கொண்டவர் பிரபஞ்சன். குரூரமான கோரப் பற்களை துருத்திக் கொண்டு வெளிவரும் அதனை எதிர்கொள்ள அவருக்கு ஒரு நல்ல காபி மட்டும் போதுமானதாயிருந்தது.பிரபஞ்சன் 55, என்று அவருக்கு நாங்கள் ஒரு விழா எடுத்தோம்தமிழ் சமூகம் அவருக்குப் பங்களித்த  12 லட்ச ரூபாயை ஒரு ட்ரேவில் வைத்து  பிரபஞ்சனை எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.

இதழோரம் துளிர்க்கும் வழக்கமான புன்னகையால் அவர் எங்களை ஏறெடுத்தார்.
நான் உரக்க குரலுயர்த்தி சொன்னேன்.

இது உங்கள் பணம். இதை வங்கியில் போட்டு வட்டி வாங்கி சாப்பிடுங்கள் என ஒருபோதும் சொல்லமாட்டோம். நீங்கள் ஓய்வுபெற்ற அரசு ஊழியன் அல்ல. ஒன்றாம் தேதியை எதிர்பார்த்து வாழ
நீங்கள் கலைஞன், எழுத்தாளன், இந்நிமிடத்திலிருந்து இதை எடுத்து செலவழியுங்கள்.”

அரங்கம் எழுந்து நின்று ஆர்பரித்தது, அதைப்பற்றிக் கொண்டு மீண்டும் சொன்னேன்,
 “செலவழித்தவுடன் சொல்லுங்கள், மீண்டும் தருகிறோம்.”

ஆசுவாசத்தோடும், பெருமிதத்தோடும், பிரபஞ்சன் தன் வாசகர்களைப்  பார்த்த அக்கணத்தை புகைப்படக்காரன் சேலம் வேலு அப்படியே பதிவு செய்திருக்கிறான்.  

லௌகீக வாழ்வின் அவலத்தை, போதாமையை கலைஞனையே பலிகேட்கும் அதன் அகோர பசியை அவர் தன் புறங்கையால் தள்ளினார். வாசிப்பும், எழுத்தும் அவரை ஒவ்வொரு நிமிடமும் அதிலிருந்து விடுவித்துக் கொண்டே இருந்தன.

பசியில் துவண்ட வயிற்றோடு அவர் எழுதிய கணங்களில் அப்பங்களோடு  காத்திருந்த லௌகீகம் ஏமாற்றத்தோடு காய்ந்த அப்பங்களோடு திரும்ப வேண்டியிருந்தது.

எழுத்து அவருக்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் மனிதர்களுக்கு மட்டுந்தான். எல்லாத் தரப்பு மனிதர்களிடமும் அவருக்கு வாஞ்சையிருந்தது. வசதியாய் ஊரில் பெருத்த பணக்கார்களிடம்  ஒரு அசட்டையிருந்தது. தன்னைப்போல ஒருவேளை சாப்பாட்டை இழந்து வாழ்ந்தவன் மீது பரிவிருந்தது. அது மகத்தான மானுட பதிவு. அதுவே அவர் எழுத்து.

மறைவாய் குளிப்பதற்கு ஒரு இடம் தாரும் கத்தாவேஎன இறைந்து மன்றாடிய ஒரு பெண்ணின் குரல் கர்த்தரை எட்டுதவற்கு முன்பே பிரபஞ்சனை எட்டியிருந்தது.

இருபத்தி மூன்று வயது நிறைவதற்குள் நியாயம் கேட்க எழுந்த ஒரு இளம் நக்சலைட் தோழனின் சரீரம் அற்ப போலீஸ்காரன்களால் குற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு மனித போலீஸ்காரனை விட்டு துப்பாக்கியால் சுடவைத்து அவனை மரணத்தால் விடுவித்தது.கேமராவில் ஃபிலிம் இல்லாமல் தன்னைப் புகைப்படம் எடுப்பதாய் ஏமாற்றுகிற இந்த போட்டோகாரனை ஐம்பது ரூபாய் கடன்வாங்கிக் கொடுத்து, பத்தாததற்கு,  “எங் கூட இருந்துட்டு போறீயா?” என கேட்கவைத்தது.

தன் மனைவி ராணியின் மரணத்தின் போது சா நிழலின் பள்ளத்தாக்கில் நின்று சொன்னார்.

நான் ராணிக்கு நல்ல கணவனாக ஒரு போதும் இருந்ததில்லை, ராணி வேறு யாரையாவது திருமணம் செய்திருத்தால் இன்னும் நன்றாக வாழ்ந்திருப்பாள்.”

உங்களுடன்தான் சார் வாழ்வை வாழ்ந்தார்கள் அவர்கள்.

பெண்குழந்தைகளற்ற அவர் நண்பர்களின் பெண் குழந்தைகளை பார்க்கிற போரதல்லாம் வாரி அணைத்து உச்சி மோந்து ஆசிர்வதிப்பார். அது இப்பிரபஞ்சத்தில் பிறந்த எல்லா பெண் குழந்தைகளுக்கும் சேர்ந்து ஒரு தகப்பன் பொழிந்த அன்பின் பெருமழை.

பெண்கள் எழுத வந்தபோது, தன் இருகரம் விரித்து தன் கதகதப்பான செட்டைக்குள் வாரி அணைத்துக் கொண்டார்.

அது ஒரு தாயின் கருவறை மாதிரி, அவர்களுக்கு பாதுகாப்பாய் இருந்தது.

கலைஞர்களை வெற்றிபெற்றவன், தோல்வியுற்றவன் என பிரிக்கத் தெரியாதவர் பிரபஞ்சன். அதற்கான அளவீடுகள் இன்னும் கடவுளுக்கு கூட வசப்படவில்லை என சந்தோஷப்பட்டுக்கொண்டார். ஆனால் மற்றவர்களின் மதிப்பீடுகளில் தோல்வியுற்றவர்களின் தலையை தன் பக்கமிழுத்து தன் மடியில் சாய்ந்துக்கொண்டவர்.

பிரபஞ்சனுக்கு எந்த மதிப்பீடுகளும் நிரந்தரமானவை அல்ல. எவரும் அவரை ஏமாற்றலாம். எவரும் மற்றவர்களைப் பற்றிய இழிவை, அவர் உடலில் குளூகோஸ் ஏற்றுவதை மாதிரி நீடில் கொண்டு ஏற்றிவிடலாம்.

ஏற்றிமுடித்த அடுத்த நொடி அதிலிருந்து உற்சாகமடைந்து, எந்த மனிதனின் இழிவை தன் மீது ஒருவன் ஏற்றினானோ அவனை நிராகரித்து, முன்னவன் மீது முன்னிலும் அதீத அன்புற்று அவனை மேன்மையால் இன்னும்  மேன்மையுறச் செய்வார்.இது மானுடப் பண்புகளிலேயே மிக உயர்வானது. எவராலும் கைக்கொள்ள முடியாதது. அபூர்வமாக பிரபஞ்சனுக்கு அது வாய்க்கப் பெற்றிருந்தது.

பாண்டிச்சேரியில் ஏழெட்டு வீடுகள், கள்ளுக்கடைகள், நிலபுலன்கள் என வாழ்ந்த பிரபஞ்சனின்  அப்பாவின் லௌகீக சரிவு, பிரபஞ்சனை ஒரு வகையில் சந்தோஷப்படுத்தியது. மனிதர்கள் இப்படி செல்வத்தால் ஊதக்கூடாதென அவர் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

கொள்கைகள், கோட்பாடுகள் இயல்பாகவே ஒரு படைப்பாளிக்குள் பிடித்துவிடும், தான் மரண இருளின் பள்ளதாக்கில் நடந்தாலும் மானுடத்தின் விடுதலையை எளிய மனிதர்களின் பக்கம் நின்றே போராடி வெல்ல நினைத்தவர்.

தன் பலம் என்பது தன் எழுத்து மட்டுமே. வேறெதுவும் அற்றவன் நான். எனக்குப் பின்னால் சாதியோ, மதமோ, குடும்பமோ, பாரம்பரியமோ இல்லை. நான் மட்டுமே. எனக்குப் பின்னால் வெறும் வெளி மட்டுமே. என்னிலிருந்துதான் இம்மானுடத்திற்கு என் எழுத்து மூலம் ஒளியூட்ட வந்திருக்கிறேன். இதில் தோல்வியுற்றால் இம்மானுட விடுதலையின் தொடர்ச்சிக்கு  என் சரீரத்திலிருந்தது ஒளியையல்ல நெருப்பை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என காலத்தின் முன் கம்பீரமாய் நின்று பெருங்குரலெடுத்து பிரகடனப்படுத்திய  படைப்பாளி அவர்.

அறுபதாண்டுகளுக்கும் மேலான தன் படைப்பு வாழ்வில்  தினம்தினம் லௌகீகதோடு மல்லுகட்டுவது அத்தனை சுலபமானதா என்ன? அதில் தோல்வியுற்று வீழ்ந்தவர்களே, பலியானவர்களே, அல்லது மற்றவர்களை பலிகொடுத்தவர்களே அதிகம்.

பிரபஞ்சன் இந்த அதிகார வெறியிலிருந்து ஒதுங்கி நின்று, ஒரு சிகெரெட் பற்ற வைத்துக் கொண்டு ஆசுவாசமாக அதை எதிர்கொண்டார்.

அந்த எளிய கலைஞன் மீது தமிழ்சமூகம் அன்பு கொண்டது. அவர் பசி என்று சொன்னபோது, அது ஒரு அன்னச்சத்திரத்தையே அவருக்காக அமைத்து தந்தது.

அவர் நோயில் உடல் தளர்ந்து படுக்கையில் சாய்கிறபோது, பல மனிதர்கள் தங்கள் உடல்களால் முட்டுக்கொடுத்துத் தாங்கிக் கொண்டார்கள்.

பெருமிதமான படைப்பாளிதான் பிரபஞ்சன் நீங்கள். எங்களுக்கு அதைத்தானே வாழ்நாளெல்லாம் சொல்லிக் கொடுத்தீர்கள்! முதுகெலும்பு நிமிர்வதற்காக மட்டுந்தான் என உங்கள் சொற்களால் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தீர்கள். அதை எங்கள்  சந்ததிக்கும் நாங்கள் கைமாற்றிக் கொடுக்க அணையா தீ துகள் ஒன்றை உங்களிடமிருந்து இப்போது எடுத்துக் கொள்கிறோம் பிரபஞ்சன்நன்றி : ஜனவரி மாத: உயிர்மை

No comments:

Post a Comment